உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/109 சிலப்பதிகார ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—109

சிலப்பதிகார ஆராய்ச்சி

த்துப் பாட்டின் பதிப்பில் ஆரம்பத்தில் முகவுரையும் அப்பால் நூலின் மூலமும் நச்சினார்க்கினியருரையும் உரைச்சிறப்புப் பாயிரமும் அரும்பத விளக்கம் அருந்தொடர் விளக்கம் பிழை திருத்தம் என்பனவும் இருந்தன.

பத்துப் பாட்டு முகவுரை

முகவுரையில் பத்துப் பாட்டின் பொதுச் சிறப்பையும், ஒவ்வொரு பாட்டின் வரலாற்றையும், ஏடுதேடிய விவரத்தையும், உதவி செய்தோர் பெயர்களையும் எழுதினேன். அடுத்தபடியாகச் சிலப்பதிகாரம் வெளியிட எண்ணியதை, “இக்காலத்தே மிக அருகி வழங்குகிற பழைய நூல் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வெளியிட மிக்க விருப்பமுடையனேனும் சீவகசிந்தாமணி அச்சிட்டுநிறைவேறிய காலமுதல் கொழும்பு நகரத்துப் பிரபு சிகாமணியும், செந்தமிழ்ப் பாஷாபிமானியுமாகிய ம-¥ -¥-ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியாரவர்கள், ஐந்து காப்பியங்களுள் இரண்டாவதாகிய சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லாருரையுடன் பதிப்பித்துப் பிரகடனம் செய்ய வேண்டுமென்றும். அந்தச் செலவைத் தாம் கொடுப்பதாகவும் அடிக்கடி அன்போடு எழுதியனுப்புதலால், முந்தி அந்நூலை அவ்வுரையுடன் பதிப்பிக்க நிச்சயித்திருக்கிறேன்’ என்று புலப்படுத்தினேன்.

சிந்தாமணி, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் உரையினால் நச்சினார்க்கினியரது பரந்த நூற் பயிற்சி எனக்குத் தெரிய வந்தது. அவருடைய உரை இல்லாவிடின் பல அரிய செய்திகள் புலப்பட வழியே இல்லை. கலித்தொகை உரையும், தொல்காப்பிய உரைகளும் அவ்வுரையாசிரியரின் பெருமையைப் பின்னும் நன்றாக விளக்கின.

நூலின்பெருமையை யாவரும் உணரும்படி செய்யும் உபகாரிகள் உரையாசிரியர்கள். நச்சினார்க்கினியர் உரையினால் அவருக்குப் பழைய நூலாசிரியர்களிடத்தும் நூல்களிடத்தும் உள்ள பேரன்பும் பிற்காலத்தார் செய்யும் மாற்றங்களில் உள்ள வெறுப்பும் தெரிய வந்தன. தமிழ் வளர்த்த மகோபகாரிகளில் அவர் ஒருவரென்பதே என் கருத்து. பத்துப்பாட்டுப் பதிப்பில் அவர் வரலாற்றைத் தனியே எழுதவில்லை. ஆயினும் அவர் மீது ஒரு துதி கவி பாடி முகவுரையின் ஈற்றில் அதை்தேன். அது வருமாறு:-

“எவனால வாயினிடை யமுதவா புடையனென
      இயம்பப் பெற்றோன்
எவன்பண்டைப் பனுவல்பல விறவாது நிலவவுரை
      எழுதி யீந்தோன்
எவன்பரம வுபகாரியெவனச்சி னார்க்கினியன்
      எனும்பே ராளன்
அவன்பாத விருபோது மெப்போது மலர்கவென
      தகத்து மன்னோ”

ஒருவாறு இறைவன் திருவருளால் நிறைவேறிய பத்துப் பாட்டோ தமிழ் நாட்டினருடைய பாராட்டைப் பெற்றது. பல அரிய சரித்திரச் செய்திகளும் பண்டைக்காலத் தமிழ் மக்களின் நாகரிக நிலையும் அதனால் தெரிய வந்தன. “பத்துப் பாட்டினைக் கொண்டு பலவகை ஆராய்ச்சிகளைச் செய்யலாம்” என்று அறிஞர்கள் கொண்டாடினர்.

சிறு நூல்கள்

அந்நூல் அச்சாகி வந்தபோது ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய ஆனந்த ருத்திரேசர் வண்டு விடு தூது என்னும் பிரபந்தத்தின் மூலத்தையும், மாயூரம் ராமையார் இயற்றிய மயிலை யந்தாதி என்பதன் மூலத்தையும் பதிப்பித்து வெளியிட்டேன்.

பத்துப்பாட்டைப் பெற்ற அன்பர்கள் மிக்க மகிழ்ச்சியை அடைந்து பாராட்டுக் கடிதங்கள் எழுதி எனக்கு ஊக்கத்தை அளித்தனர். அது முதல் சிலப்பதிகார ஆராய்ச்சியில் முழுக் கவனத்தையும் செலுத்தி வந்தேன்.

கச்சிக் கலம்பக அரங்கேற்றம்

அப்போது பூண்டி அரங்கநாத முதலியார் தாம்இயற்றிய கச்சிக் கலம்பகத்தை அச்சிட்டு முடித்துச் சில பண்டிதர்களைக் கொண்டு சென்னைத் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர் கலாசாலையில் அரங்கேற்றச் செய்தனர். நானும் வந்து சில பாடல்களை அரங்கேற்ற வேண்டு மென்று அவர் எனக்கு எழுதியமையால் 1889 ஆம் வருஷம் அக்டோபர் மாதம் ஒரு முறையும், நவம்பர் மாதம் ஒரு முறையும் சென்னை சென்று சில நாள் தங்கி அக்கலம்பகத்தின் சில செய்யுட்களை அரங்கேற்றி வந்தேன். அந்த அரங்கேற்றம் நடை பெற்ற காலத்தில் அதைக் கேட்க நூற்றுக் கணக்கான ஜனங்கள் கூடினர். நான் படித்திருந்த பிரபந்தங்களும் வேறு நூல்களும் அப்போது மிகவும் பயன்பட்டன. அரங்கநாத முதலியாருடைய பழக்கம் பின்னும் வன்மையடைந்ததோடு தமிழபிமானிகள் பலருடைய பழக்கம் புதிதாக ஏற்பட்டது. அரங்கநாத முதலியாருடைய செல்வாக்கும் அரங்கேற்றப் பிரசங்கமும் சேர்ந்து எனக்குப் பல வகை நன்மைகளை உண்டாக்கின.

பத்துப் பாட்டுப் பதிப்புக்குச் சென்னையிலிருந்து உதவி செய்து வந்த கிருஷ்ணையர் அப்பதிப்பு முடிந்தவுடன் வேலூருக்குச் சென்று சிலகாலம் இருந்தார். பிறகு சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவருடைய ஆதரவில் அவருக்கு நல்ல தமிழ் நூல்களைப் படித்துக் காட்டிக் கொண்டு அரண்மனை வித்துவானாக இருந்து வந்தார். அங்கே இருந்தபோதும் எனக்காகப் புறநானூறு முதலிய நூல்களைப் பிரதி செய்து அனுப்பினார்.

தண்டபாணி விருத்தம் முதலியன

கொழும்புத் துறையிலிருந்த அன்பராகிய தி. குமாரசாமி செட்டியாரென்பவர் அடிக்கடி எனக்குத் தம் அன்பு புலப்படக் கடிதம் எழுதி வந்தார். விநாயக புராணத்தை அச்சிட வேண்டுமென்று பல முறை எழுதினார். திருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாண தேசிகரும் அதனை அச்சிட வேண்டுமென்று என்னிடம் அடிக்கடி சொன்னதுண்டு. அந்நூலைச் சில முறை ஆராய்ந்தேன் பதிப்பிக்கலாமென்று எண்ணியும் அதனை நிறைவேற்றும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை.

கொழும்புத் துறையைச் சார்ந்த இலந்தை நகரென்னுமிடத்தில் ஓராலயம் நிறுவி அதன் கண் தண்டபாணியைப் பிரதிஷ்டை செய்து உத்ஸவ விக்கிரகம் முதலியவற்றையும் குமாரசாமி செட்டியார் அமைத்தார். அவ்விரு மூர்த்திகளின் விஷயமாகச் சில செய்யுட்களை இயற்றித்தர வேண்டுமென்று விரும்பி எனக்கு எழுதினார். அவர் விருப்பப்படியே தண்டபாணி விஷயமாகப் பத்து விருத்தங்களும் உத்ஸவ மூர்த்தியாகிய ஸ்ரீ முத்துக்குமாரர் விஷயமாக ஓர் ஊசலும் எச்சரிக்கையும் ஐந்து கீர்த்தனங்களும் இயற்றினேன்.


“சேதிப் பரிய தவவொழுக்கச் செல்வம் வாய்ந்த குறுமுனிக்குச்
      
   செவ்வே தமிழி னிலக்கணத்தைச் செப்பி யருளி யொப்பில்லா
ஆதிச் சங்கத் திடைமேய வதனா லெம்மான் றமிழ்ப்பரம
   
   ஆசா னென்ப தறிந்தடைந்தே னகற்றா தளித்த னின்கடனே
சாதிப் பைம்பொற் றருவாதி தழைப்ப வொருமாப் பெருமுதலைத் தோய்

   தடிந்தே யரிமுன் னோர்துயரந் தணப்ப வரிமா முகற்றொலைத்

தாதிற் பொலிபூஞ் சோலைகளுஞ் சலச மலர்நீர் வாவிகளுந்
   தழைக்கும் வளமா ரிலந்தைநகர்த் தண்டபாணிப் பெருமானே”

என்ற செய்யுளால் தமிழ் நினைவு என் உள்ளத்தில் மீதூர்ந்து நின்றமை வெளிப்பட்டது.

கீர்த்தனங்களை இயற்றுவதற்குச் சங்கீதப் போக்கு நன்றாகத் தெரிய வேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதியாரும் வையை இராமசாமி ஐயரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பல்லவிக்கும் அநுபல்லவிக்கும் உள்ள இயைபு, சரணங்களின் பொருளும் பல்லவியின் பொருளும் தொடர்ந்து நிற்றல், சரணங்களில் முடுக்கு அமைய வேண்டிய முறை முதலிய செய்திகளை அவர்கள் மூலமாகவும் அனுபவத்தினாலும் அறிந்திருந்த எனக்கு அனுபவத்தினாலும் அறிந்திருந்த எனக்கு அவற்றை அமைத்துக் கீர்த்தனங்கள் இயற்றும் சந்தர்ப்பம் அப்போது வாய்த்தது. சுருட்டி, சகானா, செஞ்சுருட்டி, துஜாவந்தி என்னும் ராகங்களில் கீர்த்தனங்களை இயற்றினேன்.

துஜாவந்தியில் அமைந்த கீர்த்தனத்தில் ஒரு பகுதி வருமாறு:-

                     பல்லவி

      உனைமற வாத ஒருவரம் அடியேனுக்
      குவந்தருள் புரிந்திடு வாயே

                    அநுபல்லவி

      நனைமலர்ப் பொழிற்செந்தில் நகரி லெழுந்தருளி
      நம்பு மடியவர்க் கின்ப மருள்புரி
      நாத பரசுக போத வனுதினம் (உனை)

                    சரணம்

  1. உலவும் பசுமயிலு முனது திருவுருவும்
      ஒழிவின்றி நினைப்பதெந் நாளோ-துன்பம்
      பலவும் புரியுமைந்து புலனுக்கு யான்றொண்டு
      பண்ணிச் செலுமடிமை யாளோ-வளம்
      குலவும் பரங்கிரித் தேனே-சுர
      குலங்களைக் காத்தருள் வோனே-எங்கும்
      நிலவும் பரம்பொருள் நீயென் றறிந்ததொண்டர்
      நிறைந்த பழனியில் உறைந்த குருபர
      நீப மணிந்தப்ர தாப சுரவர (உனை)

கீர்த்தனங்களை எல்லாம் என் தகப்பனாரிடம் படித்துக் காட்டி அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றேன். குமாரசாமி செட்டியார், செய்யுட்களையும், கீர்த்தனங்களையும் பெற்று மிக்க ஆனந்தமடைந்தார். பிறகு அவை 1891-ஆம் வருஷத்தில் கும்பகோணத்திலேயே என்னால் அச்சிடப்பட்டன.

மதிப்புரைகள்

பத்துப்பாட்டைப்பெற்ற பாலைக்காட்டு முனிஸிபல் சேர்மன் ராவ்பகதூர் பா. ஐ. சின்னசாமி பிள்ளை அந் நூலைப்பற்றி மிக விரிவாக, ‘ஹிஸ்டாரிக்ஸ்’ என்னும் புனைபெயரோடு சென்னை ‘ஹிந்து’ பத்திரிகையில் ஒரு மதிப்புரை எழுதினார். அது 13-3-1890 ல் வெளி வந்தது. திருவனந்தபுரம் புரொபஸர் பி. சுந்தரம் பிள்ளை சென்னைக் கிறிஸ்டின் காலேஜ் பத்திரிகையில் ஒரு மதிப்புரை எழுதினார். இவற்றால் தமிழன்பர்களுக்குப் பத்துப் பாட்டினிடம் மதிப்பு உண்டாயிற்று. பலர் மேலும்மேலும் அத்தகைய பண்டைத் தமிழ் நூல்களை வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தி எழுதலாயினர். அன்பர்களுடைய பாராட்டினால் உண்டான சந்தோஷத்தில் சிலப்பதிகார ஆராய்ச்சியைத் தொடங்கியமையால் மனம் மிக வேகமாகச் சென்றது. ஆனால் ஏட்டுப்பிரதிகள் அவ்வூக்கத்துக்கு அனுகூலமாக இல்லை முதல் முதலாக எனக்குச் சேலம் இராமசுவாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையுமடங்கிய கடிதப் பிரதி ஒன்று கொடுத்தார். அதன் பின்பு பிள்ளையவர்களுடைய மூலப் பிரதி ஒன்றும் உரைப் பிரதி ஒன்றும் கிடைத்தன. தியாகராச செட்டியார் வைத்திருந்த பிரதி ஒன்று என்னிடம் இருந்தது. இவற்றோடு வேறு சில பிரதிகளும் வைத்திருந்தேன். இவ்வளவு இருந்தும் என் ஆராய்ச்சி தடைப்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தன.

சிலப்பதிகார உரைகள்

கிடைத்த ஏடுகள் அவ்வளவையும் சோதித்துப் பார்த்தேன். அடியார்க்கு நல்லார் உரை ஒரு பெரிய சமுத்திரமாக இருந்தது. இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலுமுள்ள பல நூல்களையும் மணியிலக்கணம், யோகம் முதலிய கலை நூல்களையும் அவர் அங்கங்கே மேற்கோள் காட்டுகிறார். நச்சினார்க்கினியரிடம் காணப்படாத ஒரு நல்ல குணத்தை அடியார்க்கு நல்லாரிடம் கண்டேன். மேற்கோள் காட்டும் நூலின் பெயரையும், சில இடங்களில் அதைப் பற்றிய வரலாற்றையும் அவர் எடுத்துச் சொல்லுகிறார். சீவகசிந்தாமணி உரையிலும் பத்துப் பாட்டு உரையிலும் ‘என்றார் பிறரும்’ என் பதைக் கண்டு அந்தப் பிறர் யாரென்று தேடித் தேடி ஆராய்ந்து கிடைத்தவற்றைத் தெரிந்து கொள்வதற்காக நான் பட்ட சிரமம் இவ்வளவென்று சொல்ல முடியாது. அந்தச்சிரமத்தை அடியார்க்கு நல்லார் வைக்கவில்லை. இந்தப் பெரிய உபகாரத்தின் அருமையை ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர்.

சிலப்பதிகாரத்தில் முப்பது காதைகள் உள்ளன. அவற்றுள் ஏழாவதாகிய கானல் வரிக்கும், இருபதாவது பிரிவாகிய வழக்குரை காதை முதலிய பதினொன்றுக்கும் அடியார்க்கு நல்லார் உரை கிடைக்க வில்லை. சிலப்பதிகாரம் முழுவதற்கும் அரும்பதவுரை ஒன்று உண்டு. அதன் பிரதி ஒன்றை என் நண்பர் தேரழுந்தூர் சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியர் கொடுத்தார். அது மிகவும் பழுதுபட்டிருந்தது. அடியார்க்கு நல்லாருரைக்கு அது முற்பட்ட தென்று எனக்குச் சில குறிப்புக்களால் தெரிய வந்தது. ஆனாலும் என்பாலிருந்த அப்பிரதியைக் கொண்டு நூற்பொருளைத் தெரிந்து கொள்வது மிகவும் அரிய செயலாக இருந்தது. அடியார்க்கு நல்லார் உரையில் சில இடங்கள் நன்கு விளங்குவதற்கு அரும்பதவுரைக் குறிப்புக்கள் நன்கு உதவின.

உரையிற் குறை

அடியார்க்கு நல்லார் தம் உரையில் ஓரிடத்தில், ‘கானல் வரியில் விரியக் கூறுவம்’ என்றும், கானல் வரியின் பின் ஓரிடத்தில் ‘முன்னர் ஆணி யென்பதனுட் கூறினாம்’ என்றும் எழுதியிருக்கிறார். இவற்றைப் பார்த்த போது அவர் கானல்வரிக்கு உரை எழுதியிருக்கிறாரென்பது நிச்சயமாயிற்று. வேறிடங்களில் அழற்படுகாதைக் கண்ணே விரித்துக் கூறுதும், ‘கட்டுரை காதையுள் விரியக் கூறுவாம்’ என்றும் எழுதியிருத்தலால் பின்னுள்ள காதைகளுக்கும் உரை எழுதியிருக்கக் கூடுமென்று தோற்றியது. ஆகவே மீண்டும் தமிழ்ச் சுவடிகள் தேடும் யாத்திரையை மேற்கொண்டு சிலப்பதிகாரப் பிரதிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

உரையிலுள்ள குறை ஒரு பால் இருப்ப, அதன் கண் வரும் இசை நாடகப் பகுதிகள் இக்காலத்தில் வழங்காதனவாக இருந்தன. அவற்றைச் செப்பஞ் செய்வதற்கு நெடுங் காலம் ஆகுமென்றஞ்சினேன். ‘எதைத் தொட்டாலும் சிரமத்தின் மேற் சிரமமாக இருக்கிறதே’ என்ற எண்ணம் உண்டாயிற்று.

அன்பர்களுக்கு எழுதிய கடிதங்கள்

அது காறும் தேடாத இடங்களுக்குப் போய்ப் பார்க்கலாமென்ற நினைவு உண்டாகவே, “சேலத்தைச் சார்ந்த இடங்களில் தமிழ்ச் சுவடிகள் கிடைக்கலாம். சிலப்பதிகாரத்தின் பிற்பகுதிக்கு உரை கிடைக்க வில்லை. தஞ்சை வாணன் கோவைக்கு உரை எழுதிய சொக்கப்ப நாவலர் முதலிய புலவர்கள் சேலத்தில் இருந்ததாகக் கேள்வி. அவர்கள் பரம்பரையினர் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். அங்கே தேடிப் பார்த்தால் எவையேனும் கிடைக்கலாம். தங்கள் உதவி வேண்டும்” என்று சேலம் இராம சுவாமி முதலியாருக்கு எழுதினேன்.

குன்றக்குடி மடத்தில் முக்கியமான காரியஸ்தராக இருந்த அப்பாப் பிள்ளை என்பவருக்குச் சிவகங்கையைச் சார்ந்த இடங்களில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் கிடைக்கக் கூடுமென்றும், இருக்கும் இடம் தெரிந்தால் நான் வந்து பார்ப்பேனென்றும் எழுதினேன்.

அக்காலத்தில் பொ. குமாரசாமி முதலியார் தம்முடைய குமாரரைப் படிப்பிக்கும் பொருட்டு லண்டனுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து அவர் எனக்குக் கடிதம் எழுதினார். அங்கே சில காலம் இருந்து பிரான்சு, ஜெர்மனி முதலிய தேசங்களைப் பார்த்துக் கொண்ட வர உத்தேசித்திருப்பதாகவும் அங்கே பல சிறந்த புத்தக சாலைகள் உண்டென்றும் இந்தியாவிலிருந்த சென்ற பல ஏட்டுச் சுவடிகள் அவற்றிலுள்ளனவென்று தெரிவதாகவும் அவர் அதில் தெரிவித்தார் நான் உடனே சிலப்பதிகாரம் இருக்கிறதா என்று ஆராயவேண்டு மென்று பதில் எழுதினேன்.

சேலம் இராமசுவாமி முதலியாரிடமிருந்து அனுகூலமானவிடை வந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் சிலப்பதிகார நூல் சம்பந்தமான யாத்திரையைத் தொடங்கிச் சேலத்துக்குப் புறப்பட்டேன்.