என் சரித்திரம்/110 பயனற்ற பிரயாணம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—110

பயனற்ற பிரயாணம்

சேலத்துக்குப் புறப்பட்டுச் செல்லுகையில் திருச்சிராப் பள்ளியில் இறங்கி அங்கே சில இடங்களில் ஏடு தேடலானேன். திரு. பட்டாபிராம பிள்ளையின் உதவியால் சிலவித்துவான்களுடைய வீடுகளுக்குச் சென்று பார்த்தேன். எஸ். பி. ஜி . காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த அண்ணாசாமிபிள்ளை என்பவரிடத்தில் புறத்திரட்டும் வீர சோழிய உரைப் பிரதியும் இருந்தன. வீர சோழியச் சுவடியில் அச்சுப் புத்தகத்தில் இல்லாத சில பகுதிகள் காணப்பட்டன.

புறத்திரட்டு

முதலில் ஏடு தேடுகையில் அச்சிட்ட புத்தகங்களின் ஏடுகளாக இருந்தால் அவற்றை அதிகமாகக் கவனிப்பதில்லை. நாளடைவில் செய்து வந்த ஆராய்ச்சியால் அச்சிட்ட புத்தகங்களிலுள்ள பிழைகளைத் திருத்திக் கொள்வதற்கும், நல்ல பாடங்களைத் தெரிந்து கொள்ளுவதற்கும் ஏட்டுப் பிரதிகள் மிக்க உதவியாக இருப்பதை உணர்ந்தேன். ஆதலின் அது முதல் அச்சிட்டவற்றின் ஏட்டுப் பிரதிகள் கிடைக்குமேல் அவற்றையும் பொன்னேபோலப் போற்றி ஆராய்ச்சி செய்யும் வழக்கத்தை மேற்கொண்டேன். அண்ணாசாமி பிள்ளையிடமிருந்து அப்போது புறத்திரட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டேன்.

அப்பால் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த வரகனேரியில் பிள்ளையவர்களுடைய மாணாக்கராகிய சவரிமுத்தாபிள்ளை யென்னும் கனவானது வீட்டுக்குப் போனேன். கிறிஸ்தவராக இருந்தாலும் அவர் பல சைவப் பிரபந்தங்களையும் புராணங்களையும் சாஸ்திரங்களையும் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களையும் சேகரித்து வைத்திருந்தார். அவற்றில் எனக்கு வேண்டிய சிலவற்றைப் பெற்றுக் கொண்டேன். நேஷனல் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த ஆறுமுக நயினாரென்பவரிடம் சில ஏடுகள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிற் சிலவற்றைக் கண்டேன். இன்னும் சில இடங்களையும் பார்த்தேன். ஓரிடத்திலும் சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கவே இல்லை. திரிசிரபுரத்துக்கருகேயுள்ள ஒரு பேட்டையில் இருந்த வித்துவான் சுப்பிரமணிய ஐயரிடமிருந்த சில அருமையான பிரபந்தங்கள் முதலியவை கிடைத்தன.

திருச்சிராப்பள்ளியிலிருந்து குழித்தலை சென்று அதன் அருகிலுள்ள ஊர்களில் ஏடுகளைத் தேடினேன். எனக்கு உதவியாக ஒன்றும் கிடைக்கவில்லை. அப்படியே சேலத்தை அடைந்தேன்.

சேலம்

சேலம் இராமசுவாமி முதலியாருடைய உதவியால் என் முயற்சி எளிதில் நிறைவேறுமென்று மகிழ்ந்தேன். சொக்கப்ப நாவலருடைய பரம்பரையினர் யார் இருக்கிறார்களென்று விசாரித்தபோது சபாபதி முதலியாரென்று ஒருவர் இருந்தது தெரிந்தது. அவர் வீடு தேடிச் சென்றேன். நான் எதிர்பார்த்தபடியே அங்கே பல பழைய ஏட்டுப் பிரதிகள் இருந்தன. மிக்க வேகத்தோடு அவற்றைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். பெரும்பாலான ஏட்டுச் சுவடிகள் பழுது பட்டும், குறைந்தும், ஒடிந்தும், இடையிடையே முறிந்தும், மிகவும் சிதிலமுற்றும் காணப்பட்டன. அவற்றில் எனக்கு வேண்டியதாக ஒன்றும் கிடைக்கவில்லை. கம்ப ராமாயணம் ஏழு காண்டமும் தனித் தனியே உள்ள ஏழு பிரதிகள் கிடைத்தன. சேலத்தைச் சார்ந்த சூரமங்கலத்தில் ஆறுமுகம் பிள்ளை என்ற சித்த வைத்தியர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் கணக்கில்லாத ஏட்டுச் சுவடிகள் உள்ளன என்று கேள்வியுற்று அங்கே போய்ப் பார்த்தேன். ஆறுமுகம் பிள்ளை சுறுசுறுப்பாக இருந்தார். முகத்தில் நல்ல தெளிவு இருந்தது. “உங்கள் பிராயம் என்ன?” என்று நான் கேட்டேன். 97 என்றார். நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன். அதிகமாகப் போனால் அறுபது பிராயம் இருக்கலாமென்றுதான் மதிப்பிடும்படி இருந்தது அவர் தோற்றம், “இவர் மற்றவர் உடம்பை மாத்திரம் பாதுகாப்பவரல்லர்; தம் உடம்பையும் பாதுகாத்துக் கொள்பவர்” என்று எண்ணிக் கொண்டேன்.

அகத்தியர் நூல்

அவர் தம் வீட்டில் தனியே ஓர் அறையில் ஏட்டுச் சுவடிகளை ஒழுங்காக அடுக்கி வைத்திருந்தார். உள்ளே புகுந்த போது ஐந்நூறுக்குக் குறையாத ஏடுகள் இருக்கலாமென்று தெரிந்தது. “இவற்றில் பழைய சுவடிகள் என்ன என்ன இருக்கின்றன?” என்று கேட்டேன்.

“எல்லாம் பழைய சுவடிகளே; அகஸ்தியர் இயற்றிய நூல்கள் முதற் கொண்டு எல்லாம் இருக்கின்றன” என்றார்.

அகஸ்தியரென்றவுடன் அவர் இயற்றிய அகத்தியமென்ற பெரிய இலக்கண நூல்தான் ஞாபகம் வந்தது. “எங்கே, அந்தச் சுவடியை எடுங்கள்” என்று சொல்லி உட்கார்ந்தேன். அவர் ஏதோ ஒன்றை எடுத்துக் கொடுத்து, “எங்கள் குடும்பம் பரம்பரையாக இந்தச் சுவடிகளைக் காப்பாற்றி வருகிறது. மிகவும் அருமையான சுவடிகள் இவை. இங்கே உள்ளவற்றை வேறிடங்களிற் பார்ப்பது அரிது” என்றார்.

நான் ஏட்டைப் பிரித்துப் பார்த்தேன். எழுத்துக்கள் மிகவும் விளக்கமாக இருந்தன. ஏட்டின் தலைப்பில் ‘அகஸ்தியர் பூரணம்’ என்பது போன்ற ஏதோ ஒரு பெயர் இருந்தது. உள்ளே புரட்டினேன். அது வைத்திய நூலாக இருந்தது. அகஸ்திகர் இயற்றியனவாக வழங்கும் பல நூல்கள் அங்கே இருந்தன எல்லாம் வைத்திய நூல்களே. சில சுவடிகளைப் பார்த்துச் சலித்தேன்.

“இலக்கண இலக்கிய ஏடு ஒன்றும் இல்லையா?” என்று ஆறுமுகம் பிள்ளையைக் கேட்டேன்.

அவர் இல்லையென்று சொல்லி விட்டார். நான் பேசாமல் வந்த வழியே திரும்பினேன்.

பாகற்பட்டி

பிறகு பாகற்பட்டி என்னும் ஊருக்குப் போய் அவ்வூர் மிட்டாதாராகிய ஸ்ரீநிவாஸ நாயகரென்பவருடைய புஸ்தகசாலையைப் பார்த்தேன். அவர் தமிழன்பு மிக்கவர். கம்ப ராமாயணத்தில் பற்றுடையவர். அவர்பால் நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் எழுதப்பட்டனவான கம்ப ராமாயணப் பிரதிகள் பத்து இருந்தன. போகும் இடங்களிலெல்லாம் எங்கெங்கே ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்பதை விசாரித்துக் கொண்டே இருந்தேன்.

சிற்பச் செல்வம்

தாரமங்கலமென்னும் ஊரில் உள்ள ஆலயத்தில் மிகவும் சிறந்த சிற்பங்கள் உள்ளனவென்றும், அங்குள்ள ஆதி சைவர்கள் வீடுகளில் பழஞ் சுவடிகள் இருக்குமென்றும் கேள்வியுற்று அங்கே போனேன். முதலில் ஆதி சைவர்களை அணுகி அவர்களிடமுள்ள ஏடுகளைக் கவனித்தேன். பெரும்பாலும் ஆகமங்களும் பத்ததிகளுமாகவே இருந்தன.

ஆலயத்திற்குச் சென்றேன். நான் கண்ட சிற்பக் காட்சியை எழுதித் தெரிவிப்பதென்பது இயலாத காரியம். ஒவ்வொரு தூணிலும் மிகப் பெரிய சிற்ப உருவங்களைக் கண்டேன். ஒன்றைப் பார்த்து அனுபவிக்க ஒரு நாள் வேண்டும். இராமர் வாலியை எய்யும் கோலத்தை விளக்கும் சிற்பம் ஒன்று உண்டு. இராமர் உருவத்தின் அருகிற் சென்று பார்த்தால் வாலியின் உருவம் தெரிகிறது. வாலியின் உருவத்துக்கருகிலிருந்து பார்த்தால் இராமபிரான் உருவம் தெரியவில்லை. இராமர் மறைந்திருந்து வாலியை எய்தாரென்ற வரலாற்றைச் சிற்பி எவ்வளவு நன்றாக அமைத்துக் காட்டியுள்ளானென்றெண்ணி வியந்தேன். அந்த ஆலயத்துக் கெதிரில் வேறு ஒரு சிவாலயம் உண்டு. அதனுள்ளே பல லக்ஷம் பொருட் செலவு செய்தாலும் அமைப்பதற்கரிய சிற்ப உருக்கள் பல இருந்தன. எல்லாம் சிறிய அளவில் சிற்பியின் வித்தகத்தைத் திறனை நன்றாக விளக்கும் அற்புத வடிவங்களாக உள்ளன. அந்தக் கோவிலுக்கு மூங்கிற் பிளாச்சினால் செய்யப்பட்ட ஒரு கதவை அமைத்திருந்தார்கள். உள்ளே கலையழகு பொழியும் சிற்ப உருவக் களஞ்சியம் நம் முன்னோர்களின் உயர்ந்த கலைத் திறமைக்கு அடையாளமாக நிலவியது; புறத்திலோ நம் காலத்தினரது அசட்டைக்கும் வறுமைக்கும் அடையாளமாக அவலக்ஷணமான மூங்கிற் பிளாச்சுக் கதவு நின்றது. “இதற்குள்ளே என்ன இருக்கப் போகிறது?” என்ற நினைவை அந்தக் கதவு உண்டாக்கும். ஆனாலும் உண்மை தேர்பவர்கள் அதன் விகார ரூபத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றால் அரும்பெறற் சிற்ப விலாஸத்தைக் கண்டு மகிழலாம். மூங்கிற் பிளாச்சுக் கதவைத் திறந்தபோது என் கையை அது குத்தியது; உள்ளே போய்ப் பார்த்து விட்டு வந்தபோது அது கண்ணையும் கருத்தையும் குத்தியது. இந்த நாட்டின் நிலைக்கு நான் இரங்கி வருந்தினேன்.

அச்சிறுகோயிலுக்கருகே வட்டமான குளமொன்றைக் கண்டேன். அங்கும் பல சிற்ப வேலைகள் என் கண்ணுக்கு விருந்தாயின. என்னுடன் வந்த ஒருவர், “இதோ ஒரு வேடிக்கை காட்டுகிறேன், பாருங்கள்” என்றார். நான் கவனித்தேன். ஒரு கல்லை எடுத்து அக்குளத்தில் நேரே ஓங்கி அடித்தார். அந்த கல் உடனே எதிர்ப் பக்கத்திலடித்து அங்கிருந்து மீட்டும் எதிர்த்தடித்து இப்படியே மூன்று பக்கங்களிலும் பந்து போலடித்து மீட்டும் பழைய இடத் துக்கே திரும்பி வந்தது. “இவை யாருடைய திருப்பணி?” என்று கேட்டேன். “பழைய காலத்தில் அரசாங்க அதிகாரியாக இருந்த கட்டியப்ப முதலியாருடைய திருப்பணி” என்று அவர் கூறினார்.

தாரமங்கலம் சென்றதில் சிலப்பதிகாரம் கிடைக்காவிட்டாலும் சிற்பச் செல்வத்தைக் கண்டு களித்த திருப்தி உண்டாயிற்று. அங்கிருந்து வேறு சில ஊர்களுக்குச் சென்று தேடியும் சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. சில வீர சைவர்கள் வீட்டில் பெஸ்கி பாதிரியார் தொகுத்த சதுரகராதி என்ற நூல் ஏட்டில் எழுதப்பெற்ற பகுதிகளைக் கண்டேன். ‘வண்டி ஓரிடத்திலே; ஓடம் வண்டியிலே’ என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். ஏட்டுச்சுவடியிலுள்ள பழைய நூல்களை அச்சிடுவதைக் கண்டவன் நான். அச்சிலிருந்த சதுரகராதியை ஏட்டில் எழுதி வைத்திருப்பதை அன்று கண்டு நான் தமிழ் மகக்ளிடத்தில் பழைய வழக்கம் எவ்வளவு ஊறியுள்ள தென்பதை உணர்ந்தேன்.

கரிவலம் வந்த நல்லூர்

இந்தப் பிரயாணத்தில் ஒன்றும் அகப்படாமற் போகவே கும்பகோணம் வந்து சேர்ந்தேன். எப்படியாவது நல்ல சிலப்பதிகாரப் பிரதிகள் கிடைத்தாலொழிய எனக்குத் தூக்கமே வராதென்று தோன்றியது. மீண்டும் பாண்டி நாட்டுக்குப் போய்ச் சுவடிகளைத் தேட வேண்டுமென்று முடிவு செய்தேன். காலேஜ் வேலையோடு ஏடுதேடும் வேலையையும் வைத்துக்கொள்வது சிரமமாக இருந்தது. திருநெல்வேலிப் பக்கம் போனால் சில நாட்கள் அவகாசத்தோடு தேட வேண்டும். காலேஜ் வேலை அதற்கு இடங் கொடாமையால் ஒவ்வோரிடமாகத் தேடலாமென்றெண்ணி ஒரு முறை கரிவலம் வந்த நல்லூருக்குப் புறப்பட்டுச் சென்றேன். சுப்பிரமணிய தேசிகர் இருந்த காலத்தில் அவ்வூருக்கு முன்பு ஒரு முறை போயிருந்தேன். வரகுண பாண்டியருடைய ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்தில் வைத்திருப்பதாகக் கேள்வியுற்றேன். அந்த நினைவினால்தான் அத்தலத்திற்கு இரண்டாமுறை போகலானேன்.

நேரே கோயிலை அடைந்து பால்வண்ண நாதர் சந்நிதிக்குச் சென்றேன். வரகுண பாண்டியர் மிக எளிய நடையில் மனத்தை உருக்கும் வண்ணம் பாடிய பாடல்கள் தமிழன்பர்களுக்கு அப்பெருமானது நினைவை உண்டாக்கும். சந்நிதியில் நின்று,

“முன்னைப் பிறப்பின் தவப்பயனோ முழுது மறியா மூடனிவன்
என்னக் கருத்தில் இரங்கியோ யாதோ அறியேன் இரவு பகல்
கன்னற் பாகிற் கோற்றேனிற் கனியிற் கனிந்த கவிபாட
அன்னப் பழன வயற்கருவை ஆண்டா னென்னை ஆண்டதுவே”

என்ற பாடலைச் சொல்லி, “உன்னுடைய திருவருளைத் துணையென நம்பித் தமிழ்த் தொண்டை மேற்கொண்டிருக்கிறேன். சிலப்பதிகாரப் பிரதி கிடைக்கும்படி செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பிறகு சுவடிகள் எங்கே உள்ளன வென்று விசாரிக்கலானேன். தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாவைத் தேடிச் சென்றபோது அவரைச் சேர்ந்த ஒருவரைக் கண்டேன். வரதுங்கராம பாண்டியருக்கு வருஷந்தோறும் ஆலயச் செலவில் சிராத்தம் நடந்து வருவதாகக் கேள்வியுற்றிருந்தேன். அது நடந்து வருகிறதா என்று கேட்டேன்.

நடந்து வருவதாக அவர் சொன்னார்.

நான்:— வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் ஆலயத்திலே இருக்கின்றனவாமே?

அவர்: அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னவோ வைக்கோற்கூளம் மாதிரி கணக்குச் சுருணையோடு எவ்வளவோ பழைய ஏடுகள் இருந்தன.

நான்: அப்படியா! அவை எங்கே இருக்கின்றன? தயை செய்து அந்த இடத்திற்கு அழைத்துப் போவீர்களா?

அவர்: அதற்குள் அவசரப்படுகிறீர்களே? வரகுணபாண்டியர் இறந்த பிறகு அவர் சொத்தெல்லாம் கோயிலைச் சேர்ந்துவிட்டதாம். அவர் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளெல்லாம் அப்போது தான் கோவிலுக்கு வந்தனவாம்.

நான்: அது தெரியும். இப்போது அவை எங்கே இருக்கின்றன?

அவர்: குப்பை கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். எந்தக் காலத்துக் கணக்குச் சுருணைகளோ!

நான்: வேறே ஏடுகள் இல்லையா?

அவர்: எல்லாம் கலந்துதான் கிடந்தன.

எனக்கு அவர் தாமதப்படுத்துவதனாற் கோபம் வந்தது.

நான்: வாருங்கள் போகலாம்.

அவர்: ஏன் கூப்பிடுகிறீர்கள்? அந்தக் கூளங்களையெல்லாம் என்ன செய்வதென்று யோசித்தார்கள். ஆகம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன செய்து விட்டார்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டேன்.

“பழைய ஏடுகளைக் கண்ட கண்ட இடங்களிலே போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம்; இங்கே அப்படித்தான் செய்தார்கள்.”

“ஹா!” என்று என்னையும் மறந்துவிட்டேன்.

“குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட்டார்கள்” என்று அவர் வருணித்தார். இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? ‘அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!’ என்று கோபம் கோபமாக வந்தது. பழங்காலத்திற் பழைய சுவடிகள் சிதிலமான நிலையில் இருந்தாற் புதிய பிரதி பண்ணிக்கொண்டு பழம் பிரதிகளை ஆகுதி செய்வது வழக்கம். புதுப்பிரதி இருத்தலினால் பழம் பிரதி போவதில் நஷ்டம் ஒன்றும் இராது. பிற்காலத்து மேதாவிகள் பிரதி செய்வதை மறந்துவிட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய்தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால் எவ்வளவு அருமையான சுவடிகள் இந்த உலகிலிருந்து மறைந்தன!

வரகுண பாண்டியர் ஏடுகள் அக்கினி பகவானுக்கு உணவாயிற்றென்ற செய்தியைக் கேட்டது முதல் என் உள்ளத்தில் அமைதி இல்லாமல் போயிற்று. ‘இனி இந்த நாட்டிற்கு விடிவு உண்டா!’ என்றெல்லாம் மனம் நொந்தேன்.

நான் இரண்டு நாட்கள் தங்கிப் பார்க்கலா மென்ற விருப்பத்தோடு வந்தேன். எனக்குச் சிரமம் கொடுக்காத நிலையில் அவர்கள் செய்து விட்டார்கள். மறுபடியும் ஆலயத்துள் சென்றேன். “இந்த அக்கிரமம் இனியாகிலும் நடவாதபடி திருவுள்ளம் இரங்க வேண்டும்” என்று இறைவனிடம் முறையிட்டேன்.

“சிந்தனை யுனக்குத் தந்தேன் திருவருளெனக்குத் தந்தாய்
வந்தனை யுனக்குத் தந்தேன் மலரடி யெனக்குத் தந்தாய்
பைந்துண ருனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய்
கந்தனைப் பயந்தநாதா கருவையில் வாழுந்தேவே”

என்று துதித்து விட்டு வெறுங்கையோடு கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.

இந்த இரண்டு பிரயாணங்களும் பயனற்ற பிரயாணமாக முடிந்தன. ‘இறைவன் திருவருள் என்று சிலப்பதிகாரத்தின் நல்ல பிரதியை நமக்குக் கிடைக்கச் செய்யுமோ’ என எண்ணியபடியே ஆராய்ச்சியை நடத்தி வந்தேன்.