என் சரித்திரம்/53 அம்மைவடு

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—53

அம்மை வடு

நான் பல்லக்கில் சூரியமூலையை அடைந்தபோது பகல் 11 மணி இருக்கும். அம்மையென்ற காரணத்தால் என்னை நேரே அம்மானுடைய வீட்டிற்குள் செல்ல அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை. வெளியூர்களிலிருந்து சிலர் வந்திருந்தனர். நான் இருந்த பல்லக்கு வீட்டுக்கு எதிரே உள்ள தென்னந்தோப்பில் இறக்கி வைக்கப்பட்டது.

எனக்கு இன்னது செய்வதென்று தெரியவில்லை. அங்கே அவ்வளவு பேர்கள் கூடியிருந்ததற்குக் காரணம் இன்னதென்று தெரிந்தபோது நான் இடிவிழுந்தவன் போலானேன். நான் அங்கே சென்ற தினத்திற்கு முதல்நாள் என் அருமை மாதாமகரும், சிவபக்தியை எனக்கு இளமையிலேயே புகட்டியவரும் ஆன கிருஷ்ண சாஸ்திரிகள் சிவசாயுஜ்ய பதவியை அடைந்தனர். அவருடைய இனிய வார்த்தைகளையும் சிவபூஜா விசேஷத்தையும் வேறு எங்கே காண்போமென்று இரங்கினேன்.

குழப்பமான நிலை

இந்நிலையில் தோப்பிலே நான் பல்லக்கிற் கிடந்தபடியே வருந்துகையில் சஞ்சயனத்தை நடத்திவிட்டு என் அம்மானாகிய சிவராமையருடன் என் தந்தையாரும் பிறரும் வந்தனர். என்னை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் இருந்தவர்களைக் கண்டு அம்மான் கோபித்துக்கொண்டார். “நம்முடைய குழந்தை; அவன் கஷ்டப்படும்போது அவனுக்கு உதவாக வீடு வேறு எதற்கு? நன்றாய்ப் பிச்சைக்காரன் மாதிரி தோப்பில் நிறுத்தி வைத்தீர்கள்? உங்கள் மனம் கல்லோ!” என்று சொல்லிப் பக்கத்தில் ஒருவரும் குடியில்லாமல் தனியேயிருந்த அவருடைய வேறொரு வீட்டைத் திறந்து விரைவில் என்னை அங்கே கொணர்ந்து வைக்கச் செய்தார்.

பிறகு என் தந்தையாரும் தாயாரும் வந்து என்னைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். வேண்டிய பரிகாரங்களைப் பிறர் செய்ய நான் அவ்வீட்டிலே இருந்து வந்தேன். எனக்குக் கண்டிருப்பது பெரியம்மையின் வகையாகிய பனையேறியம்மையென்று அங்குள்ளோர் சொன்னார்கள். நான் சௌக்கியமாக வந்துசேர்ந்ததை ஆசிரியரிடம் தெரிவிக்கும்படி எனக்குத் துணையாக வந்த ஹரிஹரபுத்திர பிள்ளையிடம் சொல்லி அனுப்பினேன்.

அம்மையின் வேகம்

ஒருநாள் எனக்கு அம்மையின் வேகம் அதிகமாயிற்று. நான் என் நினைவை இழந்தேன். அப்போது எல்லோரும் பயந்துபோயினர். என் தாயாரும் தந்தையாரும் கண்ணீர்விட்டனர்.

எனக்கு நினைவு சிறிது வந்தபோது, “நாம் மிகவும் அபாயமான நிலையில் இருக்கிறோம்” என்ற உணர்வு உண்டாயிற்று. அருகில் கண்ணும் கண்ணீருமாய் இருந்த என் தாயாரை நோக்கி, “நான் பிறந்து உங்களுக்கு ஒன்றும் செய்யாமற் போகிறேனே!” என்று பலஹீனமான குரலில் சொன்னேன். அதைக் கேட்டு அவர் கோவென்று கதறினார். என் தந்தையாரும் துக்கசாகரத்தில் ஆழ்ந்தார். ஒன்றும் அறியாத குழந்தையாகிய என் தம்பி அருகில் இருந்து மருளமருள விழித்தான்.

ஆண்டவன் திருவருளால் அக்கண்டத்தினின்றும் நான் தப்பினேன். அம்மை கடுமையாக இருந்தாலும் அக்கடுமை என் உடம்பில் தழும்பை உண்டாக்கியதோடு நின்றது. என் பாட்டனார் இறந்த துக்கத்தின் நடுவிலே வளர்ந்து வந்து அத்துன்ப நிலையை நினைவுறுத்தும் அடையாளமாக இன்றும் சில அம்மை வடுக்கள் என் உடலில் இருக்கின்றன.

மார்கழி மாதம் முழுவதும் நான் மிக்க துன்பத்தை அடைந்தேன். தைமாதம் பிறந்தது. எனக்குச் சிறிது சௌக்கியம் உண்டாயிற்று; தலைக்கு ஜலம்விட்டார்கள். திருவாவடுதுறையில் அசுவதி நக்ஷத்திரத்திலே குருபூஜை நடைபெற்றது. அன்று இரவு சூரியமூலையில் என் அம்மான் வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே பார்த்தபோது திருவாவடுதுறையில் ஆகாசவாணங்கள் தெரிந்தன. முந்தின வருஷத்தில் நான் திருவாவடுதுறையிலே கண்ட காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியர் பலருக்குச் செய்யுள் இயற்றி அளித்ததை நினைத்தபோது, “இவ்வருஷமும் அத்தகைய ஆச்சரிய நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!” என்று வருந்தினேன்.

“நாம் இல்லாத காலத்தில் மாணக்கர்களுக்கு என்ன என்ன பாடங்கள் நடந்தனவோ! நாம் என்ன என்ன அரிய விஷயங்களைக் கேளாமல் இருக்கிறோமோ!” என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. பிள்ளைவர்கள் மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சில ஊர்களுக்குச் சென்று தை மாதம் குருபூஜைக்கு வந்தார்கள் என்ற செய்தி எனக்குப் பிறகு தெரிய வந்தது. அப்பொழுதுதான், “நமக்கு அதிகமான நஷ்டம் நேரவில்லை” என்று எண்ணி ஆறுதல் உற்றேன். பிள்ளையவர்கள் விருப்பப்படி அடிக்கடி திருவாவடுதுறையிலிருந்து சிலர் வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.

மகாமகம்

அந்த வருஷம் (1873) மகாமக வருஷம். மகாமக காலத்தில் கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத்சபைகள் நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன் கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும் அறிந்தேன். “நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல் அசௌக்கியம் நேர்ந்துவிட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து வாடினேன்.

சூரியமூலையிலிருந்து சிலர் மகாமகத்துக்குப் போய் வந்தனர். அங்கே சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல பல விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும் இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.

ஆசிரியரை அடைதல்

என் தேகநிலை வரவரக் குணமடைந்து வந்தமையால், “இனி விரைவில் பிள்ளையவர்களிடம் போகவேண்டும்” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தேன். என் தந்தையார் என் வேகத்தை உணர்ந்து மாசி மாதம் 17-ஆம் தேதி (29-2-1873) புதன்கிழமை மாலை என்னை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்தார்.

அப்பொழுது மடம் என்றும் இல்லாத கலகலப்போடு இருந்தது. மகாமகத்திற்குப் போயிருந்த வித்துவான்களும் பிரபுக்களும் சுப்பிரமணிய தேசிகரோடு திருவாவடுதுறைக்கு வந்திருந்தனர். எல்லோரும் அவரவர்களுக்கு அமைக்கப்பெற்ற இடங்களில் தங்கியிருந்தனர்.

மடத்தில் கீழைச்சவுகண்டியில் பிள்ளையவர்கள் பலருக்கிடையே இருந்து சம்பாஷணை செய்திருந்தனர். அவ்விடத்தை அணுகி ஆசிரியரைக் கண்டேன். அப்போது என் உடம்பில் உள்ள அம்மை வடுக்களைக் கண்டால் அவர் வருத்தமடைவாரென்று எண்ணி அவர் கண்களுக்குத் தெரியாதபடி அதிகமாக விபூதியை உடம்பு முழுவதும் பூசியிருந்தேன். ஆசிரியர் என்னைக் கண்டவுடன் மிக்க அன்போடு, “சாமிநாதையரா? இப்போது உடம்பு சௌக்கியமாயிருக்கிறதா? உடம்பு முழுவதும் வடுத் தெரியாமல் விபூதி கவசம் தரித்திருக்கிறதுபோல் தோற்றுகிறது. உம்முடைய ஞாபகமாகவே இருக்கிறேன். கண்ணப்ப நாயனார் புராணத்தோடே பெரிய புராணம் நின்றிருக்கிறது. மகாமக காலத்தில் நீர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோஷமாக இருந்திருக்கும்” என்று கூறினார். அப்பால் என் தந்தையாரைப் பார்த்து க்ஷேம சமாசாரங்களை விசாரித்தார்.

இராமசாமி பிள்ளை

அப்போது மதுரை இராமசாமி பிள்ளை என்ற தமிழ் வித்துவானொருவர் அங்கே இருந்தார். அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர். ஆறுமுக நாவலரிடம் பழகியவர். தாம் இயற்றிய சில நூல்களைப் பிள்ளையவர்களிடம் படித்துக்காட்டி அவர் கூறிய திருத்தங்களைக் கேட்டு வந்தார். அவரைப் பற்றி நான் சிலமுறை கேள்வியுற்றிருந்தேன். பிள்ளையவர்கள் அங்கிருந்தவர்களில் ஒவ்வொருவரையும் எனக்கு பழக்கம் செய்வித்தார்.

ஆசிரியர் விருப்பம்

என் உடம்பில் மெலிவைக் கண்ட ஆசிரியர் என் தந்தையாரைப் பார்த்து, “இவருக்கு இன்னும் நல்ல சௌக்கியமுண்டாகவில்லை. இங்கே ஆகாரவசதிகள் போதியபடி இல்லை. இவருடைய தாயார் இடும் உணவை உண்டுதான் இவர் உடம்பு தேறவேண்டும். ஊரிலேயே இன்னும் சில தினங்கள் இருந்து உடம்பு சௌக்கியமான பிறகு வரலாம்” என்று சொல்லி வந்தார். “இவர் நம்மை மீட்டும் ஊருக்கு அனுப்பிவிடுவாரோ!” என்று அஞ்சினேன்.

“ஆனாலும் இவரைப் பிரிந்திருப்பது எனக்குச் சிரமமாகவே இருக்கிறது. இவர் ஊருக்குப் போன பிறகு நானும் சில ஊர்களுக்குப் போய் வந்தேன். அப்பால் குருபூஜை வந்தது. பின்பு மகாமகம் வந்தது. பாடம் நடக்கவில்லை. இனிமேல் பாடத்தை நிறுத்தி வைப்பது உசிதமன்று. ஒரு யோசனை தோன்றுகிறது. தாங்கள் அப்படிச் செய்தால் அனுகூலமாக இருக்கும்” என்று ஆசிரியர் என் தந்தையாரை நோக்கி மனுபடியும் கூறினார்.

“என்ன செய்ய வேண்டும்?”

“இவருடைய தாயாரை அழைத்துக்கொண்டு பூஜையோடு வந்து தாங்கள் இவ்விடம் சிலகாலம் இருந்து இவரைக் கவனித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.”

“அப்படியே செய்கிறேன். அதில் என்ன கஷ்டம் இருக்கிறது?” என்று என் தந்தையார் உடன்பட்டார். அப்போது எனக்கு உண்டான மகிழ்ச்சி எல்லையற்றது.

தந்தையார் உடனே விடைபெற்றுச் சென்று என் தாயாரை அழைத்து வந்தார். பிள்ளையவர்கள் நாங்கள் இருப்பதற்கு வேண்டிய வசதிகளை மடத்துக் காரியஸ்தர்களைக்கொண்டு திருவாவடுதுறையில் செய்வித்தார்.

மீண்டும் பெரியபுராணப் பாடம் வழக்கம்போல் நடந்தது. நன்னூல் விருத்தியுரையைச் சிலரும் காண்டிகையுரையைச் சிலரும் பாடங்கேட்டு வந்தனர். அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

இரண்டு மாணாக்கர்கள்

பிள்ளையவர்களிடம் மற்ற மாணாக்கர்களோடு இரண்டு அபிஷேகஸ்தர்களும் பாடங் கேட்டனர். அவர்கள் இருவர்பாலும் மாணாக்கர்களிற் சிலர் வெறுப்புக்கொண்டவர்களைப்போல நடந்து வந்தனர். முதலில் அதற்குக் காரணம் எனக்கு விளங்கவில்லை; பிறகு தெரிந்தது. என் ஆசிரியர் திருவிடைமருதூருலாவை இயற்றி அரங்கேற்றிய காலத்தில் அவ்விருவரும் பலவகையான இடையூறுகளை விளைவித்தார்களாம். “சிவபெருமான் திருவீதியிலே செல்லும்போது பேதை முதல் பேரிளம் பெண் இறுதியாக உள்ள ஏழுபருவ மகளிரும் காமுற்றார்கள்” என்ற செய்தி அவ்வுலாவில் வருகிறது. திருவிடைமருதூரில் வசித்த ராஜபந்துக்களான சில மகாராஷ்டிரர்களிடம் மேலே சொன்ன இருவரும் சென்று, “இந்த ஸ்தலத்தில் ஸ்வாமி வருகையில் வீதியில் உள்ள பெண்கள் காமம்கொண்டு பிதற்றினார்களென்று இவ்வூர் உலாவை இயற்றிய ஆசிரியர் சொல்லியிருக்கிறார். இந்த வீதியில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். உங்கள் ஜாதி ஸ்திரீகளுக்கு அபவாதம் அல்லவா இது?” என்று சொல்லிக் கலகமூட்டிவிட்டார்களாம். பிள்ளையவர்களுக்கு இதனால் சில அசௌகரியங்களும் நேர்ந்தனவாம்.

ஆனால் அவ்விருவரும் பாடங் கேட்டு வருகையில் குணநிதியாகிய பிள்ளையவர்கள் அவர்களிடம் சிறிதேனும் வெறுப்பைக்காட்டாமல் பிரியமாகவே நடத்தி வந்தார். மற்ற மாணாக்கர்களுக்கோ அவ்விருவரிடத்திலும் வெறுப்பு இருந்தே வந்தது. இச்செய்திகளை நான் கேட்டபோது எனக்கும் அவர்களிடத்தில் கோபம் மூண்டது. நன்னூலில் அடிக்கடி அவர்களைக் கேள்விகேட்டுத் திணற வைப்பேன். அவர்கள் முகம் வாடி இருப்பார்கள். இடையிடையே அவர்கள் முன் செய்த விஷமத்தனமான காரியத்தைக் குறிப்பாகச் சொல்லிக்காட்டுவேன். பிள்ளையவர்களிடத்திலிருந்த மதிப்பும் இளமைமுறுக்குமே அவ்வாறு நான் செய்ததற்குக் காரணம்.

இப்படி அடிக்கடி அவர்கள் எங்களிடம் அகப்பட்டுத் துன்புறுவதைக் கண்ட ஆசிரியர் அவ்வாறு செய்யவேண்டாமென்று குறிப்பாகச் சொல்லுவார். எங்களுக்கிருந்த ஆத்திரம் தீரவேயில்லை. ஆசிரியர் அவ்வாறு சொல்லும் தினத்தில் மாத்திரம் சும்மா இருப்போம். மறுபடியும் கண்டனம் கிளம்பும். எங்கள் ஆசிரியர் இவ்விஷயத்தை ஒருநாள் சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்லி, “இந்தப் பிள்ளைகளுக்கு அவர்களிடம் கோபம் உண்டு. அடியேனிடம் அவ்விருவரும் தவறாக முன்பு நடந்துகொண்டார்கள். அதைத் தெரிந்து அவர்களைப் படாதபாடு படுத்துகிறார்கள். நான் இந்த விஷயத்தில் ஒருவாறு சம்பந்தமுடையவனாதலால் இவர்களைச் சமாதானம் செய்ய இயலவில்லை. சந்நிதானத்தில் ஒரு வார்த்தை கட்டளையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே தேசிகர் எங்களை மாத்திரம் அழைத்துவரச் செய்து, தக்க நியாயங்களை எடுத்துக்காட்டி, “நம்மிடம் வந்திருக்கும் அவ்விருவர்களிடமும் விரோதம் பாராட்டுவது அழகன்று” என்று சொன்னார். அது முதல் நாங்கள் அவர்கள்பால் இருந்த கோபம் நீங்கி அன்போடு பழகலானோம்.

திருச்சிற்றம்பலக் கோவையார்

அவ்விருவர்களுள் ஒருவராகிய மருதபண்டாரமென்பவருக்கும் எனக்கும் ஆசிரியர் திருச்சிற்றம்பலக் கோவையார் பாடஞ்சொல்லி வந்தார். நாங்கள் அதைக் கேட்பதோடு தனியே இருந்து சிந்திப்பதும் உண்டு. ஒருநாள் மடத்து முகப்பில் தம்பிரான்கள் சிலரும் காரியஸ்தர்கள் சிலரும் கூடியிருந்தார்கள். அவர்களிற் சிலர் என்னை நோக்கிக் கோவையாரிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லிப் பொருளும் சொல்லவேண்டுமென்று விரும்பினர். நான் பைரவி ராகத்தை ஆலாபனம் செய்து சில செய்யுட்களைச் சொல்லி விரிவாகப் பொருளும் உரைத்தேன். யாவரும் திருப்தியுற்றார்கள்.

அப்பொழுது அங்கே கேட்டுக்கொண்டிருந்த பூஷை வைத்தியலிங்கத் தம்பிரானென்னும் பெரியார், “கோவையார் புஸ்தகம் உங்களிடம் இருக்கிறதா?” என்றார். “இல்லை” என்றேன். உடனே அவர் எழுந்து தம்முடைய அறைக்குச் சென்று அங்கே வெகுஜாக்கிரதையாக வைத்திருந்த திருவாசகமும் கோவையாரும் சேர்ந்த பழைய அச்சுப்பிரதி ஒன்றைக் கொணர்ந்துகொடுத்தார். “இப்படி லாபம் கிடைக்குமானால் தினந்தோறும் நான் இவ்வாறு உபந்நியாசம் செய்வேனே” என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு படித்து வரலானேன்.

இடையிடையே ஆசிரியர் திருப்பெருந்துறைப் புராணச் செய்யுட்களை இயற்றி வந்தார். குமாரரது கலியாணத்தில் ஏற்பட்ட செலவில் அவருக்குக் கடன் இருந்தது. அதை நீக்குவதற்கு வழி தெரியவில்லை. அத்துயரமும் பாடம் சொல்லும் வேலையும் சேர்ந்தமையால் இயல்பாக உள்ள உத்ஸாகத்தோடு புராணத்தை இயற்ற முடியவில்லை; அது மெல்ல நடந்து வந்தது.