என் சரித்திரம்/54 எழுத்தாணிப் பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—54

எழுத்தாணிப் பாட்டு

சிதம்பரம் பிள்ளையின் கலியாணத்துக்காக என் ஆசிரியர் தம் அளவுக்கு மேற்பட்ட பணத்தைச் செலவு செய்தார். செலவிடும்போது மிகவும் உத்ஸாகமாகவே இருந்தது. கலியாணமானபின் ஜவுளிக்கடைக்காரர்களும் மளிகைக்கடைக்காரர்களும் பணத்துக்கு வந்து கேட்டபோதுதான் உலக வழக்கம்போல் அவருக்குக் கலியாணச் செலவின் அளவு தெரிந்தது. அக்கடனை எவ்வகையாகத் தீர்க்கலாமென்ற கவலை உண்டாயிற்று. பொருள் முட்டுப்பாடு வரவர அதிகமாயிற்று. இதனால் மிக்க கவலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பெருந்தொகையைக் கொடுத்துதவிசெய்து அவருக்கிருந்த மனக்கவலையை நீக்கக்கூடிய உபகாரி ஒருவரும் அப்போது இல்லை. வேறுவகையில் பொருளீட்டவும் வழியில்லை. ஏதேனும் ஒரு நூலை இயற்றி அரங்கேற்றினால் அப்போது நூல்செய்வித்தவர்கள் தக்கபடி பொருளுதவி செய்வதுண்டு. இதைத்தவிர வேறு வருவாய்க்கு மார்க்கம் இல்லை. திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி அரங்கேற்றினால் இரண்டாயிர ரூபாய் வரையிற் கிடைக்குமென்ற நம்பிக்கை இருந்தது. புராணம் ஆரம்ப நிலையிலேதான் இருந்தது. அது முழுவதும் பாடி நிறைவேற்றி அரங்கேற்றி முடிந்த பிறகுதானே பணம் கிடைக்கும்? அதுவரையிற் கடன்காரர்களுக்கு வழி சொல்லவேண்டுமே!

எப்போதும் கடனாளி

அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. “திருப்பெருந்துறைப் புராண” அரங்கேற்றத்தின் பின் நமக்கு எப்படியும் பணம் கிடைக்கும். இப்போது மடத்திலுள்ள அதிகாரிகளில் யாரிடமேனும் ஐந்நூறு ரூபாய் வாங்கி அவசரமாக உள்ள கடன்தொல்லையைத் தீர்த்து அப்பால் திருப்பிக் கொடுத்துவிடுவோம்” என்று அவர் எண்ணினார். அவருடைய வாழ்க்கைப் போக்கு இவ்விதமே அமைந்திருந்தது. வீட்டில் செலவு ஒரு வரையறையின்றி நடைபெறும். கடன் வாங்கிக்கொண்டே இருப்பார். எங்கேனும் புராணம் பாடி அரங்கேற்றினால் ஆயிரம், இரண்டாயிரம் கிடைக்கும். அதைக்கொண்டு கடனைத் தீர்ப்பார். பிறகு செலவு ஏற்படும்போது கடன் வாங்குவார். மடத்தில் அவருடைய ஆகாரம் முதலிய சௌகரியங்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவருடைய தாராளமான செலவுக்குத்தக்க பொருளுதவி கிடைக்கவில்லை. அவருடைய கனிந்த உள்ளமும் பெருந்தன்மையும் அவரை எப்போதும் கடனாளியாகவே வைத்திருந்தன.

கடனை மறுத்த தம்பிரான்

மடத்தில் முக்கிய நிருவாகியாக இருந்த தம்பிரானிடம் குமாரசாமித் தம்பிரான் மூலம் ஆசிரியர் கடன் கேட்கச்செய்தார். அத்தம்பிரானோ கடன்கொடுப்பதற்கு உடன்படவில்லை.

பிறரைக் கடன்கேட்பதால் உண்டாகும் துன்பத்தை அவர் அப்பொழுது அதிகமாக உணர்ந்தார். “நாம் இம்மடத்தில் இவ்வளவு நாட்களாகப் பழகுகிறோம். நம்மிடத்தில் எல்லோருக்கும் மதிப்பிருக்கிறது என்பது இவருக்குத் தெரியும். இருந்தும் இவர் பணம்கொடுக்க மறுக்கிறார். உலக இயல்பு இதுதான் போலும்! சமயத்திலேதான் ஜனங்களுடைய இயற்கையை நாம் அறிகிறோம். அவர்களைச் சொல்வதில் என்ன பயன்? நாமும் ஜாக்கிரதையாக இருந்து வரவேண்டும். துறவுக்கோலம் பூண்ட இவரே இப்படி இருந்தால் மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்?” என்று எண்ணி எண்ணி அவர் வருந்தினார். வேறு சிலரையும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் பயனில்லை. ஆதீனகார்த்தர் பல சமயங்களில் விசேஷமான உதவி செய்திருத்தலாலும், மடத்தில் அப்போது பணச்செலவு மிகுதியாக இருந்தமையாலும் அவரிடம் தம் குறையை நேரில் தெரிவித்துக்கொள்ள ஆசிரியருக்கு மனமில்லை. பொருள் முட்டுப்பாட்டைத் தீர்த்துக்கொள்ள வழியில்லாமல் கலங்கிய அவருக்கு வேறு எங்கேனும் போய்ச் சிலகாலம் இருந்து மனம் ஆறுதலுற்ற பின்பு வரலாம் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனால் தாம் சில வெளியூர்களுக்குப் போய்வர எண்ணியிருப்பதைக் குறிப்பாக மாணாக்கர்களிடம் தெரிவித்தார்.

மாணாக்கர்களுக்கு ஆசிரியருடைய மனவருத்தத்திற்குக் காரணம் இன்னதென்று தெரிந்தது. ஒவ்வொருவரும், “ஐயா அவர்கள் இவ்விடம்விட்டு வெளியூருக்குச் சென்றால் நானும் தவறாமல் உடன் வருவேன்” என்று மிகவும் உறுதியாகக் கூறினர். அவர்கள் உறுதி எந்த அளவில் உண்மையானதென்பது பின்பு தெரியவந்தது.

பட்டீச்சுரப் பிரயாணம்

பலவாறு யோசனைசெய்து முடிவில் என் ஆசிரியர் பட்டீச்சுரம் செல்வதாக நிச்சயித்துச் சுப்பிரமணிய தேசிகரிடம் பக்குவமாகத் தெரிவித்து அனுமதிபெற்றனர். அம்சமயம் என் பெற்றோர்கள் திருவாவடுதுறையிலேயே இருந்தார்களாதலின், பிரயாணம் நிச்சயமானவுடன் ஆசிரியர் என் பிதாவை நோக்கி, “இன்னும் சில தினங்களில் ஒருநாள் பார்த்துக்கொண்டு பட்டீச்சுரம் முதலிய இடங்களுக்குப் போய்வர எண்ணியிருக்கிறேன். இவ்விடம் திரும்பிவர இன்னும் சில மாதங்கள் ஆகும். ஆதலால் நீங்களும் சாமிநாதையருடன் புறப்பட்டு நான் போகும்போது பட்டீச்சுரத்துக்கு வந்துவிடுங்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்து பிறகு ஆவுடையார்கோயில் போகலாம்” என்று கூறவே அவர் அதற்கு ஒருவாறு உடன்பட்டார். ஆனாலும் என் பெற்றோர்கள் எங்களுடன் வருவதில் எனக்கு இஷ்டமில்லை. என் தந்தையாருடைய நியமானுஷ்டானங்களுக்கு நாங்கள் போகும் இடங்களில் தக்க வசதி இராதென்ற எண்ணமே அதற்குக் காரணம். பட்டீச்சுரம் என்றாலே எனக்கு ஒருபயம் உண்டு அங்கே பிள்ளையவர்கள் இருப்பதனால் நானும் இருக்கவேண்டிய அவசியம் நேர்ந்தது. என் தாய், தந்தையரும் அங்கே வந்து இருந்துவிட்டால் அப்பால் ஆறுமுகத்தா பிள்ளையின் கோபம் எந்த எந்த ரூபத்தில் வெளிப்படுமோ என்று பயந்தேன்.

ஆகவே தக்க காரணங்களை நான் பிள்ளையவர்களிடம் சொல்லி என் தாய், தந்தையர்கள் உடன் வருதலை நிறுத்தினேன். அக்காலத்தில் நான் கையில் வெள்ளிக்காப்பும் வெள்ளிச்சங்கிலியும் அணிந்திருந்தேன். என் ஆசிரியர், “நாம் பல இடங்களுக்குப் போகும்படியிருக்கும். இவை கையிலிருந்தால் ஏதேனும் அபாயம் நேர்ந்தாலும் நேரலாம். ஆகையால் இவற்றைக் கழற்றி உம்முடைய தந்தையாரிடம் கொடுத்துவிடும்” என்று கூறவே நான் அங்ஙனமேசெய்தேன்.

பிறகு நான் என் தந்தையாரை அழைத்துக்கொண்டு சூரியமூலை சென்று அவர்களை அங்கே விட்டுவிட்டுச் சில தினங்களில் வருவதாக ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டேன். “சரி அப்படியே செய்யலாம். சூரியமூலைக்குப் போய்விட்டு இங்கே வந்து பாரும். நான் இங்கே இருந்தால் என்னுடன் சேர்ந்து வரலாம் இல்லையாயின் பட்டீச்சுரத்துக்கு வந்துவிடலாம்” என்று ஆசிரியர் எனக்குக் கட்டளையிட்டார். அங்ஙனமே சூரியமூலை போய்விட்டுத் திருவாவடுதுறைக்கு வந்தேன். அதற்குள் ஆசிரியர் பட்டீச்சுரம் சென்றுவிட்டதாகத் தெரிந்ததால் நானும் அங்கே போய் அவரோடு இருந்துவரலானேன். வழக்கம்போல அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

நான் சூரியமூலைக்குப் புறப்பட்டுச் சென்ற மறுநாளே பிள்ளையவர்கள் பட்டீச்சுரத்துக்கு வேண்டிய சாமான்களுடன் போய்ச் சேர்ந்தார்கள். அவர்களுடன் சண்பகக் குற்றாலக் கவிராயர் மட்டும் பட்டீச்சுரம் போய்ச் சில தினங்கள் இருந்துவிட்டு அப்பால் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். வேறு மாணாக்கர்கள் ஒருவரும் உடன் செல்லவில்லை. பிள்ளையவர்கள் விரும்பியபடி சவேரிநாத பிள்ளை மாயூரத்துக்கு வந்து ஆசிரியர் வீட்டில் இருந்தனர். மாணாக்கர்களெல்லாம் உடன்வருவதாகச் சொன்னதையும் ஒருவரேனும் வராமற்போனதையும் என் ஆசிரியர் அடிக்கடி என்னிடம் எடுத்துச்சொல்வார். “உலகமே பணத்தில் நிற்கிறது. கல்வி, அன்பு, என்பனவெல்லாம் அதற்கு அடுத்தபடி உள்ளவையே” என்பார். அப்பொழுதெல்லாம், “நல்லவேளை! நாம் அக்கூட்டத்தில் சேரவில்லையே” என்ற ஒருவகையான திருப்தி எனக்கு உண்டாகும்.

எழுத்து வேலை

ஆசிரியர் பட்டீச்சுரத்திற்கு ஸ்ரீமுக வருஷம் வைகாசி மாதம் (மே, 1873) போய்ச் சேர்ந்தார் விரைவில் திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றி முடித்துவிட வேண்டுமென்ற வேகம் அவருக்கு இருந்தது. ஆகையால் தினந்தோறும் விடாமற் புராணத்தில் சில பாடல்கள் இயற்றப்பெற்று வந்தன. ஒருமுறை அவர் பாடல் சொல்லுவதை ஏட்டில் எழுதுவதும் பிறகு எழுதியதைப் படித்துக்காட்டி அவர் சொல்லிய திருத்தங்களைக் குறித்துக்கொண்டு மீட்டும் வேறு ஏட்டில் நன்றாக எழுதுவதுமாகிய வேலைகள் எனக்கு இருந்தன. இவ்வேலையால் நான் தனியே நூல்களைப் பாடங் கேட்க இயலவில்லை. ஆயினும் அப்புராணச் செய்யுட்களை எழுதியதும் இடையிடையே அச்செய்யுட்களின் சம்பந்தமாக ஆசிரியர் கூறியவற்றைக் கேட்டதும் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.

புராணம் இயற்றும் இடங்கள்

பிற்பகல் வேளைகளில் பிள்ளையவர்கள் மேலைப்பழையாறை, பட்டீச்சுரம் ஆலயம், திருச்சத்திமுற்றம் கோயில் முதலிய இடங்களுக்குச் சென்று சிலநேரம் தங்கியிருப்பார். நான் எப்போதும் ஏடும் எழுத்தாணியும் கையில் வைத்துக்கொண்டே இருப்பேன். குளிர்ந்த வேளைகளில் அக்கவிஞருக்கு ஊக்கம் உண்டாகும்போது புராணச் செய்யுட்கள் வெகுவேகமாக நடைபெறும். இயற்கைக் காட்சிகள் அமைந்த இடமாக இருந்தால் அவருக்கு உத்ஸாகம் பின்னும் அதிகமாகும். பட்டீச்சுரத்தில் உள்ள திருமலைராயனாற்றங்கரையில் ஓர் அரசமரம் உண்டு. அதன் கீழே ஒரு மேடை இருந்தது. ஆற்றை நோக்கியபடி அம்மேடையில் சில வேளைகளில் அவர் உட்கார்ந்துகொண்டு பிற்பகலில் செய்யுட்களைச் சொல்லுவார். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் கற்பனா சக்தியே தனிச்சிறப்புடையது.

பெரும்பாலும் காலைவேளைகளிலும் பிற்பகல் நேரங்களிலுமே புராணச் செய்யுட்களைச் சொல்லுவார். பகற் போசனம் ஆனவுடன் சிறிதுநேரம் அவருக்கு அயர்ச்சியாக இருக்கும். அக்காலங்களில் நான் பாடல்களை ஏட்டில் பிரதி செய்வேன்.

எழுத்தாணியின் மறைவு

ஒருநாள் காலையில் மேலைப்பழையாறையில் ஆசிரியர் பாடல்கள் சொல்ல நான் எழுதிவந்தேன். அதனை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைக் காலையாகாரம் செய்துவரும்படி அவர் அனுப்பினார். நான் ஏட்டையும் எழுத்தாணியையும் அவர் எதிரே ஓரிடத்தில் வைத்துவிட்டுப் போய்ச் சில நேரத்திற்குப் பின் வந்தேன். அந்த இடைக்காலத்தில் அவர் தம் மனத்துக்குள்ளே மேலே சொல்லவேண்டிய பாடல்களுக்குரிய கருத்தை ஆராய்ந்து வைத்துக்கொண்டார். ஆதலால் நான் வந்தவுடனே ஒன்றும் சொல்லாமல் பாடல் சொல்லத் தொடங்கினார். நான் ஏட்டையும் எழுத்தாணியையும் பார்த்தபோது ஏடு மாத்திரம் இருந்தது; எழுத்தாணி காணப்படவில்லை. சுற்றிலும் பார்த்தேன். நான் பாடலை எழுதாமல் இப்படிப் பார்ப்பதைக் கண்ட ஆசிரியர், “ஏன்? என்ன தேடுகிறீர்?” என்றார். நான் விஷயத்தைத் தெரிவித்து, “யாராவது எடுத்து வைத்திருக்கலாம் விசாரித்து வாங்கி வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றேன். என் எழுத்தாணியை எங்கும் காணவில்லை. அங்கே இருந்த கணக்குப் பிள்ளையைக் கேட்டேன். அவர் தமக்குத் தெரியாதென்று சொல்லிவிட்டார். வேறு ஏதாவது ஓர் எழுத்தாணி இருந்தால் தரவேண்டுமென்று கேட்டபோது அவர் தமது எழுத்தாணியை வீட்டில் வைத்திருப்பதாகச் சொன்னார்.

முதல்முறை பட்டீச்சுரத்தில் இருந்தபோது ஆறுமுகத்தாபிள்ளை என் புஸ்தகத்தை ஒளித்து வைத்த செய்தி என் ஞாபகத்திற்கு வந்தது. “இன்னும் அத்தகைய கஷ்டம் நம்மை விடாதுபோலத் தோன்றுகிறதே” என்று என் மனம் நடுங்கியது; ஒன்றும் தோன்றாமல் பிள்ளையவர்கள் முன் வாடிய முகத்தோடு வந்து எழுத்தாணி அகப்படவில்லை என்று தெரிவித்தேன். தாம் மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்ட செய்யுட்களைச் சொல்லவேண்டுமென்று என் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அவருக்கு இது மிக்க வருத்தத்தை உண்டாக்கியது. கவிஞர் பாடலை இயற்றச் சிந்தனை செய்வாரா? இக்கவலைகளில் மனத்தைச் செலுத்துவாரா?

அப்போது அங்கே ஆறுமுகத்தா பிள்ளை வந்தார். “ஏன் இவர் ஒன்றும் எழுதாமல் இப்படி அலைகிறார்?” என்று கேட்டார். பிள்ளையவர்கள் காரணம் சொன்னபோது, “இவர் அதிக அஜாக்கிரதையுள்ளவர். புஸ்தகத்தையோ, எழுத்தாணியையோ இவர் பத்திரமாக வைத்துக்கொள்வதில்லை. உங்களிடம் எவ்வளவோ தடவை சொல்லியிருக்கிறேன். இவர் எதற்கும் உதவாதவர்” என்று தம்முடைய விமரிசனத்தை ஆரம்பித்துவிட்டார். “மறுபடியும் அகப்பட்டுக் கொண்டோமே” என்ற சஞ்சலம் எனக்கு உண்டாயிற்று.

ஆறுமுகத்தா பிள்ளையின் உத்தரவு

பிள்ளையவர்கள் அவரிடம் சமாதானமான வார்த்தைகள் கூறி அவரைச் சாந்தப்படுத்தின பிறகு, “எங்கே, இவர் எழுத்தாணி தரவேண்டுமென்று ஒரு செய்யுள் புதியதாக இயற்றிச் சொல்லட்டும்; நான் அதை வருவித்துத் தருகிறேன்” என்று உத்தரவு செய்தார். நான் கதிகலங்கி நின்றநிலையில் செய்யுளைப் பற்றி யோசிக்கும் மனநிலை ஏது? “தம்பி சொல்லுகிறபடி ஒரு செய்யுள் சொல்லும்” என்று ஆசிரியர் கட்டளையிடவே நான் யோசிக்க ஆரம்பித்தேன். நல்லவேளையாக ஆறுமுகத்தா பிள்ளை எதிரே இருந்த தோட்டத்திற்குச் சென்றார். அச்சமயம் பார்த்து என் ஆசிரியர் முதலில், ‘எழுத்தாணி யொன்றெனக்கின் றீ” என்று ஒரு வெண்பாவின் இறுதி அடியைச் சொன்னார். தொடர்ந்து சிறிது சிறிதாக இறுதியிலிருந்தே முதலடி வரையில் சொல்லி முடித்தார். அவ்வெண்பா முழுவதையும் நான் பாடம் பண்ணிக்கொண்டேன். ஆறுமுகத்தா பிள்ளை வந்தவுடன்,

“தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா என்றும்
வழுவில் புராணம் வரைய - மெழுகில்
அழுத்தாணிப் பொன்னால் அமைந்தஉரு விற்றாம்
எழுத்தாணி ஒன்றெனக்கின் றீ”

என்ற அவ்வெண்பாவைச் சொன்னேன். அவருக்குத் திருப்தி உண்டயிற்றோ, இல்லையோ நான் அறியேன். சிறிது நேரத்தில் என் எழுத்தாணி என்னிடம் வந்து சேர்ந்தது.

இந்நிகழ்ச்சியால் பிள்ளையவர்களுடைய மனம் புண்பட்டது. “இந்த உலகத்தில் நம் மனமறிந்து அன்பு பாராட்டுபவர்கள் எங்கும் இல்லையே! வெறும் சோற்றை உத்தேசித்து எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது!” என்று வருத்தமுற்றார்.