உள்ளடக்கத்துக்குச் செல்

என் சரித்திரம்/94 இடையே வந்த கலக்கம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—94

இடையே வந்த கலக்கம்

டிக்கடி ஆராய்ந்து வந்தமையால், என் நினைவு முழுவதும் சிந்தாமணி மயமாக இருந்தது. அதில் என் மனம் ஆழ்ந்துவிட்டது. காலையில் நான் எழுந்தவுடன் சிந்தாமணி முகத்தில்தான் விழிப்பேன். பல் தேய்த்து அனுஷ்டானம் செய்தவுடன் ஆகாரம் பண்ணுவேனோ இல்லையோ சிந்தாமணியை ஆராய்வேன். காலேஜிற்குப் போக நேரமாய்விடுமே யென்று கருதமாட்டேன். காலேஜில் அடிக்கும் முதல் மணி என் காதில் விழுந்து சிந்தாமணியிலிருந்து என் கருத்தை வலியப் பிடித்து இழுக்கும். அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டுப் புறப்படுவேன். சில நாட்களில் சாப்பிடாமலே போய்விடுவேன். காலேஜில் பாடம் சொல்லுகையில் இடையே எத்தனையோ முறை சிந்தாமணியைப் பற்றிப் பிள்ளைகளுக்குச் சொல்லுவேன். அவர்களின் பலரை என் வீட்டுக்கு வரச் சொல்லிப் பாட பேதம் பார்க்கச் செய்தும் குறிப்புக்களை எழுதச் செய்தும் சிந்தாமணித் தொண்டில் ஈடுபடுத்துவேன். பிற்பகலில் காலேஜிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் சிந்தாமணியை எடுத்துக்கொள்வேன். எங்கள் வீட்டுத் திண்ணையில் சிறிய கை மேஜையின்மேல் பிரதியை வைத்துக் கொண்டு எத்தனையோ இரவுகள் சிந்தாமணி ஆராய்ச்சியில் மனமொன்றியிருப்பேன். எனக்குச் சிந்தாமணியும், சிந்தாமணிக்கு நானும் துணையாகப் பொழுது போவதே தெரியாமல் ஆராய்ச்சி நடைபெறும்.

காலேஜ் ஆசிரியர்களில் ஒருவர் ஓர் இரவு பன்னிரண்டு மணி வரையில் ஒரு நண்பர் வீட்டில் சீட்டாடி விட்டு எங்கள் தெரு வழியே தம் வீட்டுக்குச் சென்றார். எங்கும் இருள் சூழ்ந்த இரவில் வெளித் திண்ணையில் நான் உட்கார்ந்திருந்ததைக் கண்டு வியப்புற்று, “என்னை இது? இன்னும் உட்கார்ந்திருக்கிறீர்களே? நான் போகும் போதும் இப்படியே இருந்தீர்கள்; இப்போதும் உட்கார்ந்திருக்கிறீர்களே?” என்றார். சுருக்கமாக விடை சொல்லி நான் அவரை அனுப்பி விட்டேன்.

சிந்தாமணிப் பிரபஞ்சம்

அந்தத் தனிமையிலே திருத்தக்க தேவர் என்னை எங்கெல்லாமோ அழைத்துச் செல்வார். இராசமாபுரத்துக் காட்சிகளைக் காட்டுவார். சச்சந்தனின் அந்தப்புரத்துக்கு அழைத்துப் போவார். கட்டியங்காரனுடைய செயல்களை எடுத்துச் சொல்லுவார்.

சீவகன் பேசுவான்; விளையாடுவான்; வீரச் செயல் புரிவான்; இன்ப விளையாட்டிலே ஈடுபட்டிருப்பான்; காந்தருவதத்தை காட்சி யளிப்பாள்; குணமாலை தோன்றுவாள்.

இவ்வளவு காட்சிகளினிடையே என் உடம்புதான் இரவில் தனியாக இருக்குமேயன்றி என் மனம் சிந்தாமணிப் பிரபஞ்சத்திலே விரிந்த இடங்களையும் நீண்ட கால நிகழ்ச்சிகளையும் அளவிட்டு இன்புறும். இடையிடையே ஆராய்ச்சி நினைவு உண்டாகும், சிக்கல்களும் கலக்கங்களும் தோன்றும். அப்போது சீவகசிந்தாமணிக் காட்சிகள் மறையும். புஸ்தகமும் எழுத்துக்களும் முன் நிற்கும். பாட பேதங்கள் வந்து போரிடும். விஷயம் விளங்காத குழப்பத்தில் தடுமாறுவேன். திடீரென்று புதிய ஒளி உண்டாகும். விஷயம் தெளிவாகும். மறுபடி புஸ்தகமும் எழுத்தும் இந்த உலகமும் மறைந்து விடும்.

தாமோதரம் பிள்ளையின் பழக்கம்

இப்படியிருக்கையில் சென்னையிலிருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை எனக்கு எழுதியபடியே கும்பகோணத்தை அடைந்து அங்கே வக்கீலாக இருந்து வந்தார். அவர் முன்னமே ஒரு பெரிய உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றவர். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தமிழ் நூல்கள் விஷயமாகச் சல்லாபம் செய்து பழகலானார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கருப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு நானும் அடிக்கடி போய் வருவதுண்டு தாம் பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணியிருப்பதாகத் தெரிவித்ததோடு திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனமே நான் அவரை அழைத்துச் சென்று தேசிகருக்குப் பழக்கம் செய்வித்தேன். மடத்தில் பல ஏட்டுச் சுவடிகள் இருக்குமென்றும் அவற்றைத் தம்முடைய பதிப்புக்கு உபயோகித்துக் கொள்ளலாமென்றும் அவர் கருதினார். தேசிகருடன் செய்த சம்பாஷணையிலிருந்து அவருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் உணர்ந்து கொண்டார்.

கும்பகோணத்திலுள்ள கனவான்களையும் வக்கீல்களையும் தாமோதரம் பிள்ளைக்கு அவர் விரும்பியபடி பழக்கம் செய்வித்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி தமிழ் சம்பந்தமானவிஷயங்களைப் பேசுவோம். அவர் பல விஷயங்களைக் கேட்பார்; நான் சொல்லுவேன். யாழ்ப்பாணத்திலுள்ள பல வித்துவான்களுடைய செய்திகள் அவர் மூலமாகத் தெரிய வந்தன. அவருடன் ஆராய்ச்சிக்கு உதவியாக, யாழ்ப்பாணத்து நல்லூர் சிற். கைலாச பிள்ளை என்ற ஒருவர் இருந்தார். அவர் நல்ல அறிவாளியாகத் தோற்றினார்; என்பால் மிக்க அன்புடன் அவர் பழகினார்.

ஒரு நாள் சம்பாஷயையில் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கம்பராமாயணத்தில் மிக்க விருப்பமுடையவர்களென்றும் அவர்களிடமிருந்து பல திருத்தமான பாடங்கள் தெரியவந்தனவென்றும் தாமோதரம் பிள்ளையிடம் சொன்னேன். அன்றியும் மடத்திலுள்ள பிரதிகளை வைத்துக்கொண்டு இராமாயணம் முழுவதும் சோதித்து நல்ல பாடங்களைக் கைப் பிரதியில் குறித்துக்கொண்டே செய்தியையும் தெரிவித்தேன். பின்பு அவர் என்னிடமுள்ள கம்பராமாயணப் பிரதியை ஒவ்வொரு காண்டமாக வாங்கி நான் செய்திருந்த திருத்தங்களையெல்லாம் தம் பிரதியில் செய்துகொண்டு என் பிரதியை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

ஒரு பிற்பகலில்

ஒரு நாள் பிற்பகலில் தாமோரம் பிள்ளை என் வீட்டுக்கு வந்தார். நெடுநேரம் பேசிக் கொண்டிருந்த பின்பு, “தங்களிடம் சிந்தாமணி விசேஷ உரையுள்ள பிரதியொன்று இருக்கிறதென்றும், அதனை ஆராய்ந்து வைத்திருக்கிறீர்களென்றும், அது நல்ல பிரதியென்றும் சென்னையில் நாவலர் பதிப்பு நூல்களை மீட்டும் பதிப்பித்து வந்த சதாசிவ பிள்ளை சொன்னார். சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று நான் எண்ணியிருக்கிறேன். கொழும்பிலிருக்கும் பெரிய பிரபுவாகிய கனம் ராமநாதனவர்கள் அதன் பதிப்புக்கு வேண்டிய செலவு முழுவதையும் தாம் கொடுப்பதாக எனக்கு வாக்களித்திருக்கிறார். தங்கள் பிரதியைக் கொடுத்தால் என்னிடமுள்ள பிரதியோடு ஒப்பிட்டுக்கொண்டு பதிப்பிப்பேன்” என்றார்.

“மிகவும் சிரமப்பட்டுப் பல வருஷங்களாகச் சோதித்து வைத்திருக்கிறேன். நானே அதனை அச்சிட எண்ணியிருக்கிறேன். ஆதலால் கொடுக்க மனம் வரவில்லை” என்று சொல்லி நான் மறுத்தேன்.

தாமோ:— இந்த விஷயத்தில் நான் மிக்க அனுபவமுள்ளவன். சீவகசிந்தாமணியைப் பதிப்பிக்க முதலில் அதிகப் பணம் வேண்டும். சென்னபட்டணத்தில் அச்சிடவேண்டும். நீங்கள் இங்கே இருந்து கொண்டு சென்னையில் அச்சிடுவதென்றால் எளிதில் முடியாது. நான் தொடங்கினேனானால் இன்னும் மூன்று நான்கு மாதங்களுள் புத்தகத்தை நிறைவேற்றி விடுவேன். உங்கள் கையில் பொங்கலுக்குள் முந்நூறு பிரதிகள் தருவேன்.

நான் :— இதற்கு முன்பு சென்னையில் கும்பகோண புராணம் முதலிய சில நூல்களை அச்சிட்டதுண்டு. சேலம் இராமசுவாமி முதலியார் வேண்டிய உபகாரங்களைச் செய்வதாக வாக்களித்திருக்கிறார்.

தாமோ:— அவர் என்ன உபகாரம் செய்வார்? பணம் வேண்டுமனால் சிறிது கொடுப்பார். ‘புரூப்’ பார்ப்பாரா? பதிப்புக்கு வேண்டிய அமைப்புக்களைச் சொல்லித் தருவாரா? நீங்கள் முன்னமே பதிப்பித்த கும்பகோண புராணம் போன்றதன்று இந்த நூல். இதைப் பதிப்பிக்க வேண்டிய முறையே வேறு. சென்னைக்கே போய் அங்கே நேரில் இருந்து காரியத்தை முடிக்க வேண்டும். அங்குள்ள ஸ்காட்டிஷ் அச்சுக்கூடத் தலைவர் எனக்கு மிக வேண்டியவர். நான் எது சொன்னாலும் நிறைவேற்றித் தருவார். இந்த விஷயத்தில் காலேஜ் வேலை வேறு உங்களுக்கு ஒரு தடையாக இருக்கும்.

நான்:— காலேஜ் வேலை எனக்கு ஒரு தடையாயிராது. ஒழிந்த நேரத்தில்தானே நான் இந்த வேலையைக் கவனிப்பேன்? அவசியமானால் லீவு வாங்கிக் கொள்ளுகிறேன். நான் எழுத்தெழுத்தாக ஆராய்ந்து வைத்திருக்கும் நூலை உங்களிடம் விடுவதானால் என் உழைப்பு வீணாக அன்றோ போய் விடும்?

தாமோ:— ஏன் வீணாகும்? அவ்வளவு நன்றாக உபயோகப்படுமே! நீங்கள் ஆராய்ந்து கண்ட விஷயங்களை என் பதிப்பில் சேர்த்துக் கொள்ளுகிறேன். உங்கள் பெயரையும் வெளிப்படுத்துகிறேன். நீங்கள் பதிப்பிப்பதாக இருந்தால் உங்கள் உழைப்பைப் பற்றி நீங்களே பாராட்டிக் கொள்ள முடியாது. நான் பதிப்பித்தால் உங்களைச் சிறப்பித்து நன்றாக எழுதுவேன்.

புகழ் வேண்டாம்

நான்:— எனக்குப் புகழ் வேண்டு மென்றும் பிறர் என்னைப் பாராட்ட வேண்டுமென்றும் நான் எதிர் பார்க்கவில்லை. நான் பதிப்பிப்பதாகச் செய்து கொண்ட சங்கற்பமும், அதன் பொருட்டு மேற்கொண்ட சிரமங்களும் வீணாகி விடுமேயென்று யோசிக்கிறேன்.

தாமோ:— இதுவரையில் நீங்கள் பட்ட சிரமம் பெரிதன்று. இதைப் பதிப்பிப்பதிலேதான் உண்மையான சிரமம் இருக்கிறது. அந்தச் சிரமம் உங்களுக்கு ஏற்பட வேண்டாமே யென்றுதான் சொல்லுகிறேன். நான் அந்தத் துறையில் உழைக்க வேண்டுமென்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால் என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என் பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் பெயரும் வெளிப்படும்.

நான்:— நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத்தானே இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்ட பிறகுதானே உலகம் அதை மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்?

‘இராமாயணம் பதிப்பிக்கலாம்’

தாமோ:— ஏதாவது நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கிருந்தால் கம்பராமாயணத்தை வெளியிடலாமே! நீங்கள் பல வருஷங்களாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள். அருமையான திருத்தங்களை உங்கள் பிரதியிற் கண்டேன். இராமாயணத்துக்கு எல்லா நூல்களையும் விட மதிப்பு அதிகம். பதிப்பித்தால் புண்ணியமும் உண்டு.

நான்:— அதிலும் பொருட் செலவு இல்லையா?

தாமோ:— இருந்தால் என்ன! இராமாயணம் பதிப்பிப்பதாக இருந்தால் பிரபுக்கள் நான் நானென்று பொருளுதவி செய்ய முன்வருவார்கள். ஒவ்வொரு காண்டமாகப் பதிப்பியுங்கள். நானே ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒவ்வொரு கனவானை உதவி செய்ய ஏற்பாடு செய்கிறேன். சிந்தாமணிப் பதிப்பை எனக்கு விட்டு விடுங்கள்.

என் மன நிலை

அச்சமயம் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. மனம் சஞ்சலமடைந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் விஷயத்தில் தமிழிலும் ஜைன நூல்களிலும் இன்னும் தேர்ந்த அறிவு இருந்தால் நன்றாக இருக்குமென்று ஒரு சமயம் நான் எண்ணியதுண்டு. அப்போது இந்தப் பெரிய காரியத்தை நிறைவேற்ற நமக்குச் சக்தியுண்டா என்ற அபிப்பிராயம் மனத்தே எழும். ஆனாலும் ஒன்றிலும் தளராமல் எப்படியாவது பதிப்பைத் தொடங்கிவிடுவது என்ற உறுதியோடு இருந்தேன். ‘சேலம் இராமசுவாமி முதலியார் இந்நூலைப் பதிப்பிக்கும் விஷயத்தில் வேண்டிய உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறார். அதை ஆராய்ந்து பதிப்பிப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு வேண்டியவற்றைச் செய்து வந்திருக்கிறோம். இப்போது இவரோ இப்படிச் சொல்லி நம் பிரதியை விரும்புகிறாரே! நாம் பின் வாங்கலாமா? நம் கைப் புத்தகத்தில் போட்டிருக்கும் ஒவ்வொரு கோடும் புள்ளியும் ஒவ்வொரு குறிப்பும் எவ்வளவு உபயோகமானவை! மற்றவர்கள் கண்களுக்கு ஒரு சிறிய கோடாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கோட்டின் சங்கேதத்தால் நமக்குத்தோற்றும் விஷயங்கள் வேறு. அந்தக் குறிப்புக்களை இவர் எப்படி உணர முடியும்? நாம் இட்ட ஒவ்வோர் அடையாளமும் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது? அவற்றை மற்றவர் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? எவ்வளவு ஜைன நூல்கள் படித்து விஷயங்கள் தெரிந்து கொண்டோம்! எவ்வளவு ஜைனர்களிடம் சென்று சமய மறிந்து நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்து கொண்டோம்! எல்லாவற்றையும் வீணாக்கி விடுவதா’ என்று இவ்வாறு சிறிதுநேரம் அவரோடு ஒன்றும் பேசாமல் சிந்தனை செய்தேன்.

அவர் மீட்டும் மீட்டும் பல விஷயங்களைச் சொல்லி என் சிந்தாமணிப் பிரதியை விரும்பினார். அப்போது நான், “என் தந்தையாரவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்பு கேட்டுக் கொண்டு, நாளைக் காலையில் தங்களிடம் வந்து பதிப்பு விஷயத்தைப் பற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அவர், “அப்படியே செய்யுங்கள்; இப்போது புஸ்தகத்தைக் கொடுங்கள்; நான் ஒரு முறை பார்த்து வைக்கிறேன். பிறகு உங்கள் தீர்மானப்படியே செய்யலாம். பெரும்பாலும் எனக்கு அனுகூலமாகவே முடியுமென்று எதிர்பார்க்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பிரதி கொடுத்தேன்

உள்ளே சென்றேன். நான் ஆராய்ந்து திருத்தி இரண்டு பாகங்களாக எழுதி வைத்திருந்த சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவர் கையில் கொடுத்தேன். உடனே அவர் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அவர் செய்த புன்முறுவலிலே சந்தோஷம் பொங்கியது. “சரி. நான் போய் வருகிறேன். நான் சொன்னவற்றையும் என் வேண்டுகோளையும் தங்கள் தந்தையாரவர்களிடம் தெரிவித்து நாளைக் காலையில் வந்து தங்கள் சம்மதத்தைத் தரவேண்டும்” என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுப் புஸ்தகத்துடன் தம் வண்டியிலேறித் தம் வீட்டுக்குச் சென்றார்.

புதிய உணர்ச்சி

அது வரையில் சாவதானமாகப் பேசிக் கொண்டிருந்த தாமோதரம் பிள்ளை புஸ்தகம் கைக்கு வந்தவுடன் திடீரென்று புறப்பட்டது என் மனத்தில் ஒரு புதிய உணர்ச்சியை உண்டாக்கிற்று பின்னும் சிறிது நேரம் அவர் பேசியிருந்தால் ஒருகால் அந்த உணர்ச்சி உண்டாயிருக்குமோ இராதோ அறியேன். அவர் போன பின் எனக்கு ஒரு மயக்கம் உண்டாயிற்று ஒன்றிலும் புத்தி செல்லவில்லை. அவர் கைக்குச் சென்ற பிரதி மீட்டும் வருமோவென்று எண்ணிக் கலங்கினேன். வெகுநேரம் வரையில் பலவகையான சிந்தனைகளுடன் ஒரு பெருங்கவலையில் ஆழ்ந்திருந்தேன். வெளியே போயிருந்த என் தந்தையார் அப்போது வந்தார். என்னைக் கவனித்து, “என்ன! வழக்கம்போல் இராமல் ஒரு மாதிரியாக இருக்கிறாயே? என்ன விசேஷம்?” என்று கேட்டார். உடனே நான் முதலில் “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு, தாமோதரம்பிள்ளை வந்திருந்ததையும், சிந்தாமணிப் பதிப்பு விஷயமாக நடந்த சம்பாஷணையையும், நான என்னிடமிருந்த கைப்பிரதியைக் கொடுத்ததையும் மற்ற விவரங்களையும் சொன்னேன். அவர், “அவசரப்பட்டுப் பிரதியைக் கொடுத்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் கவலைப்பட வேண்டாம். சிந்தாமணியை நீயே பதிப்பிப்பதாகப் பலரிடம் தெரிவித்திருக்கிறாய். இரவும் பகலும் அதே வேலையாக இருந்து வருகிறாய். நீதான் பதிப்பிக்க வேண்டும். ஒரு கவலையும் இல்லாமல் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் காப்பாற்றுவார். நாளைக் காலையில் அவரிடம் போய் நான் சொன்னதைச் சொல்லிக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வந்து மேலே கவனிக்க வேண்டியதைக் கவனி” என்று தைரியமாகச் சொன்னார். “நானே பதிப்பிப்பதுதான் முறையாகும்’ என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆகாரம் செய்து விட்டுப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. தாமோதரம் பிள்ளையிடம் என்ன சமாதானம் சொல்லிப் பிரதியைத் திரும்பி வாங்கி வருவது என்று யோசித்தேன். ஒன்றும் தோன்றவில்லை. பொழுது எப்போது விடியுமென்று காத்திருந்தேன். பொழுதுவிடிந்தவுடன் அனுஷ்டானம் முதலியவற்றை முடித்துக் கொண்டு என் தம்பி சிரஞ்சீவி சுந்தரேசனுடன் தாமோதரம் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றேன். அவர் வீட்டுத் திண்ணையில் நான் இருந்து, அவர் வருவதை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். நான் வந்ததைக் கேட்டு அவர் வெளியே வந்தார். வந்தவர் என் பிரதியை என் கையிற் கொடுத்துச் சில சந்தேகங்கள் கேட்கத் தொடங்கினார். அப்போது யாழ்ப்பாணம் அம்பிகை பாக உபாத்தியாயர் என்பவரும் உடன் இருந்தார். முதற் பாகத்தைப் பார்க்கையில் 20 பக்கங்கள் வரையில் அவர் கோடிட்டு ‘ஸ்பேஸ்’ அடையாளம் செய்திருப்பது தெரிந்தது. அவர், ‘மீனேறுயர்த்த’ என்னும் செய்யுளின் உரையில் உள்ள ’ஏற்றை மேம்படுத்தின’ என்பது என்ன? பவர் துரை அச்சிட்டுள்ள புத்தகத்தில் ‘மேம்படுத்தின’ என்று இருக்கிறது. இதை விளங்கச் செய்ய வேண்டும்” என்று கேட்டார். விளக்கினேன். “வென்றிக் களிற்றை விரிதாரவன் வென்றவாறும்’ என்பதற்கு, ’பிறரை முன்பு வென்ற வெற்றியையுடைய களிறு’ என்று உரை எழுதியிருக்கிறதே. என்ன விஷயம்?” என்று கேட்டார்: அதையும் விளக்கமாகச் சொன்னேன்.

அப்பால் இவற்றைப் போன்ற வேறு சில ஐயங்களை வினாவினார். விளக்கமாகச் சொன்னேன். எல்லாவற்றையும் அம்பிகை பாக உபாத்தியாயர் கவனித்து வந்தார். அப்பால் நான் தாமோதரம் பிள்ளையைப் பார்த்து, “நீங்கள் இப்போது கேட்ட கேள்விகள் மிகவும் சாதாரணமானவை. கடினமான பாகங்கள் இந்நூலில் எவ்வளவோ உண்டு. அவை விளங்குவதற்கு ஏற்ற சௌகரியம் உங்களுக்கில்லை. ஆதலால் இம்முயற்சியை நீங்கள் நிறுத்திவிடுங்கள். நானே பதிப்பித்தலை மேற்கொள்வேன். பொருள் விளங்காமல் நீங்கள் எங்ஙனம் பதிப்பிக்க முடியும்?” என்றேன். அவர், “நூல் இறவாமல் இருக்கவேண்டுமென்பது என் கருத்து. பொருளுதவி கிடைக்கும்போது நூலைப் பதிப்பித்து விட்டால் படிப்பவர்கள் பொருள் செய்து கொள்வார்கள்” என்று சொன்னார். “விஷயம் தெரியாமல் வெளியிட்டால் படிப்பவர்கள் எவ்வாறு தெரிந்து கொள்வார்கள்? நான் ஒரு வகையாக வரையறை செய்து வைத்திருக்கிறேன். ஆதலால் இந்தக் காரியத்தை நானே செய்வேன். நீங்கள் பதிப்பித்தாலும் பதிப்பிக்கலாம். ஆனாலும் என் முயற்சியை நான் விடப் போவதில்லை” என்று சொல்லி, என் கையிலிருந்த என் பிரதி இரண்டு பாகங்களையும், அவரிடம் தெரிவித்துவிட்டு, என் தம்பி வசம் கொடுத்து, “இவற்றை ஜாக்கிரதையாக வீட்டிற்கு எடுத்துப்போய் வைத்திரு. அப்பாவிடமும் சொல்லு. நான் பின்னால் வருகிறேன்” என்று சொல்லி யனுப்பி விட்டு அவரிடம் சிறிது நேரம் பேசினேன். எங்கள் சம்பாஷணைகளைக் கவனித்த அம்பிகைபாக உபாத்தியாயர் அவரை நோக்கி, “ஐயா, இந்த ஐயர் பலமுறை ஆராய்ந்து ஆழ்ந்து படித்தவரென்றும் நீங்கள் ஒரு முறையேனும் இந்நூலைப் படித்துப் பார்க்கவில்லை யென்றும் நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த சம்பாஷணையிலிருந்து நான் அறிந்தேன். ஆதலால் இந்த நூற்பதிப்பு வேலையை இவரிடமே விட்டு விடுங்கள். நீங்கள் மேற்கொள்ள வேண்டாம்” என்று கண்டிப்பாகச் சொன்னார். பிள்ளை ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தார். அப்பால் அவ்விருவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். மிக்க கவலையோடிருந்த என் தந்தையார் சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து ஆறுதலுற்றார். “வென்றிக் களிற்றை” என்ற தொடரையும், அம்பிகைபாக உபாத்தியாயரையும் நினைத்துக் கொண்டேயிருக்கிறேன்.