என் சரித்திரம்/95 சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—95

சிந்தாமணிப் பதிப்பு ஆரம்பம்

சீவகசிந்தாமணியை விரைவில் அச்சிட ஆரம்பிக்க வேண்டுமென்ற வேகம் எனக்கு உண்டாயிற்று. நன்றாக ஆராய்ந்து அதனை வெளியிட வேண்டுமானால் பல வருஷங்கள் செல்லும். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகமறத் தெளிந்து திருப்தியான பிறகு தான் வெளியிடுவது என்பது எளிதன்று. என்னுடைய நண்பர்களிற் சிலர், “இப்படி ஆராய்ந்து கொண்டே இருந்தால் வாழ்வாள் முழுவதும் இதிலேயே செலவாகிவிடும். நீங்கள் நிதானித்துப் பதிப்பிப்பதற்குள் வேறு யாராவது வெளியிட்டு விடுவார்கள். இதுவரையில் தெரிந்த விஷயங்களை ஒருவாறு அமைத்துக்கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். அடுத்த பதிப்பில் வேண்டிய திருத்தங்களைச் செய்துகொள்ளலாம். பதிப்புக்கள் வர வர விஷயமும் திருந்தும்” என்று தைரியம் சொன்னார்கள். அப்போது பதிப்பிக்கலாமென்று நிச்சயம் செய்து கொண்டேன்.

கையொப்பம் வாங்கியது

’பதிப்பிக்கப் பணம் வேண்டுமே; அதற்கு என்ன செய்வது!’ என்ற கவலை உண்டாயிற்று; சில நண்பர்கள் அதற்கு உபாயம் சொன்னார்கள். “தமிழன்புடைய தக்க கனவான்களிடத்தில் சென்று சிந்தாமணியைப் பதிப்பிக்கும் செய்தியைக் கூறிக் கையொப்பம் பெற்று முன்பணம் வாங்கிக்கொண்டு பதிப்பிக்கத் தொடங்கலாம்” என்றார்கள். அது நல்ல உபாயமென்றே தோற்றியது. அதன் பொருட்டு ஒரு விளம்பரம் அச்சிட்டு அன்பர்களுக்கு அனுப்பினேன்.

திருவாவடுதுறைக்குச் சென்று பண்டார ஸந்நிதிகளிடம் என் கருத்தைத் தெரிவித்தபோது அவர் மிக்க மகிழ்ச்சியுடன் முதற் கையொப்பத்தைத் தாமே இடுவதாகச் சொல்லிச் சில பிரதிகளுக்குக் கையெழுத்திட்டுப் பணமும் அளித்தார். கும்கோணத்தில் சற்றேறக்குறைய எழுபது அன்பர்களிடம் கையொப்பம் வாங்கினேன். தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்று அன்பர்கள் பலருடைய உதவியைப் பெற்றேன். திருச்சிராப்பள்ளியில் தியாகராச செட்டியாருடைய சகாயத்தால் இருபது இருபத்தைந்து பேர்கள் கையொப்பம் செய்தார்கள்.

இராசசுவாமி முதலியார் வார்த்தை

திருச்சிராப்பள்ளியில் இருக்கும்பொழுது உடையார்பாளையம் வழக்கு ஒன்றுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு சேலம் இராமசுவாமி முதலியார் அங்கே வந்திருந்தார். அவருடைய வரவை அறிந்து சென்று பார்த்தேன். சிந்தாமணிப் பதிப்புக்காகக் கையொப்பம் வாங்குவதைத் தெரிவித்தேன். முன்னெல்லாம் நான் பதிப்பிக்க வேண்டுமென்று சொன்ன அவர் அப்பொழுது, “நீங்கள் இந்தப் பதிப்பு வேலையைத் தொடங்கினால் மிக்க சிரமமாக இருக்குமே. அதிகப் பொருளும் உழைப்பும் காலமும் செலவாகுமே. தாமோரம் பிள்ளை என்பவர் சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் ஊக்கமுள்ளவராக இருக்கிறாரென்று கேள்வியுற்றேன். தக்கவர்களுடைய சகாயம் அவருக்குக் கிடைக்கும். பணமும் செல்வாக்கும் உடையவராக இருக்கிறார். ஆதலால் இந்த வேலையை அவரே செய்யும்படி விட்டு விட்டு நீங்கள் கவலையின்றி இருக்கலாமே” என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். “இந்தச் சிந்தாமணியை ஆராய்வதற்கும் அச்சிட வேண்டுமென்று துணிவதற்கும் மூலகாரணமாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரா இப்படிச் சொல்கிறவர்?” என்று நினைந்து ஆச்சரியமடைந்தேன். அவர் அப்படிச் சொல்வாரென்று நான் கனவிலும் எண்ணவில்லை. அவருக்கு என்னுடைய ஆராய்ச்சியும் தகுதியும் நான் பட்ட சிரமமும் நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் அவர் என் சங்கற்பத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொன்னதில் எனக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று. ஆயினும் அவர் கூறியதை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

“சில வருஷங்கள் இராப் பகலாக உழைத்து ஆராய்ந்து வைத்திருக்கிறேன். இம்முயற்சியைக் கைவிட எனக்கு மனமில்லை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தால் பதிப்பிக்கட்டும். அதை நான் தடுக்கவில்லை. அதற்காக என்னை நிறுத்தச் சொல்லுவது நியாயமாகுமா? நான் எவ்வளவோ ஆவலாக இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேனே” என்று துணிவு தோற்றச் சொன்னேன்.

அவர் உண்மையில் என்பால் உள்ளன்புடையவராதலின் எனக்குச் சிந்தாமணிப் பதிப்பிலுள்ள தீவிரமான சிரத்தையை உணர்ந்துகொண்டார்.

“உங்களுடைய முயற்சியை மாற்றவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவர் பலசாலியாக இருக்கிறாரே என்ற எண்ணத்தால் சொன்னேன். உங்கள் தகுதி எனக்குத் தெரியாதா? இதற்குரிய துணிவு உங்களிடத்தில் இருக்கும்போது இது நன்றாக நிறைவேறுமென்றே நான் நம்புகிறேன். என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியபோது தான் பழைய இராமசுவாமி முதலியாரே இவரென்று நான் இன்புற்றேன்

எப்பொழுதும் சிந்தாமணியின் ஞாபகமாகவே நான் இருந்து வந்தேன். அப்பதிப்பு நன்கு நிறைவேற வேண்டுமென்று எல்லாத்தெய்வங்களையும் வேண்டினேன். 1886-ஆம் வருஷம் காலேஜ் கோடை விடுமுறையில் சென்னைக்குச் சென்று சிந்தாமணிப் பதிப்பை ஆரம்பித்து விடவேண்டுமென்று நிச்சயம் செய்தேன். ஆதலால் அதற்கேற்றபடி கைப் பிரதியை ஸித்தம் செய்தேன்.

சென்னைப் பிரயாணம்

இறைவன் திருவருளைச் சிந்தித்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டேன். இராமசுவாமி முதலியார் அப்பொழுது சென்னையில் இல்லாமையால் அவருடைய பங்களாவுக்குச் செல்லாமல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் வீட்டிற்குச் சென்று தங்கினேன். நான் கொண்டு சென்ற கையெழுத்துப் பிரதிகளையும் ஆராய்ச்சிக்கு வேண்டிய கருவிகளையும் வேறுசாமான்களையும் அங்கே வைத்துக்கொண்டு புரசபாக்கத்திலுள்ள ஒரு போஜன விடுதியில் ஆகாரம் செய்துவந்தேன். என் பெட்டியில் பூர்த்தியும் அபூர்த்தியுமான சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் 24 இருந்தன. சுப்பராய செட்டியார் பல காலமாக நூற்பதிப்பு விஷயத்தில் ஈடுபட்டவராதலால் அவர் மூலமாகவே அச்சுக்கூடத்தைத் திட்டம் செய்து பதிப்பிக்கலாமென்று கருதினேன்.

ராஜகோபாலாச்சாரியர்

நான் சென்னை சென்ற மறுநாட் காலையில் ஸ்ரீ வைஷ்ணவரொருவர் சுப்பராய செட்டியார் வீட்டில் என் வரவை எதிர் பார்த்திருந்தார். என்னைக் கண்டு அவர் பராமுகமாகவே இருந்தார். செட்டியாரை நோக்கி, “இவர்கள் யார்?” என்று கேட்டேன். “இவர் எஸ்.பி.ஸி.கே. அச்சுக்கூடத்தில் இங்கிலீஷ் பகுதியில் மேல் விசாரணைக்காரர். தமிழிலும் நல்ல பயிற்சியுள்ளவர். பல பாஷைகள் இவருக்கு வரும். அச்சிடும் விஷயத்தில் ஆதியோடந்தமாக எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார்” என்றார்.

எனக்கு அளவற்ற மகிழ்ச்சியுண்டாயிற்று. பதிப்பு விஷயத்தில் அவருடைய துணை கிடைக்குமென்ற நம்பிக்கையினால். “ஸ்வாமி உங்களைத் தெரிந்து கொண்டது பரம சந்தோஷம். உங்களுடைய பழக்கமும் ஆசீர்வாதமும் உதவியும் எனக்கு வேண்டும். அச்சிடும் வேலையில் எனக்கு அதிகப் பழக்கமில்லை. ஆதலால் உடனிருந்து பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன். அவர் ஊர் தேரழுந்தூரென்றும் அவருடைய பெயர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியரென்றும் அறிந்தேன்.

”நீங்கள் சிந்தாமணிப் பிரதிகள் கொண்டு வந்திருக்கிறீர்களென்று கேள்வியுற்றேன். அந்தப் புஸ்தகங்களையும் உங்களையும் பார்க்கத்தான் இப்போது வந்தேன்” என்றார் அவர்.

உடனே பெட்டியைத் திறந்து பிரதிகளை எடுத்துக்காட்டினேன். “நீங்கள் வெகு சிரமப்பட்டு இவற்றைச் சேகரித்து ஆராய்ந்து வைத்திருக்கிறீர்களென்று தெரிகிறது” என்று அவர் அவற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

“இந்தப் பிரதிகளையெல்லாம் வைத்துக்கொண்டு ஒப்பிட்டீர்களா?” பாட பேதங்களைக் குறித்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் ஒருவாறு, செய்திருக்கிறேன். சில பிரதிகள் முற்றும் ஒப்பு நோக்கப்பட்டன. சிலவற்றை, சந்தேகமுள்ள இடங்களில் மட்டும் பார்த்துத் திருத்தங்களைத் தெரிந்து கொண்டேன்.அப்படிச் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. ஏதோ நான் சிரமப்பட்டு உழைத்துத் தொகுத்து வந்திருக்கிறேன். அதை நல்ல முறையில் அச்சிட்டு அழகு படுத்தித்தருவது உங்கள் கடமை” என்று பணிவாகச் சொன்னேன். பிறகு எந்த எந்த வகையில் பதிப்பு அமைய வேண்டுமென்பதைப்பற்றி யோசனை செய்யலானோம்.

“பாட்டு, பொழிப்புரை, விசேடவுரை எல்லாம் ஒன்றாக இருக்கின்றனவே! நான் என்ன செய்கிறது?” என்று கேட்டேன். அப்படி மூன்றும் கலந்திருப்பதைத் தெளிவாக வேறு பிரித்து அறிவதும், அறியும்படி செய்வதும் மிகவும் கடினமான செயல்களென்று அக்காலத்தில் நான் எண்ணியிருந்தேன். அப்பொழுது அவர் சொன்ன பதில் எனக்கு மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.

“அவற்றை மிகவும் சுலபமாகத் தனித்தனியே அமைத்து விடலாம். மூலத்தைப் பெரிய எழுத்திலும் உரைகளைச் சிறிய எழுத்திலும் அச்சிடவேண்டும். மொழிப்புரையையும் விசேட உரையையும் தனித்தனியே பாரா பாராவாக அமைத்துவிட்டால் அவை வேறு வேறு என்று தெரியவரும். ஏட்டுப் பிரதியிலுள்ள குழப்பங்களை யெல்லாம் அச்சில் மாற்றி விடலாம். அதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலையடைய வேண்டாம்” என்று அவர் சொன்னார்.

‘இப்படி யார் சொல்லப்போகிறார்கள்! இதுவும் தெய்வத்தின் திருவருளே!’ என்று எண்ணி நான் பேருவகையுற்றேன்

“எந்த அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கலாம்?” என்று ஆலோசிக்கையில் அவர், “சூளை அவதானம் பாப்பையர் வீதியில் திராவிட ரத்னாகரம் என்ற பெயருள்ள அச்சுக்கூடமொன்று இருக்கிறது. அதன் சொந்தக்காரராகிய ஸ்ரீ த. கோவிந்த ஆசாரியார் என்பவர் என் நண்பர். மிகவும் யோக்கியமானவர். செட்டியாரவர்களுக்கும் தெரிந்தவர்” என்றார். “நீங்கள் சொல்வது எனக்கு நல்ல சகுனமாகத் தோற்றுகிறது; தமிழ்க் கடல் என்னும் அர்த்தத்தைத் தரும் திராவிட ரத்னாகர அச்சுக்கூடத்தில் சிந்தாமணியைப் பதிப்பிப்பது மிகவும் பொருத்தமே. சிந்தாமணி ஒரு கடலில் தானே தோன்றியது? தமிழ்ச் சிந்தாமணி தமிழ்க் கடலிலிருந்து வெளிவருது நன்மையே” என்று என் சந்தோஷத்தையும் உடன்பாட்டையும் தெரிவித்துக்கொண்டேன்.

நல்ல சகுனம்

சேலம் இராமசுவாமி முதலியாருடைய தந்தையாராகிய கோபாலசாமி முதலியாரென்பவர் அப்பொழுது சேலத்திலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். அவர், நான் சுப்பராய செட்டியார் வீட்டில் தங்கியிருத்தலை அறிந்து தம்முடைய பங்களாவிலேயே ஜாகை வைத்துக்கொள்ளலாமென்று எனக்குச் சொல்லியனுப்பினார். அவர் சொன்னபடியே நான் அங்கே சென்று வெளியறையொன்றில் தங்கியிருந்தேன்.

சிந்தாமணியை அச்சுக்குக் கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்து நல்ல வேளையாகிய அன்று பிற்பகல் மூன்று மணிக்கு அச்சுக்குக் கொடுக்கவேண்டிய பாகத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நானும் சுப்பராய செட்டியாரும் சேலம் இராமசுவாமி முதலியார் பங்களாவிலிருந்து புறப்பட்டோம். கோபாலசுவாமி முதலியார் எங்களை அனுப்பும் பொருட்டு உடன் வந்து பங்களா வாசலில் நின்றார். அப்போது சிறு தூற்றல் தூறிக்கொண்டிருந்தது. “தூறுகிறது போலிருக்கிறதே” என்று சுப்பராய செட்டியார் சிறிது தயங்கி நின்றார். நான், “சிறு தூறல் நல்லதுதான்; குற்றமில்லை; புறப்படலாம்” என்று சொல்லவே புறப்பட்டோம்.

செல்லுகையில் பங்களாவின் புறவாயிலிலிருந்து ஒரு மனிதன் தன் கையில் வஸ்திரத்தால் மூடிய ஒரு பெரிய வெள்ளித் தாம்பாளத்தை எடுத்துக்கொண்டு பங்களாவை நோக்கி வந்தான். நாங்கள் நெருங்க நெருங்க, அவன் அதன் மேலே இருந்த வஸ்திரத்தை எடுத்து விட்டான். அந்தத் தாம்பாளத்தில் கிச்சிலி முதலிய பழங்கள் இருந்தன. அவற்றின்மேல் என் பார்வை விழுந்ததோ இல்லையோ எனக்குப் புளகாங்கிதமம் உண்டாயிற்று. அதே சமயத்தில் பின்னே நின்று எங்களைக் கவனித்தகோபாலசுவாமி முதலியார், “நல்ல சகுனமாகிறது. உத்தேசித்த காரியம் நன்றாக நிறைவேறும். பழம் வருகிறது. உங்கள் முயற்சி பலனைப் பெறும். கவலையின்றிப் போய் வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அந்த மனிதனைப் பார்த்து, “அடே, அதில் இரண்டு பழங்கள் அவர்களிடம் கொடு” என்று உத்தரவு செய்தார். கையில் பழம் கிடைத்தபோது நான் என்னையே மறந்தேன். ‘கடவுள் திருவருள்’ என்று எண்ணிச் சென்றோம்.

பதிப்பு ஆரம்பம்

அச்சுக்கூடத்திற்குச் சென்று விக்கினேசுவர பூஜை செய்து விட்டுத் தலைவரிடம் நான் கொண்டு சென்ற கையெழுத்துப் பிரதியைக் கொடுத்தேன். அதை உடனே அவர் அடுக்குவதற்குக் கொடுத்து விட்டார். ராயல் எட்டுப் பக்க அளவில் ஐந்நூறு பிரதிகள் அச்சிடுவதென்றும், ஒரு பாரத்துக்கு 3? ரூபாய் அச்சுக்கூலியென்றும் பேசி ஏற்பாடு செய்து கொண்டோம்.

அச்சு வேலை தொடங்கியது. தக்க பழக்கமில்லாத எனக்குச் சுப்பராய செட்டியாரும், ராஜகோபாலாச்சாரியரும் உதவி புரிந்து வந்தனர். நூற்பெயர், இலம்பகப் பெயர், தலைப்பு, மூலம், உரை என்பவற்றை வெவ்வேறு எழுத்துக்களில் அமைக்கும்படி ராஜ கோபாலாச்சாரியர் திட்டம் செய்தார். முதற் பாட்டிற்குரிய உரையில் மேற்கோள்கள் பல இருந்தன. அவற்றை அடிக் குறிப்பிலே எவ்வாறு தெரிவிப்பதென்று நான் மயங்கினேன். அவர் உடுக்குறி முதலிய அடையாளங்களை முறையே போட்டு அவற்றின் பெயரை எனக்குத் தெரிவித்தார். சில குறியீடுகள் போதாமல் இருந்தமையால் நூதனமாக வார்ப்பிக்க ஏற்பாடு செய்து உபயோகப்படுத்திக் கொண்டேன்.

சென்னைக்கு வந்தது முதல் சிந்தாமணிப் பதிப்புக்கு உரிய அனுகூலங்கள் கிடைத்து வருவதைச் சுப்பிரமணிய தேசிகருக்கும் என் தந்தையாருக்கும் தெரிவித்தேன். பதிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.