என் சரித்திரம்/96 சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

அத்தியாயம்—96

சிந்தாமணிப் பதிப்பு நிகழ்ச்சிகள்

சீவகசிந்தாமணி அச்சாதி வந்தபோது நான் சென்னையிலுள்ள வித்துவான்களை இடையிடையே கண்டு பேசிப் பழகுவேன். புரச பாக்கத்திலிருந்த அஷ்டாவதானம் சபாபதி முதலியாரிடம் ஒருநாள் சென்றேன். முன்பே பார்த்துப் பழகியவராதலின் திருவாவடுதுறை மடத்தைப் பற்றியும், கும்பகோணம் காலேஜைப்பற்றியும் அவர் விசாரித்தார். "சீவகசிந்தாமணியை உரையுடன் பதிப்பிப்பதற்காக வந்திருக்கிறேன்" என்று நான் சொன்னேன். அதைக் கேட்டு அவர் திடுக்கிட்டார். "என்ன ஐயா? சிந்தாமணி உரையையாவது. நீங்கள் பதிப்பிக்கிறதாவது? அது சுலபமான காரியமா? நீங்கள் பால்யர். சிந்தாமணி நூலுக்கும் உரைக்கும் உள்ள பெருமை என்ன? அதை முடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்குமே! அந்த முயற்சியை நிறுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. ஆழந் தெரியாமல் காலை விடக்கூடாது" என்று கண்டிப்பாகச் சொன்னார். அப்படி அவர் சொன்னதைக் கேட்டு நானும் ஆச்சரியமடைந்தேன்.

பழைய முயற்சிகள்

"நான் ஏன் பதிப்பிக்கக்கூடாது? அந்த நூலையும் உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்திருக்கிறேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன். நிறைவேற்றி விடலாமென்ற துணிவு எனக்கு இருக்கிறது" என்று தைரியமாகச் சொன்னேன். கும்பகோணத்தில் சீவகசிந்தாமணியை ஆராய்ந்து வந்தபோது இப்படி யாராவது சொல்லியிருந்தால் நான் சிறிது அச்சமடைந்திருப்வபேன். அஷ்டாவதானம் சபாபதி முதலியாரோடு சம்பாஷித்த அந்தச் சமயத்திலோ நான் சிந்தாமணியின் ஞாபகமாகவே இருந்தேன். யார் வந்து தடுத்தாலும் என் முயற்சியை நிறுத்திக் கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது.

"நான் ஆரம்பித்திருக்கும் இந்த நல்ல காரியம் நன்றாக நிறைவேற வேண்டுமென்று வாழ்த்துவதை விட்டு இப்படி அதைரியம் உண்டாக்குகிறீர்களே!"

"ஆரம்பித்தால் என்ன? இதற்கு முன் இந்த நூலைப் பதிப்பிக்கப் பலர் ஆரம்பித்து அந்த ஆரம்பத்தோடே அது நின்றுவிட்டது. நானும் என் ஆசிரியராகிய காஞ்சிபுரம் சபாபதி முதலியாரும் இதைப் பதிப்பிக்க வேண்டுமென்று எண்ணிப் படிக்கத் தொடங்கினோம்; கஷ்டமென்று தோற்றினமையால் நிறுத்திவிட்டோம். [1]பல வருஷங்களுக்குமுன், ட்ரூ என்னும் பாதிரியார் (The Rev. W. H. Drew) ஒருவர் சிந்தாமணியைப் பதிப்பிப்பதாக ஒரு திட்டம் வகுத்து அந்த முறையை விளக்கி ஒரு விளம்பரம் வெளியிட்டார். அவர் அதை நிறைவேற்ற முடியவில்லை. போப் துரை பிறகு முயன்றார். அவராலும் இயலவில்லை. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலருக்குக் கூடச் சிந்தாமணியைப் பதிப்பிக்கும் எண்ணம் இருந்தது. திருச்சிற்றம்பலக் கோவையாரின் முதற்பதிப்பில் ‘இனி வெளிவரும் நூல்கள்’ என்ற விளம்பரத்தில் சிந்தாமணியின் பெயர் காணப்படுகிறது. என்ன காரணத்தாலோ அவர் பதிப்பிக்க முற்படவில்லை. உங்கள் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும் சேர்ந்து சிந்தாமணியைப் பதிப்பிக்கலாமென்று ஆலோசித்தார்களாம். பிறகு அது பெரிய தொல்லை என்று நிறுத்தி விட்டார்களாம். இப்படி யார் தொட்டாலும் நிறைவேறாத இந்த நூலை நீங்கள் பதிப்பிக்கத் துணிந்தீர்களேயென்று அஞ்சுகிறேன்” என்று அந்தக் கிழவர் சொன்னார்.

ஆனால், அவருடைய வார்த்தைகளால் நான் சிறிதும் அதைரியம் அடையவில்லை. “முன்பு அவர்கள் நிறைவேற்றவில்லை என்ற காரணத்துக்காக நாம் நமது முயற்சியை நிறுத்திக்கொள்வதா? அவர்களெல்லாம் முயன்றார்களென்ற செய்தியினாலே இந்த நூல் எப்படியாவது அச்சு வடிவத்தில் வெளியாக வேண்டுமென்ற ஆவல் அவர்களுக்கு இருந்ததென்று தெரியவில்லையா? அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயல்வது மற்றவர்களுடைய கடமைதானே? என் முயற்சி தடைப்படினும் குறைவொன்றுமில்லை. இறைவன் திருவருளால் இது பலித்தால் தமிழன்பர்களுக்குச் சந்தோஷமுண்டாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறேன், குறைபாடுகள் இருப்பது இயல்பே. அறிவுடையவர்கள் நாளடைவில் அவற்றைப் போக்கி விடுவார்கள்” என்று உத்ஸாகத்தோடு கூறினேன்.

“நான் சொல்லுவதைச் சொல்லி விட்டேன். அப்பால் உங்கள் பிரியம்” என்று அவர் அதிருப்தியோடே சம்பாஷணையை முடித்தார். நானும் விடை பெற்று வந்தேன்.

‘ஏக்கழுத்தம்’

நாமகளிலம்பகம் 58-ஆம் செய்யுளில், “ஏத்தரு மயிற்குழா மிருந்த போன்றவே” என்னும் அடிக்கு, ‘மேல் நோக்குதலைத் தருகின்ற மயிற்றிரள் பொலிந்திருந்தனவற்றை யொத்த வென்க’ என்று நச்சினார்க்கினியர் உரை யெழுதிவிட்டு, ‘ஏக்கழுத்தம் என்றார் பிறரும்’ என்று மேற்கோள் காட்டுகிறார். அந்தச் செய்யுளும் உரையும் அச்சாகும்போது ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல் எங்கே வந்துள்ளதென்று என் ஞாபகத்துக்கு வரவில்லை. அதை என் கைக் குறிப்புப் புஸ்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். திடீரென்று ஒருநாள் சிறுபஞ்ச மூலத்தில் ஒரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது.

“கல்லாதான் றான்காணு நுட்பமுங் காதிரண்டும்
[2]இல்லாதா னெக்கழுத்தஞ் செய்தலும்”

என்பது அதன் முதற்பகுதி. அதில் வரும் எக்கழுத்தமென்ற சொல்லுக்குத் தெளிவாகப் பொருள் விளங்கவில்லை. சிந்தாமணி உரையில் வரும் மேற்கோள்கள் அவ்வளவும் என் ஞாபகத்தில் இருந்தன. இந்தச் சிறு பஞ்சமூலச் செய்யுட்பகுதி நினைவுக்கு வந்த போது முன்னே குறிப்பித்த ‘ஏக்கழுத்தம்’ என்ற மேற்கோளும் ஞாபகத்துக்கு வந்தது. “காது இரண்டும் இல்லாதவன் தலை யெடுத்துப் பார்த்தலும்” என்று சிறுபஞ்ச மூலத்துக்குப் பொருள் செய்யலாமோ வென்ற எண்ணம் உண்டாயிற்று. உடனே சிறுபஞ்ச மூலத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். நல்லார்கள் கேட்பின் நகையை உண்டாக்கும் செய்திகளைத் தொகுத்துக் கூறவந்த சிறுபஞ்ச மூல ஆசிரியர், முதலில் கல்வியில்லாதவன் ஆராய்ச்சி செய்து காணும் நுட்பத்தைக் கூறிவிட்டு அடுத்ததாக, “காதிரண்டும் இல்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும்” என்பதைக் கூறுகிறார். நச்சினார்க்கினியர், ‘ஏக்கழுத்தம்’ என்னும் தொடரில் ஏ என்பதற்கு மேல் நோக்குதல் என்று பொருள் செய்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஏக்கழுத்தமென்பதற்குக் கழுத்தை மேலே உயர்த்துதல் என்று பொருள் செய்தால் சிறுபஞ்சமூலத்துக்குப் பொருள் விளக்கமாகும்.

ஒரு சங்கீத வினிகையைக் கேட்பதற்கு ஆடவரும் பெண்டிரும் போயிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் ஒருவன் செவிடு. சங்கீத வினிகை நடைபெறுகையில் அவன் தலையைத் தூக்கி அசைக்கிறான். அவன் செவிடென்று தெரிந்தவர்கள் சங்கீத இனிமையை மிக நன்றாக அனுபவிப்பதாக அவன் காட்டிக்கொள்வதைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா? இந்தக் கருத்தை, “காதிரண்டுமில்லாதா னேக்கழுத்தம் செய்தலும்” என்ற அடி உணர்த்துகிறதென்று கண்டு கொண்டேன். சிறு பஞ்சமூலப் பதிப்பில் எக்கழுத்தமென்ற பாடமே காணப்பட்டது.

நீதிநெறி விளக்கத்தில், “ஏக்கழுத்த மிக்குடைய மாகொல், பகை முகத்த வெள்வேலான் பார்வையில் தீட்டும், நகை முகத்த நன்கு மதிப்பு” (39) என்று வீரச் சிறப்புடைய ஓர் அரசனது பார்வையைக் குறிக்கிறார் குமரகுருபரர். அந்தச் செய்யுளிலும் எக்கழுத்தமென்றே பதிப்பிக்கப் பெற்றிருந்தது.

இல்லாதாளென்றும் பாடம்

பிறகு சிந்தாமணியில் காந்தருவதத்தையாரிலம்பகத்தை ஆராய்ந்து வருகையில் நாலாவது பாட்டில் “ஏக்கழுத்தம்” என்ற சொல்லே வந்தது. அங்கே நச்சினார்க்கினியர் தெளிவாக, ‘ஏக்கழுத்தம்-தலையெடுப்பு’ என்று உரை எழுதியிருக்கிறார். அதற்கு மேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்? சிறுபஞ்சமூலச் செய்யுளையும் நீதிநெறி விளக்கச் செய்யுளையும் திருத்திக் கொண்டேன். அப்போது சந்தோஷத்தால் எனக்குக் கூடச் சிறிது ‘ஏக்கழுத்தம்’ உண்டாயிற்று.

இந்தச் சந்தோஷம் தாங்க முடியாமல், “இன்றைக்கு ஒரு பதத்தின் உண்மையான உருவத்தைக் கண்டு பிடித்தேன். நச்சினார்க்கினியர் மகோபகாரியென்று எனக்கு வரவரத் தெரிகிறது” என்று சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியரிடம் சொன்னேன்.

“என்ன, அப்படி ஒரு புதிய தேசத்தைக் கண்டு பிடித்து விட்டீர்கள்?” என்றார் அவர்.

“புதிய தேசத்தைக் கண்டுபிடித்தாற்கூட இவ்வளவு சந்தோஷமிராது” என்று சொல்லி ஏக்கழுத்தத்தைப் பற்றிய கதையைச் சொன்னேன். அவர் இந்தத் திருத்தத்தைத் தம் நண்பர்களாகிய சூளை அப்பன் செட்டியார் முதலியவர்களிடம் தெரிவித்தார். கேட்டவர்கள் யாவரும் மிக மகிழ்ந்து என்பால் வந்து என்னைப் பாராட்டினார்கள். இப்படியே உரையில் வரும் செய்திகளை அறிந்து தெளிந்து பதிப்பிக்கும்போதும் மேற்கோள்களினால் அறிந்த செய்திகளை வெளியிடும்போதும் வித்துவான்களெல்லாம் தங்கள் தங்கள் சந்தோஷத்தைப் புலப்படுத்துவார்கள். அஷ்டாவதானம் சபாபதி முதலியார் கூறிய வார்த்தைகளால் அதைரியம் அடையாமல் இருந்த எனக்கு இந்தப் பாராட்டுக்கள் தைரியத்தை அளித்தன. “சிந்தாமணியைத் தெளிவாக விளங்கும்படி பதிப்பிக்கப் போகிறோமோ இல்லையோ; பல காலமாக விளங்காத விஷயங்கள் இம்மாதிரி சில விளங்கினாலும் போதும். அதையே பெரிய லாபமாக எண்ணுவோமே” என்ற திருப்தியைப் பெற்றேன்.

பவர் துரையின் பிரதி

கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரும், அஷ்டாவதானம் சபாபதி முதலியார் மாணாக்கருமாகிய சின்னசாமி பிள்ளையென்பவரிடம் சிந்தாமணி உரைப் பிரதியொன்று உள்ளதென்றும், இருபது பிரதிகளைப் பார்த்துச் சோதித்து எழுதப்பட்டதென்றும் அது சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சிட்ட பவர் துரையினுடையதென்றும் சூளை அப்பன் செட்டியார் என்னிடம் ஒருநாள் தெரிவித்தார். என் அன்பரும் சின்னசாமி பிள்ளையின் உறவினருமாகிய தில்லைவிடங்கன் வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளையுடன் சென்று அந்தத் தமிழ்ப் பண்டிதரைப் பார்த்தேன். அவரிடமுள்ள சிந்தாமணிப் பிரதியைப் பார்த்து விட்டுத் தருவதாகச் சொன்னேன்.

அவர் உள்ளே சென்று ஒரு பெரிய காகிதப் பிரதியை எடுத்துக் கொண்டு வந்தார். உருவத்தில் அது மிகப் பெரியதாகவும் அழகாகவும் இருந்தது. சின்னசாமிபிள்ளை, “இந்தப் பிரதி பவர் துரையால் சோதித்து எழுதுவிக்கப்பட்டது. அவர் எனக்குப் பழக்கமானவர். ஊருக்குப் போகும்போது தம்முடைய ஞாபகம் இருப்பதன் பொருட்டு இதை என்னிடம் கொடுத்துவிட்டுப் போனார்” என்று சொல்லி என் கையில் அதனைக் கொடுத்தார். ‘இருபது பிரதிகளைப் பார்த்துச் சோதிக்கப்பட்டதானால் எவ்வளவோ திருத்தமாக இருக்கும். நமக்கு மிகவும் உபகாரமாகும்’ என்ற ஆவலோடு அதை வாங்கிக் கொண்டு ஜாகைக்கு வந்தேன்.

உடனே அதை மிக்க வேகமாகப் புரட்டிப் பார்த்தேன். அதில் பிழைகளே மிகுதியாக இருந்தன. திருத்தமில்லாத பிரதிகளில் காணப்படும் பிழைகள் அவ்வளவும் அதில் காணப்பட்டன. திருத்தமில்லாத பிழைகள் ஆயிரம் கிடைத்தாலும் திருத்தமான பிரதி ஒன்றுக்கு ஈடாகா என்பதை நான் உணர்ந்தவன். பிழையுள்ள பிரதிகள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகக் கிடைக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு உபயோகமில்லாத பாட பேதங்கள் அதிகமாகிக் குழப்பமும் மிகுதியாகும். அளவற்ற பாட பேதங்களைக் காட்டி, ‘இவ்வளவு பிரதிகளைப் பார்த்தோம்’ என்பதைப் புலப் படுத்தலாமேயன்றி விஷயத்தை விளக்கமாகத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். அந்தக் கடிதப் பிரதி எனக்குச் சிறிதும் பயன்படிவில்லை.

தனிமையில் செய்த வேலை

ஒவ்வொரு நாளும் அச்சுக்கூடத்திலிருந்து அச்சுப் பிரதிகளைத் திருத்திக் கொடுப்பேன். எனக்குத் துணையாக ஒழிவுள்ள நேரங்களில் வந்து சோடசாவதானம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலசாரியரும், வேலுசாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதியைப் படிப்பது முதலிய உதவிகளைப் புரிந்து வருவார்கள். மாலையானவுடன் அச்சுக்கூடத்திலிருந்து ‘புரூப்’களை எடுத்துக் கொண்டு இராமசுவாமி முதலியார் பங்களாவுக்குச் செல்வேன். அங்கே எனக்காக விடப்பட்ட அறையில் வேண்டிய சாமான்களை வைத்திருந்தேன். புறத்தே உள்ள தாழ்வாரத்தில் ஒரு விசுப்பலகை இருக்கும். அதில்தான் ஒவ்வொரு நாளும் படுத்துக் கொள்வேன். அவ்விடத்திற்கு நேர் மேலே ஒரு கண்ணாடி விளக்கு போடப் பட்டிருக்கும். இரவு நேரத்தில் அந்த விளக்கு வெளிச்சத்தில் அச்சுக் கடிதங்களைத் திருத்துவேன் தனியாக இருந்து கையெழுத்துப் பிரதியையும் ‘காலி புரூப்’ முதலியவற்றையும் நானே ஒப்பு நோக்குவேன். பிறகு ஒரு முறை கூர்ந்து படித்துத் திருத்தங்கள் செய்வேன். பார்க்கிற வரையில் பார்த்து விட்டு அயர்ச்சி ஏற்பட்டால் அப்படியே படுத்துக் கொள்வேன். இரண்டு மணிக்குத் திடீரென்று விழித்துக் கொண்டு மறுபடியும் விடியும் வரையில் ‘புரூப்’ பார்ப்பேன்.

அந்தத் தனிமையில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. சற்றுத் தூரத்துக்கப்பால் பங்களாவுக்குக் காவலாக ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும். இரண்டு கூர்க்கச் சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள். அவர்களால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்? ‘இந்த இரவில் இப்படி உட்கார்ந்து கொண்டு பார்க்கிறாரே’ என்று அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கக் கூடும்.

பூண்டி அரங்கநாத முதலியார்

இப்படி இருக்கையில் வெளியூர் சென்றிருந்த சேலம் இராமசுவாமி முதலியார் திரும்பி வந்தார். சிந்தாமணியில் பதிப்பித்திருந்த பகுதிகளைக் கண்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அவர் என்னை அழைத்துச் சென்று சில கனவான்களுடைய பழக்கத்தைச் செய்வித்தார், ஒரு நாள் காஸ்மொபாலிடன் கிளப்புக்குப் போனோம். அப்போது அங்கே பூண்டி அரங்கநாத முதலியார் ‘பில்லியர்ட்ஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார். விளையாடியபடியே அவர் என்னோடு பேசினார். நான் சொல்லிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு உவந்தார். அவரும் சில பாடல்களைச் சொன்னார். மற்றொரு நாள் சிந்தாமணிக்கு அவரிடம் கையொப்பம் வாங்கலாமென்ற எண்ணத்தோடு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது

கட்டளைக் கலித்துறை

“நந்தாத வான்பொ ருளைப்புல வோர்க்கு நயந்தளிக்கும்
சிந்தா மணியைப் பலரு மெளிதுறச் செய்திடுவாய்
மந்தாரத் தோடெழிற் சந்தானம் போலிரு வான்பொருளை
வந்தார்க் களித்திடு மால்ரங்க நாத மகிபதியே”

என்ற பாடலைச் சொல்லிக் கையொப்பப் புஸ்தகத்தைக் கொடுத்தேன். உடனே அவர் நூறு ரூபாய் தருவதாகச் சொல்லிக் கையொப்பம் இட்டார். பிறகு, “இந்தப் புஸ்தகம் சில நாள் என்னிடத்தில் இருக்கட்டும். வேறு சிலரிடம் சொல்லிக் கையொப்பமிடச் செய்கிறேன்” என்றார் அப்படியே பம்மல் விஜயரங்க முதலியார், ராஜா ஸர் சவலை ராமசாமி முதலியார். சூளை சிங்கார முதலியார் முதலிய கனவான்களின் கையொப்பங்களை அவர் வாங்கித் தந்தார்.

கும்பகோணம் வந்தது

1886-ஆம் வருஷம் கோடை விடுமுறை முடிவு பெற்றது. சிந்தாமணியில் பதினெட்டு பாரங்கள் (144 பக்கங்கள்) அச்சாகியிருந்தன. கும்பகோணம் புறப்பட வேண்டியவனாதலின் பதிப்பு மேலே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தேன். “காலி புரூபை இங்கே நீங்களே பார்த்துவிடலாம்; மேலே பேஜ் புரூபையும் பாரம் புரூபையும் கும்பகோணத்துக்கு அனுப்புங்கள்” என்று சுப்பராய செட்டியாரிடத்திலும் ராஜ கோபாலாச்சாரியரிடத்திலும் தெரிவித்துக் கொண்டேன் அவ்விருவர்களுக்கும் உசிதமாகப் பொருளுதவி செய்ததுண்டு. அவர்கள் என் விருப்பத்தின்படியே செய்வதாகச் சொல்லவே நான் விடை பெற்றுக் கொண்டேன். சிந்தாமணிப்பதிப்பு நிறைவேறும் வரையில் உடனிருந்து பூர்த்தி செய்ய வேண்டுமென்ற விருப்பம் எனக்கு இருப்பினும் காலேஜ் வேலையைப் பார்ப்பது என் வாழ்வுக்கு ஆதாரமான கடமையாக இருந்தமையின் என் மனம் முழுவதையும் சென்னையிலே வைத்துவிட்டுப் புகைவண்டியிலேறிக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.


  1. The Printing of Chintamani was more than once projected. About 20 years ago, the late Rev. W. H. Drew published a prospectus with a specimen of the work; but his premature death put an end to the great undertaking. —H. Bower in his Preface to the edition of ‘Nanagal llambakam’
  2. இல்லாதாளென்றும் பாடம்