என் சுயசரிதை/ஏழை குடும்பம்
என் தகப்பனார் அந்த காலேஜில் அரைச் சம்பளத்தில் படித்ததாக சொல்லியிருக்கிறார். என் பாட்டனாராகிய ஏகாம்பர முதலியார் என்பவர் செல்வந்தரல்ல, ஒரு சாராயகடையில் குமாஸ்தாவாக சொல்ப சம்பளம் பெற்று, குடும்பத்தை சம்ரட்சணம் செய்துவந்தனராம். ஆயினும் தன் பிள்ளைகள் இருவரும் நன்றாய் படிக்கவேண்டுமென்று தீர்மானித்து கஷ்டப்பட்டு அரைச்சம்பளத்தில் அந்த காலேஜில் படிக்கச் செய்தராம். இந்த ஸ்திதியில்தான் என் தகப்பனார் கஷ்டப்பட்டுப் படித்ததற்கு உதாரணமாக அவர் எனக்கு கூறிய கதை ஒன்றை இங்கு எழுதுகிறேன். அச்சமயம் மத்தியான சாப்பாட்டிற்காக ஒரு பாத்திரத்தில் கூழ் எடுத்துக்கொண்டுபோய், அதற்கு வியஞ்சனமாக வெங்காயப் புரையை வைத்துக்கொண்டு சாப்பிட்டு வந்தனராம்.
சென்னை சர்வகலாசாலையின் நூறாம் ஆண்டு கொண்டாட்டத்தின் போது அச்சிட்ட ஒரு புஸ்தகத்தில் என் தகப்பனாரைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு மொழி பெயர்க்கிறேன். P. விஜயரங்க முதலியார் 1851 ஆம் வருஷம் பிரோபிஷன்ட், (Proficient) பரிட்சையில் இரண்டாவது வகுப்பில் தேறினார். அவ்வருஷம் ராபர்ட்சன் என்பருடைய ‘அமெரிக்கா சரித்திரம்’ என்னும் நூலை தமிழில் எழுதியதற்காக ஒரு பரிசைப் பெற்றார். மேற்கண்ட புரோபிஷன்ட் டிகிரி தற்காலத்தில் பி.ஏ. பட்டத்திற்கு சமானமாகும். அந்த பரிட்சையில் தேறுபவர்களுக்கு கலாசாலையார் தங்கள் செலவில் ஒரு பொன் மோதிரம் அக் காலம் அளித்துவந்தனர். அப்படி என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட பொன் மோதிரம் சற்றேறக்குறைய தன் அறுபதாம் ஆண்டு வரையில் அவர் விரலில் அணிந்திருந்தார். அவர் தமிழில் எழுதிய அமெரிக்க சரித்திரம் பிறகு அச்சிடப்பட்டது.அக்கலாசாலையில் படிக்கும்போது என் தகப்பனாரும் அவர் தம்பியாகிய சோமசுந்தர முதலியாரும் பெற்ற சில பரிசுப் புஸ்தகங்கள் அவர்கள் பெயருடன் என் வசம் இன்னும் இருக்கின்றன.
மேற்கண்ட பரிட்சையில் தேறின உடனே அவர் அக் கலாசாலையிலேயே சீக்கிரம் தமிழ் உபாத்தியாயராக நியமிக்கப்பட்டதாக என் தகப்பனார் எனக்குத் தெரிவித்திருக்கிறார். பிறகு அந்த ஸ்தானத்திலிருந்து மதுரை ஜில்லாவில் பள்ளிக்கூடங்களுக்கு டெபுடி இன்ஸ்பெக்டர் (Deputy Inspector of Schools) ஆக கவர்மெண்டாரால் நியமிக்கப்பட்டார். அங்கேயிருந்து பிறகு சென்னைக்கு மாற்றப்பட்டார். அக்காலம் ரூபாய் 250 சம்பளம். பிற்பாடு அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் (Assistant Inspector of Schools) ஆக உயர்த்தப்பட்டார். அதற்கு மாத சம்பளம் ரூபாய் 400. இவ் வேலையிலிருந்து தன் அறுபதாம் ஆண்டில் 1890ஆம் வருஷம் உபகார சம்பளம் (பென்ஷன்) வாங்கிக்கொண்டு விலகினார்.
என் தகப்பனார் தன் ஆயுள் பர்யந்தம் பெரும் உழைப்பாளி யாயிருந்தார் என்றே நான் சொல்லவேண்டும். அவர் சிறு வயதிலேயே ‘உபயுக்த கிரந்தகரண சபை’ என்பதின் ஒரு முக்கிய அங்கத்தினராக உழைத்தார். அதற்காக பல புத்தகங்களை தமிழில் எழுதி பதிப்பித்தார். இதன் பிறகு பாடசாலைகளுக்கு வேண்டிய புத்தகங்களை அச்சிடுவதற்கும் திராவிட பாஷையில் நூதன புத்தகங்கள் அச்சிடுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட School books and Vernacular Literature Society என்னும் சபையில் தன் ஆயுள் பர்யந்தம் அங்கத்தினராக இருந்தார். இச்சமயத்திலும் சில தமிழ் புத்தகங்களை அவர் வெளியிட்டார். அவற்றுள் பம்மல் விஜயரங்க முதலியாருடைய மூன்றாவது வகுப்பு வாசக புஸ்தகம் என்னும் நூலை அவர் எழுதி பதிப்பித்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது. சென்னையில் அக்காலம் பார்க் பேர் {Park Fair) வருஷா வருஷம் நடத்தப்பட்ட வேடிக்கையின் காரியதரிசியாக 1881-ஆம் வருஷம் முதல் 1886-ஆம் வருஷம் வரையில் அவர் இருந்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. சென்னையில் விஜய நகரம் மகாராஜா அவர்கள் அக்காலம் ஏற்படுத்திய ஐந்து பெண்கள் பாடசாலைகளுக்கு காரியதரிசியாயிருந்தார். சென்னை யூனிவர்சிடி செனெட்டில் (University Senate) மெம்பராக தன் ஆயுள் பர்யந்தம் இருந்தார். மேற்படி யூனிவர்சிடியாரால் ஏற்படுத்தப்பட்ட தமிழ் பரீட்சகர்களின் போர்ட்டுக்கு (Board of Examiners for Tamil) பல வருடங்களில் சில வருடங்கள் தலைவராகவும் இருந்தார். சுருக்கி சொல்லுமிடத்து அவர் அக்காலத்தில் சென்னையில் சேர்ந்திராத பொதுக் கூட்டமாவது கிளப் (Club) ஆவது இல்லையென்றே ஒருவாறு கூறலாம். பச்சையப்பன் கலாசாலையில் டிரஸ்டியாக (Trustee of the Patchiappans’ charities) தன் ஆயுட் பர்யந்தம் இருந்தார்.
இதுவரையில் அவரது லெளகீக வியவகாரங்களைப்பற்றி எழுதினேன். இனி அவரது வைதீக வியவகாரங்களைப்பற்றி சிறிது எழுதுகிறேன்.
1872-ஆம் வருஷம் மதுரை திருஞானசம்பந்தஸ்வாமிகள் மடத்தில் அவர் சிவதீட்சை பெற்றுக்கொண்டார் என்று நான் நினைக்கவேண்டியிருக்கிறது. அதன் பிறகு நான் உடனே பிறந்தபடியால் எனக்கு திருஞானசம்பந்தம் என்று அந்த மடத்து பண்டார சந்நதி அவர்கள் பெயரையே வைத்ததாக என் தகப்பனர் எனக்குக் கூறியிருக்கிருர். அவர் எழுதி வைத்த சிறு புத்தகத்தில் என் பெயர் திருஞானசம்பந்தம் என்றே எழுதியிருக்கிறது. (என் சிறுவயதில் P. T. (ப. தி.) சம்பந்தம் என்றே என் பெயர் எழுதப்பட்டது. பிறகு நான் புத்தி அறிந்தவுடன் நமக்கு ஞானம் எங்கிருந்து வந்ததென்று அப்பெயரை சம்பந்தம் என்றே குறுக்கிக் கொண்டேன்.)
மேற் சொன்னபடி அவர் சிவதீட்சை பெற்ற பிறகு தன் மரணகாலம் சமீபித்தபோது படுக்கையாய் படுத்த வரையில் அவர் தினம் சிவபூஜையை செய்துவந்தார். வெளியூர்களுக்குப் பிரயாணம் போனதும் அச்சிவபூஜைக்குரிய சாமான்களை தன்னுடன் எடுத்துச்செல்வார்.
அவர் மதுரையில் இருந்தபோது அங்குள்ள பிராம்மணர்களுக்கும், திருஞானசம்பந்த சுவாமிகள் மடத்து பண்டார சந்நதிக்கும். ஏதோ விவாதம் நடந்ததாகவும் என் தகப்பனுர் மடத்துகட்சிக்கு உதவி அதன் பொருட்டு கவர்மெண்டாருக்கு அனுப்பிய ஒரு பெடிஷன் (Petition) என்னிடம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அக்காலத்திலேயே பிராம்மணர்கள், பிராம்மணர்கள் அல்லாதார் என்கிற கட்சி உண்டாயிற்று போலும். (நான் எந்த கட்சியையும் சேர்வதில்லை என்பதை இங்கு சுருக்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்).
அவர் சென்னைக்கு வந்த பிறகு பெரிய காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கும், சென்னையில் பெத்து நாய்க்கன் பேட்டையிலிருக்கும் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும் சென்னையில் திருவட்டீஸ்வரன் பேட்டையிலிருக்கும் சிவாலயத்திற்கும் 10 ஆண்டுகளாக தர்மகர்த்துவாக இருந்தார்.
அவர் ஜீவித காலத்தில் வருஷா வருஷம் காஞ்சீபுரத்து சிவன் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் எங்களை அழைத்துக் கொண்டு போவார். இதை நான் இங்கு எழுதிய தன் முக்கிய காரணம் என்னவென்றால் இந்த வழக்கத்தினால் சிவாலயங்களையும் அவைகளின் சில்பங்களையும் பார்க்கவேண்டுமென்னும் ஆசை எனக்கு சிறுவயதிலேயே உண்டாயிற்று என்பதை குறிப்பதற்கேயாம் (இதைப்பற்றி பிறகு நான் எழுதவேண்டி வரும்)
என் தந்தையார் மிகவும் கண்டிப்பான மனுஷ்யர் என்று நான் கூறவேண்டும். இக்குணம் அவருக்கு வந்தது அவர் பள்ளிக்கூடத்து பரீட்சகராக (Inspector of schools) பல வருடங்கள் வேலை பார்த்ததினாலோ அல்லது அவரது தாய் தந்தையர்களின் போதனையினாலோ நான் சொல்வதற்கில்லை. இக்குணத்தை ஆங்கிலத்தில் Discipline என்று சொல்வார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதானால் எல்லா விஷயங்களிலும் கண்டிதமாயிருக்கும் சுபாவம் என்று தான் சொல்லக்கூடும். இதற்கு ஒரு உதாரணமாக அவர் தாயார் (அதாவது என் பாட்டியார்) அவரது சகோதரரையும் அவரையும் கண்டித்ததை எனக்கு அவர் கூறியிருக்கிறார். ஒரு முறை இவர்களிருவரும் சிறுவர்களாய் இருந்தபோது ‘ஏதோ’ குழந்தைகள் சண்டையில் எதிர் வீட்டு சிறுவன் ஒருவனை இவர்கள் அடித்துவிட்டார்களாம். இதைக் கேள்விப்பட்ட என் பாட்டியார் இவர்களிருவரையும் இழுத்துக்கொண்டு போய் ‘எதிர்வீட்டு அடிபட்ட பையனுடைய தாயாரிடம் விட்டு அதற்காக ‘இவர்களிருவரையும் நீங்களே தக்கபடி தண்டியுங்கள்’ என்று விட்டார்களாம்.
என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரைப்பற்றி. எனக்கு ஒன்றும் நேராக தெரியாது. அவர் நான் பிறக்குமுன் காலமாகிவிட்டார். என் பாட்டியைப்பற்றி எனக்கு நன்றாய் தெரியும். அவர்கள் 1890-ஆம் வருஷம் சுமார் 86 வயதில் காலமானார்கள். அவர்களை நாங்கள் ஒருவரும் ஆயா என்று அழைக்கலாகாது என்று எங்களுக்கு ஆக்கினை! ஆயா என்னும் சொல் பரங்கிக்காரர்களால் தங்கள் வேலைக்காரிகளை கூப்பிடும் பதம், ஆதலால் அவர்களை “நாயினா-அம்மா” (தகப்பனாருக்குத் தாயார்) என்று சொல்லவேண்டும் என்று எங்களுக்கெல்லாம் உத்தரவிட்டார்கள்.
இனி என் தாயாரைப்பற்றி சில வார்த்தைகள் எழுத விரும்புகிறேன். அவர்கள் சிவப்பாயிருப்பார்கள், தமிழ் கொஞ்சம் படிக்கத் தெரியும், அவர்கள் எப்பொழுதும் மத சம்பந்தமான புஸ்தகங்களைத்தான் படிப்பார்கள், அல்லது மற்றவர்களை படிக்கச்சொல்லி கேட்பார்கள். தினம் காலையில் துளசி பூஜையும் மாலையில் விக்னேஸ்வரர் முதலிய தெய்வங்கள் பூஜையும் செய்யாமல் போஜனம் கொள்ளமாட்டார்கள். வெள்ளிக்கிழமை சாயங்காலத்தில் இவ்விரண்டு பூஜையையும் விசேஷமாக செய்வார்கள், அத்தினங்களில் பூஜை முடிந்தவுடன் எங்களுக்கெல்லாம் பூஜை செய்த புஷ்பங்களைக் கொடுப்பார்கள். நாங்கள் அவர்கள் பாதத்தை சேவித்து புஷ்பங்களை வாங்கிக்கொள்வோம். அவர்கள் தான் எனக்கு, எனது ஒன்பதாவது வயதிலோ பத்தாவது வயதிலோ, பூஜைசெய்ய கற்பித்தார்கள். அவர்கள் எனக்கு கற்பித்தமுறையில் தினந்தோறும் காலை மாலைகளில் சாதாரண பூஜையும் வெள்ளிக்கிழமைகளில் விசேஷ பூஜையும் அக்காலம் முதல் இக்காலம் வரை செய்து வருகிறேன், காலை மாலை பூஜை முடிந்தவுடன் என் மாதா பிதாக்களையே என் தெய்வங்களாகக்கொண்டு அவர்களுடைய படங்களுக்கு பூஜைசெய்து வருகிறேன்.
என் தாயார் (அவர்கள் பெயர் மாணிக்கவேலு அம்மாள்) மிகவும் இளகிய மனதுடையவர்கள், 1875 ஆம் வருஷம் தன் மூத்த குமாரி வாந்தி பேதியினால் இறந்தது முதல் நீர் வியாதியால் பிடிக்கப்பட்டார்கள். பிறகு 1885 ஆம் வருஷம் என் மற்றொரு தமக்கையாகிய பர்வதம்மாள் இறந்த போது உலகை வெறுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அது முதல் தினம் ‘கைவல்ய நவநீதம்’ முதலிய வேதாந்த புஸ்தகங்களை படிக்கச் சொல்லி, கேட்டுக் கொண்டிருப்பார்கள், கடைசி காலத்தில் அவர்கள் வைராக்கிய மனதுடையவர் களானார்கள் என்றே சொல்ல வேண்டும். அதைப் பற்றிய சிறுகதை ஒன்றை எழுதுகிறேன்.
1891 ஆம் வருஷ ஆரம்பத்தில் ஒரு நாள் காலையில் நாங்கள் எழுந்திருந்த போது எங்கள் வீட்டில் எங்கள் தாய் தந்தையர்களில்லாதிருப்பதைக் கண்டு என்னவென்று வேலைக்காரர்களை விசாரிக்க அவர்கள் எங்கள் தந்தை தாயார் இருவரும் அதிகாலையில் வண்டியிலேறி ஸ்மசானத்திற்குப் போயிருப்பதாக சொன்னார்கள். இது என்ன விந்தை என்று ஆச்சரியம் கொண்டவர்களாய் அவர்களிருவரும் திரும்பி வந்தவுடன் விசாரிக்க பின் வருமாறு எங்கள் தந்தையார் எங்களுக்கு தெரிவித்தார். “நேற்றிரவு உங்கள் தாயார் இனி தான் அதிக காலம் பூமியிலிருப்பதாக தோற்ற வில்லை. ஆகவே தன் ஆயுள் முடிந்தவுடன் தனக்கு சமாதி வைக்க வேண்டு மென்று தெரிவித்து, அதற்குத் தக்க இடம் ஈம பூமியில் ஏற்படுத்த வேண்டு மென்று கேட்டுக் கொண்டார்கள். உடனே புறப்பட்டுப் போனோம். அங்கு இடம் ஒன்றைக் காட்டினார்கள்", என்று சொன்னார். பிறது அன்றைத் தினமே முனிசிபாலிடியாருக்கு அவ்விடத்தை வாங்குவதாக ஏற்பாடு செய்துக் கொண்டார். இது நேர்ந்த காலத்தில் என் தாயாருக்கு உடம்பில் முக்கியமாக நீர் வியாதியைத் தவிர வேறெரு நோயுமில்லை. பிறகு அவ்வருஷமே அச்டோபர் மாதம் மரணமடைந்தார்கள். மரணத்திற்குக் காரணம் வாந்தி பேதி. அதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாக வாந்தி பேதியில்தான் சாக வேண்டியிருக்கும் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்குக் காரணம் ஒன்றுமில்லை.
அவர்கள் மரணமடைந்தவுடன், அவர்கள் வேண்டுகோளின்படியே முன்பே வாங்கி வைத்திருந்த இடத்தில் சமாதியில் அவர்களது உடலை அடக்கம் செய்தோம். அங்கு ஒரு சமாதி கட்டப்பட்டது. இந்த சமாதிக்கு வருஷா வருஷம் அவர்கள் திதியன்று நான் பூஜை செய்து வருகிறேன்.
பிறகு 1895-ஆம் வருஷம் எங்கள எழும்பூர் பங்களாவில் காலமான என் தகப்பனாருக்கு தகனக்கிரியை ஆன பிறகு அவர்களுடைய அஸ்தியை சேமித்து இந்த சமாதியில் புதைத்திருக்கிறோம். இவர்கள் திதியன்றும் சமாதி பூஜை செய்து வருகிறேன் இன்றளவும்.
என் தாயாருடைய தகப்பனார் அடையாளம் பேடு அப்பாவு முதலியார் என்பவர். அடையாளம் பேடு என்பது சென்னைக்கு ஒன்பது மைல் தூரத்திலிருக்கும் ஒரு சிறு கிராமம். அவருக்கு அந்த கிராமத்திலும் அதற்கடுத்த கிராமமாகிய வானகரத்திலும் கொஞ்சம் நிலமுண்டு. அதை ஆட்களைக் கொண்டு பயிரிட்டு அவர் ஜீவித்து வந்தனராம். இங்கு அவரைப் பற்றி எனது மாமி அதாவது அப்பாவு முதலியாருடைய மருமகப் பெண் சொல்லிய ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர் ஸ்ரீரங்கப் பட்டணத்தைப் பிடித்த சமயம் (1792 கி.பி.) அவர் ஆங்கிலேய சைனியத்துடன் சிப்பாய்களுக்கு உணவுப் பொருள்கள் சேகரித்துக் கொடுக்கும் வேலையில் போயிருந்தாராம். ஸ்ரீரங்கப் பட்டணம் முற்றுகையின் போது அகழியின் ஒரு மூலையில் பதுங்கியிருந்தாராம்; மேலே குண்டுகள் பாய்கிற சப்தத்தைக் கேட்டுத் தான் பிழைப்பது அரிது என்று நடுங்கிக் கொண்டிருந்தனராம். பிறகு ஸ்ரீரங்கப் பட்டணத்தில் சிப்பாய்கள் சூறையாடிய போது அவர்கள் கொண்டு வந்த பொருள்களை சரசமாக வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ரூபாயாக கொடுத்து வந்தனராம். இப்படி சேகரித்த பொருள்களை யெல்லாம் நாலைந்து பொதி மாடுகள் மீது போட்டுக் கொண்டு அடையாளம் பேட்டுக்குத் திரும்பி வந்தனராம். அவைகளை விற்று ரொக்கமாக்கி வானகரத்தில் ஒரு சத்திரம் கட்டி வைத்தனராம். அச்சத்திரம் இன்றும் இருக்கிறது.
என் தாயாரைப் பெற்ற பாட்டனரும். என் தகப்பனாரைப் பெற்ற பாட்டனாரும் நான் பிறக்கு முன்பே காலகதி அடைந்து விட்டனராம்.
என் தகப்பனார் எங்களை மிகவும் கண்டிப்பான முறையில் வளர்த்து வந்ததற்கு சில உதாரணங்களைக் கூறுகிறேன். தினம் காலை மாலைகளில் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளை. அதன்படி, நாங்கள் படித்து விட்டோமானால் மற்ற வேளைகளெல்லாம் நாங்கள் இஷ்டப்படி விளையாடலாம். விடுமுறை தினங்களில் கட்டாயமாய் விளையாட வேண்டும். அதற்காக எங்களுக்கெல்லாம் கோலி பம்பரம் முதலிய விளையாட்டுக் கருவிகளை தானே வாங்கிக் கொடுப்பதுமன்றி தன் வயதையும் பாராமல் எங்களுடன் எங்கள் விளையாட்டுக்களில் கலந்துக் கொள்வார்.
இன்னொரு உதாரணத்தை இங்கு எழுதுகிறேன். நான் பி. ஏ. படித்துக் கொண்டிருந்த போது என் பால்ய சிநேகிதரான வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் (இவரைப் பற்றி பிறகு நான் அதிகமாக எழுத வேண்டி வரும்.) என்னை அடிக்கடி பார்க்க வருவார். அச்சமயங்களில் நான் மேல் மாடியில் படித்துக் கொண்டிருந்தால் அவரை கீழேயே நிறுத்தி “சம்பந்தம் படித்துக் கொண்டிருக்கிறான். 4-மணி வரையில் அவன் படிக்கவேண்டிய காலம்” என்று சொல்லி, அது வரையில் அவருடன் பேசிக் கொண்டிருந்து, நான்கு அடித்தவுடன் அவரை மெத்தைக்கு அழைத்து வந்து என்னிடம் விட்டு நாங்கள் பேசுவதற்கு தடையாயிருக்கலாகாதென்று கீழே போய் விடுவார்!
நாங்கள் வாலிபத்தை அடைந்த பிறகு தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்னும் மொழிப் படியே எங்களை பாவித்து வந்தார் என்றே நான் கூறவேண்டும்.
இனி என் சொந்த கதையை எழுத ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவனும் தான் சிறு குழந்தையாய் இருந்த போது! முதல் முதல் என்ன சம்பவம் அவன் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பது ஒரு வேடிக்கையாய் இருக்கும். எனது மூன்றவது வயதில் நேரிட்ட இரண்டு விஷயங்கள் எனக்கு இப்போது ஞாபகமிருக்கின்றன.
ஒரு சிறிய கிருஷ்ணன் விக்கிரஹத்தை வைத்துக் கொண்டு எங்கள் வீட்டின் குறட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் “தெருவில் விளையாடக் கூடாது. வீட்டிற்குள் விளையாடு” என்று என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனது; என் தமக்கை மீனாம்பாள் என்பவர்கள் மரித்த போது என் தாயார் அவர்கள் பக்கலில் படுத்துக் கொண்டு கண்ணீர் விட்டதும் அவர்களுடைய உடலை பல்லக்கில் எடுத்துக் கொண்டு போனதுமாம். மேற் குறித்த சம்பவங்களும் நடந்தது நான் இப்போது இருக்கும் எங்கள் பிதுரார்ஜித வீடாகிய ஆச்சாரப்பன் வீதி 70-ஆம் நெம்பர் வீட்டிலாகும்.
1876-ஆம் வருஷம் எங்கள் தாயார் இந்த வீட்டிலிருந்தால் எந்நேரமும் தன் மடிந்த குமாரத்தியின் ஞாபகம் வருகிறதென கூற என் தகப்பனார் தன் குடும்பத்துடன் இதே வீதியில் எங்கள் பங்காளியாகிய கட்டைக்கார ஆறுமுக முதலியாரின் சந்ததியாரின் வீடாகிய 54 வது கதவிலக்கமுள்ள பெரிய வீட்டில் குடி புகுந்தார். இந்த வீட்டில் நான் அது முதல் முதல் 1893 ஆம் வருஷம் வரையில் வசித்து வந்தேன்.
எனது அட்சராப்பியாசம் 1877-ஆம் வருஷம் இங்கிருக்கும்போது நடந்தது. என்னை முதல் முதல் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியது நன்றாய் ஞாபகமிருக்கிறது. அன்று காலையில் என் தாயார் என்னைக் குளிப்பாட்டியது; என் தகப்பனார் மடியில் உட்கார்ந்து நான் தெலுங்கு அட்சரங்கள் பயின்றது, தெருப்பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் என்னை தன் திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துக்கொண்டுபோனது, எல்லாம் மிகவும் நன்றாய் நேற்று நடந்தது போல் என் மனதில் படிந்திருக்கிறது. அச்சமயம் எனக்கு அணிவித்த பட்டு சொக்காய், நிஜார், கோணல் டொப்பி முதலியவைகளை, எனக்கு படம் எழுதும் சக்தியிருக்குமானால் அப்படியே வரைந்து காட்டுவேன்; இதில் வேடிக்கையென்னவென்றால் நேற்று தினசரி பத்திரிகையில் நான் படித்த விஷயங்களைப்பற்றி சொல்வ தென்றால் எனக்கு ஞாபகமறதியாய் இருக்கிறது! சுமார் 84 வருடங்களுக்கு முன் நடந்த மேற்கண்ட விஷயங்களைப்போன்ற பல விஷயங்கள் நன்றாய் ஞாபகமிருக்கின்றன.
எனக்கு ஞாபகமிருக்கும் வரையில் என்னுடைய ஐந்தாம் வயதின் ஆரம்பத்தில் எனக்கு மேற்கண்டபடி அட்சராப்பி யாசம் செய்வித்தார்கள். அது முதல் 1879-ஆம் வருஷம் வரையில் மூன்று தெருப்பள்ளிக்கூடங்களில் நான் படித்தேன்.