உள்ளடக்கத்துக்குச் செல்

என் சுயசரிதை/தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

விக்கிமூலம் இலிருந்து

தெருப்பள்ளிக்கூடங்களில் படித்தது

முதல் பள்ளிக்கூடம் இப்போது நானிருக்கும் வீட்டிற்கு 100 அடி தூரத்திற்குள் ஒரு வீட்டில் நடை திண்ணையி லிருந்தது. அதில் என்னுடன் பத்து பதினைந்து பிள்ளைகள் தான் படித்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் ஒரே உபாத்தியாயர் மிகவும் வயது சென்றவர். அவர் நரைத்த முகம் எனக்கு வெறுப்பைத் தந்தது. அவரிடம் தான் என் அண்ணன்மார்களெல்லாம் அட்சராப்பியாசம் ஆரம்பித்தார்களாம். எனது அண்ணனாகிய ஏகாம்பர முதலியாரைப்பற்றி அவர் விஷயமாக ஒரு கதை சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படித்தபோது சமுத்திரமானது புரண்டு பட்டணத்தையெல்லாம் அழிக்கப் போகிறது என்று ஒரு பெரிய வதந்தி பிறந்ததாம். அதைக் கேட்ட என் தமயனார் என் தாயாரிடம் ஓடிப்போய் “சமுத்திரம் பொங்கிவந்தால் எங்கள் உபாத்தியாயரைக்கூட அடித்துக் கொண்டு போகுமா?” என்று கேட்டாராம். இக்கதையை என் தாயார் பன்முறை வேடிக்கையாகக் கூறக்கேட்டிருக்கிறேன். இத்தெரு பள்ளிக்கூடம் சில மாதங்களுள் எடுபட்டது. அதன் பேரில் எங்கள் தகப்பனார் எங்கள் தெருவாகிய ஆச்சாரப்பன் தெருவிலேயே உடையவர் கோவிலுக்கு எதிரிலிருக்கும் மற்றொரு தெருப் பள்ளிக்கூடத்திற்கு என்னை அனுப்பினார். இப் பள்ளிக்கூடத்திற்கு சாத்தாணி வாத்தியார் பள்ளிக்கூடம் என்று பெயர். உபாத்தியாயர் சாத்தாணி ஜாதியார். அவரிடம் நான் தெலுங்கு பாஷை கற்றேன். இந்த வாத்தியார் சுமுகம் உடையவர். அவரிடம் பயமில்லை எனக்கு. நான் டெபடி, இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் (Deputy Inspector of Schools) பிள்ளையாதல்பற்றி எனக்கு உபாத்தியாயர் பென்சுக்குப் பக்கக்தில் ஒரு சிறிய பென்சு கொடுக்கப்பட்டது. மற்ற பிள்ளைகளெல்லாம் தரையில் உட்காருவார்கள். இந்த சிறிய பென்சில் உட்கார்ந்து சில சமயங்களில் தூக்கம் மேலிட, உபாத்தியாயர் துடை மீது படுத்து அப்படியே தூங்கிவிடுவேன் உபாத்தியாயர் கோபியாது நான் விழித்தவுடன் என்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவார். சுமார் 6-மாதங்கள் இங்கு படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். பிறகு என் தகப்பனார் நான் தமிழ் படிக்க வேண்டுமென்று கருதி வேறொரு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினார். நான் மூன்றாவதாக சேர்ந்த தெருப் பள்ளிக்கூடத்திற்கு நரசிம்மலு வாத்தியாயர் பள்ளிக் கூடம் என்று பெயர். இந்தப் பள்ளிக்கூடம் ஆச்சாரப்பன் வீதியிலிருக்கும் ஒரு சந்தாகிய பாலகிருஷ்ணன் சந்தில் இருந்தது. இந்த வாத்தியார் கண்டிப்பான மனுஷ்யர். ஆயினும் நல்ல சுபாவமுடையவர், இங்கு நான் 1879-ஆம் வருஷம் படித்தேன் இங்குதான் நான் ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தது.

1880-ஆம் வருஷம் என்னை சென்னை பிராட்வே (Broadway) யிலிருந்த ஹிந்து புரொபரைடரி (Hindi Proprietary School) என்னும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார் எங்கள் தந்தையார். இது தெருப் பள்ளிக்கூடமல்ல, பணக்கார பிள்ளைகள் அக்காலம் படித்த பள்ளிக்கூடம், அதற்கேற்ப இங்கு பள்ளிக்கூடத்து சம்பளம் மற்ற பள்ளிக்கூடங்களிலிருப்பதைவிட அதிகம்! அச்சமயம் எனக்கு 7 வயது. இங்கு நடந்த பல விஷயங்கள் நன்நய் ஞாபகமிருக்கின்றன.

இங்கு இருந்த ஏழு வகுப்புகளின் உபாத்தியாயர்கள் பெயர்கள் இன்னும் ஞாபகமிருக்கின்றன. இப்பள்ளிக்கூடத்தில் படித்தபோது என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் ஞாபகமிருக்கிறது. ஒருவர் மணலி சரவண முதலியார், பிறகு இவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்கப்பட்டது; இவர் சில வருடங்களுக்குமுன் காலமானார். மற்றொருவர் பாலசுந்தரம் செட்டியார். இவர் ஒரு பாங்கில் பொக்கிஷதாராகி 1940-ஆம் வருஷம் காலமானார். இங்கு சம்பவித்த மற்றொரு விஷயம் என் மனதில் நன்றாய் படிந்திருக்கிறது. ஒருமுறை இரண்டு வெள்ளைக்காரர்கள் சிறுவர்களாகிய எங்களுக்கு பஞ்ச் அண்டு ஜூடி (Punchi and judy)பொம்மலாட்டம் காட்டுவதாக இசைந்தனர். நாங்கள் எல்லோரும் டிக்கட்டுகள் வாங்கிக் கொண்டு ஆவடன் அதைப்பார்க்க காத்திருந்தோம், அது ஆரம்பமானவுடன் இந்த இரண்டு வெள்ளைக்காரர்களும் குடித்துவிட்டு சண்டையிட்டு வெளிவந்தனர். பிறகு ஒருவன் அக்குடி வெறியில் மெத்தைக்குப் போகும் வழியில் முட்டிக் கொண்டு சுத்தம் பெருக மூர்ச்சையானான். அதைப் பார்க்கவும் சிறுவர்களாகிய நாங்கள் பயந்தோம். குடி வெறியினால் இது நேர்ந்தது என்று ஒரு பெரியவர் சொல்ல குடியைப் பற்றி திகிலடைந்தேன். இது நான் பிறகு மதுவிலக்கு சங்கத்தை சேர ஒரு காரணமாயிருந்ததெனலாம்.

மூன்றாவது ஞாபகமிருக்கும் சமாச்சாரமும் ஒரு முக்கியமானதே. இப்பள்ளியின் வருடாந்திரக் கொண்டாட்டத்திற்கு எங்களையெல்லாம் பச்சையப்பன் சபா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அச்சமயம் என் மூத்த அண்ணன் ஏகாம்பர முதலியாருடைய சிநேகிதரான W. ராமஸ்வாமையா என்பவர் ஒரு ரெசிடேஷன் (Recitation) ஒப்புவித்தார். ஜனங்கள் அதை கரகோஷத்துடன் ஏற்றனர். அது ஷேக்ஸ்பியர் மகா நாடகக் கவி ஆங்கிலத்தில் எழுதிய ஜூலியர்ஸ் சீசர் என்னும் நாடகத்தில் ஆன்டொனி (Antony) என்பவரின் சொற் பொழிவு என்று பிறகு கண்டுணர்ந்தேன். அம்மாதிரி நானும் சொற்பொழிவு செய்யவேண்டுமென்று எனக்கு ஆசை பிறந்தது. பிறகு நான் படித்துக்கொண்டிருந்த ஆங்கில புத்தகத்திலிருந்த இரண்டு மூன்று சிறு செய்யுட்களை குருட்டுப் பாடம் செய்து உரக்க ஒப்பித்துக்கொண்டிருந்தேன். இதைக் கேட்ட என் தமயனார் ஏகாம்பா முதலியார் “இது என்னடா’ என்று வினவ என் விருப்பத்தைத் தெரிவித்தேன், அதன்பேரில் ரெசிடேஷன் என்றால் உரக்க ஒப்புவித்தல் மாத்திரமல்ல. சரியான பாவத்துடன் அதை ஒப்பிக்கவேண்டும் என்று கற்பித்தார். இதுதான் பிறகு தான் ரெசிடேஷன் செய்ய நன்றாய் கற்று முடிவில் நடிக்கக் கற்றுக்கொண்டதற்கு அடிபீடமாகும்.

1881ஆம் வருஷம் முடிவில் இப்பள்ளிக்கூடம் எடுபட்டுப் போயது. இதனால் என் வகுப்பில் நான் முதலாவதாக இருந்ததற்காக எனக்கு சேரவேண்டிய பரிசு கிடைக்காமற் போயது.

1882-ஆம் வருஷ முடிவில் என்னை என் தகப்பனார் பச்சையப்பன் கல்லூரியின் கிளைப் பள்ளிக்கூடமாகிய அப்பள்ளிக்கூடத்தின் கீழ்பாகத்தில் வைக்கப்பட்டிருந்த கோவிந்த நாயுடு பிரைமெரி (Primary) பள்ளிக்கூடத்தில் சேர்ப்பித்தார். என்னை அழைத்துக்கொண்டுபோய் அதன் பிரதம உபாத்தியாயர் A. நரசிம்மாச்சாரியிடம் விட்டு இவன் இரண்டாம் வகுப்பில் போன வருடம் படித்தான். வகுப்பில் முதலாவதாக இருந்ததாகக் கேள்விப்பட்டேன். இவனை விசாரித்து எந்த வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியுமோ அப்படியே செய்யுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். நரசிம்மாச்சாரியார் ஒன்றாவது வகுப்பு ஆங்கில புத்தகத்தில் ஒரு சிறு பாடத்தை படிக்கச் சொல்லி அதற்கு அர்த்தமும் சொல்லச் சொன்னார். அதன்படியே செய்தேன். பிறகு கணக்கில் பரிட்சிக்க ஒரு கணக்கு கொடுத்தார். அதைப்போடத் தெரியாது விழித்தேன் அதன் பேரில் என் தகப்பனாருக்கு ஒரு நிரூபம் எழுதினார். அதில் ‘பிள்ளையாண்டான் சரியாக இங்கிலீஷ் படிக்கிறான். ஆனால் கணக்கில் சரியாக இல்லை. ஆகவே என் இஷ்டப்படி செய்வதனால் இவளை இந்த வருஷம் இரண்டாவது வகும்பிலேயே படிக்கச் செய்வேன். இல்லை இவனை மூன்றாவது வகுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உங்கள் விருப்பமானால் அப்படியே செய்கிறேன்’ என்று எழுதியிருந்தரராம், இக்கடிதத்தை மத்தியானம் நான் வீட்டிற்குப் போய் என் தகப்பனாரிடம் கொடுத்தபோது, இதை எனக்கு அவர் தெரிவித்து இரண்டாம் வகுப்பிலேயே என்னை சேரும்படி கட்டளையிட்டார். என் மனதில் அப்போது ஒரு துக்கமுமில்லாமல் அப்படியே சேர்ந்தேன். பிறகு சில தினங்கள் பொறுத்து ஒரு நாள் என் பழைய் உபாத்தியாயர் முனுசாமி நாயுடு எங்கள் வகுப்புக்கு வந்து என்னைப்பார்த்து “என்னடா சம்பந்தம் உன்னுடன் படித்தவர்களெல்லாம் மூன்றாவது வகுப்பில் சேர்ந்திருக்கிறார்கள். நீ மாத்திரம் என்ன இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறாய்” என்றார். இதைக் கேட்டதும் எனக்கு வருத்தம் உண்டாகி அழுதுவிட்டேன், இதை இவ்வளவு விவரமாக எழுதுவதற்குக் காரணத்தை என் நண்பர்களுக்குத் தெரிவிக்கிறேன், இரண்டு மூன்று வருடங்கள் பொறுத்து நான் அப்போது மிடில் ஸ்கூல் (Middle School) பரிட்சை யெனும் கவர்ன்மெண்ட் பரிட்சைக்குப் போனபோது என் பழைய நண்பர்கள் எல்லாம் பெயில் (Fail) ஆனார்கள், நான் தேறினேன். இதை டம்பமாக எடுத்துக்கூறவில்லை. இரண்டாம் வகுப்பில் இரண்டு வருஷம் படித்ததின் பயனாக என் படிப்பின் அஸ்திவாரம் நன்றாய் உறுதியாய் நான் மேலே படிப்பதற்கு அனுகூலமாய் இருந்தது. இல்லாவிட்டால் என் மூளையின் வளர்ச்சிக்குத் தக்கபடி படிக்காது. அதை தாங்க சக்தியில்லாதபடி வருடா வருடம் படிக்க நேரிட்டு பரிட்சையில் தேறியிருக்கமாட்டேன் என்று உறுதியாக நம்புகிறேன். தற்காலம் யாராவது சிறுவர்கள் தங்களுக்கு வகுப்பில் பிரமோஷன் ஆகவில்லை யென்று என்னிடம் வந்து முறையிட்டுக்கொண்டால் எனக்கு நேரிட்ட சம்பவத்தைக் கூறி அவர்களுக்கு உண்மையில் ஆறுதல் கூறி அனுப்புகிறேன் இப்பொழுதும்!

நான் இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கல்வியின் மீது எனக்கு உற்சாகம் உண்டாகச்செய்த இரண்டு சந்தர்ப்பங்களைக் குறிக்கிறேன். முதலாவது என் வகுப்பில் உபாத்தியாயராக இருந்த சுப்பிரமணிய ஐயர் எங்கன் வீட்டிற்கு வந்து என் தகப்பனாருடன் பேசிக்கொண்டிருந்த போது “சம்பந்தம் M. A. ரங்கநாத முதலியாரைப்போல் படித்து முன்னுக்கு வருவான்” என்று அவர் என் தந்தையிடம் சொன்னார். இதைக் கேட்ட போது எனக்கு கர்வம் பிறக்க வில்லை. வாஸ்தவமாய் பயம் பிறந்தது. அக்காலத்தில் M. A. ரங்கநாத முதலியார் என்பவர் தமிழர்களுள் மிகவும் நன்றாய் படித்தவர் என்று பெயர் பெற்றவர். அவரைப்போல் நாம் எங்கு படிக்கப்போகிறோமென்கிற பயம். ஆகவே எப்படியாவது கஷ்டப்பட்டு நன்றாய் படிக்கவேண்டுமென்று ஊக்கம் பிறந்தது. இரண்டாவது இக்கலாசாலையின் வருடாந்திரக் கொண்டாட்டத்தில் பச்சையப்ப முதலியார் ஹாலில் மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் முதலாவதாக தேறிய ஒரு பிள்ளையான்டான் பொற்பதக்கம் (Gold medal) பெற்றதைப் பார்த்தேன். அச்சமயம் நாமும் இப்பொற்பதக்கம் பெறவேண்டுமென்னும் ஆசை பிறந்தது எனக்கு. (தெய்வத்தின் கருணையினால் 1889ஆம் வருஷம் அந்த ஆசை நிறைவேறி பொற்பதக்கம் பெற்றேன்.)

இப்பள்ளியைச் சேர்ந்ததினால் பெற்ற பெரும் பலன் என்னவென்றால் நான் இப்பள்ளியைச் சேர்ந்தவுடன் தானும் இங்கு படிக்கச் சேர்ந்த ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்காருடைய நட்பே.! இவர் என்னைவிட கொஞ்சம் மூத்தவர். ஆயினும் இங்கு இரண்டாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பிலும் என்னுடன் படித்தவர். அவர் ஓர் இடத்தில் எழுதியபடி நாங்கள் இருவரும் முதன்முறை சந்தித்தபோதே நண்பர்களானோம். (தெய்வகடாட்சத்தினால்) அன்று பிறந்த நட்பு செழித்தோங்கி இருவரும் உயிர் சினேகிதர்களானோம், இச்சம்பவம் நேரிட்டு 72 வருடங்கள் சிநேகிதர்களாய் இருந்தோம்.

1884-ஆம் வருஷம் நாங்களிருவரும் இப் பள்ளிக்கூடத்திலிருந்து நான்காம் வகுப்பையுடைய செங்கல்வராய நாயக்கர் பள்ளிக்கு அனுப்பப்பட்டோம். அதிலிருந்து 1885-ஆம் வருஷம் இரண்டு பெயரும் அக்காலத்து மிடில்ஸ்கூல் பரிட்சையில் தேறி 1886-ஆம் வருஷம் பச்சையப்பன் காலேஜைப் போய் சேர்ந்தோம். பிறகு 1887-ஆம் ஆண்டு இரண்டு பெயரும் அக்காலத்து மெட்ரிக்குலேஷன் பரிட்சையில் தேறினோம். இதன் பேரில் நான் கவர்ன்மெண்ட் காலேஜாகிய பிரசிடென்சி காலேஜைப் போய் சேர்ந்தேன். எனது நண்பர் பச்சையப்பன் காலேஜிலேயே படித்து வந்தார். இப்படி நான்கு வருடங்கள் நாங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் எங்கள் சிநேகிதம் மாறவில்லை. இரண்டு பெயரும் ஒரே வருஷம் பி.ஏ. பரிட்சையில் தேறி மறுபடியும் லா (Law) காலேஜில் ஒன்றாய் படிக்க ஆரம்பித்தோம், பி எல். பரிட்சையில் இருவரும் ஒரே வருஷம் தேறினோம். அதன் பேரில் எனது நண்பர் “ஜேம்ஸ் ஷார்ட்” என்பவரிடம் அப்ரென்டிசாக (Apprentice) அமர்ந்தார், நான் ஸ்ரீமான் சுந்தரம் சாஸ்தியாரிடம் முதலிலும் அவர் அகாலமடைந்த போது அவர் குமாரராகிய குமாரசாமி சாஸ்திரியிடமும் வித்யார்த்தி (Apprentice) ஆனேன். இப்படி இருந்தும் கோர்ட்டில் ஒன்றாய் வேலை கற்றுவந்தோம். மத்தியான சிற்றுண்டியும் ஒன்றாய் புசிப்போம்! இரண்டு பெயரும் 1898-ஆம் வருஷம் வக்கீல்களாக என்ரோல் செய்யப்பட்டோம். 1891-ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சுகுண விலாச சபைக்கு இரண்டு பெயரும் சாயங்காலங்களில் போய் காலங்கழிப்போம். பிறகு 1924 இல் நான் ஸ்மால்காஸ் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன். அதே வருஷம் எனது நண்பர் ஹைகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1928-ஆம் வருஷம் நான் 55 வது வயதில் விலக வேண்டி வந்தது. அதே வருஷம் அவரும் ஹைகோர்ட் பதவியிலிருந்து விலகினார்! மேற்கூறியபடி நாங்களிருவரும் ஏறக்குறைய சமமாக உயிர் வாழ்ந்ததை பரம் பொருள் எங்களுக்கு : அளித்த பேரருளாகக் கொள்கிறேன். பிறகு 1954-ஆம் வருஷம் எனது துரதிஷ்டத்தால் என்னை விட்டு வைகுண்டம் அடைந்தார்.

இனி 1882-ஆம் வருடத்தின் என் பழைய கதைத் தொடர்ச்சியை எடுத்துக் கொள்கிறேன். கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் படித்தபோது நடந்த செய்திகளில் தற்காலம் எனக்கு முக்கியமாக ஞாபகமிருப்பது அங்குள்ள உபாத்தியாயர்களுக்கெல்லாம் பிள்ளைகள் நிக் நேம் (Nick Naine) நிந்தைப் பெயர் வைத்ததேயாம். தமிழ் வாத்தியாருக்கு மாங்காய் வாத்தியார் என்று பெயர். மற்றொருவருக்கு பழஞ்சால்வை என்று பெயர். ஹெட்மாஸ்டருக்கு (Head master) நெட்டைக் கால் என்று பெயர். மற்றவர்களுக்கு மிப்படியே. இதில் வேடிக்கை யென்னவென்றால் அவர்களின் நிஜமான பெயர் எனக்குத் தெரியவே தெரியாது! மூன்றாவது வகுப்பில் படித்த போது முதலாவதாக இருந்ததற்காக எனக்குப் பரிசு கிடைத்தது. அன்றியும் ரெசிடேஷன் (Recitation) ஒப்பு வித்த தற்காக வைஸ்ராய் (Visroy) பரிசு கிடைத்தது. இது முதல் ஒவ்வொரு வருஷமும் மெட்ரிக்குலேஷன் வகுப்பு வரையில் வருடா வருடம் பரிசு கிடைத்தது.

பிறகு 1883, 84 வருடங்களில் பி. டி செங்கல்வராய நாயக்கர் பள்ளியில் நான்காவது கீழ் வகுப்பு, நான்காவது மேல் வகுப்பு (lower fourth, upper fourth) வகுப்புக்களில் படித்தேன். நான்காவது கீழ் வகுப்பில் படித்தபோது நடந்த ஒரு விந்தையான சம்பவத்தை எனது நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அக்காலம் இவ்வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு அப்பர் செகண்டரி பரிட்சை என்று ஒரு பரிட்சை இருந்தது. அப்பரிட்சை நெருங்கியபோது தினம் நான் காலையில் பள்ளிக்கு போகுமுன் பிள்ளையாரண்டை பூஜை செய்யும் போது இப்பரிட்சையில் முதல் வகுப்பில் நான் மூன்றாவதாகத் தேற வேண்டுமென்று பிரார்த்தித்து வந்தேன் கெஜட்டில் தேறினவர்களின் பெயர் அச்சிட்டபோது அப்படியே. முதல் வகுப்பில் மூன்றாவதாக என் பெயர் இருந்தது! இதை நான் ஏதோ பெருமையாகவோ டம்பமாகவோ எழுதவில்லை, எழுதியதற்குக் காரணம் கூறுகிறேன். நான் வகுப்புக்களில் நன்றாய் படித்து வருகிறேன் என்று நினைத்து பரிட்சையில் எல்லோரையும் விட முதலாவதாக இருக்க வேண்டுமென்று கோருவது சகஜமாயிருக்கலாம், மூன்றாவதாக இருக்கவேண்டுமென்று ஏன் கோர வேண்டும்? இதற்குக் காரணம் இன்றளவும் எனக்குத் தெரியாது! ஆயினும் நான் அப்படி கோரிப் பிரார்த்தித்தது என்னவோ வாஸ்தவம். என் பிரார்த்தனை நிறைவேறியதும் வாஸ்தவம். இது ஒரு அற்ப விஷயமானாலும், இதனால் தெய்வத்தைப் பிரார்த்திப்பது பயனானது என்று உறுதியாய் எனது மனதில் உதித்தது. இச்சந்தர்ப்பத்தில் டெனிசன் மகாகவி ஆங்கிலத்தில் எழுதிய ஒரு வரி ஞாபகம் வருகிறது. அதாவது :-- “உலகம் கனவு காண்கிறதை விட் பிரார்த்தனையினால் உலகில் பல விஷயங்கள் (சரியாக) நடந்து வருகின்றன” என்பதாம். 1885-ஆம் வருஷம் இப்பள்ளியின் வருடாந்திர விழாவில் அலெக்ஸாண்டரும் கள்வனும் என்னும் ஆங்கில சிறு நாடகத்தில் கள்வனாக ரெசிடேஷன் ஒப்புவித்த பரிசு பெற்றேன்.

1886-ஆம் வருஷம் பச்சையப்பன் கல்லூரிக்கு மாற்றப் பட்டேன். இங்கு இரண்டு வருடங்கள் படித்து மெட்ரிகுலேஷன் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். எங்கள் பள்ளிக் கூடத்திலிருந்து பரிட்சைக்குப் போன பிள்ளைகளுள் முதலாவதாக இருந்தபடியால் (நான் சிறு வயதில் கோரியபடி) எனக்கு ஜெயராமச் செட்டியார் பொற்பதக்கம் (Jayarama chetty's Gold ineclal) கிடைத்தது. அன்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலும் முதலாவதாக இருந்தபடியால் இரண்டு பரிசுகளும் பெற்றேன். அன்றியும் லவ்ரி (Lovery) பரிசும் கிடைத்தது. இப்பரிட்சையில் தேறினவுடன் பச்சைப்பன் கல்லூரியை விட்டு பிரசிடென்சி காலேஜ் (Presidency college) என்னும் கவர்ன்மெண்ட் காலேஜைப் போய் சேர்ந்தேன். இப்படி நான் கல்லூரியைவிட்டு வேறொரு கல்லூரிக்குச் சென்றதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. என் தகப்பனார் இக்கல்லூரியிலிருந்து தான் பிரோபிஷெண்ட் (Proficient) பரிட்சையில் தேறினார். எனது மூத்த சகோதர்களும் இக்கல்லூரியில் படித்தவர்கள். எனது சிறு வயது முதல் எப்போது நாமும் இந்த கல்லூரியைப் போய் சேர்வோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் பழைய நண்பராகிய வி. வி ஸ்ரீனிவாச ஐயங்காரை விட்டுப் பிரிந்து இக்கல்லூரியைச் சேர்ந்தேன். இப்படி நான் என் பழைய பள்ளியை விட்டுப் பிரிந்ததற்காக எனது நண்பர் என்னை ‘பச்சையப்பன் கலாசாலைக்கு துரோகி’ என்று எப்போதும் அழைப்பார். இக்கலாசாலையில் 1888-1889 வருடங்களில் எப். ஏ. (F. A.) வகுப்பில் படித்து பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினேன். இப்பள்ளியைச் சேர்ந்தது என்னுடைய அதிர்ஷ்டங்களில் ஒரு முக்கியமான அம்சம் என்று கூற வேண்டும். முதலில் இங்கு சேர்ந்தபடியால் எனக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். அவர்களைப்பற்றி சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவ்வாறு புதிதாய் கிடைத்த நண்பர்களுள் முதலாவதாக அ. ஸ்ரீனிவாச பாய் என்பவரைச் சொல்ல வேண்டும். இவர் எனக்குக் கிடைத்த ஆப்தர்களுள் ஒருவர் என்று நான் கூற வேண்டும். இவரும் நானும் சுமார் 8 வருடம் இக்கல்லூரியிலும் லாகாலேஜிலும் (law college) ஒன்றாய் படித்தோம். பிறகு இவர் வக்கீலாகி மங்களுருக்குப் போனார். இவர் எனது துரதிர்ஷ்ட வசத்தால் தனது 76-வது வயதில் பரலோகம் சென்றார். இவருடைய மூத்த மகன் பிரதம மந்திரி பண்டிட நேரு அவர்களின் அந்தரங்க காரியதரிசியாக (Private Secretary) இருக்கிறார் என்று சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு கிடைத்த எனது இரண்டாவது நண்பர் மேற்சொன்ன ஸ்ரீனிவாச பாயின் அண்ணன் அ. வாமன் பாய் என்பவர். இவர் 1888-ஆம் வருஷம் எங்கள் வகுப்பிற்கு மேல் வகுப்பில் படித்திருந்தார். ஆயினும் ஸ்ரீனிவாச பாாயின் மூலமாக எனக்கு சிநேகிதமானார் மிகுந்த பத்திசாலி. மனிதர்களுடைய குணங்களை அறிவதிலும் புத்தகங்களின் சாரங்களை கிரகிப்பதிலும் வெகு நிபுணர். இவர் பல வருடங்களுக்கு முன் காலமானார்.

இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர் களுள் ராமராய நிம்கார், பார்த்தசாரதி ராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாஷையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஹஸ்தி சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய ராமராய நிம்கார் பானகல் ராஜ பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி ராய நிம்கார் தற்காலம் பானகல் ராஜாவாகி ஜீவ்ய திசையில் இருக்கிறார்.

மற்றெருவர் வே. பா. ராமேசம். இவர் பிற்காலம் வைகோர்ட் ஜட்ஜாகி சர் பட்டம் பெற்றார். இவர் 1958 வது வருடம் மரணமடைந்தார். இவர் அபாரமான ஞாபக சத்தி உடையவர். நாங்கள் பரிட்சைக்குப் போனபோது இன்ன மார்க்ஸ் (marks) வாங்கினோம் என்று மறவாது சொல்வார்.

என் புதிய சிநேகிதர்களுள் மற்றெருவர் சிங்காரவேலு முதலியார். இவர் கணிதத்தில் மிகுந்த கெட்டிக்காரர். பிற் காலத்தில் சில காலம் பச்சையப்பன் கல்லூரியில் பிரதம உபாத்தியாயராக இருந்தார். இவர் நடுவயதிலேயே இறந்து போனார் என்று நான் சொல்ல வேண்டும்.

மற்ற சிநேகிதர்களுள் ஜெகதீச ஐயர், மண்டயம் திரு நாராயணாச்சாரி மிஸ்டர் பிண்டோ முதலியவர்களை குறிக்க வேண்டும். இவர்களுள் கடைசியாகக் குறித்த பின்டோ என்பவர் மாத்திரம் மங்களூரில் உயிர் வாழ்ந்து வருகிறார்.

பிரசிடென்சி காலேஜில் நான் சேர்ந்ததினால் அடைத்த முக்கியமான லாபம் என்னவென்றால் அதுவரையில் இல்லாதபடி புதிதாய் பலஜாதி வகுப்பினர்களுடன் கலந்து அவர்களின் நட்பைப் பெற்று என் புத்தி விசாலமானதெனக் கூற வேண்டும்.

இங்கு சற்று நிதானித்து அக்காலத்து எப். ஏ. பரிட்சையில் நாங்கள் படிக்க வேண்டுய பாடங்களைப்பற்றி சற்று எழுத விரும்புகிறேன். முதலில் தற்காலத்து எஸ். எஸ். எல். சி. [S. S. L. C.) பரிட்சைதான் பழைய மெட்ரிகுலேஷன் எனலாம். இரண்டாவது இண்டர் மீடியட் பழைய எப். ஏ. பரிட்சையாகும். அக்காலத்தில் எப். ஏ. பரிட்சைக்கு போகும் ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயமாய் தேற வேண்டிய பிரிவுகள் ஆங்கிலம், தமிழ், தர்க்கம், உடற்கூறு சாஸ்திரம், சரித்திரம், கணித சாஸ்திரம், இவைகள் ஒவ்வொன்றிலும் பிரத்யேகமாக வாங்க வேண்டிய மார்க்குகள் வாங்காவிட்டால் தேற முடியாது. இந்த வகுப்பில் டிரிக்னாமெட்ரி என்னும் கணித நூல் வந்து சேர்ந்தது. வாஸ்தவமாய் இது என் மூளையில் ஏறவேயில்லை. இன்றைக்கும் சைன் தீடா, கோசைன் தீடா என்றால் என்ன என்று யாராவது என்னைக் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இப்படி இருக்கும்போது எப். ஏ. வகுப்பில் பள்ளிக் கூடத்து வருடாந்திர பரிட்சையில் நான் கணக்கில் கடைசி பிள்ளையாக நின்றது ஆச்சரியமில்லை. இந்த பரிட்சையில் கணக்கில் எங்கள் வகுப்புப் பிள்ளைகள் மார்க்குகளை யெல்லாம் சக்கரவர்த்தி ஐயங்கார் என்னும் கணித புரொபசர், புரோபசராகிய பூண்டி ரங்க நாத முதலியாரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டார். அவர் தன் வகுப்பில் நாங்கள் எல்லோரும் சேர்ந்த பொழுது ஒரு தினம் பிள்ளைகளுடைய மார்க்குகளை யெல்லாம் படித்துக் கொண்டு வந்தார். நன்றாக மார்க்கு வாங்கின ஜகதீசன், திருநாராயணாச்சாரி, சிங்காரவேலு முதலிய பிள்கைளுடைய மார்க்குகளை படித்தபோது மிகவும் நல்லது (Very good) என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனக்கு அப்போதே தெரியும் எனக்கு என்ன வரப்போகிறதென்று! அவர் படித்த பட்டியில் கடைசி பெயர் என்னுடையது. நூற்றிற்கு 23 மார்க்கோ என்னவோ வாங்கினேன். (இதுவும் யூக் லிட் பேபர் போலும்), “சம்பந்தம் 23 மார்க்” என்று படித்து விட்டு “சம்பந்தம்! உன் சிறு வயதில் நன்றாய் படித்துக் கொண்டிருந்தாயே” என்று தான் சொன்னார். உடனே வகுப்பில் என்னையுமறியாதபடி கண்ணீர் விட்டு அழுது விட்டேன்.

அன்று சாயங்காலம் வீட்டிற்குப் போனவுடன் இது உதவாது இப்படியிருந்தால் நான் எப். எ. (F.A) பரிட்சையில் தேறவே முடியாது. இதற்கென்ன செய்வது என்று யோசித்த டிக்னாமெட்ரி புஸ்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதிலிருந்த புக்வர்க் (Book work) என்னும் பாகத்தையெல்லாம் ‘ஈயடித்தான் ரைடர்’ மாதிரி காபி பண்ண ஆரம்பித்தேன் தினம் இப்படியே செய்து எனக்கு ஞாபகமிருக்கிறபடி வருடத்தின் பரிட்சைக்கு போகுமுன் பதினோறு முறை காபி செய்தேன்! இதன் பயனாக நான் எழுதி வந்ததொன்றுக்கும் அர்த்தம் தெரியாவிட்டாலும் அப்புஸ்தகத்தில் எந்த புக்வர்க் கேட்ட போதிலும் குருட்டுப் பாடமாக தப்பில்லாமல் ஒப்பித்து விடுவேன். ஆல்ஜீப்ராவிலும் புக்வர்க் எதையும் ஒப்பித்துவிடும் சக்தி பெற்றேன். டிசம்பர் மாதம் சர்வகாலசாலை எப். ஏ. பரிட்சைக்கு நான் போன போது இப்பரிட்சையில் புக்வர்க் எல்லாம் எழுதிவிட்டு என் பதில் பேப்பரை சீக்கிரம் கொடுத்து விட்டு எழுந்திருந்து வந்து விட்டேன். தெய்வாதீனத்தால் பரிட்சைக்கு வேண்டிய மார்க்கு கிடைத்தது. பி. ஏ. வகுப்பிற்கு போனபிறகு தான் ஒவ்வொரு பிள்ளையும் தனக்கு இஷ்டமான ஆப்ஷனல் சப்ஜக்ட் (optional subject) எடுத்துக் கொள்ளலாம். இது அக்காலத்திலிருந்த பெருங்குறையாகும், வைத்தியனாகவோ வக்கீலாகவே ஆகவேண்டுமென்று விரும்பும் ஒரு பிள்ளை எதற்காக எப். ஏ. வகுப்பில் ஜியாமெட்ரி, ஆல் ஜீப்ரா, டிக்னாமெட்ரி முதலிய கணித புஸ்தகங்களை படிக்க வேண்டும். நான் காலேஜ் வகுப்பிற்கு வந்தவுடன் வக்கீல் பரிட்சைக்குப் போய் தேறி வக்கீலாக வேண்டிமென்று ஏறக் குறைய தீர்மானித்தேன். அப்படியிருக்க மேற்கண்ட கணித புஸ்தகங்களை யெல்லாம் படித்ததின் பயன் எனக்கென்ன? என் மூளைக்கு சிரமம் கொடுத்ததேயொழிய அவைகளால் ஒரு பயனுமடையவில்லை என்றே நான் கூறவேண்டும். தற்காலத்துப் பிள்ளைகள் எங்களைவிட மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவேண்டும்.

ஒரு சிறு வேடிக்கையான விஷயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணித புஸ்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் காலேஜில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, ஜகதீச ஐயர், வே. பா. ராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து பெயரும் முதல் வகுப்பில் தேறினோம்.

எப். ஏ. வகுப்பில் தேறினவுடன் என் தலைமீதிருந்த பெரும் பாரம் நீங்கினவனாய் பி. ஏ. பரிட்சைக்கு என்ன ஆப்ஷனல் சப்ஜெக்ட் எடுத்துக்கொள்வது என்று ஆலோசிக்கலானேன். அச்சமயம் டாக்டர் போரன் என்பவர் பையாலஜி (Biology) பேராசிரியராக இருந்தார். எங்கள் காலேஜில், அவர் என்னை சந்தித்தபோது நான் தனக்குப் பிரியமான உடற்கூறு சாஸ்திரத்தில் பிரசிடென்ஸியில் முதலாவதாக இருந்ததற்காக என்னை சிலாகித்து “நீ பையாலஜி எடுத்துக் கொண்டு என் வகுப்பில் வந்து சேர்” என்று கூறினார். நானும் இசைந்தேன். முதல் நாள் அவர் வகுப்பில் என்னை பக்கலில் உட்காரவைத்துக்கொண்டு ஒரு தவளையைக் கொன்று டிஸ்செலக்ட் செய்து காண்பித்தார்; என் மனம் அதைக்கண்டு தாளவில்லை! உடனே நான் இந்த படிப்பிற்கும் நமக்கும் பொருத்தமில்லை என்று தீர்மானித்து என் தகப்பனாரிடமிருந்து உத்தரவு பெற்று காலேஜ் பிரின்ஸ்பாலாகிய மிஸ்டர் ஸ்டூவர்ட்டிடம்போய் என் சப்ஜெக்ட்டை பையாலஜியிலிருந்து சரித்திரத்திற்கு மாற்றிக்கொண்டு பிறகுதான் சரியாகத் தூங்கினேன். சரித்திரமானது நான் எப்பொழுதும் பிரியப்பட்ட நூல். சிறு வயது முதல் என் ஞாபகசக்தி கொஞ்சம் நன்றாய் இருந்தபடியால் சரித்திரத்தில் எந்த பரிட்சையிலும் முதலாவதாக வந்து நல்ல மார்க்கு வாங்கினேன்.

பரிட்சையில் தேறுவோமோ என்னவோ என்று பயமின்றி நான் படித்தது பி. ஏ. வகுப்பில்தான், பி. ஏ. வகுப்பில் அக்காலம் பரிட்சைக்குப் போகுமுன் மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கவேண்டியிருந்தது. முதல் வருஷம் முடிந்தவுடன் நடக்கும் பரிட்சையில் இங்கிலீஷில் எந்த பிள்ளை முதலாவதாக தேறுகிறானோ அவனுக்கு ஒரு ஸ்காலர்ஷிப் உண்டு. அதற்கு தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் என்று பெயர். இது ஒருவருடத்திற்கு மாதம் 10 ரூபாயாம். இதை எப்படியாவது பெறவேண்டுமென்று தீர்மானித்தேன். ஆகவே என் காலத்தையெல்லாம் இங்கிலீஷ் டெக்ஸ்ட் (Text) புத்தகங்களை படிப்பதிலேயே செலவழித்தேன். 1889-ஆம் வருஷம் அக்டோபர் மாதத்தில் பரிட்சை வந்தது. அதில் நான் நன்றாய் பதில் எழுதியபோதிலும் எனக்கு அந்த ஸ்காலர்ஷிப் பெறுவோமோ என்று சந்தேகமாயிருந்தது. நமக்கு மேல் கெட்டிக்காரர்களான பல பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆகவே அது நமக்குக் கிடைப்பது அரிது என்று அந்த ஆசையை விட்டேன். 1890-ஆம் வருஷம் எங்கள் வகுப்புப் பிள்ளைகளெல்லாம் நான்காவது வகுப்பாகிய சீனியர் பி. ஏ. கிளாசுக்கு மாற்றப்பட்டோம். ஒரு நாள். என்னுடைய சிநேகிதர்களாகிய ஜகதீசஜயர், திருநாராயணாச்சாரி முதலியோருடன் சாயங்காலம் வகுப்பு களெல்லாம் விட்டபிறகு கிரிக்கெட் (Cricket) ஆடும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த சமயம், தனக்கு தேக அசௌக்கியமாயிருந்தபடியால் இங்கிலீஷ் பரிட்சைக்கு வராதிருந்த திருமலை ஐயங்கார் எனும் பிராம்மண பிள்ளை வந்து சேர்ந்தார். வந்தவுடன் ஜகதீச ஐயரைப் பார்த்து “ஜகதீசன் இவ்வருஷத்து தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் உனக்குத்தானே கிடைத்தது?” என்று கேட்க ஜகதீச ஐயர் “இல்லையடா” என்று வெறுப்புடன் பதில் உரைத்தார். உடனே திருமலை ஐயங்கார் “ஆனால் அது திருநாராணாச்சாரியாருக்குத்தான் கிடைத்திருக்கும்” என்று அவரைப் பார்த்துச் சொன்னார். உடனே ஜகதீசன் “அவனுக்கு கிடைத்தாலும் பரவாயில்லையே ‘திஸ் சாப் கெட்ஸ் இட்’ (This chap gets it) இந்த பையன் பெறுகிறான்” என்று என்னை நோக்கிக் கூறினார். அப்பாழுதுதான் எனக்குத் தெரிய வந்தது அதை நான் பெற்றதாக!

ஜகதீச ஐயர் என்னை விட ஆங்கிலத்தில் பயிற்சி பெற்றவர் என்று நான் ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்களிருவரும் 1891-ஆவது வருஷம் பி.ஏ. பரிட்சைக்குப் போனபோது முதல் வகுப்பில் நாங்கள் இருவர்தான் தேறினோம். அவர் முதலாவதாக இருந்தார். நான் இரண்டாவதாக இருந்தேன். ஆகவே அப்படி யிருக்கும்போது தனக்கு தாம்சன்ஸ் ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை என்று வருந்தியது தவறே அல்ல. ஆயினும் தனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறது. மற்றொரு பிராம்மணப் பிள்ளையாகிய திரு நாராயணாச்சாரிக்காவது கிடைக்கலாகாதா, சம்பந்தத்திற்குக் கிடைத்ததே என்று கூறியது தவறென்று நினைக்கிறேன். மேற்கண்ட சம்பாஷனை நடந்தவுடன் நான் காலேஜ் டைரக்டரிடம் போய் எனக்குத்தான் ஸ்காலர்ப் கிடைக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அன்றிரவு இதை என் தகப்பனாருக்குத் தெரிவித்தேன். அவர் என் தாயாரிடம் தெரிவித்தார். எனக்கிருந்த சந்தோஷத்தை விட அவர்களிருவரும் அதிக சந்தோஷப்பட்டனர் என்று நான் கூறவேண்டியதில்லை. கொஞ்ச நாள் பொறுத்து. இந்த ஸ்காலர்ஷிப் பணத்திற்காக முதல் செக் பெற்றதை என் தாயாரிடம் கொடுத்த போது அவர்கள் சந்தோஷப்பட்டதும் அவர்கள் அன்றிரவு இதைப்பற்றி என் தகப்பனாரிடம் கூறிய வார்த்தைகள் இன்னும் எனக்கு நன்குய் ஞாபகமிருக்கின்றன. என் பெற்றோர்களுக்கு இந்த சிறு சந்தோஷத்தையாவது கொடுத்தோமே. ஈசன் கருணையினால் என்று இதைப்பற்றி எழுதும் போதும் சந்தோஷப்படுகிறேன்.

1391-ஆம் வருஷம் என் ஆயுளில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒன்று மிகவும் துக்க்கரமானது. மற்றொன்று மிகவும் சந்தோஷமானது. ஜகதீசன் ஜீவராசிகளுக்கு துக்கத்தையும் சுகத்தையும் ஏன் இவ்வாறு கலந்து கலந்து அனுப்புகிறார். இதற்கு விடையளிக்க என்னால் முடியாது; அதற்கு விடை. அவருக்குத்தான் தெரியும் போலும்;

முதலில் துக்ககரமானதைப்பற்றி எழுதுகிறேன். இவ் வருஷம் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி என் தெய்வத்தின் ஒரு கூறான என் தாயார் திடீரென்று வாந்திபேதி கண்டு சிவலோகப் பிராப்தி அடைந்தார்கள். இது பகற்காலத்தில் வானம் களங்கமில்லாமலிருக்கும்போது இடி விழுந்தது போல் என்னை மகத்தான துயரத்தில் ஆழ்த்தியது. இனி நமக்கு இவ்வுலகில் சந்தோஷமே கிடையாதென்று நினைத்தேன். ஆயினும் சற்றேறக்குறைய மூன்று மாதத்திற்குள் அவர்கள் இறந்ததே நலம் என்று சந்தோஷப்பட்டேன். இதற்குக் காரணம் அந்த மூன்று மாதத்தின் பிறகு என் கடைசி தங்கை தனது 16-வது வயதிற்குள் தன் புருஷனை இழந்து விதவையானதேயாம். இது நேர்ந்தபோது அக்கோர சம்பவத்தைக் காணாது என் தாயார் இறந்ததே நலமென்று உறுதியாய் நம்பினேன். என் தாயார் உலகில் ஒரு பெண்மணி அனுபவிக்கவேண்டிய சுகங்களையெல்லாம் அனுபவித்தே இறந்தார்கள் என்று நான் கூறவேண்டும். தனது எட்டு குழந்தைகளுக்கும் விவாகமாகி (எனக்கு 1890-ம் வருஷம் விவாகமானது) பேரன் பேத்திகளெடுத்து தன் கணவனுக்கு சஷ்டிபூர்த்தியாகி சுமங்கலியாய் ஒரு மாங்கல்யத்திற்கு இரண்டு மாங்கல்யங்களாகப்பெற்று சிவ சாயுக்தமடைந்தது வருந்தத்தக்க விஷயமல்ல என்று என் மனதைத் தேற்றிக் கொண்டேன். அவர்களுடைய உடல் அவர்கள் கோரிக்கையின்படியே சமாதியில் வைக்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம் என் ஆயுளுள் நேரிட்டவைகளுள் மிகவும் சந்தோஷகரமானது. இவ் வருஷம் கோடைக்கால விடுமுறையில் காலஞ்சென்ற ஆந்திர நாடக பிதா மகன் என்று கௌரவப் பெயர் பெற்ற வெ. கிருஷ்ணமாச்சார்லு என்பவர் பல்லாரியிலிருந்து சென்னைக்கு வந்து தான் ஏற்படுத்திய சரச வினோத சபை அங்கத்தினருடன் தெலுங்கு நாடகமாட அதற்கு ஓர் இரவு நான் என் தகப்பனாருடன் போய் பார்க்கும்படி நேரிட்டதேயாம். இதுதான் பிற்காலம் நான் தமிழ் நாடகங்கள் எழுதுவதற்கும், தமிழ் நாடகங்களில் நடிப்பு தற்கும் அங்குரார்ப்பணமாயிருந்த சம்பவம். இதைப்பற்றி விவரமெல்லாம் அறிய விரும்புவோர் எனது “நாடக மேடை நினைவுகள்” என்னும் புஸ்தகத்தில் கண்டு கொள்ளும்படி வேண்டுகிறேன், பி.ஏ. சரித்திர பரிட்சையில் நேரிட்ட இன்னெரு விஷயத்தை இங்கு எழுதுகிறேன். நான் பிரசி டென்ஸி காலேஜிலிருந்தும், வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் பச்சையப்பன் காலேஜிலிருந்தும் போனோம். இப்பரிட்சைக்கு. இருவரும் செனெட் அவுஸில் பரிட்சைக்காக தினம் சந்தித்து பத்தியான போஜன காலத்தில் ஒன்றாய் உட்கார்ந்து பேசுவது வழக்கம். பரிட்சையில் ஒருநாள் மத்தியானம் பேசிக் கொண் டிருந்தபோது எனது நண்பர் “சம்பந்தம், நான் சரித்திரத்தில் ஸ்பெஷல் சப்ஜெக்ட் புஸ்தகத்தை நன்கு படிக்கவில்லை. சாயங்கால பரிட்சை பேபரில் என்ன கேட்கப் போகிறார்கள் சொல் பார்ப்போம்” என்று சொன்னார். நான் யோசித்து “இந்த யுத்தத்தைப் பற்றி கேள்வி வரலாம் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி அதன் விவரங்களை சொல்லி வைத்தேன். உடனே பரிட்சை மணி அடிக்க இருவரும் ஹாலுக்குப் போய் உட்கார்ந்தோம். இருவர்களுடைய பெயர்களும் 3 எனும் ஆங்கில எழுத்தில் ஆரம்பமாகிறபடியால் எங்கள் நாற்காலிகள் சற்று அருகாமையிலிருந்தன. பரிட்சைக்காகிதம் (Examination paper) எங்களுக்குக் கொடுக்கப் பட்டவுடன் அதில் நான் ‘ஜோஸ்யம்’ சொன்ன கேள்வியே கேட்டிருந்தது! இதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரும் ஆச்சரியப்பட்டு புன்முறுவலுடன் என்னைப் பார்த்தது எனக்கு நன்றாய் ஞாபகமிருக்கிறது.

1892-ஆம் வருஷம் பிரசிடென்சி காலேஜில் இன்னொரு வருஷம் படித்தேன். ஆங்கிலம் தமிழ் பரிட்சைகளில் முதல் வகுப்பில் தேறினதுபோல் சரித்திரம் (History) பிரிவிலும் முதல் வகுப்பில் தேற வேண்டுமென்று நான் ஆசைப்பட்டதே இதற்குக் காரணம் தெய்வத்தின் கருணையினால் என் கோரிக்கையின்படியே முதல் வகுப்பில் தேறினேன். அன்றியும் இப் பரிட்சையில் முதல் வகுப்பில் தேறினவன் நான் ஒருவன்தான் மாகாண முழுவதிலும். இதைப்பற்றி சில விவரங்கள் எழுத இச்சைப்படுகிறேன். நான் பிரசிடென்சி காலேஜில் படித்த போது சரித்திரத்தில் முதலாவதாக தேறினதற்காக கார்டன் பரிசும், தமிழில் முதலாவதாக தேறியதற்காக போர்டீலியன் பரிசும் பெற்றேன். அன்றியும் தமிழ் வியாசப் பரிட்சையில் முதலாவதாக இருந்ததற்காக நார்டன் கோல்ட் மெடல் (Norten gold medal) பெற்றேன். பிறகு பவர் வர்னாகுலர் பரிசும் பெற்றேன். இப்பரிசு ஹாமர்டன் என்னும் அமெரிக்க ஆசிரியர் எழுதிய ஒரு புத்தகத்தில் சில பாகங்களை மொழி பெயர்த்ததற்காகக் கொடுக்கப்பட்டது. மேற்கண்ட மூன்று பரிசுகளின் மொத்த தொகை எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் சுமார் ரூபாய் 144 ஆயிற்று. இதற்காக கொடுக்கப்பட்ட செக்கை என் தகப்பனாரிடம் கொடுத்து சந்தோஷப்பட்டேன். அவரும் சந்தோஷப்பட்டார்.

1893-ஆம் வருஷம் நான் பி.ஏ. பட்டம் பெற்றபோது சென்னை சர்வ கலாசாலையாரால் சரித்திரத்தில் முதலாவதாக தேறின தற்காக நார்த்விக் (Northwick) பரிசு கொடுக்கப்பட்டது.