என் சுயசரிதை/பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பேசும் படங்களில் நான் பங்கெடுத்துக் கொண்டது

1931-ஆம் வருடம்தான் என் முதிர் வயதில் பேசும் படங்களில் பங்கெடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்கத்தாவுக்குப் போய் நான் எழுதிய ‘சதி சுலோசனா’ என்னும் நாடகத்தை பேசும் படமாக தயாரித்தது. பிறகு 1936-ஆம் வருடம் பம்பாய்க்குப்போய் என் ‘மனோகரா’ என்னும் பேசும் படத்தில் புருஷோத்தமனாக நடித்தது. இதற்கிடையில் ஏழு வருடம் பேசும் படத்தின் சென்சார் போர்டில் ஒரு அங்கத்தினனாக கவர்ன்மெண்டாரால் ஏற்படுத்தப்பட்டு வேலை பார்த்தது முதலிய விஷயங்களைப்பற்றி என்னுடைய ‘பேசும் பட அனுபவங்கள்’ என்னும் சிறிய புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். ஆகவே இங்கு, அவைகளைப் பற்றி எழுதுவது அவசியமில்லை என்று விடுத்தேன். அவ்விஷயங்களைப்பற்றி அறிய விரும்பும் என் நண்பர்கள் அந்நூலைப் படித்து தெரிந்து கொள்வார்களாக. இதுவரையில் அடியிற் கண்ட எனது நாடகங்கள் திரைப்படங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. (1) காலவரிஷி (2) ரத்னாவளி (3) மனோகரா ( இரண்டு முறை) (4) லீலாவதி சுலோசனா (5) வேதாள உலகம் (5) சதிசுலோசனா (7) சந்திரஹரி (8) சபாபதி (9) பொங்கல் பண்டிகை (10) ராமலிங்க சுவாமிகள் (இது அச்சிடப்படாத நாடகம்).

புத்தகங்களை எழுதி அச்சிட்டது போக நான் எழுத்தாளனாக செய்த சில காரியங்களை இனி எழுதுகிறேன். சென்ற சுமார் 20 வருடங்களாக ஹிந்து (Hindu) பத்திரிகைக்கு ஆங்கிலத்திலும், சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் முதலிய தமிழ் பத்திரிகைகளுக்கு தமிழிலும் சிறுசிறு வியாசங்கள் எழுதியனுப்பியிருக்கிறேன். இதன்மூலமாக எனக்கு வருவாயும் உண்டு.

பேசும் படங்களுக்கு சில நாடகங்களை எழுதியிருக்கிறேன். இவைகளன்றி பேசும் படங்களுக்கென்றே இதுவரையில் நான் எழுதிய நாடகங்கள் இரண்டாம். ஒன்று ‘இராமலிங்க சுவாமிகள்’ இதை எழுதி பேசும் படமாக்கக் கொடுத்ததில் நான் ஒரு பெருந்தவறிழைத்தேன். அத்தவறை மற்றவர் இழைக்காதபடி அதை இங்கு தெரிவிக்கிறேன். அதை என்னிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் அவசரமாக வேண்டுமென்று கேட்க விரைவில் எழுதி முடித்தேன். உடனே அவர்கள் வந்து என்னை கேட்க, நான் அதற்கு ஒரு நகல் வைத்துக்கொள்ளாமலே அவர்களிடம் கொடுத்து விட்டேன். பிறகு அது பேசும் படமாக ஆடப்பட்டபின் நான் எழுதியதைக் கேட்க, அதை அவர்கள் எங்கோ தொலைத்துவிட்டதாகக் கூறினர்! நான் என்ன செய்வது? நான் இதை மிகவும் சிரமப்பட்டு எழுதிய நாடகம். மறுபடியும் நான் அதை எழுதுவது எனக்கு இவ்வயதில் சாத்தியமில்லாமற்போயிற்று. ஒரு எழுத்தாளன் தான் எழுதிய கதை ஏதாவது ஒன்றை நகல் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் கொடுத்துவிடுவது தவறென்பதை இதைப் படிக்கும் மற்றவர்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதன்பின் ‘விஸ்வாமித்திரர்’ எனும் நாடகத்தை எழுதி எனது நண்பர் ஜகந்நாதம் என்பவருக்கு கொடுத்திருக்கிறேன். அதற்காக நான் பெற்ற ஊதியம் ரூபாய் 3000-ஆம். இது பேசும் படமாக ஆடப்பட்டது.

சென்னையில் ரேடியோ வந்தபிறகு அதில் பன்முறை ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசியிருக்கிறேன். ரேடியோவுக் கென்றே இரண்டொரு நாடகங்களை எழுதியிருக்கிறேன். அவைகள் ரேடியோவில் ஆடப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஒன்றாகிய பெண்புத்திக் கூர்மை என்பதை அச்சிட்டிருக் கிறேன்.

இதை வாசிக்கும் தாங்களும் எழுத்தாளர்களாக வேண்டு மென்று விரும்பும் எனது இளைய நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் ஏதாவது எழுதினால் அதை உபயோகிக்க யாராவது விரும்பினால், அதற்காக, எவ்வளவு சிறியதாயிருந்த போதிலும் ஏதாவது ராயல்டி, ஆனரேரியம் பெறாது கொடுக்காதீர்கள். இதில் தவறில்லை. இது தான் சரியான மார்க்கம். மேநாட்டு எழுத்தாளர்கள் இக்கோட்பாட்டை தவறாது கைப்பற்றி நடக்கின்றனர் என்பது ஞாபகமிருக்கட்டும். நான் எனது நாடகங்களை ஒன்றையும் ராயல்டி கொடுக்காமல் ஆடுவதற்கு உத்தரவு கொடுப்பதில்லை என்பது எல்லோரும் அறிந்த விஷயமே.

தினசரி பத்திரிகை, மாதாந்திர பத்திரிகை முதலியவற்றின் சொந்தக்காரர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் சிறு எழுத்தாளர்கள் எழுதி அனுப்புவதை அச்சிட்டால் அவர்களுக்கு ஏதாவது சிறிதாவது ராயல்டி அல்லது ஆனரேரியம் கொடுக்க மறந்து போகாதீர்கள். நமது பாஷையை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று கோரினால் இவ்வாறு செய்வது உங்கள் கடமையாகும்.