என் சுயசரிதை/மேற்சொன்ன நூல்களன்றி நான் அச்சிட்ட நூல்கள்
2. சாதாரண உணவுப் பொருளின் குணங்கள்:-- மேற் கண்டபடியே என் சொந்த உபயோகத்திற்காக சிறு வயது முதல் உணவுப் பொருள்களின் குணங்களை குறித்து வந்தேன். தாயுமானவர் “வாடித்திரிந்து நான் கற்றதும் கேட்டது அவலமாய் போதல் நன்றோ” என்று கூறியபடி இவைகள் மற்றவர்களுக்கு உபயோகப்படக் கூடும் என்று எண்ணி இதை 1948-ஆம் வருஷம் அச்சிட்டேன்.
நான் ஒரு எழுத்தாளனாகி 1942-ஆம் வருஷம் வரையில் என் புஸ்தகங்களை அச்சிடுவதில் ஒரு கஷ்டமுமில்லை என்றே கூறவேண்டும். அதற்கப்புறம் நான் பல கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவைகள் பெரும்பாலும் இரண்டாவது உலக யுத்தத்தினால் நேர்ந்தவையென்றே சொல்லலாம். அவைகளில் சிலவற்றை இங்கு தெரிவிக்கிறேன். முதலாவது 1942-ஆம் வருஷம் பட்டணத்தைவிட்டு மைசூருக்கு குடும்பத்துடன் ஓடிப்போக வேண்டிவந்தபடியால் அதுவரையில் வருஷா வருஷம் சில புஸ்தகங்களையாவது அச்சிடும் பழக்கம் தடைப்பட்டது. இரண்டாவது அதுவரையில் என் புத்தகங்களை அச்சிட்டுக்கொண்டிருந்த டௌடன் கம்பெனியை வாங்கின பியர்லெஸ் பிரஸ் என்னும் அச்சுக்கூடம் எடுபட்டுப்போக, பிறகு என் நூல்களை பல அச்சுக்கூடங்களுக்குப்போய், வேண்டி அச்சிடவேண்டியதாயிற்று. மூன்றாவது என் நூல்களை அச்சிட காகிதம் கிடைக்காமற் போனது. காகித கண்டிரோலர் அவர்களுக்கு எனக்கு காகிதம் வேண்டுமென்று மனு கொடுத்தால் “நீ அச்சிடும் புஸ்தகங்கள் பெரும்பாலும் நாடகங்கள் தானே. அவைகளை காகித நெருக்கடி சமயத்தில் அச்சிடவேண்டிய நிமித்தமில்லை” என்று காகித கோட்டா கொடுக்க மறுத்துவிட்டார். கறுப்பு மார்க்கெட்டில் அதிகவிலை கொடுத்து காகிதம் வாங்கவேண்டியதாயிற்று. நான்காவது தொழிலாளிகளின் ஸ்டிரைக்கினால் இரண்டு மூன்று மாதங்களில் அச்சிடும் புஸ்தகங்கள் 6 மாதத்திற்கு மேல் காலம் பிடித்தது. அச்சிட்டு வெளி வர. ஐந்தாவது அச்சுக் கூலியும் அதிகப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் சராசரி ஒரு பாரத்திற்கு 4 ரூபாய் கொடுத்தது போக தற்காலம் ஏறக்குறைய அதற்கு 4 மடங்கு கொடுக்க வேண்டியவனாய் இருக்கிறேன். காகிதத்தின் விலையும் அதிகப் பட்டதென்று நான் எழுதவேண்டியதில்லை. இதன் பயனாக என் நூல்களின் விலையை அதிகப்படுத்த வேண்டியதாயிற்று.
மேற்கண்ட கஷ்டங்களையெல்லாம்விட நான் தற்காலம் அநுபவிக்கும் பெருங்கஷ்டமென்ன வென்றால் என் கண் பார்வை மட்டிட்டு வருவதேயாம். இது என் வயதின் கொடுமையாம் எனக்கு நாற்பதாய் வயதில் மனிதர்களுக்கு வரும் சாலேஸ்வரம் வரவேயில்லை. நான் அச்சிடும் புஸ்தகங்களின் Proof பிழை திருத்தங்களை சரியாக கவனிக்க அசத்தனாய் இருக்கிறேன். சென்ற சில வருடங்களாக வெளிவரும் என் நூல்களில் பல அச்சுப் பிழைகள் குடி கொண்டிருக்கின்றன என்பதற்கு சந்தேகமில்லை.