என் தமிழ்ப்பணி/தமிழின் இனிமை

விக்கிமூலம் இலிருந்து

15. தமிழின் இனிமை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. “இனிமையால் இயன்ற இளமகளிர்” என்ற பொருள்படவரும் “தமிழ் தழிஇய சாயலவர்” என்ற தொடரில் வரும் “தமிழ்” என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித் தமிழ்மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்கத் தேவர்.

‘ஒண் தமிழ்’, ‘தேமதுரத்தமிழோசை,’ ‘தமிழ் எனும் இனிய தீஞ்சொல்’ என்றெல்லாம் பெயர் சூட்டிப், புலவர்கள், தமிழின் இனிமைப் பண்பை பாராட்டிப் பரவியுள்ளனர்.

இனிய சொற்களைத்தேர்ந்து, இனிமையாக சொல்லாட விரும்பியவர் தமிழர்; தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்; இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடையவாகும்.

நயம்பட உரைக்கும் நாநலம் வாய்க்கப் பெற்றவர் தமிழர். மக்கள் இன்சொல் கேட்க மகிழ்வரேயல்லது வன்சொல் கேட்க மகிழார் என்ற மக்களின் மனவுணர்வின் உண்மையை உணர்ந்தவர் தமிழர். ஆகவே, அவர்கள் என்றும், எங்கும், கேட்டாரைப் பிணிக்கும் வகையில் சொல்லாடித் தம்மை விரும்பும் வகையில் கேளாரையும் வயப்படுத்தி வெற்றி கண்டு வாழ்ந்தனர். இனிய சொற்கள் இருப்பவும், இன்னாத சொற்களை வழங்குதல், இனிய கனிகள் இருக்கவும். இன்னாத காய்களைத் தேடித், தின்பதற்கு நிகராம் என நினைந்து, இனிய சொற்களையே தேர்ந்தெடுத்து வழங்கினார்கள்.

இனிக்கப் பேசி இறவாப் பெருநிலை வாழவேண்டும் ஏன்று விரும்பிய தமிழர்க்கு, அவர் வழங்கும் மொழியும் பெருந்துணை புரிந்தது. இனியவே வழங்கிய அவர்களின் மொழியும், முழுக்க முழுக்க இனிக்கும் ஒலிகளினாலேயே உருவாகித் திகழ்ந்தது. ங், ஞ், ந், ண், ம்,ன், போலும் மெல்லொலிக் கலப்பால், தமிழ்மொழி உருவாகத் துணைபுரியும் சொற்களனைத்தும், இன்னொலியுடையவாகவே ஒலித்தன. அதனால், தமிழ்மொழி இனிமை வாய்ந்து திகழ்கிறது.

செந்தமிழ் இலக்கியங்கள்

செந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பு, அவ்விலக்கியச் செல்வங்களைத் தம் அழியாப் பெருநிதியாகப் படைத்த தமிழ் மக்கள் பெற்றிருந்த பெருஞ்சிறப்பின் விளைவாகும். கரும்பு களர் நிலத்தில் விளையாது: இனிய கருத்தும் இனிக்கும் சொற்களும், தீயொழுக்கம் உடையார்பால் தோன்றுவது இயலாது; உள்ளத்தின் ஒளியே உரையில் புலப்படும். ஆகவே, துய உள்ளம் உடையாரிடத்து மட்டுமே தூய சொற்கள் தோன்றும்; அவர் செயலே தூய்மையில் தோய்ந்து திகழும். ஆகவே, இனியவை உரைக்கும் நாநலம் உடையார், இயல்பாலும் இனியரே ஆவர்.

தமிழ், இனிமைப் பண்பில் தலைசிறந்து விளங்குகிறது என்றால், அம்மொழிக்கு உரியோராகிய தமிழர் தலை சிறந்த நாகரிகம் வாய்க்கப் பெற்றவராதல் வேண்டும், இது உண்மையென்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும். படப்பிடிப்பைக் காணும் வாய்ப்பினை பெற்றார் அனைவரும் உணர்வர்.

பழைய தமிழ் இலக்கியங்கள், அகப்பொருள் உணர்த்துவன, புறப்பொருள் உணர்த்துவன என இருபெரும் பிரிவாகப் பிரிக்கப்படும். ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் அன்பு வாழ்க்கையில் அவர் மனத்திடை நிழலாடும் உயிரோட்டங்களை உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்துவன அகப்பாடல்கள்; அம்மக்களின் அகவாழ்விற்குத் துணையாய் அமைந்து, அதை வளப்படுத்த உதவும் பொருளீட்டும் வகை, போராற்றும் வகை, அரசியல் அறம் ஆகியவற்றை உணர்த்துவன புறப்பாடல்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை, இற்றைத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக அகப்பொருளும் புறப்பொருளும் உடையவாக ஆயிரம் ஆயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள் அக்காலப் புலவர் பெருமக்கள்.

ஆனால் அப்பாக்களின் களஞ்சியத்தை அழியாமல் காக்க வல்ல வாய்ப்பு, இன்று உள்ளது போல் அன்று இல்லாமையால் எத்தனையோ ஆயிரம் பாக்கள் மறைந்து அழிந்துவிட்டன.இவ்வழிவு நிலைதொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வரும்போது, நம் முன்னோர் ஈட்டிவைத்த அப்பெருநிதியை இறவாமல் காக்க வேண்டும் எனும் கடமையுணர்வு வரப்பெற்று ஒரு சில பெரியவர்கள் முனைந்து முயன்று அவ்வகையில் ஓரளவு வெற்றி கண்டனர்.

தம்காலத்தில் கிடைத்த பாக்களையெல்லாம் ஒன்று திரட்டி, அப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள்வளம், அப்பாக்களின் அடி அளவு, ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களை எல்லாம் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற வரிசைகளில் தொகுத்து நமக்களித்துச் சென்றனர்.

அரசு நிலையாலும். பொருள் நிலையாலும் பண்டுதான் பெற்றிருந்த சீரும் சிறப்பும் இழந்து இழிநிலையுற்றிருக்கும் இக்காலத்திலும், தமிழரும் தமிழகமும் உலக மன்றத்தில் உயர்வாக மதிக்கப்பெறுவதற்கு தமிழ்மொழி பெற்றிருக்கும்,

தாழாத் தனிச் சிறப்பு வாய்ந்த பழம் பெரும் இலக்கியச் செல்வங்களே காரணமாகும். ஒல்காப் புகழ் கொண்ட தொல்காப்பியம் உடையது எங்கள் தமிழ்; எட்டுத்தொகை உடைமையால் ஈடிலாப் புகழ் கொண்டது எங்கள் தமிழ்; பத்துப் பாட்டால் பாரோர் புகழ் கொண்டது எங்கள் பைந்தமிழ்; வள்ளுவர் வழங்கிய வான் குறள் உடையது எங்கள் தமிழ்; நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரங் கொண்டது எங்கள் தமிழ்; முச்சங்கம் கண்டது எங்கள் தமிழ்: இயல் உடையது; இசை உடையது இனிய கூத்துடையது எங்கள் தமிழ் என்றெல்லாம் இன்று பெருமை பாராட்டுகிறோம் நாம்.

அப்பெருமையை இன்று நாம் அடைய, அன்று அவற்றை ஆக்கி அளித்தார்கள் புலவர் பெருமக்கள் பல்லோர்; அப் புலவர்கள் ஆன்றவிந்தடங்கிய அறிவுடையராய் அருந்தமிழ்ப் பாக்களை ஆக்கி அளித்த அப்பணியினை, அன்று மேற்கொண்டமையினாலேயே, இன்று நாம் பெருமை கொள்கிறோம்; அவர்கள் அருந்தமிழ்ப் பாக்களை அளிக்கும் அப்பணியைக் கைவிட்டு, எல்லோரையும் போன்று, தம் வயிற்று வாழ்விற்கானவே தேடி அலையும் அப்பணியை மேற்கொண்டிருப்பரேல் அன்று அருந்தமிழ்ப் பாக்கள் தோன்றியிரா இன்று நாமும் பெருமை கொண்டிருத்தல் இயலாது.

அப்புலவர் பெருமக்கள் தம் வாழ்விற்காம் வகை தேடி உழலாது அமிழ்தினும் இனிய அருந்தமிழ்ப் பாக்களைப் பாடிக் கிடக்கும் பணியினராக அன்று வழி செய்து தத்தவர்; அன்று நாடாண்ட அரசர்களும், அவ்வரசர்களே போலும் சீருடைச் செல்வர் சிலருமே யாவர். அவர்கள், அப்புலவர்கள் வேண்டும் போதெல்லாம், வேண்டிய பொருளை விரும்பி அளித்து வந்தனர்.

அரசரும் பிறரும் பொருள் அளித்துப் பேணிப் புரந்தமையால், புலவர்கள் பொருள் தேடியலையும் பணியற்றவராயினர்; வாழ்வு பற்றிய கவலை அவர்க்கு இலதாயிற்று; அதனால் அவர்கள் உள்ளத்தே அமைதி நீலவிற்று; அவ்வமைதி நிறைந்த உள்ளத்தோடு உலகத்தை ஊன்றி ஊன்றி நோக்கினார்கள்; உலகம் அவர் உள்ளத்தே உருப்பெற்றது; ஆண்டு உருப் பெற்ற உலகம், அவர் உரையில் இடம் பெற்றது; உயிரோவியமாக வெளிப் போந்தது; உலகியல் உணர்த்தும் பாக்கள் பலப்பல உண்டாயின.

ஆகவே, அரிய பாக்களைப் பாடி அன்று மொழி வளர்த்தவர், அவ் அருந்தமிழ்ப் புலவர்களும் அப்புலவர்களுக்கு பொருள் அளித்துப் பேணிய புரவலர்களும் ஆவர்.

தமிழ்நாடு

உலக அரங்கில், தமிழ்நாடு உயர்ந்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது: உலகத்தார்க்கெல்லாம், அறுசுவை உணவளித்து அவர் உடலை ஓம்பியும், ஆன்ற அறிவளித்து, அவர் உயிரை ஓம்பியும் உயர்வுற்ற காலம் அது. உலக நாடுகள் அனைத்திலும் அறிவில், ஆற்றலில், செல்வத்தில் செழுமையில், பொன்னில், பொருளில், நாகரீக நற்பண்பில் நனி சிறந்தது எங்கள் நாடு என்று, இன்று பெருமை கொள்ளும் நாடுகள், உலக மக்கள், தங்கள் உணர்வாலும் உணரலாகா அத்துணை இருள்செறிந்து அக்காலத்தில், நாகரீகத்தின் நடுநாயகமாய், நல்லாட்சிக்கோர் எடுத்துக்காட்டாய், அறிவொளி வீசும் பெருநாடகப் பெருமையுற்றிருந்தது நம் தமிழ்நாடு.

தமிழ்நாடு, இமயம் முதல் குமரி வரையுள்ள பெருநிலப் பரப்பினைக் கொண்ட பெரு நாடாய் விளங்கிய காலம் உண்டு.

“தென்குமரி வடப்பெருங்கல்
குணகுட கடலா எல்லை”

(மதுரைக் காஞ்சி :70-71)

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்
குணா அது கரைபொரு தொடுகடல் குணக்கும்
குடா அது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்”

(புறம்-6)

எனவரும் பாடல் வரிகளை அறிக: வடவெல்லை, விந்தியமாகக் குறைந்தது பின்னர்; இறுதியாக, வேங்கடமும், குமரியும் வடதென் எல்லைகளாக விளங்கிவந்தன பலநூறு ஆண்டுகளாக தொல்காப்பியர் காலத்திலேயே இந்நிலை உண்டாகிவிட்டது என்ப

“வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்”

(தொல். பாயிரம்)

தமிழகம் பண்டு தன்னேரில்லா பெருவளம் பொருந்திய, நாடாய் விளங்கியதனால் தான் தமிழகத்தின் மீது ஆரியர் படையெடுத்து வந்தனர்; கோசர் படையெடுத்து வந்தனர்; வடுகர் வந்தனர்; வம்புமோரியர் வந்தனர்; அவ்வாறு படையெடுத்து வந்த அவர்கள் அனைவரும் தமிழ் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையிட்டுச் செல்வதில் குறியாய் இருந்தனரேயல்லது தமிழக ஆட்சியைக் கைப்பற்றி ஆள்வதில் குறியாய் இருந்தாரல்லர்.

தமிழ் வேந்தர்

தமிழ்நாடு, மிகப் பழைய காலமாவே, சேர, சோழ பாண்டியர் என்ற மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்நாட்டை, ‘மூவேந்தர் நாடு’ என்று பெயரிட்டு அழைப்பர், ஆசிரியர் தொல்காப்பியனார். ‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு’ என்பது தொல்காப்பியம்

(பொருள்: செய்யுள் 79)

மூவேந்தர் ஆட்சி, மேற்கே நிலவிய உரோமானியப் பேரரசைப் போலவும், கிழக்கே நிலவிய சீனப்பேரரசைப் போலவும், பழமையும் பெருமையும் வாய்ந்த பேரரசாய் திகழ்ந்தது. இவ்வரசுகளை அமைத்த முதல்வர் இன்னார் என்பதை எண்ணத்தால் எண்ணிக்காணலும் ஒண்ணாதாய் உளது. இவர்தம் பழமை பற்றிப் பேசவந்த பெரியோரெல்லாம் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய முதுகுடி” என்றும் “படைப்புக்காலம் தொட்டு மேம்பட்டு வரும் குடிகள்” என்றுமே கூறி அமைந்தனர்.

இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தே, இந்தியப் பெருநிலப்பரப்பனைத்தையும் தன் ஒரு குடைக் கீழ் வைத்து உலகாண்ட மெளரியப் பேரரசனாம் அசோகனே, சேர, சோழ பாண்டியப் பேரரசுகள், என் ஆட்சி கடங்காப் பேரரசுகளாம் எனக் கூறுவனாயின் இந் நாடுகளின் பழமையும், பெருமையும் கூறத் தக்கன ஆமோ?

வடமொழியின் முதற் பெருங் காவியமாகிய வான்மீக இராமாயணமும், பாரதமும், மூவேந்தர் நாட்டின் நனி சிறப்புக்களையும். அவ்வரசர்களின் ஆற்றற் பெருமைகளையும் பாராட்டிக் கூறுகின்றன; என்னே தமிழ்நாட்டின் தொன்மை! என்னே தமிழரசர் தம் பெருமை!

தமிழ்நாடு வயல் வளத்திலும், வாணிக வளத்திலும், சிறந்து, உலக அரங்கின் உயர்ந்த இடத்தில் அமரப் பெருந்துணை புரிந்தவர், அத்தமிழ்நாட்டை, அன்று ஆண்டிருந்த முடியுடை மூவேந்தர்களே என்றாலும், அத்தமிழ்நாடு இன்று தாழந்த நாடாய் தளர்ந்து போனமைக்கும் அவர்களே காரணமாவர்.

மூவேந்தர்கள் மொழியை முன் நிறுத்தி ஒற்றுமை உள்ளம் கொண்டு உலகாள்வதற்கு மாறாக, சேரர், சோழர், பாண்டியர் என்ற குலப் பெருமையே குறிக்கோளாய் ஒற்றுமை குலைத்து வேற்றுமையை வளர்த்து வந்தனர். மூவேந்தர் குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடே பிறந்தனர். ஒரு குலத்தில், ஒரு காலத்தில், ஆற்றல் மிக்க அரசன் ஒருவன் பிறந்து விட்டால், அவன் பிற இரு குலத்து அரசர்களையும் வென்று அடக்கி, அரசர்க்கு அரசனாய் வாழ ஆசை கொள்வதும், அவன் பெருமை கண்டு மனம் பொறுக்க மாட்டாத பிற இரு குலத்து அரசர்களும் ஒன்று. பட்டுக் குறுநிலத் தலைவர்களின் துணையையும் பெற்று, அவனோடு சமர் புரிந்து அவனை அழிக்க முனைவதும், அக் கால அரசியலின் அழிக்க முடியாத வழக்கங்களாகி விட்டன.

அம்மட்டோ? ஒரு குலத்தவர், பிற குலத்தவரோடு போரிட்ட நிலையோடு நின்று விடவில்லை. ஒரு குலத்தில் பிறந்தவர்களுக்குள்ளேயே ஒருவர் ஒருவரோடு போரிட்டுக் கொள்ளவும், மகன் தந்தை மீது போருக்கு எழவும், தந்தை தான் பெற்ற மகனையே போரிட்டு அழிக்கவும், அக்காலத் தமிழரசர்கள் உரிமை பெற்றிருந்தனர்.