என் தமிழ்ப்பணி/திருமுருகாற்றுப்படை

விக்கிமூலம் இலிருந்து

8. திருமுருகாற்றுப்படை

அறிமுகம்

திருமுருகாற்றுப் படை, வீடுபேறு அடைதற்கு உரிய நல்லூழ் உடையான் ஒருவனை, அவ்வீடு பேற்றினை பெற்றான் ஒருவன், முருகக் கடவுளிடத்தே செல்க: சென்றால் வீடுபேறு பெறுகுவை” என வழி கூறியதாகப் பாடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் வரும் பொருநராற்றுப்படை முதலியன எல்லாம், பொருளைப் பெறுவோர் பெயரால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் திருமுருகாற்றுப்படை பொருள் தரும் தலைவன் பெயரால் வழங்கும் சிறப்புடையது. இதற்குப் புலவரர்ற்றுப்படை என்றோர் பெயரும் இருந்தது என்பது, “இதனைப் புலவராற்றுப்படை என்று உயர்ந்து உணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை என்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமை மறுக்க” (முருகு : 295 : உரை) என்னும் நச்சினார்க்கினியர் உரையால் தெளிவாகும்.

தெய்வ யானையின் கணவன்.

நீல வண்ண நீர் நிறைந்த கடலில், காலைப் போதில் அடிவானத்தில். செந்தழல் பிழம்பாய் செந்நெருப் புருண்டையாய் ஞாயிறு தோன்ற, அதன் செவ்வண்ணக் கதிர்கள் வரிசை வரிசையாக அதைச் சுற்றி எழும் காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும் கவின்மிகு காட்சியாகும். 

நீல வண்ணத் தோகையினை விரித்து நிற்கும் மயில் மீது, செம்மேனிச் செம்மானாகிய செவ்வேள் முருகன் வீற்றிருக்கும் காட்சியும், கடலிடை ஞாயிற்றின் காட்சி போல் கண்ணுக்கு விருந்தளிக்கும் கவின்மிகு காட்சியாம்.

மயில் மீது முருகன் காட்சியை அவன் அன்பர்களுக்குக் காட்ட விரும்பிய புலவர் நக்கீரர் கடலிடை ஞாயிற்றைக் காட்டி விளக்கி இருக்கும் திறம் நயந்து பாராட்டற்கு உரியது.

கடலிடை தோன்றும் ஞாயிறும் உலகத்தை வாழ்விப்பான்; மயில்மீது உலாவரும் முருகனும் உலகத்தை வாழ்விப்பான்; ஆகவே இவ்விருபெரும் காட்சிகளைக் காணும் பேறு பெற்றவர் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து போவர். முருகனின் பேரொளிப் பிழம்பாய்ச் சேணெடுந் தொலைவும் சென்று ஒளிவீசும் அவ்வொளியைக் கண்விழித்துக் காணமாட்டாது: கண் இமைகளைக் குவித்துக் கொண்டு, அகக் கண்களால் காண்பர் அன்பர்கள். அத்தகு ஒளியினை உடையான் முருகன்.

அப் பேரொளிப் பெருமானைக் கண்ட அன்பர்கள் அவன் அருள் வேண்டி அவனைப் பணிந்து நிற்பராயின் அவர்க்கு வந்துள்ள துயர் எவ்வளவு பெரியதாயினும் அதைத் துடைத்து எரிந்து விட்டு அன்பர்களைக் காக்க வல்ல, கால் முதலாம் உரன்மிகு உடல் அமையப் பெற்றவன் முருகன்.

அவ்வாறு அன்பர்களுக்கு அருள்பாலிக்குங்கால் அதற்குத் தடையாக நிற்பார் எத்துணை வலியராயினும் அவர்களை அழித்து ஒழிக்க வல்ல ஆற்றல்மிகு கைகளை உடையவன். அக்கைகள் மலைகளையும் பொடிப்பொடியாக்கும் பேராற்றல் வாய்ந்த இடியேற்றிலும் மிக்க டையன. அத்தகையான் யார் எனின், அருட் கற்புடையாளும், அவ்வக அருளை வெளிக்காட்டும் ஒளி விளங்கும் நெற்றியை உடையாளும் இந்திரன் மகளுமான தெய்வ யானையின் கணவன் ஆவன்.

“உலகம் உவப்ப வலன் ஒர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு
ஓவு அற இமைக்கும் கேண் விளங்கு அவர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை” (1-5)

பொருள் : உலகம் உவப்ப-உலகத்து உயிர்கள் எல்லாம் வியந்து மகிழ பலர் புகழ் ஞாயிறு-உலகத்து அனைத்து சமயத்தவராலும், அனைத்து நாட்டவராலும், புகழப்படும் ஞாயிற்றை. கடல் கண்டாங்கு-கடலின் அடிவானத்தே கண்டாற்போல் ஓவு அற-இருவகை இந்திரியங்களும், தாம் செல்லுதற்குரிய பொருள்கள் மேல் சென்று தங்குதல் இல்லையாக இமைக்கும்-கண் இமைத்துப் பார்ப்பதற்குக் காரணம் ஆகும். கேண் விளங்கு அவர் ஒளி-கட்புலனார் நோக்குவார் கண்ணிடங்கள் எல்லாவற்றினும் சென்று விளங்கும் ஒளி விளையும்,

உறுநர் தாங்கிய- தன்னை வந்தடைந்த அடியார்களின் துன்பங்களைப் போக்கி அவர்களுக்கு அருள் செய்த மதன் உடை-அழிகினை உடைய நோன்தாள்- ஆற்றல் மிக்க கால்களையும், செறுநர் தேய்த்த-அழித்தற்கு உரியவர்களை அழித்த, செல் உறழ்- இடியேற்றினும் ஆற்றலில் மேம்பட்ட, தடக்கை- வவிமைமிகு கைகளையும் உடைய, மறுஇல் கற்பின்-மறக்கற்பு இல்லாத அறக் கற்பினையும். வாள் நுதல் கணவன்-ஒளி பொருந்திய நெற்றியினையும் உடைய இந்திரன் மகள் தெய்வயானையின் கணவனே!

விளக்கவுரை : நூல்கள், மங்கல மொழிகளில் ஒன்றான “உலகம்” என்ற சொல்லைத் தனித்தேனும் அடை எடுத்தேனும். உலகம் எனப் பொருள்படும் சொற்கள் தனித்தேனும் அடை எடுத்தேனும் தொடங்கப்படுதல் வேண்டும் என்பது மரபு,

“உலகம் திரியா ஓங்கு உயர் விழுச்சீர்” (மணி: 1:1)
“உலகெலாம் உணர்ந்து” (பெரிய புராணம் ; கடவுள் வாழ்த்து)

“உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்” (கம்பராமாயணம் : கடவுள் வாழ்த்து)

இவற்றில் “உலகம்” என்று தனித்தே முதற்கண் வந்துளது.

நளந்தலை உலகம்” வளைஇ (முல்லைப்பாட்டு ;1)

“மூவா முதலா உலகம் (சீவக சிந்தாமணி , 1)

“நீடாழி உலகம்” (வில்லி பாரதம் : கடவுள் வாழ்த்து)

இவற்றில் “உலகம்” என்ற சொல் அடையடுத்து வந்துளது.

“வையகம் பனிப்ப” (நெடுநல்வாடை : 1) இதில் உலகம் எனும் பொருள்படும் சொல் தனித்து முதற்கண் வந்துள்ளது.

“மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை!’ (சிறு பாணாற்றுப்படை : 1) “மாநிலம் சேவடியாக” (நற்றிணை கடவுள் வாழ்த்து) இவற்றில் உலகம் எனும் பொருள்களை உடைய நிலமடந்தை) நிலம், என்ற சொற்கள் அடையடுத்து வந்துள்ளன.

ஞாயிறு புகழப்படுதலும் வணங்கப்படுதலும் “முந்நீர் மீ மிசைப் பலர் தொழத் தோன்றிய ஏமுற விளங்கிய சுடர்” (நற்றிணை: 283) “தயங்கு நிரைப் பெருங்கடல் உலகு தொழத் தோன்றி வயங்கு கதிர் விரிந்த உருவு கெழு மண்டிலம்” (அக நானூறு 263) “ஞாயிறு போற்றுதும்: ஞாயிறு போற்றுதும்” (சிலம்பு : 1 : 4) என்ற வரிகளாலும் உறுதி செய்யப்படும்.