என் தமிழ்ப்பணி/பெருமை என்பது கெடுமோ?

விக்கிமூலம் இலிருந்து

5. பெருமை என்பது கெடுமோ?

கன்னித் தமிழ் நாட்டில் கடல் வளம் கொழிக்கும் கவின் மிக்கது அந்நாடு. இயற்கை அன்னை அளித்த அரிய செல்வமாய் உப்பு, சிறு சிறு குன்றுகள் போல் ஆங்குக் குளித்து கிடக்கும் உப்பை உள்நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்கும் உமணர் எனும் உப்பு வணிகர் வண்டிகளை வரிசை வரிசையாக ஓட்டி வந்து நிறுத்தி உப்புப் பொதியேற்றும் காட்சியும், அவ்வண்டிகளில் பூட்டப்பெற்ற வலிய காளைகள் மலை நாடுகளிலும் மணல் வெளிகளிலும், கழிகளிலும், கழனிகளிலும் உப்புப் பொதியேற்றிய வண்டியுருள்கள் ஆழப் பதிந்த விடத்தும் மனம் தளராது மண்டியிட்டு ஈர்த்துச் செல்லும் இனிய காட்சியும் காண்பார் கண்களில் களிநடம் புரியப் பண்ணும்.

இத்தகைய உப்பு வணிகத்தால், அந்நாடு ஒருபால் உயர்வடைய, அந்நாட்டு உழவர்கள் தம் உழைப்பாலும், உயர்ந்த பண்பாலும் அந்நாட்டுப் பெருமையை மேலும் உயரப் பண்ணினர். நாட்டில் மக்கள் உழைக்க வேண்டாதே உண்டாம் உப்புச் செல்வம் மண்டிக் கிடக்கிறது: ஆகவே நாம் உழைக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை என அந்நாட்டு மக்கள் மனம் அடங்கி மடங்கியிரார்: உழுதும், விதைத்தும், விளைத்தும் பெறலாகும் நெல் மலைகள் அந்நாட்டின் களத்தோறும் கணக்கில்வாய் நின்று காட்சி அளிக்கும்; உழைத்து உருபொருள் பெற்ற உழவர், களம் நோக்கி வந்து பாடி நிற்கும் புலவர்க்கும், பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர்க்கும் வாரி வழங்கி உயர் புகழ் பெற்றுப் பெருமையடைவர்.

செந்நெல்லையும் வெண்கல் உப்பையும் நாடு வேண்டுமளவு பெற்றிருந்தும் அந்நாட்டு மக்கள் அவற்றோடு அமைதி காண்பாரல்லர். ஒரு நாட்டில் உணவுக் குறைபாடு என்றுமே உண்டாசாகிருத்தல் வேண்டுமாயின் அந்நாடு நெல்லுணவு ஒன்றையே நம்பியிருத்தல் கூடாது; நெல்லுணவிற்குத் துணையாக வேறு துணையுணவுகளையும் மக்கள் அறிந்து மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் உணர்ந்திருந்தனர்; அதனால் கடற்கரை நாடாகிய தங்கள் நாட்டிற்குக் கடல் நீர் அளிக்கும் மீன் உணவு, அத்தனை துணை உணவாய்ப் பயன்படும் என அறிந்து அம்மீன் பிடிக்கும் தொழிலை நன்குக் கற்றிருந்தனர்.

பொடி மீன்களும் பிழைத்துப் போகாதவாறு, சிறு சிறு கண்கள் அமைத்துப் பின்னிய அழகிய வலைகளை நீண்ட கயிறுகளில் பிணித்து எடுத்துச் சென்று, கடற்பரப்பில் மீன்கள் நிறைய வாழும் இடங்களை அறிந்து அவ்விடங்களைச் சுற்றி வலைகளை விரித்து வைத்துவிட்டு வந்து கரையேறுவர். சிறிது பொழுது கழித்து, தாய், தந்தை, மனைவி மக்கள், மாமன், மாமி, மருமகன், மருமகள் ஆகிய உறவினர் அனைவரும் ஒன்று கூடி நின்று வலை பிணித்த கயிற்றிவை ஒருசேரப் பற்றி ஒருமுகமாக ஈர்ப்பர்:

வலையும் பெரியதாய், வலையில் சிக்கிய மீன்களும் - பெருங் கூட்டமாய் அமைந்து விடுமாயின் வலையை எளிதில் ஈர்க்க மாட்டாது எல்லோரும் தளர்ந்த போவர்; என்றாலும் தளர்ச்சியால் தம்முயற்சியைக் கைவிடுவாரல்லர்: உப்புப் பொதியேற்றிய சகடு சேற்றில் சிக்கி ஆழ்ந்துபோன விடத்து எருதுகள் மண்டியிட்டும், மண்டையைத் தாழ்த்தியும் ஈர்த்து வெளியேற்றிச் செல்வதைக் கண்டு பழகிய அப்பரதவர் வலையின் பொறை கண்டு மலைக்காது மண்டியிட்டு ஈர்த்துக் கரை சேர்ப்பர்.

கரை சேர்ந்த வலைக்குள் இன இனமான மீன்கள் கணக்கிடற்கியலாதவாறு கூட்டமாய் அகப்பட்டிருக்கக் கண்டு அகம் மகிழ்வர்; அம் மகிழ்ச்சியால் ஆங்கு வந்து இரந்து நிற்கும் இரவலர்க்கு வழங்கி அவரைப் போக்கி விட்டு பின்னர் தம் பாதவர் குடியினைச் சேர்ந்தார் அனைவருக்கும், அவாவர் குடியளவிற்கு ஏற்பக் கூறிட்டுக் கொடுத்து விட்டு, எஞ்சியதை ஆங்கு வந்திருக்கும் மீன் வணிகர்பால் விலை பேசித் தருவர். முடிவில் கடன் முடித்த மன நிறைவாலும் கடல் வளைத்து ஈர்த்த உடல் தளர்வாலும் தம்மை மறந்து அம்மணல் மேட்டிலேயே கிடந்து உறங்கிவிடுவர்.

இத்தகைய பணவளமும் நிறைந்த நாட்டில் சிறந்து விளங்கிய குடியொன்றில் தோன்றிய ஓர் இளைஞன் உரிய புருவத்தில் பெண்ணொருத்திபால் காதல் கொண்டான். இளைஞன் நாட்டு உழவர்களும், நுளையர்களும் உழுதும் உழைத்தும் வருவார்க்கு வழங்கியும் வாழும் விழுமிய வாழ்க்கைப் பண்பாடு அவ்விளைஞன் பாலும் பொருந்தி யிருக்கும்; காதல் கொண்ட கன்னியை கடிதில் மணம் முடித்துக் கொண்டு மனையற வாழ்வு மேற்கோள்வன் என நம்பி, அப்பெண்ணும் அவனைக் காதலித்தாள்: இருவர் காதலும் வளர்ந்தது.

தொடக்கத்தில், காதலியைக் காணும் ஆர்வ மிகுதியால் கழிகளைக் கடக்கவோ, சாவண்ல மீறவோ அஞ்சாத அவன், நாள் ஆக ஆக ஆங்கு வரத் தயங்கினான். அவனைக் காண்பதும் அரிதாகி விட்டது. இன்நிலை அவளைப் பெரிதும் வருத்திற்று. காதலனை ஒரு நாள் காணாமை நேரினும் உயிரிழந்தவள்போல் உறுதுயர் கொள்ளத் தொடங்கினாள்; இந்நிலையில் அவன் பல நாள் தொடர்ந்து வாரானகவே கலங்கிக் கண்ணிர் சொரிந்தாள்.

அம்மனக் கலக்கம் அவன் மேனி நலத்தை அழித்தது: மேனியின் பொன்னிறம் அழிந்து பசலை படர்ந்து பொலிவிழந்தது. மேனி மாற்றம் கண்ட ஊர்ப் பெண்டிர் அவள் கற்பொழுக்கத்திற்குக் களங்கம் கற்பித்துப் பழிக்கத் தலைப்பட்டனர்; அது அவள் அகத்துயரை மேலும் அதிகரித்தது: அது பொறாது இறந்து விடுவளோ எண்ணும்படியாகிவிட்டது அவள் நிலை.

அவர் காதலுக்குத் துணை புரிந்து அவர் காதலை வளர்த்த தோழி அந்நிலையை உணர்ந்தாள். இளைஞன் விரைவில் வந்து வரைந்து கொண்டிலனாயினும், ஒரு நாளேனும் வந்து அவள் நலம் வினாவிச் செல்லினும் நன்றாம். அது அவளை மேலும் சில நாட்கள் வாழச் செய்யும் என நம்பினாள்; ஆனால் அவனோ அவர் வாழும் வழியையும் மறந்து விட்டவன்போல் தோன்றினான்.

அதனால் அவள் அவன் மீது சினம் கொண்டான்; பண்பு மிக்க பேரூரில் பிறந்தவன். அதனால் அவனும் பண்புடையவனாவன் என நம்பியே, அன்று அவன்பால் பரிவு காட்டினாள்; அதனாலேயே அவர் காதலுக்குத் துணை புரித்தாள்; அப்பண்பு அவன்பால் இல்லை என்பதை இன்று உணர்ந்து உள்ளம் வருந்தினாள்; பிறந்த ஊர்ப் பண்பு அவனாலும் பொருந்தியிருப்பின் அவன் இவளை இந்நேரம் மணம் செய்து கொண்டு மனையற வாழ்வு மேற்கொண்டு பிற உயிர்களையும் வாழ்வித்துத் தானும் மகிழ்ந்து வாழ்வன்; ஆனால் அவன் அது செய்திலன்: தன்னாட்டுப் பெருங்குடிக் செல்வர்பால் காணலாம் சிறந்த பண்பினைப் பெறாத அவன்; அவர்பால் காணலாம் குறைபாட்டினை மட்டும் அப்படியே பெற்றுளான். 

கடல் நீரில் நீந்தி மகிழ்ந்து வாழும் மீன் இனங்களை வலை வீசிப் பிடித்துக் கடல்நீரினின்றும் வெளிப்படுத்தியதனால் அவற்றின் உயிரைப் போக்கி, உயிரிழந்து போன அவற்றை ஊரார்க்கு எல்லாம் பகிர்ந்து கொடுத்துவிட்டு உயிர்க் கொலை புரிந்து விட்டோமே என்ற உணர்வு தானும் கொள்ளாது, கடற்கரை மணலில் களித்துக் கண்ணுறங்கும் அவன் நாட்டுப் பரதவர் கொடுஞ்செயல் அவன்பாலும் குடிகொண்டு விட்டது.

பெருங்குடியில் பிறந்த இவளைக் காதல் வலைவீசிக் கவர்ந்து கொண்டு காதல் மிகுதியால் மனைப்புறம் வந்தும், மேனி நலம் இழந்து மாறுபட்டும் வருந்துமாறு இவளை வருத்தி இவள் மேனி வேறுபாடு காணும் ஊரார் வாயெல்லாம் இவளைப் பழி கூறுமாறு அலராக்கிவிட்டு இவளுக்கு இத்தகைய இடர்பாட்டினை உண்டாக்கி விட்டோமே என்ற உணர்ச்சி தானும் இன்றி தன் ஊரில் தலை மறைந்து மகிழ்ந்து வாழ்கின்ற இவனை என்னென்பேன் என எண்ணிச் சினந்தாள்; அவன் கொடுமையை அவனுக்கு எடுத்துக்காட்டி இடித்துரைக்கத் துணித்தாள்.

அத்துணிவோடு அவனூர் சென்று அவனைக் கண்டாள்; அவனைக் காணாமுன் அவன்பால் அவள் கொண்டிருந்த சினம், அவனைக் கண்டதும் எங்கோ சென்று மறைந்தது. அவன் அவன் காதலிக்குச் செய்யும் கொடுமைகளை விளங்க எடுத்துரைக்க அவள் வாய் வந்திலது. அதனால் அவனாட்டு இயற்கை வளத்தினை இனிதெடுத்து பாடுவா போல், அவன் நாட்டு நுளையர்களின் கொடுஞ்செயலை எடுத்துக் கூறுமுகத்தான், குறிப்பு மொழிகளால் அவன் கொடுமையை அவன் உள்ளம் உணருமாறு செய்தாள்.

பின்னர் “அன்ப! அவள் உன்னைக் காணாமையால் காதல் நோய் மிகுந்து கலங்குகிறாள்; அக்கலக்க மிகுதியால் அவள் மேனி தன் பொன்னிறம் இழந்து பாழுற்று விட்டது; இந்நிலையில் நீ அவளை அறவே மறந்து விட்டாய்; இது நின் பெருமைக்குப் பொருந்தாது; ஒருநாள் வந்து அவளைக் கண்டு “நின்மேனி வாடி விட்டதே; வாடியது ஏனோ? என அவள் நலனை வினாவி வருதல் கூடாதோ? அதனால் உன் பெருமை அழிந்து விடுமோ?


உன்னை எம்மூரில் யாரேனும் கண்டுவிடின் உன் பெருமை என்னாம் என எண்ணி அஞ்சுகின்றனையாயின் அத்தகைய நிலை இப்போது உண்டாகாது.


எங்கள் கானற் சோலைகள் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவின்பெற்று விளங்கும் காலம் இது. தழைத்துத் தளிர் ஈன்று தண்ணென்றாகி மக்கள் மனத்திற்று மகிழ்ச்சியூட்டும் அச்சோலைகள், முத்துக்களை கொத்துக் கொத்தாக கோர்த்து வைத்தாற்போல் அரும்பீன்று கண்ணிற்கு விருந்தளிக்கும் காட்சிச் செல்வமும் வாய்த்துளது.


அச்சோலை இன்பத்தை நுகர மக்கள் எங்கெங்கிருந்தோ வருகின்றனர்; எவரெவரோ வந்து செல்கின்றனர். அதனால் அங்கு வரும் உன்னை ஐயக் கண் கொண்டு பார்ப்பவர் எவரும் இலராவர்; அதனால் உன் பெருமைக்கும் அழிவு நேராது. ஆங்கு வருதல் எமக்கும் எளிது.


கானற் சோலைக்கு வந்து காதலியைக் கண்டு அவள் நலம் வினாவின், அவளைச் சிலநாள் மேலும் வாழ்வித்த சிறப்பும் உனக்கு உண்டாம்; வருகின்றனையோ?” என வினாவுவாள்போல் அவன் அளித்த காதல் நோயால் அவள் படும் துயரையும், அது ஊரார் உணர்ந்து கொள்ளும் அளவு பெருகி விட்டதையும் இனியும் மணக்காது மறைந்து மறந்து வாழ்ந்தால் ஊரார் உரைக்கும் அலர், வேற்று வரைவினைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை உணர்த்தி வரைவிற்கு வழி செய்து மீண்டாள்.

“நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அல்லலைக்
கடல்பாடு அழிய இனமீன் முகந்து.
துணைபுணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி


5. உப்பு ஒய் உமணர் அருந்துறை போக்கும்
ஒழுகை நோன்பகடு ஒப்பக் குழீஇ
அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப்
பெருங்களம் தொகுத்த உழவர் போல
இரந்தோர் வறுங்கலம் மல்கவீசிப்

10. பாடுபல அமைத்துக் கொள்ளை, சாற்றிக்
கோடுஉயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ? ஒருநாள்
மண்ணாமுத்தம் அரும்பிய புன்னைத்
தண்நறும் கானல் வந்து நும்

15. வண்ணம் எவனோ என்றனிர் செலினே?”

திணை : நெய்தல்

துறை தலைமகற்குத் தோழி வரைவு கடாயிக்
கூறியது.

புலவர் : முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்.

1. வலந்த; கட்டப்பெற்ற; குறுங்கண்; சிறிய சிறிய கண்கள்.

2. பாடு: பெருமை;

3. பரதமாக்கள்: நெய்தல் நிலத்து மீன் பிடிப்பவர்கள்;

4. துவன்ற; கூடி இருந்து;</poem>}}

5. ஒய்; கொண்டு சென்று விற்கும்; உமணர் உப்பு
வணிகர்;

6. ஒழுகை: வரிசையாகக் செல்லும்; நோன்பகடு:
கரிய எருதுகள்;

7. அயிர்; நுண்மணல்;

8. வாங்கி; இழுத்து;

9. வறுங்கலம்; பிச்சை எடுக்கும் கலம்; மல்க நிறைய;
வீசி: வழங்கி;

10. பாடு; பங்கு; கொள்ளை சாற்றி: விலைகூறிவிற்று;

11. கோடு; கரை;

12. துங்கும்: உறங்கும்;

13. மண்ணா முத்தம்; முத்துக்கள் போலும் அரும்புகள்;

14. வண்ணம்: நிறம்: எவனோ: எந்நிலையில் உளது.

உள்ளுறை : கடலில் வாழும் மீனை நுளையர் அதனின்றும் வெளிப்படுத்தி, உயிர்போக்கி, கண்டவர்க்கெல்லாம் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, பின்பு உயிர்க் கொன புரிந்துவிட்டோமே என்னும் இரக்கம் இன்றி மணல் மேட்டில் உறங்கினாற்போல், பெருங்குலத்தில் பிறந்த இவளை நீ நும் வசமாக நீக்கி வருந்தி, வேறுபாடுகண்டு எல்லோரும் இவளைச் சூழ்ந்து கொள்ளுமாறு அலராக்கிப் பின்பு அத்தகைய நினைவேதும் இன்றி உன் ஊரில் உறங்கு கின்றாய் எனக்கூறியதாக உள்ளுறை கொள்க.