என் தமிழ்ப்பணி/பொதுவறு சிறப்பின் புகார்

விக்கிமூலம் இலிருந்து
பொதுவறு சிறப்பின் புகார்

பூம்புகார் எனும் தொடர் அழகிய புகார் நகரம் எனப் பொருள்படும். புகார் எனும் பெயர், பொதுவாகத் துறைமுக நகரங்களைக் குறிக்கும் என்றாலும், அது சிறப்பாகக் காவிரிப்பூம்பட்டினத்தை மட்டுமே குறிக்க வழங்கும். புகார் எனும் பெயர், அது கடற்கரையைச் சேர்ந்த ஒரு நகரம் என்பதை மட்டுமே உணர்த்தும். காவிரிப்பூம்பட்டிளம் எனும் அதன் பிறிதொரு பெயர், அது இருந்த இடம் இஃது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கும். பட்டினம் எனும் பெயர், புகார் என்பதை போன்றே, கடற்கரை ஊர்களை' உணர்த்தும் பொதுப்பெயராம்; நாகப்பட்டினம் காயல்பட்டினம், அதிராம் பட்டினம் என்ற பெயர்களை நோக்குக; அப்பெயரின் முன் இணையாக வந்துள்ள காவிரிப்பூம் என்ற தொடர், ஈண்டுக் குறிப்பிடும் பட்டினம், காவிரி கரையில் அமைந்துள்ள, அழகிய நகராகும் என்பதையும் உணர்த்தும்; ஆகவே, காவிரி கடலோடு கலக்குமிடத்தில் அமைந்த அழகிய நகரே, காவிரிப்பூம்பட்டினம் என்பதை, அத்தொடர் தெளிவாக உணர்த்தியவாறு உணர்க,

இமயம் முதல் குமரி வரையுள்ள நாவலந்தீவின் காவற் கடவுளாகிய சம்பாபதி என்பவள், புகார் நகரில் தங்கித் தன் தொழிலாற்றியிருந்தனளாதலின், அப்புகார், பண்டு சம்பாபதி எனும் பெயர் பூண்டிருந்தது அது, அந்நகரை அடுத்துக் காவிரியாறு பாயத் தொடங்கிய காலம் தொட்டுக் காவிரிப்பூம்பட்டினம் எனும் பெயர் பெற்றது. பரசுராமன் சினத்திற்கு ஆளாகாமல் தப்பிப் பிழைத்த, ஒரே அரசனாகிய ககந்தன் என்பவன் ஒரு காலத்தில், புகார் நகரில் இருந்து அரசாண்டானாதலின், அந் நகர்க்குக் காகந்தி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

மேலைநாட்டு வணிக மக்களும், உலகை வலம் வந்த பெரியார்களும், காவிரிப்பூம்பட்டினத்தைக், கி.பி. முதல் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தனர். கி.பி. 81-96ல் எழுதப்பெற்ற “பெரிபுளூஸ் மாரிஸ் எரித்ரியா” நூலில் கொற்கைத் துறைக்கு வடக்கில், ‘கடற்கரை நாடு’ என்ற கடலைச்சார்ந்த நாடு ஒன்றும், ‘அர்கரு’ என்ற உள்நாடு ஒன்றும் இருந்தனவாகக் கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும், முறையே, கடற்கரை ஊராகிய புகாரையும், உள்நாட்டு ஊராகிய உறையூரையும் தலைநகர்களாகக் கொண்டு விளங்கிய இரு சோழ அரசுகளையே குறிப்பனவாம்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தாலமி என்ற நில நூல் பேராசிரியர், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் “கபெரீஸ்” எனும் ஓர் ஊர் உளது எனக் கூறியுள்ளார்; அவர் கூறிய ஊர் புகாரே என்பதில் சிறிதும் ஐயமில்லை. கி.பி. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதப்பட்ட, “மிலிந்தா அரசனுடைய கேள்விகள்” என்ற பெளத்த நூல், “கடற்கரை நகரங்களுள் சிறந்தது கோளப்பட்டினம்” என்று கூறுகிறது. அது கூறும் கோளப்பட்டினம், சோழர் கடற்கரை நகராகிய புகார் நகரேயாம் எனக் கூறவும் வேண்டுமோ?

புகார், பழமையும் பெருமையும் மிக்க ஒரு மாநகர்: அது, இமயத்தோடும், பொதியத்தோடும் தோன்றிய பழமை வாய்ந்தது; தன்னை என்றும் பிரியாது, தன்னகத்தே வழி வழி வாழ்ந்த பழம்பெரும் குடிகளைக்கொண்டது; வேந்தனும் விழையும் பெருவளம் மிக்க வணிக மக்களின் வாழ் விடமாயது. வறுமையால் வாடித் தன்னை வந்தடையும் உலக மக்கள் அனைவர்க்கும் வழங்கினும் வற்றாப் பெருவளம் உடையது. இவை அனைத்திற்கும் மேலாக, ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களைப் பெற்றது.

'இவ்வாறு ஒரு நல்ல நகருக்கு உரிய சிறப்புக்களில் ஒன்றையும்விடாது, அனைத்தையும் தனக்கே உரியவாகப் பெற்ற புகார் நகரின் அருமை பெருமை அறிந்த பெரியோர்கள், “புகார், பழம் பெருங்காலத்தே தோன்றிப் பாரெலாம் போற்றி வாழ்கிறது.” என வாயாரப்பாராட்டுவரேயல்லால், “அது ஒரு காலத்தே பாழாம் எனக் கூறார்” எனப்பாடிப் பாராட்டியுள்ளார் சிலம்பு அளித்த சேரர்குல் இளங்கோ.3

காவிரியின் வடகரையில் விளங்கிய புகார், மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இருகூறாப் பிரிந்திருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த பகுதி மருவூர்ப்பாக்கம். அதற்கு, மேற்கில் இருந்தது பட்டினப்பாக்கம்; முன்னதைப் புகாரின் புறநகராகவும், பின்னதை இதன் அகநகராகவும் கொள்ளின் பொருந்தும். வாணிகம் புரிந்து பொருள் ஈட்டி வாழும் மத்திய வகுப்பாரும், மெய்வருந்தும் தொழில் புரிந்து வயிறு வளர்க்கும் பிற்பட்ட வகுப்பாரும் குற்றேவல் புரியும். தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் வாழும் இடம் மருவூர்ப் பாக்கம்: அரசனும், அமைச்சர் முதலாம் அரசியல் துணை வரும், மன்ன்னும் மதிக்கத்தக்க மாநிதிச் செல்வரும் ஆகிய உயர் வகுப்பார் வாழும் இடம் பட்டினம்பாக்கம்.4

மருவூர்ப் பாக்கத்துத் துறைமுகம், பாய்மரக் கம்பத்தில் நாட்டிய தத்தம் நாட்டுக் கொடிகள் காற்றில் அசைய, கட்டிய கட்டுத்தறிகளும் நிலை குலைந்து பேர்மாறு ஒயாது ஆடிக்கொண்டேயிருக்கும் களிறுகள்போல், அலைகளால் அலைப்புண்டு நிற்கும் நாவாய்களால் நிறைந்திருக்கும்.5

கரையில் கடலை ஒட்டினாற்போல், வானுலகைத் தாங்கும் கம்பம்போல், ஏணிக் கெட்டா உயர்வுடையவாய்க் கல்லும் சுண்ணாம்பும் கொண்டு கட்டப் பெற்று கூரையிட்டு வேயாத மாடத்தின் மீது, கலங்கரை விளக்குப் பொறுத்தப் பெற்றிருக்கும்; கடல் கடந்த நாடுகளிலிருந்து, கலங்கள் வழியாக வந்து இறங்கிய பண்டங்களும், கலங்களில் ஏற்றி வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று வணிகம் புரிய வந்து குவிந்த பண்டங்களும், வரிசை வரிசையாக வகைப்படுத்தி வைத்திருக்கும் பண்டசாலைகள், கலங்கரை விளக்க வேயா மாடத்தை அடுத்துக் கட்டப்பெற்றிருக்கும். பண்டசாலைகளுக்குப் பக்கத்தில் ஆயத்துறைகள் அமைந்திருக்கும். மான்கண் போலும், அழகிய சிறு சிறு கோணங்களைக் கொண்ட சாளரங்கள் வைத்துக் கட்டிய மாளிகைகளில் வாழும் அவ்வாயத்துறை அலுவலாளர். ஆங்குக் குவிந்து கிடக்கும் பண்டப் பொதிகளுக்கு உரிய சுங்கங்களைத் தண்டியும், சங்கம் இறுத்த பொதிகள் மீது, தம் அரசர்க்குரிய புலி இலச்சினையைப் பொறித்தும், புலி இலச்சினை பொறித்த பொதிகளை, ஆயத்துறைகளை அடுத்திருக்கும் உயர்ந்த மேடைகள் மீது போர் போல் குவித்து வைத்தும், இரவு பகல் ஓயாமல் பணியாற்றிக் கிடப்பர்.6

துறைமுகத்தைக் கடந்து, கரைநோக்கிச் சிறிது தூரம் சென்றால், ஆங்கே கடல் வாணிகத்தால் வளம் மிகுந்து செல்லும் விருப்பம் உடையராய் வந்து வாழும் வெளிநாட்டு வணிக மக்களின் வாழிடத்தைக் காணலாம். ஆங்கு வாழ்வார். ஒரே நாட்டிலிருந்து வாராது, வேறு பல நாடுகளிலிருந்து வந்தவரேயாயினும், ஒரு நாட்டு மக்கள் போல் உள்ளம் கலந்து வாழ்வர். நம் நாட்டு மக்களால், யவனர் என அழைக்கப்பெறும், அவ்வெளிநாட்டு மக்களின் வாழிடம், வளம் பல நிறைந்தது. அவ்வளத்தை ஒரு முறை கண்டார், அவ்விடத்தை விடுத்து வேறிடம் செல்ல விரும்பார், அத்துணை வளம் மிக்கது, அவ்வெளிநாட்டார் வாழிடம்.7

யவனர் வாழிடத்தை விடுத்து, அகநகர் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தால் பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆடைகள் நெய்து அளிக்கும் நெசவாளரும் நெல் முதலாம் உணவுப் பொருள்களைக் குவியல் குவியல்களாகக் கொட்டிவிற்கும் கூல வணிகரும், பிட்டு, அப்பம், மது, மீன், வெள்ளுப்பு: வெற்றிலை, இறைச்சி ஆகிய பொருள்களில் வாணிகம் புரிவோரும், கருங்கைக் கொல்லர், வெண்கலக் கன்னார், செம்பு செய்குநர், பொன்செய் கொல்லர், மட்கலம் வனைவார், மரத்தொழில் புரிவார், ஓவியக்காரர், தையல் தொழிலாளர் முதலாய பல்வகைத் தொழிலாளரும், பாணர், குழலர் முதலாம் இசையாளரும், குற்றேவல் புரிவோரும் வாழும் வீதிகளை வரிசையாகக் காணலாம்.8

மேலே கூறிய வீதிகள், இருபக்கத்திலும் வரிசை வரிசையாகப் பிரிந்து கிடக்க, இடையே நீண்ட பெருவீதியொன்று, அகநகரையும், ஆயத்துறையையும் இணைத்துச் செல்லும். நாவாய்கள் கொண்டு வந்து தந்தனவற்றை, நகரின் நடுவே அமைந்திருக்கும் நாளங்காடிக்குக் கொண்டு வரவும், நாவாய்க்கு ஏற்றவேண்டுவனவற்றை, அந்நாளங்காடியிலிருந்து கொண்டு செல்லவும் அப்பெரிய வீதி பயன்பட்டது.9

போக்குவரவு மிக்க அவ்வீதியில், மக்கள்.மண்டிக் கிடப்பர் ஆதலின், அவ்வீதியில், வண்ணக்குழம்பு, சுண்ணப் பொடி, நறுமணச் சந்தனம், மலர், மணம் நாறும் புகைதரு பொருள்கள் போலும், நாகரீக நம்பியரும், நங்கையரும் விரும்பி வாங்கும் பொருள்களை விற்கும் சிறு வணிகர் கூட்டம் திரிந்து திரிந்து வாணிகம் புரியும்.10

மருவூர்ப்பாக்கத்தை விட்டால் வருவது நாளங்காடி; எதிர் எதிராக நிற்கும் இரு படைவீரர்களும் ஒன்று கலந்து போரிடும் இடை நிலம் போல, மருவூர்ப் பாக்கத்து மக்களும் பட்டினப் பாக்கத்து மக்களும் வந்து, தத்தமக்கு வேண்டும் பொருள்களை வாங்கிச் செல்ல வாய்ப்பளிக்கும் வண்ணம், நாளங்காடி இருபகுதிக்கும் இடையே அமைந்திருந்தது; மரங்கள் நெருங்க வளர்ந்த ஒரு பெரிய தோப்பினிடையே அமைந்த அந்நாளங்காடியில், கடைகல், அம்மரங்களையே தூண்களாகக் கொண்டு, கட்டபெற்றிருக்கும். பொருள்களை வாங்குவோரும்; விற்போரும் எழுப்பும் பேரொலி, அங்கு எக்காலத்தும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.11

கடை விதிகளில்,கடல் கடந்த நாடுகளியிருந்து கலங்கள் ஏற்றிக் கொணர்ந்த விரைந்து ஓடவல்ல குதிரைகளும், கரியர் மிளகுப் பொதிகளும். வடநாட்டு மலைபடு பொருள்களாய பொன்னும் மணியும், பொதிய மலையில் விளையும். அகிலும் ஆரமும், பாண்டி நாட்டுக் கடலில் மூழ்கி எடுத்த முத்தும் சோணாட்டுக் கடலில் கிடைக்கும் பவளமும், கங்கைச் சமவெளியினின்றும் வந்த யானை முதலாயனவும் காவிரியாற்றுப் பாய்ச்சலால் விளையும் பல்வகைப் பொருளும், ஈழநாட்டினின்றும் வந்த உணவுப் பொருளும், பர்மா என வழங்கும் கடாரத்தினின்றும் வந்த கணக்கற்ற பொருளும், அளவு அறியமாட்டாமல் நிறைந்து வளம் மிகுந்து கிடக்கும்.12

மகதச் சிற்பரும், மராட்டக் கொல்லரும், யவனத் தச்சரும், கூடிக் கண்ணை கவரும் வனப்புடன் அமைத்த அரசன் பெருங்கோயில் இருப்பது பட்டினப்பாக்கம்; பெரு வாணிகத் தெருவும், மன்னரும் விழையும் மாநிதி படைத்த வாணிகப் பெருமக்களின் மாட மாளிகைகள் நிறைந்த நெடிய வீதியும், வேதம் வல்லமறைவோரும். வேள்குடிவத்தோரும் வாழும் வீதிகளும், அரண்மனையைச் சூழ் அமைந்திருந்தன. மருத்துவரும், நாளறிந்து கூறும் கணியரும் தனித்தனியே வாழும் வீதிகளும், முத்துக் கோப்போர், வளையல் அறுப்போர் நாழிகைக் கணக்கர், காவற்கணிகையர், நாடகமகளிர், நகை வேழம்பர் முதலானோர் வாழும் வீதிகளும் ஆண்டே; கடும்பரி கடவுநர் களிற்றின்பாகர், நெடுந்தேர் ஊருநர், கடுங்கண் மறவர் என்ற நாற்படை வீரர்கள் வாழும் வீதிகள் அரண்மனைக்கு அணித்தாகவே அமைந்திருந்தன.13

வடவேங்கடம் தென்குமரிகட்கு இடைப்பட்ட தமிழகம் முழுவதையும் தன் ஆணைக்கீழ்க் கொண்டு வந்து அடக்கிய பின்னர், கரிகாலன், வடநாடுநோக்கிச் சென்றான் ; சென்றானை இமயம் இடைநின்று தடுத்துவிட்டது. அதனால் சினங்கொண்ட சோழன் அதன் உச்சியில் தன் புலி இலச்சினை பொறித்து மீண்டான்; மீளுங்கால் வச்சிர நாட்டு வேந்தன் முத்துப் பந்தலும், மகத நாட்டு மன்னன் பட்டிமண்டபமும் அவந்தி நாட்டு அரசன் தோரணவாயிலும் அளித்து அவனுக்கு நண்பராயினர்; கரிகாலன் ஆங்குப்பெற்ற அவ்வெற்றிச் சின்னங்கள், காவிரிப் பூம்பட்டினத்திற்குச் சிறப்பளித்து நின்றன.14

புகார் நகருக்கு வரும் புதியோர், பொருளின் பெயரும் பொருளுக்கு உரியோர் பெயரும், அப்பொருளின் அளவும் நிறையும் பொறித்துக் கொணர்ந்த பண்டப் பொதிகள்; அவர்கள் ஊர்ப் பொதுவிடத்தே தங்குவதால் காப்பாரற்றுக் கிடப்பக்காணும் கள்வர், அவற்றைக் கவர்ந்து கொண்டால் அவரைக் களவும் கையுமாய்ப் பிடித்துக், களவாடிய பண்டப் பொதிகளை அவர் தலையில் ஏற்றி, நகர் மக்கள் கண்டு நகையாடி வெறுக்குமாறு, நகர வீதியில் வலம். வரப்பண்ணி களவினைக் கனவிலும் கருதாக் கருத்துடையராக்கி அனுப்பும் உயர்நீதி மன்றம் ஒன்றும் அப்புகார் நகரில் இருந்தது.15

தன்நீரில் படித்து மூழ்கித் தன்னை வலம்வரும், கூனர் குறுகிய வடிவினர், ஊமர், செவிடர், தொழுநோயாளர் முதலாம் ‘கொடிய நோயாளர்களின் நோய் போக்கி’ நல்லுடல் அளிக்கும் மருத்துவ மாண்பு மிக்க பொய்கையை உள்ளடக்கி நின்ற உயர்ந்த மன்றம் ஒன்றும் ஆங்கிருந்தது.16

பகைவரால் வஞ்சிக்கப்பட்டு மயக்க மருந்து ஊட்டப் பெற்றவரும், நஞ்சுண்டு உயிர்போகும் நிவையுற்றோரும் பாம்பின் வாய்ப்பட்டோரும், பேயால் பற்றப்பட்டோரும், வந்து தன்னை வலம்வர, அவர்மீது தன் நிழல்பட்ட அப்போதே அவர் துயர்போக்கி வாழ்வளிக்கவல்ல ஒளியை வீசும் ஒருவகைக்கல் நாட்டப் பெற்ற மன்றம் அந்நகருக்கு மாண்பளித்திருந்தது.17

தவநெறியுடையோர்போல் வெளிவேடம் தாங்கிப் பிறர் காணாவாறு பழிபாவம் புரியும் ஒமுக்கநெறி இகந்தோர், கணவன் அறியாவாறு கற்பிழக்கும் காரிகையர், அரசரோடு உடன் வாழ்ந்தே, அவர்க்கு அவர் அறியாவாறு அழிவுதேடும் அமைச்சர், மணந்த மனைவியை மறந்து, பிறர் மனைவியரின் பின் திரிவோர், மன்றில் பொய்ச்சான்று கூறுவார், ஒருவரைக் கண்டவிடத்துப் புகழ்ந்து, காணா விடத்துப் பழிக்கும் புறங்கூறுவார் போன்ற கொடியோர்களை கைப்பாசத்தால் கட்டி ஈர்த்துக்கொன்று உயிர் போக்குவேன் என, நகரில் நான்கு எல்லையும் கேட்டுமாறு உரத்துக்கூறி, கூறியதோடு நில்லாது அத்தகையாரைப் பற்றி ஒறுத்து அறம் காக்கும் காவல் பூதம் நிற்கும் மன்றம் புகார் நகருக்குப் பெருமையளித்திருந்தது.18

ஆளும் முறையை அரசர் மறந்தால், அறநூல் கூறும் நெறிமுறை விடுத்து, ஒருதலை தீர்ப்பளிக்க, அறம் வழங்கும் ஆன்றோர்கள் துணிந்தால், நாட்டில் நிகழும் அக்கேடுகளை நாவால் எடுத்துக்கூறாது, கண்ணிர் வடித்துக் கலங்கிக் காட்டும் பாவையைக் கொண்ட பாவை மன்றம், புகார் நகரின் வாழ்விற்கு அருந்துணை அளித்தது.19

புகார் நகரில், காவிரி கடலோடு கலக்குமிடத்தில் சோமகுண்டம், சூரியகுண்டம் எனப் பெயர் பூண்ட இரு பொய்கைகள் இருந்தன; அவற்றில் மூழ்கி, அவற்றின் கரைக்கண் இருந்த காமவேள் கோட்டத்துக் கடவுளை வணங்கினால் மகளிர், கணவரைப் பிரியாது வாழும் பெருவாழ்வை இம்மையில் பெற்று, மறுமையில், போக பூமியில் அவரோடு பிறந்து பேரின்பம் நுகர்வர்.20

பூத்து மணம் பரப்பும் தொழில்களால் பொலிவு பெற்றது புகார். மன்னர்க்கு ஏற்றனவும் மக்களுக்கு ஏற்றனவும், மாதவர்க்கு ஏற்றனவும் ஆகிய பூஞ்சோலைகள் பல புகார் நகரில் இடம் பெற்றிருந்தன. வடிவாலும், வண்ணத்தாலும், வாசனையாலும், வேறுபட்ட வகை வகையான மலர் மரங்களைக் கொண்ட இலவந்திகைச் சோலை, அவற்றுள் ஒன்று; அதனிடையே அழகிய பொய்கை ஒன்றும் இருந்தது. அப்பொய்கையில் வேண்டுமளவு நீரை வேண்டும் பொழுது நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறி பொறுத்தப் பெற்றிருந்தது. அத்தகைய மாண்புமிக்க அம்மலர்ச் சோலையில் மன்னர் மட்டுமே மகிழ்ந்து வாழ்வர்.21

உவவனம் என்பது புகாரில் இருந்த மற்றொரு பூஞ்சோலை; மக்கள் செல்லும் உரிமை வாய்ந்தது அம்மலர்ச் சோலை. பளிங்கால் ஆன அழகிய மண்டபம் ஒன்று அதன் இடையே இருந்தது. அகத்தே இருப்போரின் வடிவைப் புறத்தே புலப்படுத்தும் அது, ஆங்கு அவர் எழுப்பும் ஒலியை, ஒரு சிறிதும் புறம்போகவிடாது அடக்கிக் கொள்ளவல்லது. அம்மண்டபத்தின் இடையில் புத்தன் பாதம் பொறித்த தாமரைப்பீடம் ஒன்றை அமைத்திருந்தனர். அப்பீடத்தில் இட்ட அரும்புகள், இட்டவுடனே மலர்ந்து மணம் வீசும்; மலர்கள் வாடா, தேனுண்ணும் வண்டு, அம்மலரை மொய்க்காது; அத்துணை அருமை வாய்ந்தது அப்பூஞ்சோலை.22 

உய்யானம் எனும் பெயர் பூண்ட, பூதக்காவல் பெற்ற பூஞ்சோலையும், சடாயு எனும் பறவை அரசன் பிறந்த சம்பாதியின் நினைவாகவும்; காவிரியாறு தோன்றத் துணைபுரிந்த கவேரன் எனும் முனிவன் நினைவாகவும் வளர்த்த சம்பாதிவனம், கவேரவனம் என்ற பூஞ்சோலை களும், புகார் நகருக்கு பெருமையளித்திருந்தன.23

புகார், பலவகைச் சமய மக்களும் கலந்து வாழ்ந்த ஒரு பேரூர்; இதனால் ஆங்கு பல்வேறு சமயச் சார்பான கோயில்கள் சிறப்புற அமைந்திருந்தன: சிவன், திருமால், முருகன், பலராமன், இந்திரன், அவனுக்குரிய வச்சிராயுதம், வெள்ளை யானை அவன் நாட்டுக் கற்பகத் தரு, ஞாயிறு, திங்கள். ஐயன், அருகன் ஆகிய அனைவருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தார் கோயில்கட்டி விழாச் செய்தனர்.24

சக்கரவாளக்கோட்டம் என்ற சிறப்புப் பெயரிட்டு அழைக்கப்புெறும், புகார் நகரத்துப் புறங்காடு, பழக்க வழக்கங்களால் வேறுபட்ட பல இனத்து மக்களுக்கும் ஏற்றவாறு அமைந்திருந்தது. அப்புறங்காடு, அந்நகர் வாழ் மக்களின் நாகரீக வளர்ச்சிக்கேற்பு வாய்ப்பும் வனப்பும் பொருந்தியிருந்தது.25

மழை வளம் குறையாப் பெரிய மலையில் தோன்றி, வெள்ளம் பெருக்கெடுத்தோடப் பாய்ந்து வரும் பெரிய பெரிய ஆறுகள்போல், உலக மக்களெல்லாம், ஒருங்கே விரைந்து நுழையவல்ல உயர்வும் அகலமும் உடைய, புகார் நகரத்துப் புறவாயில்கள். அவற்றுள், காவிரியாற்றுக்குக் கொண்டு விடும் மேற்றிசை வாயிலுக்குப் போகும் வழியின் இரு மருங்கும், நிழல் தரு மரங்களை வரிசையாக வளர்த்திருந்தனர்.26

காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையின் மாலைக் காட்சி மனம் நிறையும் மகிழ்ச்சிதரும் மாண்புடையதாகும். கடல் கடந்த நாடுகளினின்றும் வந்து வாழும் வணிக மக்கள் கடற்கரை மணல்மீது, வகை வகையான பொருள்களை வரிசை வரிசையாக பரப்பி வைத்து, விலையை வாயாற்கூறாது, எல்லோரும் காண எழுதி வைத்து வாணிகம் புரிந்திருப்பர்.

அக்கடற்கரையில், மாலைக் காலத்தில் ஏற்றும் விளக்குகளை எண்ணிக் காணல் எவர்க்கும் இயலாது; சுண்ணம் முதலாம் வாசனைப் பொருள்களை விற்பவர் ஏற்றிய விளக்குகளும், பொற் கொல்லர் முதலாம் பல்வேறு தொழிலாளர்கள், தங்கள் தங்கள் தொழில் நிலையங்களில் ஏற்றிய விளக்குகளும், அப்ப வணிகரும், பிட்டு வணிகரும் குடத் தண்டுகள் மீது ஏற்றி வைத்த விளக்குகளும், பல்வகைப் பண்டங்களையும் விலை கூறி விற்கும் மகளிர், தம் கடைகளில் ஏற்றிய விளக்குகளும், கரையில் இருந்தவாறே,கடலில் செல்லும் கலன்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கும், கடல் மேல் சென்று மீன் பிடித்து வாழும் பரதவர், தாம் ஏறிச் செல்லும் திமில்களில் ஏற்றிய விளக்குகளும், வெளிநாட்டு மக்கள், தம் மாடங்களில் ஏற்றிய மணிவிளக்குகளும், பண்டப் பொதிகளை காத்துக் கிடக்கும் காவலர், அப்பண்டப் பொதிகளை சுற்றி ஏற்றி வைத்த விளக்குகளும் ஒன்று கூடி, கடற்கரை வெண்மணலில் வீழ்ந்த வெண்சிறு கடுகையும் எளிதில் எடுக்கவல்ல பேரொளி வீசிக் காவிரிப் பூம்பட்டினத்துக் கடற்கரையைக் கண்ணொளிகெடுக்கும் ஒளியுடையதாக்கிக் கவின் அளிக்கும்.27

ஆன்றோர் உண்மையால் அழியாது எனப் பாராட்டப் பெற்ற புகார் அழிந்து விட்டது. “என்னை குறித்து எடுக்கும் விழாவைப், புகார்நகர் மக்கள் என்று மறுக்கின்றனரோ, அன்றே அந்நகர் அழியும்” என்று இந்திரன் ஒரு சாபம் அளித்திருந்தான். கடல் கடந்த நாட்டில் பிறந்து, கலம் ஏறித் தன்னை நோக்கி வந்த தன் மகன் இடைவழியில் கலம் கவிழக் கடலில் வீழ்ந்து காணாது போயினன் என அறிந்த புகார் நகர் வேந்தன் வடிவேற் கிள்ளி, வருத்த மிகுதியால் விழா வெடுக்காது விடுத்தனாகப் புகாரைக் கடல் விழுங்கிற்று.28 இந்திர சாபம் உண்டோ, இல்லையோ புகார் இன்று இல்லை. அன்று புகார் இருந்த இடத்தில் இன்று, கடல் தன் ஆட்கி செலுத்துகிறது. புகார் மறைந்த மாநகரமாகி விட்டது.


சான்றெண் விளக்கம்

1. சம்பு என்பாள் சம்பாபதியினள்
செங்கதிர்ச் செல்வன்,திருக்குளம் விளக்கும்
கஞ்ச வேட்கையின் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
காகம் கவிழ்த்த காவிரிப்பாவை .....
என் பெயர்ப்படுத்த இவ்விரும்பெயர் மூதூர்
நின்பெயர்ப்படுத்தேன் நீவாழிய என”

-மணிமேகலை : பதிகம்:8-31

2. “சுகந்தன் காத்தல் காகந்தி என்றே
இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டு”

-மணி :22: 37-38.

3. “பொதியிலாயினும், இமயமாயினும்,
பதியெழுவு அறியாப் பழங்குடி கெழீஇய”

- சிலம்பு; 1 : 14-19


4. “பொதுவறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்,
முடிந்த கேள்வி முழுதுணர்ந்தோரே”

-சிலம்பு : 1:16-19

“உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர்மலிந்த பயங்கெழு மாநகர்,
முழுங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவாஅ வளத்தது”

-சிலம்பு : 2 : 1-4

5. “வெளில் இளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்றிருக்கை
மிசைக்கூம்பின் அசைக்கொடி”

-பட்டினப்பாலை:172–175

6. வேயாமாடமும், வியன்கல இருக்கையும்,
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்”

-சிலம்பு 5:7-8

“நல் இறைவன் பொருள் காக்கும்
தொல் இசைத் தொழில் மாக்கள்...
வைகல்தொறும் ஆசைவு இன்றி
உல்குசெய...........
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும்
அளந் தறியாப் பல பண்டம்
வரம் பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங் காப்பின்

வலியுடைவல் அணங்கின் நோன்
புலி பொறித்துப் புறம் போக்கி
மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடைப் போர்”

–பட்டினப்பாலை 120-137

7. “கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன் அறவு அறியா யவனர் இருக்கையும்
கலம்தரு திருவின் புலம் பெயர் மாக்கள்
கலந்திருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்”

-சிலம்பு 5:9.12

8. -சிலம்பு ; 5:16-39

9. மகர வாரி வளம் தந்து ஓங்கிய

நகரவீதி”
-சிலம்பு 6:128-129

10. “வண்ணமும் சுண்ணமும் தன் நறும் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர் வளர் திரிதரும் நகரவீதி”

-சிலம்பு 5:43-15

11. “இரு பெரு வேந்தர் முனையிடம் போல
இருபாற் பகுதியின் இடைநிலமாகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலை
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கின்றி நிலை இய நாளங்காடி”

-சிலம்பு 5:59-63


12. “நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின்வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்,
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலை மயங்கிய தினந்தலை மறுகு”

-பட்டினப்பாலை 185-193

13. -சிலம்பு : 5.40-58

14. “மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்
மகத நன்னாட்டு வாள்வாய் வேந்தன்
பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவத்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
நிவந்தோங்கு மரபின் தோரண வாயிலும்”

-சிலம்பு 4:5:99-104.

15. வம்பமாக்கள் தம் பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த, எண்ணுப் பல் பொதிக்
கடைமுக வாயிலும் கருத்தாழ்க் காவலும்
உடையோர் காவலும் ஒர் இயவாகிக்
கட்போர் உளர்எனின், கடுப்பத் தலை ஏற்றிக்
கொட்பினல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றம்”

-சிலம்பு : 5:111-117

16. “கூனும் குறளும் ஊமும் செவிடும்
அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப்
பழுதில் காட்சி நன்நிறம் பெற்று
வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றம்”

சிலம்பு : 5:118-121

17. வஞ்சம் உண்டு மயற்பகை உற்றோர்,
நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்:
அமுல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்.
கழல் கண் கூளிக் கடுநவைப் பட்டோர்
சுழல வந்து தொழத் துயர்நீங்கும்
நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றம்”

சிலம்பு : 5:122-127

18. “தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்,
அவம் மறைத்து ஒழுகும் அலவற் பெண்டிர்,
அறைபோகு அமைச்சர், பிறர் மனை நயப்போர்
பொய்க் கரியாளர், புறங் கூற்றாளர் என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்
காதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்
பூதம் புடைத்துணும் பூதசதுக்கம்”

சிலம்பு : 5:128-134

19. “அரைசு கோல் கோடினும், அறம்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்
நாவொடு நவிலாது, நவைநீர் உகுத்துப்
பாவைநின்று அழுடம் பாவை மன்றம்”

சிலம்பு : 5:135-138

20. “கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
மடல் அவிழ் நெய்தலங்கானல் தடம்உள

சோம குண்டம், சூரிய குண்டம், துறைமுழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியிலும் போய்ப் பிறப்பர்”

-சிலம்பு ; 9 : 57-62

21. “உயர் கோட்டத்து.
முருகு அமர்பூ முரன்கிடக்கை
வரியணி சுடர் வான் பொய்கை
இருகாமத்து இனை ஏரி”

பட்டினப் பாலை :36-39

“மலய மாருதம் மன்னர்க்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன் மரப்பந்தர்
இலவந்திகை”

சிலம்பு :10; 29-31

22. “இலவந்திகையின் எயிற்புறம் போகின்,
உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்.

மணி : 3:45-46

“உவவனம் என்பது ஒன்று உண்டு; அதன் உள்ளது
விளிப்பு அறை போகாது, மெய்புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு; அதன் உள்ளது
தூநிற மாமணிச் சுட்ரொளி விரிந்த
தாமரைப் பீடிகை தாமுண்டு; ஆங்கு இடில்
அரும்பு அவிழ்செய்யும்; மலர்ந்தன வாடா;
சுரும்பினம் மூசா”

மணி : 3; 62-68

23. மணி :3:49-53 24. சிலம்பு : 5:169-172; 9:9-13

25. மணி : 6:37-202.

26. சிலம்பு 10:26-27;32-33

27. “.......................................விளக்கமும்
எண்ணும் வரம்பு அறிய இயைந்து ஒருங்கு

ஈண்டி

இடிக்கலப்பு அன்ன ஈர்அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய”

-சிலம்பு : 6:144-141

28. “மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்
தன் மணிஇழந்த நாகம் போன்று
கானலும் கடலும் கரையும் தேர்வுழி
வானவன் விழாக்கொள் மாநகர் ஒழிந்தது;
மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்
அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென
விட்டவள் சாபம்; பட்டது இதுவால்”

மணி: 25: 194-200








குறிப்பு:–

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றம் பேரவைத் தலைவராக, எனப் பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர்,

புலவர். கா. கோவிந்தனார் அவர்கள்,

“தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்று, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதினத்தாரின் “புலவரேறு” பட்டம், தமிழக அரசின் “திரு. வி. க. விருது”, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் “தமிழ்ப்பேரவைச் செம்மல்.” பட்டம் போன்ற சிறப்புகளையும் பெற்ற புலவர் அவர்களின் தமிழ்ப்பணி பொன்விழாக் கண்ட பெருமையினையுடையது.

ISBN- 81-85703–16-7