என் பார்வையில் கலைஞர்/கலைஞர், மூப்பனார் ஒரு தமிழர் இலக்கணம்

விக்கிமூலம் இலிருந்து
கலைஞர்-மூப்பனார்
ஒரு
தமிழர் இலக்கணம்


இரண்டாயிரம் ஆண்டில் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கலைஞரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எனது மகன் சிவகுமாரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக வழக்கம் போல் சண்முகநாதன் மூலமாக கலைஞரைச் சந்தித்தேன். கோவையில் நடைபெறும் திருமணத்திற்கு கலைஞரால் வரமுடியாது என்றாலும், சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கு, அவர் வந்தாக வேண்டும் என்றேன். ‘சார் என் மகளோட கல்யாணத்துக்கு நீங்க வரல. ஆனா இந்த கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்’ என்றேன் உரிமையோடு . உடனே ‘கலைஞர் உங்க மகளோட திருமண நாளுல எனக்கு இன்னொரு திருமண நிகழ்ச்சி இருந்தததை அப்பவே உங்ககிட்ட சொன்னேனே’ என்று பதிலளித்தார்.

நான் அசந்து போனேன். கலைஞர் அப்போது அப்படி சொன்னது அந்தச் சமயத்தில்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கு பிறகும் கலைஞர் அப்போது பேசியதை மறக்காமல் வைத்திருக்கிறார். பல்வறு அரசியல் சமூக நிகழ்வுகளை கூட முழுமையாக நினைவு படுத்த முடியாமல் பல தலைவர்கள் அல்லாடி இருப்பதை செய்தியாளன் என்ற முறையில் நான் பலதடவை பார்த்திருக்கிறேன். ஆனால், கலைஞரோ ஒரு சாதாரண விஷயத்தைக் கூட அதுவும் ஐந்தாண்டுக்கு முன்பு பேசியதை மனதில் பதிவு செய்திருப்பது கண்டு நான் பூரித்துப் போனேன் என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்ல ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால், உண்மை அதுதான்.

இந்தச் சந்திப்பின்போது, கலைஞருடன் பெரும்பாலும் அரசியல் நிகழ்வுகளையே பேசினேன். மேயர் ஸ்டாலினுக்கு மக்களிடையே பலத்த ஆதரவு இருப்பதையும், அவர் அல்லும் பகலும் குறிப்பாக தீவிபத்துக்ளின் போதும், தீராத மழையின் போதும் ஓடோடி உழைப்பதை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இப்போது போலவே அவர் எப்போதும் அடக்கி வாசிக்க வேண்டும் என்று கலைஞர் கேளாமலே ஒரு அறிவுரையை உதிர்த்தேன்.

ஒரு குறிப்பிட்ட சாதி, அவருக்கு வாக்களிக்காது என்கிற யதார்த்தத்தைச் மீண்டும் சுட்டிக்காட்டி, அந்த சாதியினைரை ஆற்றுப்படுத்தவும், அதற்கு எதிராக உள்ள சாதியை மென்மைப் படுத்தவும், கலைஞர் ஆவன செய்ய வேண்டும் என்றேன். சென்ற தடவை, நான் குறிப்பிட்ட அந்த சாதியினர், தன் பக்கம் நிற்பதாக குறிப்பிட்ட கலைஞர், இப்போது அவர்களது ஒட்டுமொத்தமான ஆதரவில், பத்து சதவீதம் குறைந்து இருப்பதாக குறிப்பிட்டார். இதுவும், அவர், அந்த சாதியினர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதே தவிர, யதார்த்ததை அல்ல என்பது எனக்குப் புரிந்தது. ஆனாலும், அவர் கருத்துக்கு எதிராக நான் பலமாக வாதாடவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தலுக்கு முன்பு, இந்த யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்வதும், அதற்கு ஏற்ப வியூகம் வகுப்பதும் தமிழகத்தின் ஒட்டுமொத்தமான நலனுக்கு உகந்தது.

எனக்கு சாதியில் நம்பிக்கை இல்லைதான். கலைஞரும் அப்படியே. அதேசமயம் தமிழகத்தில் தொற்று நோயாய் பரவிவரும் சாதிய அரசியலையும் புறக்கணிக்க முடியாது என்பதே என் கருத்து. சாதி வழியாக, சாதியத்தை கலைஞரால் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று நினைக்கிறேன்.

திருமண வரவேற்பு நாளில், கலைஞர் இரவு எட்டு மணி அளவில், ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்துக்கு வந்தார். ஏழு அமைச்சர்களை தன்னோடு கூட்டி வந்தார். இவர்களில் பலருக்கு, நான் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. எனக்கு அவர்களை ஏறிட்டுப் பார்க்கவே கூச்சமாக இருந்தது. குறிப்பாக மூத்த அமைச்சர்களான வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி அவர்கள் மேடைக்கு கலைஞரோடு வந்து இருந்தார்கள். கலைஞருக்கு வேண்டிய ஒருவர், தங்களுக்கும் வேண்டியவர் என்ற முறையில்தான் வந்திருப்பார்கள். அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, தமிழ்க் குடிமகன், பிச்சாண்டி ஆகியோர் எனக்கு நண்பர்கள். இவர்கள் வருவது இயல்பு ஆனால், நான் குறிப்பிட்ட அந்த இரண்டு மூத்த அமைச்சர்களும் அழைப்பிதழ் கிடைக்காததை மனதில் வைத்துக் கொண்டு கலைஞரிடமிருந்து அப்போதைக்கு நழுவிப் போகாமல், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தது ஒரு பெருந்தன்மையான செயல். அண்ணா, திமுகவை எப்படி குடும்பப் பாங்கில் வைத்திருந்தாரோ அப்படியே கலைஞரும் வைத்திருப்பதை கண்ணாரக் கண்டேன்.

இந்த விழாவிற்கு மூப்பனார், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்ற தலைவர்கள் வந்திருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியது இல்லை. மூப்பனார் அவர்கள் கூட்டத்தோடு அமர்ந்து இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். கலைஞர் மேடைக்கு வந்ததை அவர் கவனிக்கவில்லை. கலைஞர் வெளியே புறப்படும்போது யாரோ ஒருவர் மூப்பனார் வந்திருப்பதாக கலைஞரிடம் தெரிவித்தார். உடனே கலைஞர் திரும்பி நடந்து மூப்பனாரை நோக்கி ஓடாத குறையாக நடந்தார். இதற்குள் மூப்பனாரும் சேதி அறிந்து கலைஞரை நோக்கி ஓடி வந்தார்.

இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு அன்போடு அளவளாவினார்கள். இந்த நிகழ்ச்சியைத்தான் அனைத்துப் பத்திரிகைகளும் புகைப்பட சாட்சியாக செய்தியாக்கி இருந்தன. அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் சமூக, குடும்ப உறவு என்று வரும்போது தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கலைஞரும், மூப்பனாரும் கண்காட்சி போலவே தோன்றினார்கள். மற்ற தலைவர்களுக்கும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இங்கே சொல்லாமல் விடுவதே கட்டுரையின் தகுதிக்கு ஏற்புடையது.