என் பார்வையில் கலைஞர்/பொது சமுத்திரத்திற்குள் ஒரு புயல் வீச்சு
ஒரு
புயல்வீச்சு
கலைஞரை பலர் முன்னிலையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு 11.6.2000 அன்று ஏற்பட்டது.
முன்பு கலைஞரிடம் நான் சமர்ப்பித்த குறிப்பின் அடிப்படையில் தமிழக அரசு தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் என்ற அமைப்பை நிறுவியது. இதன் பொதுக்குழு உறுப்பினராக நானும் நியமிக்கப் பட்டிருந்தேன். இந்த அமைப்பிற்கு கலைஞர் முதல்வராக அல்ல, இலக்கியவாதி என்ற முறையில் தலைவராகப் பொறுப்பேற்றார். தமிழண்ணல் துணைத்தலைவர் முனைவர் நாகராஜன் அவர்கள் தனி அலுவலர். தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க் குடிமகன் அவர்கள் புரவலர். தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கலைஞர் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - நடைபெற்றது.
பொதுக் குழுவில் தமிழறிஞர்கள் சிலம்பொலி செல்லப்பன், ச.மெய்யப்பன், கா.பா.அறவாணன், சா.வே. சுப்பிரமணியன், ஆங்கில இலக்கிய வித்தகர் சு. செல்லப்பன், ‘காவ்யா’ சண்முக சுந்தரம், நாட்டுப்புற இயல் வித்தகர்களான பேராசிரியர்கள் லூர்து, கே.ஏ. குணசேகரன், எழுத்தாளர்கள் சாவி, கோவி. மணிசேகரன், சுஜாதா, நவீன நாடக விற்பன்னர் மு.ராமசாமி, வானொலித்துறை நிபுணர் மன்னர் மன்னன் உள்ளிட்ட பலர் பொதுக்குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டார்கள். இந்தக் குழுக் கூட்டத்தில் அப்போதைய நிதித்துறை செயலாளரும், எனது பல்லாண்டுகால நண்பருமான ராஜாராம் இ. ஆ. ப. அவர்களும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் எழுத்தாளர் ம. ராஜேந்திரனும் கலந்துக் கொண்டார்கள். மத்திய சாகித்திய அக்காதெமி சார்பில் அதன் செயலாளர் கவிஞர் சச்சினாந்தமும், சென்னை கிளையின் அப்போதையை தனி அதிகாரி கிருஷ்ண மூர்த்தியும் கலந்து கொண்டார்கள். நானும் பொதுக்குழு உறுப்பினராய் கலந்து கொண்டேனா கலக்கினேனா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இந்தக்குழுக் கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய துணைத் தலைவரும், காட்சிக்கு எளியவரும், கடுஞ்சொல் அற்றவருமான முனைவர். தமிழண்ணல் அவர்கள், சங்கப்பலகை எல்லோருக்கும் பொதுப்படையானது என்று குறிப்பிட்டார். ஆகையால், இதனை தவறாக நினைக்க வேண்டாம் என்றும் ஒருசில மேட்டுக்குடி இலக்கியவாதிகளை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்.
இந்தச் சங்கப்பலகை எதற்காக அமைக்கப்பட்டது என்பதை, அவரை விட நான் அதிகமாகவே அறிவேன் என்பதால் என்னால் குறிக்கீடாமல் இருக்க முடியவில்லை. முனைவரின் பேச்சில் குறுக்கிட்டு இந்த அமைப்பு, ஒரு இடஒதுக்கீட்டு பலகைதான் என்று வாதிட்டேன். திராவிட, முற்போக்கு இயக்க படைப்பாளிகளை, சாகித்திய அக்காதெமியின் துணையோடு இங்குள்ள மேட்டுக்குடி இலக்கியவாதிகள் இருட்டடிப்பு செய்வதால்தான், இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருக்கிறது என்றேன். ஆகையால், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, அதே சமயம், தகுதி வாய்ந்த படைப்பாளிகளை அடையாளப் படுத்துவதே இந்த சங்கப்பலகையின் முதல் நோக்கம் என்றும் வாதிட்டேன். சிறிது உணர்ச்சி வசப்பட்டு, கடுமையாகதான் பேசினேன்.
எதற்காக இந்த சங்கப்பலகை துவக்கப்பட்டதோ, அதன் நோக்கம் புரியாமல், சுந்தரம் ராமசாமிக்கும், ஜெயகாந்தனுக்கும் சங்கப்பலகை, குறும் படங்களை எடுக்க வேண்டும் என்று ஒருவர் தினமணியில் எழுதியிருந்தார். இன்னொருவர் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற இலக்கிய மேதைகளை முன்னிலைப் படுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப் பட்டு இருப்பதாக ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். இது சங்கப் பலகையின் சங்கிலிகளை அறுத்து விடுகிற சாமாச்சரமாக எனக்குத் தோன்றியது. இதனால், இந்த அமைப்பும் இன்னொரு சாகித்திய அக்காதெமியாக ஆகிவிடுமோ என்று என்னுள் அச்சம் ஏற்பட்டது. ஆகையால் எடுத்த எடுப்பிலேயே இதன் நோக்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணத்தில், நான் பெரிதும் மதிக்கும் முனைவர் தமிழண்ணல் பேச்சில் குறுக்கிட வேண்டியதாயிற்று. அவர் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை.
பொதுக் குழு உறுப்பினர்களிடையே பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் எவரும் இடைமறித்து பேசிய என்னை இடைமறிக்கவில்லை. கலைஞரின் தலைமை அவர்களது வாய்களை கட்டிப் போட்டிருக்கலாம். அல்லது கலைஞர் பார்த்துக் கொள்ளுவார் என்று சும்மா இருந்து இருக்கலாம். ஒருவேளை, நான் பேசியது முரட்டுத்தனமாக இருந்தாலும் அதில் உண்மை பொதிந்திருப்பதை உணர்ந்தும் பேசாது இருந்து இருக்கலாம். இந்த மூன்று காரணங்களாலோ, அல்லது மூன்றில் ஒன்றாலோ தமிழகமெங்கும் இருந்து வந்த சிந்தனையாளர்கள், எந்த வித எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை. இந்தப் போக்கை என் கருத்துக்கான மௌன சாட்சியமாக நினைத்துக் கொண்டு நான் மேற்கொண்டும் பேசப்போனேன்.
அப்போது கலைஞர் இடைமறித்தார் இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும் என்று சொன்ன என்னைப் பார்த்து ‘சமுத்திரம் எல்லோருக்கும் பொதுவானது’ என்று சிலேடை நயத்தோடு குறிப்பிட்டார். நானும் சிறிது நேரத்திற்குப் பிறகு ‘சமுத்திரம் சில சமயம் கரையேற வேண்டியது இருக்கிறது’ என்றேன். கலைஞர் என்னையே உற்று நோக்கினார். அந்த பார்வையின் பொருளை புரிந்து கொண்டு, நான் மேற்கொண்டு பேசவில்லை. இதை ஆனந்த விகடனில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மென்மையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணையாழிப் பத்திரிகையோ, தனக்கே இயல்பான மேட்டுக்குடித் தனத்தில், கலைஞர் என்னை தலையில் தட்டி உட்கார வைத்து விட்டதாக குறிப்பிட்டு என்னை கோமாளியாக்குவதாக நினைத்து, கோமாளித்தனம் செய்தது.
சங்கப் பலகையின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு இலக்கிய சமாச்சாரங்களை உறுப்பினர்கள் கோடி காட்டிக் கொண்டிருந்தார்கள். எனக்கு உள்ளூர வருத்தம். ஒரு மூத்த தமிழறிஞரை அதுவும் என் மீது அன்புக் காட்டும் பெரியவரின் பேச்சை அப்படி இடைமறித்து இருக்கக் கூடாது என்ற குற்ற உணர்வு ஏற்பட்டது.
கலைஞரின் கணிப்பில் இருந்து நான் வீழ்ந்திருப்பேனோ என்ற சந்தேகம். சமுத்திரம் எங்கே போனாலும் கலாட்டா செய்வார் என்று சங்கப் பலகை எதிரிகள் நான் சொல்ல வந்தததை திசைத்திருப்பி விடலாமே என்ற எதிர்கால அச்சம். பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், சிலர் நான் குறுக்கிட்டதுதான் சரி என்றார்கள். சிலர் இவை எல்லாம் சொல்லாமல் செய்ய வேண்டிய செயல்கள் என்றார்கள். நான் கலைஞர் தவறாக நினைப்பாரே என்று வருந்தினாலும் நான் அப்படி கருத்து தெரிவித்ததில் எந்த தவறும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.
சங்கப் பலகையின் பொதுக் குழு உறுப்பினர்களில் இருந்து செயற்குழுவிற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். போட்டி இல்லாத தேர்வு. பேராசிரியர் மெய்யப்பன், சங்கப் பலகைக்கு காரணமானவர் என்று சொல்லி என் பெயரை முன்மொழிந்தார். உறுப்பினர்கள் ஆட்சேபிக்கவில்லை. சிலம்பொலி செல்லப்பன், சா. வே. சுப்பிரமணியன், அப்துல் ரகுமான், காவ்யா சண்முகச் சுந்தரம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை விட பொதுக் குழுவால் நியமிக்கப் பட்டார்கள் என்று சொல்லலாம்.
காலங்காலமாக அடிமைப் படுத்தப்பட்ட அல்லது கொச்சைப்படுத்தப் பட்ட இந்த மண்ணின் இலக்கியத்தை பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்ல, இத்தகைய தடாலடி குறுக்கீடு தேவை என்றே தோன்றியது. ஆரம்பகாலத்தில் என் படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றவரும் என்னை சங்கப்பலகையின் செயற்குழுவிற்கு உறுப்பினராக வழிமொழிந்தவருமான பேராசிரியர் மெய்யப்பன் தமிழண்ணல் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர். நான் தமிழண்ணல் அவர்களிடம் ஒருவேளை அவர் மனம் புண்படும் படி நடந்து கொள்ளும் நிலைமை ஏற்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தபோது பேராசிரியர். மெய்யப்பன் நான் அப்படிச் செய்ததே சரி என்று அங்கேயே வாதிட்டார். இதுதான் நட்பையும் மீறிய நேர்மை என்பது.
கலைஞரும், தனக்கே உரிய முத்திரையோடு தமிழ் இலக்கியத்தைப் பற்றியும், அதை உலகளாவ கொண்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியத்தையும் அருமையாக வற்புறுத்தினார்.
நான் கலைஞருடன் கொண்ட நட்பை வாழ்நாள் வரை கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவன். எனது இடைச்செருகல் பேச்சு இதற்கு இடையூறாக வந்திருக்குமோ என்று வருத்தப்பட்டேன். அதற்கு அவசியம் இல்லை என்பது போல் ஒரு நிகழ்ச்சி விரைவில் நடைபெற்றது. முதல்வர் அலுவலகத்தில் ஆன்லைன் என்ற தனியார் இணையத்தை கலைஞர் 11.12.2000அன்று துவக்கி வைத்து இருக்கிறார். அதில் எனது கட்டுரையான ‘கிராமங்கள் அன்றும் இன்றும் எனது புகைப்படத்துடன் வெளியாகி இருந்ததாம். அதில் வந்த கட்டுரைகளையும், எழுத்தாளர்களின் பெயர்களையும் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் எனது கட்டுரையையும் எனது புகைப்படத்தையும் பார்த்தவுடனே, அதை உற்று நோக்கி அடடே நம்ம சமுத்திரம்! என்றாராம். இதை ஆன்லைனில் பணியாற்றும் எனது தோழரும், சிறந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணனும், செய்தித் துறையில் உதவி இயக்குநராக உள்ளவரும், எனது வாடமல்லி நாவலுக்கு காரணமானவருமான, என் இனிய நண்பர் சுபாஷ் அவர்களும் மறுநாள் என்னிடம் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்கள்.
எனக்கு இரட்டை மகிழ்ச்சி. குறள் பீடத்தில் நான் தெரிவித்த கருத்தை கலைஞர் ஏற்றுக் கொண்டார் என்கிற ஒரு மகிழ்ச்சி. அப்படியே அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என் மீது வைத்திருக்கும் அன்பு அவரிடமிருந்து வீழ்ச்சி அடையவில்லை என்ற இன்னொரு மகிழ்ச்சி.
இந்தக் காலக்கட்டத்தில் முரசொலி மாறன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். மாறன் அவர்களும் ரங்கராஜன் குமாரமங்கலமாக திடுதிடுப்பென்று ஆகிவிடுவாரோ என்பது போன்ற அதிர்ச்சிதரும் செய்திகள் வெளியாயின. இந்தச் சமயத்தில் கலைஞர் கலங்கிப் போனதை தொலைக்காட்சியில் பார்த்த போது என் கண்கள் கலங்கிவிட்டன. கையறு நிலையில் அவர் தவித்த தவிப்பு என்னையும் தவிக்க வைத்தது. என்னை மட்டுமல்ல... மனிதநேயம் மிக்க எல்லோரையும் தவிக்க வைத்திருக்கும். ஆனால், என்னைப் போன்றவர்களின் தவிப்பு தமிழ்நாடு சம்பந்தப்பட்டதும் கூட, ஓணானாய்ப் போன தமிழகம் தலைநிமிர்ந்து நிற்க இன்னும் குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது தேவைப்படுகிறது. இதற்கு கலைஞர் வாழ்ந்தாக வேண்டும். ஆனால், மாறனுக்கு விபரீதமான ஒன்று ஏற்பட்டால் அவரும் வாழமாட்டார் என்பது அவரது ஐம்புலன்கள் மூலமும் வெளிப்படையாக தெரிந்தது. வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து
வெளியேறிய போது, கலைஞர் இயலாமையில் கையாட்டியது என் இதயத்தையே ஆட்டுவது போல் இருந்தது.
முரசொலி மாறன் அவர்களைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் உண்டு. அப்பாவிக் கலைஞரை, அவர்தான் ஆட்டி வைப்பதாக கட்சிக்காரர்கள் சிலர்கூட கூறுவது உண்டு. இதனால் கலைஞருக்கு பாதகமான நிலையே உருவாகியிருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இன்னொரு கோணத்தில் பார்த்தால், கலைஞருக்கு ஒரு மாறன் தேவைப்படுகிறது. நந்தனின் பொறுப்பாசிரியரான என் இனிய தோழர் கவிஞர் இளவேனில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது கலைஞர் ஒரு வகையில ஏமாளிங்க .... அவர் கதை ஒன்றை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டால் போதும் அப்படியே மயங்கிடுவார். மாறன் உடனிருந்து, நல்லவர்கள் கெட்டவர்களை சலித்து அவருக்கு சரியான வழிகாட்டியாக இருக்கிறார்’ என்றார்.
தென் மாவட்டங்களில் அந்தக் காலத்தில் தாய் மாமாவை ‘அம்மான் என்றே சொல்லுவார்கள். இதனால் சகோதரி பிள்ளைகளின் ஜாதகங்கள் கூட தாய்மாமனுக்காவே முதலில் பேசும் என்பார்கள். ஆனால் எனக்கும் என் தாய்மாமா அம்மான் தான். அவரை விட நான் வேறு யாரையும் அதிகமாக நேசிக்கவில்லை. இந்த உறவு கலைஞருக்கும் மாறனுக்கும் அன்று முதல் இன்று வரை நிலவி வருகிறது. மாறன் என்ற ஊன்றுகோல் இல்லை என்றால், கலைஞர் அரசியலில் ஓரளவு முடமாவதற்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த தத்துவார்த்தச் சிந்தனையுடன் இன்றைய தமிழக நல்வாழ்வில் முரசொலி மாறன் அவர்களின் உயிரும், வாழ்தலும் இதனால் கலைஞரின் வாழ்தலும் தமிழக வாழ்தலில் முக்கிய அம்சங்களாக எனக்குப் படுகின்றன