உள்ளடக்கத்துக்குச் செல்

எப்போதும் முடிவிலே இன்பம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

எப்போதும் முடிவிலே இன்பம்

அது மிகவும் ஆசாரமான முயல் - நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து வந்தது.

அந்த முயல் எலியட்ஸ் ரோடில் உள்ள ஒரு கலெக்டர் பங்களாவில் வசித்து வந்தது. வெகு காலமாகத் தான் வசிக்கும் இடம் ஒரு கலெக்டரின் பங்களா என்பது அதற்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொண்ட பிற்பாடு அதற்குப் பெருமை சொல்லி முடியாது. வனராஜனான சாக்ஷாத் மிருகேந்திரனே போல அதன் நடையில் மிடுக்கு ஏற்பட்டது. உலகத்தில் தன்னை ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் அருகதை இல்லை என நினைக்கவும் ஆரம்பித்து விட்டது அந்த முயல்.

தான் வசிப்பது கலெக்டர் வீடு என்பதை அது அறிந்து கொண்ட வரலாற்றை ஒரு ரசமான இதிகாசம் என்று சொல்ல வேண்டும். கலெக்டர் யுகத்தில் இதிகாச கர்த்தர்களுக்கு இடம் இல்லாமல் போனது இதிகாச கர்த்தர்களின் துரதிருஷ்டமே தவிர முயலின் துரதிருஷ்டம் என்று அதன்மேல் பழி சாற்ற முடியாது. ஏனென்றால் ஜோதிஷர்கள் சொல்லக்கூடிய மிக மிகச் சிறந்த நக்ஷத்திரத்தில், அதற்கு மேலான சிறந்த லக்கினத்தில் பிறந்த முயல் அது. அதன் ஜன்ம லக்கினத்தைப் பற்றியோ, அதன் அதிருஷ்டத்தைப் பற்றியோ சந்தேகப்படும் மனப்பாங்கு படைத்தவர்கள் ஜோதிஷ சாஸ்திரத்தையே அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாலு வேதமும் ஆறு சாஸ்திரமும் படித்திருந்தால்தான் என்ன? முயல் முயல்தானே? அதன் குணம் போய்விடுமா? சமண சந்நியாசிகள் பாறைகளில் குடைந்த நிலவறைகள் மாதிரி தோட்டம் முழுவதிலும் குடைந்து வளை போட்டுவிட்டது. முன் 'கேட்' அருகில் உள்ள ரோஜாப் புதரின் பக்கத்தில் உள்ள வளையில் குதித்து மறைந்தது என்றால், புழைக்கடையில் சுற்றிச் சுவர் ஓரத்தில் உள்ள கறிவேப்பிலைச் செடிக்கு அருகில் உள்ள குண்டுக்கல்லுக்குக் கீழிருந்து அது வெளியே வரும். இது தவிர அதன் நிலவறைகள் தரையில் திக்குக்கு ஒரு மாதிரியாகச் சென்று மழைக் காலத்தில் மனிதர் காலடித் தடம் பட்டதும் பொதுக்கென்று உள்வாங்கிவிடும். மாலை நேரத்தில் கலெக்டர் துரை பங்களாவின் சுற்றுப் புறத்தில் உலாவுவார். ஒரு தடவை அவருடைய காலும் சொதக் என்று உள்வாங்கிக் கணுக்கால் சுளுக்கிக் கொள்ள, மாலியைக் கூப்பிட்டுத் திட்டினார். முயலை விரட்டு என்று உத்தரவு போட்டுவிட்டார். காங்கிரஸ்காரர்கள் என்றால் தண்டோ ராப் போட்டோ வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தோ துரத்திவிடலாம். கலெக்டரின் உத்தரவு அமலுக்கு வருவதற்குச் சிறிது காலம் பிடித்தது. மாலி மிகவும் கிழவன். சமயங்களில் தூரத்தில் முயல் மாதிரி எதுவும் தென்படுமாகில் எக்ஸ்-பி என்ஜின் புறப்படுகிற மாதிரி "சூ" வென்று சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வருவான். காகதாலீய நியாயத்தை நிர்த்தாரணம் செய்வது போல முயல் தன் வாலை ஆட்டிவிட்டு, அருகில் உள்ள வலைக்குள் சரேலென்று அந்தர்த்தானம் ஆகிவிடும்.

ஓடிஓடிச் சலித்துப் போன கிழவன் மாலிக்கு ஒரு யுக்தி தோன்றியது. ஒரு கறுப்பு நாயை இந்த உத்தியோகத்துக்கு அமர்த்தினான். நிலாக்காலங்களில் தவிர மற்ற நாட்களில் இருட்டுடன் இருட்டாக உலாவலாமாகையால் அதற்கு அந்த உத்தியோகம் ஏற்றது என்று நினைத்தான். அதற்குத் தினசரி கால் வீசை மாமிசமும், இரண்டு எலும்புத் துண்டுகளும், சில சமயங்களில் கலெக்டர் போட்ட மிச்சத் தீனி என்ற போனஸும் உண்டு. முதலில் பறை நாய்க்கு இந்த உத்தியோகம் மிகவும் சௌகரியமாக இருந்தது. பகல் முழுவதுமாக ஒரு மரத்தடியிலோ சுவர் ஓரத்திலோ பொழுதைக் கழிப்பது, ராத்திரி வேளைகளில் ரோந்து சுற்றி வருவது; இம்மாதிரி ஏற்பாடு அதற்குப் பரமபதமாக இருந்தது.

இந்தக் கறுப்புக் குட்டி பறை நாய்; அதிலும் பட்டணத்துப் பறை நாய். அதற்கு முயல் என்றால் எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது. மேலும் அது எழுத்தாளர் அல்ல; சொந்த மனசினாலோ, இரவல் விவகாரத்தினாலோ கற்பனை பண்ணிக்கொள்வதற்கு அதற்குச் சக்தி இல்லை.

மூன்று நான்கு நாட்கள் உத்தியோகம் பார்த்தும் முயலைப் பார்க்காததற்கு முக்கியமான காரணமும் ஒன்று உண்டு. அந்த நாய்க்கு வாக்கிலே சனி. தூரத்திலே எதுவும் கறுப்பாகத் தெரிந்தால் வள் என்று குரைக்கும். சற்று நேரம் அந்தத் திசையையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டுப் பிறகு பாய்ந்து ஓடும். கறுப்பு நாயின் இந்த ஏற்பாடு முயலுக்குச் சௌகரியமாக இருந்தது. அபாயச் சங்கின் சப்தம் கேட்டதும், டபக் என்று நிலவறைகளுக்குள் புகுந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவைப் படித்துத் தெளிந்ததுபோல அது வளைக்குள் சென்று ஒளிந்துகொள்ளும். இந்தப் புதிய குரல் எங்கிருந்து வருகிறது. எதனுடைய குரல் என்பதெல்லாம் அதற்குத் தெரியாது. உயிர்ப் பிண்டங்கள் எல்லாவற்றிற்குமே ஊறிப்போயுள்ள ஒரு குணம், அதைக் குலை நடுக்கமெடுத்து அவ்வாறு ஓடும்படி தூண்டியது.

முயல் தர்க்க சாஸ்திரம் படித்த பிராணியாகையினாலே, இம் மாதிரி இரண்டு மூன்று தடவை ஓடின பிற்பாடு, இம்மாதிரி ஓடி ஒளிவது அதற்குப் பிடிக்கவில்லை. வளைக்குள் பதைக்கப் பதைக்க ஓடி, இண்டில் உட்கார்ந்து கொண்டு ஆசுஊசென்று வரும் இரைப்பும் சுவாசமும் நிதானப்பட்டு, படக்குப்படக்கு என்று அடித்துக்கொள்ளும் நெஞ்சு ஒருவிதமாகச் சுமாரானவுடன், கீழ்க்கண்டவாறு யோசனை செய்யும்: 'கயிற்றரவு என்று சொல்லுவார்களே, ஒரு வித மயக்க நிலை, அதைப் பற்றி படித்தவனாகிய நானா இப்படி ஓடி வருவது? எதற்கும் அந்தச் சத்தம் என்ன என்று பார்த்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் நான் படித்துப் பாழாய்ப்போய் என்ன பலன்?' என்று நினைத்தபின் மெதுவாக ஊர்ந்து வந்து வளைக்கு வெளியே கண்களை மட்டும் வைத்துக் கவனித்துக் கொண்டிருந்தது.

குரைத்த பிற்பாடு கூர்ந்து கவனித்துவிட்டுக் கறுப்பு நாய் பாய்ந்து ஓடி வருவதற்கும், முயல் தீர்க்காலோசனை செய்துவிட்டுத் திரும்பி எட்டிப் பார்ப்பதற்கும் சமயம் ஒத்திருந்ததனால், தர்க்க சாஸ்திர பண்டிதர் கண்ணில் ஏதோ பிரம்மாண்டமான ஒன்று நாலு கால் பாய்ச்சலில் ஓடுவது தென்பட்டது. ராமநாமத்தைச் சொல்லி மனசைத் திடப்படுத்திக் கொண்டு, குரலையும் திடப்படுத்திக்கொண்டு, "அது யார்?" என்று இலக்கணப் பிழை இல்லாமல் கேட்டது முயல்.

"அதாரது?" என்று கொச்சையாகத் தனது உத்தியோகக் கடமைக் காலம் வீணாகிறதே என்ற எரிச்சலுடன் பறை நாய் திருப்பிக் கேட்டது.

நாயின் கொச்சைக் குரலைக் கேட்டுப் பயம் தெளிந்த முயல், மீண்டும் அதிகாரத்துடன், "அது யார் அது?" என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்டது.

"நானா, நான் தான் கலெக்டர் பங்களாவின் காவல் உத்தியோகஸ்தர்; முயல் என்று ஒன்று இருக்கிறதாம்; அதை வேட்டையாடி வெளியே துரத்துவதற்கு நியமிக்கப்பட்ட ஸ்பெஷல் உத்தியோகஸ்தர் நான்" என்றது கறுப்பு நாய்.

"அப்படியா, முயலைத் துரத்துவதற்காக நியமிக்கப்பட்டவரா? ஏதோ இருட்டில் நன்றாகத் தெரியவில்லை. இப்படிக் கொஞ்சம் வாரும், பார்ப்போம்" என்றது முயல்.

சுற்றுமுற்றும் பார்த்து எதுவும் தென்படாமல், "எங்கே இருக்கிறீர்? நீர் யார்?" என்று கொஞ்சம் மரியாதையாகக் கேட்டது ஸ்பெஷல் ரோந்து உத்தியோகஸ்தர்.

"இதோ இப்படி இந்த வளையண்டை வாரும். நான் தான் முயல். நீர் விரட்டுவதற்காக இங்கே வெகு காலமாக இருந்து வருகிறவன். எனக்கு நாலு வேதம், ஆறு சாஸ்திரம், வியாகரணம் எல்லாம் தளபாடம்" என்றது முயல், வளைக்குள் இருந்துகொண்டே.

"ஐயா முயலாரே, முயலாரே - கொஞ்சம் வெளியே வாரும்; எனக்காகச் சற்று வெளியே வாரும். உமக்குக் கோடி புண்ணியம் உண்டு. எனக்கு உத்தியோகம் போய்விடக் கூடாது. தயவு செய்து வெளியே வாரும்" என்று கூத்தாடியது; கெஞ்சியது. முயலின் குரலைத்தான் கேட்டிருந்ததே ஒழிய அது எப்படி இருக்கும் என்று கறுப்பு நாய்க்குத் தெரியாது.

"நான் வெளியில் வருவது இருக்கட்டும். உமக்குத் தர்க்க சாஸ்திரம் தெரியுமா? அதைக் கற்றுக்கொள்ளாமல் என்னிடம் வாதம் பண்ண வருகிறீரே?" என்றது முயல்.

"எனக்கு தர்க்கமும் தெரியாது; படிப்பும் கிடையாது. நான் பறை நாய். உமக்குக் கோடி புண்ணியம் உண்டு. நீர் இந்தப் பங்களாவை விட்டு வெளியே போய்விடும். இல்லாவிட்டால் எனக்கு வேலை போய்விடும்" என்று அழுதது கறுப்பு நாய்.

"உம்முடைய நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நான் இந்தப் பங்களாவைவிட்டுப் போய்விடுவது என்றால் அதனால் உமக்குத்தானே நஷ்டம் என்று எனக்குக் கஷ்டமாக இருக்கிறது" என்றது முயல்.

"அது எப்படி?" என்றது கறுப்பு நாய். "நான் போகாவிட்டால் உமக்கு வேலை போய்விடும் என்று நீர் பயப்படுகிறீர்; நான் போய்விட்டால் பிறகு உமக்கு இங்கே வேலை ஏது? யாராவது ஒருவரைச் சும்மா வைத்துச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருப்பார்களா? நான் போய்விட்டாலும் உமக்கு வேலை போவது நிச்சயந்தானே?" என்றது முயல்.

கறுப்பு நாய் இவ்வளவு தூரம் எட்டி யோசிக்கத் திராணி இல்லாததனால், மருண்டு ஓவென்று பிலாக்கணம் வைக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

"ஓய், என் வீட்டுவாசலில் உட்கார்ந்துகொண்டு பிலாக்கணம் வைக்காதேயும். உமக்கு வேலை போகக் கூடாது. அவ்வளவுதானே உம்முடைய கவலை? நான் சொல்லுகிறபடி சத்தியம் செய்து கொடுப்பீரா?" என்று கேட்டது முயல்.

"ஆகட்டும், ஆகட்டும்" என்றது நாய்.

"அதிருக்கட்டும், நீர் சுத்த சைவந்தானே?" என்று கேட்டது முயல்.

"அப்படி என்றால்?"

"நீர் மாமிசம், எலும்பு, அணில்... பிறகு... நான்... முதலிய மிருக ராசிகளைச் சாப்பிடுகிறவரா?"

"ஆமாம்; ஆமாம் சாப்பிடுகிறவன்... சுத்த சைவம்?" என்றது நாய். மத்தியான்னம் கிடைத்த கறித்துண்டு ஞாபகத்துக்கு வரவே நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டது.

"அப்படிச் சாப்பிடாதவர்கள் தாம் சைவம். உமக்கும் நமக்கும் எப்படி ஒத்து வரும்?" என்றது முயல். "உமக்கு அந்தப் பழக்கத்தை விட்டுவிட முடியுமா?" என்று கேட்டது மீண்டும்.

"எப்படி முடியும்? ஒரு இறாத் துண்டோ எலும்புத் துண்டோ இல்லாது போனால் என் உடம்புக்கு ஒத்து வராதே!" என்றது நாய்.

"கீரை, கிழங்கு தினுசுகளைச் சாப்பிட்டுப் பாருமே. உடம்புக்கும் நல்லது; நான் உம்மிடம் தயக்கமில்லாமல் நெருங்கியும் பழக முடியும்" என்றது முயல்.

"நான் செத்துப் போவேனே!" என்று ஏங்கியது கறுப்பு நாய்.

"அப்படியானால் உமக்கும் நமக்கும் ஒத்து வராது; எனக்குத் தூக்கம் வருகிறது" என்று சொல்லிவிட்டு வளைக்குள் சென்றுவிட்டது வேதம் படித்த முயல்.

கறுப்பு நாய்க்கு மிகவும் வருத்தம். இவ்வளவு கெட்டிக்கார, தர்க்கம் படித்த முயலைப் பார்க்க முடியாமல் போயிற்றே என்று வேதனை.

எப்படியானாலும் மீண்டும் ஒரு தடவை அதைப் பார்க்கப் பிரயாசைப்படுவது, இல்லாவிட்டால் தெய்வம் விட்ட வழி என்று நினைத்துக் கொண்டு தான் வழக்கமாகப் போய்ப் படுத்துக் கொள்ளும் கறிவேப்பிலைப் புதரடிக்குச் சென்றுவிட்டது.

மறுநாள் அதிகாலையில் எழுந்து, முயல் காயத்திரி ஜபித்துக் கொண்டிருந்தது. சூரிய கிரணங்கள் மூடிய இமை வழியாக அதன் கண்ணுக்குள் இந்திர ஜாலங்களைக் காட்டிக் கொண்டிருந்தன. கீரைப் பச்சையும் டொமாட்டோ ச் சிவப்பும் அடிக்கடி தோன்றி, கலெக்டர் பங்களாக் காய்கறி தோட்டத்துக்கு அதன் மனசை இழுத்துச் சென்றன.

நேற்றுப் பார்த்த இடத்தில் முயல் அகப்படுமா, அதை மறுபடியும் பார்க்க முடியுமா என்று கவலைப்பட்டுக்கொண்டு கறுப்பு நாய் அந்தப் பக்கமாக மோப்பம் பிடித்துக் கொண்டு வந்தது.

எதிரே காயத்திரி பண்ணிக்கொண்டிருக்கும் ஜந்துதான் நேற்று ராத்திரி பேசிய முயல் என்று அதற்குத் தெரியாது.

நாயைக் கண்டவுடனேயே, ஜபதபங்களைச் சீக்கிரமாக முடித்துக் கொண்டு, "நாயாரே, சௌக்கியந்தானா?" என்று கேட்டது முயல்.

சத்தம் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்து நாய் திடுக்கிட்டு போயிற்று. இத்தனை சின்னச் சாதியா நேற்று ராத்திரி அத்தனை பெரிய பேச்சுப் பேசியது என்று அதிசயப்பட்டுக் கொண்டு அதனிடம் நெருங்கியது.

"காலையில் ஆகாரம் பண்ணியாச்சா?" என்று கேட்டுக்கொண்டே வளைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டது முயல்.

"எனக்கு இத்தனை காலையிலேயே கொடுப்பதற்கு யார் இருக்கிறார்கள்? இன்னும் கலெக்டரே சாப்பிட்டாகலியே" என்றது நாய்.

"நீர் வருகிற வேகத்தைப் பார்த்ததும் அப்படித்தான் நினைத்தேன்" என்றது முயல்.

"நேற்று ராத்திரி என் வேலைக்கு ஆபத்து வராமல் ஒரு வழி பண்ணித் தருவதாகச் சொன்னீரே, அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு போகலாம் என்று வந்தேன்" என்றது நாய்.

"உமக்கும் நமக்கும் ஒத்துவராதே; நான் எப்படி வழி சொல்லுகிறது? நீரோ மாம்ச பட்சணி, நானோ சாத்வீக உணவுக்காரன். எண்ணெய்க்கும் தண்ணீருக்கும் சரிப்பட்டு வருமா? உறவு என்றால் தண்ணீரில் பால் கலப்பது மாதிரி இருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு" என்றது முயல்.

"நீர் எனது வேலையைக் காப்பாற்றிக் கொடுக்கிறதானால் என்ன செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன். இதோ இப்போதே சத்தியம் பண்ணித் தரட்டுமா?" என்று ஆவலுடன் கேட்டது நாய்.

"நீர் உம்முடைய மாம்ச உணவை விட்டுவிடுவீரா?" என்று கேட்டது முயல்.

"அது தான் என்னால் முடியாது என்று அப்போதே சொன்னேனே; நான் செத்துப்போன பிற்பாடு எனக்கு வேலை இருந்து என்ன, போய் என்ன? கலெக்டர் கூட என்னைப் போலத்தானே சாப்பிடுகிறார்?" என்றது நாய்.

"நீரோ மாமிசத்தை விட முடியாது என்கிறீர்; என்னைத் தின்ன மாட்டேன் என்றாவது சத்தியம் செய்து கொடுப்பீரா?" என்று கேட்டது முயல்.

"இந்த லோகத்திலே யாராவது குருவைத் தின்பார்களா? உமக்கு ஏன் இந்தச் சந்தேகம்?" என்றது நாய்.

"லோகத்திலேதான் சில பேர், தம் வயிற்றுக்குள்ளே குரு போய் விட்டால், தாமே குருவாகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். அது உமக்குத் தெரியாது போல இருக்கிறது" என்று சொல்லியது முயல்.

"உமக்கு அந்தச் சந்தேகம் வேண்டாம். நான் உம்மைத் தின்பதே இல்லை என்று சத்தியமாக, ஆணையாகச் சொல்லுகிறேன். இன்னும் வேறு என்ன வேண்டும்?" என்றது நாய்.

"நான் சொல்லுகிறபடியெல்லாம் கேட்க வேண்டும்; நான் சொல்லுகிற வேலை எல்லாம் செய்ய வேண்டும்" என்றது முயல்.

"ஆகட்டும்" என்றது நாய்.

"அப்படியானால் பக்கத்துத் தோட்டத்தில் முயலினி என்று ஒரு யுவதி இருக்கிறாள். அவளிடம் போய் அவளுடைய கோத்திரம் என்ன என்று கேட்டுக் கொண்டு வாரும்?" என்றது முயல்.

"எனக்குத் தந்திரம்...?" என்றது நாய்.

"நீர் போய் விசாரித்துக் கொண்டு வாரும். அதற்குள் ஒரு நல்ல யுக்தியாக யோசித்து வைக்கிறேன்" என்றது முயல்.

நாய் அகன்றதும், காய்கறித் தோட்டத்துக்குள் புகுந்து இரண்டு இணுக்குக் கீரையும் நல்ல டொமாட்டோ ப் பழமாக இரண்டும் சாப்பிட்டு ஏப்பமிட்டுக் கொண்டு, கீரைப் பாத்திக்கு அருகில் இருந்த வளை வழியாக ஓடி மறைந்தது முயல்.

பக்கத்துப் பங்களா ஒரு ஜமீன்தாருடையது. பறை நாயை உள்ளே வரும்படி விடுவார்களா? நாலைந்து வேலைக்காரப் பையன்களும் ஒரு கோம்பை நாயுமாகச் சேர்ந்து விரட்ட, வாலைக் காலிடையில் பதுக்கிக் கொண்டு அழுதுகொண்டே ஓடி வந்துவிட்டது கறுப்பு நாய்.

முயல் சொல்லி அனுப்பின காரியத்தைக் கேட்டு வருவதற்குக்கூட முடியவில்லையே, அதன் முகத்தில் எப்படி விழிப்பது என்று குன்றிப் போய், பங்களாவுக்குள் நுழைந்த சமயத்தில் பட்டப் பகலாகிவிட்டது. சாப்பாட்டுக்காக, தோட்டக்காரன் குடிசைப் பக்கமாகப் போயிற்று. சாப்பிடும் தட்டை மோந்து பார்த்தது. வெறும் தட்டுதான் கிடந்தது. தனக்கு வேலைதான் போய்விட்டதோ என்று பதறியது. அதற்குப் போட்டிருந்த தீனியை நரி ஒன்று தின்று நடந்துவிட்டது அதற்கு எப்படித் தெரியும்?

அன்று இரவு நல்ல நிலா. சற்றுச் சுகமாக உலாவி வருவோமே என்று நினைத்து வேத வித்தான முயல் வெளியே புறப்பட்டது. மனசுக்கு இன்பமாக இருக்கவும் சாந்தம் ஏற்படவும் சாமகானம் பாடிக்கொண்டு எங்கெங்கோ நடந்தது. சிறிது நேரம் கழித்து எவ்வளவு தூரம் நடந்துவிட்டோ ம் என்று சுற்றுமுற்றும் பார்க்க, தூரத்தில் முயலினி ஓர் இலையைக் கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து 'என்ன லாவண்யம்! என்ன அழகு!' என்று அப்படியே சொக்கிப் போய் நின்றது. பிறகு குண்டுகுண்டென்று ஓடி அதனிடம் நெருங்கி, "முயலினி, உன் கோத்திரம் என்ன?" என்று கேட்டது.

"உங்கள் கோத்திரந்தான்" என்று சொல்லிவிட்டு வேறு ஓர் இலைக்குப் போயிற்று முயலினி.

"இத்தனை பிரயாசைப்பட்டும் என் ஆசை எல்லாம் பாழாய்ப் போயிற்றே!" என்று பெருமூச்சுவிட்டது முயல்.

"இல்லை, விளையாட்டுக்குச் சொன்னேன். உங்கள் கோத்திரம் இல்லை" என்று கண்ணை ஒரு வீசு வீசிவிட்டு வேறு ஒரு தளிரை மென்றது முயலினி.

"என் கோத்திரம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டது முயல்.

"காதலுக்குக் கண் இல்லை என்று எங்கே படித்தீர்கள்?" என்று புன்சிரிப்புச் சிரித்தது முயலினி.

"இன்னிக்கு ஒரு ஆளை உன்னிடம் அனுப்பினேனே, வந்து விசாரித்தானா?" என்று கேட்டது முயல்.

"ஓ, அதுவா! பகல்லே யாரோ என் அந்தப்புரத்தில் நுழைந்தார் என்று ஜமீன்தார் வீட்டு வேலைக்காரர்களும் கோம்பையும் போய் விரட்டினார்கள்" என்றது முயலினி.

"நம்முடைய பங்களாவுக்கு வாயேன்" என்றது முயல்.

"என்ன, நாள் நக்ஷத்திரம் பார்க்காமலா? வேதசாஸ்திரம் படித்த தாங்களா இப்படிச் சொல்லுவது?" என்றது முயலினி.

சேதி கேட்டு வருவதாகப் போன நாய் திரும்பியே வரவில்லையே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தது முயல். காலையில் அனுஷ்டானாதிகள் நடத்தும்பொழுது மனசு அதற்குக் காயத்திரியில் லயிக்கவே இல்லை. கறுப்பு நாய்க்கு என்ன துன்பமோ, வேலைதான் ஒரு வேளை போய்விட்டதோ என்று மனசை வாட்டிக் கொண்டது முயல்.

பகல் சுமார் பத்து மணிப் போதுக்கு முயலினி இரண்டு டொமாடோப் பழத்தையும் ஓர் இணுக்கு முள்ளு முருங்கை இலையையும் ஸ்திரீதனமாக எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தது.

முயலினியைக் கண்டதும் தன் வேதனையை மறந்து உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும்போது, வளைக்கு வெளியே இரைச்சலும் சந்தடியுமாகக் கேட்க, முயல் வாசலருகில் வந்து, "அங்கே யார் அது, கூச்சல் போடுகிறது? இது கல்யாண வீடு என்று தெரியவில்லையா?" என்று உள்ளிருந்தபடி அதட்டியது.

"ஐயா முயலாரே, நான் தான் கறுப்பு நாய். ஒரு வழக்கு. தீர்த்து வைக்க வேண்டும்" என்றது.

"போதும் இதுதான் பிழைப்பாகப் போச்சு; நேற்றுப் போனவன் ஒரேயடியாக எங்கே தொலைந்து போனாய்? என்ன, வேலையைப் போக்கடித்துக் கொண்டாயா?" என்றது முயல்.

"அங்கே போய்ப் பட்டபாட்டைச் சொல்லுவதென்றால் நான்கு நாட்கள் கூடப் போதா. இந்த வழக்கை மட்டும் தீர்த்து வைத்துவிடும்" என்று கெஞ்சியது நாய்.

"என்ன சண்டையாம்! பிரதிவாதி யார்?" என்று கேட்டது முயல்.

"நான் தான் நரி" என்றது நரி.

"நரியா? இந்த வட்டாரத்திலே ஏது நரி? நமக்கு இப்பொழுது சமயம் இல்லை" என்றது முயல்.

"ஐயா, முயலாரே, முயலாரே" என்று வாலை ஆட்டிக்கொண்டு கெஞ்ச ஆரம்பித்துவிட்டது நாய்.

"போடா போ, உனக்குப் புத்தி கித்தி இல்லை! காரியமா அனுப்பினால் திரும்பியே தலைகாட்டுகிறதில்லை. வழக்குக் கொண்டு வந்துட்டான் வழக்கு. எனக்குக் கல்யாணமாகி இன்னும் அரைமணிப் பொழுது கழியவில்லை. அதற்குள் இந்த நரியோடே ஏண்டா சண்டை போட்டுக் கொண்டாய்?" என்று அதட்டியது முயல்.

"ஓய் முயலாரே, உம்முடைய உயிருக்காகப் பயப்பட வேண்டாம். இன்னும் சுமார் ஒரு மண்டலத்துக்கு முயல் கறி சாப்பிடக் கூடாது என்று எங்கள் ஜாதி வைத்தியர் எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். இப்பொழுது சும்மா தாராளமாக வெளியே வந்து பாருமே" என்றது நரி.

"சம்சாரம் வீட்டில்தானோ?" என்று வளைக்குள் குனிந்து பார்க்க முயன்றது நரி.

"ஓய், நீர் தூரத்திலேயே நின்று பேசும்; எனக்கு நன்றாகக் காது கேட்கிறது" என்று கீச்சிட்டது முயல்.

"அப்படியா! வழக்கு ஒன்றும் பிரமாதம் அல்ல. தினசரி அவருக்குத் தட்டில் வைக்கிற சாப்பாட்டை நான் இரண்டு நாட்களாகத் தின்று விடுகிறேன். அதுதான், பத்தியம் என்று சொன்னது உமக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கண்டு பயந்து, தம் வேலைக்கு ஆபத்தோ என்று கவலைப்படுகிறது நாய். எப்படி இருந்தாலும் ஜாதிக் குணம் போகுமா? மேலும் என்னைப் போல அர்த்த சாஸ்திரம், தண்டநீதி எல்லாம் அது படித்திருக்கிறதா? சுத்தப் பட்டிக்காடு" என்றது நரி.

"உமக்கு அர்த்த சாஸ்திரத்தில் நல்ல பரிசயமோ?" என்றது முயல்.

"என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்? கரதலப் பாடம்" என்றது நரி.

"ரொம்ப நாளாக எனக்கும் அது படிக்க வேண்டும் என்று ஆசை" என்றது முயல்.

"அப்பியசித்தால் போகிறது. நாளையிலிருந்தே பாடம் கேட்க வருகிறீரா?" என்றது நரி.

"வருகிற தக்ஷிணாயனத்தின் போது பாடம் ஆரம்பிக்கலாம்; நீர் என்ன சொல்ல வந்தீர்?" என்றது முயல்.

"நாய் எதற்காகச் சம்பளத்துக்கு உழைக்க வேண்டும்? கௌரவமாகப் பிழைக்க வழியில்லையா? ஏன், கலெக்டரையே விரட்டி விட்டால் போகிறது" என்றது நரி.

"கலெக்டரையா! விரட்டுகிறதா!" என்று பிரமித்துப் போயிற்று நாய்.

"கலெக்டரை விரட்டி, இந்தப் பங்களாவுக்கு உம்மையே ராஜாவாகப் பண்ணுகிறேன். ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற ஜனங்கள் நினைக்கிறது உமக்குத் தெரியுமா? முயலைக் கேட்டுப் பாரும். ஆமாம் என்று சொல்லும். எனக்கு ஒரு சிநேகிதன் ஆமை இருக்கிறது. அதை அழைத்துக்கொண்டு விடியற்காலையிலே வருகிறேன். முயலாரே, நீர் பயப்படாமல் சும்மா வெளியே வந்து நடமாடும்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது.

"நான் இப்பொழுதிருந்தே ராஜாவா?" என்று பல்லை இளித்துக் கொண்டு கேட்டது நாய்.

"ஆமாம் மகராஜா; நாளை மாலை பங்களாவில் கிருகப் பிரவேசம்" என்று சிரித்துக் கொண்டு சென்றது நரி.

"வடிகட்டின அசடே, இந்தத் துரோகியை இங்கே ஏன் கூட்டிக் கொண்டு வந்தாய்?" என்று அதட்டியது முயல்.

"நான் மகாராஜாவாக்கும்! என்னை முன்போல வா போன்னு பேசப்படாது" என்றது நாய்.

"சீ, முட்டாள், வாயை மூடிக்கொண்டு சற்றுக் கேளு. நரிக்கு முன்னால் தான் நீ ராஜா. நரி இல்லாவிட்டால் நீ என் சேவகன். அதைத் தூரத்தில் பார்த்தாலும் எனக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். நான் காயத்திரி பண்ணும்போது நீ என் பக்கத்தில் காவலுக்கு உட்கார்ந்திருக்க வேண்டும். முயலினி எங்காவது போனால் துணைக்கு நீயும் போக வேண்டும்" என்றது முயல்.

"அப்படியே ஆகட்டும், எஜமான்" என்றது நாய்.

"ஜாக்கிரதை. தந்திரத்தைத் தந்திரத்தால்தான் ஜயிக்க வேண்டும். அவன் கலெக்டரை ஒழிச்சதும் நாம் அவனை ஒழிக்க வேணும். ஜாக்கிரதை" என்றது முயல்.

"ஜாக்கிரதை" என்று சொல்லிவிட்டுப் பக்கத்திலேயே படுத்துக் கொண்டு தூங்கிப் போய்விட்டது நாய்.

"அர்த்த ஜாமமாய்விட்டது; முயலினியும் தூங்கியிருப்பாள்; நாமும் தூங்கவேண்டியதுதான்" என்று கொட்டாவி விட்டது முயல்.

"தூங்கல்லெ" என்ற கீச்சுக் குரல் வளைக்குள்ளிருந்து கேட்டது.

அதிகாலையிலே எழுந்திருந்து முயல் சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்திலே நரி குலைதெறிக்க ஓடிவந்தது. முயல் வெகுவேகமாக வளைக்குள் சென்று உட்கார்ந்துகொண்டு தலையை மட்டிலும் வாசல் பக்கம் வைத்துக் கொண்டது.

"என்ன, உமக்கு என்மேல் இன்னும் சந்தேகமா?" என்று கேட்டுவிட்டு "மகாராஜா" என்று நாயின் முன்னால் தண்டம் சமர்ப்பித்து நின்றது.

"எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் சந்தேகம் என்ன? சண்டை என்ன?" என்றது முயல்.

"மகாராஜா, என் வாக்குப் பொய்யாகுமா? ஆமை என்று சொன்னவுடனேயே ஆட்கள் எல்லாம் ஓட்டம் பிடிக்கிறார்கள். வீட்டுவாசலில் வண்டி வந்து நிற்கிறது. காலையிலேயே போய் ஆமையை வரும்படி சொல்லிவிட்டு வந்தேன். அதற்குள் தங்களுக்கு வெற்றி" என்றது நரி.

"அப்படியா, எங்கே நான் பார்க்க வேண்டுமே" என்று சொல்லிக் கொண்டு ஓடியது நாய்.

"மகாராஜா, மகாராஜா, மந்திரி பரிவாரம் இல்லாமல் தாங்கள் தனியாக ஓடலாமா" என்று சொல்லிக்கொண்டே பின் தொடர்ந்தது நரி.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் திரும்பி ஓடி வந்தது.

"என்ன அவசரம்? மகாராஜா எங்கே?" என்று கேட்டது முயல்.

"நாய்க்கு எப்பொழுதாவது ஜாதிப் புத்தி போகுமா? அதை மகாராஜா ஆக்கினதே பிசகு. தாங்களே மகாராஜா" என்று பல் இளித்தது நரி.

"என்ன ராஜத் துரோகம் பேசுகிறாய்? அர்த்த சாஸ்திரம் படித்த உனக்கு அடுக்குமா?" என்று கோபப்பட்டது முயல்.

"இனிமேல் தாங்களே எனக்கு மகாராஜா. எப்படியும் நாய், நாய்தான். ஓடிப்போய்த் தோட்டக்காரனிடம் வாலைக் குழைத்துக் கொண்டு நிற்குமா? அவன் அதன் கழுத்தில் கயிற்றைக் கட்டிப் போகிற வண்டியுடன் இழுத்துச் சென்றுவிட்டான்" என்றது நரி.

"மகாராஜாவைச் சிறைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்களாம்" என்று முயலினியிடம் தெரிவித்து வருத்தப்பட்டது முயல்.

"மகாராஜா, வருத்தப்பட்டு ஆகிற காரியம் எதுவும் இல்லை. இனிமேல் தாங்களே ராஜ்ய பாரத்தை ஏற்று நடத்த வேண்டும்" என்றது நரி.

"அதற்கென்ன, செய்தால் போகிறது. ஆனால் ஒரு நிபந்தனை. பகலில் நீ இங்கே தலைகாட்டக் கூடாது" என்றது முயல்.

'அதுவும் அப்படியா? அதற்கும் ஒரு வழி பண்ணுகிறேன்' என்று எண்ணமிட்டு, "ஆகட்டும் மகாராஜா" என்றது.

அன்று ராத்திரி நல்ல நிலா. கலெக்டர் ஓடிப் போகவில்லை கிழட்டுத் தோட்டக்காரனையும் கறுப்பு நாயையும் வேலைக்கு லாயக்கில்லை என்று விரட்டிவிட்டுத் துப்பாக்கியும் கையுமாக நின்றிருந்தார். கலெக்டர் பங்களாக் கோழிகளை ஜபித்துக்கொண்டு மந்திரி உத்தியோகம் பார்க்க வந்த நரி, அவருடைய துப்பாக்கிக் குண்டுக்கு இலக்காகி உயிரை விட்டது.

லதாக்ருஹத்தில் முயலினியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த முயல், வெடிச் சத்தம் கேட்டு, "இந்தப் பிரதேசமே ஆபத்துப் போல இருக்கே" என்று நடுநடுங்கியது.

"இதற்கு முன் பஞ்சவடி மாதிரி இருந்த இடம்; குட்டிச்சுவராகப் போச்சு" என்றது முயலினி.

"என்ன என்று பார்த்து வரட்டுமா?" என்றது முயல்.

"அது எதற்குப் பீடை? கூப்பிடு தூரத்திலே சர்க்கார் தோட்டம் இருக்கிறது. நாளைக்கு அங்கே போய்விடுவோம். உங்கள் ஜபதபங்களுக்குச் சௌகரியமாகக் குளம் ஒன்று உண்டு" என்றது முயலினி.

முயல்கள் கண்ணுக்குத் தென்படாததைக் கண்டு கலெக்டர் அதிசயப்படவில்லை. தமக்கு எதிராகப் பெரிய சதி நடந்ததும் அவருக்குத் தெரியாது.

(முற்றும்)

கலைமகள், ஜுன் 1945