எழு பெரு வள்ளல்கள்/காரி

விக்கிமூலம் இலிருந்து
காரி

அதிகமான் வரலாற்றிலே வந்த காரியும் ஏழு வள்ளல்களில் ஒருவன். அவன் முழுப் பெயர் மலையமான் திருமுடிக் காரி என்பது. மலையமான் என்பது அவன் குடிப் பெயர். திருக்கோவலூரே அவனுடைய தலைநகர். அதை நடுவிலே பெற்ற நாட்டைப் பல காலமாக ஆண்டு வந்தவர்கள் மலையமான்கள் என்னும் வீரக் குடியினர். அவர்கள் ஆண்ட நாடாதலின் அதற்கு மலையமான் நாடு என்ற பெயர் வந்தது. அது நாளடைவில் மாறி மலாடு என்று வழங்கலாயிற்று.

காரி ஈகையிற் சிறந்தவன்; வீரத்தில் இணையற்றவன். அவனிடத்தில் ஒரு பெரிய படை இருந்தது. தெரிந்தெடுத்த அடலேறு போன்ற வீரர்கள் அடங்கிய படை அது. அந்தப் படைப் பலத்தினால் அவனைக் கண்டால் யாரும் அஞ்சி நடுங்குவார்கள். இரு பெரு மன்னர்களுக்குள் போர் மூண்டால் அவரில் ஒரு மன்னன் மலையமான் திருமுடிக் காரியை அணுகுவான். தனக்குத் துணையாக வரவேண்டுமென்று சொல்வான். காரி தன் படையுடன் சென்று போரிலே ஈடுபடுவான். பிறகு வெற்றி யாருக்கு என்பதைப் பற்றி ஐயமே இல்லை. அவன் எந்தக் கட்சியில் சேர்ந்தானே அதற்குத்தான் வெற்றி.

அவனிடம் கரிய நிறம் பொருந்திய குதிரை ஒன்று இருந்தது; காரியென்பதே அதற்கும் பெயர். அது மலையமானுடைய உள்ளம் போலப் பாயும் இயல்புடையது. சோழனுக்கோ, பாண்டியனுக்கோ, சேரனுக்கோ துணையாகச் சென்று போரிடுவான் காரி. போர் முடிவில் வென்ற மன்னன் அவனுக்குப் பல பல பரிசில்களைத் தருவான். பொன்னும் மணியும் அளிப்பான், ஊர் அளிப்பான்; நாடு அளிப்பான். வண்டி வண்டியாகத் தான் பெற்ற பண்டங்களை ஏற்றிக்கொண்டு வருவான் காரி. யானைகளும் குதிரைகளும் தேர்களும் அவனுக்குப் பரிசிலாக வரும்.

சில நாட்களில் அத்தனையையும் காரி வாரி வீசுவான். புலவர்களைக் கண்டால் அவனுக்குப் பேரன்பு. அவர்களுக்குக் காதிற் கடுக்கன் போட்டுப் பார்ப்பான். தேரைக் கொடுத்து ஏறச் செய்து கண் குளிரக் கண்டு பெருமகிழ்ச்சி அடைவான். இதனால் அவனுக்குத் தேர் வழங்கும் பெரு வள்ளல் என்ற பெயர் வந்துவிட்டது. ‘'தேர்வண் மலையன்" என்று புலவர்கள் பாடினார்கள்.

'பெரும் போரில் வீரத்தைக் காட்டிப் போராடிப் பெற்ற பொருளாயிற்றே! பல காலம் வைத்துக் கொண்டு வாழலாம்' என்று அவன் நினைப்பதில்லை. தோள் உள்ள அளவும் துயர் இல்லை, வாள் உள்ள அளவும் வறுமை இல்லை என்று, வந்தவற்றையெல் லாம் வாரி வாரி வழங்கினான்.

புலவர் பெருமான் கபிலர் அவனுடைய இயல்பைக் கேள்வியுற்றார். அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. பெற்ற பொருள்களின் மேல் பற்றில்லாமல் வழங்கும் அதிசயத்தைத் தம் கண்ணாலே பார்க்க வேண்டுமென்று வந்தார்; கண்ணாரக் கண்டு வியந்தார்.

அவனுடைய ஈகையை ஒரு பாட்டில் அழகாகப் பாடினர். "கழலைப் புனைந்த அடியை யுடைய காரியே, உன்னுடைய நாடு கடற்கரையில் இருப்பதன்று; உள் நாட்டில் இருப்பது. அதனால் அதைக் கடல் கொள்ளாது; பகைவர்களும் கொள்ள அஞ்சுவார்கள். அத்தகைய நாட்டை நீ வேள்வி செய்து நாட்டுக்கு நலம் புரியும் அந்தணருக்குக் கொடுத்துவிட்டு நிற்கிறாய். முடியுடை மன்னர் மூவருள் யாராவது ஒருவன் வந்து உன்னத் துணையாக அழைத்துச் சென்று அளவற்ற உணவுப் பண்டங்களை வழங்குகிறான். அவற்றைப் பெற்றுக்கொண்டு இங்கே வந்த மறுநாளே, உன் புகழையும் உன் குடிப்புகழையும் சொல்லிக்கொண்டு வரும் புலவருக்கும் பாணருக்கும் அவற்றைக் கொடுத்து விடுகிறாய். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு நிற்கிறாய். உன்னுடையது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒன்றை வேண்டுமானல் சொல்லலாம். கற்புடைய உன் மனைவியின் தோள் ஒன்றுதான் உனக்கு உரிமையாக இருக்கிறது. இந்த நிலையில் நீ எவ்வளவு உள்ளச் செருக்கோடு இருக்கிறாய்!" என்ற கருத்தோடு ஓர் அரிய பாடலைப் பாடினார்.

காரியினிடம் பல புலவர்கள் வந்தார்கள். நன்றாகப் படித்த புலவர்களும் வந்தார்கள். அரை குறைப் படிப்பாளிகளும் வந்தார்கள். எல்லோருக்கும் கையிலே கிடைத்ததை வாரி வீசினான் அந்த வள்ளல். இதைக் கபிலர் கவனித்தார். அவனுடைய கொடையை அவர் பாராட்டினாலும், தரம் அறியாமல் அவன் வழங்குவதை அவர் விரும்பவில்லை. புலவர்களுக்குத் தரமறிந்து பாராட்டுபவர்களிடந்தான் அன்பு அதிகமாக இருக்கும். தரம் அறிதலை வரிசையறிதல் என்று சொல்வார்கள். இந்த உண்மையை மலையமானுக்கு அறிவுறுத்த வேண்டுமென்று கபிலர் கருதினார். ஒரு நாள் அதற்காக ஒரு பாட்டைப் பாடினார்.

"பெருந் தலைவனே, ஓரிடத்தில் இருக்கும் ஒரு வள்ளலே நோக்கி நாலு திசையிலிருந்தும் கலைஞர்கள் வருவார்கள். அவர்களின் தரத்தை அறிவதுதான் அரிய காரியம்; கொடுப்பது எளிது. கொடுப்பதற்குப் பொருள் இருந்தால் போதும்; வரிசையறிவதற்கோ தனித்திறமை வேண்டும். இதை நன்றாக நீ தெரிந்து கொள்ளவேண்டும். இனி, புலவர்களையெல்லாம் ஒரே நிறையாகப் பார்ப்பதை விட்டுவிடு" என்று அறிவுறுத்தினர்.

அவனுடைய வீரத்தையும் அவர் பாராட்டினார். "உலகில் துணையாக வந்தவனை அவனால் வெற்றி பெற்றவன் புகழ்வது தான் இயல்பு. உன் திறத்தில் அப்படி அன்று. வெற்றி பெற்றவனைப் போய்க் கேட்டால், 'நானா வென்றேன்? எல்லாம் காரி தந்த வெற்றி' என்று சொல்வான். தோற்றவனிடம் போனாலோ, "அந்தக் கட்சியில் மலையமான் சேர்ந்திருந்தான். அவன் மாத்திரம் அங்கே இராமல் இருந்தால் நான் எளிதில் வெற்றி அடைந்திருப்பேன்’ என்று கூறுவான். இப்படி, வென்றவனும் தோற்றவனும் உன் புகழையே சொல்லும்படி இணையில்லாத வீரனாக நிற்கிறாய் நீ" என்று புகழ்ந்தார்.

இவ்வாறு கொடையிலும் வீரத்திலும் சிறந்து வாழ்ந்திருந்த காரி சேரமானாகிய பெருஞ்சேரலிரும் பொறைக்காக ஓரியைக் கொல்லும்படி நேர்ந்தது. அதனால் அதிகமான் திருக்கோவலூரின் மீது படையெடுத்தான். அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை காரிக்கு. ஒரியோடு பொருதமையால் வீரர்கள் இளைப்புற்றிருந்தனர். அந்தச் சமயம் பார்த்து அதிகமான் போர் செய்யப் புகுந்தமையால் இயல்பான மிடுக்குடன் போர் செய்ய இயலவில்லை.

அப்போரில் தோல்வியுற்ற காரி சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையை அடைந்தான். அவன் அதிகமானோடு போர் தொடங்கினான். அப் போரில் காரி என்னும் தன் குதிரையின்மேல் ஏறி ஒரு பெரும் படைக்குத் தலைமை தாங்கினான் திருமுடிக்காரி. அவனுடைய வீரம் நன்றாகத் தகடூர்ப் போரில் வெளியாயிற்று. சேரமான் அந்தப் போரில் வென்றான். காரிக்கு அவனுடைய திருக்கோவலூரைத் தந்ததோடு வேறு பல பரிசில்களையும் வழங்கினான்.

மூன்று முடிமன்னர்களும் ஒரு சமயம் தம்முட் சண்டையின்றிச் சேர்ந்திருக்கும் நிலை வந்தது. அப்போது மூவரும் மலையமானுடைய பெருமையைப் பேச நேர்ந்தது. மூவரும் தனித்தனியே அவனைப் பாராட்டினர்கள். "இத்தகைய பெருவீரனுக்கு நாம் மூவரும் சேர்ந்து ஒரு சிறப்பைச் செய்யவேண்டும்" என்று முடிவு செய்தார்கள். முடியையணியும் உரிமை சேர சோழ பாண்டியர்களுக்கே இருந்தது. சில பெரும் புலவர்கள் முடியணியும் சிறப்புடையவர்களாக இருந்தார்கள். அவ்வாறே மலையமானுக்கும் முடி சூட்டி அதையணியும் உரிமையை வழங்கலாம் என்று தீர்மானித்தார்கள். ஒரு பெரு விழா நடத்தி அவனுக்கு முடி அணிந்தார்கள். அதற்குமுன் மலையமான் காரி என்ற பெயரே இருந்தது. இந்தச் சிறப்பு நிகழ்ச்சிக்குப் பின் அவனுக்கு மலையமான் திருமுடிக் காரி என்ற பெயர் நிலவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=எழு_பெரு_வள்ளல்கள்/காரி&oldid=506207" இலிருந்து மீள்விக்கப்பட்டது