உள்ளடக்கத்துக்குச் செல்

எழு பெரு வள்ளல்கள்/நள்ளி

விக்கிமூலம் இலிருந்து
நள்ளி

அவன் ஏழைப் புலவன். பல காலம் நல்ல உணவின்றி வாடிய சுற்றத்தோடு புறப்பட்டு வந்து கொண்டிருந்தான். கண்டீரம் என்ற நாட்டில் உள்ள தோட்டி என்னும் மலையைச் சார்ந்த வழியில் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். புலவனது இடையில் அழுக்கு ஆடை இருந்தது. நடக்கமாட்டாமல் அவன் ஒரு பலாமரத்தடியில் அமர்ந்தான். மற்றவர்களும் அப்படியே உட்கார்ந்தார்கள்.

சிறிது நேரத்தில் வில்லும் அம்பும் உடைய வீரன் ஒருவன் வந்தான். செல்வம் நிரம்பிய வாழ்க்கையை உடையவன் அவன் என்பதை அவன் தோற்றம் கூறியது. அவன் புலவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் கண்டான். அவர்கள் நிலையை ஒரு கணத்தில் உணர்ந்து கொண்டான். அவனைக் கண்டவுடன் புலவன் கையைக் குவித்துக்கொண்டே எழுந்தான். "அப்படியே இருங்கள்" என்று கையைக் கவித்து இருக்கச் செய்தான் வீரன். அவனுடன் வேட்டைக்கு வந்த காளையர்கள் இன்னும் வந்து சேரவில்லை. அதற்குள், அவனே தன் கையால் தீயைக் கடைந்து மூட்டினன். தான் கொன்ற மானின் தசையை அதிலே வாட்டிப் பதம் செய்து, "பாவம்! நீங்கள் மிகவும் பசியுடன் இருக்கிறீர்கள். இதை உண்ணுங்கள்" என்று கொடுத்தான். அந்தப் பசிக்கு அது அமுதமாக இருந்தது. புலவனும் பிறரும் வயிறு நிறைய உண் டார்கள். அவன் அருகில் இருந்த அருவியிலிருந்து நீர் கொண்டு வந்து அளித்தான். அதைக் குடித்துத் தாகம் போக்கிக் கொண்டார்கள்.

புலவன் அந்த வீரனிடம் விடை பெற்றுக் கொண்டான். அப்போது அவன், "உங்களைப் பார்த்தால் புலவரைப் போல இருக்கிறது. உங்களுக்கு மன்னர்கள் தக்க பரிசில்களை வழங்குவார்கள். காட்டு வாசிகளாகிய எங்களிடம் உங்களுக்கு வழங்கும் அணிகலன் யாதும் இல்லை. என் செய்வது!" என்று சொல்லித் தன் மார்பில் அணிந்திருந்த சிறந்த முத்துமாலையைக் கழற்றினான், கையில் அணிந்திருந்த கடகத்தையும் கழற்றினான். அவற்றைப் புலவன் கையில் அளித்தான். புலவனுக்கு வியப்புத் தாங்கவில்லை. "நீங்கள் எந்த நாட்டவர்?" என்று கேட்டான். அந்த வீரன் விடை கூறவில்லை. "உங்கள் பெயரைத் தெரிவிக்கலாமோ?" என்று புலவன் கேட்டான். அதையும் சொல்லவில்லை. புலவன் அந்த வீரனது பரிவையும் கொடையையும் அடக்கத்தையும் எண்ணி வியந்தபடியே புறப்பட்டு விட்டான். வழியிலே வந்தவர்களிடம் அடையாளம் சொல்லி, "அந்தக் குரிசிலை நீங்கள் அறிவீர்களோ?" என்று கேட்டான். அவர்கள், "அவன் தான் இந்தத் தோட்டி மலைக்குத் தலைவன்; கண்டீரக் கோப் பெருநள்ளி" என்றார்கள். அதைக் கேட்டு அயர்ந்து போனான் புலவன்.

இவ்வாறு ஓர் அழகிய வரலாற்றை அமைத்து வன்பரணர் நள்ளியென்னும் வள்ளலைப் பாராட்டி ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் புகழுக்கு உரிய நள்ளியென்னும் வள்ளல் கண்டீர நாட்டின் தலைவன். அந்த நாட்டில் முல்லை நிலமாகிய காடுகள் மிகுதி. அதனால் முல்லை நில மக்களாகிய ஆயரும் அவர்கள் காப்பாற்றி வரும் பசுமாடுகளும் அதிகம்.

காக்கைபாடினியார் என்பவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகை என்ற நூலில் இருக்கிறது. வெளியூர் போயிருந்த தன் கணவன் இன்னும் வரவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. ஒரு நாள் அவள் வீட்டில் காக்கை விடாமல் கத்திக் கொண்டிருந்தது. காக்கை கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்று சொல்வார். தன் கணவன் அன்று நிச்சயமாக வருவான் என்று நம்பி எதிர்பார்த்திருந்தாள் அவள். அவன் வந்துவிட்டான். அவளுக்குக் கரைகடந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. மறுநாள் அவள் தன் தோழியிடம், "அந்தக் காக்கை கரைந்ததைக் கேட்டு நம்பிக்கையோடு இருந்தேன். என் நம்பிக்கை பயன்பெற்றது. அப்படிக் கரைந்த காகத்துக்கு நான் என்ன செய்யப் போகிறேன்!” என்றாள்.

"நிறையச் சோறு போடேன்” என்று தோழி கூறினாள்.

"சோறு? அது எம்மாத்திரம்? நள்ளிக்கு உரிய காட்டில் வாழும் ஆயர்கள் வளர்க்கும் பல ஆக்களின் நெய்யிலே, தொண்டியிலே நன்றாக விளைந்த சோற்றைக் கலந்து ஏழு பாத்திரத்தில் அது உண்ணும் படி அளித்தாலும் அது செய்த பேருதவிக்கு ஈடாகாதே" என்று நன்றியறிவுடன் அந்தப் பெண் கூறினாள்.

இவ்வாறு ஒரு காக்கை உதவி செய்ததாகப் பாடியதால் நச்செள்ளையார் என்று இயற்கையாகப் பெயர் கொண்ட அந்தப் பெண்புலவருக்குக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று பெயர் நீண்டது. அந்த அழகிய பாட்டில் அவர் நள்ளியையும், அவனுடைய காட்டு வளத்தையும், அங்கே வாழும் ஆயர்களையும், அவர்கள் வளர்க்கும் பசுக்களையும், அவற்றால் கிடைக்கும் நெய்யின் வளப்பத்தையும் பாராட்டியிருக்கிறார்,

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஒரு முறை கண்டிர நாட்டுக்கு வந்தார். நள்ளியின் அரண்மனையில் புகுந்தார். அங்கே ஓரிடத்தில் நள்ளியின் தம்பியாகிய இளங்கண்டீரக் கோவும், விச்சி மலைக்குத் தலைவனாகிய குறுநில மன்னன் தம்பி இளவிச்சிக்கோவும் பேசிக்கொண்டிருந்தார்கள். புலவர் போன போது இருவரும் எழுந்து நின்று மரியாதை காட் டினர். புலவர் நள்ளியின் தம்பியைத் தழுவிக் கொண்டு, நன்றாக இருக்கிருயா தம்பி?" என்று அன்போடு கேட்டார். ஆனால் விச்சிக்கோவின் தம்பியைத் தழுவவில்லை.

இது கண்டு வருந்திய அவன், "புலவரே, நீர் இவரை மட்டும் தழுவிக்கொண்டு என்னைத் தழுவாமல் இருக்கிறீரே! ஏன்?" என்று கேட்டான்.

"இவன் குல முதல்வர்களும் இவன் தமையனும் இவனும் கொடையிற் சிறந்தவர்கள்; பாடும் புலவர்களுக்குப் பரிசில் தருபவர்கள். வீட்டில் ஆடவர் இல்லையானுலும் பெண்கள் பெண் யானைகளை அலங்காரம் செய்து வழங்குவார்கள்; அவர் இல்லை; பிறகு வாருங்கள்" என்று சொல்வதில்லை. அந்தக் குலத்தில் பிறந்தவனாதலின் இவனைத் தழுவினேன். நீயோ நன்னன் வழி வந்தவன். புலவர் வேண்டுகோளைப் புறக்கணித்து முறையின்றிப் பெண்ணைக் கொன்று பழி பூண்டவன் அவன். பாடும் புலவர்கள் வந்தால் உங்கள் வீட்டுக் கதவு மூடியிருக்கும். இந்தக் காரணங்களால் புலவர் கூட்டமே உங்களைப் பாடுவதை விட்டு விட்டது'"என்று விடை கூறினார் புலவர்.

அந்தக் குமரன் என்ன செய்வான் பாவம்! முகம் கவிழ்ந்தான்.

இவ்வாறு வழி வழி வந்த வள்ளன்மையில்லை விளக்கமுற்றவன் நள்ளி; தன் பெயர் வெளியில் தெரியாமல் உதவி புரிபவன்; வல்வில் வீரன். எழு பெரு வள்ளல்களில் ஒருவகை அவனை இன்றும் தமிழுலகம் பாராட்டி இன்புறுகிறது.