ஏலக்காய்/ஏலக்காய் வாரியம்

விக்கிமூலம் இலிருந்து

ஏலக்காய் வாரியம்!


இந்திய அரசியல் சாசனத்தின் ஆதரவோடு 1955 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஏலக்காய்ச் சட்டத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் ஏலக்காய் வாரியம் (The Cardamom Board) நிறுவப்பட்டது. 'ஏலட்டேரியா கார்டமம்' எனப்படும் சிறிய ஏலக்காய் ரகத்தின் முழு அளவிலான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் அவசியமான எல்லாவகையான பொறுப்புக்களையும் மேற்கொண்டு வாரியம் இயங்கியும் இயக்கப்பட்டும் வருகிறது.

ஏலக்காய் வாரியத்தின் நேரடி நிருவாகத்தின் கீழ் தற்போது 'அமோமம் கார்டமோம்' எனப்படும் பெரிய ஏலக்காய் வகையின் மேன்மையும் மேம்பாடும் 14.7.1979 முதல் சீரடைந்து வருகின்றன!


வாரியத்தின் நடைமுறைச் செயற்பணிகள்!

ஏலக்காய் வாரியம் நடைமுறைப் படுத்தி வரும் வளர்ச்சி மற்றும் செயற்பணித் திட்டங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தொடர்கின்றன; தொடர் சேர்க்கின்றன.

ஏலக்காய் விவசாயிகளுக்கு மத்தியில் கூட்டுறவு முயற்சிகளை முன்னேற்றம் அடையச் செய்வது; சாகுபடியாளர்கள் தங்களுடைய விளைபொருட்களுக்கு லாபகரமான விலைகளை உறுதியுடன் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது;

ஏலக்காய் வேளாண்மையில் அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான நவீனச் சாகுபடி முறைகளை மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு அவசியமான ஆலோசனைகள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதோடு, ஏலக்காயின் செயற்பாங்கு மற்றும் மறுநடவுப் பணிகளில் அறிமுகப் படுத்தப்படும் புதிய செயலாற்றல்கள் பற்றி விவசாயிகளிடையே விளம்பரம் செய்வது;

ஏலக்காய் விளைச்சலை மேம்படுத்துவதுடன், விற்பனையையும் ஏற்றுமதியையும் விருத்தி செய்து, ஏலக்காயின் விலைகளை ஒரேசீராக நிலைபெறச் செய்திட வழிவகை காண்பது;

ஏலக்காய்ப் பரிசோதனை மற்றும் தரநிலை நிர்ணய முறைகளில் பயிற்சி அளிப்பது:

ஏலக்காய்ப் பயன் முறையை விரிவடையச் செய்யவும். அதன் மூலம் ஏலக்காய்ச் செலவழிவை முன்னேற்றம் அடையச் செய்யவும் தேவைப்படும் பொது விளம்பரப் பணிகளை இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரப்படுத்துவது:

ஏலக்காய்த் தொழிலில் ஈடுபடும் ஏல விற்பனையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகர்களுக்கும் உரிய லைசென்ஸ்–அனுமதிகளை வழங்குவது;

இந்தியாவிலும் கடல்கடந்த வெளிநாடுகளிலும் ஏலக்காயின் விற்பனை வாணிகத்தை அபிவிருத்தி செய்வது; ஏலக்காய் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த புள்ளிக் கணக்குகளைச் சேகரம் செய்து அவ்வப்போது வெளியிடுவது;

ஏலப் பயிர்த் தொழில் நடத்தப்படும் பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையை உயர்த்தவும், அவர்கட்கான வசதிகள், ஆர்வத்துரண்டுதல்கள் மற்றும் பண உதவி வாய்ப்புக்களை அளிப்பது;

ஏல விவசாயம் பற்றிய தொழில் நுட்ப யோசனைகளையும் விரிவாக்கப் பணிகளையும் வழங்குவது;

ஏலத் தோட்ட விவசாயப் பண்ணைகளில் மறுநடவுக்கடன் உதவிகள் புரிவது;

தவணைமுறைக் கடன் வாயிலாக நீர்ப்பாசனத் தெளிப்பான் முதலான விவசாய உபகரணங்களை விநியோகம் செய்வது;

நோய்க்கு இலக்காகாததும் உயர் விளைச்சல் தரக்கூடியதுமான ஆரோக்கியமான ஏல நாற்று ரகங்களை விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் சகாயமான விலைகளில் விநியோகம் செய்வது;

மண் பரிசோதனை மற்றும் உரம் இடுதல் சம்பந்தப்பட்ட இலவசமான ஆலோசனைகளை வழங்குவது;

ஏலக்காய்த் தோட்டச் சாகுபடியின் ஆக்கத்துக்கும் ஏலக்காய் விற்பனையின் ஊக்கத்துக்கும் உதவக்கூடிய தீவிரப் பிரசார இயக்கங்களை நடத்துவது;

ஏலக்காய்ச் சமுதாயம் உள்நாட்டிலும் அயல்நாடுகளில் சர்வதேச அளவிலும் வளர்ந்தோங்க நடவடிக்கை எடுப்பது; அடிப்படை ஆராய்ச்சி முடிவுகளை ஏலக்காய். வேளாண்மையில் பொருத்திச் சோதித்துப் பார்க்கும் களப் பரிசோதனை முயற்சிகளை விரிவாக்குவது;

ஏலச் சாகுபடியில் விஞ்ஞான வழியிலும் தொழில் நுணுக்கச் சார்பிலும் பொருளாதார ரீதியிலும் ஆய்வு ஆராய்ச்சிகளை - நடத்துவது;

மற்றும்—

ஏல விவசாயத் தோட்டப் பண்ணைத் தொழில் துறைகளின் சகலவிதமான வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் தேவைப்படக்கூடிய பிற நடவடிக்கைகளை மேற்கொள்வது.

ஏலக்காய் வாரியத்தின் பயனுள்ள செயற்பணி நடை. முறைகள் ஏலக்காய் உழவுப் பெருமக்களுக்குப் பயனளிக்கும் நடவடிக்கைகளாகவே அமைந்து வருவதும் ஏற்றிப் போற்றப்பட வேண்டிய செய்தி ஆகின்றது.

அரேபியக் கடலின் ராணியாக விளங்கும் கேரளத்தில் கொச்சியைச் சேர்ந்த ஏர்ணாகுளம் நகரில் வாசனைத். திரவியங்களின் ராணியாகத் திகழும் ஏலக்காய்க்கான வாரியம் செயற்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சகத்தின் நிர்வாக மேற்பார்வையில் செயலாற்றும் வாரியத்தின் தலைவர், வளர்ச்சித்துறை இயக்குனர் ஆகியோரை மத்திய அரசுதான் நியமனம் செய்யும்.

வாரியம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றி அமைக்கப்படுவது சட்ட மரபு. வாரியத்தின் அமைப்பு:

கடந்த 17-11-1982ல் திருத்தி அமைக்கப்பட்ட வாரியத்தில் 23 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்ற அங்கத்தினர்கள் மூவர்: இவர்களில் இருவரை மக்கள் அவையும் ஒருவரை மாநிலங்கள் அவையும் தேர்ந்தெடுக்கும். மத்திய வர்த்தகம், நிதி மற்றும் விவசாய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மூவர். ஏலம் விளையும் தென் மாநில அரசுகளின் பிரதிநிதிகளாக 15 உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது நடை முறை. இவர்கள் மூன்று மாநிலங்களின் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பொருள் நுகர்வோர் மற்றும் பிற ஏலக்காய்த் துறையினருக்குப் பிரதிநிதிகளாகப் பணி புரிவார்கள்.

அத்துடன், வாரியத்தின் துணைத் தலைவரை வாரியத்தின் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க, வாரியத்தின் செயலாளரை மத்திய அரசே நியமனம் செய்யும்!


வாரியத்தின் மேலாண்மை

உலக நாடுகளின் ஒருமித்த கவனத்தையும் ஒருங்கிணைந்த வரவேற்பையும் பெற்றுள்ளது அல்லவா இந்திய ஏலக்காய்?—அதுபோல்வே தான், ஏலக்காய் வாரியத்தின் பயனுள்ள செயற்பணிகளும் உலக மேடைகளில் சீரோடும் சிறப்போடும் பேசப்படுகின்றன.

வாரியத்தின் இந்நாள் தலைவராக (Chairman) திரு. கே. மோகன சந்திரன் ஐ.ஏ. எஸ் நற்பணி ஆற்றி வருகிறார். வாரியத்தின் முந்தையத் தலைவராகத் தமிழ்ப் பெருங்கவிஞர் திரு. டி. வி. சுவாமிநாதன், ஐ. ஏ. எஸ். பேரோடும் புகழோடும் விளங்கினார். இப்போது அவர் கேரள அரசின் பொறுப்பு மிக்க செயலாளர்!

தற்சமயம் மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகப் பதவி வகிக்கும் பேராசிரியர் கே. எம். சாண்டி, பின்னர் வாரியத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அப்பால், திரு. எஸ். ஜி. சுந்தரம் ஐ. ஏ. எஸ். வாரியத்தின் தலைவர் ஆனார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் பஞ்சாப் மாநிலத்தில் 16 ஆண்டுகள் அரசுப் பணி புரிந்தபின் கேரளம் நாடி வந்தார்.

ஏலக்காய்ச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு ஏலக்காய் வாரியத்தின் தலைமைச் செயலகம் கேரளம் ஏர்ணாகுளத்தில் அதன் தலைவரின் தலைமைப் பொறுப்பின் கீழ், ஏலக்காய் வளர்ச்சி மற்றும் மேன்மைக்கான பணிமுறைகளில் இயங்கிவருகிறது.

வாரியத்தின் ஏலக்காய் வளர்ச்சித் துறையின் சார்பில், ஒரு பிராந்திய அலுவலகமும், ஐந்து வட்டார அலுவலகங்களும் இருபத்தெட்டு செயற்களப் பிரிவுகளும் அதிகார பூர்வமான நாற்றுப் பண்ணைகள் இருபத்தொன்றும் ஏலம் பயிர் செய்யப்படும் கேரளம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் செயலாற்றி வருகின்றன.

இவை தவிர, இணைப்புத்துறை அலுவலகங்கள் வேறு புதுடில்லி, சென்னை, பெங்களுர் மற்றும் கொச்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வாரியத்தின் பெருமிதத்தைப் பெருமைப்படுத்திடும் அளவிலே, 'இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம்' ஒன்று கேரளத்தில் மயிலாடும்பாறையில் வெற்றிகரமாக இயங்கியும் இயக்கப்பட்டும் வருகிறது. அதன் இரண்டு வட்டார நிலையங்கள் முறையே கர்நாடகத்தில் சக்ளஸ்பூரிலும் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சார்ந்த தடியான் குடிசையிலும் செயற்பட்டு வருகின்றன.

ஆய்வுக்கூடத்தோடு கூடிய மண் பரிசோதனைப் பிரிவும் மயிலாடும்பாறை ஆய்வு நிலையத்தில் சேவை செய்கிறது.


பொது விளம்பரப் பணிகள்

வாரியத்தின் தலைமையகத்தில் பொது விளம்பரத் துறை மிகவும் சுறுசுறுப்பான பிரிவு. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏலக்காயை மென்மேலும் பொது, மக்களிடையே விளம்பரப்படுத்தவும், ஏலக்காய். உபயோகம் விருத்தி அடையவும் கைகொடுக்கும் தடங்களில் வர்த்தகப் பொருட்காட்சிகள், கருத்தரங்குகள், மதிப்பாய்வுகள், பிரசார இயக்கங்கள் போன்ற காரண காரியங்களில் முழுமூச்சோடு பாடுபடுவது இத்துறை. இவை போக, இந்திய ஏலக்காய்த் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடும் இலட்சியத்துடன் ஏலக்காய்க்கான மாத இதழ். ஒன்றும் 'கார்டமம்' என்று ஆங்கிலத்திலும், 'ஏலம்' என மலையாளத்திலும் 'ஏலக்காய்' என்பதாக அமுதத் தமிழிலும் 'ஏலக்கி’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது!


ஏலக்காய்ச் செய்தி

ஏலக்காயின் ஏல விற்பனை விலைகளைச் சாகுபடி, மற்றும் விற்பனைத் துறையினரோடு மக்களும் தெரிந்து கொள்ள உதவும் வண்ணம் 'CAP' (Cardamom Auction Prices) என்னும் ஆங்கில வார ஏடு ஒன்றும் வெளியிடப் படுகிறது.

மேலும், 'ஏலக்காய்த் தோழன்' என்ற கவர்ச்சிமிகு பெயரோடு ஏலக்காய் மீதான தகவல்கள் அடங்கிய விலை மதிப்பு மிக்க நாட்குறிப்பையும் வாரியம் ஆண்டுதோறும் பிரசுரம் செய்து வருகிறது. பல வண்ணங்களில் ஏலக்காய்ச் சாகுபடி முறைகள், தழை உரம் இடுதல், நோய்த் தடுப்பு, ஏலக்காப்ப் பயன் முறைகள், உணவுத் தயாரிப்பில் ஏலம், ஏலக்காய்ப் புள்ளி விவரங்கள் போன்ற சிறுசிறு நூல்களும் துண்டுப் பிரசுரங்களும் பல மொழிகளிலே வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஏலக்காய் பற்றிய செய்திப் படம் ஒன்றும் வண்ணக் கோலத்தோடு ஏலச் சாகுபடி மாநிலங்களிலெல்லாம் திரையிடப்படுகிறது.

இது தவிர, பெரிய ஏலக்காய் குறித்த உள்நாட்டு விற்பனை மதிப்பாய்வின் அறிக்கை ஒன்றையும் இப்போது புதிதாகவே வெளியிட்டுள்ளது வாரியம்.

ஏலக்காயை விவசாயம் செய்பவர்களில் பெரும் பான்மையினர் சின்னஞ் சிறிய விவசாயிகள்தானே? ஆகவே, அவர்கள் கூட்டுறவு முறையில் வளம் பெற, கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படவும் வாரியம் உதவுகிறது. இத்துறையில் ஏலக்காய்க் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏலக்கேந்திரங்களில் சிறு சாகுபடியாளர்கள் மூலம் ஏலக்காய் கொள்முதல் செய்யப் படவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

வாரியத்தின் வாயிலாகக் கல்வி நிறுவனங்களுக்கும் மருத்துவ அமைப்புக்களுக்கும் மூலதன மான்யங்களும் வழங்கப்படும். ஏலத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்குப் படிப்பிற்கான உதவிப் பணமும் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர் நலன் ஏலச் சாகுபடியைப் பொறுத்த மட்டில் வெகு பொறுப்போடு பேணிக் காக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏலக்காய் ஏற்றுமதிகளை முன்னேறச் செய்திட, ஏற்றுமதியாளர்களுக்கு 10% அளவில் ரொக்கப்பணம் ஈட்டுத்துணையாக விநியோகம் செய்யப்படுகிறது.

ஏலக்காயை உலர்த்தவும் பதப்படுத்தவும், ஏல விவசாயிகளுக்கு நிதி உதவிகளை வாரியம் அளிக்கும். அப்போதுதானே ஏலக்காய் தர நிலைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்கி அக்மார்க் முத்திரை பெற்று, வெளி நாடுகளில் போட்டி போடவும் முடியும்!வாரியம் மேற்கொண்டுள்ள தீவிரச் சாகுபடி முறை நடவடிக்கைகளும் விரிவாக்க ஆலோசனைத் திட்ட நடைமுறைகளும் விவசாயிகளிடையே செல்வாக்குப் பெற்றிருப்பதும் உண்மை. ஏலக்காயைச் சேமித்து வைப்பதற்கான வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏலப் பயிர் விளைச்சல் பகுதிகளுக்கு மறுநடவு உதவித் தொகைகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஏல விவசாயம் செய்ய முன்வரும் பங்குடி மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் ஒன்றும் அமல் நடத்தப்படுகிறது.

நோய்த்தடுப்பு, பயிர்ப் பாதுகாப்பு, தேன்கூடு ஏற்பாடு மற்றும் பாசனக் குழாய் அமைப்புக்கான நிதி உதவிகளையும் வாரியம் வழங்கும். சர்வதேச ஏலக்காய் வாணிபத்தை மேன்மையுறச் செய்ய, மத்தியக் கிழக்கில் பாஹ்ரென் நகரில் வாரியத்தின் அலுவலகம் 1981 முதல் செயற்பட்டு வருகிறது.

அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஏலக்காய்ச் சரக்குகள் மீது விதிக்கப்படும் 3% அளவிலான 'செஸ்' தீர்வை வரிகளினின்றும் கிடைக்கின்ற வசூல் தொகைகள் மூலம் வாரியத்தின் நிர்வாகம் மற்றும் வளர்ச்சிப் பணிச் செலவுகள் சமாளிக்கப்படுகின்றன. கூடுதல் நிதி தேவைப்படும்போது, நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் மத்திய அரசும் நிதி உதவிகளை நிர்னயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப வழங்கும்.

1983 - 84-ல் வாரியத்தின் கூடுதல் செலவு ரூ. 225.23 லட்சமாக உயர்ந்தது. 1984 - 85 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு நிதி நிலை ரூ. 349.55 லட்சமாக அமையும். 1985 - 86 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ரூ. 540.33 லட்சமாக நிர்ணயிக்கப்படுகிறது.

இந்திய ஏலக்காய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் நடப்பு 1985 - 86 ஆம் ஆண்டிலே மீண்டும் பழைய நிலையை அடையவும் 1978 - 79-ல் எய்திய 4500 மெட்ரிக் டன் உற்பத்தி அளவைப் பெறவும், அதே 1978 - 79 ஆம் ஆண்டில் ஏலக்காய் ஏற்றுமதிகளின் வாயிலாக இந்திய நாட்டுக்குக் கிட்டிய ரூ. 58.40 கோடி அந்நியச் செலாவணி வருவாயைத் திரும்பவும் இந்த நடப்பு 1985 - 86 ஆம் ஆண்டிலும் பெற்றுச் சாதனை புரியவும் ஆர்வமும் ஊக்கமும் கொண்டு செயலாற்றி வருகிறது. ஏலக்காய் வாரியம்!

ஏலத்தோட்டச் சாகுபடியின் வாழ்வும் வளமும் தானே ஏலக்காய் வாரியத்தின் செயலாற்றல் திறனுக்குச் சாட்சி சொல்லி, இந்திய ஏலக்காய் ராணியின் வரலாற்றுப் புகழை உலக அரங்கில் என்றென்றும் கொடி கட்டிப் பறந்திடச் செய்யவும் முடியும்!

ஏலக்காய் ராணி பாரதத் திருநாட்டிலே என்றென்றும் இளமைப் பொலிவுடனும் நறுமண இன்சுவையுடனும் திகழ்ந்து கொண்டுதான் இருப்பாள்!

ஏலக்காய் ராணி சிரஞ்சீவி ராணி!