உள்ளடக்கத்துக்குச் செல்

ஏலாதி

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஏலாதி

ஆசிரியர் கணிமேதாவியார்

சிறப்புப் பாயிரம்

[தொகு]
இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து - நல்ல
அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து.

கடவுள் வணக்கம்

[தொகு]
அறுநால்வ ராய்புகழ்ச் சேவடி யாற்றப்
பெறுநால்வர் பேணி வழங்கிப் - பெறுநால்
மறைபுரிந்து வாழுமேல் மண்ணொழிந்து விண்ணோர்க்(கு)
இறைபுரிந்து வாழ்தல் இயல்பு.

நூல்

[தொகு]
சென்ற புகழ்செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
வழிவந்தார் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1
கொலையுரியான் கொல்லான் புலால் மயங்கான் கூர்த்த
அலைபுரியான் வஞ்சியான் யாதும் - நிலைதிரியான்
மண்ணவர்க்கும் அன்றி மதுமலிபூங் கோதாய்
விண்ணவர்க்கும் மேலாய் விடும். 2
தவம் எளிது தானம் அரிதுக் கார்க்கேல்
அவம் அரி(து) ஆதல் எளிதால் - அவமிலா
இன்பம் பிறழின் இயைஎளிது மற்றதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3
இடர்த்தீர்த்தல் எள்ளாமை கீழினஞ்சே ராமை
படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்
கண்டவர் காமுறுஞ் சொல்காணின் கல்வியின்கண்
விண்டவர்நூல் வேண்டா விடும். 4
தனக்கென்றும் ஓர்பாங்கன் பொய்யான்மெய் யாக்கும்
எனக்கென்(று) இயையான்யா தொன்றும் - புனர்க்கொன்றை
போலும் இழையார்சொல் தேறான் களியானேல்
சாலும் பிறநூலின் சார்பு. 5
நிறையுடைமை நீர்மை யுடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவையுடையான் பல்லுயிர்க்கும்
தாயன்னன் என்னத் தகும். 6
இன்சொல் அளாவல் இடம்இனிதூண் யாவர்க்கும்
வன்சொல் களைந்து வகுப்பானேல் - மென்சொல்
முருந்தேய்க்கும் முட்போல் எயிற்றினாய் நாளும்
விருந்தேற்பர் விண்ணோர் விரைந்து. 7
உடன்படான் கொல்லான் உடன்றார்நோய் தீர்ந்து
மடம்படான் மாண்டார்நூல் மாண்ட - இடம்பட
நோக்கும்வாய் நோக்கி நுழைவானேல் மற்றவனை
ஆக்குமவர் ஆக்கும் அணைந்து. 8
கற்றாரைக் கற்ற துணையார் எனமதியார்
உற்றாரை அன்னணம் ஓராமல் - அற்றார்கட்(கு)
உண்டி உறையுள் உடுக்கை இவைஈந்தார்
பண்டிதராய் வாழ்வார் பயின்று. 9
செங்கோலான் கீழ்க்குடிகள் செல்வமும் சீரிலா
வெங்கோலான் கீழ்க்குடிகள் வீந்துகவும் - வெங்கோல்
அமைச்சர் தொழிலும் அறியலம்ஒன்(று) ஆற்ற
எனைத்தும் அறியாமை யான். 10
அவாஅறுக்கல் உற்றான் தளரான்அவ் ஐந்தின்
அவாஅறுப்பின் ஆற்ற அமையும் - அவாஅறான்
ஆகும் அவனாயின் ஐங்களிற்றின் ஆட்டுண்டு
போகும் புழையுள் புலந்து. 11
கொலைக்களம் வார்குத்துச் சூதாடும் எல்லை
அலைக்களம் போர்யானை ஆக்கும் - நிலைக்களம்
முச்சா ரிகைஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை
நச்சாமை நோக்காமை நன்று. 12
விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை உட்குடைத்தா வென்று - களையாமை
நூற்பட்டார் பூங்கோதாய் நோக்கின் இவையாறும்
பாற்பட்டார் கொண்டொழும் பண்பு. 13
பொய்யான் புலாலொடு கட்போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனஞ்சேரான் - வையான்
கயலியல்உண் கண்ணாய்! கருதுங்கால் என்றும்
அயல அயலவாம் நூல். 14
கண்போல்வார்க் காயாமை கற்றார் இனஞ்சேர்தல்
பண்போல் கிளவியார்ப் பற்றாமை - பண்போலும்
சொல்லார்க்(கு) அருமறைசோ ராமை சிறிதெனினும்
இல்லார்க்(கு) இடர்தீர்த்தல் நன்று. 15
துறந்தார்கண் துன்னித் துறவார்(கு) இடுதல்
இறந்தார்க்கு இனிய இசைத்தல் - இறந்தார்
மறுதலை சுற்றம் மதித்தோம்பு வானேல்
இறுதலில் வாழ்வே இனிது. 16
குடியோம்பல் வன்கண்மை நூல்வன்மை கூடம்
மடியோம்பும் ஆற்றல் உடைமை - முடியோம்பி
நாற்றம் சுவைகேள்வி நல்லார் இனஞ்சேர்தல்
தேற்றானேல் தேறும் அமைச்சு. 17
போகம் பொருள்கேடு மான்வேட்டம் பொல்லாக்கள்
சோகம் படுஞ்சூதே சொல்வன்மை - சோகக்
கடுங்கதத்துத் தண்டம் அடங்காமை காப்பின்
அடுங்கதமில் ஏனை அரசு. 18
கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியார் இனஞ்சேரான் - சொல்லும்
மறையின் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை. 19
மின்னேர் இடையார்சொல் தேறான் விழைவோரான்
கொன்னே வெகுளான் கொலைபுரியான் - பொன்னே
உறுப்பறுத் தன்ன கொடையுவப்பான் தன்னின்
வெறுப்பறுத்தான் விண்ணகத்தும் இல். 20
இளமை கழியும் பிணிமூப்(பு) இயையும்
வளமை வலிஇவை வாடும் - உளநாளால்
பாடே புரியாது பால்போலும் சொல்லினாய்
வீடே புரிதல் வீதி! 21
வாள்அஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்
ஆள்அஞ்சான் ஆம்பொருள் தானஞ்சான் - நாள்எஞ்சாக்
காலன் வரஒழிதல் காணின்வீ டெய்திய
பாவின்நூல் எய்தப் படும். 22
குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமும் நோக்கான்
மணநோக்கான் மங்கலமும் நோக்கான் - கணநோக்கான்
கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக் கோடல் வனப்பு. 23
பிணிபுறப்பு மூப்போடு சாக்காடு துன்பம்
தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல் வீட்டு நெறி. 24
பாடகஞ் சாராமை பாத்திலார் தாம்விழையும்
நாடகஞ் சாராமை நாடுங்கால் - நாடகம்
சேர்ந்தால் பகைபழி தீச்சொல்லே சாக்காடே
தீர்ந்தால்போல் தீரா வரும். 25
மாண்டமைந்(து)ஆ ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ். 26
அஃகுநீ செய்யல் எனஅறிந்(து) ஆராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீக்காட்சி - வெஃகுமான்
கள்ளத்த அல்ல கருதின் இவைமூன்றும்
உள்ளத்த ஆக உரை. 27
மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே
மெய்யே உணர்ந்தார் மிகஉரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும்
மறலையின் வாயினவாம் மற்று. 28
நிலையளவின் நின்ற நெடியவர்தாம் நேரா
கொலைகளவு காமத்தீ வாழ்க்கை - அலையளவி
மையெனநீள் கண்ணாய்! மறுதலைய இம்மூன்றும்
மெய்யள வாக விதி. 29
மாண்டவர் மாண்ட அறிவினால் மக்களைப்
பூண்டவர்ப் போற்றிப் புரக்குங்கால் - பூண்ட
ஓளரதனே கேத்திரசன் காணீனன் கூடன்
கிரிதன்பென கற்பவன் பேர். 30
மத்த மயிலன்ன சாயலாய் மன்னிய சீர்த்
தத்தன் சகோடன் கருத்திரமன் புத்திரி
புத்ரனப வித்தனோடு பொய்யில் உருகிருதன்
இத்திறத்த எஞ்சினோர் பேர். 31
உரையான் குலன்குடிமை ஊனம் பிறரை
உரையான் பொருளொடுவாழ்(வு) ஆயு - உரையானாய்ப்
பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய் ஈத்துண்பான்
தேவாதி தேவனாய்த் தேறு. 32
பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய்யுரையான் உள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தல் மயிலன்னாய் ! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இவ்வுலகம் விட்டு. 33
சிதையுரையான் செற்றம் உரைய சீறில்லான்
இயல்புரையான் ஈனம் உரையாள் - நசையவர்க்குக்
கூடுவ(து) ஈவானைக் கொவ்வைபோல் செவ்வாயாய்
நாடுவர் விண்ணோர் நயந்து. 34
துறந்தார் துறவாதார் துப்பிலார் தோன்றார்
இறந்தார்ஈ டற்றார் இளையர் - சிறந்தவர்க்கும்
பண்ணாரும் சொல்லாய் பழியில்ஊண் பாற்படுத்தான்
மண்ணாளும் மன்னாய் மற்று. 35
காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்
ஆழப் படும்ஊண் அமைத்தார் இமையவரால்
வீழப் படுவார் விரைந்து. 36
அழப்போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்
என்னேஇக் காலன்ஈ(டு) ஓரான் தவமுயலான்
கொன்னே யிருத்தல் குறை. 37
எழுத்தினால் நீங்கா(து)எண் ணால்ஒழியா(து) ஏத்தி
வழுத்தினால் மாறாது மாண்ட - ஒழுக்கினால்
நேராமை சால உணர்வார் பெருந்தவம்
போகாமை சாலப் புலை. 38
சாவ(து) எளி(து)அரிது சான்றாண்மை நல்லது
மேவல் (எளிது)அரிது மெய்போற்றல் - ஆவதன்கண்
சேறல் எளிது நிலையரிது தெள்ளியராய்
வேறல் எளி(து)அரிது சொல். 39
உலையாமை உற்றதற்(கு) ஓடி உயிரை
அலையாமை ஐயப் படாமை - நிலையாமை
தீர்க்கும்வாய் தேர்ந்து பசியுண்டு நீக்குவான்
நோக்கும்வாய் விண்ணின் உயர்வு. 40
குறுகான் சிறியாரைக் கொள்ளான் புலால்பொய்
மறுகான் பிறர்பொருள் வெளவான் - இறுகானாய்
ஈ(டு)அற் றவர்(கு)ஈவா னாயின் நெறிநூல்கள்
பாடிறப்ப பன்னும் இடத்து. 41
கொல்லான் உடன்படான் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலான்மயங்கல் - செல்லான்
குடிப்படுத்துக் கூழ்ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ஆண்(டு) அரசு. 42
சூ(து)உவவான் பேரான் கலா(வு)உரையான் யார்திறத்தும்
வா(து)உவவான் மாதரார் சொல்தேறான் - காதுதாழ்
வான்மகர வார்குழையாய் மாதவர்க்கு ஊண்ஈந்தான்
தான்மகர வாய்மாடத் தான். 43
பொய்யான்பொய் மேவான் புலால்உண்ணான் யாவரையும்
வையான் வழிசீத்து வால்அடிசில் - நையாதே
ஈத்துண்பான் ஆகும் இருங்கடல்சூழ் மண்ணரசாய்ப்
பாத்துண்பான் ஏத்துண்பான் பாடு. 44
இழுக்கான் இயல்நெறி இன்னாத வெஃகான்
வழுக்கான் மனைபொருள் வெளவான் - ஒழுக்கத்தால்
செல்வான் செயிரில்ஊண் ஈவான் அரசாண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. 45
களியான்கள் ளுண்ணான் களிப்பாரைக் காணான்
ஒளியான் விருந்துக்(கு) உலையான் - எளியாரை
எள்ளான்நீத் துண்பானேல் ஏதமில் மண்ணாண்டு
கொள்வான் குடிவாழ்வான் கூர்ந்து. 46
பெரியார்சொல் பேணிப் பிறழாது நின்று
பரியா அடியார்ப் பறியான் - கரியார்சொல்
தேறான் இயையான் தெளிந்தடிசில் ஈத்துண்பான்
மாறான்மண் ஆளுமாம் மற்று. 47
வேற்றரவம் சேரான் விருந்தொழியான் தன்இல்லுள்
சோற்றரவம் சொல்லியுண் பானாயின் - மாற்றரவம்
கேளான் கிளைஓம்பின் கேடில் அரசனாய்
வாளான்மண் ணாண்டு வரும். 48
யானை குதிரைபொன் கன்னியே ஆணிரையோ(டு)
ஏனை ஒழிந்த இவையெல்லாம் - ஆன்நெய்யால்
எண்ணனாய் மாதவர்க்(கு) ஊண்ஈந்தான் வைசிர
வண்ணனாய் வாழ்வான் வகுத்து. 49
எள்ளே பருத்தியே எண்ணெய் உடுத்தாடை
வள்ளே துணியே இவற்றோடு - கொள்ளென
அன்புற்(று) அசனம் கொடுத்தான் துணையினோ(டு)
இன்புற்(று) வாழ்வான் இயைந்து. 50
உண்ணீர் வளம்குளம் கூவல் வழிப்புரை
தண்ணீரை அம்பலந்தான் பாற்படுத்தான் -பண்ணீர
பாடலோ(டு) ஆடல் பயின்றுயிர் செல்வானாய்க்
கூடலொ(டு) ஊடலுளான் கூர்ந்து. 51
இல்லிழந்தார் கண்ணிழந்தார் ஈண்டியசெல் வம்இழந்தார்
நெல்லிழந்தார் ஆணிரை தான்இழந்தார்க்(கு) -எல்உழந்து
பண்ணியூண் ஈந்தவர் பல்யானை மன்னராய்
எண்ணிஊண் ஆர்வார் இயைந்து. 52
கடம்பட்டார் காப்பில்லார் கைத்தில்லார் தங்கான்
முடம்பட்டார் மூத்தார்மூப் பில்லார்க்(கு) - உடம்பட்(டு)
உடையராய் இல்லுள்ஊண் ஈத்துண்பார் மண்மேல்
படையராய் வாழ்வார் பயின்று. 53
பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
கார்ப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்றவாழ் வார். 54
ஈன்றார்ஈன் கால்தளர்வார் சூலார் குழவிகள்
மான்றார் வளியான் மயங்கினார்க்கு - ஆனார்என்(று)
ஊண்ஈய்த்(து) உறுநோய் களைந்தார் பெருஞ்செல்வம்
காண்ஈய்த்து வாழ்வார் கலந்து. 55
தலையாளர் தாப்பாளர் தாழ்ந்தவர் பெண்டீர்
உயை஡ளர் ஊண்ஒன்றும் இல்லார் - கிளைஞராய்
மாவலந்த நோக்கினாய் ஊண்ஈய்ந்தபர் மாக்கடால்சூழ்
நாவலம்தீ(வு) ஆள்வாரே நன்கு. 56
கருஞ்சிரங்கு வெண்தொழுநோய் கல்வளி காயும்
பெருஞ்சிரங்கு பேர்வயிற்றுத் தீயார்க்(கு) - அருஞ்சிரமம்
ஆற்றிஊண் ஈத்(து)அவை தீர்த்தார் அரசராய்ப்
போற்றிஊண் உண்பார் புரந்து. 57
காமாடார் காமியார் கல்லார் இனஞ்சேரார்
ஆமாடார் ஆயந்தார் நெறிநின்று -தாமாடா(து)
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார்முன் இம்மையான்
மாற்றாரை மாற்றிவாழ் வார். 58
வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கியநூல் நோக்கி நுழையா - இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழிஇல்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து. 59
பெருமை புகழ்அறம் பேணாமை சீற்றம்
அருமைநூல் சால்பில்லார் சாரின் இருமைக்கும்
பாவம் பழிபகை சாக்காடே கேடச்சம்
சாபம்போல் சாருஞ் சலித்து. 60
ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால்
ஒர்வமே செய்யும் உலோபமே - சீர்சாலா
மானமே மேய உயிர்க்(கு)ஊனம் என்னுமே
ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61
கூத்தும் விழவும் மணமும் கொலைக்களமும்
ஆர்த்த முனையுள்ளம் வேறிடத்தும் - ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின்
இழுக்கம் இழவும் தரும். 62
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்திலை மாணொடு
கேட்டெழுதி ஓதிவாழ் வார்க்(கு)ஈய்ந்தார் இம்மையான்
வேட்டெழுத வாழ்வார் விரிந்து. 63
உயர்ந்தான் தலைவனென்(று) ஒப்புடைத்தான் நோக்கி
உயர்ந்தான்நூல் ஓதி ஒடுங்கி - உயர்ந்தான்
அருந்தவம் ஆற்றச் செயின்வீடாம் என்றார்
பெருந்தவம் செய்தார் பெரிது. 64
காலனார் ஈடறுத்தால் காண்குறின் முற்றுணர்ந்த
பாலனார் நூலமர்ந்து பாராது - வாலிதா
ஊறுபா(டு) இல்லா உயர்தவம் தான்புரியின்
ஏறுமோ மேலுலகம் ஓர்ந்து. 65
பொய்தீர் புலவர் பொருள்புரிந்து ஆராய்ந்த
மைதீர் உயர்கதியின் மாண்புரைப்பின் - மைதீர்
சுடரின்று சொல்லின்று மாறின்று சோர்வின்(று)
இடரின்(று) இனிதுயிலும் இன்று. 66
கூரம்பு வெம்மணல் ஈர்மணி தூங்கலும்
ஈரும் புகையிரு ளோ(டு)இருள்நூல் - ஆராய்ந்(து)
அழிகதி இம்முறையான் ஆன்றார் அறைந்தார்
இழிகதி இம்முறையான் ஏழு. 67
சாதல் பொருள்கொடுத்தல் இன்சொல் புணர்வுலத்தல்
நோதல் பிரிவில் கவறலே - ஓதலின்
அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து. 68
எடுத்தல் முடக்கல் நிமிர்த்தல் நிலையே
படுத்தலோ(டு) ஆடல் பகரின் - அடுத்துயிர்
ஆறு தொழிலென்(று) அறைந்தார் உயர்ந்தவர்
வேறு தொழிலாய் விரித்து. 69
ஐயமே பிச்சை அருந்தவர்க்(கு) ஊண்ஆடை
ஐயமே இன்றி அறிந்(து) ஈந்தான் - வையமும்
வானும் வரிசையால் தானாளும் நாளுமே
ஈனமே இன்றி இனிது. 70
நடப்பார்க்(கு) ஊண் நல்ல பொறைதாங்கி னார்க்(கு)ஊண்
கிடப்பார்க்(கு)ஊண் கேளிர்க்(கு)ஊண் கேடின்று உடல்சார்ந்த
வானகத்தார்க்(கு) ஊணே மறுதலையார்க்கு ஊண்அமைத்தான்
தானகத்தே வாழ்வான் தக. 71
உணராமை யால்குற்றம் ஒத்தான் வினையாம்
உணரான் வினைப்பிறப்புச் செய்யும் - உணராத
தொண்டுஇருந் துன்பம் தொடரும் பிறப்பினால்
மண்டிலமும் ஆகும் மதி. 72
மனைவாழ்க்கை மாதவம் என்றிரண்டும் மாண்ட
வினைவாழ்க்கை யாக விழைப - மனைவாழ்க்கை
பற்றுதல் இன்றி விடுதல்முன் சொல்லுமேல்
பற்றுதல் பாத்தில் தவம். 73
இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ(டு)
எழுத்தின் வனப்பே வனப்பு. 74
அறுவர்தம் நூலும் அறிந்துணர்வு பற்றி
மறுவரவு மாறான நீக்கி - மறுவரவின்
மாசா ரியனா மறுதலைச்சொல் மாற்றுதலே
ஆசா ரியன(து) அமைவு. 75
ஒல்லுவ நல்ல உருவவேற் கண்ணினாய்
வல்லுவ நாடி வகையினால் - சொல்லின்
கொடையினார் போகம் சுவர்க்கம் தவத்தால்
அடையாத் தவத்தினால் வீடு. 76
நாற்கதியும் துன்ப நவைதீர்த்தல் வேண்டுவான்
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூற்கதியின்
எல்லை உயர்த்தார் தவமுயலின் மூன்(று) ஐந்(து) ஏழ்
வல்லைளீ(டு) ஆகும் வகு. 77
தாயிழந்த பிள்ளை தலையிழந்த பெண்டாட்டி
வாயிழந்த வாழ்வினார் வாணிகம் - போயிழந்தார்
கைத்தூண் பொருளிழந்தார் கண்ணிலவர்க்(கு) ஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார். 78
சாக்காடு கேடு பகைதுன்பம் இன்பமே
நாக்காடு நாட்டறை போக்குமென - நாக்காட்ட
நட்டார்க்(கு) இயையின் தமக்கியைந்த கூ(று) உடம்
பட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79
புலையாளர் புண்பட்டார் கண்கெட்டார் போக்கில்
நிலையாளர் நீர்மை இழந்தார் - தலையாளர்க்கு
ஊண்கொடுத்(து) ஊற்றாய் உதவினார் மன்னராய்க்
காண்கொடுத்து வாழ்வார் கலந்து. 80

ஏலாதி முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=ஏலாதி&oldid=1412173" இலிருந்து மீள்விக்கப்பட்டது