உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழாவது வாசல்/வாந்தி பேதிப் பிசாசின் கதை

விக்கிமூலம் இலிருந்து

வாந்திபேதிப் பிசாசின் கதை

வாந்திபேதிப் பிசாசு என்று ஒரு பிசாசு இருக்கிறது. ஊர் ஊராகப் போய் மக்களை வேட்டையாடுவதுதான் அதன் தொழில்.

முன்னொரு காலத்தில் அந்தப் பிசாசு இந்தியாவிலிருந்து புறப்பட்டது. அரேபியாவில் உள்ள மக்கா நகரத்தை நோக்கிச் சென்றது. போகும் வழியில் பாரசீகத்தைக் கடந்து சென்றது. பாரசீகத்தில் அந்தக் காலத்தில் ஒரு பக்கிரி இருந்தார். அந்தப் பக்கிரி பெரிய ஞானி, கடவுள் பக்தி மிகுந்தவர். அவரை வாந்திபேதிப் பிசாசு சந்திக்க நேர்ந்தது.

அப்போது அந்தப்பக்கிரி அதைப் பார்த்து 'நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார்.

‘சாமியாரே, மெக்கா நகரத்தில் இப்போது திருவிழா தொடங்கியிருக்கிறது. உலகின் நாலாதிசைகளிலிருந்தும் மக்கள் அங்கு வந்து கூடியிருக்கிறார்கள். அவர்களை வேட்டையாடத் தான் புறப்பட்டுப் போகிறேன்” என்று பதிலளித்தது வாந்திபேதிப் பிசாசு.

இதைக் கேட்டதும் அந்தப் பக்கிரிக்குப் பெருஞ் சினம் உண்டாயிற்று.

“சீச்சி! மூர்க்கப் பிசாசே! மக்கத்தில் இப்பொழுது சிறந்த பக்தர்கள் திரண்டிருப்பார்கள். அவர்கள் அல்லாவைத் தொழும் பொருட்டு வந்தவர்கள். அவர்களைப் போய் நீ கொல்ல நான் இடங் கொடுக்க மாட்டேன். போ! பேசாமல் திரும்பிப் போ! இன்னொரு முறை உன்னைக் கண்டால் சுட்டு எரித்து விடுவேன்” என்றார் பக்கிரி.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த வாந்தி பேதிப் பேய் பக்கிரியைப் பார்த்துச் சொல்லியது.

‘சாமியாரே, என்னைப் படைத்தவரும் அல்லாதான். மனித உயிர்களை வாரிக் கொண்டுபோகும் தொழிலுக்கென்றே என்னை அல்லா உண்டாக்கியிருக்கிறார். எனக்கென்று அல்லா வகுத்த தொழிலைச் சரியாகச் செய்ய வேண்டியது என் கடமை. உலகத்தில் நடக்கும் எல்லாச் செயல்களும் அல்லாவின் திருவருளால் நடப்பனவேயன்றி வேறல்ல. அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை. ஆகவே என் கடமையைச் செய்வதை நீர் தடுக்க முடியாது. முடிந்தாலும் நீர் அதனைத் தடுக்க முயலுதல் சரியான செயலுமாகாது.

மக்கத்திற்கு வந்தவர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்றும், உண்மையான பக்தர்களென்றும், நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் எண்ணிவிட முடியாது. எத்தனையோ பாவிகளும், தீயவர்களும் வேத விதிகளை மீறி நடப்போரும் அங்கு வந்திருப்பார்கள். மேலும் நல்லவர்கள் எல்லோருமே சாகாமல் இருக்க வேண்டுமென்பது அல்லாவின் விதியல்ல. பாவிகள் மாத்திரமல்லாமல் அப்பாவிகளும் சாகத்தான் செய்கிறார்கள்.

வேறு வேறு நோய்களுக்கு ஆட்பட்டு வருந்தி வருந்தித் துடிதுடித்துச் சாவதைக் காட்டிலும் வாந்தி பேதியால் உடனடியாகச் சாவது மனிதர்களுக்கு வேதனை குறைந்த சாவாக இருக்குமேயன்றி தீங்காக மாட்டாது. ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் நீர் என்னைத் தடுப்பதும், வந்த வழியே திரும்பிப் போகும்படி கட்டளையிடுவதும் பொருத்தமாகாது.

“ஆனால், பெரிய மகானாகிய தங்களுக்கு ஓரளவு அமைதி தரக்கூடிய ஓர் ஏற்பாட்டுக்கு நான் ஒப்புக் கொள்கிறேன். மக்கத்தில் நான் சென்று இத்தனை பேரைத்தான் கொல்லலாம் என்று வரையறை செய்து தாங்கள் ஒரு கட்டளையிடுங்கள். அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிவதாக நான் அல்லாவின் பேரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்” என்று கூறியது வாந்திபேதிப் பேய்.

வேறு வழியில்லை என்று கண்ட பக்கிரி இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று. அவர் அந்தப் பிசாசைப் பார்த்து இவ்வாறு கூறினார். “சரி நீ போ. அங்கே இலட்சக்கணக்கான மக்கள் வந்திருப்பார்கள். அங்கே நீ ஒரே ஒராயிரம் பேரை மட்டும் கொல்ல நான் அனுமதிக்கிறேன். அதற்குமேல் ஓர் உயிரைக் கூட தீண்டலாகாது. மீறினால் நான் உன்னைச் சும்மா விட மாட்டேன். எச்சரிக்கை!” என்று அதனை எச்சரித்து அனுப்பினார்.

வாந்திபேதிப் பேய் சரியென்று கூறி விட்டு மக்கத்திற்குப் போயிற்று.

சில நாட்கள் சென்றன. மக்கத்தில் திருவிழா முடிந்து மக்கள் தத்தம் ஊருக்குத் திரும்பினார்கள். அவ்வாறு திரும்பியவர்களில் சிலர் பாரசீகத்தின் வழியாகச் சென்றார்கள் அவர்கள் மூலம் மக்கத்து விழாவைப் பற்றி பக்கிரி விசாரித்தார். வாந்திபேதியால் இலட்சம் பேர் இறந்து போனார்கள் என்று அறிந்தார். அவர் மனம் துடிதுடித்தது. சினம்பொங்கியது. வாந்திபேதிப் பிசாசைச் சபித்துக் கொண்டேயிருந்தார்.

மக்கத்தில் வேலை முடித்துக் கொண்டு வாந்திபேதிப் பேயும் அந்த வழியாகவே இந்தியாவிற்குத் திரும்பியது. வழியில் பக்கிரியைப் போய்ப் பார்த்து வணக்கம் செய்தது,

அதை நேரில் கண்டதும் பக்கிரிக்கு வந்த கோபம் அப்படி இப்படிப் பட்டதல்ல. “போக்கிரிப் பேயே! பொய் சொல்லி நாயே! ஆயிரம் பேருக்கு மேல் கொல்வதில்லை என்று உறுதி சொன்னாயே! அல்லாவின் பேரில் ஆணையிட்டாயே! இப்போது இலட்சம் பேரைக் கொன்று விட்டாயே! உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று துடிதுடித்துக் கடுஞ்சினத்துடன் கொதிக்கின்ற எண்ணெய் போல் குதிகுதித்துப் பேசினார்.

வாந்திபேதிப் பேய் சிறிதும் அஞ்சவில்லை. கலகலவென்று சிரித்தது.

"முனிவர் பெருமானே! என்னை முனிய வேண்டாம். அல்லாவின்பேரால் ஆணையிட்டபடி நான் ஆயிரம் பேருக்குமேல் ஒருவரைக் கூடத் தீண்டவில்லை. என்னால் இறந்தவர் சரியாக ஆயிரம் பேர்தான். மற்றவர்களோ வீண் பயத்தினால் வாந்தியும் பேதியும் ஏற்பட்டு மாண்டனர். அவர்கள் பயந்து செத்ததற்கு நான் என்ன செய்வேன். அது என் குற்றமாகுமா?” என்று கேட்டது.

அதைக் கேட்டுப் பக்கிரி பெருமூச்சு விட்டார். “ஏ மனித இனமே, பயத்தால் தன்னைத் தானே ஓயாமல் கொலை செய்து கொண்டிருக்கும் உன்னுடைய மூடத் தனத்தை நினைக்க நினைக்க என் நெஞ்சு கலங்குகிறதே! என் செய்வேன்? என்செய்வேன்? என் செய்வேன்? எல்லாம் அல்லாவின் திருவுள்ளப்படியே நடக்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும்l அல்லாஹோ அக்பர்! அல்லாவின் நாமம் வெல்வதாக!”

இவ்வாறு தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அமைதியடைந்தார் அந்தப் பக்கிரி.