ஐந்திணை எழுபது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக


ஐந்திணை எழுபது

மூவாதியார் அருளியது (காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு)


கடவுள் வாழ்த்து[தொகு]

எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு

நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்

முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் நலஞ்சேர்

கண்டத்தான் ஈன்ற களிறு.

குறிஞ்சி[தொகு]

அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்

கவரி கடமா கதூஉம் படர்சாரல்

கானக நாட! மறவல் வயங்கிழைக்(கு)

யானிடை நின்ற புணை. 1


மன்றத் துறுகல் கருங்கண முசுஉகளும்

குன்றன நாடன் தெளித்த தெளிவினை

நன்றென்று தேறித் தெளிந்தேன் தலையளி

ஒன்றுமற்(று) ஒன்றும் அனைத்து. 2


மன்றப் பலவின் களைவிளை தீம்பழம்

உண்டுவந்து மந்தி முலைவருடக் - கன்றமர்ந்(து)

ஆமா சுரக்கும் அணிமலை நாடனை

யாமாப் பிரிவ(து) இலம். 3


சான்றவர் கேண்மை சிதைவின்றாய் ஊன்றி

வலியாகிப் பின்னும் பயக்கும் மெலிவில்

கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை

நயந்திகழும் என்னும்என் நெஞ்சு. 4


பொன்னிணர் வேங்கை கமழும் நளிசோலை

நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு

நின்னல(து) இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்(து)

இன்னுயிர் தாங்கும் மருந்து. 5


காய்ந்தீயல் அன்னை! இவளோ தவறிலள்

ஓங்கிய செந்நீர் இழிதரும் கான்யாற்றுள்

தேன்கலந்து வந்த அருவி முடைந்தாடத்

தாம்சிவப் புற்றன கண். 6


வெறிகமழ் தண்சுனைத் தண்ணீர் துளும்பக்

கறிவளர் தேமா நறுங்கணி வீழும்

வெறிகமழ் தண்சோலை நாட! ஒன்(று) உண்டோ

அறிவின்கண் நின்ற மடம். 7


கேழல் உழுத கரிபுனக் கொல்லையுள்

வாழை முதுகாய் கடுவன் புதைத்தயரும்

தாழருவி நாடன் தெளிகொடுத்தான் என்தோழி

நேர்வனை நெஞ்(சு) ஊன்று கோல். 8


பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக்

கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும்

சுரும்(பு)இமிர் சோலை மலைநாடன் கேண்மை

பொருந்தினார்க்கு |ஏமாப்(பு) உடைத்து. 9


குறையொன்(று) உடையேன்மன் தோழி நிறையில்லா

மன்னுயிர்க்(கு) ஏமம் செயல்வேண்டும் இன்னே

அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில்

இராவாரல் என்ப(து) உரை. 10


பிரைசங் கொளவீழ்ந்த தீந்தேன் இறாஅல்

மரையான் குழவி குளம்பில் துகைக்கும்

வரையக நாட! வரையால் வரின்எம்

நிரைதொடி வாழ்தல் இவள். 11


வார்குரல் ஏனல் வளைலாயக் கிளைகவரும்

நீரால் தெளிதிகழ் காநாடன் கேண்மையே

ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும்

ஈர வலித்தான் மறி. 12


இலையடர் தண்குளவி ஏய்ந்த பொதும்பில்

குலையுடைக் காந்தள் இனவண்(டு) இமிரும்

வரையக நாடனும் வந்தான்மற்(று) அன்னை

அலையும் அலைபோயிற்(று) இன்று. 13


கொல்லைப் புனத்த அகில்சுமந்து கல்பாய்ந்து

வானின் அருவி ததும்பக் கவினிய

நாடன் நயமுடையன் என்பதனால் நீப்பினும்

வாடல் மறந்தன தோள். 14

முல்லை[தொகு]

செங்கதிர்ச் செல்வன் சினங்கரந்த போழ்தினால்

பைங்கொடி முல்லை மணங்கமழ -வண்(டு)இமிரக்

காரோ(டு) அலமரும் கார்வானம் காண்தொறும்

நீரோ(டு) அலமரும் கண். 15


தடமென் பணைத்தோளி! நீத்தாரோ வாரார்

மடநடை மஞ்ஞை அகவக் - கடல்முகந்து

மின்னோடு வந்த(து) எழில்வானம் வந்தென்னை

என்னாதி என்பாரும் இல். 16


தண்ணுறங் கோடல் துடுப்பெடுப்பக் காரெதிரி

விண்ணுயர் வானத்(து) உரும்உரற்றத் - திண்ணிதின்

புல்லுநர் இல்லார் நடுங்கச் சிறுமாலை

கொல்லுநர் போல வரும். 17


கதழுறை வானம் சிதற இதழ்அகத்துத்

தாதிணர்க் கொன்றை எரிவளர்ப்பப் பாஅ

இடிப்பது போலும் எழில்வானம் நோக்கித்

துடிப்பது போலும் உயிர். 18


ஆலி விருப்புற்(று) அகவிப் புறவெல்லாம்

பீவி பரப்பி மயில்ஆலச் - சூலி

விரிகுவது போலும்இக் கார்அதிர ஆவி

உருகுவது போலும் எனக்கு. 19


இனத்த வருங்கலை பொங்கப் புனத்த

கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி

யானும் அவரும் வருந்தச் சிறுமாலை

தானும் புயலும் வரும். 20


காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்

கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)

உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்

மடம்பட்டு வாழ்கிற்பார் இல். 21


கொன்றைக் குழலூதிக் கோவலர் பின்னுரைத்துக்

கன்றமர் ஆயம் புகுதா - இன்று

வழங்கிய வந்தன்று மாலையாம் காண

முழங்கிவில் கோலிற்று வான். 22


தேரைத் தழங்குகுரல் தார்மணி வாயதிர்ப்ப

ஆர்கலி வானம் பெயல்தொடங்கிக் - கார்கொள

இன்(று)ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர்

ஒன்றாலும் நில்லா வளை. 23


கல்லேர் புறவின் கவினிப் புதன்மிசை

முல்லை தளவொடு போதவிழ - எல்லி

அலை(வு)அற்று விட்டன்று வானமும் உன்கண்

முலைவற்று விட்டன்று நீர். 24


25, 26 - இரண்டு பாடல்கள் மறைந்தவை


கார்ப்புடைப் பாண்டில் கமழப் புறவெல்லாம்

ஆர்ப்போ(டு) இனவண்(டு) இமிர்ந்தாட - நீர்த்தின்றி

ஒன்றா(து) அலைக்கும் சிறுமாலை மாறுழந்து

நின்றாக நின்றது நீர். 27


குருந்தலை வான்படலை சூடிச் சுரும்பார்ப்ப

ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்!

பின்னொடு நின்று பெயரும் படுமழைகொல

என்னொடு பட்ட வகை. 28

பாலை[தொகு]

பொறிகிளர் சேவல் வரிமரல் குத்த

நெறிதூர் அருஞ்சுரம்நரம் உன்னி - அறிவிட்(டு)

அலர்மொழி சென்ற கொடியக நாட்ட

வலனுயர்ந்து தோன்றும் மலை. 29


ஒல்லோம்என்(று) ஏங்கி உயங்கி இருப்பாளோ

கல்லிவர் அத்தம் அரிபெய் சிலம்(பு)ஒலிப்பக்

கொல்களி(று) அன்னான்பின் செல்லுங்கொல் என்பேதை

மெல்விரல் சேப்ப நடந்து. 30


பொரிபுற ஓமைப் புகர்படு நீழல்

வரிநுகல் யானை பிடியோ(டு) உறங்கும்

எரிமயங்கு கானம் செலவுரைப்ப நில்லா

அரிமயங்கு உண்கண்ணுள் நீர். 31


எழுத்துடைக் கல்நிரைக்க வாயில் விழுத்தொடை

அம்ஆ(று) அலைக்கும் சுரநிறைத்(து) அம்மா

பெருந்தரு தாளாண்மைக்(கு) ஏற்க அரும்பொருள்

ஆகும்அவர் காதல் அவா. 32


வில்லுழுது உண்பார் கடுகி அதரலைக்கும்

கல்சூழ் பதுக்கையார் அத்தத்தில் பாரார்கொல்

மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்(கு)இவர்ந்து

நில்லாத வுள்ளத் தவர். 33


நீரல் அருஞ்சுரைத்(து) ஆமான் இனம்வழங்கும்

ஆரிடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்!

நாணினை நீக்கி உயிரோ(டு) உடன்சென்று

காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு. 34


பீரிவர் கூரை மறுமனைச் சேர்ந்(து) அல்கிக்

கூருகிர் எண்கின் இருங்கினை கண்படுக்கும்

நீரில் அருஞ்சுரம் உன்னி அறியார்கொல்

ஈரமில் நெஞ்சில் அவர். 35


சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை

ஊர்கெழு சேவல் இதலொடு - போர்தினைக்கும்

|தேரொடு கானம் தெருளிலார் செல்வார்கொல்

ஊரிடு கவ்வை ஒழித்து. 36


கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி

கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டு

நெடுவரை அத்தம் இறப்பர்கொல் கோண்மாப்

படுபகை பார்க்குஞ் சுரம். 37


கோளவல் கொடுவரி நல்வய மரக்குழுமும்

தாள்வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்

ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்றுணரா

மீளிகொள் மொய்ம்பி னவர். 38


பேழ்வாய் இரும்புலி குஞ்சரம் கோட்பிழைத்துப்

பாழூர்ப் பொதியில் புகாப்பார்க்கும் ஆரிடைச்

சூழாப் பொருள்நசைக்கண் சென்றோர் அருள்நினைந்

வாழ்தியோ மற்றோ உயிர். 39


முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை

புள்ளி வெருகுதன் குட்டிக்(கு) இரைபார்க்கும்

கள்ளர் வழங்கும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி. 40


மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக்

குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து - சென்றவர்

கள்ளிய தன்மையர் போலும் அடுத்தடுத்(து)

ஒள்ளிய தும்மல் வரும். 41


பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின

ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம்நினைப்ப

வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப்

பாங்கத்துப் பல்லி படும். 42

மருதம்[தொகு]

பேதையர் என்று தமரைச் செறுபவோர்

போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி

வாய்முடி யிட்டும் இருப்பஏர் மாண்ழாய்!

நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று. 43


ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை

உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று) யார்க்குரைக்கோ - ஒள்ளிழாய்

அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்

பொய்ச்சூள் எனஅறியா தேன். 44


ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்

மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி - போற்றுருவிக்

கட்டக முத்திற் புதல்வனை மார்பின்மேல்

பட்டஞ் சிதைப்ப வரும். 45


அகன்பனை யூரனைத் தாமம் பிணித்த(து)

இகன்மை கருதி யிருப்பன் - முகன்அமரா

ஏதின் மகளிரை நோவ தெவன்கொலோ

பேதமை கண்டொழுகு வார். 46


போத்தில் கழுத்தில் புதல்வன் உணச்சான்றான்

மூத்தேம் இனியாம் வருமுலையார் சேரியுள்

நீத்துநீர் ஊனவாய்ப் பாண!நீ போய்மொழி

கூத்தாடி உண்ணினும் உண். 47


யாணர்நல் லூரன் திறங்கிளப்பல் என்னுடை

பாண! இருக்க வதுகளை - நாணுடையான்

தன்னுற்ற எல்லாம் இருக்க இரும்பாண!

நின்உற்ற(து) உண்டேல் உரை. 48


உழலை முருக்கிய செந்நோக்(கு) எருமை

பழனம் படிந்துசெய் மாந்தி - நிழல்வதியும்

தண்டுறை யூரன் மலரன்ன மால்புறப்

பெண்டிர்க்(கு) உரைபாண! உய்த்து. 49


பேதை புகலை புதல்வன் துணைச்சான்றோன்

ஓதை மலிமகிழ்நற்(கு) யாஅம் எவன்செய்தும்

பூவார் குழற்கூந்தல் பொன்னன்னார் சேரியுள்

ஓவாது செல்பாண! நீ. 50


பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய

எவ்வம் எனினும் எழுந்தீக - வைகல்

மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும்

சிறுவன் உடையேன் துணை. 51


உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும்

தண்டுறை யூர! தருவதோ? - ஒண்டொடியைப்

பாராய் மனைதுறந்(து) அச்சேரிச் செல்வதனை

ஊராண்மை யாக்கிக் கொளல். 52


வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர்

வளைகிய சக்கரத்(து) ஆழி - கொளைபிழையா

வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள்

ஒன்றி அனைத்தும் உளேன். 53


உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று)

எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்என்(று) - எண்ணி

வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன்

பழிபாடு நின்மே லது. 54


காதலில் தீரக் கழிய முயங்கல்மின்

ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப்

பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும் எண்ணிலா

ஆசை ஒழிய வுரைத்து. 55


தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப்

பூங்கண் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத்

தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை

வளர்முலைக் கண்ஞமுக்கு வார். 56

நெய்தல்[தொகு]

ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி

உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்

பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனி(து)உண்மை

ஊதியம் அன்றோ உயிர்க்கு. 57


என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை

அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர்

புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ

நின்னல்ல(து) இல்லென்(று) உரை. 58


இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன்

கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை

புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர்

உள்ளரவம் நாணுவர் என்று. 59


மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்

அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல்

திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத்

துணிமுந்நீர் துஞ்சா தது. 60


கண்ணுறு நெய்தல் கமழும் கொடுங்கழித்

தண்ணந் துறைவனோ தன்இலன் ஆயிழாய்!

வண்ணகைப் பட்டதனை ஆண்மை எனக்கருதிப்

பண்ணமைத் தேர்மேல் வரும். 61


எறிசுறாக் குப்பை இனங்கலக்கத் தாக்கும்

ஏறிதிரைச் சேர்ப்பன் கொடுமை - யறியாகொல்

கானகம் நண்ணி அருள்அற் றிடக்கண்டும்

கானலுள் வாழும் குருகு. 62.


நுண்ஞான் வலையில் பரதவர் போத்தந்த

பன்மீன் உணங்கல் கவரும் துறைவனைக்

கண்ணினாற் காண அமையுங்கொல் என்தோழி!

வண்ணந்தா என்கம் தொடுத்து. 63


சிறுமீன் கவுள்கொண்ட செந்தூவி நாராய்

இறுமென் குரலநின் பிள்ளைகட்கே யாகி

நெறிநீர் இருங்கழிச் சேர்ப்பன் அகன்ற

நெறியறிதி மீன்தபு நீ. 64


தெண்ணீர் இருங்கழி வேண்டும் இரைமாந்திப்

பெண்ணைமேற் சேக்கும் வணர்வாய்ப் புணர்அன்றில்!

தண்ணந் துறைவற்(கு) உரையாய் மடமொழி

வண்ணம்தா என்று தொடுத்து. 65


அடும்பிவர் எக்கர் அலவன் வழங்கும்

கொடுங்கழிச் சேர்ப்பன் அருளான் எனத்தெளிந்து

கள்ள மனத்தான் அயல்நெறிச் செல்லுங்கொல்

நல்வளை சோர நடந்து. 66


கண்டதிரள் முத்தம் பயக்கும் இருமுந்நீர்ப்

பண்டங்கொள் நாவாய் வழங்கும் துறைவனை

முண்டகக் கானலுள் கண்டேன் எனத்தெளிந்தேன்

நின்ற உணர்விலா தேன். 67


இவர்திரை நீக்கியிட்(டு) எக்கர் மணன்மேல்

கவர்கால் அலவன் தனபெடை யோடு

நிகரில் இருங்கழிச் சேர்ப்ப! என்தோழி

படர்பசலை ஆயின்று தோள். 68


69, 70 இரண்டு பாடல்களும் மறைந்தன.

ஐந்திணை எழுபது முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=ஐந்திணை_எழுபது&oldid=1113837" இருந்து மீள்விக்கப்பட்டது