ஐந்திணை ஐம்பது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார் அருளியது (காலம் - கி. பி. நான்காம் நூற்றாண்டு)

பாயிரம்[தொகு]

பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய

வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

செந்தமிழ் சேரா தவர்.

முல்லை[தொகு]

இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்

ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.


மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து

செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்

இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ

மயங்கி வலனேருங் கார். 1


அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி

மணிநிற மாமலைமேல் தாழ்ந்து - பணிமொழி !

கார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்

பீர்நீர்மை கொண்டன தோள். 2


மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன

கொலைப்படை சாலப் பரப்பிய முல்லை

முகைவென்ற பல்லினாய்! இல்லையோ? மற்று

நமர்சென்ற நாட்டுள்இக் கார். 3


உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்

வள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி

நல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்

கொல்வாங்குக் கூர்ந்த(து)இக் கார். 4


கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்

கூடி நிரந்து தலைபிணங்கி - ஓடி

வளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்

துளிகலந்து வீழ்தருங் கண். 5


முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி

செல்சார் வுடையார்க் கினியவாய் - நல்லாய்மற்(று)

யாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை

ஈரும் இருள்மாலை வந்து. 6


தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை

ஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் - சீர்சால்

சிறுகுழல ஓசை செறிதொடி! வேல்கொண்(டு)

எறிவது போலும் எனக்கு. 7


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி

பொருந்தினர் மேனிபோல் பொற்பத் - திருந்திழாய

வானம் பொழியவும் வாரார்கொல் இன்னா

கானம் கடந்துசென் றார். 8


வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்(டு)

உருகி யுடன்றழிய வேண்டா - தெரிதியேல்

பைங்கொடி முல்லை அவிழ்அரும்(பு) ஈன்றன

வம்ப மறையுறக் கேட்டு. 9


நூல்நின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக

தேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் - தான்நவின்ற

கற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி

நிற்பாள் நிலையுணர்கம் யாம். 10

குறிஞ்சி[தொகு]

இடம் - மலையும் மலை சார்ந்த இடமும்

ஒழுக்கம் - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்


பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்

நன்மலை நாடன் நலம்புனைய -மென்முலையாய்

போயின சின்னாள் புனத்து மறையினால்

ஏயினார் இன்றி இனிது. 11


மாலவரை வெற்ப! வணங்கு குரல்ஏனல்

காவல் இயற்கை ஒழிந்தேம்எம் - தூஅருவி

பூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்

பாக்கம் இதுஎம் இடம். 12


கானக நாடன் கலவான்என் தோளென்று

மானமர் கண்ணாய்! மயங்கல்நீ - நானம்

கலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்

புலம்பும் அகன்றுநில் லா. 13


புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய்! சாரல்

தினைகாத் திரும்தேம்யாம் ஆக - வினைவாய்த்து

மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்

தாம்வினவ லுற்றதொன் றுண்டு. 14


வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து

மாந்தளிர் மேனி வியர்ப்பமற்(று) - ஆங்(கு) எனைத்தும்

பாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்

சேந்தனவாம் சேயரிக்கண் தாம். 15


கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு

மடிசெவி வேழம் இரீஇ - அடியோசை

அஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்

துஞ்சா சுடர்த்தொடி கண். 16


மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட !

எஞ்சாது நீவருதி யென்றெண்ணி - அஞ்சித்

திருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்

உருஒடுங்கும் உள்ளுருகி நின்று. 17


எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்

மறந்தும் கிளியனமும் வாரா - கறங்கருவி

மாமலை நாட! மடமொழி தன்கேண்மை

நீமறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18


நெடுமலை நன்னாட! நீள்வேல் துணையாக

கடுவிசை வாலருவி நீந்தி - நடுஇருள்

இன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்

என்னாவாள் என்னும்என் நெஞ்சு. 19


வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்ட(து)

அறியான்மற்(று) அன்னோ! அணங்(கு) அணங்கிற்(று) என்று

மறிஈர்த்(து) உதிரம்தூய் வேலன் தரீஇ

வெறியோ(டு) அலம்வரும் யாய். 20

மருதம்[தொகு]

இடம் - வயலும் வயல் சார்ந்த இடமும்

ஒழுக்கம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்


கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி

நுண்துளைத் துன்னூ விற்பாரின் - ஒன்றானும்

வேறல்லை பாண! வியலூரன் வாய்மொழியைத்

தேற எமக்குரைப்பாய் நீ. 21


போதார்வண்(டு) ஊதும் புனல்வயல் ஊரற்குத்

தூதாய்த் திரிதரும் பாண்மகனே - நீதான்

அறி(வு)அயர்ந்(து) எம்இல்லுள் என்செய்ய வந்தாய்

நெறிஅதுகாண் எங்கையர் இற்கு. 22


யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்

பாண! பரிந்துரைக்க வேண்டுமோ - மாண

அறிவ(து) அறியும் அறிவினார் கேண்மை

நெறியே உரையாதோ மற்று. 23


கோலச் சறுகுருகின் குத்(து)அஞ்சி ஈர்வாளை

நீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு - மேல்எலாம்

சார்தற்குச் சந்தனச்சாந்(து) ஆயினேம் இப்பருவம்

காரத்தின் வெய்யஎம் தோள். 24


அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்

விழைதரு மார்பம் உறுநோய் - விழையின்

குழலும் குடுமிஎன் பாலகன் கூறும்

மழலைவாய் கட்டுரை யால். 25


பெய்வளைக் கையாய்! பெருநகை ஆகின்ற

செய்வய லூரன் வதுவை விழ(வு)இயம்பக்

கைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்

எய்தி இடருற்ற வாறு. 26


தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ

நுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்

வெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய

வண்ணம் உடையேம்மற்(று) யாம். 27


ஒல்லென்(று) ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு

வல்லென்(று) என்நெஞ்சம் வாட்கண்ணாய் - நில்லென்னா(து)

ஏக்கற்றாங்(கு) என்மகன் தான்நிற்ப என்னானும்

நோக்கான்தேர் ஊர்ந்து கண்டு. 28


ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்

புல்லேன்யான் என்பேன் புனையிழையாய்! - புல்லேன்

எனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்

தனக்(கு)ஏவல் செய்தொழுகு வேன். 29


குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்

வளியெறியின் மெய்யிற்(கு) இனிதாம் - ஒளியிழாய் !

ஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி

கூடல் இனிதாம் எனக்கு. 30

பாலை[தொகு]

இடம் - குறிஞ்சியும் முல்லையும் திரந்த மணல் வெளி

(நீர்வற்றிய இடம்)

ஒழுக்கம் - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்


உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்

எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்(கு)

இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்

துன்பம் கலந்தழியும் நெஞ்சு. 31


விலங்கல் விளங்கிழாய்! செல்லாரோ வல்லர்

அழற்பட்(டு) அசைந்த பிடியை - எழிற்களிறு

கற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்(டு)

உச்சி ஒழுக்கஞ் சுரம். 32


பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்

ஆயமும் ஒன்றும் இவைநினையாள் - பால்போலும்

ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்

காய்ந்து கதிர்தெறூஉங் காடு. 33


கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்

ஆட்டிவிட்(டு) ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி

வேட்ட முனைவயின் சேறீரோ ஐய! நீர்

வாள்தடங்கண் மாதரை நீத்து. 34


கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த

தடிநிணம் மாந்திய பேஎய் - நடுகல்

விரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்

பொருள்புரிந்தார் போய சுரம். 35


கடி(து)ஓடும் வெண்தேரை நீராம்என்(று) எண்ணிப்

பிடியோ(டு) ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்

வெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்

தொடியோடி வீழத் துறந்து. 36


தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்

வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது

கல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்

வல்லவோ மாதர் நடை. 37


சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்

உள்ளம் படர்ந்த நெறி. 38


மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோ டப்

புடைபெயர் போழ்தத்து மாற்றாள் - படர்கூர்ந்து

விம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ

நம்மில் பிரிந்த இடத்து. 39


இன்(று)அல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா

நன்கு வதிந்தனை நன்னெஞ்சே! - நாளைநாம்

குன்றதர் அத்தம் இறந்து தமியமாய்

என்கொலே சேக்கும் இடம். 40

நெய்தல்[தொகு]

இடம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

ஒழுக்கம் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்.


தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்(பு) அடைந்(து)

ஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் - நண்படைந்த

சேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ

பூந்தலை அன்றில் புலம்பு. 41


கொடுந்தாள் அலவ! குறையாம் இரப்பேம்

ஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் - நெடுந்தேர்

கடந்த வழியைஎம் கண்ணாரக் காண

நடந்து சிதையாதி நீ. 42


பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை

வரிப்புற வார்மணல்மேல் ஏறித் - தெரிப்புறத்

தாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்

ஆழியால் காணாமோ யாம். 43


கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி

உண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்

கண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்

வண்டல் சிதைத்ததென் றேன். 44


ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்

சேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை

மாந்தளிர் மேனியாய் ! மன்ற விடுவனவோ

பூந்தண் பொழிலுள் குருகு. 45


ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்

பேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்

கானலம் சேர்ப்ப! தகுவதோ என்தோழி

தோள்நலம் தோற்பித்தல் நீ. 46


பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி

ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்

உணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்

அணங்காகும் ஆற்ற எமக்கு. 47


எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த

நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப

மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்

ஒற்கம் கடைப்பிடியா தார். 48


கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ

இடையுள் இழுதொப்பத் தோன்றிப் -புடையெலாம்

தெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்

செய்தான் தெளியாக் குறி. 49


அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட

மணிஅரவம் என்றெழுந்து போந்தேன் - கனிவிரும்பும்

புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்

உள்ளுருகு நெஞ்சினேன் ஆய். 50.


ஐந்திணை ஐம்பது முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=ஐந்திணை_ஐம்பது&oldid=506275" இருந்து மீள்விக்கப்பட்டது