ஐந்து செல்வங்கள்/உடற் செல்வம்
நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது அறிவைப் பெற்றவர்களின் கருத்து. “நோய் வராமல் தடுப்பவன் அறிஞன், வந்து தடுப்பவன் மனிதன்: வந்தும் தடுக்காதவன் பிணம்” என்பது புதுமொழி. மக்கள் முயன்றால் நோய் வராமல் தடுத்து வாழமுடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று உண்ணும் உணவிலும், உடலின் உழைப்பிலும் சிறிது கருத்தைச் செலுத்துவதுதான்.
“பனி அதிகமாயிருந்தால் வெளியில் தலை நீட்டாதே என்று புத்திமதி சொல்லும் பெற்றோரைப் பார்த்திருப்பீர்கள். ஏன்? பனி என்றால் அவ்வளவு பொல்லாததா? அல்லது பயங்கரமானதா? ஒன்றுமில்லை. நன்றாகப் பனியில் திரியலாம். மழையிலும் நனையலாம். காற்றிலும் அடிபடலாம், ஆனால், ஒன்று; நீங்கள் வெயிலிலும் காய்ந்திருக்க வேண்டும். நாள்தோறும் ஒரு மணிநேரம் வெயிலைத் தாங்கும் உடம்பு ஒரு மணி நேரம் பணியையும், ஒரு மணி நேரம் மழையையும் தாங்கும். வெயில்படாத குழந்தைகளின் உடம்பில், உடல் நலம் இளமையிலேயே இடிந்து குட்டிச்சுவராகிப் பிறகு மண்ணாகி, மறைவாகிப் போய்விடும்.
வெயிலில் நாள்தோறும் அலைகின்ற மக்களின் உடலைக் காற்றும் மழையும் கடும்பனியும் வளர்த்து வருகின்றன. இவ்வுண்மையைச் சிற்றூர் மக்களிடத்தே காணலாம். கடும் வெயிலிற் காடு திருத்தி, மண்வெட்டி,
உழுது உண்டு வாழும் ஆண் மக்களும், பிள்ளையைப் பெற்ற அன்றே சேற்றில் இறங்கி நாற்று நடும் பெண் மக்களும், ஆடையும் அரைஞாணுமின்றி ஓடி விளையாடும் குழந்தைகளும், தங்கள் தங்கள் உடற்செல்வத்தை நகர மக்களுக்கு நன்கு காட்டி வருகிறார்கள்.
வெயில், மழை, பனி, காற்று ஆகிய நான்கும் மக்கள் உடலுக்கு உறுதி செய்யும் இயற்கைச் செல்வங்கள். இவற்றுள் வெயிலை லிலக்கி, மூன்றை மட்டும் ஏற்றால் உடல் நலம் கெடாமல் என்ன செய்யும்? மனிதன் ஒருவனே மலைபோன்ற இத்தவறுகளைச் செய்கிறான் விலங்குகளும், பறவைகளும் இத்தவறைச் செய்வதில்லை. அவை நான்கையும் பயன்படுத்திக்கொண்டு உடற்செல்வத்தையுப் பாதுகாத்து வருகின்றன.
“உணவு உடலுக்குத் தேவை” என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால், “உணவை உண்ணும் உடலுக்கு உழைப்புத் தேவை” என்பதைச் சிலர் அறியார்கள். சிற்றூரில் வாழும் மக்கள் உணவுக்காக உழைத்துத் தீரவும் உழைப்புக்காக உண்டு தீரவும் வேண்டிய கட்டாய வாழ்க்கையில் உழன்று வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைக் கட்டடமும், உடல்நலச் செல்வமும் உழைப்பின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. அதனால், அவர்கள் விரும்பியதெல்லாம் உண்கிறார்கள்; வேண்டிய அளவு உண்கிறார்கள் “உண்பது செரிக்க உழைப்பது துணை செய்கிறது” என்பதை உழைப்பாளிகளாகிய சிற்றூர் மக்களிடத்தில்தான் காண முடிகிறது. உழைக்காது உண்ணுகின்ற மக்கள் நகர வாழ்வில் பலருண்டு. அவர்கள் “எதை உண்ணலாம்? எவ்வளவு உண்ணலாம்?” என ஆங்கில மருத்துவர்களிடம் தேடிச் சென்று கேட்பதும், அவர் துருவி ஆராய்ந்து பார்த்து, எடையில் நிறுத்து , கால்வாசி உணவை அரைவாசி வேகவைத்து, செரிக்கும் மருந்துடன் சேர்த்து உண்ணச் செய்வதும் வழக்கமாகப் போயிற்று.
செரிக்கும் மருந்துடன் உணவும் சேர்ந்து மனிதன் வயிற்றில் போனால்தானா செரிக்கும்?உயிரற்ற இயந்திரத்தில் போய்ச் சேர்ந்தாலும் செரித்துவிடும் என்பதை இப்போது எவரும் நன்கு அறியலாம். ‘உழைப்பு ஒன்றே உணவைச் செரிக்கச் செய்யும் மருந்து’ என்பதை உடற்செல்வம் விரும்பும் மக்கள் அனைவரும் உணர வேண்டும். உழைத்து உண்ணாத எவரும், உடற்செல்வத்தைப் பெற முடியாது என்பது முடிவு கட்டப் பெற்ற முடிவாகும்.
பொருட் செல்வம் தேட முயற்சி தேவை; உடற்செல்வம் தேடப் பயிற்சி தேவை. உடற்பயிற்சியின்றி உடற்செல்வத்தைப் பெற முடியாது. உடற்பயிற்சி என்றதும் தண்டால், கரலாக்கட்டை, எடைக்குண்டு, கைக்குண்டு முதலியவைகளை நினைத்துக்கொள்ள வேண்டாம். உடற்பயிற்சிக்கு அதுவும் தேவைதான். ஆனால், அதைப்பற்றிச் சொன்னால் சோம்பேறிகளின் காதுகளில் அது நுழையுமா? நுழையாது நான் சொல்ல வந்த உடற்பயிற்சி வேறு. அது உன் வேலைகளையாவது நீயே செய் என்பதுதான்.
அவரவர் வேலைகளை அவரவர் செய்வதன்மூலம் ஒரு உடற்பயிற்சி செய்து முடிகிறது. உன் வேலைகளை, நீயே செய் என்பதற்குப் பிறரைக் கொண்டு செய்து கொள்ளாதே என்பது பொருள். அதிகாலையில் எழுந்திரு. உனது போர்வையை மடி படுக்கையைத் தட்டிச் சுத்து; அதை இருக்குமிடத்திற்கு கொண்டுபோய் வை! கிணறாக இருந்தால் நீரை நீயே இறைத்துக் குளி குழாயாக இருந்தால் குளிக்கும் அறைக்கு நீரைக் கொண்டுபோய்க் குளி ஆறு, குளங்களானால் விரைந்து நடந்து செல்! உன் ஆடைகளை நீயே துவை இல்லாவிடில் தலையைத் துவட்டிய துண்டையாவது நீயே கசக்கிக் காய வை. உனக்கு வேண்டியதை நீயே போய் எடு! இவ்வாறு மனைவியையும், மக்களையும், அவரவர் வேலைகளைப் பிறர் துணையின்றிச் செய்யும்படி பழக்கு!
குறைந்த தூரத்தில் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் நடந்துசெல்! பிள்ளைகளையும் விளையாட்டுக் காட்டி நடத்திச் செல் எளிதில் தூக்கக் கூடியவைகளை நீயே எடுத்துப் போ! புகழுக்குப் போர்ட்டரைக் கூப்பிடுவதையும், பெருமைக்கு வண்டி ஏறுவதையும் ஒழி! கைத்தடியை, தலைப்பாகையைத் தூக்க ஆள் கூப்பிடும் மக்களைக் கண்டு நகை! அது அவரவர் வேலைகளை அவரவர் செய்யத் துணை செய்யும்.
உன் வேலைகளை நீயே செய்வதால், உடல் வலுப்பெற்று உறுதியாகி வரும். கற்பனையல்ல; முற்றும் உண்மை இவ்வுண்மையை வேலைக்கார்களுக்கு உள்ள வலு, பசி, உறக்கம் ஆகிய இம்மூன்றும் வீட்டுக்காரர்களுக்கு இல்லா திருப்பதிலிருந்தே நன்கு அறியலாம்.
கட்டுரையின் கருத்தும், அதன் முடிவும் ஒன்றே ஒன்று; அது, உனக்கு நீயே வேலைக்காரனாக மாறு என்பது தான். உடற்பயிற்சி செய்யாத மக்கள் கூட தம் வேலைகளைத் தாமே செய்வதன்மூலம் ஓர் உடற்பயிற்சியைச் செய்து விட முடியும், இரண்டும் செய்யாத மக்கள் உடலைப் பெற்றிருக்கலாம்; ஆனால், அவர்களால் உடற் செல்வத்தைப் பெற முடியாது. பிற செல்வங்களைத் தேடுமுன்னே உடற் செல்வத்தைத் தேடுங்கள். ஏனெனில் நோயற்ற வாழ்வு ஒன்றே குறைவற்ற செல்வமாகும்.