ஐந்து செல்வங்கள்/திருச் செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
5. திருச் செல்வம்

“திரு” என்பது அழகு, தூய்மை, உண்மை, உயர்வு, நிறைவு எனப் பொருள்படும். ‘செல்வம்’ என்பது ‘பொருளை’க் குறிக்கும் பொன்னும் மணியும் உள்ளவரையே மக்கள் ‘செல்வர்’ எனக் கருதுகின்றனர்.

‘திரு’ செல்வத்தின் அடைமொழி ஆகவே, திருச் செல்வம் என்பது அழகிய செல்வம், தூய்மையான செல்வம், உண்மையான செல்வம், உயர்ந்த செல்வம், நிறைந்த செல்வம் எனப் பலவகையாகப் பொருள்படும், இத்‘திரு’வைப் பெற்ற செல்வம் எது? பொன்னும் மணியுமாகிய பொருள் தானா செல்வம்? இதுவும் ‘பொருட்செல்வம்’ எனக் கூறப்படுவதனால், பொருளுக்கு வேறாக ஒரு செல்வம் உண்டு என்றாவது செல்வம் பலவகைப்படும் என்றாவது எண்ண இடம் ஏற்படுகிறதே!

இந்த ஐயப்பாடு மணிக்கும் முத்துவுக்கும் ஏற்பட்டது. “எது செல்வம்!” என்பதை அறியவேண்டும் என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர். மணியும் முத்துவும் நண்பர்கள். மணி பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். முத்து பரம ஏழை. ஆனாலும், இருவரும் அறிவாளிகள் ஆனதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு வளர்ந்து வந்தது. ஒருநாள் மணி தன் தந்தையிடம் சென்றான். தான் முத்துவுடன் சென்று செல்வம் தேடி வருவதாகக் கூறி, விடையும் பெற்றுப் பொருளும் பெற்றுப் புறப்பட்டான்.

இருவரும் பல ஊர்களைச் சுற்றினர்; பலவிடங்களில் தேடினர். முடிவில் ஒரு மன்னனின் மாளிகையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர். மிகவும் விலையுயர்ந்த பொருள்கள், மேசைகள், நாற்காலிகள், தந்தக் கட்டில்கள், பஞ்சு மெத்தைகள், பட்டு விரிப்புக்கள், எளிதில் உருண்டு வரும் நிலைப் பெட்டிகள் என்றுமசையாத இரும்புப் பெட்டிகள், முத்துக்கள், பவளங்கள், பொற்கட்டிகள், மணிக்குவியல்கள், சரிகை உடுப்புக்கள், வைர நகைகள், வெள்ளிக் கோப்பைகள், விளையாடும் குழந்தைகள், அரிய நிலங்கள், அழகான வண்டிகள், ஆடுகள், மாடுகள், யானைகள், குதிரைகள் அனைத்தும் கண்டனர்.

மணி : முத்து! இந்த இடத்தில்தான் செல்வம் நிறைந்திருக்கிறது நாம் பலநாள், பல விடங்களிற்சுற்றி அலைந்தாலும், முடிவில் நிறைந்த செல்வத்தைக் கண்டு வெற்றி பெற்றோம் என மகிழ்ந்து கூறினான்.

முத்து : ‘நண்பா! அவசரப்படாதே! இங்கே செல்வமும் இல்லை; அது நிறையவுமில்லை? நாம் வெற்றியடையவுமில்லை’ என மிகப் பொறுமையாகக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியந்து வினவினான்.

முத்து : “அரண்மனையைச் சுற்றிச் சுற்றி வந்தோமே? அறை அறையாகப் பார்த்து வந்தோமே! எங்கேனும் ஒரு நூல் நிலையத்தைக் கண்டோமா? இல்லையே!” என்றான்.

மணி பெரிதும் வெட்கினான். ஆம். அது இங்கு இல்லை செல்வம் இருவகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட்செல்வம் எனப் பெறும் என மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. வருந்தினான். மறுபடியும் செல்வத்தைத் தேடி இருவரும் வேற்றூர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மற்றோர் ஊரில் ஒரு பெருஞ்செல்வனுடைய மனையில் அழகான நூல் நிலையம் ஒன்று அருமையாக அமைக்கப் பெற்றிருப்பதை அறிந்து, இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். அடுத்த நாள்

மணி : முத்து கடைசியாக நாம் உண்மைச் செல்வததை இங்கு கண்டுவிட்டேவமல்லவா? என்றான்.

முத்து : ‘இங்கும் செல்வம் இல்லையே? என் செய்வது’ என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என வியப்புடன் வினவினான்.

முத்து : இந்நூல் நிலையமானது இம்மாளிகையில் வருவார்க்கும் போவார்க்கும் காட்சிச்சாலையாக வைக்கப்பட்டுள்ளதேயொழிய, இச்செல்வனது உள்ளத்தில் ஒரு நூலாவது இடம் பெறவில்லையே? ஏது இவனுக்குச் செல்வம்? என்றான்.

மணி பெரிதும் வெட்கிக் கலங்கினான். ‘பொருள்கள் அழிவதைப்போல நூல்களும் அழியக் கூடியவையே. கற்ற கல்வியே என்றும் அழியாச் செல்வமாகும்’ என மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. இருவரும் உண்மைச் செல்வத்தைத் தேட அடுத்த ஊர் சென்றனர்.

பக்கத்திலுள்ள ஒரு சிற்றூரில், பெரும் பணக்காரரான ஒருவர் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்துள்ளாரென்றும் அந்நூல்களிற் பெரும்பான்மையானவை அவர் படித்தவையே என்றும் அறிந்து இருவரும் அங்குச் சென்று தங்கி இருந்தனர். மறுநாள் பொழுது புலர்ந்தது. மணிக்கு வெகு மகிழ்ச்சி. தன் நண்பனை நோக்கி, ‘முத்து செல்வம் இங்கு முழு உருவைப் பெற்றிருக்கிறதல்லவா?’ என்று மகிழ்வோடு வினவினான்.

முத்து : ‘நண்பா, செல்வம் இங்கு இருந்தால் தானே அதைப்பற்றியும், அதன் முழு உருவைப் பற்றியும் பேசலாம்? செல்வத்தைத் தேடிப்போகிற நமது வழியில் ஏதோ குறையிருக்கிறதாகக் காண்கிறேன்’ என்றான்.

மணி : ‘என்ன?’ என வருந்திக் கேட்டான்.

முத்து : ‘இவர் ஒரு புத்தகப் பூச்சி. அவ்வளவுதான். கற்றறிந்த பெரியோர்களிடம் உள்ள உண்மைகளைக் கேட்டு அறியவேண்டும் என்ற உணர்ச்சி சிறிதேனும் இவரிடமில்லை. இனியேனும் ஏற்படும் என எண்ணுவதற்கும் இல்லை. ஏது இவருக்குச் செல்வம்?’ என்றான்.

மணி பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தினான் . ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’ என்று மணி முன்பு படித்திருந்தான். அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. களைப்பு அவனுக்கு அதிகமாயிற்று. என்றாலும் உண்மையான செல்வத்தைத் தேட அவனும், முத்துவும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுவிட்டனர்.

அடுத்த ஊரில் அருமைநாதர் என்ற ஒரு பெரும் பணக்காரர் நூல் நிலையம் வைத்துள்ளார் என்றும், நன்கு கற்றவர் என்றும், கேள்வியறிவும் நிறையப் பெற்றவர் என்றும் மணி அறிந்து முத்துவுக்கும் அறிவித்தான். இருவரும் அங்கு சென்று, அவரோடு உரையாடி அன்றைப் பொழுதைக் கழித்தனர். தான் கேள்விப் பட்ட அனைத்தும் உண்மையாக இருக்கக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் மணி.

மணி : ‘நண்பா! இவரிடத்தில் நிறைந்த வெல்வம் இருப்பதாக நாம் கண்டுவிட்டோமல்லளா?’ என்றான்.

முத்து : நண்பா! செல்வத்தைத் தேடி அலைகின்ற நாம் அதைவிட்டு வெகுதூரம் விலகி, இவ்விடம் வந்திருக்கிறோம். நாம் செல்வத்தைக் காணும் பாதையில் செல்லவே இல்லை என வருந்திக் கூறினான்.

மணி : ‘என்ன?’ என ஏங்கிக் கேட்டான்.

முத்து : ‘இம்மனிதன் கற்ற கல்வியும், கேட்ட கேள்வியும் இவனுடைய ஒழுக்கத்திற்குச் சிறிதும் துணை செய்யவில்லை. ஓட்டைச் சட்டியில் செல்வத்தை தேடினாலும் தேடலாம்; ஒழுக்கமற்றவனிடத்தில் செல்வத்தைத் தேடி, செல்வத்தை நெருங்குவதாக எண்ணி, செல்வத்தை விட்டு வெகு தாரம் விலகி இங்கு வந்துவிட்டோம். இனி வழி திரும்ப வேண்டியதுதான்’ எனக் கூறினான்.

மணி : ஆழ்ந்த சிந்தனை செய்தான். ‘ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்’ என்று மணி முன்பு படித்திருந்தான் அது இப்போது அவனுடைய நினைவிற்கு வந்தது. பெரிதும் வெட்கி, கலங்கி, வருந்தி மயங்கினான். முத்துவை நோக்கி, ‘நண்பா வழி திரும்பி நடப்போம் வா!’ என அழைத்தான். இருவரும் அவ்வூரை விட்டுப் புறப்பட்டுச் சென்ற வழியே திரும்பினர்!

மணி : ‘நண்பா! நம்மால் செல்வத்தைக் காண முடியுமா’ என்றான்.

முத்து : ‘ஏன் முடியாது? முயன்றால் முடியும்’ என்றான்.

மணி : ‘நண்பனே! உன்னால் முயன்று காண முடியுமா?’

முத்து : ‘முயன்றால் முடியும். ஆனால், நானோ பரம ஏழை. ஒவ்வொரு நாள் உணவுக்கும் உழைத்துத் தீர வேண்டும். எந்த ஏழைக்காவது சிறிது உணவும் கொடுத்தாக வேண்டும். நோய்வாய்ப்பட்ட எனது பெற்றோருக்கும் துணை இருந்தாக வேண்டும். இவைகளை விட்டுச் செல்வத்தைத் தேட, முயற்சி செய்ய, எனக்குப் பொழுது ஏது? என்றான்

மணி : ‘நண்பா! உன்னால் முடியாத ‘அது’ என்னால் முடிந்துவிட்டது. நான் செல்வத்தைக் கண்டுவிட்டேன்’ என்று கூறினான்.

முத்து : ‘ஆ! உண்மையாகவா? எனக்குக் காட்ட மாட்டாயா?’ என்றான்.

மணி : ‘நான் கண்டது மட்டுமல்ல, அது என் கையிலும் அகப்பட்டுக் கொண்டது’ எனக் கூறி, முத்துவின் இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்துக் க்ண்களில் ஒத்திக் கொண்டு, கண்ணீரை உகுத்து, ‘முத்து! நீயே செல்வம்’ என்றான்.

முத்து : நண்பனே! நன்றாகக் காட்டினாய். நன்கு. கண்டு கொண்டேன் நீயே நிறைந்த செல்வம் எனக் கூறி மார்புறத் தழுவிக் கொண்டு மகிழ்ச்சியடைந்தான். 

மணி : ‘நீ ஒழுக்கத்திற் சிறந்தவன், உன்னுடன்தான் பழகவேண்டும் என்று என் தந்தை அடிக்கடி கூறுவதுண்டு அச்செல்வத்தை இன்றுதான் முழுதுங்கண்டேன்’ என்றான்.

முத்து : ‘நீயே செல்வத்தின் உயிர்! இயல்பாகவே செல்வத்திற் சிறந்த குடும்பம்! உன் தந்தையோ பெருஞ்செல்வர். நன்கு கற்றிருக்கிறாய். கேள்வி அறிவும் பெற்றிருக்கிறாய் ஒழுக்கத்திற்குப் புது உயிர் கொடுத்துப் போற்றுகிறாய்! உன்னை விட்டுச் செல்வம் வேறாக எங்கிருக்கும்?’ எனக் கூறினான்.

மணி : நண்பா! விளையாட வேண்டாம். ஒழுக்கத்திற்கு உறைவிடமாகிய உன்னிடமிருந்து எனது அறிவு இன்று புதிய ஒளியைப் பெற்றிருக்கிறது. இன்னும் சில ஐயங்களுக்குப் பதில் வேண்டும், தயவுசெய்து கூறு. ஒழுக்கத்திலும் சிறந்த செல்வம் உலகில் இல்லையல்லவா?

முத்து : ஆம்! மக்கட்பிறவிக்கு ஒழுக்கம் ஒன்றே சிறந்ததும், நிறைந்ததும், உயர்ந்ததுமான செல்வம் ஆகும். ஒழுக்கமற்றவர் ‘மக்கள்’ என்று ஆகார். அவரை மாக்கள் என்றே அறிஞர் அழைப்பர்.

மணி : ‘அப்படியானால், செவிச் செல்வத்தைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ஒழுக்கமுள்ள ஒருவருக்குத்தான் கேள்வியும் செல்வமாகும். ஒழுக்கமற்றவன் கேட்டென்ன? கேளாதிருந்தென்ன? ஒழுக்கமில்லாதவன் கேள்வியிருக்கிறதே, அது கேள்வி என்றாகாது; அது ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்றாகும்.

மணி : ‘அது சரி கல்வியைச் செல்வம் என்றது எப்படி?’

முத்து : ‘ஆம் : ஒழுக்கமுள்ளவன் கற்றதுதான் கல்வி ஒழுககமற்றவன் கற்றது கல்வியல்ல. அது நீர்மேல் எழுதிய எழுத்து!’ மணி: ‘பொருளும் செல்வமல்லவோ?’

முத்து : ‘இல்லையென்றது யார்? ஒழுக்கம் உடையவனிடத்தில் இருக்கும் பொருளுக்குத்தான் செல்வம் என்று பெயர். ஒழுக்கமற்றவனிடத்தில் இருக்கும் பொருளுக்குச் ‘செல்வம்’ என்று பெயரல்ல அது அவனுடைய தீய செயல்களுக்குப் பயன்படுவதால் கொண்டவனைக் கொல்லும் கொடுவாள்’ என்றே பெயர் பெறும்.

வழிப்பேச்சு ஒருவாறு முடிந்தது. மணியும் முத்துவும் வீட்டை அடைந்தனர். மணியின் தந்தை இருவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்று, ‘எங்கே, தேடிய செல்வத்தைக் காட்டுங்கள்?’ என்றார். இருவரும் நடந்தவைகளைக் கூறினர். முத்து மணியைச் ‘செல்வம்’ என்றான் மணி முத்துவைச் ‘செல்வம்’ என்றாள். ‘நீங்கள் இருவருமே செல்வங்கள்’ என மணியின் தந்தை மனமகிழ்ந்து இருவரையும் இரு கைகளாலும் தழுவிக் கண்ணிருகுத்தார். “பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” என்ற குறட்பா அவர்க்கு நினைவுக்கு வந்தது; மகிழ்ந்தனர். முத்துவின் தாய் தந்தையரையும். தன்னோடு வந்திருக்கச் செய்து, முத்துவைத் தன் மருமகனாகவும் பெற்று, உண்மைச் செல்வங்களைப் பெற்ற அச்செல்வர் உயர்ந்த செல்வராகக் காட்சியளிக்கின்றார்.

இவ்வரலாறு நமக்கு அறிவிப்பதெல்லாம், ‘ஒழுக்கமே உயரிய செல்வம்’ என்பதுதான், ‘திரு’வும், ஒழுக்கமுள்ள விடத்தில்தான் இருக்கும். ஒழுக்கம் வேறு, திரு வேறு அல்ல ஒழுக்கமற்றவர்களின் தொடர்பை, ‘திரு நீக்கப் பட்டார் தொடர்பு’ எனக் கூறுவர் அறிஞர்.

முடிவாக நாம் அறிந்துகொண்டது என்னவெனில், ‘ஒழுக்கமே முதற் செல்வம்; மற்றவை துணைச் செல்வங்கள் ; இவை அனைத்தும் சேர்ந்ததே திருச்செல்வம்” என்பதுதான். இதன்படி மணியும், முத்துவும் திருச்செல்வம் பெற்ற திருச் செல்வர்களானார்கள்.

தம்பி! நீ திருச்செல்வனாக இருக்க ஆசைப்படு. தங்கையே! நீ திருச்செல்வியாக இருக்க விரும்பு. நமது குடும்பம் திருச்செல்வம் பெற்ற குடும்பம் என்பதும், நமது வாழ்வு திருச்செல்வம் பெற்ற வாழ்வு என்பதும், நமது நாடு திருச்செல்வம் பெற்ற நாடு என்பதும், என்றென்றும் உனது நினைவிலிருக்கட்டும்.

வாழட்டும் திருச்செல்வம்!

வளரட்டும் திருச்செல்வம் பெற்ற குடும்பங்கள்!