ஒப்பியன் மொழிநூல்/முன்னுரை
முன்னுரை
ஆரிய திராவிடப் பகுப்பு
இந்திய சரித்திரத் தந்தையும் 'இந்தியாவின் முந்திய சரித்திரம்' (Early History of India) என்னும் நூலின் ஆசிரியருமான வின்சன்ற்று சிமித் (Vincent Smith) என்பவர், அந்நூன் முகவுரையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்:—
"வடமொழிப் புத்தகங்கள் மேலும் இந்தோ-ஆரியக் கருத்துகள் மேலுமாக, வடக்கே அளவுக்கு மிஞ்சிய காலம் கவனஞ் செலுத்தப்பட்டு வந்திருக்கின்றது. ஆரியமல்லாத பகுதியைத் தகுந்தபடி கவனிப்பதற்குக் காலம் வந்து விட்டது.
"இப்புத்தகம் இந்தியாவின் அரசியற் சரித்திரத்தைச் சுருங்கக் கூறுவதற்கே எண்ணி வரையறுக்கப்பட்டுள்ளமையால், முன் சொல்லப்பட்ட ஆராய்ச்சி வழியைப் பின்பற்றக் கூடாதவனாயிருக்கின்றேன். ஆயினும், அகால முடிவ டைந்த ஒரு பெயர் பெற்ற இந்தியக் கல்விமான்[1] கவனித்தறிந்தவை சில, கருத்தாயெண்ணுதற்குரியனவாதலின் அவற்றை இங்குக் கூறாதிருக்க முடியவில்லை. அவையாவன:
இந்தியா சரியானபடி தெற்கிலுள்ளது
"வட இந்தியாவில் சமஸ்கிருதத்தையும் அதன் சரித்திரத்தையும் படித்து, இந்து நாகரிகத்தின் அடிப்படைக் கூற்றைக் காண முயல்வதானது, அக் காரியத்தை மிகக் கேடானதும் மிகச் சிக்கலானதுமான இடத்தில் தொடங்குவதாகும். விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள இந்தியத் தீபகற்பமே இன்றும் சரியான இந்தியாவாக இருந்துவருகின்றது. இங்குள்ள மக்களிற் பெரும்பாலார் ஆரியர் வருமுன்பு தாங்கள் கொண்டிருந்த கூறுபாடுகளையும்,மொழிகளையும், சமுதாய ஏற்பாடுகளையுமே இன்றும் தெளிவாகக் கொண்டிருந்து வருகிறார்கள்.இங்கேகூட, சரித்திராசிரியனுக்குத் தன்னாட்டுப் பாவினின்றும் அயல்நாட்டு ஊடையை எளிதாய்ப் பிரித்தெடுக்க இயலாதவாறு, ஆரியம் மிக நன்றாய் வேரூன்றியுளது. ஆனால், எங்கேனும் ஓரிடத்தில் அதை வெற்றிபெறப் பிரித்தெடுக்க முடியுமானால் அது தெற்கில்தான். எவ்வளவு தெற்கே போகிறோமோ அவ்வளவு பிரித்தெடுக்க வசதி அதிகரிக்கும்."
"அங்ஙனமாயின், கலைமுறைப்பட்ட இந்திய சரித்திராசிரியன் தனது படிப்பை, இதுவரை மிக நீடச் சிறந்த தென்று பின்பற்றின முறைப்படி கங்கைச் சமவெளியினின்றும் தொடங்காமல் கிருஷ்ண காவேரி வைகையாற்றுச் சமவெளிகளினின்றும் தொடங்கவேண்டும்."
இங்ஙனம் இருபத்தைந்தாண்டுகட்கு முன்பே இரு பெருஞ் சரித்திரப் புலவர் எழுதியிருப்பவும், இந்திய சரித்திராசிரியர்கள் இதைச் சற்றும் கவனியாது, இன்றும் வடநாட்டையும் ஆரியத்தையுமே தலைமையாகவும் அடிப்படையாகவுங்கொண்டு, இந்திய சரித்திரத்தை நேர் மாறாக எழுதி வருவது பெரிதும் இரங்கத்தக்கதொன்றாம்.
"இந்தியாவில், வட பாகத்தில் ஆரிய திராவிடத்தைப் பிரிக்க இயலாவிடினும் தென்பாகத்தில் இயல்வதாகும். இங்கும் இயலாதென்பது ஆராய்ச்சியில்லாதார் கூற்றே. இந்தியாவில் ஆரியர் என்பது கீழ்நாட்டாரியரென்று மொழிநூலார் கூறும் சமஸ்கிருத ஆரியரை.
தமிழ்நாட்டு மக்களுள் ஆரியர் யாவரெனின் பார்ப்பனரென்னும் ஒரு குலத்தாரே. பிறருள், பிற்காலத்து வந்த மேனாட்டாரும், அவரது கலப்புற்ற இந்தியரான சட்டைக்காரரும், உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முகமதியரும் தவிர, மற்றவரெல்லாம் தனித்தமிழரே.
தமிழ்நாட்டின் வடபாகத்தில் லப்பையென்றும், கீழ் பாகத்தில் மரைக்காயர் என்றும், தென்பாகத்தில் ராவுத்தர் 3 என்றும், மலையாளத்தில் மாப்பிள்ளை என்றும், நால் வகை யாகச் சொல்லப்படும் முகமதியரெல்லாம், தோற்றத்தால் வேறுபட்டுக் காணினும், பிறப்பால் தமிழ்நாட்டுக் கிறிஸ்த வரைப்போலத் தமிழர் அல்லது திராவிடரேயாவர்.
தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்டுள்ள நாயுடு, ரெட்டி, கோமுட்டி, சக்கிலியர் முதலிய வகுப்பார், இக்கால மொழி முறைப்படி தமிழராகக் கருதப்படாவிடினும், தமிழருக்கு நெருங்கின இனத்தாராவர். இவர் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நாயக்க மன்னருடன் ஆந்திர நாட்டினின்றும் தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். மலையாளம், கன்னடம், துளு முதலிய பிற திராவிட மொழிகளைப் பேசும் அப் பார்ப்பனரும் தமிழருக்குத் தெலுங்கரைப் போல் இனத்தாராவர்.
ஆரியரும் திராவிடரும் வடநாட்டிற் பிரிக்க முடியாதவாறு கலந்துபோனாலும். அங்கும் பிராமணர் மட்டும் தொன்று தொட்டுத் தங்கள் குலத்தைக் கூடியவரை தூய்மையாய்க் காத்துவந்ததாகவே தெரிகின்றது.
பார்ப்பனர் ஆரியர் என்பதற்குச் சான்றுகள்
(1) உருவம் — நிறம் : பார்ப்பனர் வடக்கேயுள்ள குளிர் நாட்டினின்றும் வந்தவராதலின், தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில் மேனாட்டாரைப்போல் வெண்ணிறமாயிருந்தனர்; பின்பு வெயிலிற் காயக் காயச் சிறிது சிறிதாய் நிறமாறி வருகின்றனர்.
'கருத்தப் பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது' என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளையென்பதும், வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பென்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக் குறிக்குமென்பதும் இதன் கருத்து.
குடுமி : பண்டைத் தமிழருள் ஆடவர் (புருஷர்) குடுமி வைத்திருந்தனரேனும், பார்ப்பனரைப்போல மிகச் சிறிய உச்சிக் குடுமி வைத்திருந்ததாகத் தெரியவில்லை. பெண்டிர் இன்று போலத் தலைமயிர் முழுவதையும் வளரவிட்டனர். ஆடவர் சுற்றிவரச் சிறிது ஒதுக்கிக்கொண்டனர். ஆடவர் முடி சிறிதாயும் பெண்டிர் முடி பெரிதாயுமிருந்ததினால், இவை முறையே குஞ்சி யென்றும் கூந்தலென்றும் கூறப்பட்டன. குடுமி என்பது உச்சிப் பாகத்திலுள்ளதைக் குறிக்கும்.
"அன்னாய் வாழிவேண்டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமுங்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாட னூர்ந்த மாவே"
என்னும் ஐங்குறுநூற்றுச் செய்யுளில், (குறிஞ்சி. 202), குதிரையின் தலையாட்டத்திற்குப் பார்ப்பனச் சிறுவனின் குடுமியை உவமை கூறியிருப்பது, அது தமிழச் சிறுவனின் குடுமியினும் மிகச் சிறிதாயிருந்தமை பற்றியே.
மீசை: மீசையைச் சிரைத்துக்கொள்ளும் வழக்கம் ஆரியரதே. தமிழரிற் சிலர் மேனாட்டாரியரைப் பின்பற்றி இப்போது மீசையைச் சிரைத்துக்கொள்கின்றனர்.
(2) உடை: பார்ப்பனருள் ஆடவர் பஞ்சகச்சம் கட்டுகின்றனர்; பெண்டிர் தாறு பாய்ச்சிக் கட்டுகின்றனர். இவை தமிழர் வழக்கமல்ல. விசுவப் பிராமணரென்று தங்களைக் கூறிக்கொள்ளும் கம்மாளர், பார்ப்பனரோடு இகலிக் கொண்டே சிலவிடத்து அவரது உடுமுறையைப் பின்பற்றுகின்றனர்.
நூல்: பூணூலணிதல் பார்ப்பனர்க்கே உரியது, 'நூலெனிலோ கோல்சாயும்' என்னுஞ் செய்யுளும், 'ஊர்கெட நூலைவிடு' என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும்.
தமிழ்நாட்டு வணிகரும் ஐவகைக் கம்மியரும் பூணூல் பூண்டது, அறியாமைபற்றி ஆரிய முறையைச் சிறந்ததாகக் கருதிய பிற்காலமாகும்.
ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிப் பார்ப்பனருக்குத் தலைமையேற்பட்டபின், பல தமிழ் வகுப்பினர் தங்களுக்கு ஆரியத் தொடர்பு கூறுவதை உயர்வாகக் கருதினர். ஆரியக் குலமுறைக்கும் திராவிடக் குலமுறைக்கும் இயைபு இல்லா விடினும், ஆரியரல்லாதவரெல்லாம் சூத்திர வகுப்பின் பாற்பட்டவர் என்னும் தவறான ஆரியப் பொதுக்கொள்கைப் படி, தமிழரெல்லாருக்கும் சூத்திரப் பொதுப்பட்டம் சூட்டின பிற்காலத்தில், தமிழ் நாட்டிலுள்ள வணிகர் தங்களை வைசியரென்று சொல்லிக் கொண்டால், சூத்திரப்பட்டம் நீங்குவது உடன் ஆரியக் குலத் தொடர்புங் கூறிக்கொள்ளலாமென்று, ஆரிய முறையைப் பின்பற்றி வைசியர், சிரேஷ்டி (சிரேட்டி-செட்டி) என்னும் ஆரியப் பெயர்களையும், பூணூலணியும் வழக்கத்தையும் மேற்கொண்டனர். வணிகர் செல்வமிகுந்தவராதலின் அவரது துணையின் இன்றியமையாமையையும், தமிழர்க்குள் பிரிவு ஏற்பட ஏற்பட அவரது ஒற்றுமை கெட்டுத் தங்கட்குத் தமிழ்நாட்டில் ஊற்றமும் மேன்மையும் ஏற்பட வசதியாயிருப்பதையும், பார்ப்பனர் எண்ணித் தமிழ் வணிகருக்குத் தாராளமாய் வைசியப் பட்டம் தந்தனர்.
ஆரியர்க்குள், பூணூலணிவது பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் என்னும் மேல் மூவரணத்தார்க்கும் உரியதேனும், அது ஆரியரொடு தொடர்பில்லாத தமிழர்க்குச் சிறிதும் ஏற்பதன்று. ஒவ்வொரு நாட்டிலும் மறையோர், அரசர், வணிகர், உழவர் என்னும் நாற்பாலார் உளர். அவரையெல்லாம் (சிறிது வேறுபட்ட) ஆரிய முறைப்படி முறையே பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று கொள்ளின், இங்கிலாந்திலுள்ள கந்தர்புரி (Canterbury) அரசக் கண்காணி யாளரைப் (Archbishop) பிராமணரென்றும், மாட்சிமை தங்கிய ஆறாம் ஜியார்ஜ் மன்னரை க்ஷத்திரியரென்றும், அங்குள்ள வணிகத் தொழிலாளரை வைசியரென்றும், உழவரையும், கூலிக்காரரையும் சூத்திரரென்றும் கூறவேண்டும். ஆங்கிலேயர் ஒரு கலவைக் குலத்தாரேனும், உறவுமுறையில் எல்லாரும் ஒரே குலத்தார் என்பது சரித்திரமறிந்த அனைவர்க்கும் தெளிவாய்த் தெரிந்ததே. பிராமணர்கள் பிற நாடுகளிலுள்ளவர்களையும் ஆரியக்குல முறைப்படி பகுத்தாலும் பிராமணக் குலத்தன்மை மட்டும் தங்கட்கேயுரியதாகக் கொள்வர். அதோடு கூடியவரை எல்லாரையும் சூத்திரரென்று பொதுப்படச் சொல்லி, பின்பு ஒரு பயனோக்கி அரசரை க்ஷத்திரியரென்றும், வணிகரை வைசியரென்றும் முன்னுக்குப்பின் முரண்படக் கூறுவது அவர் வழக்கம். ஆரிய திராவிட வரண வேறுபாட்டைப் பின்னர்க் காண்க:
கம்மியர் (கம்மாளர்) நெடுங்காலமாகப் பிராமணரொடு இகல்கொண்டு வருவதனால், தாமும் பிராமணரும் சமம் என்று காட்டுவதற்காகப் பூணூலணிந்து வருகின்றனரேயன்றி வேறன்று.
தமிழ்நாட்டில் பூணூலணியும் தமிழரெல்லாம் ஏதேனும் ஒரு வணிகத் தொழிலராயும், கம்மியத் தொழிலராயுமே இருப்பர்.
தமிழரின் நாகரிகத்தையும், சரித்திரத்தையும் அறியாத தமிழர், ஆரிய நாகரிகத்தை உயர்ந்ததென மயங்கி, இக்காலத்தும் ஆரிய வழக்கத்தை மேற்கொள்வதால் உயர்வடையலாமென்று கருதுகின்றனர். சில ஆண்டுகட்குமுன் சிவகாசி, சாத்தூர் முதலிய சில இடங்களிலுள்ள தனித் தமிழரான நாடார் குலத்தினர், புதிதாகப் பூணூலணிந்து கொண்டதுடன், தங்களை க்ஷத்திரியரென்றும் கூறிக்கொண்டனர். நாடார் குலத்தினர் வணிக குலத்தைச் சேர்ந்தவரென்பது உலக வழக்காலும், நூல் வழக்காலும் தெளிவாயறியக் கிடக்கின்றது. வைசியர், க்ஷத்திரியர் என்னும் பெயர்கள் வடசொற்களாயிருப்பதுடன், க்ஷத்திரியர் என்னும் பெயர் நாடார் குலத்திற்கு ஏற்காததாயுமிருக்கின்றது.
நூல் என்பது புத்தகத்திற்கு இழைக்கும் பொதுப் பெயராதலின், நூலோர் என்னும் பெயர் அறிஞரையும் பார்ப்பனரையுங் குறிக்கும்: இடம் நோக்கி யறிந்துகொள்க.
(3) நடை : தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில், 12-ஆம் சூத்திரவுரையில், “தன்மையென்பது சாதித் தன்மை; அவையாவன பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடை கொண்டு வந்து தோன்றலும்” என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இத் தன்மையை இன்றும் ஆங்கில நாகரிகம் நுழையாத சிற்றூர்களிற் காணலாம்.
(4)மொழி : பார்ப்பனரின் முன்னோர் பேசிய மொழி கிரேக்கத்தையும் பழம் பாரசீகத்தையும் வேத ஆரியத்தையும் ஒட்டியதாகும். வேத ஆரியர் மிகச் சிறுபான்மையராயி ருந்ததனாலேயே, கடல்போற் பரந்த வடஇந்தியப் பழந்திராவிட மக்களுடன் கலந்து தம் முன்னோர் மொழியைப் பேசும் ஆற்றலை இழந்தனர். அதனால், அவர் வழியினர் இன்று எம்மாநிலத்தில் உள்ளனரோ அம் மாநிலமொழியையே தம் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆயினும் வேத ஆரிய மொழியுடன் அக்காலத்து வட்டாரமொழிகளாகிய பிராகிருதங்களைக் கலந்து செயற்கையாக அமைத்துக்கொண்ட சமற்கிருதம் என்னும் வடமொழிமீது வரையிறந்த பற்றும், தாம் பேசும் வட்டாரமொழிகளில் இயன்றவரை சமற்கிருதத்தைக் கலப்பதும், அவரெல்லார்க்கும் பொதுவியல்பாகும்.
வடமொழி செயற்கையான வடிவில் மிக முதிர்ந்ததாதலின் வழக்குறாது போய்விட்டது. ஆனாலும், பிராமணரின் வழியினரான பார்ப்பனர் இன்று வடமொழியைத் தம்மாலியன்ற வரை பாதுகாத்து வருகின்றனர். பிராமணர் இந்தியாவில் எந்த இடத்திலிருந்தாலும், எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் வடமொழிப் பயிற்சியைமட்டும் விடார். மற்ற வகுப்பாரோ பெரும்பாலும் தத்தம் தாய்மொழிகளையே அறிந்திருப்பர். வடமொழியின் கடினம்பற்றிச் சில பார்ப்பனர் அதைக் கல்லாதிருப்பினும், அதன்மேல் வைத்திருக்கும் பற்றில் மட்டும், அதைக் கற்றவரினும் எள்ளளவும் குறைந்தவராகார். பார்ப்பனர் பிற மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டிருப்பதும், வடமொழி வழக்கற்றவிடத்து வேறு போக்கின்றியேயன்றி வேறன்று.
பார்ப்பனர் வடமொழியைப் பேசாவிடினும் வளர்ப்பு மொழியாகக் கொண்டுள்ளமையின், அவர்க்கு வடமொழியாளர் என்று பெயர்.மணிமேகலையில், 'வடமொழியாளர்' (5:40) என்று பார்ப்பனர்க்கும், 'வடமொழியாட்டி' (13:78) என்று பார்ப் பனிக்கும் வந்திருத்தல் காண்க.
வடமொழிக்குத் தமிழ் நூல்களில் ஆரியம் என்னும் பெயரும் வழங்குகின்றது. இப்பெயரொன்றே பார்ப்பனரைத் திராவிடரினின்று வேறான ஆரியராகக் கொள்ளப் போதிய சான்றாகும். ஆரிய நாடு, ஆரியபூமி, ஆரியாவர்த்தம் என்று சொல்லப்படுவது பனி (இமய) மலைக்கும் விந்திய மலைக்கும் இடையிலுள்ள பாகமாகும். இதுதான் ஆரியர் இந்தியாவில் முதலாவது பரவி நிலைத்த இடம். இங்கு வழங்கினதினால்தான் ஆரிய மொழிக்கு 'வடமொழி' யென்றுபெயர்.
வடநாட்டில், ஆரியரும் ஆரியர்க்கு முந்தின பழங்குடிகளும் பெரும்பாலும் கலந்துபோனமையின், பிற்காலத்தில் வட நாட்டார்க்கெல்லாம் பொதுவாக 'வடவர்' 'ஆரியர்' என்னும் பெயர்கள் தமிழ் நூல்களில் வழங்கிவருகின்றன.
ஆரியம் என்னும் பெயரால் தமிழ்நாட்டில் கேழ்வரகு தவிர வேறு ஒரு பொருளுங் குறிக்கப்படுவதில்லை. ஆரியக் கூத்து என்பது தமிழ்நாட்டில் இசைத் தமிழும் நாடகத் தமிழும் வழக்கற்றபின், வடநாட்டார் வந்து ஆடிய நாடகத் திறமேயன்றி, பல்கலைக்கழக அகராதியிற் குறிக்கப்பட்டுள்ள படி கழைக் கூத்தன்று.
ஆரியன் என்னும் பெயருக்கு, ஆசிரியன், பெரியோன், பூசாரியன் முதலிய பொருள்களெல்லாம் தமிழில் தோன்றினது தமிழ்நாட்டில் பார்ப்பனத் தலைமை ஏற்பட்ட பிற்காலத்தேயாகும். இப் பொருள்களும் நூல் வழக்கேயன்றி உலக வழக்காகா:
வடமொழி, தென்மொழியின் செவிலித்தாயென்றும், நற்றாயென்றும், இந்தியப் பொதுமொழியென்றும் ஆராய்ச்சி யில்லாத பலர் கூறி வருகின்றனர். உலக மொழிகளில், ஆரிய மொழிகளும் திராவிட மொழிகளும் மொழிநிலையில் மிக வேறு பட்டனவாகும். திராவிடக் குடும்பம் மிக இயல்பானதும் ஆரியக் குடும்பம் மிகத் திரிந்ததுமாகும். அவற்றுள்ளும், இயல்பிற் சிறந்த தமிழும் திரிபில் முதிர்ந்த வடமொழியும் மிக மிக வேறு பட்டனவாகும்.வடமொழிக்கும் தென்மொழிக்கும் வேறுபாடு
1. எழுத்துகளின் தொகை (உண்மையானபடி) வடமொழியில் 42; தென்மொழியில் 30.
2. வடமொழியொலிகள் வலியன; தென்மொழி யொலிகள் மெலியன.
3. மூச்சொலிகள் வடமொழியில் மட்டுமுண்டு.
4. கூட்டெழுத்துகள் தென்மொழியில் இல்லை.
5. வடமொழியில் உயிர்கள் (தீர்க்கம், குணம், விருத்தியென மூவகையில்) நெடிலாக மாறிப் புணரும்; தென்மொழியில் உடன்படுமெய் பெற்றுப் புணரும்.
6. தமிழில் மொழி முதல் இடை கடை வராத எழுத்துகளெல்லாம், வடமொழியில் மொழி முதலிடை கடை வரும்.
7. இடுகுறிப்பெயர் தமிழுக்கில்லை.
8. முன்னிலையை உளப்படுத்தும் தன்மைப் பன்மைப் பெயர் வடமொழியிலில்லை.
9. உயர்திணை, அஃறிணை என்ற பாகுபாடு வடமொழியில் இல்லை.
10. பால்கள் வடமொழியில் ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்று; அவை ஈறு பற்றியன; தமிழில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பால் ஐந்து; அவை பொருளும் எண்ணும் பற்றியன.
11. இருமை என்னும் எண் தமிழில் இல்லை.
12. முதல் வேற்றுமைக்கு உருபு வடமொழியி லுண்டு; தென்மொழியில் இல்லை.
13. குறிப்புவினை வடமொழியில் இல்லை.
14. வடமொழியிற் பெயரெச்சமும் பெயர் போல வேற்றுமை யேற்கும்.
15. வடமொழியில் வரும் முன்னொட்டுச் (Prefix) சொற்கள் தமிழில் பின்னொட்டுச் (Suffix) சொற்களாயிருக்கும்16. தழுவுஞ் சொல்லும் நிலைமொழியும் வடமொழியில் வருமொழியாயிருப்பதுண்டு. தமிழில் வழுவமைதியாயும் அருகியுமே அங்ஙனம் வரும்.
17. வினைத்தொகை வடமொழியில் இல்லை.
18. தமிழில் மிக முக்கியமாகக் கருதப்படும் பொருளிலக்கணம் வடமொழியில் இல்லை.
19. வெண்பா, ஆசிரியப்பா முதலிய பாக்களும் இவற்றின் வேறுபாடுகளும் இனங்களும் வட மொழியில் இல்லை.
20. இயல் இசை நாடகமெனத் தமிழை மூன்றாகப் பகுப்பது போல வடமொழியைப் பகுப்பதில்லை.
இனி, வடமொழி மேனாட்டாரிய மொழிகளைச் சேர்ந்ததென்பதைக் கீழ்வரும் சொற்களால் உணர்க:—
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
நான் | aham | ego | ego | ieh | I(ie O.E.) |
நாம் | vayam | emeis | nos | wir | we |
நீ | tvam | tu,su | tu | du | thou |
நீர் | yuyam | suge | vos | euch, ihr | you |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
தந்தை | pitru | pater | pater | vater | father |
தாய் | matru | meter | mater | matter | mother |
மகன் | sunu | huios | sohn | son | |
மகள் | duhitru | thugatar | tochter | daughter | |
உடன்பிறந்தான் | bhraru | frater | frater | bruder | brother |
உடன்பிறந்தாள் | svasru | sosor | schwester | sister | |
(orig. sostor) |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
தலை | kapala | kafala | caput | haupt | head |
(heafod, O.E.) | |||||
மூக்கு | nasa | nasus | nose | ||
உள்ளம், குலைக்காய் |
hrudaya | kardia | crodis | herza | heart |
பல் | dant | ontos | dens | zahn | tooth |
கால்முட்டி | janu | gonu | genu | knie | knee |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
ஒன்று | eka | eis, en | unus | eins | one |
இரண்டு | dvi | duo | duo | zwei | two |
மூன்று | thri | treis | tres | drei | three |
நான்கு | chathur | tettares | quatuor | vier | four |
ஐந்து | panchan | pente | quinque | fnnu | five |
ஆறு | shash | eks | sex | sechs | six |
ஏழு | sapthan | epta | septem | steben | seven |
எட்டு | ashtan | okto | octo | acht | eight |
ஒன்பது | navan | ennea | novem | neun | nine |
பத்து | dasan | deka | decem | zehn | ten |
இருபது | visathi | eikati | viminti | zwanzig | twenty |
நூறு | satha | ekaton | centum | hundert | hundred |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
வாசல் | dhvara | thura | fores | tor | door |
நடு | madhya | messos | medius | mitte | middle |
(methyos) | |||||
வெப்பம் | gharma | thermos | formus | warm | warm |
உண் | ad | edein | edere | essen | eat |
அறி | vid | eidon | video | wissen | wit |
மரம் | daru | drus | zehren | tree | |
நீர் | uda | udor | unda | wasser | water |
வேர் (வேர்வை) | svid | idros | sudare | swizzan | sweat |
அறி | jna | gnomi | gnosco | kennen | know |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | Eng. |
சொல் | vartha | eiro | verbam | worte | word |
(to speak) | |||||
பிற | jan | genea | genea | generate | |
பெயர் | naman | onoma | nomen | name | name |
உண்மை | yata | eteos | etymon | etymo-logy |
தமிழ் | Sans. | Gr. | Lat. | Ger. | A. S |
இருக்கிறேன் | asmi | esmi | sum | bin | eom |
இருக்கிறோம் | smas | esmes | sumus | sind | sind |
இருக்கிறாய் | asi | eis | es | bist | eart |
இருக்கிறீர்(கள்) | satha | este | estis | seid | sind |
இருக்கிறான் | asti | asti | est | ist | is |
இருக்கிறார்(கள்) | santi | eisi | sunt | sind | sind |
மேனாட்டாரிய மொழிகட்கும் வடமொழிக்கும் சொற்களில் ஒப்புமை யிருப்பதுபோலவே, இலக்கண நெறிமுறைகளிலும் ஒப்புமையிருக்கின்றது. அவற்றையெல்லாம் இங்குக் கூறின் விரியும்.
பார்ப்பனர் தென்னாட்டிற்கு வந்த புதிதில், தமிழைச் சரியாய்ப் பேசமுடியவில்லை. இப்போதுள்ள மேனாட்டாரின் தமிழ்ப் பேச்சுப் போன்றே, அக்காலப் பார்ப்பனர் பேச்சும் நகைப்பை விளைவித்தது. அதனால், தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் (1-ஆம் சூ.) உரையில், ஆரியர் கூறும் தமிழை நகைச்சுவைக்குக் காட்டாக எடுத்துக் காட்டினர் நச்சினார்க்கினியர். கபிலர், நச்சினார்க்கினியர் முதலிய தமிழறிஞர் பலர் ஆரியப் பார்ப்பனரேனும், அவர் ஒரு சிறு தொகையினரேயாவர். பெரும்பாற்பட்ட பார்ப்பனர் புதிதாய் வந்தவராயும் தமிழைச் சரியாகக் கல்லாதவராயும் இருந்தமையின், தமிழைச் செவ்வையாய்ப் பேசமுடியவில்லை. மேனாட்டாருள் பெஸ்கி, கால்டுவெல், போப், உவின்ஸ்லோ முதலிய பல சிறந்த தமிழறிஞரிருந்ததையும், பிறருக்கு அவரைப்போல் தமிழைச் செவ்வையாய்ப் பேச முடியாமையையும் மேற்கூறியதுடன் ஒப்பிட்டுக் காண்க.
தமிழர்க்கும், வடமொழி அதன் செயற்கையொலி மிகுதிபற்றி நன்றாய்க் கற்க வராமையின், “பார்ப்பான் தமிழும் வேளாளன் கிரந்தமும் வழவழ” என்னும் பழமொழி எழுந்தது. இதனாலும், பார்ப்பனரும் தமிழரும் வேறானவர் என்பதை யறியலாம்.
“ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
என்று தேவா. (844 : 5) கூறியதும் இக் கருத்துப்பற்றியே.
குலவழக்கு: பார்ப்பனர் இப்போது நன்றாய்த் தமிழறிந்தவராகக் கருதப்படினும், வடமொழிப்பற்றுக் காரணமாக, இயன்றவரை வடசொற்களைக் கலந்து மணிப்பவள நடையிற் பேசுவதே வழக்கம். சாப்பாடு, காரணமாக, அடைமானம், தண்ணீர், திருவிழா, குடியிருப்பு, கலியாணம் முதலிய சொற்களுக்குப் பதிலாக, முறையே போஜனம், வியாஜமாக, போக்கியம், தீர்த்தம், உத்சவம், வாசம், விவாகம் முதலிய சொற்களையே வழங்குவர். இவர்களிடத்தினின்றே தமிழரும் பல வடசொற்களைக் கற்றுத் தம் பேச்சில் வேண்டாது வழங்குகின்றனர். ஆங்கிலச் சொற்களைத் தமிழிற் கலந்து பேசுவது உயர்வென்று தவறாய் இப்போது எண்ணப்படுவது போலவே, வடமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதும் முற்காலத்தில் உயர்வாயெண்ணப்பட்டது. இதற்குக் காரணம் பார்ப்பனத் தலைமையே.
அம்மாமி, அம்மாஞ்சி (அம்மான்சேய்), அத்திம்பேர் (அத்தியன்பர்) முதலிய முறைப்பெயர் வடிவங்களும், சாஸனம் (பட்டயம்) தீர்த்தம் முதலிய பொருட்பெயர்களும், அவா போய்ட்டா, நேக்கு, போட்டுண்டு, சொல்றேள் (அவர்கள் போய்விட்டார்கள், எனக்கு, போட்டுக்கொண்டு, சொல்கிறீர்கள்) என்பன போன்ற கொச்சை வழக்கும், ஆடவர் பெண்டிருள் மூத்தாரையும் அடீ என்று விளிப்பதும், பார்ப்பனத் தமிழ்ப் பேச்சிற்கு ஒரு தனித்தன்மை யூட்டுவனவாகும்.
பார்ப்பனர் சில தனிச்சொற்களால் தங்களையும் தங்கள் பொருள்களையும் பிரித்துக்காட்டுவது முண்டு.
உ-ம். | மங்கலம், சதுர்வேதி மங்கலம் | — | ஊர் |
அக்கிராகாரம் | — | குடியிருப்பு | |
பிரமஸ்ரீ | — | அடைமொழி | |
பிரமதாயம் | — | மானியம் | |
பிரமராயன் | — | அரசப்பட்டம் | |
குமாரன் | — | மகன் | |
பட்டவிருத்தி | — | வேதங்கற்ற பிராமணனுக்கு விட்ட இறையிலி நிலம் |
(5) உறையுள் : பார்ப்பனர் எங்கிருந்தாலும் தமிழரொடு கலவாது தனித்தே உறைகின்றனர். அக்கிரகாரத்தில் இடம் அல்லது வசதியில்லாதபொழுதே தமிழர் நடுவில் வந்து குடியிருப்பர். அங்ஙனமிருப்பவரும் பெரும்பாலும் ஆங்கிலம் கற்றவராயும் அலுவலாளராயுமேயிருப்பர். அக்கிரகாரத்தில் எக்காரணத்தையிட்டும் தமிழருக்குக் குடியிருக்க இடந்தருவதில்லை. பலவிடங்களிற் சுடுகாடு கூடப் பார்ப்பனருக்குத் தனியாகவுளது.
(6) ஒழுக்கம் : பார்ப்பனர் தமிழ் முறைப்படி, விருந் தோம்பல், நடுவுநிலைமை முதலிய அறங்கள் இன்மையால் இல்லறத்தாருமல்லர்; கொல்லாமை, துறவு முதலிய அறங் களின்மையில் துறவறத்தாருமல்லர்.
“இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.”
ஒருவர் தம் குலத்தாருக்கு மட்டும் விருந்து செய்வது விருந்தோம்பலாகாது.
வேள்வியில் உயிரைக் கொல்வதும் கொலையே.
எல்லார்க்கும் பொதுவான அறச்சாலைகளிற்கூடப் பார்ப்பனர் உண்டபிறகே தமிழர் உண்ணவேண்டுமென்ற ஏற்பாடு இன்றும் இருந்து வருகின்றது. இது மிகவுந் திருந்திய திருப்பனந்தாள் மடத்திலும் இருந்து வருவது தமிழர்க்கு மிகவும் நாணுத்தருவதாகும்.
பார்ப்பனர் தமிழரொடு மணவுறவு கொள்ளாமை
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து தமிழரொடு மணவுறவு கொண்டதில்லை. முதன் முதலாகத் தமிழ் நாட்டிற்கு வந்த சில ஆரியர் அரக்க மாதரையோ தமிழ் மாதரையோ மணந்து பின்பு கைவிட்டதாகத் தெரிகின்றது. காசியபர் மாயையை மணந்ததைக் கந்த புராணத்திலும், விசிரவசு கேகசியை மணந்ததை இராமாயணத்திலும் காண்க. இராமனுஜர் சில தமிழரைப் பார்ப்பனராக்கினரென்று சொல்லப்படுகின்றது. அஃது உண்மையாயிருப்பினும் சிறுபான்மைக் கலப்பையே குறிக்கும். சில இந்தியர் மேனாட்டு மாதரை மணந்திருக்கின்றனர். இதனால் மேனாட்டாரும் கீழ்நாட் டாரும் கலந்துவிட்டனர் எனக் கூற முடியாது, மலையாள நாட்டில் பார்ப்பனர் திராவிடரான நாயமாதருடன் சம்பந்தம் என்னும் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆயினும், அம் மாதரையோ, அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளையோ, அக்கிராகரத்திற் சேர்த்துக்கொள்வதில்லை. அவரும் தம் இனத்தார் அல்லது குலத்தாருடனேயே இருந்து வருகின்றனர். திருவள்ளுவரின் தந்தையாகச் சொல்லப்படும் பகவன் என்னும் பார்ப்பான், ஆதி என்னும் பறைச்சியோடு கூடி இல்லறம் நடத்தினதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. அதிலும், பகவன் ஆதியைக் கைவிட்டோடியதும், பின்பு பலநாட் கழித்து, ஆதி பகவனைக் கண்டு, அவன் என்செயினும் விடாது தொடர்ந்து, தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதும், அதன்பின், அவன் தப்ப வழியின்றித் தனக்கவளிடம் பிறக்கும் பிள்ளைகளை உடனுடன் நீக்கிவிட வேண்டுமென்னும் நிபந்தனையின்மேல், அதற்கு வெறுப்புடன் இசைந்ததும் அறியப்படும்.
பார்ப்பனர் இதுவரை தங்களை எல்லா வகையிலும் பிரித்தே வந்திருக்கின்றனர். இன்றும் அங்ஙனமே. ஆயினும், தற்கால அரசியல் முறைபற்றி, ஆரியர் - திராவிடர் என்பது மித்தையென்றும் “இருவரும் ஒருவர்” என்றும் கூறிக் கொள்கின்றனர். இது சொல்லளவேயன்றிச் செயலளவிலன்று.
ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு
இக்கால மொழியியலும் அரசியலும்பற்றித் தமிழும் அதனினின்று திரிந்த திரவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திரவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.
தமிழ் — தமிழம் — த்ரமிள — திரமிட — திரவிட — த்ராவிட —திராவிடம்.
(1) வரணம் : பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப்பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகு பாடும் ஒன்றேயென்று மேனோக்காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன.ஆரியருள், பிராமணர் என்பார் ஒரு குலத்தார்; தமிழருள், அந்தணர் என்பார் ஒரு வகுப்பார்; அதாவது பல குலத்தினின்றும் தோன்றிய சித்தரும், முனிவரும் யோகியருமான பல்வகைத் துறவிகள்.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”
என்று திருவள்ளுவர் 'நீத்தார் பெருமை'யிற் கூறியிருத்தல் காண்க.
ஆரியருள், க்ஷத்திரியர் என்பார் சீக்கியரும் கூர்க்கரும் போன்ற மறக் குலத்தாரும் அரசரும் ; தமிழருள், அரசர் என்பார் அரசப் பதவியினர் ; அதாவது, சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரும் அவர்க்குக் கீழ்ப்பட்ட பாரி காரி போன்ற சிற்றரசரும்.
ஒவ்வொரு நாட்டிலும் அங்கங்குள்ள குலத்தலைவரே அரசராவர்; அரசரென்று ஒரு தனிக்குலம் இல்லை.
ஆரியருள், வைசியர் என்பார் வணிகம், உழவு ஆகிய இரு தொழிலும் செய்பவர்; தமிழருள், வணிகர் என்பார் வணிகம் ஒன்றே செய்பவர்.
ஆரியருள், சூத்திரர் என்பார் பலவகையிலும் பிறருக்குத் தொண்டுசெய்பவரும், பூணூல், வேதக்கல்வி முதலியவற்றிற்கு உரிமையில்லாதவருமான கீழ்மக்கள்; தமிழருள், வேளாளர் என்பார் உழுதும், உழுவித்தும் இருவகையில் உழவுத்தொழில் ஒன்றே செய்பவரும் எல்லாவுரிமையுமுடையவருமான மேன் மக்கள்:
ஆரியப் பாகுபாட்டில் நாற்பிரிவும் குலமாகும்; தமிழப் பாகுபாட்டில் வணிகர், வேளாளர் என்னும் இரு பிரிவே குலமாகும். அவற்றுள்ளும், வணிகக்குலம் வேளாண் குலத்தினின்றே தோன்றியதாகும். இது பின்னர் விளக்கப்படும். ஆரியச் சூத்திரரும் தமிழவேளாளரும் தம்முள் நேர்மாறானவர் என்பதைமட்டும் நினைவில் இருத்த வேண்டும்.
தமிழருக்கும் சூத்திரர் என்னும் பேருக்கும் எள்ளளவும் இயைபில்லை. ஆயினும், ஆரியம் தமிழ்நாட்டில் வேரூன்றிய பின், தமிழர் இங்ஙனம் தாழ்த்திக் கூறப்பட்டனர்.
(2) வாழ்க்கை நிலை (ஆச்சிரமம்) : ஆரிய வாழ்க்கை பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என நான்கு நிலைகளாக வகுக்கப்படும்; இவற்றுள் கிருகஸ்தம் ஒன்றே சூத்திரனுக்குரியது; தமிழர் வாழ்க்கை இல்லறம் துறவறம் என இரண்டாகவே வகுக்கப்படும்; இவை எல்லாக் குலத்தார்க்கும் பொது.
(3) நூல் : ஆரிய நூற்கலைகள் நால் வேதம் (ருக்கு, யஜு ர், சாமம், அதர்வணம்), ஆறங்கம் (சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருக்தம், சந்தம், கற்பம்), ஆறுசாஸ்திரம் (மீமாஞ்சை, நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், வேதாந்தம்), அல்லது தரிசனம், மச்சம், கூர்மம் முதலிய பதினெண்புராணம். மனுஸ்மிருதி, யாஜ்ஞவல்யஸ்மிருதி முதலிய பதினெண் ஸ்மிருதிகள் (தரும நூல்கள்), பவுட்கரம், மிருகேந்திரம் முதலிய இருபத்தெட்டாகமங்கள், நாட்டியம் இசைக்கருவிப் பயிற்சி முதலிய அறுபத்து நான்கு கலைகள் எனவும்; அஷ்டாதச (பதினெட்டு) வித்தை (நால்வேதமும் ஆறங்கமும், புராணம், நியாய நூல், மீமாஞ்சை, ஸ்மிருதி என்னும் நால் உபாங்கமும், ஆயுள் வேதம், தனுர்வேதம், காந்தருவவேதம், அருத்தநூல் என்னும் நான்கும்) எனவும்; பிறவாறும், வகுத்துக் கூறப்படும்.
தமிழ் நூல்கள் இயல், இசை, நாடகம் எனவும்; அகப் பொருள் நூல்கள், புறப்பொருள் நூல்கள் எனவும்; பாட்டு, உரை, நூல், வாய்மொழி (மந்திரம்), பிசி, அங்கதம், முதுசொல் என்னும் எழுவகை நிலமாகவும் வகுக்கப்படும். கடைக் கழக (சங்க) நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண் மேற்கணக்கு (பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும்) எனவும், கழக (சங்க) நூல்கள், கழக மருவிய நூல்கள் எனவும் வகுக்கப்படும்.
தொடர்நிலைச் செய்யுட்கள் (காவியங்கள்) தொல்காப்பியர் காலத்தில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எட்டு வனப்பாக வகுக்கப்பட்டன; இக்காலத்தில் பெருந்தொடர்நிலை, சிறு தொடர்நிலை எனவும்; சொற்றொடர் நிலை, பொருட்டொடர் நிலை எனவும் வகுக்கப்பட்டுத் தொண்ணூற்றாறு பனுவல் (பிரபந்தம்)களாக விரிக்கப்படும். கடைக்கழகக் காலத்தை யடுத்தியற்றப்பட்ட பத்துத் தொடர்நிலைச் செய்யுட்களை ஐஞ்சிறுகாப்பியம், ஐம்பெருங் காப்பியம் என இருதிறமாகப் பகுப்பர்.
இதிகாசம், புராணம் என்னும் நூல்வகைகள், பெயரளவில் வடமொழியேனும், பொருளளவில் இருமொழிக்கும் பொதுவாகும்.(4) நயன நீதி : ஆரிய நீதி நடுவுநிலை திறம்பிக் குலத்துக்கொரு வகையாக நீதி கூறும்.
உ - ம் : “பிராமணனும் க்ஷத்திரியனும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும், க்ஷத்திரியனுக்கு 500 பணமும் அறமறிந்த அரசன் தண்டம் விதிக்க.” (மனு. 8 : 276)
“பிராமணன் க்ஷத்திரியனை அன்முறையாய் (அநியாயமாய்)த் திட்டினால் 50 பணத்தையும் அங்ஙனம் வைசியனைத் திட்டினால் 25 பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் 12 பணத்தையும் தண்டமாக விதிக்க.” (மனு. 8 : 268).
“இருபிறப்பாளரின் (மேல் மூவரணத்தாரின்) பெயரையும் குலத்தையும் சொல்லி, இகழ்ச்சியாகத் திட்டுகிற சூத்திரன் வாயில், பத்தங்குல நீளமுள்ள எஃகுக்கம்பியைக் காய்ச்சி எரிய வைக்க.” (மனு. 8 : 271)
“பிராமணனுக்குத் தலையை மொட்டையடிப்பதே கொலைத் தண்டமாகும்; மற்ற வரணத்தாருக்கே கொலைத் தண்டமுண்டு. பிராமணன் என்ன பாவஞ் செய்தாலும், அவனைக் கொல்லாமல் காயமின்றி, அவன் பொருளுடன் ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும்.” (மனு. 8 : 379, 80)
இத்தகைய முறையே, ஆரிய அறநூல்களில் தலைமை யானதாகச் சொல்லப்படும் மனுதரும சாத்திரத்தில் மலிந்து கிடக்கின்றது.அதில் பிராமணனுக்குக் கூறப்படும் உயர்வும், பொருள் வசதியும், சூத்திரனுக்குக் கூறப்படும் இழிவும் ஆக்கத்தடையும் மிக மிக வரையிறந்தன. அறிவுடையோர் அதனை நீதி நூல் என்றும், தரும சாத்திரமென்றும் கூற நாணுவர். அப் பெயர்களை மங்கல வழக்காக அல்லது எதிர்மறையிலக்கணையாகக் கொண்டாலன்றி, அந்நூலுக்கு எள்ளளவும் பொருந்தா.
தமிழ் அறநூல்களான நாலடியாரும் திருக்குறளுமோ, ஆங்கில முறைமை போல, எல்லாக் குலத்தார்க்கும் ஒப்ப முறைகூறும். இதனாலேயே,
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”
என்று கூறிப்போந்தார் சுந்தரம் பிள்ளையும்.கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம்முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.
(5) மதம்: தற்காலத்தில் ஆரியமதமும் தமிழமதமும் ஒன்றேயென்னுமாறு கலந்திருந்தாலும், ஆரியருக்கே சிறப்பாகவுரிய தெய்வங்களைப் பிரித்துக் கூறலாம்.
இரு மருத்துவர், எண்வசுக்கள், பதினோருருத்திரர், பன்னீராதித்தர் என நால்வகையான முப்பத்து மூன்று தேவரும், இவரைத் தலைமையாகக் கொண்டவர் முப்பத்து முக்கோடி தேவர் என்பதும், தியாவுஸ், பிருதுவி, மித்திரன், அதிதி, ஆரியமான், சோமம், பர்ஜன்யா, உஷா, சவித்தார், பிரமா முதலிய வேதகாலத் தெய்வங்களும் ஆரியருடையன. (அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு, ருத்திரன், சரஸ்வதி என்னுந் தெய்வங்கள் பின்னர் விளக்கப்படும்.)
இவற்றுள், சோமம் என்பது மயக்கந்தரும் ஒருவகைக் கொடிச்சாறு; உஷா என்பவள் விடிகாலையின் உருவகம்.
(6) கருத்து : பிறப்பால் சிறப்பென்பதும், பிரமாவே மக்களைப் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகப் படைத்தார் என்பதும், சூத்திரனுக்கு உயர் தரக் கல்வியும் துறவறமும் இல்லையென்பதும், ஆன் (பசு) தெய்வத் தன்மையுள்ளதென்பதும். உழவு தாழ்ந்த தொழில் என்பதும், துன்பகாலத்தில் ஒழுக்கந் தவறலாம் என்பதும் ஆரியக் கருத்துகளாகும்.
தமிழர் ஆவைப் பயன் தருவதென்று பாராட்டினரே யொழியத் தெய்வத்தன்மை யுள்ளதென்று கொள்ளவில்லை.உழவை,
“சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
என்றும்,
“உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு”
என்றும் உயர்த்துக் கூறுவர் தமிழர். ஆனால், ஆரியரோ,
“சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கின்றனர். அந்தப் பிழைபபு பெரியோர்களால் பழிக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திற்கொண்ட கலப்பையும் மண்வெட்டியும், நிலத்தையும் நிலத்திலுள்ள பல உயிர்ப்பொருள்களையும் வெட்டுகின்றனவல்லவா?” (மனு. 10 : 84) என்று இழித்துக் கூறுவர்.
ஆரியர் தொல்லகம்
“ஆரிய வரணத்தின் தொல்லகம் ஆசியாவிலன்று, பால்டிக் நாடுகளிலும் காண்டினேவிய நாட்டிலுமேயிருந்தது. அங்கே ஆரிய மொழிகள் எழுந்தன. அவற்றை வழங்கிய உயரமான, நீலக்கண்ணும் வெளுத்த மயிநம் வாலமுகமுங் கொண்ட மக்கள் அங்குநின்றும் பரவினபோது, அம்மொழிகளும் அவர்களுடன் பரவின. அவர்கள் மணக்கலப்பாலேயே, தங்கட்கு இனமாகவும் அயலாகவுமுள்ள மக்கள் மேல், தங்கள் தலைமையையும் மொழிகளையும் ஏற்றுவதில் வெற்றி பெற்றார்கள். இந்தியாவிலும் ஐரானிலும் உள்ள கீழையாரியர், ஆரிய வரணத்தின் கடைசியும் மிகச்சேய்மையுமான கிளையினராவர். அவர்கள் பெரிய ஆற்றொழுக்கங்களைப் பின்பற்றி வந்து, கடைசியில் பஞ்சாப்பில் தங்கினார்கள்,” என்று முதலாவது லத்தாம் (Latham) எடுத்து விளக்கி, பின்பு மாந்தனூலும் (Anthropology) மொழிநூலும் பற்றிய சான்றுகளால், பொயஸ்கே (Poesche) யும் பெங்கா (Penga)வும் திறம்படத் தாங்கிய கொள்கையை நான் முற்றும் ஒப்புக் கொள்ளுகிறேன்”[2] என்று சாய்ஸ் (Sayce) கூறுகிறார்.
“மொழியின் கூற்றுகளை நன்றாய் ஆராயும்போது, அவை கதையை மிக வேறுபடக் கூறுகின்றன. ஆதி ஆரியன் உண்மையாகவே முரட்டுத் தன்மையுள்ள துப்புரவற்ற மிலேச்சனாய், கடுங்குளிரினின்றும் தன்னைக் காத்துக் கொள்ளக் காட்டு விலங்குகளின் தோலையுடுத்திக்கொண்டும், உலோகத்தைப் பயன்படுத்தத் தெரியாமலும் இருந்தான்” என்று, ஆட்டோ சிரேதர் (Otto Schrader) கூறுகின்றார்.[3]
ஆரியர் வருகை
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து, முதலாவது சிந்தாற்றுப் பாங்கில் தங்கினார்கள். சிந்து என்றால் ஆறு என்பது பொருள். ஆற்றுப் பெயர், முதலாவது அது பாயும் நாட்டிற்கும், பின்பு ஆரியர் வடஇந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் பரவின பின், இந்தியா முழுமைக்கும் ஆயிற்று. பாரசீகர், சகரத்தை ஹகரமாக ஒலிக்கும் தங்கள் வழக்கப்படி, சிந்து என்பதை 'ஹிந்து' என்று மாற்றினார்கள். பின்பு மறுபடியும் கிரேக்கர் அதை 'இந்தி' என்று திரித்தார்கள். கடைசியில் ஆங்கிலேயரால் 'இந்தியா' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது முல்லை நாகரிகத்தையே அடைந்திருந்தார்கள். மாந்தன் நாகரிகம் குறிஞ்சி, முல்லை, மருதம், நகர் என நான்கு நிலைகளைக் கொண்டது. தோலை உடுப்பதும், பரண்களிலும் குடில்களிலும் உறைவதும், பன்றி கிழங்ககழ்ந்தவிடத்தில் தினைபோன்ற கூலம் விதைத்து மழை நீரால் (வானாவாரியாக) விளையச் செய்வதும்[4] குறிஞ்சி நாகரிகமாகும். ஆடுமாடுகளை வளர்த்து அவற்றின் ஊனையும் பாலையும் உண்பதும், சோளம் கம்பு போன்ற புன்செய்ப் பயிர்களை விளைப்பதும், ஆட்டு மயிராடை உடுப்பதும், சிற்றில்களில் உறைவதும் முல்லை நாகரிகமாகும். நெல், கரும்பு முதலிய நன்செய்ப் பயிர்களை விளைப்பதும், நிலையாக ஓரிடத்திற் குடியிருப்பதும், பஞ்சாடையுடுப்பதும், தங் கள் பொருட்காப்பிற்குக் காவற்காரனை ஏற்படுத்துவதும் மருத நாகரிகமாகும். வாணிபமும், அரசியலும், கல்வியும் தோன்றி, முன்பு உழவரென்னும் ஒரே வகுப்பாராயிருந்தவர் வேளாளர், வணிகர், அரசர், அந்தணர் என்னும் நாற்பாலாய்ப் பிரிவதும், பின்னர்க் கொல், நெசவு முதலிய மேல் தொழில்கட்கும், சலவை, மயிர்வினை முதலிய கீழ்த் தொழில் கட்கும் மக்கள் பிரிந்து போவதும், மாளிகைகள் தோன்றுவதும், ஓவிய உணர்ச்சி உண்டாவதும் இசையும் நாடகமும் சிறப்பதும், வழிபாடுகளாயிருந்தவை மதங்களாக வளர்வதும் நகர நாகரிகமாகும். நகரத்தில்தான் நாகரிகம் சிறப்பாய்த் தோன்றிற்று. நாகரிகம் என்னும் சொல்லும் நகர் என்பதினின்றும் பிறந்ததே. (நகர் — நகரகம் — நகரிகம் — நாகரிகம்). ஆங்கிலத்திலும் இங்ஙனமே (Civilise, from civitas (L) = city).
ஆரியர்கள் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டும், ஆவை (பசுவை)த் தங்களுக்குச் சிறந்த சார்பாகக் கொண்டும், இந்திரன், வருணன் முதலிய சிறு தெய்வங்களுக்குப் பல விலங்குகளைப் பலியிட்டுக்கொண்டும், அடிக்கடி இடம் பெயர்ந்து கொண்டும், உழவுத்தொழிலைச் சிறு பான்மையே செய்துகொண்டும், மாடு பன்றி முதலியவற்றின் இறைச்சியை உண்டுகொண்டும் இருந்ததே, ஆரிய வேதங்களினின்றும் தரும நூல்களினின்றும் அறிகின்றோம்.
தோல்மேலாடையும், நாரினாலும் ஆட்டு மயிராலும் ஆன அரையாடையும், புல்லினாற் பின்னிய அரைஞாணும், வில்வம் முள்முருங்கை முதலிய முல்லை மரங்களில் வெட்டிய ஊன்று கோலும் ஆரிய முதல் மூவரணத்தாருக்கு மனு விதித்திருப்பதும் மேற்கூறியதை வற்புறுத்தும்.
ஆரியர் இந்தியாவிற்குள் நுழையுமுன்பே, வடஇந்தியர் நல்ல நாகரிகத்தை யடைந்திருந்தார்கள். சர் ஜாண் மார்ஷல் மோஹன்ஜோ-டோரோவைப்பற்றிப் பின்வருமாறு வரைகிறார்:
“5000 ஆண்டுகட்கு முன்பு ஆரியப் பெயரையே கேள்விப்படுமுன், இந்தியாவில், மற்ற நாடுகளுமில்லாவிடினும், குறைந்தது பஞ்சாபும் சிந்தும் மிக முன்னேறியதும் இணையற்றபடி ஓரியலானதும், சமகால மெசொப்பொத்தாமிய எகிப்திய நாகரிகத்திற்கு மிக நெருங்கியதும், சிலவிடங்களில் அதினும் சிறந்ததுமான ஒரு சொந்த நாகரிகத்தை நுகர்ந்து கொண்டிருந்தனவென்று, ஒருவராயினும் ஒருசிறிதும் இது வரை நினைத்ததேயில்லை. எனினும், இதையே ஹரப்பா, மோஹன்ஜோ-டேரொ என்னுமிடத்துக் கண்டுபிடிப்புகள் ஐயமறத் தெரிவித்திருக்கின்றன. கிறித்துவுக்கு 3000 ஆண்டுகட்கும் 4000 ஆண்டுகட்கும் முற்பட்ட சிந்து மக்கள், ஆரியவுறவின் அடையாளமே யில்லாததும், நன்றாய்ப் பண்படுத்தப்பட்டதுமான ஒரு நாகரிகத்தை யடைந்திருந்ததை அவை காட்டுகின்றன. இங்ஙனமே, அங்குள்ள தொழிற் கலையும் மதமும் சிந்துப் பள்ளத்தாக்கிற்கே யுரியவும் தனிப்பட்ட தன்மையுடையனவுமாகும். அங்குள்ள சிறிய மண்ணுருப்படிகளான ஆடுகட்கும் நாய்கட்கும் பிற விலங்குகட்கும், முத்திரைகளிலுள்ள ஓவிய வெட்டுகட்கும், அக்காலத்து மற்ற நாடுகளில் நமக்குத் தெரிந்ததொன்றும் மாதிரியில் ஒத்ததாயில்லை. அம் முத்திரைகளிற் சிறந்தவை, கவனிக்கத் தக்கபடி, திமிலும் குறுங்கொம்புங் கொண்ட காளைகளாகும். அவை வேலைப்பாட்டின் விரிவினாலும், இதுவரை வெட்டோவியக் கலையில் பெரும்பாலும் மேற்கொள்ளப்படாத உண்மையுருவப் படிவ உணர்ச்சியினாலும், பிறவற்றினின்றும் விதப்பிக்கப் பெற்றவை. அதுவுமன்றி, ஹரப்பாவில் தோண்டியெடுக்கப்பட்டுப் பத்தாம் பதினொராம் தட்டுகளிற் பொறிக்கப்பட்டுள்ள இரு தலைமையான சிறு சிலைகளின் இனிய குழைவுப்படி நிலைக்கு, கிரேக்க நாட்டு இலக்கியகாலம்வரை ஒன்றும் இணையாக முடியாது.
“சிந்து மக்களின் மதத்திலும், பிறநாட்டு மதங்களிலும் பல செய்திகள் ஒத்துத்தானிருக்கின்றன. ஆனால், மொத்தத்தில் பார்க்கும்போது, சிந்து நாட்டுமதம் இன்றும் வழங்கி வரும் இந்து மதத்தினின்றும், குறைந்தபக்கம், இன்றும் பெரும்பான் மக்கள் வழிபடும் இரு மாபெருந் தெய்வங்களாகிய சிவ சிலைகளின் வணக்கமும், ஆன்மியமும் (Animism) கலந்த அம் மதக் கூற்றினின்றும் பிரித்தற் கரிதாமாறு அத்துணை இந்தியத் தன்மை வாய்ந்துள்ளது.”
“கூலங்களை அரைப்பதற்குச் சப்பைக்கல்லும், சேணக் கல்லும்தான் மக்கட்கிருந்தன; வட்டத் திரிகல் இல்லை.”
“இங்ஙனம் சுருங்கக்கூறிய அளவில், சிந்து நாகரிகம் தன் பொதுக்கூறுகளில் மேலையாசியாவிற்கும், எகிப்திற்கும் உரிய சுண்ணக் கற்கால நாகரிகங்களை ஒத்திருக்கின்றது; பிற செய்திகளில், மெசொப்பொத்தாமியாவிற்குச் சுமேரிய நாகரிகமும், நீலாற்றுப் பள்ளத்தாக்கிற்கு எகிப்திய நாகரிகமும் போல, சிந்து, பஞ்சாப் நாடுகட்கே யுரியதாய்த் தனிப்பட்ட முறையாயுளது. இதை விளக்க இரண்டொரு முக்கியச் செய்திகள் கூறுவோம். நெசவுக்குப் பருத்திப் பஞ்சைப் பயன்படுத்துவது அக்காலத்தில் முற்றிலும் இந்தியாவிற்கே உரியதாயிருந்தது. இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகட்குப் பிறகுதான் மேலையுலகத்தில் அவ் வழக்கம் பரவினது. இஃதன்றி, சரித்திரத்திற்கு முற்பட்ட எகிப்திலாவது, மேலை யாசியாவில் உள்ள மெசொப் பொத்தாமியாவிலாவது, பிறவிடத்திலாவது, நமக்குத் தெரிந்தவற்றுள் ஒன்றும், மோஹென்ஜோ-டேரோ வாழ்நரின் நன்றாய்க் கட்டப்பெற்ற குளிப்பகங்கட்கும் இடஞ்சான்ற வீடுகட்கும் ஒப்பிடுவதற்கில்லை.“பொது விதிக்கு விலக்காக, 'ஊர்' என்னுமிடத்தில், திருவாளர் உல்லி (Wolley) நடுத்தர அளவான ஒரு சுடு செங்கற் கட்டட வீட்டுத் தொகுதியை அகழ்ந்திருப்பது உண்மையே! ஆனால் அவ் வீடுகள் மோஹன்ஜோ-டேரோவின் கடைசியான மேன்மட்டங்களிலுள்ள செறிவற்றவுமான கட்டடங்களை விளக்கத்தக்க வகையில் ஒத்திருப்பதால், அவற்றைப் பின் பற்றியே கட்டப்பட்டன என்பது ஐயமறத் துணியப்படும். இஃது எங்ஙனமிருப்பினும், மோஹன்ஜோ-டேரோவிலுள்ள பெருங் குளிப்பகத்தையும், தனித்தனி கிணறும் குளிப்பறையும் விரிவு பட்ட சலதாரையொழுங்குங் கொண்ட, அறை வகுத்த பயம்பாடு மிக்க வீடுகளையும், அந் நகரப் பொது மக்கள் அக்கால நாகரிகவுலகத்தின் மற்றப் பகுதிகளிலுள்ளார் எதிர்பாராத அளவு, வசதியும் இன்பமும் நுகர்ந்தார்கள் என்பதற்குச் சான்றாகக் கொள்வது தக்கதே.”
“இப்புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் முந்திய நாகரிகங்களை மட்டுமல்ல, பண்டைக் கீழகம் முழுவதையுமே பற்றிய தற்காலக் கருத்துகளை மாற்றுவனவாயிருக்கின்றன. (உலக சரித்திரத்தில்) இந்தியாவின் பழங்கற்கால மனிதன் நடித்த பகுதியின் முக்கியம், நெடுங்காலமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. பழங்கற்காலத்திற்குரிய கரட்டுமலை முகடுகளையும், புதுக் கற்காலத்திற்குரிய கரட்டு மலை முகடுகளையும் வடிவச்சு நூற்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்திய நிலத்திலேயே, பின்னவை முன்ன வற்றினின்றும் முதலாவது திரிந்திருக்க வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது.
“தற்சமயம், நம் ஆராய்ச்சிகள் நம்மைக் கிறிஸ்துவுக்கு 4000 ஆண்டுகட்கு முன்மட்டுமே கொண்டுபோய், இச் சிறந்த நாகரிகத்தை மறைக்கின்ற திரையின் ஒரு மூலையை மட்டும் தூக்கியிருக்கின்றன. மோஹன்ஜோ-டேரோவில்கூட, இதுவரை மண்வெட்டிகொண்டு வெட்டினதற்குங் கீழாக, ஒன்றன்கீழொன்றாய், இன்னும் பல முந்திய நகரங்கள், புதைந்து கிடக்கின்றன.
“மோஹன்ஜோ-டேரோ, ஹரப்பா என்னும் ஈரிடத்தும், தெளிவாகவும், பிழைபாட்டிற்கிடமின்றியும் தோன்றுகின்ற ஒரு செய்தியென்னவென்றால், இவ்வீரிடங்களிலும் இது வரை வெளிப்படுத்தப்பட்ட நாகரிகமானது, இந்திய நிலத்தில் பல்லாயிர வாட்டை மாந்தனுழைப்பைக் கீழ்ப்படையாகக் கொண்டு, ஊழிமுதியதாய் நிலைத்துப்போன ஒன்றே யன்றிப் புத்தம்புதிதான ஒன்றன்று என்பதே.” [5]
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபோது, வடஇந்தியாவில் இருந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்களே. அவர்களுள், நாட்டு வாழ்நர் நாகரிகராயும் காட்டு வாழ்நர் அநாகரிகராயுமிருந்தனர். ஆரியர் தங்கள் பகைவரிடமிருந்து 99 கோட்டைகளைப் பிடித்துக் கொண்டார்களென்று, ஆரிய மறையிலேயே கூறியிருப்பதால், அரசியல் நாகரிகம்பெற்ற பல சிறுநாடுகள், ஆரியர் வருமுன்பே வடநாட்டிலிருந்தமை யறியப்படும்.
வட இந்தியாவினும், தென் இந்தியா உழவு, கைத்தொழில் வாணிகம், அரசு, கல்வி முதலிய பல துறைகளிலும் மேம்பட்டிருந்தது; பொன், முத்து, வயிரம் முதலிய பல வளங்களிலும் சிறந்திருந்தது. இதைச் சேர சோழ பாண்டிய அரசுகளினாலும், தமிழ்நாட்டிற்கும் அசீரியாவிற்கும் நடந்த நீர்வாணிகத்தாலும், தமிழிலிருந்த கலைநூற் பெருக்கினாலும், பிறவற்றினாலும் அறியலாம்.
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து”
என்றார், தொல்காப்பியரின் உடன்மாணவரான பனம்பாரனாரும்.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு ஒரேமுறையில் பெருங்கூட்டமாய் வரவில்லை. சிறுசிறு கூட்டமாய்ப் பலமுறையாக வந்தனர். முதலாவது, காசியபன், விசிரவசு முதலியவர் தமித்து வந்து அசுரப்பெண்களை மணந்தனர். பின்பு ஆரியர் தமிழ் கற்றுத் தமிழாசிரியராயும், பின்பு மதவாசிரியராயும் அமர்ந்த பின், தமிழரசரே பலமுறை பார்ப்பனரைக் கூட்டங்கூட்டமாய் வடநாட்டினின்றும் வருவித்துத் தமிழ்நாட்டிற் குடி யேற்றியிருக்கின்றனர்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனைக் குமட்டூர்க் கண்ணனார் என்னும் பார்ப்பனப் புலவர் பாடிப்பெற்ற பரிசில், உம்பர்க்காட்டு ஐஞ்ஞூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமும் என்று, பதிற்றுப்பத்தில் (2ஆம் பத்து) கூறப்பட்டுள்ளது.1,700 ஆண்டுகட்கு முன் தொண்டைமண்டலத்தையாண்ட பப்ப மகாராசன், வடநாட்டிலிருந்து, ஆத்திரேய ஹாரித பரத்துவாஜ கௌசிக காசிப வத்ஸ கோத்திரங்களைச் சேர்ந்த, பல பார்ப்பனக் குடும்பங்களை வரவழைத்துத் தொண்டை நாட்டிற் குடியேற்றி அவற்றிற்கு நிலங்களையளித்தான். பப்பன் காலத்துக்கு முன், பிராமணர்கள் தமிழ் நாட்டில் அதிகமாகப் பரவியிருந்ததாக அடையாளம் ஒன்றும் காணோம். கொஞ்சமாய்த்தான் இருந்திருக்க வேண்டும் என்று [6] பி.தி. ஸ்ரீநிவாஸய்யங்கார் கூறுகிறார்.
சுந்தரபாண்டியரென்னும் அரசர், பல ஊர்களில் இருந்த நூற்றெட்டுத் தலவகார சாமவேதிகளாகிய வைணவப் பார்ப்பனரைத் தென்திருப்பேரையில் இருத்தி, அவர்களுக்கு வீடுகளும், நிலங்களும் வழங்கினதாகச் சொல்லப்படுகின்றது.
தமிழ்நாட்டிற் பார்ப்பனரின் ஐவகை நிலை
(1) பாங்கன் (Companion)
“காமநிலை உரைத்தலும் தேர்நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்
செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய”
(கற்பியல். 36)
“பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி..
களவிற் கிளவிக் குரியர் என்ப.”(செய்யுளில். 181)
“பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா..
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்”(செய். 182)
இத் தொல்காப்பிய நூற்பா(சூத்திரம்)க்களால், முதன் முதலாகத் தமிழ்நாட்டிற் பார்ப்பனர் ஏற்ற அலுவல், பாங்கன் தொழிலே என்று தெள்ளத்தெளியக் கிடக்கின்றது, பாங்கனாவான் அரசர்க்கும், சிற்றரசர்க்கும் பாங்கிலிருந்து ஏவல் செய்து, மனைவியும் பரத்தையுமான இருவகை மகளிரொடுங் கூட்டுபவன். பார்ப்பனர் 'அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று புறத்திணையியல் (16) நூற்பாவில் கூறியுள்ள படி ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்கள் செய்துவந்தாரேனும், அவை எல்லார்க்கும் எக்காலத்தும் ஏற்காமையின், பலர் அரச ருக்குப் பாங்கராயமர நேர்ந்தது. பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த புதிதில், இப் பொழுதையினும் வெண்ணிறமாயிருந்ததி னால் அரசர்க்கு அவர்மீது விருப்பமுண்டாயிற்று.
களவிற் கூற்றிற்குரியாரைப்பற்றிய நூற்பாவில், பார்ப்பான், பாங்கன் என்று பிரித்தது, முன்னவன் ஆரியனும். பின்னவன் தமிழனுமாவர் என்பதைக் குறித்தற்காகும். இவ்விருவரும் பிற்காலத்தில் முறையே பார்ப்பனப் பாங்கனென்றும், சூத்திரப் பாங்கனென்றுங் கூறப்படுவர். சூத்திரப் பாங்கன் பாணக் குடியைச் சேர்ந்த பறையன். முதன் முதல் பாணனுக்கேயுரியதாயிருந்த பாங்கத் தொழில் பார்ப்பனரால் கைப்பற்றப்பட்டது.
இனி, பார்ப்பான் என்பவன் வேதமோதும் பார்ப்பானென்றும், பாங்கன் என்பவன் வேதமோதாப் பார்ப்பானென்றும் கொள்ளினும் பொருந்தும். வேதமோதி வேள்வி செய்யாத பார்ப்பான் 'வேளாப் பார்ப்பான்' (அகம். 24) என்று கூறப்படுவன்.
பார்ப்பனர் ஆரிய வேதத்தைத் தமிழர்க்கு மறைத்து வைத்ததினாலும், அவ்வேதத்தை ஓதி, ஓதுவிப்பார்க்குப் போதிய ஊதியம் தரத்தக்க அளவு பெருந்தொகையினராய் அக்காலத்துப் பார்ப்பனர் இன்மையாலும், ஆரிய வேள்வி தமிழர் மதத்திற்கு மாறானதினாலும், முதன் முதலாய் வந்த பார்ப்பனர் பாங்கத் தொழிலே மேற்கொண்டனர் என்பது தெளிவு.
இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைக் காலத்தினரான தொல்காப்பியர் காலத்திலன்றிக் கடைக் கழகக் காலத்திலும் பார்ப்பனர் பாங்கத்தொழில் செய்தமை, கீழ் வருங் குறுந்தொகைச் செய்யுளால் அறியப்படும்.
குறிஞ்சி, 156
(பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது.)
“பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
யெழுதாக் கற்பி னின்செய லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே”
(இது, கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது.)
(2) ஆசிரியன்
அகத்தியர், தொல்காப்பியர் முதலிய பார்ப்பனர் தமிழைக் கற்றபின் தமிழாசிரியராயினர். இதை, போப் (G.U. Pope) பெர்சிவல் (Percival) முதலிய மேனாட்டாரின் தமிழாசிரியத் தொழிலுடன் ஒப்பிடுக.
(3) பூசாரியன் (புரோகிதன்)
பார்ப்பனர் தமிழரின் மொழி, நூல், மதம், பழக்க வழக்கம் முதலியவற்றை யறிந்தபின், முருகன் (சேயோன்), திருமால் (மாயோன்) முதலிய பழந்தனித்தமிழ்த் தெய்வங்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டிப் பழமைகள்[7] (புராணங்கள்) வட மொழியில் வரைந்துகொண்டு மதத்திற்கதிகாரிகளாய்ப் பூசாரித் தொழில் மேற்கொண்டனர். இதுவே அவர்கள் குலத்திற்குத் தமிழ் நாட்டிற் பெருந்தலைமையும் நல்வாழ்வும் தந்ததாகும்.
(4)அமைச்சன்
தமிழ் நாட்டில் பார்ப்பனர் ஒரோவோர் இடத்து, அருகிய வழக்காய் அமைச்சுப்பூண்டமை, மனுநீதிச்சோழன் கதையாலும் மாணிக்கவாசகர் சரித்திரத்தாலும் அறியப்படும். ஆனாலும், அது கல்வித்தகுதிபற்றி நேர்ந்ததேயன்றி, இராமச்சந்திர தீட்சிதர் தம் 'இந்திய ஆள்வினை அமைப்புகள்' (Hindu Administrative Institutions) என்னும் நூலிற் கூறியுள்ளபடி பார்ப்பனரே அமைச்சராக வேண்டும் என்னும் ஆரிய நெறி மொழி (விதி) பற்றி நேர்ந்ததன்று.
மிகப் பிந்திய விசயநகர ஆட்சியிற்கூட, அரியநாத முதலியார் போன்ற தமிழரே அமைச்சராயிருந்தனர். அமைச்சருக்குப் போர்த் தொழிலும் தெரிந்திருக்கவேண்டும் என்றும், ஆரியர் நடுவுநிலை திறம்பியவர் என்றும், தமிழரசர் கருதியிருந்ததால் பார்ப்பனரை அமைச்சராக அமர்த்தவில்லை.
செல்வக் கடுங்கோ வாழியாதன் “தன் புரோகிதனிலும் தான் அறநெறியறிந்து” என்றும், குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை “தன் மந்திரியாகிய மையூர்கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப்பண்ணி” என்றும் பதிற்றுப்பத்தில் வந்திருத்தலும், மனுநீதிச்சோழன் தன் அமைச்சர் கூறிய மனுநீதியை ஒப்புக் கொள்ளாததும் நோக்கியுணர்க.
(5) ஆள்வோன்
இதுகாலை பார்ப்பனர் ஆள்வோர் நிலையும் அடைந்திருக்கின்றனர்.
இவ் வைவகை நிலையும் வரவர ஒவ்வொன்றாய்க் கூடினவையே யன்றி ஒரே நிலையின் திரிபல்ல.
இங்ஙனம் பார்ப்பனர் ஐவகைநிலையடைந்தாலும், இவை அவருள் தலைமையானவரும் சிலரும் அடைந்தவையேயன்றி, எல்லாரும் அடைந்தவையல்ல. இங்ஙனம் அடையாதவரெல்லாம் தொன்றுதொட்டு 18ஆம் நூற்றாண்டுவரை இரந்துண்டே காலங்கழித்திருக்கின்றனர்.
இதை, “முட்டிபுகும் பார்ப்பார்” என்ற கம்பர் கூற்றும்,
“பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன்...
இரந்தூண் தலைக்கொண்டிந்நகர் மருங்கிற்
பரந்துபடு மனைதொறுந் திரிவோன்”
என்னும் (மணிமே. 5:33 46) அடிகளும், கூரத்தாழ்வான், இராமப் பிரமம் (தியாக ராஜ ஐயரின் தந்தை) முதலியவர் உஞ்சவிருத்தி என்னும் அரிசியிரப்பெடுத்தமையும், சில குறிப்புகளும் தெரிவிக்கும்.
பிழைப்பும் குடியிருக்க இடமுமின்றிப் பல பார்ப்பனர் காட்டுவழியா யலைந்து திரிந்தமை, உடன்போக்கில் 'வேதியரை வினவல்' என்னுந்துறையும் “ஒருவாய்ச் சோற்றுக்கு ஊர் வழியே போனான் பார்ப்பான்”, “பார்ப்பானுக்கும் பன்றிக்கும் பயணச் செலவில்லை” என்னும் பழமொழிகளும் உணர்த்தும்.கடைக்கழகக் காலப் பார்ப்பனர் நிலை
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நிலை பூசாரியமாகும்.
“சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது.............................”
என்று சிலப்பதிகாரம் (1 : 51-3) கூறுதல் காண்க.
கடைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டுத் தலைமை பூண்ட சேரன் செங்குட்டுவனுக்கு, அழும்பில்வேள், வில்லவன் கோதை என்னும் இரு தமிழர் முறையே, அமைச்சனும், படைத் தலைவனுமா யிருந்தனர். உழவு, கைத்தொழில், வாணிகம், அரசு, கல்வி முதலிய பல தொழிலும், தமிழராலேயே (தமிழில்) நடத்தப்பட்டுவந்தன. ஆகையால், பார்ப்பனர் துணை அற்றைத் தமிழர்க்குச் சிறிதும் வேண்டியதாயில்லை.
“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்”
என்னும் (புறநானூற்று (9 : 1-5)அடிகள், பார்ப்பனர் மறமும் (வீரமும்) வலிமையும் அற்றவர் என்றும், களங்கமற்றவரென்றும் இரங்கத்தக்கவரென்றும், சிலரால் கருதப்பட்டதைக் குறிக்குமேயன்றித் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டதாகக் குறியாது. பார்ப்பனர் தூயரென்று எல்லாராலும் கருதப்பட்டிருப்பின், மாணிக்கவாசகரை அரிமர்த்தன பாண்டியன் சிறையிட்டுக் கடுந்தண்டம் செய்திருக்கமாட்டான். 17-ஆம் நூற்றாண்டில்,வடமலையப்பப் பிள்ளையின் கீழதிகாரியால் நாராயண தீட்சிதரும் சிறை செய்யப்பட்டிருக்கமாட்டார்.
“ஆன்முலை யறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முள”
எனவரும் அடிகளும் (புறம். 34: 1-4) மேற்கூறிய கருத்தையே தெரிவிக்கும். பார்ப்பார்த் தப்பினவர்க்கும் கழுவாயுளது என்று கூறியிருத்தலைக் கவனிக்க. முரட்டுக் குணமின்றி அமைதியாயிருக்கும் எல்லா உயிர்ப்பொருள்களையும் தமிழர் ஒருதிறமாயெண்ணிக் காப்பர். பூனையையும் கழுதையையும் கொல்வது பெருந்தீவினை என்று கருதப்படுவதை நோக்குக. பார்ப்பனர் அக்காலத்தில் மிகச் சிறிய தொகையினராயும், எளியவராயும், ஆட்சியில் இடம்பெறாதவராயும் இருந்ததினால், தம்மைக் களங்கமற்ற சான்றோராகக் காட்டிக் கொண்டனர்.
பாண்டியன் பல்வேள்வி(யாக)ச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செயலாலும், பல்யானைச் செல்கெழுகுட்டுவன் செயலாலும், ஆரிய வேள்விகளை வேட்கும் வழக்கம் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதை யறியலாம்.
பாலைக் கௌதமனார் என்னும் பார்ப்பனர், பல் யானைச் செல்கெழுகுட்டுவன் உதவியால், தாமும் தம் மனைவியும் துறக்கம் (சுவர்க்கம்) புகவேண்டுமென்று, ஒன்பது பெருவேள்வி வேட்டுப் பத்தாம் வேள்வியில் தம் மனைவியுடன் மறைந்து போனார் என்னும் பதிற்றுப்பத்துச் செய்தி ஆராயத்தக்கது.
பார்ப்பார், ஐயர், அந்தணர் என்னும் பெயர்கள்
தமிழ்நாட்டிற் பார்ப்பனருக்குப் பார்ப்பார், ஐயர், அந்தணர் என மூன்று பெயர்கள் வழங்கி வருகின்றன. இவற்றை ஆராய வேண்டும்.
பார்ப்பார்
பார்ப்பார், அல்லது பார்ப்பனர் என்னும் பெயருக்கு மறை நூல்களைப் பார்ப்பவர் என்பது பொருள். ஆரியர் வருமுன்பே, தமிழருக்கு மறைநூல்கள் இருந்தன. அது பின்னர்க் கூறப்படும். தமிழ் மறைநூல்களைப் பார்ப்பதும் வழிபாடு, திருமணம் முதலியவற்றை நடத்துவதுமே தொழிலாகக் கொண்டு, பார்ப்பனர் என்னும் பெயருடன் ஒரு குலத்தார் முன்னமேயிருந்து, பின்பு ஆரியப் பிராமணர் வந்தபின் தம் தொழிலையிழந்து விட்டனர். ஆரியப் பிராமணர் தமிழப் பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின், தாமும் அவர் பெயராலேயே அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின், வடமொழிப் பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப் பெயர் வழங்கிவரக் காரணமில்லை.
தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின், விசயநகர ஆட்சியில், அல்லது அதற்குச் சற்று முன்பு மெட்ராஸ் பகுதிகளுக்கு உட்பட்ட தகடூர் நாட்டில் வாழ்ந்தனர் தமிழ்நாட்டு என்ற பெயர் வருவதற்கு முன்பாகவே சக்கிலியர்கள் வாழ்ந்தார்கள். அத் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பகடைகள். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப் படும். பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்.... தை....” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழில் மேற் கொண்ட பின், செம்மார் சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி[8] என்னும் ஆதித்தமிழர் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க.
ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ் நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தா ராவர். இவருடைய முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பன ராயிருந்திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக் கிடக்கின்றது.
ஐயர், அந்தணர்
ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு 'ஐ' என்பது பகுதி. ஐ என்பது வியப்புப் பொருள்பற்றிய ஓர் ஒலிக்குறிப்பு இடைச்சொல். இன்னும், வியக்கத்தக்க பொருள்களைக் கண்ட விடத்து, 'ஐ' என்பது தமிழர்க்கு, சிறப்பாய்ச் சிறார்க்கு இயல்பு.
“ஐ வியப்பாகும்”
என்பது தொல்காப்பியம் ( உரியியல். 89),
ஐ + அன் = ஐயன். ஐயன் என்பான் வியக்கப்படத் தக்க பெரியோன். வியக்கப்படத்தக்க பொருளெல்லாம் ஏதேனும் ஒருவகையில் பெரிதாகவேயிருக்கும். ஒருவனுக்குப் பெரியோராயிருப்பவர் கடவுள், அரசன், முனிவன், ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன், மூத்தோன் என்னும் எண்மராவர். இத்தனை பேரையும் ஐயன் என்னும் பெயர் குறிப்பதாகும்.
தந்தை, ஆசிரியன், மூத்தோன், என்னுமிவரைக் குறிக்குந் தன்மையில்,sire என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஐயன் என்பதை ஒப்பிடலாம்.
ஐயன் என்னும் பெயர், இயல்பாய் நின்று பொதுவாகக் கடவுளையும், ஆர் விகுதிபெற்றுச் சாத்தனாரையும், பெண் பாலீறு பெற்றுக் காளியை அல்லது உமையையும்; நூல் வழக்கில் பெரியோன் என்னுங் கருத்துப்பற்றி அரசனையும், தெய்வத் தன்மையுள்ளவன் என்ற கருத்துப்பற்றி முனிவனையும், பின்பு அவனைப் போல அறிவு புகட்டும் ஆசிரியனையும்; உலக வழக்கில், பறையர் என்னும் குலத்தார்க்குத் தந்தையையும், தம், தன் முதலிய முன்னொட்டுச் சொற்களில் ஒன்றைப் பெற்று அண்ணனையும் விளிவடிவில் மூத்தோன், பெரியோன் என்னுமிவரையுங் குறிப்பதாகும்.
அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் என்னும் ஐவரும் ஐங்குரவரென நீதிநூல்களிற் குறிக்கப்படுவர். குரவர் பெரியோர். ஐயன் என்னும் பெயர் ஐங்குரவர்க்கும் பொதுவாகும்; தாயைக் குறிக்கும்போது பெண்பாற்கேற்ப ஐயை என ஈறு மாறி நிற்கும். ஆகவே, ஐயன் என்னும் பெயர் பெரியோன் என்னும் பொருளையே அடிப்படையாகக் கொண்டதாகும்.
ஆசிரியன், அல்லது குரு என்னும் பொருளில், கிறிஸ்தவப் பாதிரிமாரும் ஐயர் என்றழைக்கப்படுகின்றனர்.
பார்ப்பனருக்கு ஐயர் என்னும் பெயர் முனிவர் என்னும் கருத்துப்பற்றி வந்ததாகும். முதன் முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த காசியபன் போன்ற ஆரியப் பிராமணர், ஒழுக்கத்தால் தமிழ் முனிவரை ஒருபுடையொத்தமை பற்றி ஐயர் எனப்பட்டனர். பின்பு அது விரிவழக்காய், கபிலர், பரணர் போன்றவர்க்கும், தில்லைவாழந்தணர் போன்ற பூசாரியர்க்கும், இறுதியில் எல்லாப் பார்ப்பனருக்குமாக வழங்கி வருகின்றது.
ஆங்கிலேயர் வருமுன் தமிழ்நாட்டிலாண்ட பல தெலுங்கச் சிற்றரசர்க்குத் துரைகள் என்று பெயர். பாஞ்சாலங்குறிச்சித் துரை என்ற வழக்கு இன்னுமுள்ளது. ஆங்கிலேயர் முதலாவது “கீழிந்தியக் கும்பனி” (East India Company) அதிகாரிகளாய்த் தமிழ் நாட்டில் ஆட்சியை மேற் கொண்டபோது துரைகள் எனப்பட்டனர். பின்பு அப் பெயர் மேனாட்டார் எல்லார்க்கும் பொதுப் பெயராகிவிட்டது.
ஒரு குலத்தலைவனுக்குரிய சிறப்புப்பெயர், நாளடைவில் அக் குலத்தார்க்கே பொதுப் பெயராதல் இயல்பு. நாட்டாண்மையும் ஊராண்மையும்பற்றி யேற்பட்ட நாடன் (நாடான், நாடார்), அம்பலகாரன், குடும்பன் என்னும் தலைவர் பெயர்கள் நாளடைவில் முறையே சான்றார், வலையர், பள்ளர் என்னும் குலத்தார்க்கே பொதுப்பெயர்களாகி விட்டன. வடார்க்காட்டுப் பகுதியிலுள்ள இடையர்க்கு, அவர் முன்னோருள் ஒருவன் ஓர் அரசனிடம் அமைச்சனாயிருந்தமைபற்றி, மந்திரி என்னும் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இங்ஙனமே ஐயர் என்னும் பெயரும் பார்ப்பனருக்கு வழங்குவதாகும்.
ஐயன் என்னும் தனித் தமிழ்ப்பெயரை ஆரியன் என்னும் ஆரியப் பெயரின் சிதைவாகச் சிலர் கூறுகின்றனர். ஆரியன் என்னும் பெயருக்கு வணங்கப்படத்தக்கவன் என்று ஆரியர் பொருள் எழுதிவைத்திருப்பதினாலும், தமிழ் நாட்டிற் பிற்காலத்தில் ஆரியர்க்குத் தலைமையேற்பட்டதினாலும், ஆரியன் என்னும் பெயர் ஐயன் என்னும் பெயர் போல, பெரியோன் என்னுங் கருத்தில் ஆசிரியன், ஆசாரியன் முதலியோரைக் குறித்ததேயன்றி வேறன்று.
'ஆரியற்காக வேகி' என்று கம்பரும், இடைச்சுரத்துக் கண்டோர் கூற்றாக “யார்கொல் அளியர் தாமே யாரியர்” என்று (குறுந். 7) பெரும்பதுமனாரும், முறையே, வணங்கப் படத்தக்கவன், பெற்றோர் என்னும் பொருளில் ஆரியன் என்னும் பெயரை வழங்கியிருப்பது, வடநூற் கருத்துப்பற்றிய அருகிய நூல்வழக்கேயன்றி, ஐயன் என்னும் பெயர்போலப் பெருவாரியான தமிழ்நாட்டுலக வழக்கன்று?
ஐயன் என்னும் பெயர் ஆரியன் என்னும் பெயரின் சிதை வாயின் இவ்வொரே பெயரைத் தந்தை பெயராகக் கொண்ட பறையர் ஆரியராதல் வேண்டும். தனித் தமிழரும் பார்ப் பார்க்கு மிகச்சேயவருமான பறையர் அங்ஙன மாகாமையின், 'ஐயன்' என்னும் சொல் 'ஆரியன்' என்னும் சொல்லின் சிதைவன்று.
'Ar' (to plough) என்பதை ஆரியன் என்னும் பெயருக்கு வேராகக்கொள்வர் மாக்சுமுல்லர்.
அந்தணன் என்னும் பெயரும் ஐயன் என்னும் பெயர் போன்றே பார்ப்பனருக்கு அமைந்ததாகும். ஆனால், இன்னும் நூல் வழக்காகவே யுள்ளது.
அந்தணன் என்பதை அந்தம்+அணன் என்று பிரித்து, மறை முடிபு (வேதாந்தம்) களைப் பொருந்துகின்றவர் என்று பொருளுரைப்பர் வடமொழிவழியர் : அம் + தண்மை+அன் என்று பிரித்து அழகிய குளிர்ந்த அருளையுடையவர் என்று பொருளுரைப்பர் தென்மொழியாளர். வடமொழி வழியிற் பொருள்கொள்ளினுங்கூட, அணவு என்னும் சொல் என்னும் வேரிற்பிறந்த தனித்தமிழ்ச்சொல்லாதலின், அந் தணன் என்பது இருபிறப்பி (Hybrid)யாகும்.
அந்தணன் என்னும் பெயர் அத்தணாளன் (அம் + தண் + ஆளன்) என்ற வடிவிலும் வழங்கும்.
"அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே"
"அந்த ணாளர்க் கரசுவரை வின்றே'
என்று தொல்காப்பியத்திற் (மரபியல், 68.80) கூறியிருப்ப தால் பார்ப்பனருக்குக் தொல்காப்பியர் காலத்திவேயே தமிழ்நாட்டில் அரசுவினையிருந்த தாகச் சிலர் கூறுகின்றனர்!
அந்தணர் என்னும் பெயர்.முதலாவது, தனித்தமிழ் முனிவரைக் குறித்ததென்று முன்னமே கூறப் பட்டது.
அத்தர் என்னுஞ் சொல்லின் (அழகிய குளிர்ந்த அருளையுடையவர் எனனும்) பொருளுக்கேற்ப,"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”
என்று அந்தணர்க் கிலக்கணங் கூறினதுமன்றி, அதைத் துறவிகளைப் பற்றிக்கூறும் "நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திலும் வைத்தார் திருவள்ளுவர்.
"நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரமென்ப"
என்று தொல்காப்பியத்தில் கூறிய முனிவர் செய்தியையே,
"நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்"
அருள் என்னும் குணம் துறவிகட்கே உரியதாகும் அதனால்தான், அருளுடைமை, புலான்மறுத்தல், கொல் லாமை என்னும் மூன்றையும் திருவள்ளுவர் இல்லறத்திற் கூறாது துறவறத்திற் கூறினர். பிரா மணருக்கு அருளில்லை யென்பது, மனுதரும நூலாலும், இப்போது அவர் பிறரை முக்கியமாய்க் கீழோரை நடத்தும் வகையினாலும் அறியப் படும். உணவுக்கு வழியற்றவரையும், ஒழுக்கங் குன்றிய வரையுங்கூடக் கூசாமல் முனிவரென்று கூறுவது ஆரிய வழக்கம்.
அஜீகர்த்தரென்னும் முனி பசியினால் வருந்தி, சுநச் சேபள் என்னும் தம் மகனை, வேள்வியிற் பலியிடும்படி நூறு ஆவிற்குத் தாமே விற்றார். பசிக்கு மாற்றஞ்செய்தபடியால், அதனால் அவருக்குப் பாவம் தேரிடவில்லை" என்று மனு தரும நூல் (10; 105) கூறுகின்றது.
பிராமணருக்குக் கலியாணத்திற்கு முந்திய நிலைபிரம சரியமென்று பிரிக்கப்படுவதனாலும், துறவறத்தின் முற்பகுதி யான வானப் பிரத்தத்தில் குடும்ப வாழ்க்கை கூறப்படுவத னாலும், பிராமணர் ஊருக்குப் புறம்பாகவிருப் பின், எந்த நிலையிலும் தம்மைத்துறவிகளாகக் கூறிக்கொள்ள இடமுண்டு.
தமிழ் முனிவரான அந்தணர். சிறந்த அறிஞராயும் ஆசிரியராயும் ஆக்கவழிப் பாற்றலுள்ளவராயும் இருந்தமையின், அரசர்கள் அவர்களை மதியுரைக்கும் தற்காப்பிற்கும் துணைக் கொண்டனர் இதையே, திருவள்ளுவர் திருக்குறட் பொருட் பாலில், 'பெரியாரைத் துணைக்கோடல்', பெரியாரைப் பிழையாமை' என்ற அதிகாரங்களிற் கூறுவர். அரசர்கள் போர், வேட்டை முதலியனபற்றிச் சென்றபோது. அவர்கட்குத் துணையாயிருந்த அந்தணரே அரசு செய்யக் கூடும். இதையே “அந்தணாளர்க் கரசு வரைவின்றே” என்னும் நூற்பா குறிப்பதாகும்.[9] 'வரைவின்றே' என்பது விலக்கப்படவில்லை என்று பொருள்படுமேயன்றி, என்றுமுரியது என்று பொருள் படாது. இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஒட்டக்கூத்தர் அமைச்சராயிருந்து, அவன் மணஞ்செய்த புதிதில் சிறிது காலம் அவனுக்குப் பதிலாய் ஆண்டார். இதனால், அரசுரிமை புலவர்க்கெல்லாமுண்டென்று கொள்ளுதல் கூடாது. ஆனால்,அதே சமையத்தில், அது அவர்க்கு விலக்கப்பட வில்லை என்றும் அறியலாம்.
தமிழ்நாட்டிற்கு முதன்முதல் வந்த ஒருசில ஆரியப் பிராமணர், தமிழ அந்தணர் போலத் துறவிகளாகத் தோன்றியமையால் அந்தணரோடு சேர்த்தெண்ணப்பட்டார். இதை,
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய”
(தொல். 160)
என்பதால் அறியலாம்.[10] இந் நூற்பாவிற் குறிக்கப்பட்ட நூல் முதலிய நான்கும் ஆரியர்க்கேயுரியன. தமிழ முனிவர் உயர்ந்த நிலையினராதலின் இத்தகைய பொருள்களைத் தாங்கார்.
“மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை”
(குறள். 245)
தொல்காப்பியத்தில், பார்ப்பார் அந்தணரினின்றும் வேறாகவே கூறப்படுகின்றனர். அவர்க்கு அந்தணர் என்னும் பெயர் எங்கும் கூறப்படவில்லை. இதனால், ஆரியருட் பெரும்பாலார் அந்தணராகக் கொள்ளப்படவில்லையென்பதையறியலாம். பிறப்பால் மட்டும் பிராமணனாயுள்ளவன் பார்ப்பான் என்றும், தொழிலாலும் பிராமணனாயுள்ளவன் அந்தணன் என்றும் குறிக்கப்பட்டதாகச் சிலர் கொள்கின்றனர்.[11]'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்று தொல் காப்பியத்திலும், வேளாப் பார்ப்பான் என்று அகநானூற்றிலும் குறிக்கப்படுவதால், அது தவறாதல் காண்க. மேலும், 'அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்' என்னும் நூற்பாவில்,
“மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”
என்று சித்தரும்,
“நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும்”
என்று தவத்தோரும் பார்ப்பாரினின்றும் வேறாகக் குறிக்கப் படுதல் காண்க. இதனாலும், பார்ப்பனர் இல்லறத்தார்க்கொப் பவே எண்ணப்பட்டதை அறியலாம்.
பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி, அவர் தமிழரே என்னுங் கருத்துப்பற்றி யன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக் குறிப்பின், ஐரோப்பியரும், சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்ஙனமே தொல்காப்பியர் காலப் பார்ப்பனருமென்க.
மேலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியவை, மருத நகரில் உழவர் குலத்தினின்றும் முதன்முதல் தோன்றிய நாற்பெரும் பிரிவுகளே யன்றிப் பிற்காலத்துத் தோன்றிய பல சிறுசிறு குலங்களல்ல. தொல்காப்பியர் காலத்தில், மருத நகரில் பல குலங்களிருந்தன. ஆனால், பழைய முறைப்படி, நாற்பெரும் பிரிவுகளே கூறப்பட்டன. இப் பிரிவுகளுள் ஆரியப் பார்ப்பார் அடங்கார், அயலாராகவும் தமிழர் குலமுறைக்குப் பொருந்தா மலுமிருத்தலின். பார்ப்பார் (முனிவரான) அந்தணருமல்லர், அரசருமல்லர், வணிகருமல்லர், வேளாளருமல்லர்.
அந்தணர் முதலிய நாற்பாலும் மரபியலிற் கூறப்பட்டது தமிழ் முறைபற்றியே என்பதை,
“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்ல
தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”
“வேந்துவிடு தொழிலிற் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே”
என்னும் நூற்பாக்களான் (76, 77) உணர்க.
"வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” (௸ ,73)
என்னும் நூற்பாவில், வைசியன் என்னும் வடசொல் வந்திருப்பது, அது ஆரியமுறை என்பதற்குச் சான்றாகாது. நூலைச் சூத்திர மென்றும், நினைவை ஞாபகம் என்றும், சிலவிடத்து மொழி பெயர்த்து ஆரியச்சொல்லாற் கூறுவது தொல்காப்பியர் வழக்கம். பழமலை (அல்லது முதுகுன்றம்) என்னும் பெயரை விருத்தாசலம் என்றும், வட்டு (வட்டமான கருப்புக்கட்டி) என்னும் பெயரைச் சக்கரை (சக்கரம்) யென்றும் மொழிபெயர்த்ததினால், விருத்தாசலம் ஆரிய நகரமென்றும், வட்டுக் காய்ச்சுந்தொழில் ஆரியருடையதென்றும் ஆகாதது போல, வைசியன் என்னும் வடமொழிப் பெயரினாலும், தமிழ வணிகக்குலம் ஆரிய வைசியக்குலமாகி விடாது.
முனிவரைக் [12]கடவுள்ரென்றும், [13]பகவரென்றும், கடவுளோ டொப்பக்[14]கூறுவது பண்டைத் தமிழர் வழக்கம். பார்ப்பனர் தங்களை அந்தணராகக் காட்டிக்கொண்டபின், தமிழர் தங்களைச்சாமி என்று கடவுட்பெயரால் அழைக்குமாறு செய்து விட்டனர். அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது.தமிழகத்தில் இருசார் பார்ப்பனர்
தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரார் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர்; அவர் அகத்தியர், தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக் கெடுத்தோர். இவருட் பிந்தின சாராரே வரவர மலிந்துவிட்டனர். முந்தின சாரார், பரிதிமாற்கலைஞன் என்னும் சூரியநாராயண சாத்திரியாருக்குப் பின், விரல் வைத்தெண்ணுமளவு மிகச் சிலரேயாவர். வடநாட்டினின்றும் பிந்தி வந்த பிராமணர் முந்திவந்தவரை மிகக் கெடுத்துவிட்டனர்.
தமிழையும் தமிழரையும் கெடுத்தோருள் பலர், பாட்டும் நூலும் உரையும் இயற்றியிருத்தலால், தமிழை வளர்த்தார்போலத் தோன்றுவர். ஆனால் ஆராயின், அவர் வருவாய்ப் பொருட்டும், வடசொற்களையும் ஆரியக் கருத்துகளையும் தமிழ் நூல்களிலும் வடநாட்டுப் பார்ப்பனரைத் தமிழ் நாட்டிலும் புகுத்துவதற்கும் பார்ப்பனக் குலத்தை உயர்த்துவதற்குமே அங்ஙனம் செய்தனர் என்பது புலனாகும்.
எ - டு, “அந்தணரின் நல்ல பிறப்பில்லை” என்றார் விளம்பி நாகனார். “அந்தணரில்லிருந்தூ ணின்னாது” என்றார் கபிலர்.[15] “ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்னினிதே” என்றார் பூதஞ்சேந்தனார். “.....நன்குணர்வின்—நான் மறையாளர் வழிச் செலவும் இம்மூன்றும் மேன்முறையாளர் தொழில்” என்றார் நல்லாதனார்.
“எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார்”, “பார்ப்பார்.... தம்பூத மெண்ணா திகழ்வானேல் தன்மெய்க்கண் ஐம்பூதம் அன்றே கெடும்”, “பார்ப்பார் இடைபோகார்.”
“வான்முறை யான்வந்த நான்மறை யாளரை
மேன்முறைப் பால்தம் குரவரைப் போலொழுகல்
நூன்முறை யாளர் துணிவு.”
தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும்
[17]புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்பதில்”
என்றார் பெருவாயின் முள்ளியார்.
இங்ஙனம், தமிழில் சில நூல்களை வரைந்து தாங்களும் தமிழ்ப் பற்றுடையவர் என்று காட்டிக்கொண்டு, வட மொழியையும் ஆரிய வரண வொழுக்கத்தையும் தமிழ் நாட்டிற் புகுத்துவது ஆரியர் தொன்றுதொட்டுக் கையாண்டு வரும் வலக்காரங் (தந்திரம்)களில் ஒன்றாகும்.
ஆரியரை உயர்த்திக் கூறியுள்ள சில தமிழரும் உளர். அவர் அறியாமையும் தந்நலமுங்கொண்ட குலக்கேடராதலின், அவர் செய்தி ஈண்டாராய்ச்சிக்குரியதன்று.
சிவனியரும்[18] திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே[19] தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலை வராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திரா விட மறையாகக் கொண்டனர்.[20]
சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக் கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர்.பார்ப்பனர் தமிழரை வென்ற வகை
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டு களாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்டொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரேயாவர்: போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ்நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறு கூட்டம், ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப் பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.
தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி. 16ஆம் நூற்றாண்டுவரை தமிழ் நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ் நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது.
பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்
(1) அரசரையடுத்தல் :
பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப் படுத்தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கராயமர்ந்தனர்.
(2) தவத்தோற்றம் :
பார்ப்பனர் வைகறை யெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர்.(3) தமிழ் கற்றல் :
பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர்.
(4) வடமொழியில் நூலெழுதலும் தமிழ்நூல்களை மொழிபெயர்த்தலும்.
பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ் நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக்கொண்டு, அவ் வடநூல்களை முதனூல்களாகவும் தென்னூல்களை வழி நூல்களாகவும் காட்டினர்.
வடமொழியில் நூலெழுதலுக்கு ஹாலாஸ்ய மான்மியத்தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசைநூல்களையும் காட்டாகக் கூறலாம்.
(5) தற்புகழ்ச்சி :
பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழியென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்துகொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன.
(6) மதத் தலைவராதல் :
பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்து கொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.
(7) தமிழைத் தளர்த்தல் :
பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங்களையும்[21] வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும்,[22] பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வட சொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்து விட்டனர்.
(8) பிரித்தாட்சி :
பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மையாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.
கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற் கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.
பிராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ் வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.
தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில்பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட் டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே”
என்னும் தொல்காப்பிய (கற்பியல். 3)நூற்பாவா லறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என்பாரை. அந்தணர் என்பார் துறவிக ளாதலின், அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மண வினை நடத்திவருகின்றனர்.
அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமை யில்லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக.
பிறப்பால் சிறப்பு, பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப் பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வரண வொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது.
கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப் பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்து விட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு தீண்டாமை (Untouchability), அண்டாமை (Unapproachability), காணாமை (Unseeability), என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையா யிருந்ததே.
இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக்கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பன வுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் அப் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டிமட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க.
முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம்வர) முறையினாலும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததி னாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக்கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர் பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காராளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப் படுவதினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடி வழங்குவது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பனரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்ததில்லையென்று அறியலாம்.
பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும்.
கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். 'பார்ப்பானில் ஏழையு மில்லை பறையனில் பணக்காரனுமில்லை' என்பது பழமொழி.
குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும்பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழா வில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக் கோயில்கட்கும் இறையிலிவிட்டதினாலும், பண்டைத் தமிழ் நாட்டில் மதப் பகையுமிருந்ததில்லையென்றறியலாம்.
(9) வடநாட்டாரை உயர்த்தல் :
- இது பின்னர் விளக்கப்படும்.
(10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் :
கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்ப வும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம் பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொது மக்கட்கு மறைக்கப்பட்டுளர்.
தமிழரின் சிறந்த தன்மை :
மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந் தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மை யுரைத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைகளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுபவராவார்.
இந்திய நாகரிகம் தமிழ நாகரிகமே
மேனாட்டறிஞருட் பலர் வடமொழி நூல்களையே படித்து, அவற்றுட் சொல்லியிருப்பதையெல்லாம் மறைநூற் கூற்றாகக் கொண்டு, ஆரியரே இந்தியாவில் நாகரிகத்தைப் பரப்பினர் என்று கூறுகின்றனர். ஆரியர்க்கு முன்னைய இந்திய நிலைமையையும், தமிழரின் தனி நாகரிகத்தையும், ஆரியரின் ஏமாற்றுத் தன்மையையும் அவர் கவனிக்கிறதில்லை. ரைஸ்டேவிட்ஸ் (Rhys Davids) என்பவர், தமது ’புத்த இந்தியா' (Buddhist India) என்னும் நூலின் முகவுரையில், பிராமண நூல்களையே அளவையாகக் கொள்ளுகிறவர்கள் உண்மையைக் காண முடியாமையைக் குறிப்பிடுகின்றார்.
இந்திய நாகரிகம், தமிழ் அல்லது திராவிட நாகரிகமேயென்று பின்னர் நூலில் விளக்கப்படுமாயினும் இங்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூற விரும்புகின்றேன்.
பார்ப்பனர் தங்களுக்குக் கூறிக் கொள்ளும் உயர்வுகளுள், ஊனுண்ணாமையும் ஒன்றாகும். ஆரியர் இந்தியாவிற்கு வந்த புதிதில், பலவகை விலங்குகளையும் கொன்று தின்றமைக்கு. அவர்களின் மறை நூலும் அற நூலுமே சான்றாகும். வட மொழியாரியரின் இனத்தினரான மேனாட்டாரியரெல்லாம் என்றும் ஊனுண்பவரே. அவரினின்றும் பிரிந்துவந்த இந்திய ஆரியர், இங்கு வந்த பிறகே திராவிடரைப் பின்பற்றி, ஊனுண்பதை ஒருவாறு நிறுத்தினர். இன்றும் வடநாட்டுப் பார்ப்பனர் ஊனுண்பதை முற்றும் ஒழிக்கவில்லை: முட்டையும், மீனும் அவர்க்கு மரக்கறியின் பாற்பட்டனவாகும். தென்னாட்டுப் பார்ப்பனரும், வேள்வியில் விலங்குகளைக் கொன்றுண்ணலாம் என்னும் கொள்கையுடையவரே; மேலும், தட்பவெப்பநிலை வேறுபட்டவிடத்தும், நோயுற்ற விடத்தும் பெரும்பாலும் ஊனுண்ணும் நிலையினரே. சைவ வேளாளரென்னுந் தமிழரோ, உயிர்க்கிறுதிவரினும் ஊனுண்ணார், சைவ மதத்தில் ஊனுண்ணாமை ஓர் அறமாக விதிக்கப்பட்டிருத்தல் பற்றி, சைவம் என்னும் மதப்பெயரும் கூட ஊனுண்ணாமையைக் குறிப்பதாகும், சைவாள் என்றும்; சைவர் என்றும் இன்றும் சிறப்பித்துச் சொல்லப்படுபவர் தனித் தமிழரே. பார்ப்பனர் முன் காலத்தில் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன் :
(1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, வில்வலன் சுவைத்தளித்த ஆட்டிறைச்சியை உண்டார்.
(2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின் வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்.
"புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்து தொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும் தாமே..........
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே" (புறம். 14)
இது "சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, ' மெல்லியவா மால் நுங்கை' எனக் கபிலர் பாடியது.
' உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி போல" என்னும் பழமொழியும் இங்கு நோக்கத் தக்கது.
இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும்.
ஒவ்வொரு நாட்டிலும்—அது எத்துணை நாகரிகமடைந்திருப்பினும்—நாகரிகம், அநாகரிகம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்து கொண்டே யிருக்கும். தமிழ் நாட்டில் அங்ஙனமிருப்பவற்றுள் ஒவ்வொருவகையிலும் உயர்ந்ததையே தெரிந்து கொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே, அவர் எதிலும் உயர்வாகவே காணப்படுகின் றனர்.
பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்; தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக் காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப்பிரிவினையும், பார்ப்பன வுயர்வும்,
தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம் பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து, அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்த்துவரவேண்டும். ஆகை யால், அக்கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறான தென்று விடுக்க:
பார்ப்பளர் மதிநுட்பமுடையவர் எனல்
பார்ப்பனர் இதுபோது மதி நுட்பமுடையவரெனல் உண்மையே. ஆனால், அது எதனால் வந்தது. ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருத்து வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்றார் முன்றுறையரையனார், "மகனறிவு, தந்தையறிவு" என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித் திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத்திறமை எவ்வளவு பெருகியிருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வரணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள், ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டுகளாக உயர் தரக் கல்வி கற்றுவருகின்றனர். அதற்குள் எவ்வளவோ மூன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிலைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று:
தமிழர் உயர் தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறுப்பால் அறிக
"1610-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது, மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர், அவர்கள் பல வகுப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே, ஏனென்றால், உயர் தரக் கலைகளைக் கற்சு அவர்களுக்குத் தான் உரிமையுண்டு. ....... மாணவரே தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால், அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்திற்கும், மாணக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது.[23]
இங்ஙனம், தமிழ் நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க்கலை
"....சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை
என்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே"
என்று புலவர் வருந்துமாறு வறண்டது.
இங்கனம் பார்ப்பனர் உயர்தரக் கல்வியைத் தங்களுக்கே வரையறுப்பது, தங்களைப் பிறப்பிலேயே உயர்ந்தவராகவும், பிரமாவே தங்களைக் கல்விக்குரியவராகப் படைத்ததாகவும், கல்லாத் தமிழரிடம் காட்டி அவர்களை என்றும் அடிமைப் படுத்தற்கே.
ஆரியத்தால் தமிழ் கெட்டமை
தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப் பதாக, மஹா மஹோபாத்தியாய டாக்டர் ..வே. சாமிநாதய ரவர்கள், தங்கள் 'சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்' என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள், இது எத்துணை உண்மையென ஆராயவேண்டும்.
1; வீண் வடசொல்.
வடமொழி தமிழ் நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மை பான தென் சொற்களுக்குப் பதிலாக, வீணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன; அவற்றுட் சில வருமாறு
அங்கவஸ்திரம் - மேலாடை | அப்பியாசம் - பயிற்சி | |
அத்தியாவசியம் - இன்றியமையாமை | அபராதம் - குற்றம் (தண்டம்) அபிஷேகம் - திருமுழுக்கு | |
அசங்கியம் - அருவருப்பு | அபிவிர்த்தி - மிகுவளர்ச்சி | |
அந்தரங்கம் - மறைமுகம் | அபூர்வம் - அருமை | |
அநேக - பல | அமாவாசை- காருவா |
அர்ச்சனை - தொழுகை (வழிபாடு) | உத்தேசம் - மதிப்பு | |
அர்த்தம்-பொருள் | உத்தியோகம் - அலுவல் | |
அவசரம் - விரைவு (பரபரப்பு) | உபத்திரவம் - நோக்காடு | |
அவசியம் - தேவை | உபகாரம் - நன்றி | |
அவயவம் - உறுப்பு | உபசாரம் - வேளாண்மை | |
அற்புதம்-புதுமை (இறும்பூது) | உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து | |
அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம் | உபவாசம் - உண்ணா நோன்பு | |
அன்னவஸ்திரம் - ஊணுடை | உபாத்தியாயர் - ஆசிரியர் | |
அன்னியம் - அயல் | உற்சவம் - திருவிழா | |
அனுபவி - நுகர் | உற்சாகம் - ஊக்கம் | |
அனுஷ்டி - கைக்கொள் | உஷ்ணம் - வெப்பம் | |
அஸ்திபாரம் - அடிப்படை | கங்கணம் - வளையல்(காப்பு) | |
ஆக்கினை (ஆணை) - கட்டளை | கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு | |
ஆகாரம் - உணவு | ஜோதிடன் - கணியன் | |
ஆச்சரியம் - வியப்பு | கபிலை - குரால் | |
ஆசாரம் - ஒழுக்கம் | கருணை - அருள் | |
ஆசீர்வாதம் - வாழ்த்து | கர்வம் - செருக்கு | |
ஆதரி - தாங்கு (அரவணை) | கவி - செய்யுள் | |
ஆதியோடந்தமாய் - முதலிலிருந்து முடிவுவரை | கனகசபை - பொன்னம்பலம் | |
ஆபத்து - அல்லல் | கஷ்டம் - வருத்தம் | |
ஆமோதி - வழிமொழி | கஷாயம் - கருக்கு | |
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம் | காவியம் - தொடர்நிலைச் செய்யுள் | |
ஆரோக்கியம் - நலம், நோயின்மை | காஷாயம் - காவி | |
ஆலோசி - சூழ் | கிரகம் - கோள் | |
ஆயுள் - வாழ்நாள் | கிரீடம் - முடி | |
ஆனந்தம் - களிப்பு | கிருகப்பிரவேசம் - புது வீடு புகல் | |
ஆஸ்தி - செல்வம் | கிருபை - அருள், இரக்கம் | |
ஆக்ஷேபி -தடு | கிருஷிகம் - உழவு | |
ஆட்சேபணை - தடை | கோஷ்டி - குழாம் | |
இந்திரன் - வேந்தன் | சக்கரவர்த்தி - மாவேந்தன் | |
இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை | சக்தி - ஆற்றல் | |
இஷ்டம் - விருப்பம் | சகலம் - எல்லாம் | |
ஈஸ்வரன் - இறைவன் | சகஜம் - வழக்கம் | |
சகுனம் - குறி, புள் | ||
சகோதரன் - உடன் பிறந்தான் |
சங்கடம் – இடர்ப்பாடு | சுதி(சுருதி) - கேள்வி | |
சங்கரி - அழி | சுபம் - மங்கலம் | |
சங்கீதம் - இன்னிசை | சுபாவம் - இயல்பு | |
சத்தம் - ஓசை | சுயமாய் - தானாய் | |
சத்தியம் - உண்மை | சுயராஜ்யம் - தன்னாட்சி | |
சத்துரு - பகைவன் | சுரணை (ஸ்மரணை) - உணர்ச்சி | |
சந்ததி - எச்சம் | சுவர்க்கம் - துறக்கம், உவணை | |
சந்தி - தலைக்கூடு | சுவாசம் - மூச்சு(உயிர்ப்பு) | |
சந்திப்பு - கூடல் (Junction) | சுவாமி - ஆண்டான், கடவுள் | |
சந்திரன் - மதி, நிலா | சுவாமிகள் - அடிகள் | |
சந்தேகம் - ஐயம், ஐயுறவு | சேவகன் - இளையன் | |
சந்தோஷம் - மகிழ்ச்சி | சேவை - தொண்டு (ஊழியன்) | |
சந்நிதி - முன்னிலை | சேனாபதி - படைத்தலைவன் | |
சந்நியாசி - துறவி | சேனாவீரன் - பொருநன் | |
சம்பந்தம் - தொடர்பு | சேஷ்டை - குறும்பு | |
சம்பாஷணை - உரையாட்டு | சொப்பனம் - கனா | |
சம்பூரணம் - முழுநிறைவு | சோதி - நோடு | |
சமாச்சாரம் - செய்தி | சௌகரியம் - ஏந்து | |
சமுகம் - மன்பதை | ஞாபகம் - நினைப்பு | |
சமுசாரி - குடும்பி (குடியானவன்) | ஞானம் - அறிவு | |
சமுச்சயம் - அயிர்ப்பு | தயவு - இரக்கம் | |
சமுத்திரம் - வாரி | தருமம் - அறம் | |
சர்வமானியம் - முற்றூட்டு | தாசி - தேவரடியாள் | |
சரணம் - அடைக்கலம் | தானியம் - கூலம், தவசம் | |
சரீரம் - உடம்பு | தினம் - நாள் | |
சன்மார்க்கம் - நல்வழி | துக்கம் - துயரம் | |
சாதம் - சோறு | துரோகம் - இரண்டகம் | |
சாதாரணம் - பொதுவகை | துஷ்டன் - தீயவன் | |
சாஸ்திரம் - கலை (நூல்) | தேகம் - உடல் | |
சாஸ்வதம் - நிலைப்பு | தைலம் - எண்ணெய் | |
சாக்ஷி - கண்டோன் | தோஷம் - சீர் (குற்றம்) | |
சிங்காசனம் - அரியணை | நதி - ஆறு | |
சிநேகிதம் - நட்பு | நமஸ்காரம் - வணக்கம் | |
சிரஞ்சீவி - நீடுவாழி | நஷ்டம் - இழப்பு | |
சீக்கிரம் - சுருக்கு | நக்ஷத்திரம் - வெள்ளி (நாண்மீன்) | |
சுகம் - உடல் நலம் (அல்லது இன்பம்) | நாசம் - அழிவு | |
சுத்தம் - துப்புரவு | நாதம் - ஒலி | |
சுதந்தரம் - உரிமை | நிஜம் - மெய் நிச்சயம் - தேற்றம் |
நித்திரை - தூக்கம் | பிரயோகம் - எடுத்தாட்சி (வழங்கல்). | |
நியதி - யாப்புறவு | பிரயோஜனம் - பயன் | |
நியமி - அமர்த்து | பிரஜை -குடிகள் | |
நியாயம் - முறை | பிராகாரம் - சுற்றுமதில் | |
நீதி - நயன் | பிராணன் - உயிர் | |
பக்தன் - அடியான் (தேவடியான்) | பிராணி - உயிர்மெய் (உயிர்ப்பொருள்), உயிரி | |
பக்தி - தேவடிமை | பிராயச்சித்தம் - கழுவாய் | |
பகிரங்கம் - வெளிப்படை | பிரியம் - விருப்பம் | |
பசு - ஆன்(ஆவு) | பிரேதம் - பிணம் | |
பஞ்சேந்திரியம் - ஐம்புலன் | புண்ணியம் - நல்வினை (அறப்பயன்) | |
பத்திரம் - தாள் (இதழ்) | புத்தி - மதி | |
பத்திரிகை - தாளிகை | புத்திமதி - மதியுரை | |
பத்தினி - கற்புடையாள் | புருஷன் - ஆடவன் | |
பதார்த்தம் - பண்டம்(கறி) | புஷ்டி - தடிப்பு(சதைப்பிடிப்பு) | |
பதிவிரதை - குலமகள் (கற்புடையாள்) | புஷ்பம் - பூ | |
பந்து - இனம் | புஷ்பவதியாதல் - முதுக்குறைதல் (பூப்படைதல்) | |
பரம்பரை - தலைமுறை | பூமி - ஞாலம், நிலம் | |
பரிகாசம் - நகையாடல் | பூர்வீகம் - பழைமை | |
பரியந்தம் - வரை | பூரணசந்திரன் - முழுமதி | |
பக்ஷி - பறவை (புள்) | பூஜை - வழிபாடு | |
பாத்திரம் - ஏனம் (தகுதி) | போதி - கற்பி, நுவல் | |
பார்வதி - மலைமகள் | போஜனம் - சாப்பாடு | |
பாவம் - தீவினை | போஷி - ஊட்டு | |
பானம் - குடிப்பு (குடிநீர்) | பௌரணை - நிறைமதி | |
பாஷை - மொழி | மத்தி - நடு | |
பிச்சை - ஐயம் பிச்சைக்காரன் - இரப்போன் |
மத்தியானம் - நண்பகல் (உச்சிவேளை) | |
பிசாசு - பேய் | மயானம் - சுடுகாடு, சுடலை | |
பிரகாசம் - பேரொளி | மரியாதை - மதிப்பு | |
பிரகாரம் - படி | மாமிசம் - இறைச்சி | |
பிரசங்கம் - சொற்பொழிவு | மார்க்கம் - வழி | |
பிரசவம் - பிள்ளைப்பேறு | மிருகம் - விலங்கு | |
பிரசுரம் - வெளியீடு பிரத்தியக்ஷணம் - கண்கூடு |
முக்தி - விடுதலை | |
பிரதக்ஷணம் - வலஞ்செய்தல் பிரயாசம் - முயற்சி |
முகஸ்துதி - முகமன் | |
பிரயாணம் - வழிப்டோக்கு பிராணி - வழிப்போக்கள் |
மூர்க்கன் - முரடன் |
மைத்துனன் - அத்தான் (கொழுந்தன்), அளியன் | விநோதம் - புதுமை வியவகாரம் - வழக்கு | |
மோசம் - கேடு | வியவசாயம் - பயிர்த்தொழில் | |
மோக்ஷம் - வீடு, பேரின்பம் | வியாதி - நோய் | |
யதார்த்தம் - உண்மை | வியாபாரம் - பண்டமாற்று | |
யமன் - கூற்றுவன் | விரதம் - நோன்பு | |
யஜமான் - தலைவன் (ஆண்டான்) | விரோதம் - பகை | |
யாகம் - வேள்வி | விஸ்தீரணம் - பரப்பு | |
யோக்கியம் - தகுதி | விஷம்- நஞ்சு | |
யோசி - எண் | வீரன்- வயவன் (விடலை) | |
ரகசியம் - மறைபொருள், மருமம் | வேசி - விலைமகள் | |
ரசம் - சாறு | வேதம் - மறை | |
ரணம் - புண் | வைத்தியம் - மருந்துவம் | |
ரத்தினம் - மணி | ஜயம் - வெற்றி | |
ரதம்- தேர் | ஜலதோஷம் - நீர்க்கோவை, (தடுமம் | |
ராசி - ஓரை | ஜன்மம் - பிறவி | |
ருசி - சுவை | ஜன்னி - இசிவு | |
ரோமம் - மயிர் | ஜனம் - நரல் (நரூள்) | |
லஜ்ஜை - வெட்கம் | ஜனசங்கியை - குடிமதிப்பு | |
லக்ஷ்மி - திருமகள் | ஜனன் மரணம் - பிறப்பிறப்பு | |
லாபம் - ஊதியம் | ஜாக்கிரதை - விழிப்பு | |
லோபம்- இவறன்மை | ஜாதகம் - பிறப்பியம் | |
லோபி- இவறி (கஞ்சன், பிசிரி ) | ஜாதி-குலம் | |
வசனம் - உரைநடை | ஜீரணம் - செரிமானம் | |
வமிசம் - மரபு | ஜீரணோத் தாரணம் - பழுது
பார்ப்பு | |
வயசு - அகவை | ஜீவன் - உயிர் | |
வர்க்கம் - இனம் | ஜீவனம் - பிழைப்பு | |
மர்த்தகம் - வணிகம் | ஜீவியம் - வாழ்க்கை | |
வருஷம் - ஆண்டு | ஜோதி - சுடர் | |
வாத்தியம் - இயம் | ஸ்தாபனம் - நிறுவனம் | |
வாயு - வளி | ஸ்திரீ - பெண்டு | |
வார்த்தை - சொல் | ஸ்தோத்திரி - பராவு | |
விகடம் - பகடி | ஸ்நானம் - குளிப்பு | |
விசுவாசம் - நம்பிக்கை | க்ஷணம் - நொடி | |
விசனம் - வாட்டம் | க்ஷீணம் - மங்கல் | |
விசாரி - வினவு, உசாவு | க்ஷேமம் - ஏமம், நல்வாழ்வு (காப்பு) | |
விசேஷம் - சிறப்பு | சமீபம் - அண்மை | |
வித்தியாசம் - வேறுபாடு | தூரம் - சேய்மை |
தமிழ் நாட்டில், பல பொதுவான தென் சொற்களுக்குப் பதிலாசு வடசொற்களை வழங்கினதுடன், ஆட்பெயரும், இடப்பெயரும் தெய்வப்பொருமான பல சிறப்புப் பெயர்களையும் மொழிபெயர்த்து வழங்கினர் பார்ப்பனர். கயற் கண்ணி, தடங்கண்ணி, அழகன் என்னும் ஆட்பெயர்கள் முறையே மீனாக்ஷி, விசாலாக்ஷி, சுந்தரன் என்றும்; பழமலை, மறைக்காடு என்னும் இடப்பெயர்கள் முறையே விருத்தாசலம், வேதாரண்யம் என்றும், ஆறுமுகம், சிவன், தாயுமான தெய்வம் என்னும் தெய்லப் பெயர்கள் முறையே, ஷண்முகம், சங்கரன், மாதுருபூதேஸ்வரர் என்றும் வழங்கி வருதல் காண்க.
ஒரு நாட்டார், இரண்டொருவராய், நாடு காண்பவர் போலும் . வழிப்போக்கர் போலும், பிழைக்கப்போபவர் போலும், மற்றொரு நாட்டிற் போயமர்ந்து, பின்பு பெருத் தொகையினரானவுடன். அந்நாட்டைக் கைப்பற்றுவது ஒரு. வலக்காரமான வழியாகும், இது மொழிக்கும் ஓக்கும், வட சொற்கள் தமிழில் மிகச் சிலவாயிருந்த பண்டைக்காலத்தில், தமிழைக் கெடுப்பதாகத் தமிழர்க்குத் தோன்றவில்லை : ஆனால், இதுபோதோ, - தமிழே வடமொழியினின்றும் பிறந்ததே என்று ஆராய்ச்சியில்லாதார் தம்புமளவு: அளவிறந்த வடசொற்கள் தமிழிற் கலந்துள்ளன;வடசொற்கலப்பினால் தமிழுக்கு நேர்ந்த தீங்குகளாவன :—
(1) தமிழ்ச்சொற்கள் வழக்கற்று மறைதல்.
(2) தமிழின் தூய்மை கெடல்.
(3) தமிழ்ச்சொற்கள் பொருளிழத்தல்,
குடும்பம், இல், குடி, குலம், வரணம், மரபு என்னும் பெயர்கள், முறையே ஒரு சிறிய அல்லது பெரிய (ஒரு தலை முறையுள்ள அல்லது பல தலை முறை யடங்கின) குடும்பத்தையும், தாய்வழி தந்தைவழிகளையும், கோத்திரத்தையும், ஜாதியையும், நிறம் பற்றிய (வெண்களமர், கருங்களமர், அல்லது ஆரியர், திராவிடர் என்பன போன்ற) பெரும் பிரிவுகளையும், குலவழித்தொடர்பை (descent)யும் குறிப்பனவாகும்.[24] ஆனால், இப்பொருள் வேறுபாடு இன்று எல்லார்க்கும் புலனாவதில்லை,
பசும்பால் என்பது காய்ச்சாத பாலையும், பசிய நிறமான வெள்ளாட்டுப் பாலையும் குறிப்பதாகும். [25]பசுவின் பால் பசுப்பால் என்றே கூறத் தக்கது. பசுப்பாலை ஆவின் பால என் றனர் முன்னோர்.
காட்டு என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாக, உதாரணம் என்னும் வடசொல் வழங்கவே, அது தன் பொருளையிழந்து காண்பி என்னும் பொருளில் வழங்குகின்றது
(4) புதுச்சொற்புனைவின்மை.
தனித்தமிழ் வளர்ந்திருந்தால், ஆஸ்திகம், நாஸ்திகம் என்னும் வடமொழிப் பெயர்களுக்குப் பதிலாக உண்மதம், இன்மதம், அல்லது நம்புமதம், நம்பா மதம் என்பனபோன்ற தென்மொழிப் பெயர்கள் வழங்கியிருக்கும்.(5) தென்சொல் வடசொல்போலத் தோன்றல்;
கலை. மீனம் முதலிய தனித்தமிழ்ச் சொற்கள் வடசொற்கள் போலத் தோன்றுகின்றன.
(6) தென்சொல்லை வடசொல்போல ஒலித்தல்.
குட்டம், முட்டி என்னும் தமிழ்ச்சொற்கள், குஷ்டம், முஷ்டி என்று வடமொழியில் வழங்குவதுபோல, வேட்டி என்னும் தமிழ்ச்சொல்லும், உலக வழக்கில் வேஷ்டி என்று வலித்தலும் காண்க.
(7) சில சொற்கள் தென்சொல்லா வடசொல்லாவென்று மயங்கற்கிடமாதல், எ-டு. மந்திரம்.
(8) தமிழர் தாய்மொழியுணர்ச்சியிழத்தல்.
ஏற்கனவே ஏராளமான வடசொற்கள் தமிழில் வந்து அடர்ந்தபின், மகமதிய ஆட்சியில் பல உருதுச் சொற்கள் தமிழில் வந்து கலந்தன. அவற்றுட்சிலவாவன:
அகஸ்மாத் | கோஷா | பவுஞ்சு | ஜமாபந்தி |
அசல் | சபாஷ் | பிராது | ஜமீன் |
அதாலத் | சாமான் | பைசல் | ஜமேதார் |
அமீனா | சுபேதார் | மகஜர் | ஜல்தி |
அமுல் | டபேதார் | மசோதா | ஜவாப் |
அர்ஜீ | டாணா | மஜூதி | ஜவாப்தாரி |
அவுல்தார் | தமாஷ் | மராமத் | ஜவான் |
ஆஜர் | தஸ்தவேஜ் | மாஜி | ஜாகிர்தார் |
உண்டியல் | தாக்கல் | மிட்டாதார் | ஜாகை |
உஷார் | தாக்கீது | மிட்டாய் | ஜாட்டி |
கச்சேரி | தாசில்தார் | ரத்து | ஜாப்தா |
கசாய் | தாலுக்கா | ரஜா | ஜாமீன் |
(கசாப்பு) | தைவி | ராஜிநாமா | ஜாரி |
கஜாளா | தொகையரா | லங்கோடு | ஜால்ரா |
காலி | நகல் | லடாய் | ஜாலக் |
கில்லேதார் | நமூனா | லாடம் | ஜாலர் |
கிஸ்து | நாஷ்ட்டா | லுங்கி | ஜிகினா |
கேலி | பசலி | லேவாதேவி | ஜிம்கானா |
கைலி | படுதா | வார்சு | ஜிமிக்கி |
கொத்தவால் | பர்வா | ஜப்தி | ஜில்லா |
ஜீனி | ஜோர் | ஷரா | ஷோக் |
ஜெண்டா | ஷர்பத் | ஷராய் | ஹுக்கா |
ஜேப்பு | ஷரத்து | ஷராப்பு | ஹோதா |
(இவற்றுட் சில, உருதுவிற் கலந்த இந்திச் சொற்களாகும்.)
மகமதிய ஆட்சியின்பின், ஆங்கில ஆட்சியில் தமிழிற் கலந்த ஆங்கிலச் சொற்களை இங்கெடுத்துக் கூறவேண்டுவதில்லை.
தேசியம் என்னும் நாட்டியல் இயக்கத்தில், தமிழிற் சில ஆரியச்சொற்கள் கலந்துள்ளன.
எ - டு : காங்கிரஸ் (இங்கிலீஷ்), மகாத்மா, சத்தியாக்கிரகம், வந்தேமாதரம், பாரதமாதா, ஜே, பிரச்சாரம், சுயராஜ்யம், ராஷ்ட்டிரபாஷா, சுதந்தரப் பிரதிக்ஞை.
இங்ஙனம் பற்பல மொழிகளினின்றும், பலப்பல சொற்கள் தமிழில் வந்து வழங்கினது. தமிழில் அவற்றுக்கு நேர்சொல் இல்லாமலோ, அவற்றின் பொருளுக்கேற்ற புதுச் சொற்கள் புனைய முடியாமையாலோ அன்று; தமிழர்க்குத் தாய் மொழி யுணர்ச்சியில்லாமையாலேயே. தமிழ் தமிழர் வயமில்லாது ஆரிய வயப்பட்டுக் கிடக்கின்றது.
(2) பாட்டியலில் எழுத்துக்கும் செய்யுளுக்கும், செய்யுள் நூலுக்கும் குலம் வகுத்தல்.
பன்னீருயிரும் முதலாறுமெய்யும் பார்ப்பன வரணம்; அடுத்த ஆறுமெய்கள் அரச வரணம்; அதற்கு அடுத்த நான்கு மெய்கள் வணிக வரணம்; இறுதி இரண்டு மெய்யும் சூத்திர வரணம் என்பதும்;
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்பதும்;
கலம்பகம் பாடும்போது, தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95 செய்யுளும், அரசர்க்கு 90 செய்யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், மற்றவர்க்கு 30 செய்யுளும் பாடவேண்டும் என்பதும் பாட்டியல் விதிகளாகும்.
(3). தமிழுக்கும் தமிழர்க்கும் மாறானவும் கேடானவுமான, ஆரியக் கருத்துக்கள் தமிழ் நூல்களிற் கலத்தல்.(4) வரலாற்றுண்மையற்றனவும், மதியை மழுங்கச் செய்பவுமான ஆரியப் பழமைகள் தமிழில் மொழிபெயர்க்கவும் இயற்றவும் படல்.
இவை தமிழுக்கு அலங்காரமா, அலங்கோலமா என்று நடுநிலை அறிஞர் அறிந்துகொள்க.
ஆரியத்தால் தமிழர் கெட்டமை
பிரிவினை, அடிமைத்தன்மை, மறமிழத்தல், வறுமை, பகுத்தறிவின்மை, உயர்தரக்கல்வியும் நாகரிகமுமின்மை, தாய் மொழி வெறுப்பு, தற்குலப்பகை முதலியன, ஆரியத்தால் தமிழர்க்கு நேர்ந்த தீங்குகளாகும். ஆரியர் வந்ததிலிருந்து தமிழர் பலவகையிலும் கெட்டு வந்ததை நோக்குமிடத்து, 'தமிழர்கேடு — பார்ப்பனர் ஆக்கம்' என்னும் முறைபற்றியே காரியங்கள் நடந்து வந்திருக்கின்றன என்பதை அறியலாம்.
பார்ப்பனர் பாட்டுத் தொழிலை மேற்கொண்டதால் பாணர் பிழைப்பும், கணியத் தொழிலை மேற்கொண்டதால் வள்ளுவர் பிழைப்பும், வடமொழியைத் தலைமையாக்கியதால் தமிழ்ப் புலவர் பிழைப்பும் கெட்டன.
தாழ்த்தப்பட்டோர் ஊர்ப் பொதுக் குளங்களில் குளிக்கக் கூடாதென்றும், அக்கிராகர வழியாகச் செல்லக் கூடாதென்றும், மேலாடையணியக்கூடாதென்றும், இன்னும் சில ஊர்களில் இருந்து வருகின்றது. மேல் வகுப்பாரைக் கண்டவுடன் ஐம்புலனும் ஒடுங்கி, அவர் ஏவல்வழி நிற்கின்றனர் தாழ்த்தப்பட்டோர். இன்னோர்க்கு மறம் எங்ஙன் உண்டாகும்?
பிறர் தாழ்த்தி வைக்கிறதினாலேயே, பெரும்பாலும் தாழ்ந்து கிடக்கின்றனர் கீழோர். மேனாட்டார்க்குச் சமையல் செய்யும் பறையர், மிகத் துப்புரவாயிருப்பதையும், பார்ப்பனரும் அவரிடத்து உண்பதையும் நோக்குக. இங்ஙனம் அவரினத்தாரெல்லாம் திருந்தக் கூடும். கல்வியொன்றே அவர்கட்குத் தேவையானது.
ஆரிய தமிழப் போர் தொன்றுதொட்டதாதல்
ஆரிய தமிழ (திராவிட)ப்போர், ஆரியர் இந்தியாவில் கால்வைத்த நாள் முதலாய் நடந்து வருவது, சரித்திரத்தால் அறியப்படும். ஆரிய மறைகளும் அதற்குச் சான்றாகும்.
பிராமண மதத்திற்கு மாறாகப் பௌத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தர், வடநாட்டிலிருந்த ஒரு திராவிட வகுப்பாரே. பிரிவினையென்னும் படையால், திராவிடரைக் கொண்டே திராவிடரை வென்று வடநாட்டை ஆரியர் கைப்பற்றும் வரையும், போர் நடந்துகொண்டே இருந்தது.
ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அவர் முறைகளைத் தமிழ்நாட்டிற்குத் தீங்கு விளைப்பனவாகக் கண்ட பல தமிழறிஞர், அவ்வப்போது அவற்றைக் கண்டித்து வந்திருப்பதை, நெடுகக் காணலாம்.
செங்குட்டுவ கனகவிசயப் போர் பதினெண் நாழிகையும், பாரதப்போர் பதினெண் நாளும், இராம விராவணப் போர் பதினெண் மாதமும்) தேவ அசுரப்போர் பதினெண் ஆண்டும், நடந்ததாகச் சொல்லப்படும். ஆயின், ஆரிய தமிழப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்துவருகின்றது.
ஆய்ந்து நோக்கின் தேவ அசுரப் போர் என்பது ஆரிய திராவிடப் போரே. சேரநாட்டுச் செங்கோல் வேந்தனும் மாபெருங் கொற்றவனுமாகிய மாவலி அசுரனென்றும் பிராமணர் பூசுரர் (நிலத்தோர்) என்றும், கூறப்படுதல் காண்க. தமிழச்சித்தர் இலக்கியத் தொண்டும், நேர்மைக் கட்சியின் (Justice Party) அரசியல் தொண்டும், ஆரிய திராவிடப் போராட்டமே.
(1) நக்கீரர்
கடைக்கழகக்காலத்தில், ஒருநாள், வடமொழியறிந்த 'கொண்டான்' என்னுங் குயவன் ஒருவன், பட்டிமண்டபமேறி “வட மொழியே சிறந்தது; தமிழ் சிறந்ததன்று” என்று கூற, நக்கீரர் சினந்து,
“முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி—அரணிலா
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
ஆனந்தஞ் சேர்கசுவா கா”
என்று பாடினதும், அக் குயவன் வீழ்ந்திறந்தான். பின்பு அங்கிருந்த பிறர் அவனுக்காகப் பரிந்துபேச,
“ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் — சீரிய
அந்தண் பொதிய லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா”
என்று பாடி அவனை உயிர்ப்பித்தார்.[26]
நக்கீரர் பார்ப்பாரேயாயினும், நடுவுநிலைமையும் வாய்மையும் தமிழ்ப்பற்றும் உடையவராதலின், ஆரியவொழுக்கத்தை அறவே விட்டுவிட்டுத் தமிழவொழுக்கத்தை மேற்கொண்டார். தமிழின் தொன்முது பழமையையும், அதற்கு இடையிடை நேர்ந்த பல பெருந் தீங்குகளையும் நோக்குமிடத்து, நச்சினார்க்கினியர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்திரியார்) போன்ற ஆரியப் பார்ப்பனர் இல்லாதிருந்திருப்பின், தமிழ் மிகக் கெட்டுப் போயிருக்கும்.
(2) திருவள்ளுவர்
[27]“அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்”,
“எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”,
“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்”,
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று”
“ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
கிரவின் இளிவந்த தில்”[28]
முதலிய பல குறள்கள் ஆரியவொழுக்கத்தைக் கண்டிப்பன வாகும்.
(3) பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
“வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே”[29]
இது ஆரியக் கொள்கைக்கு மாறாகும்.
(4) கம்பர்
கம்பர் ஒருமுறை வறுமையுற்றிருந்தபோது, பசியால் வாடி, ஒரு செட்டி கடைக்குச் சென்று அவல் கேட்டார். அவன் போணியாகவில்லையென்று சொல்லிவிட்டான். பின்பு, செக்காட்டிக்கொண்டிருக்கும் ஒரு செக்கானிடம் சென்று, பிண்ணாக்குக் கேட்டார். அவன் “இன்னும் எண்ணெயெடுக்க வில்லை” என்று சொல்லிவிட்டான். அதன்பின், ஒரு பார்ப்பான் வீட்டிற்குச் சென்று உணவு கேட்க, அவன் “சூத்திரனுக்குச் சோறிட்டால் குற்றம், போ” என்று சொல்லிவிட்டான்.
பின்பு, கம்பர் காட்டு வழியாகச் சென்றுகொண்டிருக்கும் போது, அங்கு உழுதுகொண்டிருந்த ஓர் உழவன், கம்பர் சோர்வைக் கண்டு, தான் வைத்திருந்த கூழை அவருக்கு வார்த்து, அவர் பசியைப் போக்கினான். அப்போது கம்பர்,
“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே — முட்டிபுகும்
பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்”
என்று பாடினார்.
கீழ்வரும் கம்ப ராமாயணச் செய்யுளால், பார்ப்பனர் பேரவாவுடையவர் என்று கம்பர் கருதினதாக அறியலாம்.“பரித்த செல்வ மொழியப் படருநாள்
அருத்த வேதியர்க் கான்குல மீந்தவர்
கருத்தி னாசைக் கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள்”
(சுந்தர காண்டம், காட்சிப்படலம். 26)
பார்ப்பனப் பேரவாவைப்பற்றிப் பஞ்சதந்திரக் கதையிலும் ஒரு செய்தியுளது.
நட்புப்பேறு (சுகிர்லாபம்) என்னும் வலக்காரத்தைப் பற்றிய கதைகளுள், 'புலியும் பிராமணனும்' என்பது ஒன்று. பிராமணன் புலியின் பொற்காப்பிற்கு அவாக்கொண்டு, அதனிடம் சென்றான்; தான் அதனால் வஞ்சிக்கப்பட்டதை அறிந்தபோது, 'நம்முடைய சாதிக்கு இயல்பாயிருக்கிற பேராசையினால், இந்தத் துஷ்டனிடத்தில் விசுவாசம் வைத்து மோசம் போனேன்' என்று சொல்லி வருந்தினதாக அதிற் கூறப்பட்டுள்ளது.
சீவகசிந்தாமணியின் 400ஆம் செய்யுளில், “அந்தணர் தொழிலே னானேன்” என்று அந்தணர்க்குச் சால்வு (திருப்தி) தொழிலாகக் கூறியது முனிவரை நோக்கியென்க.
(5) ஔவையார்
சோழன் ஒருமுறை ஒளவையாரை நோக்கி எக்குலத்தானை அமைச்சனாகக் கொள்ளலாம் என்று வினவ, அவர்,
“நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் — நாலாவான்
மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே யரசு”
என்று கூறினதாகத் தனிப்பாடற்றிரட்டில் உள்ளது.
“காடுகெட ஆடுவிடு ஆறுகெட நாணலிடு
ஊர்கெட நூலைவிடு...”
என்பது பழமொழி.
“சாதி யிரண் டொழிய வேறில்லை......
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்...”
(6) அதிவீரராமபாண்டியன்.
“எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடிக் கற்றோரை மேல்வருக வென்பார்”
(7) சித்தர்.
சிவவாக்கியர்
“மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபோத மாயுருத் தரிக்குமாறு போலவே
வேதமோது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கலாத வாறதென்ன பேதமே”
பத்திரகிரியார்
“சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு சுகம்பெறுவ தெக்காலம்.”
அகஸ்தியர் :
“தானென்ற பெரியோர்க ளுலகத் துள்ளே
தாயான பூரணத்தை யறிந்த பின்பு
தேனென்ற வமுதமதைப் பானஞ் செய்து
தெவிட்டாத மவுனசிவ யோகஞ் செய்தார்
ஊனென்ற வுடலைநம்பி யிருந்த பேர்க்கு
ஒருநான்கு வேதமென்றும் நூலா ரென்றும்
நானென்றும் நீயென்றும் பலஜாதி யென்றும்
நாட்டினா ருலகத்தோர் பிழைக்கத் தானே.”
பாம்பாட்டிச் சித்தர்
“சாதிப் பிரிவிலே தீ மூட்டுவோம்”
இதுகாறும் கூறியவற்றால், ஆரியர் வேறு திராவிடர் வேறு என்பதும், பார்ப்பனர் ஆரியரே என்பதும், வெள்ளிடை மலையாதல் காண்க. பார்ப்பனர் — அபார்ப்பனர் என்று பிரித்து, ஒரு மன்பதை மற்றொரு மன்பதையை வெறுப்பது விலங்குத் தன்மையே. ஆனால், இவ் வெறுப்பை நீக்குவதற்கு, அவ் விரண்டையும் இசைக்கும் வழிகளைக் கையாடவேண்டுமேயன்றி, ஆரியரும் திராவிடரும் ஒரு குலத்தாரென்பதும், பார்ப்பனர் தமிழரேயென்பதும், தமிழ்வடமொழியினின்றும் வந்தது என்பதும் தவறாகும். இதனால், குலநூல் (Ethnology), மொழிநூல் (Philology), சரித்திரம் (History) என்ற முக்கலைகளும் கெடுவதாகும். ஜெர்மனியில், ஹிட்லர் யூதரைத் துரத்துவது கொடிதே. ஆனால், அவ் யூதரைக் காப்பதற்குரிய வழிகளைத் தேடாமல், யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்ஙனம் பொருந்தும்?
பார்ப்பனர் தமிழ் நூற்கன்றித் தமிழ்மொழிக்
கதிகாரிகளாகாமை
இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல் களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ் மொழிக்கும் தமிழக் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங்களாவன:
(1) ஆரிய மனப்பான்மை
ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மையுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (Grammar), மரபு (Idiom) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழக் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.
பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமி ழரோ எப்போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரையும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.
நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை(Science)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத்திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக் குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது: புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும்: இது பல பார்ப்பனருக்கு விளங்குவதில்லை.
நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபு வழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.
(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை
ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்குப் பொதுமக்கட்கும், நூல்வழக்குப் புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத்தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல் வழக்கு அதற்கு உடம்புமாகும்.
பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக் கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமையால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.
(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்
வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப்பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்ப னருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.
“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” 'யூநிவர்சிட்டி' (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப்பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியாதல் காண்க.
(4) வடமொழியைத் தென்மொழிக்கு அளவையாகக் கொள்ளல்
தமிழ்நூல்களுக்கு வடநூல்களை மேல்வரிச் சட்டமாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தழுவியே பொருளுரைத்து வருகின்றனர் பார்ப்பனர். தமிழ் முதனூல்கள் வடமொழி முதனூல்களினின்றும் கருத்தில் வேறுபட்டதுமன்றி, அவற்றுக்கு மிக முந்தியவுமாகும் என்பதை அவர் அறிந்திலர்.
பரிமேலழகர், தென்புலத்தாரைப் “படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி” என்றார். தென் புலத்தார் (பிதிர்க்கள்) தத்தம் காலத்தில் உலகில் வாழ்ந்து இறந்துபோனவராயிருக்க, அவரைப் படைப்புக் காலத்துப் படைக்கப்பட்டவர் என்று கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்? இதன் பிழைபாடும், இன்னோரன்ன பிறவும் பின்னர்க் காட்டப்படும். வடநூலைப் பின்பற்றிச் சேனா வரையர், சிவஞான முனிவர், சங்கர நமச்சியவாயப் புலவர், சுவாமிநாத தேசிகர் முதலிய தனித்தமிழருங்கூடப் பல இலக்கணங்களில் தவறி விட்டனர். இவற்றை யெல்லாம் எனது தொல்காப்பியவுரையிற் கண்டு கொள்க.
திருவையாற்றுக் கீழைக் கலைக்கல்லூரித் தலைவ ராகிய, பண்டாரகர் சுப்பிரமணிய சாத்திரியார், சில ஆண்டுகளாகத் தமிழுக்கு மாறான சில நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டு வருகின்றார். அவற்றுள், 'தமிழ்மொழி நூல்' என்பது ஒன்று. அதில், ஆராய் என்னுஞ் சொல்லில் 'ர்' செருகல் (intrusion) என்று கூறியுள்ளார். ஆராய் என்பது ஆய் என்பதன் மிகுப்பு (intensive). ஆர (நிரம்ப) + ஆய் = ஆராய். தீரமானி என்பது தீர்மானி என்றும், செய்யவா என்பது செய்வா என்றும் வழங்குதல் காண்க.
இன்னும், தொல்காப்பிய நூன்மரபில்,
“லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும்”
“ணனஃகான் முன்னர்க்
க-ச-ஞ-ப ம-ய-வவ் வேழு முரிய”
“ஞ-ந-ம-வ என்னும் புள்ளி முன்னர்
யஃகான் நிற்றல் மெய்பெற் றன்றே”
“மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்”
என்னும் ( 24,26,27,28) நூற்பாக்களைப் பிறழவுணர்ந்து பண்டைத் தமிழ்ச் சொற்களினிடையில், ல்ய, ல்வ, ள்ய, ள்வ, ண்ய, ண்வ, ன்ய, ன்வ, ஞ்ய, ந்ய, ம்ய, வ்ய, ம்வ என்னும் இணைமெய்கள் பயின்றதாகக் கூறியுள்ளார். இவர் இங்ஙனம் துணிவதற்குக் காரணமென்ன வெனின், நச்சினார்க்கினியர், மேற்கூறிய நூற்பாக்களுள், முதலதற்கு,
எ-டு: கொல்யானை, வெள்யாறு.
“இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும், வெள்யாறு எனப் பண்புத்தொகையும், நிலைமொழி வரு மொழி செய்வதற்கு இயையாமையின், 'மருவின் பாத்திய' என்று கூறுவாராதலின், இவ் வாசிரியர் இவற்றை ஒருமொழி யாகக் கொள்வரென்று உணர்க. இக் கருத்தானே மேலும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக் கொண்டு, உதாரணங் காட்டுதும்” என்று கூறினவர், பின்பு, “அன்றி இவ் வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து, வினைத் தொகைக் கண்ணும் பண்புத் தொகைக் கண்ணுமன்றி, ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவு முளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற்போதலே நன்றென்று கூறலுமொன்று” என்றும்;
மூன்றாவதற்கு,
“இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின், அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.
“இனி உரையாசிரியர் உரிஞ்யாது, பொருந்யாது, திரும் யாது, தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரண மாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங் கூறி, அதன்கண், 'மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியும்' (எழு. 107) என்று கூறினார். கூறியவழிப் பின்னும் 'உகரமொடு புணரும் புள்ளி யிறுதி' (எழு. 163) என்றும், பிறாண்டும், ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர் ஆதலின், ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூறலென்னும் குற்றமாம். அதனால், அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க” என்றும்;
நாலாவதற்கு,
“இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், 'வகார மிசையு மகாரங் குறுகும்' (எழு. 330) என்ற விதி வேண்டா வாம்” என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம்நச்சினார்க்கினியர் தொகைச் சொல்லை (compound word) ஒரு சொல்லாகக் கொள்ளாமையும், கூறியது கூறலுக்கும் வழிமொழிதலுக்கும் வேறுபாடறியாமையுமே யாகும்.
“எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய”
என்றார் தொல்காப்பியர்.(எச்சவியல் 24)
தண்ணீர், புன்செய், மண்கொண்டான், பிழைபொறுத் தான் முதலிய தொகைப்பெயர்கள் எல்லாம் ஒருசொல் நடையவதால் காண்க.
நெஸ்பீல்டு (Nesfield) என்பவர், தம் ஆங்கில இலக் கணப் புத்தகத்தில், “ஒருசொல் தன்மையடையும்படி இரு சொல் புணர்ந்தது தொகைச்சொல்” என்றுகூறி ink-pot (மைக் கூடு), door-step (படிக்கட்டு), horse-shoe (குதிரைக் குளம் பாணி), drinking-water (குடிநீர்) என்று உதாரணங் காட்டினர்.[30]
இனி, நச்சினார்க்கினியர் கொள்கைப்படி கொள்ளின்; கூறியது கூறலாகத் தொல்காப்பியத்தில் எத்தனையோ நூற் பாக்களிருக்கின்றன.
“புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்”
என்று நூன்மரபிற் கூறியதை,
“யகரம் வரும்வழி இகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”
எனக் குற்றியலுகரப் புணரியலுள்ளும்,
“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”
என்று நூன்மரபிற் கூறியதை,
“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்”
என்று புணரியலுள்ளும்,
“உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென்
றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே”
“உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை யென்மனார் அவரல பிறவே”
என்று கிளவியாக்கத்துள்ளும்,
“இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே
கடப்பா டறிந்த புணரிய லான”
என்று மொழிமரபிற் கூறியதை,
“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே”
என்று குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறியிருப்பதைக் காண்க.
நச்சினார்க்கினியர் எவ்வளவோ தமிழ்ப்பற்றும் தமிழறிவும் உடையவராயிருந்தும், இங்குத் தவறிவிட்டது தமிழியல்பை அறியாததினாலேயே.
இனி, சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல் லதிகாரக் குறிப்பு என்றும், தொல்காப்பிய எழுத்ததிகாரக் குறிப்பு என்றும் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அவற் றுள், சொல்லதிகாரக் குறிப்பு மன்னார்குடிச் சோமசுந்தரம் பிள்ளையவர்களால் சின்னபின்னமாகச் சிதைக்கப்பட்டது. ஆயினும், அதைப் பல்கலைக்கழகத்தாரேனும் பண்டிதர்க ளேனும் சிறிதும் கவனித்தாரில்லை. இதை நினைக்கும் போது “குட்டுதற்கோ” என்ற செய்யுளே நினைவிற்கு வருகின் றது. இனி, எழுத்ததிகாரக் குறிப்பில், தொல்காப்பியர் வட மொழிப் பிராதிசாக்கியங்களைப் பின்பற்றித் தொல்காப்பி யத்திற் பிறப்பியலை வரைந்ததாகக் கூறியுள்ளார். எல்லா மொழிகட்கும் பல எழுத்துகள் பொதுவாயிருக்கின்றன. அவ்வெழுத்துகளெல்லாம் யார் ஒலித்தாலும்,அததற்குரிய ஒரேயிடத்தில் தான் பிறக்கும்.
ஆங்கில இலக்கணிகள்,இந்திய இலக்கணிகளைப் போல நூற்பா வடிவாக எழுதாவிடினும், உரைநடையில்,எழுத்துகளின் வகைகளையும் அவற்றின் பிறப்பியல்புகளையும் நுட்பமாக வும், விரிவாகவும் எழுதித்தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் தொண்டையின (Gutturals), அண்ணத்தின (Palatals), பல்லின (Dentals), உதட்டின (Labials) என்றவற்றையே, தமிழ் இலக்கணிகள் பின்பற்றிப் பிறப்பியல் வகுத்தார்கள் என்பது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே வடமொழி வழி காட்டுவதும் பொருந்துவதாகும்.தமிழிலக்கணம் மிகப் பழங்காலத்தில் இயறப்பட்டதினால், மிக விரிவாக வரையப்படவில்லை. அக்காலத்து மாணாக்கர் நுண்ணறிவுடையவராயிருந்ததினாலும், எழுத்தாணியால் ஓலையிலெழுதுவது வருத்தமானதினாலும், விரிவாயெழுதின புத்தகம் சுமக்க முடியாத அளவு பெருத்து விடுமாதலாலும், சுருங்கிய அளவில் மாணவர் மனப்பாடஞ் செய்ய எளிதாயிருக்கு மாதலாலும், அக்காலத்து ஆராய்ச்சிக் குறைவாலும், இக்காலத்திற்கேற்றபடி மிக விரிவான இலக்கணம் எழுதப்படவில்லை. வட மொழியிலக்கணம் தமிழுக்குப் பிந்தினதாதலின் சற்று விரிவாயுள்ளது. ஆங்கில விலக்கணம் வடமொழிக்கும் பிந்தினதாதலின், அதினும் விரிவாகவுள்ளது.
தொல்காப்பியத்தில், பதவியல் இலக்கணம் பலவியல்களில் பரவிக் கிடக்கின்றது. நன்னூலார் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு தனியியலாக்கினார். அவர் இலக்கணத்துள்ளும், தொழிற் பெயர் விகுதிகளும், தன்வினை பிறவினையாகும் வகைகள் எல்லாமுங் கூறப்படவில்லை. இதையறியாத சிலர், வட மொழியிலக்கணவறிவு தமிழிலக்கணவறிவிற்கு இன்றியமையாத தென்று கூறுகின்றனர்.
ஆங்கில இலக்கணம் ஆறாயிர மைலுக்கப்பால் இயற்றப் பட்டதாயிருப்பினும், தமிழிலக்கண அறிவிற்கு எவ்வளவோ உதவுவதாகும்.
உதாரணமாக, அசையழுத்தம், காலப்பிரிவு, எழுவாய் வடிவுகள் முதலியவற்றைக் கூறலாம்.
(1) அசையழுத்தம் (Accent)
அசையழுத்தம் தமிழுக்கில்லையென்று சிலர் கூறுகின்றனர்.
எடுப்பு (Acute), படுப்பு (Grave), நலிபு (Circumflex) என்னும் மூன்றொலிப்பு வேறுபாடுகளும் தமிழுக்குள்ளனவென்று நன்னூலார் கூறியிருக்கின்றனர். எந்த மொழியிலும், ஒரு சொல்லில் ஏதேனுமோர் அசையில் அழுத்தம் இருந்துதான் ஆக வேண்டும். அழுத்தமுள்ள அசை எடுப்பசை; அஃதில்லாதது படுப்பசை; இவ்விரண்டிற்கும் இடைப்பட்டது நலிபசை.
தமிழில் பொதுவாய் அசையழுத்தம் சொன் முதலி லிருக்கும். தண்ணீர், வந்தான் என்ற சொற்களை ஒலித்துக் காண்க.செம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக் கும்போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும் போது, பதின் என்னும் இடையசையும் அழுத்தம் பெறும்.
வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின் படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும்.
சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும்.
“உப்ப கார மொன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே”
என்றார் தொல்காப்பியர்.(மொழி மரபு.43).
இதன் உரையில், தபு என்னுஞ்சொல், “படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம்” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.
ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப்போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவ துண்டு.
எ-டு: படு—பாடு, உண்—ஊண்.
இங்ஙனமே conduct' என்னும் ஆங்கில வினையும், con'duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசையழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது convoy' என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க.
தமிழிலும், செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும்.
“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க.
இதை,“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்”
“பையச் சென்றால் வையந் தாங்கும்”
என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக.
(2) காலப்பிரிவு
ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க.
நிகழ்காலம் (Present Tense)
1. அவன் வருகிறான் - செந்நிலை (Indefinite).
2. அவன் வந்துகொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous).
3. அவன் வந்திருக்கிறான் - நிறைவு (Perfect).
4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் — நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).
இங்ஙனங் கலவைக்காலங்(Compound Tense)களை ஒரு வினையாகக் கொள்ளாவிடின், குறைவு நேர்தல் காண்க.
(3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood)
நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun-equivalent) யாய் எழுவாயாதல் கூடும்.
எ-டு: எனக்குப் பாடத்தெரியும்.
இதில், 'பாட' என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க; இவ்வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது.
எல்லா மொழிகட்கும் பல நெறிமுறைகள் ஒத்திருக்கின்றன. ஒவ்வொரு மொழியிலும், அவற்றுள் ஒவ்வொன்றை, அல்லது சிற்சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்; இன்னும் கண்டுபிடியாதனவும் உள. ஒரு மொழியிற் கண்டுபிடித்திருப்பவை பொதுக்கூறுகளாயின், அவை ஏனை மொழிகட்கும் ஏற்கும்.
இதுகாறும் கூறியவற்றால், வடமொழியிலக்கணம் தமிழிலக் கணத்திற்கு மூலமன்மையறிக.
தமிழ்மொழிக்கும் தமிழ்க் கருத்துகட்கும் தனித்தமிழர் அகமும், தமிழரல் - திராவிடர் அகப்புறமும், பார்ப்பனர் புறமும், பிறரெல்லாம் புறப்புறமுமாவரெனக் கொள்க.
பார்ப்பனர் ஓர் ஆரியக்கருத்தைப் புகுத்திக்கொண்டு, இதுவே இந்நூற்பாவிற்குப் பொருள் என்று கூறுவது, இந்தியர் சில ஆங்கிலச் சொற்களுக்கும் செய்யுள்களுக்கும், இதுவே பொருளென்று ஆங்கிலரோடு முரணுவதொக்கும்.
பார்ப்பனரின் றகரவொலிப்புத் தவறு
பார்ப்பனரிற் பலர் நெடுங்காலமாகத் தம்மவரிடத்திலேயே தமிழைக் கற்றுவருவதால், றகரவொலியைச் சரியாய் அறிந்திலர்.
றகரம் தனித்து நிற்கும்போது இரைந்தொலிக்கும்; இரட்டி வரும்போது, ஆங்கில 't' போல, வன்மையாய் ஒன்றியொலிக்குமேயன்றிப் பிரிந்திசைப்பதும் இரைந்திசைப்பதுமில்லை. வெற்றி (veti) என்பதை வெற்றிறி (vetri) என்பது போன்றும், வென்றி (vendi) என்பதை வென்றிறி (vendri) என்பதுபோன்றும் இசைப்பர் பார்ப்பனர். னகர மெய்யும் றகரமும் அடுத்து வரும்போது, ஆங்கிலத்திலுள்ள 'nd' என்னும் இணையெழுத்துப்போல ஒலிக்கும். சில ஐரோப்பியர் பார்ப்பனரிடம் தமிழைக் கற்று 'ற்ற, ன்ற' என்னும் இணைமெய்களைத் தவறாகத் தம் புத்தகங்களில் எழுதிவைத்துவிட்டனர். இப்போது பார்ப்பனரே தமிழுக்கதிகாரிகளாகக் கருதப்படுவதால், புதிதாய் வந்து தமிழைப் படிக்கும் ஐரோப்பியர், அவ்வொலிகளைத் தனித்தமிழர் திருத்தினாலும் ஒப்புக்கொள்வதில்லை. இனி, அவர் மட்டுமன்றிச் சில தமிழக் கற்றதினால் அத்தவறான முறையையே பின்பற்றுகின்றனர்.
(பவணந்தியுட்படப்) பார்ப்பனர் கசடதப என்னும் வல்லின மெய்களைக்கூடச் சரியாயறிந்தாரில்லை. இது, இவற்றை அவர் வடமொழி ஐவர்க்கங்களின் முதலெழுத்துக்களோடும் ஒப்பிட்டுக் கூறுவதால் அறியலாம். தமிழிலுள்ள வல்லின மெய்கள் தமிழுக்கு வல்லினமாயினும், வடமொழி வல்லினத்துடன் ஒப்புநோக்க, சற்று மெல்லியவே யாகும். வடமொழிக் க ச ட த ப க்கள் தமிழ்க் க ச ட த ப க்களின் இரட்டிப்பாதலை ஒலித்துக் காண்க.
- ↑ 'P. சுந்தரம் பிள்ளை, M.A.
- ↑ Principles of Comparative Philology, Preface to the Third Edition, p. xviii—xix.
- ↑ * “மிலேச்சர் ஆரியர்” என்ற திவாகரச் சூத்திரமும் இங்குக் கவனிக்கத்தக்கது.
- ↑ 1. புறம். 168
- ↑ * Mohenjo-Daro, Vol.I, Preface, pp.v-vii
- ↑ * பல்லவர் சரித்திரம், முதற்பாகம், ப. 3.
- ↑ 'பழமை' என்னுஞ் சொல் பழங்கதை என்னும் பொருளில், இன்றும் தென்னாட்டில் வழங்கிவருகின்றது. பழைய நிலையைக் குறிக்கப் “பழைமை” என்னும் வடிவமும், தொன்மை, முதுமை என்னும் பிற சொற்களும் உள.
- ↑ சக்கிலி என்பது சாஷ்குலி (= புலையர்) என்னும் வடசொல்லின் திரிபென்பர் எட்கார் தட்ஸ்ற்றன் (Edgar Thurston)
- ↑ இந்நூற்பாவிற்கு,'அரசர் இவ்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டோளுகளும் வரையப்படாது என்றவாறு"என்று பேராசிரியர் உறைகூறியதுங் காண்க.
- ↑ #ஆயுங்காலை என்றதனால், குடையுஞ் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க.
(உ-ம்)
“எறிந்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்”
(பாலைக்கலி.9)......இன்னும் 'ஆயுங்காலை' என்றதனான். ஓருகோலுடையார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும், பிறாண்டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது” (தொல். 610, பேரா. உரை)
- ↑ * தொல். பொருள். 74.
- ↑ “தொன்முது கடவுட் பின்னர் மேக” (மதுரைக். 41)
- ↑ பகவரைக் காணின் (திருவாய்.)
- ↑ இக்காலத்தும், 'His Holiness' என்று போப்பையும், 'His Grace' என்று அரசக் கண்காணியாரையும் மேனாட்டாரும் அழைத்து வருதல் தமிழக வழக்கத்துடன் ஒப்பிடத்தக்கது.
- ↑ *சில காரணங்களையிட்டு, இவர் பாரியைப் பாடியவரினின்றும் வேறானவராக எண்ணப்படுகிறார்.
- ↑ 1. பார்ப்பார்கை = பார்ப்பாரின் கையினின்று.
- ↑ *. புலையர் = வள்ளுவர்
- ↑ 1. திருமால்-விஷ்ணு;திருமாலியம்-வைஷ்ணவம்;திருமாலியர்-வைஷ்ணவர்.
- ↑ 2. வடகலையார் தென்கலையார் என்னும் இருசார் திருமாலியருள், இங்குக் குறிக்கப்பட்டவர் தென்கலையார்.
- ↑ 3. தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற ஒரேயொரு பார்ப்பனரும், காஞ்சி பரவத்து ராஜகோபாலாச்சாரியார் என்னும் தென்கலைத் திருமாலியரே.
- ↑ செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும்.
- ↑ 2. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 53
- ↑ History of the Nayaks of Madura, p. 257. ஒ, மொ .-4
- ↑ * ஒரு பொருட் பல சொற்கள் பருப்பொருளில் ஒன்றையே குறிப்பினும், நுண் பொருளில் வேறுபட்டவை என்பதை Hand book of the English Tongue என்னும் புத்தகத்தின் 25 ஆம் 26ஆம் பக்கங்களிலும், Hints on the Study of English என்னும் புத்த கத்தின் 49ஆம் 50 ஆம் பக்கங்களிலும் காண்க.
- ↑ அந்தகக்கவி வீரராகவர் சரித்திரம் காண்க.
- ↑ இங்கு கூறிய குயவன் அபார்ப்பனனேனும், 'வடமொழி—தென்மொழி'ப்போர் பார்ப்பனராலேயே உண்டானதாதலாலும் இக்காலத்திற்போன்றே அக்காலத்தும் இவ்விரு மொழிக்கும் இகல் இருந்ததென்று தெரிவித்ததற்கும், இச்செய்தி இங்குக்கூறப்பட்டது.
- ↑ 2.குறள்,30,110,133,184,259.
- ↑ 1.குறள். 1066
- ↑ 2.புறநானூறு. 183
- ↑ 4ம் புத்தகம் பக்.352