உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கோட்டுக்கு வெளியே/உண்மை உரைத்து…

விக்கிமூலம் இலிருந்து

5. உண்மை உரைத்து…

ந்தக் கிணற்றைச் சுற்றி ஏழெட்டுத் தென்னைமரங்கள் கோணல் மாணலாக நின்றன. சில குலைகளில் தேங்காய்கள் கீழே விழுந்து விடுபவைபோல் தொங்கிக் கொண்டிருந்தன. பச்சைத் தென்னை ஒலைகளுக்கிடையே செவ்விளனிக் காய்கள் காட்டு ஓணானைப்போல், பயமுறுத்தின. சில தேங்காய்கள் விழுந்து, கிணற்று நீரில் மிதந்தன.

ஒரு பக்கம் வாழைத்தோப்பு: இன்னொரு பக்கம் தக்காளிச் செடிகள். தக்காளிச் செடியில் ‘நாளைக்கோ மறுநாளோ பெரியவளாகப் போகிற சிறுமிகள் மாதிரி’ கன்னிக் காய்கள். பசும்பொன் நிறத்தில் இருந்து, சிவப்பு நிறமாக மாறும் ‘அடோலசன்ஸ்’ காய்களாக, பசுமை நிறத்தை செந்நிறம் விரட்டியடிக்கும் வேகத்தைக் காட்டுவதுபோல் காற்றில் ஆடின. கைக்குழந்தைகளை மார்பகத்தில் வைத்துப் பாலூட்டிக்கொண்டே, மார்பகத்தை மாராப்புச் சேலையால் மூடும் தாய்மார்களைப்போல, குலை தள்ளிய வாழைகள், அந்தக் குலைகளை, தன் இலைப்புடவையால் மறைத்தும், மறைக்காமலும் நிறைவுடன் நின்றன. வரப்புகளில், காவல் பூதங்கள்போல் நின்ற ஆமணக்குச் செடிகள். விளக்கெண்ணெய் தயாரிப்பதற்காக எடுக்கப்பட்ட கொட்ட முத்துக்களைப் பறிகொடுத்துவிட்டு, அமங்கலிப் பெண்கள்போல் காட்சியளித்தன. ஒரு தோட்டத்தில், மிளகாய்ச் செடிகள் இருந்தன. வேண்டியமட்டும் காய் காய்க்கும்போது, நீராலும் உரத்தாலும் நிறைவுடன் உண்ட அந்தச் செடிகள். இப்பொழுது உரமாகப் போகட்டும் என்று விட்டு வைக்கப்பட்டிருந்தன. நீரும் இல்லை. அவற்றை உண்ணும் ஆற்றலும் அவற்றிற்கில்லை. முழுநேரம் வயலில் உழைத்து முதியவனாகி, பின்னர் திண்ணையில் கேட்பாரற்றுக் கிடக்கும் கிழவர்களுக்கும், மங்கிப்போய் மண்ணோடு மண்ணாகக் கிடக்கும் அந்தச் செடிகளுக்கும். ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதுபோல் தோன்றியது. கீழே விழுந்து கிடந்த பழுப்புற்ற பனையோலைகள், அவர்களின் இறுதி முடிவை அறுதியிட்டுக் கூறுவதுபோல் தோன்றின.

மொத்தத்தில் அந்தத் தோட்டமே, ஒரு கிராமத்து மனிதனின் முதலையும் முடிவையும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது.

லோகு சிந்தனையில் இருந்து விடுபட்டவனாய், கண்களில் இருந்து தென்னை மரங்களையும், வாழை மரங்களையும் வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டு, கையில் வைத்திருந்த நோட்டில் நோட்டம் செலுத்தினான். கவிதை எழுதுவதற்காக, அங்கே அவன் வரவில்லை. கவிதை எழுதுபவர்களைவிட ஒருசில கவிதைகள் காட்டும் நிதி நெறிகள்படி வாழ்பவர்கள்தான் கீட்ஸைவிட, ஷெல்லியைவிட, கண்ணதாசனைவிட மிகப் பெரிய மனிதர்கள் என்று எண்ணுபவன் அவன். திருமண அழைப்பை எப்படி எழுதலாம் என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

அது, அவன் குடும்பத்துத் தோட்டம் அல்ல. அவன் அய்யா, அதை, கட்டுக் குத்தகைக்குப் பயிர் வைக்கிறார். அதுவும், இந்த நடப்பு வெள்ளாமை முடிந்ததும் முடிந்துவிடும். அவனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது. தோட்டத்தின் உரிமையாளர் தன் மகளை அவன் கட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். அவனும் சம்மதித்திருப்பான். ஆனால் பெண், ‘ஒரு மாதிரி நடந்து கொண்டவள்’ என்று பலர் சொல்லிவிட்டார்கள். ஒருவேளை திருமணம் ஆனபிறகு, விஷயம் தெரிந்திருந்தால், குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டிருக்க மாட்டான். ஆனால் கேள்விப்பட்ட பிறகு? ஆற்றுத் தண்ணீர் பல இடங்களில் அசுத்தப்பட்டிருக்கும் என்று தெரிந்தும் குளிக்கிறார்கள். அதே அசுத்தம், குளிக்கிற இடத்தில் இருந்தால் லோகு கட்டிக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்த தோட்டப் பிரபு, தன் தோட்டத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்லி விட்டார். “நீ என் மவள வேண்டாங்ற. அதனால, என் நிலமும் உனக்கு வாண்டாம்” என்று அவர் நேரடியாகச் சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்லாமல் “பிள்ளைய பெரியதா ஆயிட்டு. நாங்களே பயிர் வைக்கப்போறோம்” என்று சொல்லிவிட்டார்.

லோகு பி.யூ.சி.யில், விஞ்ஞானத்தில் ‘ஏ’ பிளஸ் வாங்கியிருந்தான். இதர பாடங்களிலும் நல்ல மார்க். ஹை பஸ்ட்கிளாஸ்: எம்.பி.பி.எஸ்ஸுக்கு விண்ணப்பித்தான். இவ்வளவுக்கும். பேக்வார்ட் கம்யூனிட்டி கிடைச்சதா? போகட்டும். டெட்டி கலெக்டர் பரீட்சை எழுதித் தேறினான். ரிசல்ட் முன்கூட்டியே அதாவது பரீட்சைக்கு முன்கூட்டியே அடிபட்ட பெயர்கள்தான் லிஸ்டில் வந்தன.

ஒழியட்டும். இன்னார் இன்னாரின் மருமகனாகப் போகிறவர். ஆகையால் அவர் அதிகாரியாகணும் என்று பகிரங்கமாகச் சொல்லியிருந்தால் பிரச்சினையே இருக்காது. ஆனால் இந்த அப்பட்டமான அயோக்கியத்தனத்தை, யோக்கியப்படுத்துவதற்காக, பரீட்சை என்று ஒன்று வைப்பதும், ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கி, அவர்களை ஏமாளிகளாக்கி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு பதவிகள் கொடுப்பதையுந்தான் அவனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியவில்லை. அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாமிகள், தங்களின் சிபார்சு காம்ப்ளெக்ஸை மறைப்பதற்காக ‘தாம் தூம்’ என்று குதிப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இத்தனையும் நடந்தாலும் நம் நாடு ஜனநாயகத்தின் காவலன் என்கிறார்கள். இது நேஷனல் ஜனநாயகம்; தீவிரமாகச் சிந்தித்தால் நாகரிகமான பிரபுத்துவம்.

திறமைக்கோ நேர்மைக்கோ மதிப்பில்லை என்று நினைத்து மனம் வெந்து போனவன் லோகு. அதற்காக, ஒருசில வசதிபடைத்த பையன்களைப்போல் ஹிப்பி முடியை வைத்துக் கொண்டு மிகப்பெரிய ‘இன்டெலக்சுவலாக’க் காட்டுவதை அவன் வெறுத்தான். அப்படி இருப்பவர்கள் ‘எக்லிபியனிஸ்ட்’ என்பது அவன் கருத்து.

திருமணத்திலும் அவன் ஒரு கொள்கை வைத்திருந்தான். சமுதாயப் பிரச்சினைகளை அலசிப்பார்ப்பதற்கு, தனக்கு வாய்ப்பவள் பட்டதாரிப் பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பல பட்டதாரிப் பெண்களோடு பழகியபின், படிப்பிற்கும் சமுதாயப் பிரக்ளுைக்கும் சம்பந்தம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த பட்ட குவாலிபிகேஷனே அந்தப் பிரச்சினைக்கு ஒரு டிஸ்குவாலிபிகேஷன் மாதிரியும் அவனுக்குத் தென்பட்டது.

ஆகையால், அய்யா பார்க்கிற பெண்ணைக் கட்டிக்கொள்ள அவன் சம்மதித்தான். பெண்ணின் படிப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், எஸ்.எஸ்.எல்.சியாவது இருக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தந்தை “மாரிமுத்துநாடார் முப்பதாயிரம் ரொக்கமாத்தாரேங்கறார். பொண்ணுதான் படிக்கல. நமக்கும் நாலஞ்சி வயசுப் பொண்ணுங்க இருக்கு” என்று இழுத்தபோது, அதுவும் ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்று, இதர பிள்ளைகள் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காகவே, முதல் பிள்ளையை, அவர்களின் சார்பாகக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தந்தையின் பேச்சுக்கு மறுபேச்சுப் பேச அவன் விரும்பவில்லை. வரதட்சணை வாங்கக்கூடாது என்றும் அவன் வாதாடவில்லை. பெண்ணுக்கு, சட்டத்தில் இருக்கும் சொத்துரிமை வீடுகளில் அமலாகும் வரைக்கும், அப்படி அமலாக வேண்டும் என்று வற்புறுத்தப்படாதவரைக்கும், வரதட்சணை ஒழிப்பு இயக்கங்களும், ரேடியோப் பேச்சுக்களும், டெலிவிஷன் பேட்டிகளும். சம்பந்தப்பட்டவர்களின் ஈகோவை திருப்திப்படுத்தும் ‘பேஷன்’ என்றும் அவன் உறுதியாக நம்பினான். பெண்ணுக்குச் சேரவேண்டிய சட்டப்படியான சொத்துக்குக் கொடுக்கப்படும் நாகரிகமான நஷ்ட ஈடுதான் வரதட்சணை என்று தப்பாகவோ சரியாகவோ நினைத்தான்.

கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் முதன் முதலாகப் படிப்பவன் ஒரு ஆட்டுக்கிடா மாதிரி ஆட்டுக்கிடாவை, மற்றவற்றைவிடச் செல்லமாக வளர்த்து, அதன் தலையில் பூச்சூடி, கோவிலில் வெட்டுவதுமாதிரிதான், ஏழைப் பெற்றோர்கள். ஒரு பையனையாவது படிக்க வைத்து, நல்ல உணவளித்து பட்டம் என்ற பூவைத் தலையில் சூடி, பணக்காரவீட்டுக் கோவிலில் பலிகிடாவாக்குகிறார்கள். பணக்காரச்சாமி, கிடாக் கறியை, வளர்த்தவனுக்குக் கொடுக்காமல் தானே சாப்பிடுவதும் உண்டு. என்றாலும் ஏழைப்பையன்கள் படிப்பதே. கல்யாண மார்க்கெட்டில் ரேட்டைக் கூட்டத்தான். இது அநியாயம் என்றாலும், இதே அநியாயம், பல ஏழ்மை அநியாயங்களை ஒழித்து விடுகிறது என்பதும் உண்மை.

குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லோகனுடையது. ‘எனக்கு நான் பாக்குற பொண்ணுதான் வேணும்’ என்று சொல்லி, இஷ்டப்படி கல்யாணம் செய்துகொண்டால், அதனால் பணம் கிடைக்காமல் போனால், சம்பளத்தால், அவன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது. கிம்பளம் வாங்க வேண்டும். இது அவனுக்குப் பிடிக்காதது. ஆகையால் அய்யாவுக்கு வருமானம் கிடைக்கும் இடத்தில் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டான். என்றாலும், அதற்குக் குடும்பப் பொறுப்பு மட்டும் காரணமல்ல. எந்த வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், அதுவும் ஒரு ஜீவன்தான் என்று நினைப்பவன். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல. அதே சமயம் அவன் முற்றும் துறந்த முனியும் அல்ல. அதனால்தான் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினான்.

பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பு, ஏதோ ஒரு பெரிய தியாகம் செய்வது போல் நினைத்திருந்தான். ஆனால் சரோஜாவைப் பார்த்தபிறகு, யந்திரகதியில் செயல்பட்ட இதயத்தில் தென்றல் வீசியது. அவன் பார்த்த பார்வை - மருட்சியோ, அகந்தையோ இல்லாத கண்கள், பாசாங்கோ பண்பாட்டுக் குறைவோ இல்லாத நடை - அத்தனையும் அவனைக் கவர்ந்துவிட்டன. இந்தச் சின்ன வயதில் வர்த்தகக் கலாசாரம் கிராமங்களுக்கும் பரவிய சூழலில், இப்படி ஒரு பெண் இருக்கிறாள் என்றால், அது பழக்க தோஷம்; அவள்கூட வந்த கட்டையான அந்த நடுத்தர வயதுப் பெண்மணிதான் காரணம் என்று அவன் அவளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டான். வாழையின் வாளிப்போடு ஆமணக்குச் செடி நிறத்தில் அளவான உயரத்தில் அமைந்த அவள், அவனுக்கு அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தாள். நாட்டுக்கட்டை மேனியில் பருவம் 'சன்மைக்கா' போல் பளபளக்க, படிக்காதவள் என்று பார்த்தவுடன் சொல்ல முடியாத நளினத்தையும், அன்பு செலுத்துவதற்காகவே வாழ்பவள் போலிருந்த சிரித்த முகத்தையும் கம்பீரமான, அதே சமயம் பெண்மை குறையாத பார்வையையும் அவன் தனக்குள்ளேயே இப்போதும் பார்த்துக் கொண்டு ரசித்தான்.

சிந்தனையில் ஈடுபட முடியாமலும், அதேசமயம், அதிலிருந்து விடுபட முடியாமலும், அழைப்பிதழில் எந்த ஜிகினாவை எங்கே வைப்பது என்று புரியாமலும், லேசாகத் தலைநிமிர்ந்த லோகு. வேகமாகத் தலையைத் தூக்கி, தோட்டத்துப்பக்கமாக ஊருக்குப்போகும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்தான். அதில் வந்து கொண்டிருந்த பெண்ணின் மிடுக்கான நடையும், ஏதோ எங்கேயோ ரயிலைப் பிடிக்க ஓடுபவள் போல் சென்ற வேகமும், அவனை லேசாகப் புருவத்தைச் சுழிக்க வைத்தன. அந்த உருவம் நெருங்க நெருங்க, அவளை எங்கேயோ பார்த்தது போல் தோன்றியது – யார்? குட்டாம்பட்டிப் பெண் சரோஜா மாதிரி இருக்கே அவள்தானா? அவள் இங்கே ஏன் வாராள்...?

லோகு, அவசர அவசரமாக வழிப்பாதைக்கு ஓடிவிட்டு, ‘மூச்சு மூச்’சென்று இளைக்க, சற்றுத் தொலைவில் போய்க் கொண்டிருந்தவளை முந்திக்கொண்டு. வழிமறிப்பவன்போல நின்றான். உலகம்மையும் அவனை , அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. அவனைப் பார்த்தவுடன், ஏனோ அழவேண்டும் போலிருந்தது. அவனைப் பார்ப்பதும், சற்றுத் தொலைவில் இருந்த ஊரைப் பார்ப்பதுமாக இருந்தாள். வாயடைத்துப்போய் நின்ற லோகுதான் பேச்சைத் துவக்கினான்.

“நீ, நீங்க குட்டாம்பட்டி சரோஜாதானே?”

அவள் பேசாமல், அவனையே மெளனமாகப் பார்த்தாள்.

“சொல்லுங்க, நீங்க மாரிமுத்து நாடார் மவள் சரோஜாவா? சொல்லுங்க. எனக்கு ஒன்னம் ஒடமாட்டங்கு. பிளிஸ்.”

பிரிக்கப்பட விரும்பாததுபோல் ஒட்டிக்கிடந்த உதடுகளை வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு அவள் சொன்னாள்:

“என் பேரு சரோசா இல்ல, உலகம்மை.”

“மாரிமுத்து நாடார் மகள்தான?”

“இல்லே, வேலக்காரி.”

“வேலக்காரியா? நீதான பச்சை பார்டர்ல சிவப்புப் புடவை கட்டிக்கிட்டு பிள்ளையார் கோவிலுக்கு வந்தது. நான் யார்னு தெரியுதா?”

“தெரியுது, சரோசாக்காவுக்கு மாப்பிள்ள.”

“ஒன் கூட வயசான பெண் வந்தாளே அவள் பேருதான் சரோஜாவா?”

அவள் தலையாட்டினாள். அவன் பித்துப்பிடித்தவன்போல் சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். அவன் இதுவரை ரசித்துக்கொண்டிருந்த பிடிபடாத அந்தத் தோட்டத்தின் சூட்சுமம் போல், புரிந்தது போலவும், புரியாதது போலவும் அவன் தன் தலையை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஆட்டிக் கொண்டான். சிறிது நேரம் அந்த மெளனத்தில் நீர் உறைந்துவிடலாம். நெருப்பு அணைந்து விடலாம்.

"எனக்கு ஒண்ணுமே புரியல. நான் ஒன்ன பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தேன். நீ என்னடான்னா ... சரி, இப்ப எங்க போற?"

"உங்க வீட்டுக்குத்தான்."

"எங்க வீட்டுக்கா? எதுக்கு?"

அவள் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்குபவள் போல் யோசித்தாள். 'நமக்கேன் வம்பு. உங்ககிட்ட கல்யாண வேல எதுவும் இருந்தா, செய்றதுக்காக மாரிமுத்து நாடார் அனுப்பினார்னு சொல்லிவிட்டுப் போய்விடலாமா?' என்று கூட நினைத்தாள். ஆனால் அவன் முகத்தில் தெரிந்த இனந்தெரியாத பீதியைப் பார்த்ததும், அவன் ஒரு குழந்தையிடம் பேசுவதுபோல் தன்னிடம் பேசிய தோரணையைப் பார்த்ததும், அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை .

"என்னோட அய்யா பனைபேறி. அம்மா சின்ன வயசுலயே செத்துட்டா. கஷ்டப்பட்ட குடும்பம். அய்யாவுக்கு கால் விளங்கல."

திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டு, உலகம்மை தன்னையே திட்டிக் கொண்டாள். 'அடி. சண்டாளி! எதுக்கு வந்தியோ அத சொல்றத விட்டுப்புட்டு, மூணாவது மனுஷங்கிட்ட ஒன்னப்பத்தி ஏண்டி பேசுற? அவருகிட்ட சொல்லி ஒனக்கு என்னத்த ஆவப்போவது? அவரு என்ன ஒன் மாமனா மச்சானா?'

சிறிது நேரம் திணறிக்கொண்டிருந்த உலகம்மை, அவன் தன்னையே ஆச்சரியமாகவும், ஒருவித நடுக்கத்துடனும் பார்ப்பதை உணர்ந்ததும் மீண்டும் பேசினாள்.

"மாரிமுத்து மாமா என்ன சரோசாக்காவோட கோவிலுக்குப் போகச் சொல்லும்போது சும்மா தொணைக்குப் போகச் சொன்னாங்கன்னு நெனச்சேன். அப்புறந்தான் என்ன பொண்ணுன்னு ஒங்கள நம்பவச்சு சரோசாக்கால ஒங்களுக்குக் கொடுக்கறதுக்காக 'கவுல்' பண்ணுனார்னு தெரிஞ்சுது. என் உடம்பக் காட்டி ஒருவர ஏமாத்தறது எனக்குப் பிடிக்கல, நெனச்சிப் பாத்தேன். நீங்களே எங்க சரோசாக்கால. விஷயத்தைக் கேள்விப்பட்டா? நிச்சயமா அது தெரிஞ்சுடும். அடிச்சி விரட்டலாம். அதுல அக்கா செத்துப்போகலாம். இல்லாட்டி., நீங்களே திருமலபுரத்துப் பையன் மாதிரி விஷத்தக் குடிச்சிட்டு..."

அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை . குரல் தழுதழுத்தது. கண்ணீர், இமைகளில் அணைக்கட்டு நீர்போல் தேங்கி நின்றது. அவன் இறந்து போவான் என்கிற வெறும் யூகத்தைத் தாங்க முடியாமலோ அல்லது சரோசாக்கா சாவதைப் பொறுக்க முடியாமலோ அழுதாள். 5 .4. எதுக்காக அழுதோம் என்பது அவளுக்கே தெரியாதபோது, லோகுவுக்குச் சரியாகத் தெரிந்திருக்க முடியாது. இப்போது கிட்டத்தட்ட தொட்டுவிடும் தூரத்திற்கு அவன் இடைவெளியைக் குறைத்துக்கொண்டு. அவளை விழித்த கண் விழித்தபடி, திறந்தவாய் திறந்தபடி பார்த்தான். அவள் விம்மலுக்கிடையே பேசினாள்.

“நாலையும் யோசித்துப் பாத்தேன். இதனால ஊர்லயும் ஒரு மொள்ள மாறிப்பய என்னப் பாத்துக் கேக்கக்கூடாத கேள்வியக் கேட்டுட்டான். அதப்பத்தி எனக்குக் கவல இல்ல. ஆனால் பழி பாவம் வந்து அதுக்கு நான் காரணமாவக் கூடாதுன்னுதான் நடந்ததச் சொல்ல வந்தேன். அதோட இன்னொண்ணு. எங்க சரோசாக்கா அழகு இல்லாம இருக்கத மறைக்க விரும்பல. அழகு முக்கியமா? அஞ்சு விரலும் ஒண்ணா இருக்குமா? எங்க அக்கா குணத்துக்காகவே நீங்க கட்டலாம். யாரையும் நீன்னுகூடச் சொல்லமாட்டா. குனிஞ்ச தல நிமுர மாட்டா. ஒரு ஈ காக்கா அடிபடக்கூடச் சம்மதிக்க மாட்டா. லட்சக்கணக்கா சொத்து இருந்தாலும் கொஞ்சங்கூட மண்டக்கெனம் கெடையாது. அவளமாதிரி ஒருத்தி இனிமதான் பிறக்கணும். அவள கட்டுறதுக்கு நீங்க குடுத்து வச்சிருக்கணும். ஒங்கமேல உயிரையே வச்சிருக்கா.”

அவன், அவளைப் பார்த்த விதத்தில் பயந்து போனவள் போல், அவள் பேச்சை நிறுத்தி. சிறிது விலகி நின்று கொண்டாள். அதிகப் பிரசங்கித்தனமா படிச்சவன்கிட்ட பட்டிக்காட்டுத்தனமா பேசிட்டோமோன்னுகூடச் சிந்தித்தாள்.

அவனோ. அவளைப் பார்க்கவில்லை. ஆகாயத்தையே வெறிக்கப் பார்த்துக்கொண்டு நின்றான். தீமைக்கு மட்டும் சூழ்ச்சி சொந்தமல்ல. நன்மைகூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தன்னைத் தீமைகளால் அலங்கரித்துக்கொள்ள விரும்புவதுபோல் அவனுக்குத் தோன்றியது. ஆயிரம் காலத்துப் பயிர் என்று போற்றப்படும் கல்யாணத்தில்கூட, மனித சூழ்ச்சி எவ்வளவு கீழ்த்தரமாகப் போகிறது கோழிக் குஞ்சை நக விரல்களுக்குள் வைத்துக்கொண்டு, மரண வேதனையில் அவதிப்படும் அந்தக் குஞ்சைப்பற்றிக் கவலைப்படாமல் பறக்கும் பருந்து, தன் குஞ்சுக்கு அதை உணவாகக் கொடுக்க வேண்டும் என்கிற தாய்மையில்தான் போகிறது. ஆனால் அந்தத் தாய்மையைக் காட்டிக்கொள்ள அது பேய்மையாகிறது. தாய்மையை பாராட்டுவதா? பேய்மையை நோவதா?

லோகு தன்னை ஒரு கோழிக்குஞ்சாக நினைத்துக் கொண்டான். சிறிது சிந்தனைக்குப்பின் உயரப் பறக்கும் எமப் பருந்தின் காலில் சிக்கிக்கொண்டு தவிக்கும் குஞ்சைக் காக்கும் வகையறியாது. பறக்கும் சிறகில்லாது. நின்ற இடத்திலேயே சுற்றிக்கொண்டு வரும் தாய்க்கோழியாக, உலகம்மையைக் கற்பனை செய்து பார்த்தான். அந்த எண்ணம் தவறு என்பதுபோல், உலகம்மை பேசினாள். அவன் பதில் பேசுவான் என்று கால்கடுக்கக் காத்து நின்றவள், அவன் பேசாமலிருப்பதால் பயந்தவள் போலவும், அப்படிப் பேசிவிட்டாலும் பயப்படுபவள் போலவும், தான் சொல்வதையே கேட்கமுடியாத செவிடர்போல் பேசினாள்;

"அப்ப நான் வரட்டுமா?"

லோகு ஆகாயத்திலிருந்து கண்களை விலக்கிப் பூமியைப் பார்த்தான். பூமியில் படிந்த அவள் கால்களைப் பார்த்தான். பின்னர், அம்மாவையே அறியாமல், இடைப்பட்ட வயதில் ஒருத்தியை 'இவள் தான் ஒன் அம்மா' என்று சொன்னால் அவளை நெருங்கி மடியில் புரள முடியாமலும், அதே சமயம் நெருங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியாமலும் தவிக்கும் எட்டு வயதுச் சிறுவனைப்போல், அவளைத் தவிப்போடு பார்த்தான். அவன் தவிப்பைவிட அவன் காட்டிய மௌனத்தை, தான் சொன்னதை அவன் ஏற்றுக்கொண்டான் என்ற தன்னம்பிக்கையில் அவள் பேசினாள்:

"எங்க சரோசாக்காவ நோகாம காப்பாத்தணும். அவங்க மாதிரி லட்சத்துல ஒருவர் கெடைக்கது அபூர்வம். ஒரு சோத்துக்கு ஒரு அரிசி பதம் மாதிரி சொல்றேன். கேளுங்க. அக்காவோட வாறதுக்காக அவ சீலையைக் கட்டிக்கிட்டு நான் வந்தேன். வூட்டுக்கு வந்தவுடனேயே அவா அம்மா சீலய அவுக்கச் சொன்னா, அதுக்கு அக்கா என்ன சொன்னாத் தெரியுமா? ‘அந்த சீலயே அவா கட்டிபிருக்காலதான் நல்லா இருக்கு. எனக்குத்தான் ஏழட்டுச் சீல இருக்க. இத, அவளே வச்சிக்கிடட்டு முன்னு சொன்னா. வேற யாரும் இப்படிச் சொல்லுவாவுளா? ராசா மாதிரி மாப்பிள்ள கெடச்சதுல அக்காவுக்கு சந்தோஷம், நீங்க குடுத்துவச்சவிய. அவளும் குடுத்துவச்சவதான். ஒங்களமாதிரி ஒருவர் இந்த உலகத்துல்லே இருக்க முடியுமா? நான் வரட்டுமா?"

அவன் பேசாமல், அவளையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏழ்மையோடு மட்டுமில்லாமல் தன் இதயத்தோடும் போராடுவதுபோல் தோன்றிய அவளையே, அவன் ஊடுருவிப் பார்த்தான், அவளால். அந்தப் பார்வையைத் தட்டவும் முடியவில்லை , தாளவும் முடியவில்லை .

சிறிதுநேரம் அவனையே பார்த்துக்கொண்டு நின்றவள், இறுதியில் 'வரட்டுமா?' என்று சொல்லாமல் மெள்ள நடந்தாள். அவள் அகன்றபின், அந்த வெறுமையில்தான் அவள் அருமையை அறிந்தவன்போல், லோகு, அவளைக் கைதட்டிக் கூப்பிட்டான்.

“எனக்கு நேரமாவுது. எதுக்கு கூப்பிட்டியர்”

“ஒரு இளநி பறிச்சித் தாரேன். சாப்பிட்டுட்டுப் போ.”

“வாண்டாம்,”

“எனக்குத் தென்னமரம் ஏறத் தெரியும். பனை மரத்துல கூட ஏறுவேன். ஒரே செகண்ட். இளனி சாப்பிட்டுப்போ.”

அவளுக்குச் சிரிப்புக்கூட வந்தது.

“கல்யாணமாவட்டும். சரோசாக்கா, நீங்க, நான் மூணு பேருமா தோட்டத்துக்கு வந்து தேங்காய் சாப்பிடலாம்.”

“அப்படின்னா ஒனக்கு இளநியே கிடைக்காது.”

“நீங்க சொல்றதப் பாத்தா...”

“நான், நீதான் எனக்கு வரப்போறவள்னு சந்தோஷமா நெனச்சேன். மூன்று நாளாய்த் தூங்கக்கூட இல்ல. ஒன் முகத்தத்தவிர எதுவுமே கண்ணுக்குத் தெரியாமக் கிடந்தேன். நீ என்னடான்னா என் கண்ணத் திறந்துட்ட. ஆனால் கண்ணுதான் திறந்திருக்கே தவிர பார்வைதான் தெரியல.”

“நீங்க பேசுறதப் பாத்தா...”

“ஒன்ன என்னோட மெட்ராசுக்குக் கூட்டிக்கிட்டுப் போகணும். மெரீனாவுல சந்தோஷமா பேசிக்கிட்டு இருக்கணும். பாம்புப் பண்ணையப் பாக்கணும். மிருகக் காட்சிசாலைக்குப் போய்ப் பொறிகடலைய வாங்கிக் குடுத்திட்டு, அத நீ குரங்குக்குட்டிக்கிட்ட போடணும். அது சாப்பிடுகிற சந்தோஷத்துல நீசந்தோஷப்படுறத நான் பார்க்கணுமுன்னு நெனச்சேன். ஆனா...”

உலகம்மை நாணத்தால் ஒருகணம் தலைகுனிந்து கொண்டாள். பிறகு அப்படித் தலைகுனிந்ததற்குத் தலைகுனிந்தவள் போல் அடித்துப் பேசினாள் :

“நீங்க என்னவெல்லாமோ பேசுறிய. எனக்கு ஒண்னும் நீங்க நெனக்கிறது மாதிரி ஆசை கிடையாது. விரலுக்குத்தக்க வீக்கமுன்னு தெரிஞ்சவா நான்.”

"நானும் நீ அப்டி நினைக்கதா சொல்லல. உன்னக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாயே சொல்லலியே? என்னமோ தெரியல. பைத்தியம் பிடிச்சவன் மாதிரி உளறுறேன்."

உலகம்மை லேசாகத் துணுக்குற்றாள். அவன் பேசிய தோரணை, ஏனோ அவளை ஒரு வினாடி வாட்டியது.

"அப்படின்னா சரோசாக்கால கட்டிக்க மாட்டியளா?"

"அப்படியும் சொல்ல முடியாது. இப்படியும் சொல்ல முடியாது, இது யோசிக்க வேண்டிய: பிரச்சினை. அந்தப் பொண்ண நினைச்சாப் பரிதாபமாயும் இருக்கு. கோழிக்குஞ்சை பிடிச்சுக்கிட்டுப் போற பருந்து கதை இது. பருந்தோட கொடுமைய நினைச்சி வருத்தப்படுறதா, இல்ல உணவுக்காகக் காத்துக்கிடக்கற பருந்துக் குஞ்சுக்காகப் பருந்தப் பாராட்டுறதா என்கிறத இப்பவே சொல்ல முடியாது. பருந்த விரட்டி குஞ்சைக் காப்பாத்துறதா. பருந்துக் குஞ்சை நினைச்சி அப்படியே நடக்கிறத, நடக்கிறபடி விடுறதா என்கிறத உடனே சொல்ல முடியுமா?"

"ஒண்ணுமட்டும் சொல்லுவேன். எங்க சரோசாக்காகூட ஒரு நிமிஷம் பழகினா போதும். ஒங்களுக்குப் பிடிச்சிடும். அவளுக்கும் ஒங்களுக்கும் கல்யாணம் நடக்கும்போது அவளவிட சந்தோஷப்படுகிறவா ஒருத்தி இருக்க முடியுமுன்னா அது நான்தான், சரி, நான் வாரேன்."

"இளநி?"

"சாப்புட்டா சரோசாக்காவோடதான். வாறேன்."

உலகம்மை, மீண்டும் அவனைவிட்டு விலகி நடந்தாள். அவன், கூப்பிடுவான் என்று எதிர்பார்த்தவள் போலவும், ' அப்படிக் கூப்பிடும்போது, அவன் குரல் கேட்க முடியாத தூரத்திற்குப் போக விரும்பாதவள் போலவும், அடிமேல் அடி வைத்து நடந்தாள். அவன் கூப்பிடவில்லை . அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. திரும்பிப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிந்ததும், ஏதோ ஒரு சுகம் தெரிந்தது. எதையோ நினைத்துக் கொண்டவள் போல், அவனிடம் ஓடி வந்தாள்.

"ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நான் இங்க வந்தத யாருக்கிட்டயும் சொல்லிடாதிய. தெரிஞ்சா மாரிமுத்து மாமா என்ன உ.யிரோட எரிச்சிடுவாரு. அதவிட சரோசாக்கா என்ன தப்பா நெனச்சுப்பா. உயிரோட எரியக்கூடத் தயாரு. இது யாருக்கும் பிரயோஜனமில்லாத கட்டை. ஆனா சரோசாக்கா என்னைத் தப்பா நெனச்சா என்னால தாங்க முடியாது. கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க இத அவாகிட்ட பேசப்படாது. இதுக்குத்தான் காலையில நாலு மணிக்கே எழுந்திருச்சி யாருக்கும் தெரியாம ஓடியாந்தேன். நான் வாறேன்.”

உலகம்மை அவனைத் திரும்பிப் பார்க்காமலே, வேகமாக நடந்தாள். யாருக்கும் தெரியாமல், அவனிடம் மட்டும் ரகசியம் பேசியது ஒருவித இன்பத்தை, தன்னை மீறி, தனக்களிப்பதை உணர்ந்த உலகம்மை, சரோஜாவின் நல்ல குணங்களையும், அவள் புடவை கொடுக்க முன்வந்ததையும் நினைத்துக்கொண்டே, ‘சரோசாக்கா நல்லவா. நல்லவா’ என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டே நடந்தாள். என்றாலும் ஒரே ஒரு சமயம், அவளால், திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவள் திரும்பிப் பார்த்தபோது, அவன் மீண்டும் தோட்டத்திற்குள் திரும்பிக் கொண்டிருந்தான். அவள் உடலெல்லாம் கரிப்பதுபோல், மேற்கொண்டு நடக்க முடியாத அளவுக்குக் கனத்ததுபோல் அவளுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தது போன்ற உணர்வுடன், அவன் திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்துடன், அந்த எண்ணத்திற்கு வெட்கப்பட்டு தன்னை வெறுப்பவள் போலவும், ஒரு தடவை காறி உமிழ்ந்துவிட்டு அவள் நடந்து கொண்டிருந்தாள்.

தோட்டத்திற்குப் போய் அங்கே குவிந்து கிடந்த சரலில் ஏறி நின்றுகொண்டு தன்னையே அவன் பார்த்துக்கொண்டிருப்பது தெரியாமல், திரும்பிப் பாராமலே அவள் நடந்தாள்.

ஆனால் பீடி ஏஜெண்ட் ராமசாமி திரும்பிப் பார்க்காமல் போகவில்லை. குட்டாம்பட்டிக்கு பீடி இலை வராததால், சட்டாம் பட்டிக்காவது வந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த அவன், உலகம்மையைப்போல் இருக்கே என்று நினைத்தவன், அரை பிரேக் போட்டுக்கொண்டு. பெடலை மிதிக்காமல் மெள்ளப் போனான். பிறகு ஒரு பனைமரத்தடியில் ‘ஒதுங்குபவன் போல்’ பாவலா செய்துகொண்டு நின்றவன், இப்போதுதான் சைக்கிளை உருட்டிக்கொண்டு. பெடலில் காலை வைத்தான்.