உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கோட்டுக்கு வெளியே/சதியினைப் புரிந்து…

விக்கிமூலம் இலிருந்து
537759ஒரு கோட்டுக்கு வெளியே — சதியினைப் புரிந்து…சு. சமுத்திரம்

4. சதியினைப் புரிந்து…

லவேச நாடார், லேசுப்பட்டவரல்ல; எவரையும் கைநீட்டி அடித்து விடுவார். அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அனைத்தையும், ஆபாசம் என்று தாராளமாகச் சொல்லலாம். இதுவரை, பலரை அவர் அடித்து, அவமானப் படுத்தியிருந்தாலும், இன்னும் அவர் அடிபடவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே, அற்பக் காரணத்துக்கும், அவர் கைநீட்டி விடுவதால், ஊரில் அவரை ‘நொட்டுக் கையன்' என்பார்கள். 'கோபம் இருக்கும் இடத்தில், குணம் இருக்கும்' என்பார்கள். ஆனால் இவரோ கோபம் ஒன்றை மட்டுமே குணமாகக் கொண்டவர். மச்சான் மாரிமுத்து நாடாரையே ஒரு தடவை அடிக்கப் போய்விட்டார். மூன்று வருடங்களுக்கு முன்புவரை. மனைவியை "ஒங்கண்ணங்கிட்ட போயி நகப் பாக்கிய வாங்கிட்டு வா, ஆயிரம் ரூபா கோ .3, சுருள்னு பேசி, முடிச்சி மாறி, ஐநூறு ரூபாதான் தந்தான். மீதி ஐநூற அப்பவ பேங்கில போட்டிருந்தா இந்நேரம் பத்தாயிரம் வந்துருக்கும். நகப் பாக்கியையும் சுருள் பாக்கியையும் வட்டியு முதலுமா வாங்கிட்டுவா" என்று அடித்து அனுப்பியவர். போன வருஷமும் பெண்டாட்டியை அடிக்கப்போகும் போது, அவரது இரண்டாவது மகன் துளசிங்கம், "அம்மயத் தொட்டா கையி ரெண்டா போயிடும். அடியும் பாக்கலாமுன்னு அரிவாள்மணை ஒன்றை வைத்துக்கொண்டு சவாலிட்டான். அசந்துபோன பலவேசம், அதிலிருந்து மனைவியுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார். 'பேசினால் திட்ட வேண்டியது வரும்; திட்டுனா, தட்ட வேண்டியது இருக்கும்; தட்டினா தோளுல எடுத்து வளத்த பயமவன் அருவாமணையை எடுப்பேங்றான். காலம் கெட்டுப் போச்சி.'

கைச் சவடாலைக் குறைத்துக்கொண்ட பலவேசம் வாய்ச் சவடாலை அதிகமாக்கினார். மச்சினன் தரவேண்டிய நகைப் பாக்கிக்கும். சுருள் பாக்கிக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக ஊரில் பேசினார். மாரிமுத்து நாடார் 'கண்டுக்க வில்லை . போதாக்குறைக்கு "மாப்பிள்ள எங்க போயி முட்டணுமோ அங்க போயி முட்டட்டும்" என்று கோள் சொல்லிகளிடமும் தெரியப்படுத்தினார். இதை, பலவேசம் தன் தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக நினைத் தார். பெண்களுக்குச் சொத்துரிமை உண்டென்றும், பாகத்தைக் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்போவதாகவும் சொன்னார். மாரிமுத்து மச்சான் பனங்காட்டு நரி. போடான்னார். அதே -மயம் தங்கச்சிக்கு, தென்காசி . அல்வாவை வாங்கிக் கொடுத்தார். பொறுக்க முடியாத பலவேசம், தென்காசியில் போணியாகாத ஒரு வக்கீலைப் பார்த்தார். அவர் மிஸ்ஸஸ் பலவேசம்தான் கையெழுத்துப் போட வேண்டும் என்று ஒரு தாளை நீட்டினார். மனைவியிடம் பேசுவதை நிறுத்திய பலவேசம், ஒருநாள் மூத்த மகனிடம் பேசும் சாக்கில் "ஏல தங்கப்பழம், ஒன் மாமன் சொத்துல ஒம்மைக்கு உரிம இருக்கு. இதுல கையெழுத்துப் போடச் சொல்லுல. தேவடியா மவனை கோர்ட்டுக்கு இழுப்போம்" என்றார்.

அவர் மனைவிக்காரி ஒருவேளை கையெழுத்துப் போட்டிருப்பாள். அண்ணன் பொண்டாட்டி அவஸ்தப்படணுங்கறதுக்காக, ஒருவேளை போட்டிருக்கலாம். ஆனால், அண்ணனை தேவடியாள் மவன் என்று புருஷன்காரன் சொன்னால், இவளும் தேவடியாள் மவள்தானே. நேராகவே. அந்தப் பூணிக்குருவியைப் பார்த்து "ஓமக்கு மூள ஏன் இப்டி கெட்டுப் போவுது? பாரான் சொத்துக்கு ஏன் இப்டி நாய் மாதிரி அலையணும்" என்றாள். அவளுக்குத் திருப்தி. புருஷனிடம் பேசாமல் போய்விட்டதே என்று தவித்த நெடுநாள் ஏக்கம் தீர்ந்துவிட்டது. “ஏய்” என்று யாராவது கூப்பிட்டால், அதை “நாய்” என்று அர்த்தப்படுத்திக் கொள்ளும் பலவேசம் இப்போது அந்த ஒரு மாதிரி வார்த்தையைக் கேட்டதும் “அடி தேவடியா” என்று சொல்லிக் கொண்டு, சாட்டைக் கம்பை எடுக்கப் போனவர், வாயடைத்துப் போய் நின்றார். நடுலமகன் துளசிங்கம், அப்போதுதான் வீட்டுக்குள் வந்தான். அரிவாள்மணையும் அங்கேதான் கிடக்கு.

வீட்டுக்குள் செல்வாக்குக் குறைவதை ஈடுகட்டும் வகையில், பலவேசம் வெளியில் வாய்ச்சவடாலையும். வன்முறையையும். அதிகரித்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர், வெடவெடன்னு தட்டினால் பல்டி அடிப்பவர்போல் ஒல்லி மனிதர். ஊரில் ‘வறையாடு’ என்றும், அவருக்கு வக்கணை உண்டு. மகன் துளசிங்கம் மேல் அவருக்குக் கோபம் தணியவில்லை என்றாலும், சிறிது பெருமையும் உண்டு. அவரை மாதிரியே, அவனும் ‘கைநீட்டுகிறவனாய்’ உருவாவதில், அவருக்குச் சந்தோஷம். எந்தப் பயலையும் எப்ப வேணுமுன்னாலும் அடிக்கலாம் என்பதில் நம்பிக்கை. துளசிங்கம் விட்டுக் கொடுப்பானா என்ன?

அதே நேரத்தில் மூத்த மகன் தங்கப்பழம் மீது அவர் பாசத்தையும், பணத்தையும் கொட்டினாலும், அவநம்பிக்கைப்பட்டார். தங்கப்பழம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு. ஒன்று எஸ்.எஸ்.எல்.சி. தேறியிருக்க வேண்டும்; அல்லது படிக்காமலே இருக்க வேண்டும். ஆனால் இந்த எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு இருக்கே, அது ரொம்ப மோசம், படித்தவன் என்ற முறையில், சர்க்கார் ஆபீசில் வேலைக்குப் போக முடியாது. படிக்காதவன் என்ற முறையில் வயல் வேலைக்கும் போக முடியாது. இந்தச் சமாச்சாரத்தில் மாட்டிக்கொண்ட தங்கப்பழம், ‘இஸ்திரி’ போட்ட சட்டையைத்தான் போடுவான். சினிமாவில் கதாநாயகன்கள் காரில் போவதைப் பார்த்து, தனக்குச் சைக்கிள்தானே இருக்கு என்று சங்கடப்படுவான்.

வேளாவேளைக்குத் தின்னுப்புட்டு சீட்டு விளையாடுவதுதான், அவன் உத்தியோத லட்சணம். மூளையை வளர்க்காமல் முடியை வளர்த்துக் கொண்டே போனான். வாய்க்குப் ‘பட்டை’ தீட்டுவதாகக் கேள்வி. தமிழ்ச் சினிமாக்களில் வரும் கதாநாயகன் மாதிரி, இந்திப் படங்களில் வரும் வில்லன் மாதிரி, அவன் ஒருவன்தான் அந்த ஊரில் மனுஷன் என்றும், ஏதோ சொல்ல முடியாத மிகப் பெரிய காரியத்திற்குத் தான் தயாராகிக் கொண்டிருப்பது போலவும் நினைக்கிறவன்.

பலவேச நாடாரும், மச்சான் மாரிமுத்துவை நேரடிப் போரில் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து, புதிய சூழ்நிலையை டைரெக்ஷன் செய்யத் தீர்மானித்து விட்டார். 'மச்சான்காரனுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்குச் சொத்து இருக்கு. 'கொள்ளி' இல்லை. (அப்பனுக்குக் 'கொள்ளி' வைக்கும் ஆண்பிள்ளை என்ற அர்த்தத்தில் இது தொழிலாகு பெயராகும்) ஒரே ஒரு பொண்ணு. ஒரு பயலும் ஏறிட்டுப் பாக்க மாட்டான். பேசாம, தங்கப்பழத்துக்குக் கட்டிவச்சிட்டா?' இப்படித் திட்டம் போட்டார்.

மாரிமுத்து நாடாருக்கும் ஒரு ஆசை. 'மகள் 'முத்தத்து நிழலு முதுகுல படாம வீட்டுக்குள்ளேயே இருக்கணும்' என்கிற ஆசை. அது நிறைவேறணுமுன்னா இரண்டே இரண்டுதான் தோணியது. 'ஒண்ணு பொண்ண வீட்டுக்குள்ளயே கல்யாணம் பண்ணாம வச்சிருக்கணும். இல்லன்னா சர்க்கார் உத்தியோகஸ்தனுக்குக் குடுக்கணும்.' மாரிமுத்து நாடாரும் புத்திசாலி. முடியாத 'கச்சிக்கு' மகளை தங்கப்பழத்திடம் தள்ளிவிடலாம். அதுவரைக்கும் பல இடத்தைப் பார்க்கலாம் என்று நினைத்து, மச்சினனுக்கு "பாக்கலாம், ஐப்பசி வரட்டும்" என்று மொட்டையாகச் சொல்லியனுப்பினார். மச்சான், இப்படி மொட்டையாகச் சொல்லியனுப்பியதை 'மொட்டைத்தனமாக' எடுத்துக் கொண்டார் பலவேசம். அதே நேரத்தில் "அங்க சுத்தி இங்க சுத்தி எங்கிட்டதான் சுத்தணும். வயலத் தின்ன எலி வரப்புக்குள்ளதான்... கிடக்கும்” என்று நம்பிக்கையானவர்களிடமும் சொல்லிக் கொண்டார். சரோசாவுக்கு வந்த சில 'பிள்ளை வீடுகளை' ஆள் வைத்துச் சொல்லியும், மொட்டைக் கடுதாசி போட்டும் குலைத்தார். மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள் என்று தெரிந்தவுடன். ஊருக்கு வெளியே புளியந்தோப்புக் கருகிலேயே ஆட்களை உட்காரவைத்து, அவசியமானால் அவரும் உட்கார்ந்து, "நம்ம மாரிமுத்து மவளுக்குக் கல்யாணமாம். போவட்டும். அவளுக்கும் முப்பது வயசாச்சி. கூனிக்குறுகிப் போயிட்டா. ஆண்டவனாப் பாத்து புத்திமாறாட்டமான அந்தப் பொண்ணுக்கு புத்திசாலி மாப்பிள்ளயா குடுக்கணும்" என்று ஜாடைமாடையாகப் பேசுவார்.

இன்று பெண் பார்க்க வந்த கோஷ்டியையும், இப்படிக் கலைக்கத் திட்டம் போட்டிருந்தார். ஆனால், அவர் புளியந்தோப்பில் இருந்து 'கலைப்பு' வேலை நடத்துவது ஊரறிந்த ரகசியமாகி விட்டதால். “மச்சான் எப்படியும் நம்ம கிட்டதான் வருவாரு வீணா எதுக்குக் கெட்ட பேரு” என்று நினைத்து, அவரும் கல்யாண சூழ்ச்சியைக் கைவிட்டார். ‘சரோசாவப் பாத்துட்டு சரிங்கறவன் மனுஷனா இருக்கமாட்டான். படிச்ச பையன் மனுஷனா இல்லாமலா இருப்பான்?’

கல்யாணம் நிச்சயமாகாது என்று அசராமல் இருந்த பலவேச நாடார். அதிர்ந்து போனார். அறுபது கழிஞ்சி நகையும், முப்பதாயிரம் ரூபாச் சுருளும் கொடுக்கப் போறாங்களாம். அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணமாம்.

பலவேச நாடாரால் சும்மா இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு ‘நடுல’ மகன் துளசிங்கம், “யாரும் யாருக்கும் குடுத்துட்டுப் போறா. ஒமக்கு ஏன் சகுனி வேல பேசாம முடங்கிக்கிடும்” என்று எச்சரித்தான். அவன் அப்படிச் சொன்னதுக்காகவே, முடங்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பலவேசம் துடித்தார். உலகம்மையை பெண்ணாகக் காட்டி சரோசாவை மணப்பெண்ணாக அமர்த்துவதற்கு நடந்த நாடகத்தைக் கேள்விப்பட்டதும், அவர் வெகுண்டெழுந்தார். கடைசில இந்த்ப் பனையேறிப் பய மவா உலகம்மதானா கல்யாணப் பொண்ணா நடிச்சா? பய மொவளுக்கு, நம்ம வீட்டு மனையில குடியிருக்கிற வந்தட்டிப் பய. மவளுக்கு. அவ்வளவு திமுரா பாத்துடலாம்.

பலவேச நாடார், உலகம்மையின் வீட்டுக்கு வந்தபோது அவள் அங்கே இல்லாததால், அவள் அய்யாமீது சிறி விழுந்தார். பாதி ஓலைகள் கலைந்தும், மீதி ஓலைகள் இத்தும் போயிருந்த அந்த ஒலை வீட்டில், நார்க்கட்டிலில் கையைத் தலையணையாக்கிப் படுத்திருந்த மாயாண்டி, அவர் பேசுவதையெல்லாம் வாங்கிக் கொண்டார். “சொள்ள மாடா, என் மவா இப்ப வரப்படாது. இந்தச் சண்டாளப்பய வாய்க்கு வந்தபடி பேசுறது அவ. காதுல விழப்படாது” என்று மாடனை வேண்டிக் கொண்டார். மாடன், அவர் வேண்டிய வரத்திற்குச் செவி சாய்க்காமல் உலகம்மையைக் கொண்டு நிறுத்தியதில், மாடன் மீது கோபப்பட்டவர்போல், அவர் குப்புறப் படுத்துக் கொண்டார். பலவேச நாடார் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருந்து விட்டு சாவகாசமாகக் கேட்டாள்:

“என்ன விஷயம்? சின்னய்யா ஏன் இப்டிக் குதிக்கிறாரு?”

“ஒண்ணுந் தெரியாதவ மாதுரி நடிக்கிறியா?”

“நான் நடிக்கவும் இல்ல தடிக்கவும் இல்ல.”

"நீ எப்டி சரோசாகூட போவலாம்?"

"போறதும் போவாததும் என் இஷ்டம்."

"ஒரு குடும்பத்த கெடுக்கறது நியாயமா?"

"நீரு என்ன சொல்றீரு"

"என் மவன் தங்கப்பழத்துக்கு அவள கட்டிடலாமுன்னு இருக்கையில நீ அவாகூட எப்டிப் போவலாம்?"

"இது என்னடா அநியாயம்? பொண்ணுகூட தொணைக்குப் போன்னு சொன்னாரு. தட்ட முடியல. போனேன், உமக்கென்ன வந்தது?"

"சும்மா ஜாலம் போடாத. ஒன்னப் பொண்ணுன்னு காட்டி, சரோசாவ மாப்பிள்ள தலையில் கட்டப் போறாங்க. மாப்பிள்ள நீன்னு நெனச்சி சம்மதிச்சிருக்கான்."

உலகம்மை திடுக்கிட்டுப் போனாள். அவளைக் கைராசிக்காரி என்று சொல்லி, சரோஜாவை அழைத்துப் போகச் சொன்னார்கள். அவளை, மாப்பிள்ளைப் பையன் பெண்ணென்று தப்பாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஒரு மோசடி நடந்திருப்பது, அவளுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏழைகள் அழகாய் இருப்பதுகூட, ஆபத்தோ என்று ஆயாசப்பட்டாள். ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு கோபமாகி, அழுகையாகி, அவள் மௌனமாக நின்றாள். அந்த மௌனத்தைத் தான் சாட்டிய குற்றங்களுக்கு ஆதாரமாகக் கருதிய பலவேசம், எகிறினார். அவள், நடந்ததைச் சொல்ல விரும்பாத அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தார்.

"ஏமுழா பேசமாட்டக்க? ஒருமணி நேரம் பட்டுச்சேல கட்டணுங்கற ஆசையில, ஒருவேள சோறு சாப்பிடணுமுங்ற எண்ணத்துல, பொண்ணுமாதிரி பாசாங்குப் பண்ணிட்ட. இதவிட வேற தொழிலு நடத்தலாம்."

"யோவ்! மானங்கெட்டதனமா பேசி மரியாதய கெடுத்துக்கிடாத. நான் அப்படித்தான் நடிச்சேன். நீ இப்ப என்ன பண்ணனுங்ற?"

"நீ யாருகிட்ட பேசுறங்றது ஞாபவம் இருக்கட்டும்."

"நீ மொதல்ல வெளியே போறியா, கழுத்தப் பிடிச்சி தள்ளணுமா? என்னப் பாத்து தொழிலா நடத்தச் சொல்ற. ஒன் பொண்டாட்டிய வச்சி நடத்து. இல்லன்னா ஒன் மவள வச்சி நடத்து. பெரிய மனுஷன் பேசுற பேச்சாய்யா, இது?”

பலவேச நாடாரின் உடம்பெல்லாம் ஆடியது: ஒரு பொம்பிள. அதுவும் அவர் வீட்டு மனையில வீடுகட்டி பொளப்பு நடத்துற பனையேறிப் பய மவா, நீ நான்னு பேசிட்டா. உலகம்மையின் முடியைப் பிடித்து, கைக்குள் வைத்துக் கொண்டு, பிடறியில் போடலாமா என்பவர் போல் லேசாகக் கையைத் தூக்கினார். உலகம்மையும் அதை எதிர்பார்த்தவள் போல், சேலையை இறுக்கிக் கட்டிக்கொண்டு, மண்வெட்டியை எடுத்து, அதிலிருந்த சேற்றைத் துடைப்பவள்போல், ‘போக்குக்’ காட்டினாள். பலவேசமும் புரிந்து கொண்டார். ஆம்பிள ஆயிரம் அடிச்சாலும் தெரியாது. ஒரு பொம்பிள ஒரு அடி அடிச்சிட்டா போதும், மதிப்பே அவுட்டாகிவிடும். இப்போது, அவர் வார்த்தைகளில் அஹிம்சை குடிகொண்டது.

“ஒரு குடும்பத்த கலச்சிட்ட பரவால்ல, நல்லா இருந்துட்டுப் போ. ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் மவனுக்குக் கட்டி வச்சி அந்தப் பொண்ண காப்பாத்தலாமுன்னு நெனச்சேன். நீ கெடுத்திட்ட நீன்னு நெனச்சிக்கிட்டு இருக்கற மாப்பிள்ள அவளப் பாத்ததும் என்னபாடு படப்போறானோ எப்டில்லாமோ கெனவு கண்டிருப்பான். அவன் கனவுல நீ மண்ணள்ளிப் போட்டுட்ட. அது மட்டுமா? சரோசாவப் பிடிக்கலன்னு விரட்டியடிக்கப் போறான். அவா இங்க வந்து ஊர்ல நாலுபேரு நாலுவிதமாப் பேசும்படியா அலக்கழியப் போறா. கடைசில தூக்குப்போட்டுச் சாவத்தான் போறா. ஒண்ணுல ஒண்ணு மாப்பிள்ள சாவான். அல்லன்னா என் மச்சினன் மவா சாவா, நீ மகராசியா வாழு. கடவுள் இருக்கான், கவனிச்சுக்குவான். மாயாண்டி அண்ணே, என்னோட ஒன் மவா இவ்ளவு பேசியும் நீ ஒரு வார்த்த தட்டிப்பேசல. போவட்டும். எனக்கு இந்த இடம் வேணும். மாட்டுத் தொழு கட்டப்போறேன். நீ இன்னும் ஒரு வாரத்துல வேற இடத்தப் பாத்துக்க. இல்லன்னா, வீட்டத் தரமட்டமா பண்ணிடுவேன். உரசிப்பார்க்க ஆசையா இருந்தா, உரசிப்பாரு.”

பலவேச நாடார் போய்விட்டார். இதுவரை, எந்தப் பெண்ணும் அவரை அவமரியாதையாகப் பேசியதில்லை. என்னமாய்ப் பேசி விட்டாள் வெளில தெரிஞ்சா வெக்கம். அடிச்சா, திருப்பியடிப்பா போலுருக்கே அந்த முண்டய என்னவாவது பண்ணனும். என்ன பண்ணலாம்?’

உலகம்மை வாயடைத்துப் போனாள். பலவேச நாடார் போய்விட்டாலும், அவர் சொன்ன வார்த்தைகள் போக மறுத்தன.

‘மாப்பிள்ளய ஏமாற்றியது முறையா? பலவேசம் சொன்னது மாதிரி அவரு தனக்கு வாய்க்கிறவா எப்படியெல்லாம் இருக்கணும்னு நினைச்சிருக்காரோ? நாம ஏமாத்தல்ல ஒரு ஆளாயிட்டோமே! இந்தக் கல்யாணம் நடந்து அவரு ஏம்ாத்தத்த தாங்க முடியாம தூக்குப்போட்டுச் செத்தா அவரப் பெத்தவங்க மனம் என்ன பாடுபடும் ராசா மாதிரி இருக்கிற அவரு எப்டித் துடிச்சிப் போவாரு நாலு எடத்துக்குத்தான் பொண்டாட்டிய கூட்டிக்கிட்டுப் போவ முடியுமா? போறது இருக்கட்டும். ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டாருன்னா? திருமலாபுரத்துல ஒரு பையன் இப்டி ஆள் மாறாட்டம் நடந்ததுல விஷத்தக் குடிச்சிட்டுச் செத்துட்டான். இதுமாதிரி இவரும்... அதுக்கு நாம காரணமா ஆவுறதா? முடியாது. மாப்பிள்ளை வீட்டுல போயி, நடந்தத எப்டியும் சொல்லிடணும். என்ன ஆனாலும் சரி.’

‘எப்டிச் சொல்ல முடியும்? பாவம் சரோசாக்கா. எவ்வளவு ஆசையோட மாப்பிள்ளயப் பத்திக் கேட்டா. கல்யாணம் நின்னுபோனா அவா எப்டி அழுவா? மாரிமுத்து மாமாகூட சாப்பிட்டு போழான்னு’ பெத்த மவள கேக்கது மாதிரி கேட்டாரு. ஒனக்கும் ஒரு வழி பண்ணுறேன்னுகூடச் சொன்னார. அவங்க வீட்டுக்குத் துரோகம் பண்ணலாமா? எது துரோகம் அவங்க மட்டும் என் அழகுக்காக என்கிட்ட விஷயத்தச் சொல்லாம மூடிமறச்சி பொம்ம மாதிரி என்ன அனுப்பலாமா? அதுமட்டும் துரோகமில்லியா? எல்லாம் போவட்டும். கல்யாணம் நடந்த பிறவு மாப்பிள்ள சரோசாக்காவ அடிச்சி விரட்ட மாட்டாருங்கறது என்ன நிச்சயம்? இங்க வந்து. அந்த அக்கா கஷ்டப்படுறத நம்ம கண்ணால பாக்கனுமா? ஒருவேள. சரோசாக்கா தூக்குப்போட்டுச் செத்துட்டா என்ன பண்ணலாம் மாப்பிள்ள வீட்ல போய் நடந்ததச் சொல்லி சரோசாக்காவோட நல்ல குணத்தச் சொல்லுவோம். கட்டுனாலும் கட்டிக்குவாங்க. அப்டியே கட்டாட்டாலும் பலவேசம் மவன்தான் கட்டிக்கத் தயாராய் இருக்கானே. ஒண்ணும் ஒடமாட்டாக்கே, உதிர மாடசாமி, நீதான் சொல்லணும்.’

குழம்பிப் போய்த் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த உலகம்மை, கனைப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் அய்யா, இன்னும் அந்த நார்க்கட்டிலில் குப்புறப் படுத்தபடியே கிடந்தார். அவர் சாப்பிடவில்லை என்று அப்போதுதான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. கட்டிலுக்கருகேயே இருந்த அடுப்புக்குள் விறகுகளை எடுத்து. தலைகுப்புற வைத்துக்கொண்டு பூமியில் தட்டி, எரிந்து போயிருந்த விறகுகளில் படர்ந்திருந்த கரியைத் தட்டிவிட்டு, விறகுச் சுள்ளிகளை அடுப்பில் வைத்துவிட்டு, ஒரு ஈயப்பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு. தீப்பெட்டியைத் தேடுபவள்போல். அடுப்பங்கரையில் தேடினாள். நடப்பதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த மாயாண்டி திடீரென்று வெடித்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். கண்பார்வை மங்கல். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பனையேறிக் கொண்டிருந்தார். ஒருநாள் பாதிப் பனையில் இருந்து கீழே விழுந்து, இடதுகால் முறிந்து விட்டது. ஆஸ்பத்திரியில் போய் காலை ரிப்பேர் செய்து கொண்டாலும், பனையேறவும் முடியவில்லை. சரியாக நடக்கவும் முடியவில்லை. உலகம்மை, அவரைப் பனையேற விடவும் இல்லை. அப்பப்போ சொல்ல முடியாத துயரங்கள் வரும்போது, லேசாகப் ‘பட்டை’ போட்டுக் கொள்வார். அதுவும் மில்லிக் கணக்கில்தான்.

“அடுப்ப மூட்டாண்டாம்.”

“ஏன்?”

“எனக்குச் சோறு வேண்டாம்.”

“ஏன்?”

“வயிறு நிரஞ்சிட்டு. நீ வாரதுக்கு முன்னால பலவேசம் குடுத்ததுல வயிறு உப்பிட்டு. ரெண்டு நாளைக்கு ஒண்ணும் வேண்டாம்.”

“அவன் கிடக்கான். கட்டயில போறவன். திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தான் துணை. ஒம்மப் பேசினதுக்கு உதிரமாடன் அவன கேக்காம விட மாட்டான்.”

“நீ செய்தது சரியா? பெரிய இடத்துல ஆயிரம் நடக்கும். நமக்கென்ன வந்தது? நீ ஏன் மாரிமுத்து மவளோட போவணும்?”

“நானாப் போவல. எனக்கு ஒரு பாவமுந்தெரியாது. வேலக்காரி மாதிரி துணையாத்தான் போனேன். இப்படிக் குளறுபடி நடக்குமுன்னு தெரிஞ்சா போயிருக்கவே மாட்டேன். சோம்பேறிப்பய தொழில் நடத்தலாமுன்னுலா கேட்டுட்டான். அவன் நாக்குல புத்துநோயி வர.”

“நீயும் அவனக் கூடக்கூடப் பேசிட்ட வீட்டு நிலத்த விடச் சொல்லுறான். அதுகூடப் பரவாயில்ல. கழுத்தப்பிடிச்சி தள்ளுவேன்னு வேற சொல்லிட்ட அவன் என்ன பண்ணப் போறானோ? அவன் மொவன் துளசிங்கம் ஒண்ணுகிடக்க ஒண்ணு பண்ணிட்டா?”

“அடிப்பான்னு பயப்படுறீரா? அடிக்கும்போது பார்த்துக்கிடலாம்.”

மாயாண்டி, பதில் சொல்லாமல், குலுங்கிக் குலுங்கி அழுதார். அவர் அழுகையில் ஏற்கனவே தொங்கிப் போயிருந்த நார்க்க்ட்டில், அசைந்து கொடுத்தது. இல்லாமையில் எழுந்த அந்த அவலத்தனமான அழுகை, உலகம்மையை கலக்கிவிட்டது. அய்யாவின் அருகில்போய், அவர் தலையை மெளனமாகக் கோதிவிட்டாள். மாயாண்டி விம்மிக் கொண்டே பேசினார்:

“ஒன் அம்மாக்காரி என்ன நிர்க்கதியா விட்டுட்டு செத்துட்டா. என் அம்மா என்ன விட்டுட்டு அஞ்சு வயசுல போயிட்டா. ஒனக்காவத்தான் ஏறாத பனெல்லாம் ஏறுனே. இல்லன்னா எப்பவோ மண்டயப் போட்டுருப்பேன். அவன் பலவேசம் பணக்காரன், சல்லிப்பயல், ஒண்ணுகிடக்க ஒண்ணு...”

“நீரு ஏய்யா சொன்னதையே சொல்றிரு. அடிக்கும்போது பார்த்துக்கிடலாம்.”

“அடிச்சா பரவாயில்லழா. நீ தனியா இருக்கும் போது ராத்திரி வேளையில அவமானப்படுத்திட்டா - பலவேசம் அப்பிடிப்பட்ட பயல்தான். சொந்த சித்தி மவளயே வச்சிக்கிட்டிருந்த பய.”

உலகம்மை திடுக்கிட்டாள். இந்த மாதிரியும் ஒன்று நடக்கலாம் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்படி நினைக்கையில், அவள் உடம்பெல்லாம் ஆடியது. அய்யாவைப் பார்த்தாள். அவர் இன்னும் ஏங்கி ஏங்கி அழுதார். அய்யா, அவரின் அழுகைக்குக் காரணமான பலவேசம், அந்த பலவேசம் கோபப்படக் காரணமான மாரிமுத்து நாடார். அவரின் கல்யாணச் சூழ்ச்சி அத்தனைபேர் மீதும் அவளுக்குத் தணியாத சினம் ஏற்பட்டது. ஆவேசம் வந்தவள்போல் பேசினாள்:

“அப்டி ஒண்ணும் நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். நீரு சீவுன பாள அரிவா இந்தா இருக்குய்யா. நல்லா நினைச்சிப்பாரும். அஞ்சி வருஷத்துக்கு முன்ன நான் பெரியாளாகு முன்னால கருப்பசாமி என்கிட்ட ஏதோ சொன்னாமுன்னு அவன் பணக்காரன்னுகூடப் பாக்காம இந்த அரிவாள வச்சிக்கிட்டு ஓட ஓட விரட்டுனீரே, ஞாபகம் இருக்கா? நான் புலிக்குப் பொறந்தவா. ஒம்மோட மவள். எந்தப்பய வேணுமுன்னாலும் வாலாட்டிப் பாக்கட்டும். அவன் தலய வெட்டி ஒம்ம காலுல வைக்காட்டி, நான் உலகம்மல்ல. பொம்புள மாதிரி ஏய்யா அழுவுறீரு?”

மாயாண்டி அழுவதை நிறுத்திவிட்டு மகளைப் பெருமையோடு பார்த்தார். அடுப்பை மூட்டிய உலகம்மையை, அவர் தடுக்கவில்லை. தீ மூட்டிக் குழலை வைத்து உலகம்மை ஊதினாள். தீப் பிடிக்கவில்லை. ஈரச்சருகு போலும், சிறிது நேரம் குழலை வைத்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

குப்புறப்படுத்திருந்த மாயாண்டி, எழுந்து உட்கார்ந்து, சுவரில் தலையை வைத்துக்கொண்டே “நீ இவ்ளவு ஒத்தாசை பண்ணிருக்க இதனால பலவேசத்துக்கிட்டகூட இழுபடுறோம். ஆனால் மாரிமுத்து சம்சாரம் பனையேறிப் பய மவளக்காட்டி என் பொண்ண கரயேத்த வேண்டியதிருக்குன்னு லட்சுமிகிட்ட சொன்னாளாம். லட்சுமி இப்பதான் வந்து சொல்லிட்டுப் போனா” என்றார்.

உலகம்மை, அவர் சொல்வதை, காதில் வாங்காதது மாதிரி வாங்கிக் கொண்டாள். திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள். இப்போது குழப்பம் இல்லை. அசாத்தியமான துணிச்சல் ஏற்பட்டது. “நமக்கா, இவ்வளவு தைரியம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டும், மெச்சிக்கொண்டும், உலகம்மை தீக்குழலை எடுத்து ஊதினாள்.

தீப்பிடித்துக் கொண்டது.