உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரே உரிமை/005-015

விக்கிமூலம் இலிருந்து

குழந்தையின் குதூகலம்


ன்றிரவு சங்கருக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் அன்று மாலை வாங்கிய ‘ஆடும் குதிரை’யின் மீதே இருந்தது. அதன்மீது தான் ஏறிக் கொண்டு ஆனந்தச் சவாரி செல்வது போலவும், அது ஆகாய வீதியெல்லாம் தூள் பறக்கப் பறந்து செல்வது போலவும் அவன் கற்பனை செய்து கொண்டிருந்தான்.

பொழுது விடிந்ததும் ஒரு விநாடிகூட அவனால் தாமதிக்க முடியவில்லை. இட்டிலியை மறந்தான். சட்டினியை மறந்தான். காப்பியைக்கூட மறந்து விட்டான். அந்த ஆடும் மரக்குதிரையை எடுத்துக் கொண்டு ஆட்டம் போடுவதற்காகத் தெருவுக்கு ஓடோடியும் வந்து விட்டான்.

தற்பெருமையடித்துக் கொள்வதில் பெரியவர்களுக்குத் தான் ஆசையென்பதில்லை; குழந்தைகளுக்கும் அது இருக்கத்தான் இருக்கிறது. இல்லையென்றால் அந்த ஆடும் குதிரையை வைத்துக்கொண்டு அவன் தன் வீட்டிலேயே ஆட்டம் போட்டிருக்கலாம். ஆனால் என்ன பிரயோசனம் அதனால்? அந்தக் குதிரை வாங்கிய வைபவத்தைப் பற்றி அவன் தன் நண்பர்களிடமெல்லாம் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்க, அதைத் தன் வீட்டுக் கூடத்திலேயே வைத்துக்கொண்டு ஆடினால் அவ்வளவு சுகப்படுமா? இல்லை, அதற்காக அவன் தன் நண்பர்களுடைய வீடுகளுக்கெல்லாம் சென்று அவர்களை வலுவில் அழைத்துக்கொண்டு வரத்தான் முடியுமா? தெருவுக்கு வந்துவிட்டால் அவர்கள் தாங்களாகவே கதறிக்கொண்டு வருகிறார்கள்.

சங்கர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அந்தக் குதிரையின் மீது ஏறி அவன் ‘ஹை, ஹை’ என்று ஓர் ஆட்டம் போட்டதுதான் தாமதம், அப்பொழுதுதான் படுக்கையை விட்டு எழுந்த எதிர் வீட்டு மணி பறந்தோடி வந்தான்,

“டேய், சங்கர்! ஏதுடா, உனக்கு இந்தக் குதிரை? யார் வாங்கிக் கொடுத்தது?” என்று அவன் சங்கர் எதிர்பார்த்தபடியே ஆவலுடன் கேட்டும் வைத்தான்.

“என் அப்பா வாங்கிக்கொடுத்தார்!” என்று சங்கர் ஒரே வார்த்தையில் பதில் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் விஷயத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முடித்து விட அவனுக்கு விருப்பமில்லை. கொஞ்சம் ஆதியோடந்தமாகவே ஆரம்பித்தான்.

“நேற்ற ஞாயிற்றுக் கிழமையோ இல்லையோ, என் அப்பாவுக்கு ஆபீஸ் கிடையாது. நான், என் அம்மா, அப்பா எல்லோரும் மத்தியானம் சாப்பிட்டானதும் சினிமாவுக்குப் போனோம்......”

“என்ன, சினிமாவா! அதென்னடா, சினிமா?”

சங்கருக்குச் சிரிப்பு வந்தது. “என்னடா சுத்தப் பட்டிக் காட்டு ஆசாமியாயிருக்கிறாயே? உனக்கு சினிமாவென்றாலே இன்னதென்று தெரியாதா?” என்று கேட்டான்.

“தெரியாதுடா!” என்றான் மணி, முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு.

“அட நிஜமாவா!” என்று மீண்டும் கேட்டான் சங்கர். அவனால் நம்பமுடியவில்லை.

“நிஜமாத்தாண்டா!” என்றான் மணி,

“அப்படின்னா சொல்றேன் கேளு; சினிமான்னா, எல்லாம் ஒரே படமாயிருக்கும். ராஜா படம், ராணி படம், திருடன் படம் எல்லாம் வரும். அந்தப் படமெல்லாம் சும்மா அப்படியே இருக்கும்னு நினைக்கிறாயா? இல்லே; ஆடும், பாடும், பேசும், சிரிக்கும்–எல்லாம் செய்யும்!”

“அப்படியா சங்கர்! இன்னொரு சமயம் நீ போறப்போ என்னையும் கூட்டிக்கிட்டுப் போறயா?”

“உம்......சும்மாவா? காசு எடுத்துண்டு வரணும்; இல்லாட்டா உள்ளே விடமாட்டான்.”

“சரி, அது போகட்டும் சங்கர்! இந்தக் குதிரை உனக்கு ஏது?......அதைச் சொல்லு!”

“ஆமாம், ஆமாம்! அதுக்குள்ளே மறந்துட்டேனே! – நாங்க எல்லோரும் சினிமாவுக்குப் போனோமா, அப்புறம் நேரே ஹோட்டலுக்கு வந்தோம்......!”

“அது என்னடா, ஹோட்டல்......?”

சங்கருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இடிஇடியென்று சிரித்துவிட்டான். மணியை வெட்கம் பிடுங்கித் தின்றது. அந்த இடத்தைவிட்டு உடனே ஓடிவிடலாமா என்றுகூட நினைத்தான். ஆனால் ஹோட்டலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, அந்த உணர்ச்சியை மீறி நின்றது.

“ஏண்டா, மணி! நீ நிஜமாச் சொல்லுடா! என்னாலே நம்பவே முடியலையே, உனக்கு ஹோட்டலைக் கூடவா தெரியாது?”

“நான் பொய் சொல்வேனா? எனக்கு நிஜமாவே தெரியாதுடா!”

“ஹோட்டல்னா ஒரே பட்சண மயமாயிருக்கும். பாதாம் ஹல்வா, குலோப்ஜான், குஞ்சாலாடு, ரஸ்குல்லா, ஜாங்கிரி, மைசூர்பாக் – இப்படி எத்தனை எத்தனையோ விதமான தித்திப்புப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும், அப்புறம் போண்டா, வடை, மிக்சர் – இப்படி எத்தனை எத்தனையோ விதமான காரப் பட்சணங்கள் எல்லாம் இருக்கும். கடைசியிலே காப்பி, டீ எல்லாம் வேறே. கீழே வரிசை வரிசையாக மேஜை, நாற்காலி எல்லாம் போட்டிருக்கும்; நாமெல்லாம் போனதும் ‘ஜம்’ மென்று அவற்றின் மேல் உட்கார்ந்து கொள்ள வேண்டியது. ‘என்ன வேணும்?’னு கேட்டுண்டே ஒருத்தன் வருவான். அவன் நமக்கு வேண்டியதைக் கொண்டு வந்து வைப்பான். ஒரு கை பார்த்து விட்டு, வாசலிலே உட்கார்ந்திருக்கும் ‘காஷிய’ரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்துட வேண்டியது!”

மணியின் நாக்கில் ஜலம் ஊறிற்று. அவன் அதைக் கூட்டி விழுங்கிக் கொண்டே, “ஏண்டா, நீ என்னென்னவோ சொல்றயே! எனக்கு ஒண்ணுமே புரியலையேடா!” என்றான் தலையைச் சொறிந்து கொண்டே.

“ஆமாண்டா, அதெல்லாம் தலையைச் சொறிந்தாப் புரியாதுடா! பணம் இருக்கணும், பணம்!” என்றான் சங்கர் சிரித்துக் கொண்டே.

“மணியின் முகத்தில் அசடு வழிந்தது. ஆனாலும் அவன் அந்த இடத்தை விட்டு நகராமல், “உம்...அப்புறம்...” என்று மேலே ஆரம்பிக்கச் சொல்வது போல் சங்கரின் முகத்தைப் பார்த்தான்.

அதற்கேற்றாற்போல், “அப்பாலே நாங்கள் எல்லோரும் ‘பீச்’சுக்குப் போனோம்!” என்று சங்கரும் நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தான்.

அவனை இடைமறித்து, “ஏன்?” என்று கேட்டு வைத்தான் ஆப்பாவி மணி.

“போடா மண்டு! ‘பீச்’சுக்கு எதற்காகப் போவார்கள்?” என்று எரிந்து விழுந்தான் சங்கர்.

“எதற்காகப் போவார்கள்?” என்று மணி அவனையே மீண்டும் திருப்பிக் கேட்டான்!

“காற்று வாங்குவதற்குத்தான்!”

“ஏன், இங்கெல்லாம் கூடத்தானே காற்று அடிக்கிறது?”

“அங்கே அடிக்கும் காற்றின் சுகமே வேறேடா! இதோ பார், மேலே நீல வானம் இருக்கோ, இல்லையோ? அதே மாதிரி அங்கே ஒரு நீலக் கடல் இருக்கு. அதிலேயிருந்து ஜலம் அலைமேல் அலையாக் கிளம்பி, முத்துக்கள தெறித்தாற் போலக் கரையிலே வந்து மோதும். அது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாயிருக்கும், தெரியுமா?”

“அதைப் பார்க்கக்கூடக் காசு கொடுக்கவேணுமாடா?”

“இல்லையடா, இல்லை! யாரு வேணுமானாலும் போய்ப் பார்க்கலாம்!”

மணியின் முகம் மலர்ந்தது. “அப்படியானால் நாளைக்கே தன்னை ‘பீச்’சுக்குக் கூட்டிக்கொண்டு போகும்படி அப்பாவை ஏன் கேட்கக் கூடாது?” என்று எண்ணிக் கொண்டான்.

ஆனால், அதற்கு அடுத்த கணமே அவனுடைய முகம் சுருங்கிவிட்டது. ஏனெனில் அந்தப் ‘பாழும் அப்பா’ யார் என்று அவனுக்கு இது நாளது வரை தெரியவே தெரியாது. இத்தனைக்கும் அந்த மனிதன் இன்னும் செத்துப் போகவும் இல்லை!

அம்மாவைக் கேட்டாலோ, அவள் நாளுக்கு ஒரு விதமாகப் பதில் சொல்கிறாள். அவன் என்ன செய்வது?

“சரி, அம்மாவையே ஒரு நாளைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொன்னால் போகிறது!” என்று தனக்குள் எண்ணிக் கொண்டு, மேலே சங்கரின் பேச்சைக் கேட்பதற்குத் தயாரானான்.

“அப்பாலேதான் பஜாருக்கு வந்தோம்; அங்கேதான் இந்தக் குதிரையை வாங்கினோம்!” என்று தன் கதையை முடிக்கும்போதும் நீட்டி முழக்கிக் கொண்டே முடித்தான் சங்கர்.

“சங்கர், சங்கர்! இந்தக் குதிரை மேலே நானும் கொஞ்ச நேரம் ஏறிச் சவாரி செய்யட்டுமா?” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டே அந்தக் குதிரையை நெருங்கினான் மணி.

தான் சொல்வதற்கோ, அவன் கேட்பதற்கோ அதற்கு மேல் ஒன்றும் இல்லாமற் போகவே, தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டவர்களைப் போல, “போடா, போ!” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.

அதற்குப் பிறகு அவன் தன் ‘குதிரைப் புராண’த்தைச் சொல்வதற்கு வேறு பையனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்!

***

திர்வேலு நாடார் எண்ணெய் மண்டியில் மணியின் தகப்பனாருக்கு வேலை. வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கொள்வதிலிருந்து, வாங்க வருவோருக்கு எண்ணெய் அளந்து ஊற்றும் வரை உள்ள எல்லா வேலைகளையும் அவரேதான் பார்த்துக் கொள்ள வேண்டும். மாதச் சம்பளம் முழுசாக அவருக்குப் பதினைந்து ரூபாய். இவ்வளவு தாராளமாக நாடார் அவருக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்ததற்குக் காரணம், பூமிக்கும் வானத்துக்குமாக விரிந்து கிடந்த அவருடைய பரந்த மனம்தான் என்றாலும் இன்னொரு விசேஷ காரணமும் இருந்தது. “கடலையெண்ணெயை நல்லெண்ணெயாக்குவது எப்படி?” - “ஒரு மணங்கு தேங்காயெண்ணெயில் எவ்வளவு கடலையெண்ணெய் சேர்க்கலாம்?” – “எடையைக் கூடுதலாக்க என்னத்தைப் போட்டுக் கரைப்பது?” என்பது போன்ற விஷயங்களில் மணியின் தகப்பனாருக்கு முப்பது வருட கால அனுபவம் உண்டு. அந்த முப்பது வருட கால அனுபவத்தையும் அவர் வேறு எங்கிருந்தும் அடைந்து விடவில்லை; கதிர்வேலு நாடார் கடையிலிருந்தே தான் அடைந்திருந்தார்.

நல்லவேளையாக, நாடார் எந்த விஷயத்திலுமே கண்டிப்பாக நடந்து கொள்பவராதலால், விளக்கெண்ணெய் வியாபாரத்தை மட்டும் வைத்துக் கொள்ளவில்லை.

மேற்கூறியபடியெல்லாம் செய்வது பாவம் என்பதைக் கதிர்வேலு நாடார் அறியாமலிருந்தார் என்று சொல்லி விடவும் முடியாது. ஆனால் “அந்தப் பாவத்துக்குத் தண்டனை இந்த ஜன்மத்திலா கிடைக்கப் போகிறது? அடுத்த ஜன்மத்தில் தானே!” என்ற தைரியம் அவருக்கு.

இந்தத் தைரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவருக்குக் கொஞ்சம் அச்சமும் இருக்கத்தான் இருந்தது. அதற்காக, அவர் சர்க்கார் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் லஞ்சத்தோடு லஞ்சமாக, சுவாமிகளுக்கும் அவ்வப்போது கும்பாபிஷேகம் செய்து வைப்பது, லட்ச தீபம் ஏற்றி வைப்பது, திருவிழா நடத்துவது—இம்மாதிரி ஏதாவது செய்து, ‘அடியார்க்கு நல்லாராய், அன்புக்கும் ஆண்டவனுக்கும் அடிமையாய், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றும் அறியாராய், சத்தியமே உருவாய்’ பராபரத்தின் அருளால் வாழ்ந்து வந்தார்.

இதனால்தானோ என்னவோ, சர்க்கார் அதிகாரிகளைப் போலவே சுவாமிகளும் அவரைக் கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். அவருடைய திருத் தொந்தியைப் போலவே வியாபாரமும் நாளொரு மண்டியும் பொழு தொரு ஊருமாகப் பெருகி வந்தது. அதாவது, வெகு சீக்கிரத்திலேயே தமிழ்நாடு பூராவும் கிளைக் கடைகளை ஆரம்பித்து நடத்தினர். சொந்தத்திலேயே எண்ணெய் ஆலை ஒன்றும் வைத்தாகிவிட்டது. வருஷ வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டு வந்தது. ஸ்தாவர, ஜங்கம சொத்துக்காக வாங்கி வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பணம் ‘சரியாயிருக்கிறதா?’ என்று எண்ணிப் பார்த்துக் கொள்வதைத் தவிர அவர் வேறு ஒரு பாவமும் செய்து அறியார்!

மணியின் தகப்பனாருக்குத் தம் எஜமானரின் மேல் கொள்ளை ஆசை. “எசமான், ‘மாணிக்கம், மாணிக்கம்!’ன்னு என் மேலே உசிரையே வச்சிருக்காரு!” என்று தம் மனைவியிடம் அவர் பெருமையுடன் சொல்லிக் கொள்வார். “சம்பளத்திலே ஒண்ணையும் காணோமே!” என்பாள் அவள், அலட்சியமாக.

“சீ, போ? பணமா பெரிது? மனிசன் அன்பு இல்லே பெரிசு!” என்பார் மாணிக்கம் பிள்ளை.

ஆமாம், அவருக்கு எப்போதுமே தம் உரிமையைவிடக் கடமை பெரிது. இல்லையென்றால் கேவலம் முப்பது வருடத்திற்குள் ஒண்ணே கால் டஜன் ரூபாய்களைச் சம்பளமாகப் பெறுவதென்பது அவ்வளவு லேசான காரியமா?

நல்ல வேளையாக, மாணிக்கம் பிள்ளையைப் பிடித்த ‘பைத்தியம்’ கதிர்வேலு நாடாரையும் பிடித்து விடவில்லை. அவருக்குத் தம் கடமையைவிட உரிமைதான் எப்போதும் பெரிது!

தமக்கு உலகம் இன்னதென்று தெரிந்த நாளிலிருந்து – அதாவது, நாடார் கடைசியில் வேலைக்கு அமர்ந்ததிலிருந்து–சூரியோதயத்தையோ, அதன் அஸ்தமனத்தையோ திருவாளர் மாணிக்கம்பிள்ளை அவர்கள் தம் வீட்டிலிருந்தபடி பார்க்கும் பாவத்தை ஒரு நாளாவது செய்தவர் அல்ல; எண்ணெய் மண்டியில் இருந்தபடிதான் பார்ப்பார். கடைச் சிப்பந்திகள் சட்டமோ, அவர் இருந்த திக்கைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இந்த ‘அதிர்ஷ்டம்'’ என்று ஒன்று இருக்கிறதே, அது நம் மாணிக்கம் பிள்ளையை அடியோடு கைவிட்டு விட்ட தென்றும் சொல்லிவிட முடியாது. ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த அவருக்கு மணி ஒருவன் மட்டும்தான் உயிருடன் இருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அது மட்டுமா? தவறிப் போன தம் ஐந்து குழந்தைகளின் அடக்கத்தின் போதும் அவர் சூரியோதயத்தையும் அதன் அஸ்தமனத்தையும் தம்முடைய வீட்டிலிருந்தபடியே பார்க்கும் பாக்கியம் வேறு கிடைத்தது.

தன் தகப்பனார் வேலைக்குப் போகும்போதும், வீடு திரும்பும்போதும் மணி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பான். ஆகவே, அன்று வரை தந்தையும் மகனும் ஒருவரையொருவர் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்து வந்தது

“அப்பா எங்கே, அம்மா?” என்று அடிக்கடி அவன் தன் தாயாரைக் கேட்பதுண்டு. அவள், “வேலைக்குப் போயிருக்கிறார்” என்பாள் ஒரு சமயம்; “ஊருக்குப் போயிருக்கிறார்” என்பாள் இன்னொரு சமயம்; தொந்தரவு தாங்காமல் சில சமயம், “அப்பா இறந்து விட்டார்!” என்று அவள் கொஞ்சங் கூடக் கூசாமல் சொல்லி விடுவதும் உண்டு.

இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு மணிக்கு அலுத்துப் போய்விட்டது. “அப்பா எப்படியாவது தொலைந்து போகட்டும்; அவரைப் பற்றிய கவலையே நமக்கு வேண்டாம்!” என்று எண்ணியவனாய், அன்று அவன் தன் தாயாரை நோக்கி, “அம்மா! என்னை ‘பீச்’சுக்காச்சும் ஒரு நாளைக்குக் கூட்டிக்கிட்டுப் போயேன்! என்றான்.

தாயாரின் கண்களில் நீர் சுரந்தது. “அந்தப் பாழும் ‘பீச்’சு எப்படியிருக்கும், என்னமாயிருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாதேடா, கண்ணு!” என்றாள் அவள்.

மணிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. “என்ன! உனக்குக் கூடவா தெரியாது!” என்றான்.

தாயார் மௌனம் சாதித்தாள்.

“பொய் சொல்லாதே, அம்மா! நிஜமாச் சொல்லு!” என்றான் மணி.

“நிஜமாத்தான் சொல்றேன்; அது எந்தப் பக்கம் இருக்கும் என்றுகூட இன்று வரை எனக்குத் தெரியாதேடா!”

மணிக்கு அழுகை வந்துவிட்டது. “போ, அம்மா! நீ பொய் சொல்றே!” என்று அவன் ‘உண்மை’யைச் சொல்லி, அழ ஆரம்பித்து விட்டான.

தாயார் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள், அவன் கேட்கவில்லை. அழுதபடியே சிறிது நேரத்திற்கெல்லாம் அயர்ந்து தூங்கி விட்டான்.

***

ன்றிரவு மாணிக்கம்பிள்ளை சாப்பிட்டானதும் தன்னை ‘பீச்’சுக்காவது கூட்டிக் கொண்டு போகும்படி குழந்தை அழுத விஷயத்தை அவரிடம் தெரிவித்தாள் அவருடைய மனைவி.

“எல்லா விசயமும் தெரிந்த நீயே இப்படிச் சொன்னா நான் என்ன பண்றது? செலவுக்குக் காசு தேடற விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும்; முதல்லே நேரம் இருக்கா? அதைச் சொல்லு!” என்றார் மாணிக்கம்பிள்ளை.

“எதற்குத்தான் உங்களுக்கு நேரம் இருக்கு?” என்று வெறுப்புடன் சொல்லிவிட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டாள் அவள். ஒரு நீண்ட பெருமூச்சு வரும்வரை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மாணிக்கம் பிள்ளை படுத்துக் கொள்வதற்காகத் திண்ணைக்குச் சென்று விட்டார்.

அதற்கு அடுத்த நாள்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல் விடிந்ததும் விடியாததுமாகத் தன் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டு வேலைகளில் இறங்கியிருந்தாள் மணியின் தாயார். மணி வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

“அம்மா! பூச்சாண்டி வந்து என்னைப் பிடிச்சுக் கிட்டானே!” என்று திடீரென்று அவன் வாசலிலிருந்தபடியே அலறியதைக் கேட்டதும். “ஐயோ! என்னடா, கண்ணு!” என்று கதறிக் கொண்டே தாயார் வாசலுக்கு ஓடோடியும் வந்தாள்.

முகத்தில் தாடியும் மீசையும் வளர்ந்து, பார்ப்பதற்கு விகாரமாயிருந்த ஒரு தரித்திர உருவம் மணியை ஆசையுடன் கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டிருந்தது.

மணியைப்போல் அவன் தாயாரும் அந்த உருவத்தைக் கண்டு பயந்துவிடவில்லை; முக மலர்ச்சியுடன், “அவர் தாண்டா, உன் அப்பா!” என்றாள்.

“நிஜமாவா, அம்மா! என் அப்பாவா, அம்மா!” என்றான் குழந்தை ஆச்சரியத்துடன்.

“ஆமாண்டா, ஆமாம்!” என்றாள் அவள்.

“அப்படின்னா, இனிமே நான் அப்பாவோடே சினிமாவுக்குப் போவேன், ஹோட்டலுக்குப் போவேன், ‘பீச்’சுக்குக் கூடப் போவேன்!” என்று பொங்கி வந்த சந்தோஷத்தில் அடுக்கிக் கொண்டே போனான் மணி.

மாணிக்கம் பிள்ளை அவனுடைய சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. “அந்தப் பாவிதான் எனக்கு வயசாயிடுச்சுன்னு என்னை வேலையிலிருந்து தள்ளிட்டானே!” என்றார் இரண்டு சொட்டுக் கண்ணீரை உதிர்த்துக் கொண்டே.

“என்ன!” என்று திடுக்கிட்டுக் கேட்டாள் அவருடைய மனைவி.

“ஆமாண்டி, ஆமாம்!” என்றார் அவர் அலுப்புடன்.

“தயா விசயமா, கொஞ்ச நஞ்சம் பணம் கூடக் கொடுக்கலையா?” என்று கேட்டாள் அவள்.

“அதுகூடக் கேட்டுப் பார்த்தேனே! ‘இத்தனை வருசமா உனக்கு நான் வேலை கொடுத்து ஆதரிச்சதற்கு நீதாண்டா எனக்கு ஏதாச்சும் கொடுத்துட்டுப் போவணும்’ என்கிறானே!” என்றார் அவர்.

குழந்தை மணிக்கு அப்பாவைப் பார்த்த பிறகு அங்கே நிற்கவே மனமில்லை. ‘குதி, குதி’ என்று குதித்துக் கொண்டே அவன் வாசலுக்கு ஓடி வந்தான். அவனுக்கு எதிரே அவன் எதிர்பார்த்தபடி சங்கரும் வந்து கொண்டிருந்தான். “டேய் சங்கர்! என் அப்பா வந்துட்டாருடா! இனிமே நான் உன்னைப் போலவே சினிமாவுக்கு, ஹோட்டலுக்கு, ‘பீச்’சுக்கு – எல்லாம் போவேன், தெரியுமா!” என்று அவன் சங்கரிடம் பெருமையடித்துக் கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஒரே_உரிமை/005-015&oldid=1150392" இலிருந்து மீள்விக்கப்பட்டது