ஒரே உரிமை/006-015
அன்று மாலையும் வழக்கம்போல் அழுது வடியும் முகத்துடன் நாராயணமூர்த்தி வீட்டிற்குள் நுழைந்தான். நாடக மேடை ராஜா மாதிரி அவன் தன் குமாஸ்தா வேஷத்தைக் கலைத்துக் கொண்டிருந்தபோது, “இந்தாருங்கோ!” என்று குரல் கொடுத்துக் கொண்டே அவன் மனைவி குமுதம் அங்கே வந்தாள்– கையில் காப்பியுடன் அல்ல; ஏதோ ஒரு கிரஹப் பிரவேசப் பத்திரிகையுடன்.
“வந்துவிட்டாயா, ‘இந்......தா......ருங்கோ!’ என்று வஸந்த காலத்துக் குயில் மாதிரி குரல் கொடுத்துக் கொண்டே?– போ!– பெயரைப் பாரு, பெயரை! குமுதமாம்! உன்னைச் சுற்றிச் சுற்றி வண்டுகள் ரீங்காரம் செய்யாததுதான் ஒரு குறை!– உ.ம்...உன்னைச்சொல்லி என்னபயன்? ஒன்பது வருடமாக நானும் உன் பரட்டைத் தலையையும் எண்ணெய் வடியும் முகரக் கட்டையையும் பார்த்துக் கொண்டு வந்தும் இன்று வரை சந்நியாசம் வாங்கிக் கொள்ளாமலிருக்கிறேனே, அதைச் சொல்லு!” என்று தலையில் லேசாகத் தட்டிக்கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் நாராயணமூர்த்தி.
“பொழுது விடிந்ததும் வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு நீங்கள் வேலைக்காரர்களை வைத்திருக்கிறீர்களோ இல்லையோ– நாளெல்லாம் நாவல் படித்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கும் நான் சாயந்திரமானால் சிங்காரித்துக் கொண்டு குயில் மாதிரி கொஞ்சிக்கொண்டும் மயில் மாதிரி நடைபோட்டுக் கொண்டும் உங்கள் முன்னால் வந்து நிற்க வேண்டியதுதான்!– அப்படித்தான் நீங்கள் விதம்விதமான துணி மணிகள் எடுத்துப் பீரோ நிறைய அடுக்கி வைத்திருப்பது என்ன கெட்டுப் போச்சு? மாற்றிக் கட்டிக்கொள்ள மறு புடவைக்கு வழி கிடையாதே!” என்று குமுதமும் பதிலுக்கு எரிந்து விழுந்து கொண்டே, கையிலிருந்த பத்திரிகையை அவன்மேல் வீசி எறிந்துவிட்டு, அடுப்பங்கரையை நோக்கி நடந்தாள்.
அங்கே, அவளுடைய எட்டு வயதுப் பெண்ணான பட்டு இராத்திரிச் சாப்பாட்டிற்காகப் பொரித்து வைத்திருந்த அப்பளங்களில் ஒன்றை எடுத்துச் சுவை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தச் சாக்கில் அவளுடைய முதுகில் இரண்டு அறை வைத்துத் தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக் கொண்டாள் குமுதம்.
அதே சமயத்தில், வெளியே விளையாடிக் கொண்டிருந்த பட்டுவின் தம்பியான கிட்டு உள்ளே நுழைந்தான். அவன் சட்டையெல்லாம் ஒரே புழுதி மயமாக இருந்தது. அதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவனுடைய காதைத் திருகியதன் மூலம் தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான் நாராயணமூர்த்தி.
பட்டுவும் கிட்டுவும் அழுது கொண்டே வெளியே வந்து வீட்டு வாசற்படியில் உட்கார்ந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, “அக்கா, அம்மா உன்னை ஏன் அடிச்சா?” என்று கேட்டான் கிட்டு.
“ஒரு அப்பளத்தை எடுத்துத் தின்று விட்டேனாம், அதற்காக!” என்றாள் பட்டு.
“ஓஹோ...!”
“ஆமாம்; உன்னை ஏன் அப்பா அடிச்சார்?” என்றாள் பட்டு.
“சட்டையை அழுக்காக்கிக் கொண்டு வந்து விட்டேனாம், அதற்காக!” என்றான் கிட்டு.
பாவம், அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்த உண்மை அவ்வளவுதான்!– ஆனால், அவர்கள் அறியாத– ஏன், அவர்களைப் பெற்றோரே அறியாத உண்மையொன்றும் இருக்கத் தான் இருந்தது.
அதுதான் இந்தப் பாரத புண்ணிய பூமி முழுவதும் ‘பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்’ தரித்திரம்.
அதன் பயனாகத் தங்களுக்குள் ஒரு குற்றமும் இல்லா விட்டாலும், இன்று எத்தனையோ தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் இயற்கையாக நிலவக்கூடிய அமைதியைக் கூடக் குலைத்துக் கொள்ளவில்லையா?-அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நாராயணமூர்த்தியும் குமுதமும்.
***
ஆத்திரமெல்லாம் ஒருவாறு அடங்கியபிறகு, தன் மேல் பரிதாபமாக விழுந்து கிடந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தான் நாராயணமூர்த்தி. அது, அவனுடைய நண்பனை ஹரிகிருஷ்ணனிடமிருந்து வந்திருந்தது.
அவ்வளவுதான்; அவனுக்கு மீண்டும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
நேற்றுவரை அவனும் தன்னைப்போல் வாடகை குடித்தனம் செய்துகொண்டு வந்தவன்தான், இன்று......?
‘ஜாம், ஜாம்’ என்று தன்னுடைய சொந்த வீட்டில்– சகல செளகரியங்களும் பொருந்திய புத்தம் புது வீட்டில்– அவன் குடித்தனம் செய்யப் போகிறான்!
பார்க்கப் போனால் இதற்காக அவன் செய்ததுதான் என்ன?– ஒன்றுமில்லை. தனக்கு வீடு தேவையாயிருப்பதால் உடனே காலி செய்து கொடுக்க வேண்டுமென்று வீட்டுக்காரன் அவனுக்கு மூன்று மாத ‘நோட்டீஸ்’ கொடுத்தானாம். இந்த விஷயத்தை அவனுடைய வேட்டகத்தார் கேள்விப்பட்டார்கள். அதன் பலன்?
மூன்று மாதத்திற்கெல்லாம் தன்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு அழகான வீட்டைக் கட்டி முடித்து, அதை அவன் பேரிலேயே எழுதி வைத்து விட்டார் மாமனார், –கொடுத்து வைத்தாலும் இப்படியல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்?
உம்...... உலகத்தில் எத்தனையோ பேருக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. தனக்கோ......?
தன்னைவிட ‘தரித்திரம்’ தான் ஒன்று வந்து வாய்த்திருக்கிறது!
மாற்றிக் கட்டிக் கொள்ள மறு புடவைக்கு வழி கிடையாதாம் – அவளும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்கிறாளே!
“எனக்கும் கல்யாணமாகி ஏழு வருஷமாகிறது. இதுவரை நான் என் மனைவிக்குப் புடவையோ, ஜாக்கெட்டோ– ஒன்றும் எடுத்துக் கொடுத்தது கிடையாது. இன்று வரை அவள் கட்டுவதெல்லாம் அவளுடைய அப்பா எடுத்துக் கொடுத்ததுதான்!” என்று சொல்லி, அன்று ஹரி தன்னிடம் என்னமாய்ப் பெருமையடித்துக் கொண்டான்!
இங்கே என்னடா என்றால் எல்லாவற்றுக்கும் தன்னுடைய கழுத்தை அறுப்பதாக வந்து தொலைந்திருக்கிறதே!–எல்லாம் என் தலையெழுத்து!
உம்......தலையெழுத்தாவது மண்ணாங் கட்டியாவது!– அவன் முன் யோசனையோடு ‘நல்ல இட’மாகப் பார்த்துக் கல்யாணம் செய்து கொண்டான்; அதிர்ஷ்டமும் தானே கதறிக் கொண்டு அவனை வந்து சேர்த்தது.
நானோ...?
காதலென்றும், கத்தரிக்கா யென்றும் சொல்லிக் கொண்டு கவைக்குதவாத ஒருத்தியின் கழுத்தில் மாலையிட்டேன். அதன் பலன்?– இன்று நானும் அழுது வடிகிறேன்; அவளும் அழுது வடிகிறாள்!
அவனுடைய அர்த்தமில்லாத சிந்தனை அத்துடன் முடியவில்லை; இன்னும் மேலே மேலே சென்று கொண்டிருந்தது.
***
தன் கணவனின் மனக் குறையைக் குமுதமும் ஒருவாறு அறிந்துதான் இருந்தாள். ஆனாலும் அவள் அதற்காக என்ன செய்ய முடியும்?
பிறந்தகத்தின் நிலையை உத்தேசித்து, பின்னால் புக்ககத்தாரிடம் கேட்கப்போகும் வசவுகளையும் முன்னாலேயே ஒருவாறு உணர்ந்து, அவள் முதலில் தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றுதான் தன் பெற்றோரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள். அவர்களும் தங்கள் நிலையை உணர்ந்து, கல்யாண விஷயத்தில் அவளை அவ்வளவாக வற்புறுத்தாமல் தான் விட்டிருந்தார்கள். ஆனால், இரண்டு குடும்பங்களும் நெருங்கிப் பழக நேர்ந்ததின் காரணமாக, நாராயண மூர்த்திக்கும் குமுதத்திற்கும் இடையே நேசம் வளர்ந்தது. காவியங்களில் காணும் காதல் எல்லாம் வெறும் கற்பனை என்பதை அந்த ஜீவன்கள் உணரவில்லை. வாழ்க்கையில் அவன் கல்யாணம் ஆகுமுன், ‘கண்ணே, மணியே, கற்கண்டே!’ என்றதெல்லாம் ஒரு குழந்தை பிறக்கும் வரை தான் இருக்கும் என்பதை அப்பாவி குமுதம் அப்போது அறிந்திருக்கவில்லை.
குமுதத்தின் பெற்றோரும், நல்ல வேளையாக நாராயண மூர்த்திக்குத் தாயார், தகப்பனர் இல்லாததைக் கண்டு ஒருவாறு திருப்தி அடைந்தனர். ஏனெனில், “பின்னால் ஏதாவது ஏசிக் காட்டுவதாயிருந்தாலும் அவர்கள் இருந்தால்தானே!” என்று அவர்கள் நினைத்தனர். அதற்கேற்றார் போல் நாத்தனார் என்று சொல்லிக் கொள்வதற்கும் யாரும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நாராயணமூர்த்தியின் சித்தப்பாவும், சித்தியும் கல்யாணமானதும் அவர்களைத் தனிக்குடித்தனம் வைத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆகவே, இவ்வளவு செளகரியமான இடம் போனால் வராது என்று எண்ணியவர்களாய் குமுதத்தின் பெற்றோர், கடனோடு கடனாகக் கல்யாணத்தைத் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு சீக்கிரத்திலேயே செய்து முடித்துவிட்டனர்.
பாவம், ஸ்ரீமந் நாராயணமூர்த்தியைப் போலவே இந்த நாராயணமூர்த்தியும், நாத்தனாராகவும் மாமியாராகவும் மாமனாராகவும் பின்னால் அவதாரம் எடுப்பான் என்பதை அவர்கள் கண்டார்களா? இல்லை, குமுதம்தான் கண்டாளா?
அன்று இருபத்தைந்து ரூபாய் கடன் கேட்டு வாங்கி வரலாமென்று ஹரிகிருஷ்ணன் வீட்டிற்குப் போயிருந்தான் நாராயணமூர்த்தி. என்றுமில்லாதபடி அன்று வீட்டிற்குள் நுழையும்போதே ரேடியோவின் அலறல் அவன் காதில் விழுந்தது. அவனும் இதற்கு முன்னால் எத்தனையோ முறை ஹரிகிருஷ்ணன் வீட்டிற்கு வந்திருக்கிறான்; ரேடியோவின் அலறலைக் கேட்டது கிடையாது!– இன்று..?
அவனுக்கு ஏது ரேடியோ?
“அடேயப்பா! தன்னைப் போல் மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளம் வாங்கும் இவன் என்னவெல்லாம் செய்கிறான்!” என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைந்த அவனை, “என்ன, ஸ்ரீமந் நாராயணமூர்த்தி! ஒரு முறையாவது ‘மகாலக்ஷ்மி’யுடன் நம் வீட்டிற்கு விஜயம் செய்யக் கூடாதோ?” என்று கேட்டுக்கொண்டே வரவேற்றான் ஹரிகிருஷ்ணன்.
“மகாலசுமியில்லை; அவளுடைய அக்கா!” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே சுற்றுமுற்றும் பார்த்தான் நாராயணமூர்த்தி.
அங்கங்கே காணப்பட்ட வெள்ளிப் பாத்திரங்களும், விதம் விதமான மேஜை, நாற்காலி, ‘ஸோபா’க்களும் அவனுடைய ஆத்திரத்தை மேலும் தூண்டிவிட்டன. அவற்றைப் பார்க்கப் பார்க்க அவனுக்குத் தன் வேட்டகத்தாரின் மீது கோபம் கோபமாய் வந்தது.
அடுத்த நிமிடம் ‘கம்’மென்ற மல்லிகை மணம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அத்துடன் புத்தம் புதுப் பட்டாடை கட்டி நடப்பதனால் உண்டாகும் ‘சலக், சலக்’ என்ற சத்தமும் அவன் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தான்; சாட்டை போன்ற பின்னலை முன்னால் எடுத்துப் போட்டுக் கொண்டு, முகத்தில் முல்லையின் முறுவலுடன் லாவகமாக நடந்து வந்தாள் ஸ்ரீமதி ஹரி.
“இவளும் பெண்தானே, பார்ப்பதற்கு எவ்வளவு லட்சணமாயிருக்கிறாள்!” என்று தனக்குள் எண்ணி ஏங்கினான் நாராயணமூர்ந்தி.
அதற்குள் காப்பி வந்து சேர்ந்தது. அதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டே, “என்ன, ஹரி! இந்த ரேடியோவை எப்போது வாங்கினாய்?” என்று தன் ஆவலை அடக்க முடியாமல் கேட்டுவிட்டான் நாராயணமூர்த்தி.
“உம்...நானாவது, வாங்கவாவது! சென்ற வாரம் இவளுடைய அப்பா இங்கே வந்திருந்தார். ‘சாயந்திரமானால் பொழுது போவது சிரமமாயிருக்கிறது’ என்று அவரிடம் ஒரு வார்த்தை சொன்னேன். அதற்காக இந்த ரேடியோவை வாங்கி வைத்திருக்கிறார்!” என்றான் ஹரி பெருமையுடன்.
இதைக் கேட்டதும் எரிகிற தீயில் எண்ணெய் விட்டது போலிருந்தது நாராயணமூர்த்திக்கு. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், வந்த காரியத்தை முடித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான்.
***
இந்தச் சம்பவம் நடந்த இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒரு நாள் காலையில் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் நாராயணமூர்த்தி, “நோ, ரூம், நோ, ரூம்!” என்ற கண்டக்டர்களின் ஓயாத ஓலத்தைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன சமயத்தில், ‘திடுதிப்’பென்று மோட்டார் சைக்கிளில் வந்து அவனுக்கு முன்னால் நின்ற ஹரிகிருஷ்ணன், “என்ன, நாராயணமூர்த்தி! பஸ்ஸுக்காகவா காத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று அனுதாபத்துடன் கேட்டான்.
“ஆமாம்” என்று சொல்லக்கூட வாயடைத்துப்போய், அவனையும் அவன் ஏறி வந்த புத்தம்புது மோட்டார் சைக்கிளையும் ஏற இறங்கப் பார்த்தான் நாராயணமூர்த்தி.
“என்ன, பார்க்கிறாய்? உன்னைப் போல்தான் நானும் தினசரி இந்தப் பாழாய்ப்போன பஸ்ஸுக்காகக் காத்துக் காத்துப் பார்த்துப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கடைசியில் என் மாமனார்தான் இந்த மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொடுத்து, என்னுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைத்தார்!” என்றான் ஹரி.
“என்ன இருந்தாலும் நீ கொடுத்து வைத்தவன்தான்!” என்றான் நாரயணமூர்த்தி தன்னையும் மீறி வந்த வயிற்றெரிச்சலுடன்.
அதைக் கவனிக்காத அப்பாவி ஹரி, ‘எங்கே போகப் போகிறாய்? ஆபீஸ்க்குத்தானே? பின்னால் ஏறிக் கொள்ளேன், கொண்டுபோய் விட்டு விடுகிறேன்!” என்றான்.
நாராயணமூர்த்தியும் இயற்கையாகவே அழுதுவடியும் முகத்தை இன்னும் அதிகமாக அழுது வடிய வைத்துக் கொண்டு, பின்னால் ஏறிக்கொண்டான். மோட்டார் சைக்கிளும் காற்றாய் பறந்தது.
வழியெல்லாம் ஹரிகிருஷ்ணன் ‘வளவள’ என்று நாராயணமூர்த்தியிடம் என்னவெல்லாமோ பேசிக்கொண்டு வந்தான். அவையெல்லாம் அவனுடைய காதில் விழவேயில்லை. அவன் மனமெல்லாம் குமுதத்தையும் அவளுடைய அப்பாவையும் சபிப்பதிலேயே ஈடுபட்டிருந்தது. ஆபீஸில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஹரிகிருஷ்ணனுக்கு ‘தாங்ஸ்’ என்று ஒரு வார்த்தை சொல்லக்கூட அவனுடைய ஆத்திரம் இடம் கொடுக்கவில்லை. வாடிய முகத்துடனும், வேதனை நிறைந்த உள்ளத்துடனும் அன்று எப்படியோ வேலையைக் கவனித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தான்.
“இன்றைக்கு விறகு வாங்க வேண்டுமே, காசு கொடுக்காமல் போய் விட்டீர்களே!” என்றாள் குமுதம்.
அவ்வளவுதான்; “விறகுதானே வேண்டும்!” என்று சொல்லி, ஏற்கெனவே ஒரு கால் ஒடிந்து கிடந்த ஈஸிசேரைத் தூக்கி அவளுக்கு முன்னால் விட்டெறிந்தான் நாராயணமூர்த்தி.
அது அக்கு வேறு, ஆணி வேறாக உடைந்து விழுந்தது. அத்துடன் குமுதத்தின் உள்ளமும் சுக்குநூறாக உடைந்தது.
“என்னை ஏன் இப்படியெல்லாம் வதைக்கிறீர்கள்? உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லி விடுங்களேன், நாளைக்கே நான் இந்த வீட்டை விட்டுப் போய் விடுகிறேன்!” என்றாள் அழுகையும் ஆத்திரமும் கலந்த குரலில்.
“அட, சனியனே! நீ மட்டுமா போகப் போகிறாய்? உன்னுடன் கொண்டுவந்த வெள்ளிப் பாத்திரங்கள், மரச் சாமான்கள், ரேடியோ, மோட்டார் சைக்கிள், வீடுவாசல் எல்லாம் என்ன கதியை அடைவது? அவற்றையும் கையோடு எடுத்துக் கொண்டு போ!” என்று ஸ்ரீமதி ஹரியை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அவளைப் பரிகாசம் செய்தான் நாராயணமூர்த்தி.
“பிறத்தியார் சொத்துக்கு ஏன் இப்படி வாயைப் பிளக்கிறீர்களோ, தெரியவில்லையே! உங்களுடைய கையால் ஒன்றுமே ஆகாதா? என்னைப் போல் பிறந்தகத்தி விருந்து ஒன்றுமே யில்லாமல் வந்த எத்தனையோ பெண்கள் இன்று புக்ககத்தில் என்னைவிட மேலாக வாழவில்லையா? கைபிடித்த கணவனின் மூலமாகவே எல்லா விதமான சுக போகங்களையும் அடையவில்லையா? ஹரிகிருஷ்ணனுக்கு அவருடைய வேட்டகத்தாரிடமிருந்து எல்லாம் கிடைக்கிறதென்று நீங்கள் ஆத்திரப்படுகிறீர்களே, அடுத்த வீட்டு அமிர்தத்துக்கு அவள் அகமுடையான் வீட்டிலிருந்தே எல்லாம் கிடைத்து வருகிறதே, அதற்காக நானும் வேண்டுமானால் உங்களைப்போல் ஆத்திரப்படக் கூடாதா? ‘எனக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று எந்த நேரமும் உங்களை நச்சரிக்கக் கூடாதா? வேட்டகத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையே என்று உங்களுக்கு இருக்கும் மனக் குறைபோல, புக்கத்தாரிடமிருந்து ஒன்றும் கிடைக்கவில்லையே என்ற மனக் குறை எனக்கும் இருக்காதா?” என்று அத்தனை நாளும் தன் அகத்தில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஆத்திரத்தையெல்லாம் அள்ளி அள்ளிக் கொட்டிக் கொண்டே போனாள் குமுதம்.
அவள் வாயைப் பார்த்தபடியே தன் வாயைப் பிளந்து கொண்டு நின்றான் நாராயணமூர்த்தி.
அத்தனை நாளும் அவனுடைய உள்ளத்தில் உதயமாகாத ஒரு உண்மை அன்று உதயமாயிற்று.
“மனக் குறை என்பது ஆணுக்கு மட்டும் அல்ல; பெண்ணுக்கும் உண்டு!” என்பதை அவன் அன்றே உணர்ந்தான்.
அவ்வளவுதான்; அவனுடைய மனம் மாறிவிட்டது. “குமுதம்! நீ கொடுத்து வைக்காதவள்!” என்றான் நாதி தழுதழுக்க.
“நீங்களும்தான்!” என்றாள் குமுதம், கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.