ஓங்குக உலகம்/001-026

விக்கிமூலம் இலிருந்து





1. சமுதாயம்


1. ஓங்குக உலகம்

பேராரவாரம் - அஞ்சத்தக்க தோற்றம்-இவற்றுக்கிடையிலே பலவகையான குரல் ஒலிகள்-காட்டின் சூழ்நிலை இவை என் உறக்கத்தைக் கலைத்தன. கண்ணைக் கசக்கிக்கொண்டு எழுந்தேன். நல்லவேளை நான் என் வீட்டில் உட்கார்ந்திருப்ப துணர்ந்தேன். கோடையின் வெம்மை தாங்கமாட்டாது மே மாத இடையில் சென்னையில் வருந்தும் பல லட்சமக்களுள் யானும் ஒருவன் என்பதும், நான்கண்ட சூழ்நிலை, கேட்ட குரல்கள், பிற தோற்றநிலைகள் அனைத்தும் கனவிடைப் பெற்றனவே என்பதும் உணர்ந்தேன். கனவெனினும் அச் சூழ்நிலை என்னை அஞ்சவைத்தது-எனவே அதுபற்றி எண்ணினேன். கனவு நினைவிலே நிழலாடத் தொடங்கிற்று. கண்டது இதுதான்,

கொடிய காடு-வளமார்ந்த காடு. பல்வேறு வகைப் பட்ட விலங்குகளும் பறவைகளும் பெருமாநாடு நடத்தின. அவற்றுள் பலவற்றை நான் கண்டதே கிடையாது. அத்துணை அளவில் விலங்குகளும் பறவைகளும்-அவை வனவிலங்குவாரம் கொண்டாடினவோ என நினைத்தேன். எப்படியோ அவற்றினிடையில் நான் சிக்கினேன். அவை என்னை ஒன்றும் செய்யவில்லை என்றாலும், மனிதவிலங்குகளிடம் அகப்பட்டு அல்லல் உற்று உழன்ற எனக்கு, அவையும் ஊறு செய்யுமோ என அச்சம் உண்டாயிற்று. மாநாட்டில் அவை ஏதேதோ பேசின; எனக்கு அவற்றின் மொழி புரியாவிட்டாலும் நிச்சயமாக அவை மொழிகள் பற்றிச் சண்டையிட்டு மடியவில்லை-மடியத் தயாராக இல்லை என்பது மட்டும் நன்கு விளங்கிற்று. அவை கூடிய மாநாட்டின் அடிப்படையும் அவற்றின் பேச்சுக்களின் சாரமும் ஒருவாறு விளங்கின-ஒருவேளை கனவிடையிலேயே இருந்திருப்பின் அவை இன்னும் நன்கு விளக்கம் பெற்றிருக்கும். எனினும் இந்த மனித வேறுபாட்டிற்கு இடையே நினைவுபெற்ற எனக்கு, அவற்றின் ஒருமை உணர்வு பற்றிய பேட்டிகள் முழுதும் நினைவில் இல்லை. ஒருசில உள்ளன. அவற்றை மட்டும் இங்கே கூற நினைக்கிறேன்.

விலங்கினங்களும் பறப்பனவும் ஊர்வனவும் பல லட்சக்கணக்கில் வேறுபட்டனவாயினும், அவை அனைத்தும் தோற்ற நாளில் ஒரே மூலக் கூறுபாட்டின் அடிப்படையில்-கூர்தல் அற நெறியில்-தோன்றின என்ற உண்மையை உணர்ந்து, அனைவரும் ஓரினம்-அனைத்தும் ஒரு குலம்-என்ற மெய்ம்மையாம் வாழ்க்கை வாழ வேண்டுமென மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றின. அதுபற்றிப் பேசிய பல-நடக்கும்-பறக்கும்-ஊரும் உயிர்கள் மனிதனைப்பற்றி-அடிக்கடி பேசிய சொற்கள் நினைவில் நின்றன.

மனிதனைப்போல மேடைமேல் பேசிவிட்டு வாழ்க்கையில் மறக்கக்கூடாது என்றும், ஒன்றிய சமுதாயம் என்று சொல்லிக்கொண்டே சாதி பற்றியும் சமயம் பற்றியும் நீதி பற்றியும் நிறம் பற்றியும் மொழி பற்றியும் புதுப்புதுக் காட்சிகளையும் சபைகளையும் நாடுகளையும் அமைத்துக்கொண்டே சென்று படுகுழியில் விழக்கூடாது என்றும், புறத் தோற்றத்தாலும் உணவு, வாழ்வுமுறை முதலிய எல்லா வகைகளிலும் அவை வேறுபட்டவையாயினும் தோற்ற மூலக்கூறு ஒன்றேயாதலால் அந்த உடன் பிறப்பு உணர்விலேயே ஒன்றிவாழ்வதே தம் கடமை என்றும் அவை விளக்கிப் பேசின. அவற்றிற்கு உண்மையில் எந்த வேறுபாடும் இல்லையல்லவா! மேலும் தேவையற்றவற்றிற்கெல்லாம் சிறு சிறு சண்டைகளை உண்டாக்கி-பின் பெரும் போர் விளைக்க வித்திட்டு, அப்பெரும் போரில் உடன் பிறந்த மக்களையே கொன்றுகுவிக்க விதவிதமான குண்டுகள் செய்யும் அநாகரிக மனிதன், தம் இனத்திலிருந்து - விலங்கினத்திலிருந்து - பிறந்தானே என்று வருந்தி, அவ்வினத்தவன் திருந்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டு ஒரு தீர்மானமும்-அவ்வாறே திருந்தாவிடின் தாமே இயற்கைச் சூழலை உருவாக்கிக் கொடுமை நிறை உலகாக இதை ஆக்குவதைக்காட்டிலும் இவ்வுலகையே அழிக்கத் திட்டமிட வேண்டுமென ஒரு தீர்மானமும் நிறைவேற்றின.

இவை போன்று இன்னும் எத்தனையோ தீர்மானங்களும் பேச்சுக்களும் கடைசியாக ‘கூட்டத்தில் கூடி நின்று கூடிப் பிதற்றல் இன்றி நாட்டத்தில் கொள்ளவேண்டும்’ எனவும் அவ்வாறு கொள்ளாதவர் உயிரினத்திலிருந்தே ஒதுக்கப்படத்தக்கவர் எனவும் உணர்வுத் தீர்மானம் உருவாயிற்று. இவ்வாறு பல நினைவுக்கு வந்தன. எனினும் இவை அனைத்தும் கனவிடைக் கண்டன. ஆனால் அவை நனவிடைவரும்போது-அதுவும், உடன் பிறப்பால் ஒன்றியும் உளத்தால் மாறுபட்டும் வாழும் மனிதனோடு வாழும் நனவு உலகில் வரும்போது நமக்கும் அவற்றிற்கும் உள்ள தூரமும் வேறுபாடும் தோன்றாமல் போகுமா? ஆம்! மனித உணர்வோடு வாழவேண்டிய மனிதன் விலங்காகிக் கொண்டே வரும்போது, பாம்பும் பல்லியும் சிங்கமும் புலியும் வல்லூறும் கழுகும் பிற விலங்குகளும் பறவைகளும் ஒன்றிய மனித உணர்வு பெறுகின்றன.

இதனால்தானோ மனித வாழ்வில் முன்னோடிகளாக வாழ்ந்த பல நல்லவர்கள் பாம்பையும் கருடனையும் பிறவற்றையும் தெய்வங்களாக வணங்கினார்கள் என நினைத்தேன். மண்ணுலகை மட்டுமின்றி விண்ணுலகைச் சாடி அனைத்தையும் தனதாக்கிக்கொள்ள நினைக்கும் மனிதன், தன்னுடன் தன் வீட்டில் உள்ளவனோடே மாறுபட்டுக் கலாம் விளைத்துக் கெடும்போது இந்த உலகம் வாழுமா! ஓங்கி உயருமா! என எண்ணி அறிஞர்கள் கவலை கொள்ளுகின்றனர். நான் கண்டது கனவாயினும் இன்றைய மனிதனின் போக்கு, இக்கனவை நனவாக்கி மனிதன் விலங்கினும் கேடாய்க் கெட்டொழிவான் என்பதைக் காட்டுகின்றதே, ஒரே உலகம்-ஒரே சமுதாயம்-ஒரே இனம் என்ற உணர்ச்சி அரும்ப வேண்டும் என்று மேடைமேல் முழங்கும் தலைவர்கள் பலரும் தனித்தனி வகுப்பறைகள் அமைத்துக் கொண்டு அதில் வாழத்தானே திட்டம் தீட்டுகின்றனர். இந்த ‘உள்ளத்தே கொடுமை வைத்து-கூட்டைவாளா ஓம்பும்’ கொடிய மனிதனைக்காட்டிலும் பாம்பும் பிறவும் பலமடங்கு உயர்ந்தன அல்லவோ! ஆம்! மனிதன் செய்யத் தவறிய ஒருமை உணர்வினை-ஒரே உலக நெறியை-விலங்குகளும், பிறவும் செய்யத் தொடங்கும் காலம் வந்தாலும் வரலாம் அல்லவா என்ற உணர்வே என் உள்ளத்தில் பிறந்தது. அந்த நாள் வருமுன் மனிதன் திருந்தினால் உய்தி உண்டு. இன்றேல்......

1965 ‘உலகம்’
"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/001-026&oldid=1135746" இலிருந்து மீள்விக்கப்பட்டது