ஓங்குக உலகம்/005-026

விக்கிமூலம் இலிருந்து


5. விழாக்கள்


விழாக்கள் மிகப் பழங்காலந்தொட்டே உலகின் எல்லாப் பாகங்களிலும் கொண்டாடப் பெற்று வருகின்றன. நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பல்வேறு வகையில் விழாக்கள் மாறுபடும். தனி மனிதனைப் பற்றிய விழாக்கள், சமுதாய விழாக்கள், சமய விழாக்கள் நாட்டு விழாக்கள் என விழாவினைப் பலவகையில் பிரிக்கலாம். மேலும் நாகரிகமடையாத அன்றைய மக்கள் தொடங்கி (இன்று வாழும் நாகரிகமற்ற ஒதுக்கிடங்களில் வாழுபவர் உட்பட) நாகரிகம் பெற்றவர் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் இன்றைய மக்கள்வரை அவரவர் இனம், குழு, கொள்கை, வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகையில் விழாக்கள் உள்ளன...

தமிழில் விழாவின் அடிப்படையாக அமைந்த சொற்களைக் கண்டு அவற்றை விளக்கிய மேலைநாட்டு அறிஞர் (T. Burrou and M.B. Emeneau—Dravidian Etymological Dictionary) ஐந்து சொற்களை இதற்கு அடிப்படையாகக் கொண்டனர். ‘உக’ (476) என்ற அடிப்படையில் உகப்பு, ஓகை என்ற சொற்கள் மகிழ்ச்சியில் விளையும் விழாக்களாக அமையும், ‘நோன்’ (3147) என்பதன் அடியாக நோன்பு விழாவாக அமைகின்றது. பண்டிகை (3221) விழாவாகின்றது ‘பாண்’ அடியாகப் பாணர்-இசைவாணர் வழியும் விழா அமைகின்றது. ‘வேண்டு’ என்பதன் அடியாக வேண்டுதல், வேண்டுமை, வேட்பு என்ற வகையில் விழாவாற்றிட வேண்டிய பெறும் சிறப்பு காட்டப்பெறுகின்றது. இவ்வாறு விழாக்களின் அடிப்படை பல வகையில் அமைகின்றது.

தனி மனிதனைப் பற்றிய விழா அவன் பிறப்பதற்கு முன் தொடங்கி, மறைந்து அவன் நினைவுள்ள வரையிலும் நடைபெறுகின்றது. கருவளர் சிறப்பின் வளைகாப்பு. சீமந்தம் தொடங்கி, பிறந்தநாள் விழா, மணவிழா, மகப்பேறுவிழா, மணிவிழா என்ற வாழ்நாளில் அமையும் விழாக்களும் மறைந்தபின் சடங்கு அடிப்படையில் நடைபெறும் நினைவு விழாக்களும் தனி மனித விழாக்களாக அமைகின்றன. கூட்டு விழாக்களாகச் சமுதாய அமைப்பில் பொங்கல் விழா, புத்தாண்டு விழா, நிறைமதி பிறைமதி விழாக்கள், வசந்த விழா, வேனில் விழா போன்றவை நடைபெறுகின்றன. திறப்பு விழா, கால்கோள் விழா, தொடக்க விழா என்பனவும் கம்பன் விழா, வள்ளுவர் விழா என்பன போன்ற விழாக்களும் உள. சமய அடிப்படையில் பாரதத்தில் விநாயகர் சதுர்த்தி, கலைமகள் விழா, கார்த்திகை விழா, தீபாவளி போன்றவை இந்துக்களால் கொண்டாடப் பெறுகின்றன. மேலைநாடுகளில் தொன்மையான எகிப்திய கிரேக்க உரோம யூதர் நாடுகளில் நம் தமிழ்நாட்டினைப் போன்றே மிகப் பழங்காலந்தொட்டு சமய அடிப்படையிலும் சமுதாய அடிப்படையிலும் விழாக்கள் நடை பெற்றுள்ளன. (En. Britanica Vol. 9. p.p. 127&128) இங்கிலாந்து, ஜர்மனி, அமெரிக்கா, போன்ற நாடுகளில் அவர்தம் நாட்டின் நிலைத்த திருந்திய வாழ்க்கை அமைந்த பிறகு சமய அடிப்படையில் விழாக்கள் சிறந்ததெனக் காட்டுவர். (En. Britanica Vol. 9. p.p. 200 & 201) எனினும் அந்த நாடுகளிலும் பழங்காலந்தொட்டே பழங்குடிமக்கள் அவரவர் தம் மரபுநிலை பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது தேற்றம்.

சமய விழாக்கள் அடிப்படையில் கிறித்தவர்தம் கிறித்து பிறந்த நாள் விழா, நல்ல வெள்ளி போன்றனவும் மகமதியர்தம் ரம்சான், பக்ரீத் போன்றனவும் சீனாவில் கொண்டாடப்பெறும் புத்தர் விழாவும் நம் நாட்டு புத்த பெளர்ணமியும், சைனர்தம் தீர்த்தங்கரர் பற்றிய விழாக்களும் பிற சமயத்தலைவர் விழாக்களும் நினைவு கூர்தற்குரியன.

சமுதாய அடிப்படையில் நம்நாட்டில் காலந்தோறும் நடைபெறும் விழாக்கள் பல. அறுவடைப் பயன் கண்டு மகிழும் பொங்கல் விழாவும், வசந்த விழா, ஹோலிப் பண்டிகை போன்றனவும் அவற்றுள் அடங்கும். நாட்டு விழாக்களில் அமெரிக்க விடுதலைநாள் விழா, இந்திய விடுதலை விழா, குடியரசு விழா போன்றவை அடங்கும். இவற்றுடன் நல்லவர் பிறந்து, மறைந்த நாட்களையும் நாம் விழாவாகக் கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜயந்தி (கோகுலாஷ்டமி) இராமநவமி, காந்தி ஜயந்தி போன்றவை ஒருசில.

தனிமனிதன் செயல்களைப் பாராட்டும் வகையில் தமிழ்நாட்டிலும் பிறவிடங்களிலும் விழாக்கள் நடைபெற்றன-நடைபெறுகின்றன. வீரர் வழிபாடும், கல்நாட்டு விழா, மன்னர் பிறந்தநாள் மங்கல விழாவும், வெறியாட்டு விழாவும், உண்டாட்டு விழாவும் குருதிப் பலியும் பிறவும் தொல்காப்பியர் காலந்தொட்டு நாட்டில் நடைபெற்றுவருகின்ற விழாக்களாம்.

ஆறறிவுடை மனிதன் ஆரவாரத்தோடு விழாக்களைக் கொண்டாடும் வேளையில், பறவையும் விலங்கும்-ஏன் ஓரறிவுடைய மரமும் செடியும்கூடக் காலந்தொறும் விழாக்களைக் கொண்டாடுகின்றன. இரஷியப் பறவைகள் கூட்டமாகத் தமிழ்நாட்டு வேடந்தாங்கலில் வந்து தங்குவதும் காகம் கலந்துண்ணும் காட்சியும் எறும்பின் ஈட்டமும் விலங்குகளும் ஊர்வனவும் (சமுதாயமாக) இணைந்து செல்லும் காட்சிகளும் நமக்கு விழாவினை நினைப்பூட்டுவன வல்லவோ! பருவம் அறிந்து பூத்துக் காய்த்துக் கனிகளை வழங்கும் மாவும் பலாவும் மற்றவையும் மல்லிகை வசந்தத்தால் பூத்துக் குலுங்குவதும் ஓரறிவுடைய உயிர்கள் கொண்டாடும் மற்றவர் மகிழப் பயன் அளிக்கும் பருவ விழாக்கள்தாமே. இவ்வாறு உயிர்கள் அனைத்துமே ஏதாவது ஒருவகையில் விழா ஆர்ந்து மகிழ்கின்றன என்பது தெளிவு. ஆம்! நாம் மறந்தாலும் பருவவிழாக்களை அவ்வுயிர்கள் நினைவூட்டுகின்றனவே.

விழா எதற்கு என்று எண்ணிப்பார்க்க வேண்டும். பூம்புகாரிலே இந்த விழாவினை அறிவித்த வள்ளுவ முதுமகன்,

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வரனும் சிறக்கென வாழ்த்தி'

விழாவினைப் பற்றி அறிவித்தான் என்பர் இளங்கோவடிகள். எனவே நாட்டின் பசியும் பிணியும் நீங்கவும் மக்கள் பகையற்று வாழவும் செல்வ வளன் நாட்டில் சிறக்கவுமே விழாக்கள் நடைபெறுகின்றன என்பது உண்மையாகும். பெற்றது கொண்டு சுற்றத்தாரை மட்டுமன்றி எல்லாரையும் இணைத்து இன்பம் காண்பதுவே விழாவாகும். பூம்புகாரின் இந்திர விழாவிலும் பழைய இலக்கியங்களில் விரும் பிற விழாக்களிலும் இன்றைய சமுதாய நாட்டு விழாக்களிலும் இத்தகைய செயல்களைக் காணலாம். எல்லாரும் இன்புற்று வேறுபாடற்று இணைந்து வாழ வழி வகுப்பதே விழாவாகும்.

‘ஐப்பசி ஓண விழவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்’

என்று ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் கூறியுள்ளார். இன்று நாட்டில் இசை விழாக்களும் ஒவ்வொரு துறையினரும் ஆண்டுக்கு ஒரு வாரம் நடத்தும் மரியாதை அல்லது நற்செயல் போற்றும் விழாக்களும் நடைபெறுகின்றன. பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இசை விழாக்களைப் பாணர் நடத்திவந்துள்ளனர். இங்கிலாந்து ஜர்மனி, அமரிக்கா போன்ற மேலை நாடுகளிலும் 17, 18-ம் நூற்றாண்டுகளில் இத்தகைய இசைவிழாக்கள் நடை பெற்றுள்ளன என அறிகின்றோம்.

தமிழ்நாட்டில் பருவந்தோறும் நடைபெறும் விழாக்கள் பல, மிகப் பழங்காலத்தில் நடைபெறும். இத்தகைய விழாக்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் நன்கு காட்டுகின்றன. புனலாட்டு விழா என வெள்ளப்பெருக்கில் அதைப் போற்றி வழிபடுவதோடு ‘வந்தன்று வையைப்புனல்’ என்று வாழ்த்தி அதில் ஆடவரும் பெண்டிரும் திளைத்தாடும் விழாவினைப் பரிபாடல் பல விடங்களில் விளக்குகின்றது. இன்றும் காவிரிப் பெருக்கினைப் போற்றும் ஆடிப்பெருக்கு விழா நாட்டில் உண்டே! அரசர்தம் பிறந்தநாள் விழா, மண்ணுமங்கலம் போன்றவற்றை விளக்குகின்ற இலக்கியங்கள் பல. மேலும் வசந்த விழாவினை ஊர்தொறும் கொண்டாடிவந்த சிறப்பினை- முக்கியமாகப் பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழாவினைச் சிறப்பிக்கும் முகத்தான் ‘சித்திரைத் திங்கள் சேர்ந்த’ பெருவிழாவினை இளங்கோவடிகள் விளக்குகிறார். பின் வேனிற்காலத்து வேட்டுவர்தம் விழாவினையும் இடைக்குல மகளிர்தம் ஆய்ச்சியர் குரவையினையும் சேரநாட்டில் மலைக்குரவர்தம் குன்றக்குரவையினையும் காண்கின்றோம். இப்படி ஐந்திணையிலும் ஆற்றுப்பெருக்கிலும் கடற்கானலிலும் அவ்வந்நிலத்து மக்கள் ஆற்றும் விழாக்கள் இன்றும் தமிழ்நாட்டில் வற்றி விடவில்லை.

தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தியவர்கள். அவர்களுக்குத் திங்கள்தொறும் வரும் நிறைமதி நாளே விழா நாளாக அமைந்தது. சித்திரையில் கலந்த நிறைமதியும், வைகாசியில் விசாகமும், கார்த்திகையில் கார்த்திகையும், மார்கழியில் ஆதிரையும், தைப்பூசமும், மாசி மகமும், பங்குனி உத்திரமும் அத்தகைய நிறைமதி விழாக்களேயாகும். இன்றும் கடற்கரையிலும் ஆற்றுப்படுகைகளிலும் கலந்து, இந்த நிறைமதி விழாக்கள் கோயில்தோறும் ஊர்தொறும் நடைபெறுவதறிகிறோம். இவை தெய்வத் திருத்தலங்களில் இனிய பத்து நாட்கள் தொடர்ந்த பெருவிழாவென நடைபெறுகின்றன. இந்த நாட்களிலும் அவ்விடத்தில் வாழ்வார் வேறுபாடற்று, சமுதாய உணர்வோடு ஒன்று கூடி, பசியும் பிணியும் பகையும் நீங்கிய வகையில் மகிழ்ந்து விழாவாற்றுகின்றனறன்றோ?

தமிழ்நாட்டு விழாக்களில் சிறந்த விழாவாகக் கொண்டாடப் பெறுவது பொங்கல் விழாவாகும். இவ்விழாவினைப்பற்றிப் பழைய இலக்கியங்களில் போதுமான சான்றுகள் இன்றேனும் இன்று இது சாதி, சமய வேறுபாடற்ற உழவர் விழாவாக நடைபெறுகின்றது. ஆடியில் இட்ட வித்து ஐப்பசி கார்த்திகையில் அறுவடையாக, கார்த்திகையில் புதுநெல் கொண்டு அவலாக்கி ஆண்டவனுக்குப் படைத்தனர். பின் மார்கழி நோன்பாகவும் தை நீராடலாகவும் தொடர்ந்துவரும் விழாவினை ஒட்டி, தை முதல் நாளைப் பொங்கலாகவும் அதற்கு முன் நாளை உள்மாசும் புறத்தூசும் போக்கும் போகி நாளாகவும், அடுத்த நாளை உழவுக்குதவிய மாடுகளைப் போற்றும் நாளாகவும் அதற்கு அடுத்த நாளை உற்றாரையும் மற்றாரையும் கண்டு மகிழ்ந்து இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் காணும் பொங்கல் விழாவாகவும் தமிழர் இன்று வரையில் போற்றிவருகின்றனர். வடநாட்டிலும் போகியை இந்திர விழாவாகவும் பொங்கலை பகிர்ந்துண்ணும் நாளாகவும் கொண்டாடுகின்றனர். எந்த வேறுபாடும் இன்றி யாவரும் இணைந்து மகிழும் சிறப்பினை இன்றும் ஹோலிவிழாவில் காணமுடிகின்றது.

சில விழாக்கள் விரத நாளாகவும் அமைகின்றன. கார்த்திகை விளக்கீடு உள்ளொளி பெருக்கி, புறஇருள் அகற்றி நிற்பதோடு உண்ணாவிரத நாளாகவும் அமைகின்றது. அப்படியே கெளரி விரதம் போன்றவையும் அமையும். கலைமகள் விழா பத்து நாட்கள் கொண்டாடுவது நாட்டில் கல்வி, கைத்தொழில் போன்றவற்றை வளர்க்கப் பயன்படுகின்றது. சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றில் இவ்விழாக்களின் சிறப்புப்பேசப்பெறுவதன்றி, பின் எழுந்த பல சமய இலக்கியங்களாகிய உலா, கோவை, பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பள்ளு போன்றவையும் இவ்விழாக்களைப் பற்றி விளக்குகின்றன. மணிவாசகர், ஆண்டாள் போன்ற அடியவர் பெண்கள் விளையாட்டு வகைகளை விழாக்களாகவே பாடிப் பரவுவர்.

இன்று முன் காட்டியபடி தனிமனிதவிழாவாக-சமுதாய விழாவாக-சமய விழாவாக - நாட்டு விழாவாக-உலக விழாவாக (ஐக்கிய நாட்டு UNO விழாக்கள்) விளையாட்டு விழாவாக (ஒலிம்பிக் போன்றவை) பல்கிப் பெருகிய நிலையில் விழா பலவகையில் விரிவடைந்துள்ளது. அதே வேளையில் நம் பழம் பெரும் இலக்கியங்கள் காட்டிய விழாக்கள் அனைத்தும் தொடர்ந்து இன்றுவரை நடைபெற்று வருவதையும் காண்கிறோம். மனித இனம் ஒன்றுபட, இணைந்து நலம் பெற, வேற்றுமை நீங்க, பசியும் பிணியும் அகல, எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று எழிலுற்று வாழ, உயிரினம் இன்பம் துய்க்க இந்த விழாக்களே அடிப்படை என்பதை யாரும் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.
—(1975)

சான்றுகள்-

1. தொல்காப்பியம் 2. புறப்பொருள் வெண்பாமாலை 3. சங்க இலக்கியம் 4. காப்பியங்கள் 5. தேவாரம் 6. திருவாசகம் 7. பிற்கால இலக்கியங்கள் பிற.

Ref 1. Encyclopeadia Britanical xlv Edition Vol. 9
2. Castes and Tribes of South India, Thurdston
3. Etymdological Dictionary by T. Burrow & M 3, Emeneau

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/005-026&oldid=1135768" இலிருந்து மீள்விக்கப்பட்டது