ஓங்குக உலகம்/014-026
14. நாட்டுக்குழைத்த நல்லவர்
திரு மீ. பக்தவத்சலம் அவர்களை நான் இளமை முதலே அறிவேன். நான் செங்கற்பட்டில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘இந்திய வாலிபர் சங்கம்’ அமைத்துத் ‘தீண்டாமை விலக்கு’, ‘மது விலக்கு’ போன்ற பிரசாரங்களைச் (1929-31) செய்துவந்தேன். பலர் உறுப்பினராகி உடன் செயலாற்றினர். அப்போது சென்னையில் படித்துவந்த ஒ.வி. அளக்ேசன் அவர்கள் தீவிர காங்கிரஸ்வாதி. அவர் எங்கள் சங்கத்தில் கலந்து ஊக்கமளிப்பார். அப்படியே திரு. பக்தவத்சலம் அவர்களும் ஆண்டு விழா முதலியவற்றில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்துவார்கள். எனவே அந்த நாள் முதலே (1930) அவர்களை நன்கு அறிவேன்.
பின் நான் செங்கற்பட்டு மாவட்டக் கழகத்துக்கு உறுப்பினனாகப் போட்டியிட்டபோது, இந்தித் திணிப்பின் காரணமாக காங்கிரஸ் தொடர்பு அற்றவனானேன். அதற்கு முன்பும் நான் தீவிர உறுப்பினனாக இன்றேனும், காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்டு நின்றேன். 1936ல் இராஜாஜி மந்திரிசபை அமைத்தபோது பக்தவத்சலம் அவர்கள் பார்லிமெண்டரி காரியதரிசியாகி, மயிலை வடக்கு மாடவீதியில் குடியிருந்தார். (அன்றைய எண்.4) அப்போது அடிக்கடி அவர்களைப் பார்ப்பதுண்டு. பின் நான் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்துத் தேர்தலில் 1938ல் போட்டியிட்டபோது எனக்கு எதிராக அளகேசன், பெரியார் முத்துரங்க முதலியார் உட்படப் பலர் ஊர்தொறும் பிரசாரம் செய்தனர். ஆயினும் பக்தவத்சலம் அவர்களை அழைத்தபோது ‘நான் பரம சிவானந்தத்துக்கு எதிராக பிரசாரம் செய்ய வர மாட்டேன்’ என மறுத்துவிட்டார். இதை எனக்குப் போட்டியாக, காங்கிரஸ் சார்பில் நிறுத்தி வைக்கப்பெற்ற என் நண்பரே சொல்லக் கேட்டு வியந்தேன். பிறகு சென்னை வந்தபோது அவரைக் கண்டு நன்றி தெரிவித்துக் கொண்டேன். தேர்தலில் நான் வெற்றி பெற்று ஐந்தாண்டு (1838-48) உறுப்பினனாக இருந்தேன்.
திரு பக்தவத்சலம் அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தில் காரியதரிசியாகவும் பின் அமைச்சராகவும் பொறுப்பான உயர்நிலையில் இருந்தமையால் அடிக்கடி மக்கள் தேவை-நலம் கருதி அவரைக் கண்டேன். அவரும் ‘காட்சிக் கெளியராய்’, கேட்டுக் கூடியவரையில் பல் நல்ல ஆக்கப் பணிகளுக்கு உதவி அளித்தார். ஒருமுறை நாட்டில் ஊற்றுக் கால்வாய்களைத் துப்பரவு செய்து, வேளாண்மையைப் பெருக்க நினைத்த நிலையில் எங்களூர்களுக்கு நன்மை செய்ய வலிந்து உதவினார். (அவர் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார்.) என்னை அழைத்து அவர்கள், உங்களூர்க் கால்வாயினைச் சுத்தம் செய்யும் பணியினை நீயே எடுத்துக் கொள். ஒப்பந்தக்காரர்கள் கொண்டால் பாதிப் பணமும் அதில் வந்து சேராது. இப் பணியில் ஊரார் நான்கில் ஒருபாகம் தருவதாக (பணியாக) இசைந்தால், உடன் நீ பணியினை மேற்கொள்ளலாம் என்றார். நான் உடனே என் ஊரில் (அங்கம்பாக்கம்) உள்ள பெரியவர்களைக் கலந்து அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டேன். ஒரே வாரத்தில் (1947-48 என எண்ணுகிறேன்) அப்பணி என்னிடம் ஒப்படைக்கப் பெற்றது. (அப்போது கோபால ஐயர் என்பவர் செயற் பொறியராகவும் திருமலை ஐயங்கார் மேற்பார்வைப் பொறியாளராகவும் இருந்தனர் என எண்ணுகிறேன்) இவ்வாறு பல வகையில் அன்று ஊர் மக்களுக்கு உதவினார்கள்.
நான் செயலாளனாக இருந்து வாலாஜாபாத்தில் உயர்நிலைப்பள்ளி தொடங்கிய நாளில், எங்களுக்குத் தேவையான ஆறு ஏக்கர் நிலத்தினை (புகைவண்டி நிலையத்துக்கு எதிரில்) அன்றை மாவட்ட ஆட்சியாளரிடம் சொல்லி எங்களிடம் ஒப்படைக்கச் செய்தனர். பின் அதன் தொடக்கவிழா, கட்டடக் கால்கோள், திறப்புவிழா ஆகியவற்றில் கலந்து சிறப்பித்தனர். அந்தப் பள்ளிக்குக் கட்ட இருபத்தையாயிரம் குறைய, பேரறிஞர் அண்ணா அவர்கள் இரு நாடகங்கள் நடத்தி முழுவசூலையும் தந்து உதவினார்கள். எல்லா விழாக்களிலும் இருவருமே கலந்துகொள்வர்.
நான் சென்னைப் பச்சையப்பரில் பணி ஏற்றபின் அடிக்கடி அமைச்சர் பக்தவத்சலம் அவர்களைக் காண்பேன். எப்போதும் இன்முகத்தோடு வரவேற்று, வேண்டிய மக்கள் நலத் தொண்டுகள் நடைபெற உதவுவார். நான் என் தேர்தல் வெற்றிக்குப் பின் எந்தக் கட்சிகளுடனும் தொடர்புகொள்ளாது தமிழ்ப்பணி செய்வது ஒன்றனையே கடனாகக் கொண்டேன் (கருத்தரங்கக் கட்டுரைகள்-ம.கி. தசரதன்). உடன் சமுதாயப் பணிகளில் ஈடுபட்டுத் தொண்டாற்றினேன்.
1955ல் திரு.வி.க. மறைவிற்குப் பிறகு ஷெனாய் நகரில் நான் செயலாளனாக இருந்து ஒரு பள்ளி தொடங்க முயன்று வெற்றி கண்டு, அதற்குத் திரு.வி.க. உயர்நிலைப்பள்ளி என்றே பெயரிட்டேன். அதற்கு டாக்டர் மு.வ. அவர்களும், டாக்டர் சுந்தரவதனம் அவர்களும் பெரிதும் உதவினர். அதற்குரிய நிலம்பெற (சுமார் 8 ஏக்கர்) திரு பக்தவத்சலம் அவர்கள் நகராண்மைக் கழக ஆணையருக்குச் சொல்லி உதவினர். பின் பள்ளித் திறப்பு விழாவின்போது அவர்களும் பெருந்தலைவர் காமராசரும் அன்றைய கல்வி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்களும் ஒருசேர வந்து கலந்து வாழ்த்தினர். இன்று அத் ‘திரு.வி.க.’ பள்ளி சிறக்க வளர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நடுத்தர-ஏழை மாணவர்களுக்கு உதவுகிறது.
அமைந்தகரையில் நான் சொந்தமாக வீடுகட்டிக் குடியேறியபோது அந்தத் தமிழ்க்கலை இல்லத்தினை திரு பக்தவத்சலம் அவர்களே திறந்து வைத்தார்கள். திறந்து வைத்து எங்களுடன் உடன் இருந்து உண்டு வாழ்த்திச் சென்றனர். பின் அவர் வாழ்த்தின் பலத்தால் என் தனிவாழ்வும் சமுதாயப் பணியும் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கின்றன.
தமிழுக்கு அவர்கள் ஆற்றிய பணியினையும் குறிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் காலத்தில்தான் ‘ஜான் முர்டாக்’கின் தமிழகம் பற்றிய தொகுப்பும் பிறவும் வெளிவந்தன. தமிழ் வளர்ச்சிக் கழகம் போன்ற அமைப்புகள் உருவாயின. வெளிப் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை அமைக்கப் பெரிதும் உதவினார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது அவற்றிற்கு வேண்டிய நிதியினை உதவினார். ஒருமுறை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தார் நிதி வேண்டி என்னையும் அழைத்துக் கொண்டு அவரிடம் சென்றனர். ஒரு பத்தாயிரம் எதிர் பார்த்தனர் என அறிந்தேன். அவர்களிடம் பெங்களூரில் இவர்கள் செய்யும் தொண்டினை விளக்கி, வந்த காரியத்தையும் குறித்தேன். ‘எவ்வளவு தரவேண்டும்’ என்று என்னையே கேட்டார். ‘தங்கள் விருப்பம்’ என்றேன் அவர்கள் நினைந்து வந்ததற்கு இரண்டு மடங்குக்கு மேலாகத் தருவதாகக் கூறி, அவர்கள் விண்ணப்பத்தினைப் பெற்று ஒரு வாரத்தில் உரிய காசோலையினையும் அனுப்பி உதவினார்கள்.
அவர்கள் காலத்தில் முதல் முதல் அரசாங்கக் கல்லூரிகளில் தமிழாசிரியர்களுக்கு இருந்த தாழ்வுநிலை நீங்கிற்று. அவரேதான் முதல்முதல் தமிழாசிரியர்களை முதல்வராகும் நிலைக்கு உயர்த்தினர். பின் பல்கலைக் கழகத்தின் தலையீட்டால் அந்நிலை இடர்படினும் இறுதியில் இவர் முடிவு ஏற்றுக்கொள்ளப் பெற்றது. உஸ்மானியா, தில்லி, லக்னோ, பஞ்சாப் ஆகிய இடங்களில் தமிழ்த்துறை அமைய இவரே முதற் காரணர் என்பது உண்மை. இவ்வாறே பலவகையாய் இவர் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார்.
கோலாலம்பூரில் மலேயாப் பல்கலைக்கழகம் தொடங்கிய காலத்தில் இந்திய மொழித்துறைக்கு எந்த மொழியை அமைப்பது என்று கேட்டனர். அது பற்றிச் சென்று சண்டுவந்த பெரியவர், அம்மொழி ‘வடமொழி’ யாகத்தான் இருக்கவேண்டும் என இந்திய அரசுக்குத் தெரிவித்தனர். ஆயினும் அன்று தமிழக முதல்வராக இருந்த ஓமந்தூராரும் திரு பக்தவத்சலமும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை அழைத்து உடன் மலேயா செல்ல வேண்டும் என ஆணையிட்டார் பக்தவத்சலம் அவர்கள். 1948ல், அவர்கள் ஆணையினை ஏற்று, மலேயா முழுவதும் சுற்றிச் சுமார் இரண்டு மாதங்கள் இருந்து உண்மை கண்டு இந்தியத்துறைக்குத் தமிழே இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினேன். அப்படியே அங்கே தமிழ் இடம்பெற்று, இன்றும் சிறந்து வாழ்கிறது. இதை நினைவில் வைத்த மலேயா நாளிதழ் ‘தமிழ் நேசன்’ நான் 1985ல் அங்கே சென்றபோது, முதல் பக்கத்தில் பெரிய தலைப்பில், ‘மலேயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ் வேண்டுமென்று வற்புறுத்திய பேராசிரியர் வருகை’ என்று என் புகைப்படத்துடன் செய்தியை வெளியிட்டது. எனவே மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழ் இடம் பெற்றமைக்குரிய பெரும் பங்கு இவரையே சாரும்.
1966ல் சூன் மாதத்தில் ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்திலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ‘தமிழக அரசின் (அன்றைய சென்னை அரசின்) பரிந்துரையின்பேரில் அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவனாக நான் நியமிக்கப் பெற்றிருப்பதாகவும் உடன் பணியில் சேரவேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் அதுபற்றி நினைக்கவும் இல்லை. அன்றைய தமிழக முதல்வர் இவர்தாம். எனவே உடனே இவர்கள் இல்லம் சென்று கடிதத்தைக் காட்டினேன். அவர் ‘ஆம்! நான்தான் பரிந்துரை செய்தேன். நீங்கள் எங்கும் வெளியூர் செல்ல மாட்டீர்கள் என்பது தெரியும் (ஒருமுறை இதியோப்பியாவுக்கு என்னைச் செல்லுமாறு பணிக்க நான் மறுத்ததைச் சுட்டிக் காட்டினார்). எனவே கேளாமல் அனுப்பிவிட்டேன். வெளிமாநிலத்தில் தமிழரின் பெருமையைத் தக்கவாறே காக்கவேண்டும். எனவே நீங்கள் செல்லத்தான் வேண்டும்’ என வலியுறுத்தினார். எனினும் நான் இசைந்து, ஒரு வேண்டுகோள் விடுத்தேன். நான் அங்கிருக்கும்போது, அவர்கள் பலமுறை தில்லி செல்லும் வழியில் ஒருநாள் ஐதராபாத்தில் தங்கி, அங்குள்ள தமிழர் கூட்டங்களில் பேசவேண்டும் என்பதே அது. அவர்களும் இசைந்தார்கள்.
உஸ்மானியாவில் ஒருநாள் என் அறையிலிருந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தொலைபேசியில் சென்னை முதல்வரின் செயலர் என்னை அழைப்பதாகக் கூறினர். உடனே சென்று கேட்டபோது முதல்வரின் செயலர் (கிருஷ்ணையா என நினைக்கிறேன்) மறுநாள் காலை தில்லி செல்லும் வழியில் 9 மணிக்கு முதல்வர் அங்கு இறங்கி, மறுநாள் அதேவிமானத்தில் செல்வதாகத் தகவல் தந்தார். ஆந்திர அரசுக்கும் தெரிவித்திருந்தனர். அப்போது திரு. பிரமானந்த ரெட்டி அங்கே முதல்வர். அவர்கள் அங்கே தங்குவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
மறுநாள் காலை விமான நிலையத்தில் தமிழர் பலர் சூழ அவரை வரவேற்றேன். அன்று பிற்பகலிலும் மாலையிலும் ஐதராபாத்திலும், சிக்கந்திராபாத்திலும் தமிழர் பெருங்கூட்டத்தில் பேசி மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த என்னிடம், ‘திருப்திதானே’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நான் அவர்தம் பெருந்தன்மையினை எண்ணி, வியந்து, போற்றி வழியனுப்பினேன்.
அவர்தம் மகளார் ருக்குமணி அவர்கள் திருமணத்தின் போது அவர் அமைச்சராக இல்லை. எனினும் அந்த மண வேளையில் (சுமார் 10-30 மணி இருக்கும்) தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் எல்லாச் செயலர்களும் பிற அதிகாரிகளும் வந்திருந்ததை, அத்திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அன்றைய முதல்வர் இராஜாஜி அவர்கள் ‘செக்ரடேரியட்டே இங்கே வந்திருக்கின்றதே’ என வியந்தனர். இதுவே திரு பக்தவத்சலம் அவர்களது பண்பினையும் மக்கள் தொடர்பையும் அவர் கீழ் பணிபுரிந்த செயலர் மற்றவர்தம் பரிவினையும் விளக்கும்.
அவர்கள் 1952 தேர்தலில் தோல்வியுற்றபின் பாரத தேவியின் நிருவாக ஆசிரியரானார். எனினும் அதன் பொறுப்பினைக் கவனிக்க ஒருவர் தேவையாக இருந்தது. என்னை அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளச் சொன்னார். நான் கல்லூரியில் பணி செய்வதால் இயலாநிலையினைச் சொன்னேன். பின் அவர்கள் அன்று பச்சையப்பர் அறநிலையக் குமுவின் முக்கிய தலைவர் செட்டிநாட்டு அரசரிடம் ஏதோ சொன்னார். அவர் ஆணையின்படி எனக்கு உரிய மணிகள் (14) பகல் இரண்டு மணி வரையிலும் கல்லூரியில் அமைய, பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில் அவருடன் இருந்து நிருவாகத்தைக் கவனித்து வந்தேன். பாரததேவி காலைப் பத்திரிகை. பின் அவர்கள் சுதேசமித்திரனில் ஆசிரியராக இருந்தபோதுகூட என்னை வரச்சொல்லிப் பேசுவார்கள்.
அவர்தம் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் நடைபெறும். சில ஆண்டுகளில் நான் செயலாளனாக இருப்பேன். திரு இராஜாஜி, திரு காமராசர் போன்ற பெருந்தலைவர்கள் வந்து தலைமை வகித்து வாழ்த்துவர். 1967ல் நான் செயலாளனாக இருந்தேன். செயற்குழு திருவல்லிக்கேணியில் கூடியது. யார் தலைமை வகிப்பது என்று பேசினர். நான் அன்றைய முதல்வர் ‘அண்ணா அவர்களை அழைக்கலாம்,’ என்றேன். எனினும் பலர் அவர்கள் வரமாட்டார்கள் என்றனர். நான் அந்தப் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் என்றேன். கூட்டம் இரவு 8.30க்கு முடிந்தது. நேரே நுங்கம்பாக்கம் ‘அவின்யூ சாலை’ அண்ணா இல்லத்துக்கு வந்தேன். அவர்கள் மேலே இருந்தார்கள். கீழே செயலர் (திரு. சொக்கலிங்கம் என எண்ணுகிறேன்-சரியாக நினைவில்லை) இருந்தார். என்னை மேலே போகச் சொன்னார். நான் அந்நேரத்தில் வந்ததைக் கேட்க, நான் ‘முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவிற்கு இந்நாள் முதல்வர் தலைமையேற்க வேண்டும்’ என்று சொன்னேன். உடனே அண்ணா அவர்கள் ‘இதைவிட எனக்கு வேறு என்ன வேலை?’ என்று கூறி, செயலாளரை நாட்குறிப்பைக் கொண்டுவரச் சொன்னார்கள், அதில் அன்று வேறு நிகழ்ச்சி குறிக்கப்பெற்றிருந்தது. அதை மாற்றிக்கொள்ளச் செய்து, தலைமை ஏற்க இசைந்தார்கள். வந்தார்கள். இருவரும் கலந்து மகிழ்ந்த காட்சியினைக் கண்டு மகிழ்ந்தேன். திருவல்லிக்கேணி நேஷனல் மகளிர் பள்ளியில் விழா நடைபெற்றது. விழாவில் வரவேற்றுப் பேசிய நான், இருவரையும் பாராட்டி, போற்றி ‘இன்றே போல்க நும்புணர்ச்சி’ என்ற சங்கப் புலவன் வாழ்த்தால் வாழ்த்தி மகிழ்ந்தேன். இருவர்தம் உள்ளமும் இயைந்த பெருநிலை கண்டு பெருமகிழ் வெய்தினேன்.
ஒருமுறை சட்டமன்ற மேலவையில் நியமன உறுப்பினர் ஒருவரைத் தேர்வு செய்யவேண்டி வந்தது. திரு பக்தவத்சலம் என்னை அழைத்து, மேலவைக்கு ஒருவரை நியமிக்கவேண்டும். அதற்கு உங்கள் பெயரை சிபாரிசு செய்யப்போகிறேன். ‘தமிழாசிரியர் ஒருவரைத் தான் நான் சிபாரிசு செய்வேன்’ என்றார். நான் தாழ்மையாக ‘ஐயா! நான் அரசியலிலிருந்து விலகி நெடுந்தூரம் வந்துவிட்டேன். மன்னியுங்கள். என்னை விட்டு விடுங்கள்’ என்றேன். அவர் இசைந்தார். எனினும் அந்த இடத்துக்கு மற்றொரு தமிழாசிரியரையே நியமித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே பலவகையில் பணிபுரிந்த நல்லவர். நான் என் சொந்தப் பொறுப்பில் வள்ளியம்மாள் கல்வி அறம் தொடங்கிய போதும் இடம் பெற உதவி செய்தார். (இதனை விரிவாக என் ‘திரும்பிப் பார்க்கிறேன்-திகைத்து நிற்கிறேன்’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். (பக். 151-152). தவிர, பள்ளி தொடங்கும் போதும் கட்டடத் திறப்பின்போதும் வந்து கலந்து கொண்டு மகிழ்வித்தனர். பார்வை குறைந்த காலத்தும் எங்கள் குழந்தைகள், சமயத்தோடு பொருந்திய சமுதாயத் தொண்டினைப் பாடியில் (திருவலிதாயம்) தொடங்கிய ஞான்று வந்திருந்து வாழ்த்தினார்கள்.
நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவனாயினும், பட்டம் பதவிகளை வேண்டாமென ஒதுங்கி நின்றவனாயினும் அவர் என்னிடம் இவ்வாறு நெருங்கியநிலை சிலர் உள்ளத்தில் பட்டிருக்கலாம் போலும். ஒரு கல்லூரி விழாவில் தலைமை வகித்த ஒரு பெரியவர், தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டு வந்தபோது, ‘நான் சென்னையிலிருந்து டில்லிக்கு ஒருவரால் தூக்கி எறியப்பட்டேன். இதோ எதிரில் இருக்கிறாரே (நான்தான் எதிரில் உட்கார்ந்திருந்தேன்) இவருக்கு ரொம்ப வேண்டியவரால் என்றார். அவர் திரு பக்தவத்சலத்தைத்தான் குறிக்கிறார் என்பது அன்று பலருக்கும் புரிந்த ஒன்றாகும். அப்படியே அவர் மறைந்தபோது, அங்கே பலரொடு நானும் இருந்தேன். உடனிருந்த திரு. அளகேசன் அவர்கள் பக்கத்திலிருந்த முன்னாள் அமைச்சர் பூவராகன், அன்றைய அமைச்சர் சௌந்தரராஜன் போன்ற மற்றவரிடம் என்னை ‘அவருக்கு மிகவும் ரொம்பவும் வேண்டியவர்’ என்று அறிமுகப்படுத்தினார்.
திரு பக்தவத்சலம் அவர்களை அவர்கள், நோயுற்றிருந்தபோது நான் அடிக்கடி சென்று காண்பேன். மறைய ஒருசில நாட்கள் இருந்தபோது நான் கண்ட நிலை என்னைத் துணுக்குறச் செய்தது. உடனே திருமதி சரோஜினி அம்மையாரிடம் உடனே மருந்தகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்திவிட்டு வந்தேன்-மருந்தகத்தில் சேர்க்கப் பெற்றார். அங்கேயும் கண்டேன். முடிவில் வாழ்வையே தமிழ்நாட்டு-இந்திய நாட்டுத் தொண்டுக்கெனவே தியாகம் செய்த நல்லவர் உயிர் பிரிந்தது. அவர்தம் பல்வகைத் தொண்டுகளைப் பற்றி விரிக்கின் பெருகும். அவர் அரசாங்கத்தில் ஏற்காத துறை இல்லை; ஆற்றாத ஆக்கப் பணிகளில்லை; எனினும் விரிவஞ்சி அமைகின்றேன். அவர்தம் திருப்பெயர் என்றும் வாழ்க என வாழ்த்தி அமைகின்றேன்.பேச்சு- 1987