ஓங்குக உலகம்/019-026
19. எத்தனை அகத்தியர்?
தமிழ்நாட்டிலும், வடநாட்டிலும் அகத்தியரைப் பற்றி எத்தனையோ கதைகள் வழங்குகின்றன. அத்தனையும் உண்மை என்று கொள்ளவோ வரலாற்றிற்குப் பொருந்தியன என்று கொள்ளவோ வழி இல்லை. அகத்தியரைத் தெய்வங்களோடு சேர்த்துக் கூறும் கதைகளும் உள்ளன. சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழையும் பாணினிக்கு வடமொழியையும், கற்றுக்கொடுத்தான் என்றும், அவ்விருவர் வழியேதான். இரண்டு மொழிகளும் உலகில் தோன்றின என்றும் கதைகள் கூறுகின்றன. தத்தம் மொழிகளைத் தெய்வ மொழிகள் என்றும் உயர்ந்த மொழிகள் என்றும் கூறிக்கொள்ள நினைத்தவர் எழுதியவையே அவை. மேலும் மொழியின் தோற்ற வளர்ச்சியை ஆராயும் இன்றைய மொழிநூற் புலவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
அகத்தியர் என்ற உடனே தோற்றத்தில் மிகச் சிறியதாகிய உருவம் தோன்றுதல் மரபு. புராண அகத்தியர் மிகச் சிறியவராக உருவத்தில் இருந்தாலும் கடலைக் குடித்தல் மலையை அடக்கல் போன்ற பெரிய செயல்களைச் செய்தார் என்ற வரலாறு உள்ளமையே இதற்குக் காரணமாகும். தமிழில் அகத்தியர் தேவாரத் திரட்டு, அகத்தியர் வாகடம், அகத்தியர் மருத்துவ நூல் முதலியன அளவிற் சிறியனவே. எனவே அகத்தியர் உருவம் சிறியதென்பதைத் தமிழர் பழங்காலத்தில் அறிந்திருந்தனர்.
பதின்மருக்கு மேலான அகத்தியர்கள் பாரத நாட்டில் வாழ்ந்திருந்தார்கள் என்பதற்குப் பல கதைகள் உள்ளன. திரிபுராதிகள் காலந் தொடங்கிச் சித்த வைத்தியர் காலத்தில் வாழ்ந்த அகத்தியர் வரையில் பலர் குறிப்பிட்ப் பெறுகின்றனர். அவர்கள் அனைவரைப் பற்றியும் நான் இங்கு ஆராயப் போவதில்லை. கந்த புராணத்தில் வரும் அகத்தியரே எண்ணத்தக்கவர். கச்சியப்பர் அவரைத் ‘தமிழ்முனி’ எனக் கூறியதனாலே இத்தவறு ஏற்பட்டது. பார்வதியின் திருமணத்தின்போது அகத்தியர் உள்ளிட்ட அனைவரும் இமயமலைக்கு வர, வடக்குத் தாழ்ந்து தெற்கு உயர, அதைச் சரி செய்யச் சிவபெருமான் அகத்தியரைத் தெற்கு நோக்கி அனுப்பினார் என்பர். அவரே வழியில் சிலவிடங்களில் தங்கிப் பிறகு பொதிய மலையில் இருந்து தமிழாராய்ந்தார் என்பர். இக்கருத்து ஒன்றினையே நான் ஆராய நினைக்கின்றேன். அகத்தியர் என்பவர் இருவர் இருந்திருக்கலாம். ஒருவர் வட நாட்டிலும் ஒருவர் தமிழ்நாடடிலும் வாழ்ந்திருக்கலாம். இருவருக்கும் உள்ள பெயர் ஒற்றுமையின் காரணத்தாலேயே அவ்வாறு பலர் மயங்க நேரிட்டது. ‘அகத்தியர்’ என்ற தமிழ்ச் சொல் ‘உள்’ எனக் காணும் அகத்தின் நல்லியல்பின் அடிப்படையில் ‘உள்ளொளி’ அடிப்படையில் (அகத்து - இயர்) பிறந்த பெயர். அகஸ்தியர் என்ற வடமொழிப் பெயர் ‘மலையைத் தம்பிக்கச் செய்தவர்’ என்ற அடிப்படையில் பிறந்ததாகும்; எனவே பெயரைப் பகுத்துக் காணின் இரண்டும் ஒன்றாகவே தோன்றினும் அடிப்படையில் மாறுபட்டிருப்பதை அறிகிறோம். மற்றும் கந்தபுராணத்தில் விளக்கிக் காட்டப்பெறும் அகஸ்தியரைப் பற்றிக் குமாரசம்பவம் பாடிய காளிதாசர் குறிப்பிடவே இல்லை. இதனையும் எண்ண வேண்டியுள்ளது. அவரது நூலுக்கு மூலமாகிய மகாசிவபுராணத்திலும் இக் குறிப்பே இல்லை என்பர். இக் குமார சம்பவத்தில் முதல் ஐந்து பகுதிகளையே காளிதாசர் பாடினார் என்றும் பிற பகுதிகளைப் பிறகு யாரோ பாடிச் சேர்த்துவிட்டனர் என்றும் கூறுவர், எனவே இதைக் கொண்டு அகத்தியர் வாழ்வை அறுதியிட முடியுமா? அப்படியேகொண்டாலும் தென்கோடியில் பொதிய மலையில் தமிழை ஆராய்ந்து தமிழ்ச்சங்கம் அமைத்துக்கொண்டு வாழ்ந்த அகத்தியர் மற்றவர் எனக்கொள்ளலே பொருந்தும். பின்னவர் தெற்கு நோக்கி வந்து எங்கே தங்கினார்? இதற்கு விடை கண்டால் முடிவு பெறலாம்.
தெற்கு நோக்கி வந்த அகஸ்தியரை விந்தியமலை தடுத்ததென்றும் அதை அடக்கி மேலும் அவர் தெற்கே சென்றார் என்றும் கதை உள்ளது. விந்தியம் தடுத்தலும் அடக்க நினைத்தலும் என்னென்ன செயல்கள்? ஆம்! ஆரிய மரபினரான அகத்தியரை விந்தியமலைக்குத் தெற்கே உள்ள வேற்று நாகரிகமும் பண்பாடும் வராமல் தடுத்தன என்பதே அதன் பொருள். எனினும் அவர் முயற்சியுடன் ஓரளவு வெற்றி கண்டு, அடக்கி, உள்செல்ல முயன்றும் பஞ்சவடியிலேயே தங்கிவிட்டார் என அறிகிறோம். அகத்தியரைப் பற்றி ஆராய்ந்த கா. சுப்பிரமணியப் பிள்ளை, வின்சென்ட் ஸ்மித் போன்றோர் அகத்தியர் இருவரே எனச் சுட்டிச் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பியருக்கு ஆசிரியர் என்ற மரபு உண்டு. எனினும் இருவரைப் பற்றியும் அவர்களுக்கு இடையில் சாபம் இட்டுக்கொண்ட கதைகளும் தமிழ்நாட்டுப் பண்புக்குப் பொருந்தாதனவேயாகும். ‘திரணதூ மாக்கினி’, ‘லோப முத்திரை’ போன்ற பெயர்களும் அக் காலத்தில் காண முடியாதவை. மற்றும் தொல்காப்பியரை ‘ஐந்திரம்’ நிறைந்த தொல்காப்பியராகக் காண்கின்றோம். அகத்தியம் நிறைந்த தொல்காப்பியராகக் காணவில்லை. ‘ஐந்திறம்’ என்பதும் ‘இந்திர வியாகரணம்’ என்பதும் இல்லாத ஒன்று. எனவே ஐந்து வகை இலக்கண அமைதிகளும் வல்லவர் என்பதே இதன் பொருள். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். என்றபடி ‘ஐந்திறம்’ ‘ஐந்திரம்’ ஆயிற்று. மேலும் அகத்தியம் என்ற நூல் இருந்தமைக்குப் போதிய சான்று இல்லை. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவராகக் கொண்டாலும் அவர் பொதிய மலையில் ஊனினை அடக்கி உள்ளொளி பெருக்கிய அகத்தியர் என்றும், பிற்காலக் கதைகளுக்கு உள்ளான அகத்தியர் அல்லர் என்றும் கொள்வதே மிகவும் பொருந்தும்.
தமிழில் வழங்கும் மற்றொரு கதை காவிரியின் உற்பத்தியாகும். இதுபற்றியும் கந்தபுராணம் விளக்கிக் காட்டுகின்றது. வடக்கிருந்து வந்த அகத்தியரின் கமண்டல நீரை விநாயகர் காக்கை உருவாகிக் கவிழ்க்க- 1. தொல். எழுத்து. நச்சி. முன்னுரை.
- 2. வரலாற்றுக்கு முன் -அ.மு.ப. பக் 81 அதிலிருந்து காவிரி புறப்பட்டது என்பதே அக் கதை. எனினும் தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்பதும் வாதாபியிலிருந்து சிறுத்தொண்டரே அவ் விநாயகர் வழி பாட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்து, தன் ஊராகிய திருச்செங்காட்டங்குடியில் ‘கணபதிச்சுரம்’ என்றே கோவில் கட்டி வழிபட்டார் என்பதும் வரலாறு கண்ட உண்மை. அதுவும் மாற்றுச் சமயத்தவராகிய சமண, பௌத்தரை நீக்கி அவர்தம் ‘அரச மரத்தடி’யில் விநாயகரை நிறுத்திச் சைவ சமயத்தை வாழ்வித்தார் என்பர். எப்படியாயினும் காவிரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்களிலும் பிறநாட்டார் எழுத்துக்களிலும் பேசப் பெறுகின்றமிையின் அக் கருத்து ஏற்கக் கூடியதன்று. நில நூல் வழியாகக் காணினும் அக் கருத்து ஏற்கக் கூடியதன்று. எனவே வட நாட்டு அகத்தியர் கோதாவரிக்கரையில் பஞ்சவடியில் தங்க, தென்னாட்டுத் தமிழ் அகத்தியர் பொதிய மலையில் இருந்து தமிழ் வளர்த்தார் என்று கொள்ளுவதே பொருந்தும். இந்த உண்மையைக் கம்பராமாயண சான்று கொண்டு முடிக்கிறேன்.
- 1. பெரியபுராணம்-சிறுத்தொண்டர் புராணம்.
- 2. கம்பர்17-அகத். 46 திருமாலின் அவதாரமே எனக் கொண்ட அகத்தியர் அவ்விராமனை அங்கேயே தம்முடன் தங்கி விடுமாறு வேண்டுகிறார். அவரொடு அத் தண்டகாரணியத்தில் வாழ்ந்த பிற தவசிகளும் அவ்வாறே வேண்டுகின்றனர். என்றாலும் இராமன் அவர் வேண்டுகோளுக்கு இசையவில்லை. அவர்களுடன் சில நாள் தங்கியிருந்த பிறகு, தெற்கு நோக்கி இராமன் மற்ற இருவருடன் புறப்பட்டு விடுகிறான். அகத்தியரோ மற்ற முனிவர்களோடு அங்கேயே தண்டகாரணியத்தில் தங்கி விடுகின்றார். அதுவே அவர்தம் நிலைத்த இடம் என்பதும் இதனால் தெளிவாகின்றதன்றோ?
இத் தண்டகாரணியம் விந்திய மலைச் சாரலைத் தன்னுட் கொண்டது. விந்தியம் தடுத்தது என்ற கந்த புராணக் கூற்று மெய்யாக, வட நாட்டிலிருந்து வந்த அகத்தியர் மேலும் செல்ல விரும்பாமல் அங்கேயே தண்டக வனத்தில் தங்கிவிட்டார் எனக் கொள்வது பொருந்துவது ஆகும். இராமாயணத்தின்படி, இராமன் சற்றே பின்னும் தெற்கு வந்து விந்தியத்தின் தென் பாலுள்ள பஞ்சவடியில் தங்கியிருந்தான். அக் காலத்தில் தான் இராவணன் சீதையை எடுத்துக் கொண்டு சென்றான் போலும். தண்டகவனத்தில் ஓர் அகத்தியரைக் காட்டிய கம்பர் தெற்கே நெடுந்தொலைவில் பொதிய மலையில் வாழ்ந்த மற்றொரு அகத்தியரையும் காட்டத் தவறவில்லை. எங்கே எப்படிக் காட்டுகிறார்?
தண்டக வனத்தில் அகத்தியரைவிட்டுப் பிரிந்த பின் இராமன் தெற்கே வந்து பஞ்சவடியில் தங்கிய பின் சில நாட்கள் கழிகின்றன. பின்பொருநாள் இராவணன் வந்து சீதையைத் தூக்கிச் செல்கிறான். அதனால் மனமுடைந்து போன இராமனும் இலக்குவனும் மேலும் தெற்குநோக்கி, கிட்கிந்தையை வந்து அடைகின்றனர். கிட்கிந்தையைத் தற்கால ‘அம்பி’யோடு பொருத்துவர். சூர்ப்பனகை நாசியாகிய மூக்கு அறுபட்ட இடமே நாசிக் ஆயிற்று என்பர். வாலி கொல்லப்பெற்ற இடம் தற்கால ‘ஆனகொந்தி’ என்ற இடமே என்பர். வாலி மேடு என்று அங்கே உள்ளது. சுக்கிரீவன் அரசனான பின் சீதையைத் தேட வானர வீரர்களை அனுப்புகிறான். அப்போது சுக்கிரீவன் தெற்கே சென்ற அனுமனையும் அவனைச் சார்ந்தவர்களையும் விளித்து, அவர்கள் செல்ல வேண்டிய வழியை விளக்குகிறான். இலங்கையில் சீதை இருப்பாள் என ஊகித்தமையின் அதற்குரிய வழியே அது. அந்த வழியில் ஆந்திர, தமிழ்நாட்டுத் தலங்களையும் பேரூர்களையும் சுட்டிக் காட்டிக்கொண்டே செல்லும் போது, தென்கோடியில் உள்ள பொதிய மலையும் குறிக்கப்பெறுகின்றது. ஆம், அதைக் குறிக்கும்போது தான் மறவாது சுக்கிரீவன் வாக்கில் கம்பர் அங்கே தமிழ் முனியாகிய அகத்தியன் சங்கம் அமைத்துத் தமிழை ஓம்புகிறான் என்றும், அவன் என்றும் அங்கே தங்கியுள்ளவனே அன்றி வேறு எங்கிருந்தும் வந்தவன் அல்லன் என்றும், தமிழ் நலம் சான்ற அம்முனிவன் வாழ்ந்து வரும் மலையில் தம் வானரத் தன்மையைக் காட்டாது வணங்கிச் செல்ல வேண்டும் என்றும் ஆணையிடுகின்றான். இது கம்பன் வாக்கு:
“தென்தமிழ்நாட் டகன்பொதியில் திருமுனிவன்
தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினால்
அம்மலையில் இறைஞ்சி ஏகி”
(நாடவிட்ட.31)
பல்வேறு ஐயங்களுக்கு இடைப்பட்ட அகத்தியர் வரலாற்றை இவ்வாறு கம்பன் நன்கு தெளிவாகக் காட்டி விட்டான். தண்டக வனத்து விந்திய மலையைத் தம்பிக்கச்செய்த அகத்தியர் முனிவர்களுடன் கலந்து, வேதம் ஓதி ஆரிய மரபுப்படி தீ வளர்த்து வாழ்ந்து வந்தார் என்றும் அதே வேளையில் தென்கோடியில் பொதியமலைச் சாரலில் தமிழ் முனிவராகிய அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்து, புலவர்களுடன் இருந்து தமிழை ஆராய்ந்துவந்தார் என்றும் இருவரும் இருவேறு இடங்களிலும் நிலைத்து என்றும் வாழ்ந்தவர் என்றும் திட்டமாக விளக்கிக் காட்டிவிட்டான் கம்பன். எனவே, நாம் இருவரும் ஒருவரே என்றும் அவர் அங்கிருந்து இங்கோ, இங்கிருந்து அங்கோ சென்றார் என்றும் கொள்ளுதல் பொருந்தாது. பெயர் ஒற்றுமையால் உண்டாகும் இந்தத் தடுமாற்றத்தை விடுத்து, இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் என்று கொள்ளலே சாலும். பெயர் ஒற்றுமையால் நாட்டில் சாதாரண மாறாட்டங்கள் நடைபெறுவதை வாழ்வில் இன்றும் காண்கிறோம். காய்தல், உவத்தல் இன்றி ஆராய்ச்சி செய்த மேலை நாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளரான ‘வின்ஸென்ட் ஸ்மித்’போன்றார் இக் கருத்தையே வலியுறுத்தியுள்ளமையையும் இங்கே நினைவூட்டுகின்றேன்.
இவ்வாறே பல சிக்கற் தீராப் பிரச்சினைகளை ஆராய்ந்து காண்பின் உண்மை உறுதியாகத் தோன்றும். அத் துறையில் ஆவன காண வேண்டும் என்று அறிஞர்களைக் கேட்டுக்கொண்டு அமைகின்றேன்.