ஓங்குக உலகம்/023-026

விக்கிமூலம் இலிருந்து

23. சீதையின் இறுதிப் பிரிவு

‘பிரிவு’ வாழ்வில் விரும்பத்தகாத ஒன்று. கூடிய இருவர் பிரிய எண்ணும் நிலை எண்ணத்தக்கதன்று. வள்ளுவர் இதையே ‘உள்ளப் பிரிதல்’ என்றார். எனவே உயிர்கள் என்றும் இணைந்து வாழ்வதையே விரும்புகின்றன. மக்கள் மட்டுமன்றி விலங்கினங்களும் பறவைகளும் கூடப் பிரிவை எண்ணிக் கண்ணீர் உகுக்கும் காட்சி அனைவரும் காணும் காட்சியேயாம். ஓரறிவுயிராகிய மரமும் புல்லும் கூட இடையில் பிரிக்கப்பெறும் கிளை. நுனி முதலியவற்றை எண்ணி நீர் உகுப்பதைக் காண்கின்றோம். எனவே உயிரினத்தின் இயல்பு ஒன்றி வாழ்தலேயாம்.

இவ் வொன்றிய வாழ்வின் உச்சியில் முகிழ்ப்பதே காதல் வாழ்க்கை. காதல் வாழ்வு எனும்போது அது ஒரு பிறவியில் மட்டும் தோன்றி மறைவதன்று என்பதும் வழிவழியாகப் பிறவிகள் தோறும் பற்றி வருவதென்பதும் ஆய்ந்தோர் கண்ட முடிவு. பழங்காலச் சங்கப்புலவர் முதல் நேற்றைய பாரதி வரையில் இந்த உண்மையைப் பாடியுள்ளார்கள். எனவே காதல் பிரிவு ஆற்றமுடியாத ஒன்றாகும்.

வழிவழியாகப் பிறவிதோறும் வரும் இக்காதல் பிரிவினுக்கு இடையிடையே பல இடையூறுகள் வருவதும் மரிபு. இக்காதல், கடவுளைப் பற்றியதாக அமையும் போது அவ்விடையூறுகள் தகர்த்தெறியப் பெறுகின்றன. அல்லாத நிலையில் அவை பழிக்கப் பெறுகின்றன. சுந்தரர் இறைவனிடம் நீங்காத காதல் கொண்டவர். எனினும் இடையில் தையலார் மையலில் தாழ்ந்த காரணத்தால் இருவரை இனிய காதலியராக ஏற்று வாழ்ந்தார். எனினும் அவர் உள்ளம் ‘எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனையே’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தது. அவர் உள்ளம் இருவேறு காதல் நிலைகளுக்கு இடைப்பட்டிருந்தபோதிலும் வழிவழியாக ஒன்றிய உயர்ந்த காதலே இறுதியில் வெற்றி பெற்றதெனக் காண்கின்றோம்.

‘வண்டல் பயில்வன வெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டர்பிரான் திருவார்த்தை’யாகவே கொண்டு வாழ்ந்தவர் காரைக்காலம்மையார். அவருடைய காதல் வாழ்வு ஆண்டவனை வழிவழியாகப் பற்றிய ஒன்று. எனவே இந்தப் பிறவியிலும் அவ்வாழ்வு ‘பிறந்து மொழி பயின்று பின்னெல்லாங் காதல் சிறந்து’ நிற்கும் வகையில் அமைந்தது. எனினும் அவ்வாழ்வு ‘பரமதத்தனோடு’ கொண்ட மணத்தின் காரணத்தால் குறையுற்றது. உள உறவை அறியா நிலையிலே இருவர்தம் மணவாழ்வில் விரிசல் காண முடியவில்லை என்றாலும் ஒருமை உணர்வு பெறவில்லை என அறிய முடிகின்றது. முடிவில் நிலைத்த காதல் வெற்றிபெற்று நிற்க ‘அம்மை’ அப்பனை ஆலங்காட்டில் அடைவதைக் காண்கின்றோம். உலகியலாகிய இல்லற நெறிப்படி எண்ணும்போது இந்த அம்மையின் நெறி மாறுபட்டதாகக் காணினும் உயர்ந்த தெய்வநெறிக் காதல் வழியில் இது சிறக்க அமைகின்றது. அவ்வம்மையைத் தெய்வமாக உலகம் மதிக்கிறது-போற்றுகிறது-புகழ்கின்றது. பதினோறாந் திருமுறையில் இறைவன் பாடலுக்கு அடுத்த நிலையை இவர் பாடல் பெறுகின்றது.

முற்றும் துறந்த மணிமேகலையின் உள்ளம்கூட முந்தைப் பிறவியின் கணவனைக் காணத் தடுமாறுகின்றது. எனினும் அவர்தம் சமயநெறி சார்ந்த தெய்வக்காதல் அதை மறக்கச் செய்து மணிமேகலையைத் தெய்வ நெறிக்கு உயர்த்திச் செல்லுகின்றது. மணிமேகலையின் உள்ளம் சென்ற பிறவியில் கணவனாகக் கொண்டவனிடம் காட்டிய காதலினும் வழிவழிப் பற்றிய தெய்வ நெறியிடம் காட்டிய காதலால் சிறந்து நின்றமையின் அதனுடன் அவர் ஒன்றி உயர்ந்து போற்றப் பெற்றார்.

தெய்வத்திடம் மட்டுமன்றி மக்களுக்குள்ளேயே இந்த உணர்வு அரும்புவதையும் ஒருசில நிகழ்ச்சிகள் மூலம் நாம் காண்கின்றோம். ‘மணம் விண்ணுலகில் நிச்சயிக்கப்படுகின்றது’ என்று மேலை நாட்டார் கூறுகின்றார்கள். நம் நாட்டில் மணம் தெய்வநலம் சான்றது எனப் பேசப்படுகிறது. இவ்வளவுக்கும் இடையிலே உலக வாழ்வில் சில வேளைகளில் சில நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். முன்னரே மணமாகிக் கணவனோடு வாழ்ந்த மகளிர், ஏன்?-இரண்டொரு மக்களைப் பெற்ற மகளிர்-பிறகு வேறொருவரைக் காதலித்து அல்லது காமமுற்று அவருடன் பிரிந்து செல்வதைக் காண்கிறோம். இது வெறுக்கத்தக்கதேயாகும். ஆயினும் அந்தப் பிந்திய காதல் வாழ்வு கைகூடாவிடின் இருவரும் ஒருசேர இறக்கும் செய்திகளும் நம் காலத்தில் நடக்கின்றன. இதை என்னவென்று சொல்லுவது? இதுவும் தவறுதான். ஆனால் அந்தத் தவறு செய்த உயிர்கள் தம்மைத் தியாகம் செய்ததால் தெய்வநிலை பெற்று விட்டனவா? நாம் மேலே கண்ட வழிவழியாக அவர்கள் இருவரிடம் பொருந்திய தெய்வநெறிக் காதல், இடையில் பரமதத்தன் போன்ற ஒருவனால் தடைசெய்யப்பெற்று, இறுதியில் முடிவுற்றதா! திருவிளையாடற் புராணத்துக் கெளரியும் பெரிய புராணத்துப் புனிதவதியும் வடநாட்டு மீராவும் தெய்வநிலையில் ஒன்றிய வகைப்படி இவர்களையும் இணைக்கலாமா? வாழ்வையே துச்சமென எண்ணி-பின் உலகில் உண்டாகும் பழிப்பினையும் கருதாது-ஏன்? அவளுக்கு முன்னரே உள்ள மக்கள் கணவர் இவர்களை மறந்து-இறைவனோடு பிணைந்து மரணமுற்ற நிலையினைப் போற்றுவதா? அன்றித் தூற்றுவதா?

நாளிதழ்களில் இவைபோன்ற செய்திகள் வரும்போது என் உள்ளம் இவ்வாறு எண்ணுவது உண்டு, இவர்கள் செயல் தவறு எனக் கண்டால், ‘கொண்டானிற்றுன்னிய தெய்வமில்’ என்ற தமிழ்நாட்டில் புனிதவதியும் கெளரியும் கூடப் பழிக்கத் தக்கவர்கள் தாமே என்ற எண்ணம் தோன்றும். உடனே சைவனாகப் பிறந்த நான் அவ்வாறு எண்ணுதல் பொருந்துமா என்ற உணர்வு, தோன்றும். சைவ சமயத்தில் மட்டுமன்றி உலகப் பிற சமயங்களிலேயும் இத்தகைய நல்ல காதலும் வாழ்வும் குழந்தை பிறத்தலும் கண்கூடு. இந்த இரண்டுங் கெட்டநிலையில் இடர்ப்பாடுற்று முடிவு காண்பது அரிதாகின்றது. இது மனிதக்காதல்; அது தெய்வக் காதல் என்றாலும், இன்றைய அறிவியல் நெறிக்கு மட்டுமன்றித் ‘தெய்வந் தொழாள் கொழுநற்றொழு தெழுவாள்’ என்ற குறள்நெறிக்கும் அத்தெய்வக்காகலும் தவறுடையதே எனத்தோன்றும் அதே வேளையில் உயிரையும் மதியாது தியாகம் செய்த இவர்களைப் போற்றவும் வேண்டியுள்ளது. இந்தச் சிக்கல் ஆய்ந்து முடிபு கண்டு அமையவேண்டிய ஒன்று. இந்தச் சிக்கலே சீதையின் இறுதிப் பிரிவினை எண்ணியதால் தோன்றியதேயாகும்.

கம்பனது இராமாயணத்தில் இந்தச் சிக்கலுக்கு இடம் இல்லை. பொற்பின் செல்வியாம் சீதையைக் கம்பர் தமிழ் முறைப்படி முதலில் இராமன் முன்நிறுத்தி, இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்திய பிறகு மணமுடிக்கிறார். இராமன், காட்டிற்குப் போகும்போது சீதையைப் பிரியநினைக்க, ‘நின்பிரிவினும் சுடுமோ ‘பெருங்காடு’ என்று கூறவைத்து, கம்பர் அவளை அவனுடன் காட்டுக்கு அனுப்புகிறார். இலங்கையில் வாழும்போதும் அச்சீதைக்கு இராமனது எண்ணத்தைத் தவிர வேறு உணர்வைத் தரவில்லை. இராமனை எண்ணி எண்ணி மென்மருங்குல்போல் வேறுள அங்கமும் மெலிந்த நிலையிலேயே சீதையைக் காட்டுகிறார். இறுதியில் இராமனோடு சேர்ந்து மணிமுடி சூட்டி மகிழ்கின்றார். இந்த நிலையிலே கம்பர் தம் கவிதையை முடித்தாலும் இராமாயணம் இதனோடு முடிவதில்லை. தொடர்ந்து சென்று இராமன் சீதை இருவரின் தெய்வக் காதலைப் பொய்ம்மையாக்குகின்றது, இராவணனுடன் இருந்த சீதையைப்பற்றி யாரோ பழிக்க, அது கேட்ட இராமன் அவளை நிறைமாதக் கர்ப்பிணியாயிருக்கும் போது காட்டுக்கனுப்பினான்-அங்கே மக்கள் பிறந்து வளர, பிறகு ஒரு காலத்தில் அவளைக் காண நேரும் நிலையில் தவற்றினை உணர்கிறான் இராமன். ஆயினும் சீதையின் தெய்வக் கற்பு தேய்கின்றது. மறுபடி இராமனோடு செல்ல மறுக்கிறது. பிறந்த மண்ணையே புகலிடமாகக் கொண்டு மறைகிறாள் சீதை.

இராமாயணத்தின் இப்பிற்பகுதி யார் எதற்காக எப்போது எழுதினார்கள் என்று எண்ணும்போது நமக்கு அதிர்ச்சியும் குழப்பமுமே உண்டாகின்றன. கம்பரது ‘தெய்வநெறி’ எங்கு போயிற்று என எண்ணவேண்டியுள்ளது! இராமனும் தேவனே-திருமாலே என்று உணர்கின்றபோது நமது உள்ளத்தின் வேதனை இன்னும் அதிகமாகின்றது. சீதை இராமனைப் பிரிந்திருந்த பிரிவினைக் காட்டிலும் இந்தப் பிரிவே உண்மையில் வேதனை தருவது.

பிரிவால் வாடுவது இயற்கை எனக் கண்டோம், ஆனால் இந்தப் பிரிவில் இராமன் சுகம் காண்கின்றான். ஏன்? விளக்கம் கூறமுடியுமா? எத்தனைதான் வேறு பொருந்தாத சமாதானங்கள் இதற்குக் கூறினாலும் மனித உள்ளம் ஏற்குமா? பிணைந்த மணவாழ்வினும் கூடும் தெய்வநெறியோ காதல் நெறியோ சிறந்ததென இறைநிலையுற்றும் உயிர்த்தியாகம் செய்தும் புகழ்பெற்ற பெண்களை மேலே கண்டோமே அந்த நிலையில்கூட ‘கற்பினுக் கணியாய்’ சீதையை வைத்து எண்ண வழியில்லையா? நல்லவேளை, கம்பன் இந்தச் சிக்கல் எல்லாம் தமிழதத்துக்கு-மரபுக்கு-கற்புநெறிக்கு-காதல் வாழ்வுக்குத் தேவை இல்லை என எண்ணித்தானோ, பட்டாபிஷேகத்தோடு முடித்துக் கொண்டான் என எண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இராமனையும் சீதையையும் மாசற்றவர்களாக உலகுக்குக் காட்ட விரும்பும் பேச்சாளரும் பிரசங்கிகளும் கம்பன் வழிநின்று அவர்கள் இருவரையும் அரியணையில் அமர்த்தி அமைதி கொள்வதே சாலப் பொருந்துவதாகும்.

இந்த முடிவே பிரிவு காணாத முடிவு. உளத்தால்-இராவணன் இடத்திருந்தபோதும்-மறக்காத தெய்வ நெறி முடிவே உள்ளம் பிரியாது ஒன்றிய காதல் வாழ்வைக் காட்டும் முடிவு. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எத்தனை இடர்கள் இடையிடையே வந்தாலும் பிரிக்கமுடியாத-பிரிவறியாத உணர்வு; புனிதவதியும் கெளரியும் மீராவும் மற்ற நல்ல மங்கையும் பிரிந்தறியாத பேருண்ர்வு; எங்கேனும் யாதாகிப் பிறந்திடிலும் எதனாலும் இடருற்றாலும் மதத்தால் பிரிந்து நின்றாலும்-உணர்வு அழிந்து மறப்பது போன்ற நிலை நேரிலும் மறவாமல் இணைந்த, பிரிக்க முடியாத பெருநிலையே அது. இந்த உணர்வையே கம்பன் தம் முடிவின் மூலம் உலகுக்கு உணர்த்தி விட்டான். அவனைப் பாடுபவரும் அதே நிலையில் உணர்த்தி உயர்வார்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/023-026&oldid=1135852" இலிருந்து மீள்விக்கப்பட்டது