ஓ மனிதா/12. நரி கேட்கிறது
“நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி, என்று நீங்கள் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்வீர்களே தவிர என்னைக் கண்டதும் ஒதுங்கி விட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அல்லும் பகலும் அனவரதமும் உங்கள் எதிர் கால நல்வாழ்வுக்காக நீங்கள் வேண்டிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட தேவதையே உங்கள் முடிவுப்படி வேறெங்கும் குடியிருக்க இடம் கிடைக்காமல் என் முகத்தில்தானே குடியிருக்கிறாள்? இல்லாவிட்டால் ‘காகம் உட்காரப் பனம் பழம் விழுந்தது’ போல் எவனுக்காவது என்றைக்காவது எதிலாவது அதிர்ஷ்டம் அடித்து விட்டால் ‘அவன் இன்றைக்கு நரிமுகத்தில விழித்து இருப்பான்!’ என்று நீங்கள் அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை அத்தனை நம்பிக்கையோடு சொலலிக் கொண்டிருப்பீர்களா?
நீங்கள்தான் இப்படியென்றால் உங்களை ஆளும் அரசாங்கத்தாரும் உங்களைப்போலவே ‘உழைப்பில் நம்பிக்கை வையுங்கள்' என்று சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்கிறார்களே தவிர உண்மையில் அதிர்ஷ்டத்தில உங்களுக்குள்ள கம்பிக்கையை மேலும் ஊக்குவித்தே வருகிறார்கள். அதற்காகவே மற்றத் திட்டங்கள் எப்படியாவது போகட்டும் என்று அவர்கள் லாட்டரி சீட்டுத் திட்டம் என்று ஒரு திட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து மாதா மாதம் பத்து லட்சம் பதினைந்து லட்சம் என்று பரிசு வைத்து லட்சக்கணக்கானவர்களை ஏமாற்றியாவது ஒரு சில லட்சாதிபதிகளை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த விஷயத்தில் தமிழ் நாடு அரசை முந்திக் கொண்டுவிட்டன மற்ற மாநில அரசுகள். அவை ‘மாதத்தில் சில லட்சாதிபதிகளை’த்தானே உங்களால் உருவாக்க முடியும்? இதோ பாருங்கள். நாங்கள் ஒவ்வொரு வாரமும் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் கூட பல லட்சாதிபதிகளை உருவாக்கி வருகிறோம்’ என்று உருவாக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
ஆக யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதோயில்லையோ. அதிர்ஷ்டத்துக்கு இப்போது மேல் அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்கிறது!
அந்தக் கதையை விட்டு விட்டு என் கதைக்கு வருவோம். நீங்கள் நினைப்பது போல் நான் என்ன அவ்வளவு தந்திரசாலியா? அவ்வளவு பெரிய புத்திசாலியா? கிடையவே கிடையாது. அந்த விஷயத்தில் நீங்கள் என்னை எப்போதோ தூக்கியடித்து விட்டீர்கள்!
பட்டப்பகலில் பட்டுப்புடவை வெளியே கட்டப்பட்டுக் காய்ந்து கொண்டு இருக்கும். கண்ணில் தீப்பொறி பறக்கக் கணவர் ஒருவர் வருவார். ‘ஊரிலே திருட்டுப் பயல்கள் அதிகமாகி விட்டானுங்க, வெளியே பட்டுப் புடவையை காய வைக்காதேடி, காய வைக்காதேடின்னு எத்தனை தடவை சொல்கிறது? கேட்கிறாளா?’ என்று உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டே புடவையை அவிழ்த்துக் கொண்டு உள்ளே போவார். தெருவே வருவோர் போவோர் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வருவார்கள், போவார்கள். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு எஜமானி வெளியே வருவாள். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ‘இங்கே கட்டி இருந்த பட்டுப் புடவையை எங்கே காணோம்?’ என்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களை விசாரிப்பாள். ‘கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே உங்க வீட்டுக்காரர் வந்து உங்களைத் திட்டிக் கொண்டே புட்வை அவிழ்த்துக் கொண்டு போனார் போலிருக்கிறதே’ என்பார்கள் அவர்கள். அப்போதுதான் புடவையைப் பறிகொடுத்தவளுக்குத் தெரியும்—வந்தவர் தன் வீட்டுக்காரர் இல்லை, திருடன் என்று.
அப்பாவிக் கேஷியர் ஒருவர் பேங்க்குக்கு வருவார். செக்கைக் கவுண்டரிலே கொடுத்துப் பணம் வாங்கி, அங்கேயே ஒரு மூலையில் நின்று எண்ணிக்கொண்டு இருப்பார். அந்த இடத்துக்கு ஒருவர் வருவார். நாலைந்து நோட்டுக்களைக் கீழே போட்டு விட்டு ‘அடாடா! நோட்டெல்லாம் கீழேவிழுந்துகிடக்கு, அதைக் கவனிக்காமல் நீங்கள் பாட்டுக்கு எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே?’ என்பார், கேஷியர் அவற்றைப் பொறுக்கியெடுக்கக் கீழே குனிய வேண்டியதுதான் தாமதம். வந்தவர் மேலே உள்ள நோட்டுகளை யெல்லாம் ‘அபேஸ்’ செய்து கொண்டு வெளியே போய்விடுவார்.
‘திருடர்கள்’ கைவரிசை இப்படி; அயோக்கியர்கள் கைவரிசை எப்படி?...திரு. காமராஜ் இந்த நாட்டின் முதல்வராயிருந்தால் அவருக்கு இந்த அயோக்கியர்கள் ‘பிறந்த நாள் விழா’ கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் மலர்’ வெளியிடுவார்கள்.
அவர் போய் திரு. பக்தவத்சலம் முதல்வராய் வந்தால் அவருக்கும் இவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் விழா மலர்’ வெளியிடுவார்கள்.
அவரும் போய் திரு அண்ணாதுரை முதல்வராய் வந்தால் அவருக்கும் இவர்கள் ‘பிறந்த நாள் விழா’ கொண்டாடுவார்கள். ‘பிறந்த நாள் மலர்’ வெளியிடுவார்கள்.
அவரும் மறைந்து திரு. கருணாநிதி ஆட்சியை மேற்கொண்டால் அவருக்கும் இவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாட தவறமாட்டார்கள்.
விழாத் தலைவர்கள் மாறுபட்டாலும் இவர்களுடைய லட்சியம் மாறாது; அது என்றும் எப்போதும் ஒரே லட்சியமாகத்தான் இருக்கும். அதாகப்பட்டது ‘பிறந்த நாள் மலரில்’ வெளியாகும் விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் வருவாயே அந்த லட்சியம். எப்போதும் யார் பேரைச் சொன்னால் அந்த வருவாய்க்குரிய விளம்பரங்கள் அதிகமாகக் கிடைக்குமோ அப்போது அவர்களுக்கெல்லாம் ‘பிறந்த நாள் விழா’க் கொண்டாடிப் ‘பிறந்த நாள் மலர்’ வெளியிட்டுக் கொண்டிருப்பது இவர்களுடைய பிறவிக் கடன்களில் தலையாயது.
இது இவர்கள் செய்யும் தேசப்பணி; தெய்வப் பணி?...அதையும் இந்த யோக்கியர்களில் சிலர் செய்வதுண்டு. இவர்களுடைய தலை ஒன்று மொட்டையடிக்கப்பட்டிருக்கும். அல்லது ஜடாமுடி வளர்க்கப்பட்டு இருக்கும். மேனி முழுவதும் திருநீறு வரி வரியாக இழுக்கப்பட்டோ அல்லது பூசப்பட்டோ இருக்கும். கழுத்தில் ருத்திராட்ச மாலைகளோடு நவரத்தின கண்டி மாலையும் தகதகாய்க்கும். உடை காவியாய் இருந்தாலும் ‘சொரசொராக்’ காவியாயிருந்து உடம்பை உறுத்தாது; வழவழா பட்டாயிருந்து மேனியை ‘மழமழா’ என்று தொட்டுத் தழுவும். ஓட்டல் என்றால் ஐந்து நட்சத்திர ஓட்டல்தான் இவர்களுக்குப் பிடிக்கும். அறை என்றால் ஏர்கண்டிசன் செய்யப்பட்ட அறையைத் தவிர வேறு அறையை இவர்கள் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள். கீழே ஏறினால் சாதாரண காரில் ஏற மாட்டார்கள். ‘இம்பாலா’ காரில்தான் ஏறுவார்கள். மேலே பறந்தால் சாதாரண ஜெட் விமானத்தில் பறக்க மாட்டார்கள், ஜம்போ ஜெட்டில் தான் பறப்பார்கள்.
இதற்கெல்லாம் இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? யாருக்குத் தெரியும், அது சிதம்பர ரகசியம்!
இந்த மாதிரி ரகசியம் ஏதாவது உண்டா என் வாழ்வில்? கிடையவே கிடையாது. கொள்ளைக்குப் போனாலும் கூட்டு உதவாது என்று கொண்டிருந்த நீங்கள் இப்போது எடுத்ததற்கெல்லாம் ‘கூட்டுறவு கூட்டுறவு’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். இந்தக் கூட்டுறவு எனக்குப் பிடிக்காது. அதிலும் வேட்டைக்குப் போகும்போது அதை நான் அறவே வெறுத்துத் தனியாகவே போவேன். கிடைத்ததைத் தனியாகவே தின்று தீர்ப்பேன். இந்த விஷயத்தில் நான் சுதந்திரா கட்சி, அதைச் சொல்லிக் கொள்ள இங்கே நான் வெட்கப்படவில்லை.
இதில் இன்னொரு நன்மையும் உண்டு எனக்கு. வேட்டையின்போது ‘கேவலம் நரிதானே?’ என்று அற்பமாக எண்ணிச் சில பிராணிகள் என்னையே எதிர்த்துத் தாக்கவரும். அசட்டு ஆடு இருக்கிறதே, அதுகூடச் சில சமயம் முன்னங்கால் இரண்டையும் தூக்கித் தூக்கி என்னை முட்ட வரும். அதன் காலுக்கும் கொம்புக்கும் பயந்து நான் ஓடுவதும் உண்டு, அம் மாதிரி சமயங்களில் சக நரிகளில் ஏதாவது ஒன்று எதிரே வந்து, ‘ஏன் இப்படி ஓடி வருகிறாய்?’ என்று கேட்டால் ‘ஆட்டுக்குப் பயந்து ஓடி வருகிறேன்’ என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் என் கௌரவம் என்ன ஆவது? அதனால் தான் ‘புலி புலி’ என்று சொல்லிக் கொண்டே நானும் ஓடி அதையும் ஓட வைத்து விடுவேன். இந்தச் சௌகரியம் கூட்டு வேட்டையில் கிடைக்குமா? கிடைக்கவே கிடைக்காதே!
இந்த ஒரு ரகசியத்தைத் தவிர வேறு எந்த ரகசியமும் என்னிடம் இல்லை. உங்களைப் போல நான் எட்டாதவற்றையெல்லாம் எட்டி எட்டிப் பார்த்து விட்டுக் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதும் இல்லை. நீங்கள் வீணாக என் மீது பழிசுமத்துவதற்காக என்னை வைத்து ஒரு கதை கட்டி விட்டிருக்கிறீர்கள்—ம், கதையா அது?‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்பார்கள். எனக்கும் திராட்சைப் பழத்துக்கும் என்ன சம்பந்தம்? கழுதைக்கும் கற்பூரத்திற்கும் என்ன சம்பந்தம் உண்டோ, அந்த சம்பந்தம்தான் எனக்கும் திராட்சைப் பழத்துக்கும் இருக்க முடியும். அப்படி இருக்க நான் ஏன் திராட்சைப் பழத்தைப் பறிக்க எட்டி எட்டிப் பார்க்கப் போகிறேன்? எட்டவில்லை என்று தெரிந்ததும், ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று நான் ஏன் விரக்தியுடன் சொல்லப் போகிறேன்!
இனிப்பாயிருந்தாலுந்தான் அந்தப் பழம் எனக்கு பிடிக்காது. இதுகூடத் தெரியவில்லையே உங்களுக்கு?
ஓ, மனிதா! உண்மையைச் சொல்லப் போனால் ஊரை ஏய்த்துப் பிழைப்பதில் உனக்கு நானும் குறைந்தவன் அல்ல. எனக்கு நீயும் குறைந்தவனல்ல. அந்த விஷயத்தில் நாம் இருவரும் ஒன்றே.
வாயில் இருக்கும் வடைக்காக நான் காகத்தைப் புகழ்ந்தால் நீ வேறு எதற்காவது வேறு யாரையாவது புகழ்கிறாய்!
சிங்கத்துக்கு இரையாகாமல் தப்புவதற்காக நான் அதைப் பாழுங் கிணற்றில் தள்ளிக் கொன்றால் நீ வேறு யாரிடமாவது தப்புவதற்காக வேறுயாரையாவது எதிலாவது தள்ளிக் கொல்கிறாய்!
இதுவே உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்!
ஆக ‘ஏமாறுபவன்’ என்று ஒருவன் இருக்கும் வரை ‘ஏமாற்றுபவன்’ என்று ஒருவனும், ‘ஏமாற்றுபவன்’ என்று ஒருவன் இருக்கும்வரை ஏமாறுபவன் என்று ஒருவனும் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கத்தான் போகிறான்.முடிவு—இப்போதும் இல்லை; எப்போதும் இல்லை.
இதற்கிடையில் ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ என்று என்னையும் உன்னையும் பார்த்து சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் நம்மை விட புத்தி சாலிகள் என நீ நினைக்கிறாயா? அதுவும் இல்லை. அப்படிச் சொல்லி அவர்கள் தாங்கள் பிழைப்பதற்காக ஒரு பக்கம் ஏமாந்து கொண்டும் இன்னொரு பக்கம் ஏமாற்றிக கொண்டும் தான் இருக்கிறார்கள்.
இதுவே உண்மை.
தந்திரத்தில் வேண்டுமானால் ‘ராஜதந்திரம்’ என்று ஒன்று இருக்கலாம். பொய்யில் ‘அரிச்சந்திரன் பொய்’ என்று ஒன்று உண்டா என்ன?