உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மனிதா/13. கிளி கேட்கிறது

விக்கிமூலம் இலிருந்து

13. கிளி கேட்கிறது

‘அழகாயிருப்பது ஆபத்து’ என்று எந்தப் புண்ணியவான் எந்த ஆபத்துக்கு உள்ளாகிச் சொல்லி வைத்தானோ, அது என்னைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மையாயிருக்கிறது.

‘கன்னங் கரேலென்று இருக்கும் காகத்தைப் பிடித்து உங்களில் யாராவது கூண்டில் அடைக் கிறார்களா? அது ‘கா, கா’ என்று கரையும் ஒலியில் உங்களில் யாராவது மனத்தைப் பறிகொடுக்கிறார்களா?—இல்லை; பச்சைப் பசேரென்று இருக்கும் நான் மட்டும் தப்பித் தவறி உங்களிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டால் போதும், உடனே பிடித்துக் கொண்டு போய்க் கூண்டில் அடைத்துவிட்டு என்னை நீங்கள் என்ன பாடுபடுத்துகிறீர்கள்! ‘ரங்க ரங்க ரங்கா! என்று நான் எழுப்பும் ஒலியில் உங்களுடைய இதயத்தைப் பறிகொடுத்துவிட்டு நீங்கள் என்னமாய் நிற்கிறீர்கள்!’

வேறு எந்த விஷயத்தில் எப்படியிருந்தாலும் என் விஷயத்தில் மட்டும் ராஜகுமாரியும் பிச்சைக்காரியும் ஒன்றே; கிளி ஜோசியக்காரனும் குருவிக்காரனும் ஒன்றே.

முன்னிருவர்களுக்கு நான் பொழுதுபோக்கு; பின்னிருவர்களுக்கு நான் பிழைப்பு!

‘அக்கா, அக்கா, அக்கா! விருந்தாளி, விருந்தாளி!’

‘இலையைப் போடு, இலையைப் போடு!’

‘யாரடா அவன் யாரடா அவன்?’

‘திருடன், திருடன்!’

இந்த மாதிரி நீங்கள் சொல்லிக் கொடுப்பதை நான் திருப்பிச் சொல்லிவிட்டால் போதும்; உங்கள் உச்சி குளிர்ந்து விடுகிறது. அதற்காக உங்கள் வீட்டுப் பெண் எனக்கு முத்தம் கொடுக்கக்கூட வந்து விடுகிறாள்!

இதில் ஒரு வம்பு என்னவென்றால், மற்ற பிராணிகளில் ஆண் எது, பெண் எது என்பதை அவற்றின் தோற்றத்திலிருந்தே உங்களால் கண்டுபிடித்துவிட முடியும்; எங்களில் ஆண் கிளி எது பெண் கிளி எது என்பதை உங்களால் கண்டுபிடிக்கவே முடியாது. காரணம் தோற்றத்தில் இரண்டுமே ஒன்ருயிருப்பது தான். இதனால் ஆண் கிளி என்று தெரியாமல் உங்கள் வீட்டுப் பெண் எனக்கு ஆசையோடு முத்தம் கொடுக்க வந்துவிடுகிறாள். என்னதான் கிளியாயிருந்தாலும் எனக்கும் வெட்கம் இருக்காதா? அதனால், அவள் முத்தம் கொடுக்க வரும்போது நான் முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன். அவள் விடுகிறாளா? என் மூக்கைப் பிடித்து ஒரு திருப்புத் திருப்பி ‘இச்’ என்று ஒன்று கொடுத்தே விடுகிறாள்!

இப்படிக் கொடுப்பவள் கன்னிப் பெண்ணாயிருந்தாலும் பரவாயில்லை; ஏதோ குழந்தை விளையாட்டு, இல்லை ‘காதல் விளையாட்டு’ என்று விட்டுவிடலாம். கலியாணமாகி இன்னொருவனுக்கு மனைவியானவள் எனக்கு இப்படிக் கொடுத்தால்,

‘பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனன்றோ ஆன்ற ஒழுக்கு’

என்ற வள்ளுவர் நெறியை நானுமல்லவா உங்களில் சிலரைப் போல மீறியவனாவேன்?

உண்மையைச் சொல்லப் போனால் மயக்கம் மதுவில் மட்டுமில்லை; அழகிலும் இருக்கிறது. அந்த அழகு ஒரு பெண்ணிடம் குடி கொண்டுவிட்டால் அதனால் விளையும் விபரீதங்கள் தான் எத்தனை, எத்தனை!

சரித்திரப் பிரசித்தி பெற்ற கிளியோபாத்ரா அழகு மயக்கம் ஆன்ட்டனியை என்ன பாடுபடுத்தி வைத்தது! மும்தாஜின் அழகு மயக்கம் ஷாஜஹானை எந்த நிலைக்குக் கொண்டுவந்து சேர்த்தது!

இதெல்லாம் அந்த நாள் கதைகள்; இந்த நாள் கதைகளா?....

அழகு மங்கை ஒருத்தியை ஓர் ஆண் மகன் பார்க்கிறான்; பார்த்ததும் வெறி கொண்ட அவன் அவளைப் பலவந்தப்படுத்தித் தான் நினைத்த காரியத்தைச் சாதித்துக் கொண்டுவிடுகிறான். போலீசார் அவனைக் கைது செய்கிறார்கள். வழக்கு நீதிமன்றத்துக்குப் போகிறது. நீதிபதி அவளையும் அவனையும் மாறி மாறிப் பார்க்கிறார்; பார்த்துவிட்டு மனம் உருகிச் சொல்கிறார்.

‘ஆகா! இந்தப் பெண்ணின் அழகு யாரைத்தான் பலவந்தப்படுத்தத் தூண்டாது? அனுதாபப்படுகிறேன்; இந்தப் பெண்ணுக்காக மட்டுமல்ல அந்தப் பையனுக்காகவும் நான் அனுதாபப்படுகிறேன்!’

நல்ல வேளை, இப்படிச் சொன்னதோடு அவர் நின்று விடவில்லை... ஆனாலும் அவன் செய்த குற்றம் குற்றமே; அதற்குரிய தண்டனையை இதோ வழங்குகிறேன்’ என்று அவனுக்குரிய தண்டனையையும் வழங்குகிறார்.

இன்னொரு கதை—என்ன கதையா?—இல்லை; உண்மை நிகழ்ச்சி சற்றுத் தூரத்தில் வரும்போதே அந்த அழகியை அவன் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டே இருக்கிறான். அவள் அவனை நெருங்குகிறாள். கை பரபரக்கிறது. அவள் எதிர்பாராத விதமாக அவள் மேல் பாய்ந்து அவன் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிடுகிறான்.

அவ்வளவுதான்; அவள் ‘பெண் புலி’யாகிறாள்; தன் கையிலுள்ள புத்தகத்தால் அவனை ‘மொத்து! மொத்து’ என்று மொத்துகிறாள், அவனோ அவற்றை ‘வலிக்கு இதமளிக்கும் ஒத்தடமாக’ ஏற்று அவள் மொத்துவதற்கு ஏற்றாற்போல் தன் முதுகைத் திருப்பிக் காட்டுகிறான்.

அவளுக்குக் கை வலித்ததுதான் மிச்சம்; அவன் முதுகைத் திருப்பிக் காட்டுவதை நிறுத்தவேயில்லை!

விளைவு?

புலியின் சீற்றம் அடங்குகிறது; அதற்கும் பதிலாகச் சிரிப்பு பொங்கிக்கொண்டு வருகிறது. அதைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவள் சுற்று முற்றும் பார்க்கிறாள்; யாரையும் காணவில்லை.

அடுத்த கணம்...

அவளே அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறாள்!

தண்டனை ...

வேறு யாரும் வழங்க அவர்கள் விடவில்லை; அவர்களுக்கு அவர்களே வழங்கிக் கொண்டுவிடுகிறார்கள்.

என்ன தண்டனை?...

கலியாணம்!

அழகு மயக்கத்தில் இந்த ரசமான குற்றங்கள் மட்டுமா நடக்கின்றன? விரஸமான குற்றங்களும் நடக்கத்தான் நடக்கின்றன. அவற்றின் காரணமாக எத்தனை அடிபிடிச் சண்டைகள், கத்திக் குத்துகள், கொலைகள்!

அப்பப்பா! பயங்கரம், படுபயங்கரம்!

னாலும் மதுவைத் தடை செய்ய முடிவது போல் மங்கையையும் தடை செய்ய முடிகிறதா? இல்லை. அதுதான் போகட்டுமென்றால் அவள் அழகையும், அதற்காக அவள் செய்து கொள்ளும் அலங்காரத்தையும்— ஏன் அலங்கோலத்தையும் கூட உங்களால் தடை செய்ய முடிகிறதா?— எங்கே முடிகிறது?

சரி, பிரசாரம்?...

முன்னதற்கு வேண்டுமானால் நடக்கும்; பின்னதற்கு நடக்காது.

மாறாக, மங்கையின் அழகை அப்படியே பார்த்து ரஸித்தால் போதாதென்று ‘அழகிப் போட்டி’ என்று ஒன்றை நினைத்தபோதெல்லாம் நடத்தி வரிசையாக வந்து நிற்கும் அவர்களுடைய மார்பகம் இத்தனை அங்குலம், இடை இத்தனை அங்குலம், தொடை இத்தனை அங்குலம் என்று ஒவ்வோர் உறுப்பின் அழகையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்து ரஸிக்கிறீர்கள்!

இம்மாதிரி சமயங்களில் அவர்கள் ஒரு சிறிதளவு துணியுடன் வந்து தங்கள் அழகைக் காட்டுவது பிடிக்காமல்தானோ என்னவோ ‘காபரே’ என்று ஒன்றை வேறு நீங்கள் கண்டுபிடித்திருக்கிறீர்கள். அந்த நடனத்தை ஓர் ஆரணங்கு அந்தத் துணியும் இல்லாமல் வந்து ஆடிக்காட்ட அதைப் பார்த்து நீங்கள் கை கொட்டி ரஸிக்கிறீர்கள்!

இன்று விளக்கை அணைத்துவிட்டுப் பார்க்கும் அந்த அழகுக் காட்சியை நாளைக்கு நீங்கள் விளக்கை அணைக்காமலே பார்க்கலாம்—ஏன் பார்க்க மாட்டீர்கள் முன்னெல்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த நாகரிகம் தான் இப்போது நிமிடத்துக்கு நிமிடம் வளர ஆரம்பித்துவிட்டதே!

இல்லாவிட்டால் இந்த அழகு மயக்கம், அழகுக் கவர்ச்சி, சினிமா உலகம், பத்திரிகை உலகம், விளம்பர உலகம் என்று ஓர் உலகத்தைக்கூட விடாமல் இப்படி எல்லாவற்றிலும் வியாபித்திருக்குமா?

அவற்றுக்கென்றே ‘போட்டோ’வுக்குப் ‘போஸ்’ கொடுக்க மேல் நாடுகளில் ‘மாடல் அழகிகள்’ உருவாகியிருப்பது போல இங்கேயும் உருவாகியிருப்பார்களா?

மாட்டார்கள்.

ஓ, மனிதா! காலையில் காஞ்சிக்குப் போய் ஆசார்ய சுவாமிகளைத் தரிசித்துவிட்டு வந்து, மாலையில் ஆபட்ஸ் பரிக்குப் போய் அழகிப் பேட்டி நீதிபதிகளில் ஒருவனாக நீயும் உட்கார்ந்தால் என்ன அர்த்தம்? வீட்டில் சீதாப்பிராட்டியைப் பற்றியும், கண்ணகியைப் பற்றியும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே போய் ‘காபரே’ பார்த்தால் என்ன பொருள்?

பொருளாவது, அர்த்தமாவது—அனர்த்தம்தான்!

அழகு மயக்கத்தில் கொஞ்சங் கொஞ்சமாக அறிவை இழந்து கொண்டிருக்கும் மனிதனே, உன்னை மயக்கும் அழகு என்னிடமும் பெண்ணிடமும் மட்டுமில்லை. நீ பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் அது இருக்கிறது. அந்த அழகை நீ பார்க்கும் விதத்தில் பார்த்து, வளர்க்கும் விதத்தில் வளர்த்தால் அது உன்னைத் தேவனாகவும் ஆக்கலாம், சைத்தானாகவும் மாற்றலாம்.

இந்த இரண்டில் நீ எதுவாக விரும்புகிறாய்?—இதுவே என் கேள்வி.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓ_மனிதா/13._கிளி_கேட்கிறது&oldid=1638419" இலிருந்து மீள்விக்கப்பட்டது