உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/அனுபவித்தல்!

விக்கிமூலம் இலிருந்து
566360ஔவையார் தனிப்பாடல்கள் — அனுபவித்தல்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

84. அனுபவித்தல்!

காவியமோ கவிதையோ அதனை அனுபவிக்கின்றவரின் தன்மையினைப் பொறுத்தே இனிதாகவும் வேம்பாகவும் தோன்றுகின்றன. இப்படி அனுபவிப்பவர், தம் குறையினை மறந்து, தாம் கற்கும் நூலிற் குறைசொல்லப் புகும் பேதைமை பெரிதும் வெறுத்தற்கு உரியது.

நல்ல சொற்சுவை நிரம்பிய கவிதைகளைக் கொடியோர் சிலர் பழித்துத் தூற்ற, அதனைக் கேட்டு மனம் வெதும்பிய ஔவையார், இந்தச் செய்யுளைச் சொல்லுகின்றார்.

'உலகில் மணமுள்ள தாமரை மலரும் இருக்கிறது; ஒதுக்கத் தகுந்த மலரும் உள்ளது. வண்டு தாமரையின் தேனை விரும்பிச் செல்லுகிறது. ஈயோ மலத்தை நாடி ஓடுகிறது.

இரசிகர்களிலும் வண்டைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் நல்ல பாடல்களின் அமைதிகளை அறிந்தவர்கள். நல்ல கவிஞர்கள் சொல்லும் பாடல்களின் சொற்சுவை பொருட்களை நாடி அடைந்து அவர்கள் இன்புறுவார்கள்.

ஈயைப் போன்றவர்கள் புல்லறிவு கொண்டவர்கள். அவர்கள் மட்டமான சொற்களையே நாடி இன்புறுவார்கள்.

இதனால் கவிஞர்கள், உயரிய பண்பு உடையவர்கள் உவக்கும்படியான பாடல்களையே சொல்லுதல் வேண்டும். புல்லறிவினர் பாராட்டினை ஒதுக்குதல் வேண்டும் என்றனர்.

இலக்கணக் கவிஞர்சொல் இன்பம் தேடுவர்
மலக்குசொற் றேடுவர் வன்க ணாளர்கள்
நிலத்துறுங் கமலத்தை நேரும் வண்டதீ
தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல்.

"பாடல்களின் இலக்கணத்தை அறிந்த கவிஞர்கள் சொல்லினிமையினைத் தேடுவார்கள்; புல்லறிவினரோ கலக்க முண்டாக்கும் சொற்களைத் தேடுவார்கள். இது உலகிலுள்ள தாமரைமலரை வண்டு விரும்பியடைவதனையும், ஈ மலத்தினைச் சென்றடைதலையும் போன்றதாகும்" என்பது பொருள்.

பாடலைச் செய்பவரின் தன்மையினைக் குறித்துச் சொன்னதாகவும் இதனைக் கொள்ளலாம். ஒட்டக்கூத்தரைப் பழித்து உரைத்ததாகவும் இதனைச் சிலர் உரைப்பார்கள்.