உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/ஏற்பித்தானே!

விக்கிமூலம் இலிருந்து
566361ஔவையார் தனிப்பாடல்கள் — ஏற்பித்தானே!ஔவையார் (தனிப்பாடல்கள்)

85. ஏற்பித்தானே!

ரு சமயம் பாண்டியன் மிக வலிமையுடன் விளங்கினான். கொற்கைத் துறையினின்று வஞ்சிவரைக்கும் அவனுடைய ஆதிக்க எல்லை பரவியிருந்தது. அவனுடைய விருந்தினராக ஔவையார் சிலகாலம் தங்கியிருந்தார். அவன் அவரை மிகவும் அன்புடன் உபசரித்துப் போற்றினான். பின்னர், அவனிடம் விடைபெற்றவ ராகத் தம்முடைய சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார் ஔவையார்.

கால்நடையாகவே அவர் நடந்தார். வழியிடையில் மக்கள் படுகின்ற துயரம் அவரை வாட்டியது. உணவுக்கு எவரிடமாவது கேட்பார், அங்கே கஞ்சியும் கூழுமே அவருக்குக் கிடைத்தன.

மன்னனின் அரண்மனை உணவை நினைத்துக் கொண்டார். மக்களின் உணவையும் கருதினார். அவர் உள்ளம் வெதும்பியது. அவற்றோடு தம்மையும் ஈடுபடுத்தி இந்தச் செய்யுளைச் சொன்னார்.

சிறுகீரை வெவ்வடகுஞ் சேதாவின் நெய்யும்
மறுப்படாத் தண்தயிரும் மாந்தி - வெறுத்தேனை
வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவனேற் பித்தானே
கஞ்சிக்கும் புற்கைக்கும் கை.

“சிறுகீரையை வதக்கிச் சூடாக வைத்த கறியுடனும், பசுவின் நெய்யுடனும், குற்றமற்ற குளிர்ந்த தயிருடனும் உணவுண்டு. அது வெறுத்துப் போனதால் பிரிந்தும் வந்தேன். வஞ்சிக்கும் கொற்கைக்கும் மன்னவன் அது பொறுக்காமற் போலும், என்னைக் கஞ்சிக்கும் கூழுக்கும் கையேந்தி நிற்கும்படியாகச் செய்துவிட்டான்" என்பது பொருள்.