ஔவையார் தனிப்பாடல்கள்/ஓட்டைச் செவி!
Appearance
86. ஓட்டைச் செவி
அந்த நாளில் ஏழிற்குன்றப் பகுதியினை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் தமிழ் நலம் அறியாதவன். அதனால் தமிழ்ப் புலவர்களை அவன் விரும்புவதுமில்லை; வரவேற்பதுமில்லை. அப்படி யாராவது அவன்பாற் சென்றாலும் அவர்களைச் சாதாரண இரவலர்களாகவே அவன் கருதுவான்.
அந்த வழியாகச் சென்ற ஔவையார், அவனைச் சென்று கண்டார். அவனைத் தம் வாயால் வாழ்த்தினார். அவனோ, அவரைத் சற்றும் மதியாதவனாக இருந்தான். ஔவையாருக்குச் சினம் உண்டாயிற்று! அவனுடைய செயலைக் குறித்து இப்படிப் பாடுகின்றார்.
இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே
குருடேயும் அன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த
பாட்டும் உரையும் பயிலா தனவிரண்டு
ஓட்டைச் செவியும் உள.