உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/இலை உதிர்த்த மரம்!

விக்கிமூலம் இலிருந்து
566346ஔவையார் தனிப்பாடல்கள் — இலை உதிர்த்த மரம்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

70. இலை உதிர்த்த மரம்!

ரு சமயம் ஔவையார் ஒரூரின் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தார். களைத்துப்போன அவர், அவ்வூரின் மன்றத்திடத்தே சென்று அமர்ந்தார்.

மன்றத்தே அப்போது இருந்தவர்கள் அவரைக் கற்றறிந்த பெருமாட்டியார் என அறிந்து கொண்டனர். அதனால் அவரைப் போற்றி உபசரித்தும் நின்றனர்.

அப்போது, அங்கே வந்த ஒருவனைக் கண்டார் ஔவையார். அவன் 'தீயவன்' என்பதையும் முகக்குறிப்பினால் அறிந்தார். ஆனால், அவன் அம் மன்றத்தே நீதிமானாகப் பணியாற்றி வந்தவன். அவனைக் கண்ட பிறர் எல்லாரும் எழுந்து நின்றனர்.

ஔவையார் அவன் வந்ததைக் கவனியாதவரைப்போல, எதிரே இலையுதிர்ந்துபோய் நின்ற ஒரு நெல்லி மரத்தையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.

வந்தவன் தன்னை அவர் மதியாததைப் புரிந்துகொண்டான். 'கல்வி உடையவரே பெரிதான இந்தக் காட்டூரினிடத்தே, நெல்லி மரமானது இலையுதிர்ந்து மொட்டையரக நிற்பதுதான் எதனாலோ?' என்றும் கேட்டான்.

பிற மரங்கள் இலைச்செறிவுடன் விளங்க, நெல்லிமரம் மட்டும் மொட்டையாக நிற்பதுதான் ஔவையார் அதையே உற்றுப் பார்ப்பதற்குக் காரணமாக வேண்டும் என்பது அவன் கணிப்பு ஆகும்.

‘வெற்றி பெறாத வழக்கினை, அதனை வெற்றிபெறச் செய்வதற்குக் கைக்கூலி வாங்கிக்கொண்டு, வெற்றிபெறவும் செய்விக்கின்ற வல்லாண்மையுடையவன் சுற்றம் கெட்டழியும், வல்லவனே! நெல்லிமரம் பட்டுப்போய் இப்படி விளங்குவது, கைக்கூலி வாங்கியவனின் சுற்றம் மாண்டுபோகின்ற அதனைக் காட்டவேதான்.'

ஔவையாரின் விடையைக் கேட்ட அவன் தலை கவிழ்ந்தான். அதன்மேல், அழிவழக்குப் பேசுவதையும் அறவே விட்டுவிட்டான்.

கல்வி யுடையீர் கருங்கான கத்திடையே
நெல்லி யிலையுதிர்ந்து நிற்பதெவன் - வல்லாய்கேள்
வெல்லா வழக்கை விலைவாங்கி வெல்விக்கும்
வல்லாளன் சுற்றம்போல் மாண்டு.

“கல்வி அறிவு உடையவரே அடர்ந்த காட்டினிடையே நெல்லி மரமானது இலையுதிர்ந்து பட்டுப்போனதாக நிற்பது எதனாலோ?

வல்லவனே! கேட்பாயாக, வெல்லுதற்கு உரியதல்லாத வழக்கினை விலை பெற்றுக்கொண்டு வெற்றிபெறச் செய்விக்கும் வல்லமை கொண்டவனின் சுற்றத்தைப்போல, அதுவும் மாண்டு போயிருக்கிறது.”

இது செய்யுளின் பொருள். இதனால் அழிவழக்குச் சொல்பவன் குடும்பத்தோடு தானும் அழிவான் என்பது எடுத்துச் சொல்லப்பட்டது.