உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/காலமும் தனமும்!

விக்கிமூலம் இலிருந்து
566345ஔவையார் தனிப்பாடல்கள் — காலமும் தனமும்!ஔவையார் (தனிப்பாடல்கள்)

69. காலமும் தனமும்!

செல்வம் வாழ்விற்கு முதன்மையானது. இதனை எல்லாரும் உணர்கின்றோம். செல்வத்தைத் தேடி அடையவும் பலப்பல முயற்சிகளை எடுத்துக் கொள்ளுகின்றோம்.

ஆனால், எவ்வளவுதான் முயற்சி எடுத்துக்கொண்டபோதும், செல்வநலம் அனைவருக்கும் எளிதாக வந்து வாய்த்துவிடுவதில்லை. சிலருக்கு முயற்சி இல்லாதேகூட அது தானாக வந்து சேருகின்றது. பலரின் முயற்சிகள் வீணாவதுடன், துன்பமும் துயரமும் நட்டமும் இழப்பும் அவரை வந்து குழுகின்றன.

ஒரே தொழிலில் இருவர் ஒரே சமயத்தில் ஒரே முதலீட்டுடன் ஈடுபடுகின்றனர். சில ஆண்டுகள் கழிகின்றன. முயற்சியின் செம்மையில் இருவரையும் நிகராகவே கொள்ளலாம். எனினும், ஒருவன் தன் முதலீட்டைப் பன்மடங்கு பெருக்கியுள்ளான். மற்றவனோ முதலையும் இழந்து, அதன்மேற் பல மடங்கு கடன் தொல்லையிலும் சிக்கியுள்ளான்.

இந்த நிலை எப்படி ஏற்படுகின்றது? இதற்குக் காரணம் யாது? இதனைக் கருத்திற் கொள்ளுகின்றார் ஔவையார். பிறவிகளுள் அவரவர் செய்த வினைகட்கு ஏற்பவே, நலன்கள் ஒருவனை வந்து அடைகின்றன என்பது ஆன்றோர்களின் முடிபு.

இந்த முடியின்படி, ஒருவனிடத்து இந்தப் பிறவியில் நல்ல செல்வனாக விளங்குவதற்கான வசதிகளும் மனப்போக்கும் காணப்படுகின்றன என்றால், அவன் அதனை எளிதாகப் பெறுவதற்கான சூழ்நிலைகளும் தாமே ஏற்பட்டு விடுகின்றன என்பது கருத்து.

இவ்வாறு சூழ்நிலைகள் ஒருவனுக்குச் சாதகமாக அமைவதை 'ஆகுங் காலம்' எனவும், பாதகமாக விளங்குவதைப் போகுங் காலம் எனவும் உரைப்பார்கள்.

இந்த 'ஆவதும் போவது'மாகிய ஊழின் பயன் வந்து வாய்த்தலை மனத்தேக் கொண்டு, இச் செய்யுளை உரைக்கின்றார் ஔவையார்.

தேங்காயின் உள்ளே இளநீர் எப்படிச் சென்று சேருகின்றது? மரத்தின் அடிப்புறத்தே கொட்டிய தண்ணிர் எப்படி தென்னையால் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இதனைக் காரணங்காட்டி எவரானும் விளக்க முடியுமோ? அது இயற்கையின் அமைவு என்றுதானே சொல்வோம்.

விளாங்கனிக்கு ஒரு நோய் உண்டு. அதற்கு 'யானை' என்றுதான் பெயர். இந்த நோய் பற்றினால், மேலுள்ள ஓடு அப்படியே இருக்க, உள்ளே எதுவும் இல்லாமற் கெட்டுப் போய்விடும். 'யானையுண்ட விளாங்கனி' என்பார்கள் இதனை.

செல்வம் ஒருவனிடம் வந்து சேர்வதும் போவதும் இவை போன்றே நிகழ்வனவாம். நற்காலத்துப் பெருமுயற்சியின்றியே செல்வம் எளிதாக வந்து கைகூடும்; கெட்ட காலத்திலோ உள்ள செல்வமும் விரைவில் ஒழிந்துபோம். இதனை உரைப்பது இச் செய்யுள்.

ஆங்காலம் மெய்வருந்த வேண்டாம் அஃதேதென்னில்
தேங்காய்க் கிளநீர்போற் சேருமே - போங்காலம்
காட்டானை யுண்ட கனியதுபோல் ஆகுமே
தாட்டாளன் தேடும் தனம்.

“செல்வம் ஆகிவருகின்ற காலத்திலே உடல் வருந்தும்படி உழைக்கக்கூட வேண்டாம். அஃது எதனால் என்றால் தேங்காய்க்கு இளநீர் அமைவதுபோல, அதுவும் தானே வந்து சேரும். செல்வம் போகின்ற காலம் வந்தால், முயற்சியாளன் உழைத்துத் தேடிய செல்வமுங்கூடக் காட்டு யானை உண்ட விளாங்கணிப் போலப் போய்விடும்” என்பது பொருள்.