உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/யாரரல் கெடுவது?

விக்கிமூலம் இலிருந்து

68. யாரால் கெடுவது?

பெண்கள் கற்புநெறியுடன் வாழ்தல் வேண்டும். அவர்கள் அதனாற் சிறப்பு அடைவார்கள். அவர்களை மணந்த கணவருக்கும், அவர்கள் விளங்கும் குடும்பத்திற்கும், அதனால் பெரிதும் நன்மை உண்டாகும். இப்படிச் சொல்லுகிறார்கள் பெரியவர்கள்.

பெண்கள் மெல்லியல்பு பெற்றவர்கள். அவர்கள் கற்பு நெறியைப் பேணுவது என்பது, ஆண்களின் ஒழுக்கமும் ஒத்துழைப்புமின்றி இயலாது. பெண்களுக்குக் கற்பு நெறியை விதித்துவிட்டு, ஆண்கள் தடம் புரண்டு போய்விடும் நிலைமை மிகவும் மோசமானது. இதனைத் தமிழறிஞரான ஔவையார் நினைவிற் கொண்டார்.

'பெண்கள் எல்லாரும் நல்ல பண்பு உடையவர்கள்தாம். வலிமையுடைய ஆண்கள்தாம் அவர்கட்குக் கேடு செய்கின்றனர். கேட்டையும் செய்துவிட்டுக் கெட்ட பெயரையும் தந்துவிட்டுத் தாங்கள் உத்தமர்போல உலவுகின்றனர். வன்மையாளரான ஆண்களால் இயல்பாகக் கெடுக்கப் படாதவரானால்தான் பெண்கள் நல்லவராக இருக்க முடியும். அவர்கள் கற்புப் பேணுவது என்பது ஆண்களைப் பொறுத்ததே' இவ்வாறு தம் கருத்தை விளக்குகிறார்.

'இதேபோல, ஆண்கள் அறிவுடையவர்களாகும் ஆர்வமும் முயற்சியும் உடையவர்கள்தாம். பெண்கள் அவர்களுடைய சிறந்த தன்மையைக் கெடுக்காமலிருக்க வேண்டும். அப்போதுதான் இது அந்த ஆண்கட்கும் இயலுவதாகும். பெண்கள்பால் காமுற்று மயங்கிக் கிடத்தல் கூடாது; அவர்கள் பேச்சைக் கேட்டு வாழும் பெண்பித்தராகிவிடக் கூடாது' என ஆண்களையும் அவர் எச்சரிக்கிறார்.

இவ்வாறு பெண்களின் கற்பழிவுக்கு ஆண்களையும், ஆண்களின் அறிவுச்சிதைவுக்குப் பெண்களையும் காரணமாகக் காட்டிக் கூறினார் ஔவையார்.

நல்லார்கள் எல்லாரும் நல்லவரே தன்மையால்
வல்லாராற் கேடு படாராயின் - நல்லறி
வாண்மக்கள் பற்பலர்க்கே உண்டாகும் பெண்டீரும்
மாண்பு கெடுக்கா விடின்.

“பெண்கள் அனைவரும் இயல்பினால் வலிமையுடைய ஆடவர்களால் கெடுக்கப்படாமல் இருந்தனராயின், கற்புநெறி தவறாதவர்களாகவே இருப்பார்கள். பெண்களும் ஆண்களின் மாண்பினைக் கெடுக்காமலிருந்தனரானால் ஆண்மக்களுள் பற்பலருக்கும் நல்லறிவு உண்டாகி, அவர்களும் சிறப்படை வார்கள்” என்பது செய்யுளின் பொருள்.