உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/பாராட்டும் இடம்!

விக்கிமூலம் இலிருந்து

67. பாராட்டும் இடம்!

ருவரின் சொல்லினாலோ செயலினாலோ நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களைப் பாராட்டவும் விரும்புகின்றோம். அவர்களை அப்போதைக்கப்போது பாராட்டலாமா என்றால் கூடாது. ஒருவரைப் பாராட்டுவதற்குக்கூடத் தகுந்த நேரத்தை அறிந்தே பாராட்ட வேண்டும். இதனைப் பற்றிக் கூறுகின்ற அறவுரையே இந்தச் செய்யுள்.

நண்பனை நேரிற் புகழ்ந்து பாராட்டுவது சிறப்பன்று. முகஸ்துதி என்று அவன் தவறாகவும் கருதலாம். அவனைப் பாராதபோது, நெஞ்சாரப் போற்றிப் பேசுதலே சிறந்தது.

கல்வி கற்பித்த ஆசிரியனை நேரிலும் போற்ற வேண்டும்; காணாத இடத்தும் போற்றுதல் வேண்டும்.

மனையாளை மணம் கமழும் பஞ்சணையில், அவளுடன் கலந்து உறவாடி இருக்கும்போதுதான், போற்றுதல் வேண்டும்.

பிள்ளைகளை உள்ளத்துள் பாராட்டிக் கொள்ளலாம், நேரில் பாராட்டுவது கூடாது. அதனால், அவர்களுடைய ஊக்கம் கெட்டுவிடும்.

வேலைக்காரர்களை வேலை முடிந்த பின்பே பாராட்டுதல் வேண்டும். வேலை நடுவில் பாராட்டினால், எஞ்சியுள்ள வேலை சரிவர நடைபெறாமற் போய்விடும். இல்லையானால் அதிகமான கூலியிலே மனம் செல்ல, அதற்காக அவர்கள் வம்பு செய்தலும் கூடும்.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச
மனையாளைப் பஞ்சணையில் மைந்தர்தமை
நெஞ்சில் வினையாளை வேலைமுடி வில்.

“நண்பனை அவனைக் காணாத இடத்திலும், ஆசிரியனை எல்லா இடங்களிலும், மனங்கொண்ட மனையாளைப் பஞ்சணையிலும், பிள்ளைகளைத் தம் உள்ளத்திலும், வேலை யாட்களை வேலையின் முடிவிலுமே மனமாரப் போற்றுதல் வேண்டும் பிற சமயங்களில் போற்றுவது சிறப்பன்று" என்பது பொருள்.