ஔவையார் தனிப்பாடல்கள்/குறிப்பு விளக்கம்!
77. குறிப்பு விளக்கம்!
ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழனுடைய அவையில் சிறப்புடன் திகழ்ந்தவர். அரசனுக்கு மிக வேண்டியவராகவும், 'கூத்தன் பதாம்புயத்தைச் சூடுங் குலோத்துங்க சோழன்’ என, அவனே போற்றுமாறு அவனுடைய குருநாதராகவும், அமைச்சராகவும் வாழ்ந்தவர் அவர்.
பெருமையும் சிறப்பும் பேரளவிற்குப் பெருகியதாயினும், புலமையின் நிறைவு குடிகொண்டதாயினும், அரசனிடத்தேயுள்ள தம்முடைய அளவிறந்த செல்வாக்கின் காரணமாகக் கூத்தர் சிலபோது செருக்குடையராகவும் விளங்கினார்.
இவருடைய இந்த ஒரே ஒரு குறையின் காரணமாக, இவருக்கும் புகழேந்தி, கம்பர் முதலியோருக்கும் நிகழ்ந்த வாக்குவாதங்கள் மிகப் பலவாகும். இவற்றைத் தனிப் பாடல்கள் பலவும் எடுத்துரைக்கின்றன.
ஒரு சமயம் ஔவையார், கூத்தரின் செருக்கினைக் கண்டதும் ஆத்திரங்கொண்டார். அவரைத் தலைகவிழச் செய்வதற்கும் முடிவு செய்தார். அவையின்கண் கூத்தரை விளித்துச் சில முத்திரைகளைத் தம் கைகளால் காட்டி, 'இவை குறிக்கும் மெய்ப்பொருள்கள் யாவோ?’ என்று வினவினார். அப்போது கூத்தர் பாடியது இச் செய்யுள்.
இவ்வளவு கண்ணினாள் இவ்வளவு சிற்றிடையாள்
இவ்வளவு போன்ற விளமுலையாள் - இவ்வளவாய்
நைந்த உடலாள் நலமேவ மன்மதன்றன்
ஐந்துகணை யால்வாடி னாள்.
“இவ்வளவு என்னும்படி சிறுத்த கண்களை உடையவள், இவ்வளவு என்னும்படியான சிறுத்த இடையினை உடையவள், இவ்வளவு என்னும்படி பருத்த இளைய முலைகளை உடையவள்; நின்மேற்கொண்ட காமத்தால், தான் நைந்த உடலினளாகி, நின்னால் நலத்தை அடையும்படிக்கு ஏங்கி, மன்மதனுடைய பஞ்சபாணங்களால் வாடிப் போயினாள்; அவளுக்கு உதவாயா?" என்பது பொருள்.
ஒட்டக்கூத்தரின் இந்தச் செய்யுள் மிகவும் நயமானதுதான் என்றாலும், அதன்கண் ஒரு பெரிய குறைபாடும் இருந்தது தாம் குறித்த அடையாளங்களைக் கொண்டு அவை விளக்கும் மெய்ப்பொருள்களைப் புலப்படுத்திப் பாடுமாறு கேட்டிருந்தனர் ஔவையார்.அவருடைய கேள்வியிலே, 'மெய்ப்பொருள்' என்றிருந்த சொல்லினைக் கவனியாது. கூத்தர் மேற்கண்டபடி சிற்றின்ப நயத்தோடு செய்யுளைப் பாடிவிட்டார்.
மெய்ப்பொருளாவது பேரின்பப் பொருள். சிவநேயரான கூத்தர் அதனை அறியாதவர் அல்லர். எனினும், செருக்கு எழுகின்றபோது எத்துணை அறிவு நலமும் கெட்டுவிடுகின்ற தன்மைக்கு, அந் நேரத்தில் அவரும் உரியவராயினார்.
'கூத்தரே! தங்கள் செய்யுள் மேற்போக்காகப் பார்ப்பதற்குப் பொருந்துவதுதான். எனினும், யாம் குறித்தவை மெய்ப் பொருள்கள். அதனைத் தாம் அறியாமற் போயினர். அரசியல் சூழலில் இருக்கின்ற நீர், அதன் ஆடம்பரத்தில் மயங்கியிருக்கும் நீர், காதற்பிரிவிலே சிற்றின்பத்தைக் குறிப்பிட்டதாகக் கருதிச் சொல்லிவிட்டீர். 'மெய்ப்பொருள்' என்ற சொல் நுமது கவனத்திற்கு வரவில்லை போலும்?' என்று முழங்கினார் ஔவையார்.
அவையினர் மீளவும் சிந்தனையில் ஆழ்ந்தனர். பெரும் புலவரான கூத்தரும் தம்முடைய பிழையினை உணர்ந்தவராகத் தலை கவிழ்ந்தார். சோழன் அவருடைய நிலையைக் கண்டு வருந்தினான். அவையின் அமைதியை ஊடறுத்துக் கொண்டு அவனுடைய குரல் எழுந்தது.
'அம்மையே! தாங்களே அக் கருத்துக்களைத் தெளிவுபடுத்துங்கள். எங்கள் ஆர்வம் மிகுதியாகின்றது என்றான் அவன். அப்பொழுது ஔவையார் சொன்னதாக விளங்கும் செய்யுள் இது.
'ஏற்பார்க்கு இல்லை என்னாது இட்டு உதவுங்கள். வாழ்வில் மறநெறியை ஒழித்து அறநெறிகளையே கைக்கொள்ளுங்கள். உணவுண்ணும் காலத்துச் சிறிதேனும் சோற்றினைப் பிறருக்கு இட்டு, அதன் பிறகே உண்ணுதலைச் செய்யுங்கள்.
இத்துணையும் செய்து வருவதுடன், தெய்வம் ஒருவனே எனவும் உணர்வதற்கு நீங்கள் வல்லமை பெறுதல் வேண்டும். பெற்றீர்களாயின், அறுதற்கரிய வினைகள் ஐந்தும் நும்மிடத்தி னின்றும் அறும் நும் பிறவியும் பயனுடையதாகும்.'
ஔவையார், இவ்வாறு தாம் கருதியவற்றை மிகவும் அருமையாக எடுத்து விளக்கினார். 'அரிதான உண்மைகள்' என அவையும் அதனை ஏற்று இன்புற்றது.
ஐயம் இடுமின் அறநெறியைக் கைப்பிடிமின்
இவ்வளவே னுமனத்தை இட்டுண்மின்-தெய்வம்
ஒருவனே யென்ன உணரவல் லிரேல்
அருவினைகள் ஐந்தும் அறும்.
அருவினைகள் ஐந்து - புலனிச்சைகளால் வருகின்ற வினைகள் ஐந்தும். இவை அறும் எனவே, 'வீட்டின்பம் கிட்டும்' என்பதும் கூறினார்.