உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/நுண் பொருள்!

விக்கிமூலம் இலிருந்து

76. நுண் பொருள்!

னக்கண்ணால் காண முடியாத பொருள்கள் நுண் பொருள்கள் எனப்படுவன. இது, மேற்போக்காகக் கற்பார்க்குப் புலனாகாது, நுணுகி உணர்வார்க்கே புலனாகும். செறிந்த சொற்பொருளையும் உணர்த்தும்.

இப்படியே வாழ்வியற் கூறுபாடுகளில் மிகவும் முயற்சியுடன் அடைந்து அனுபவிக்கும் தன்மைத்தான பொருள்களையும் நுண்பொருள் என்பார்கள்.

பெண் ஓர் ஆடவனை மணந்ததும் அவனுடன் இரண்டறக் கலந்துவிடுகின்றாள். அவனோடு கூடிக் கலந்து கொஞ்சி இன்ப நலத்தைப் பெருக்குகின்றாள்; பெறுகின்றாள். அவன் அவளுடையவனாகி விடுகின்றான்; அவள் அவனுடையவள் ஆகிவிடுகின்றாள்.

இந்த நிலையிலும், பெண்கள் சிலபோது தங்கள் கணவன்மாருடன் ஊடிக்கொண்டு, அவர்களைத் தம்மருகே நெருங்கவிடாது சினந்து ஒதுக்குவதும் நிகழ்கின்றது.

அங்ஙனம் ஆசை மனைவி அருகே வரவிடாது தடுக்கின்ற போது, அவளைத் தழுவும் அந்த இன்பம், எளிதாக இருந்த அந்த நலம், மிகவும் அரிதாகிப் போகின்றது. ஆனால், அவள் உவக்கும் செயலைச் செய்து அந்த ஊடலைத் தணித்து நிற்கும் அவனை, அவளும் தெளிந்த பின்னர் உவப்புடனே ஆரத்தழுவி நிற்கும்போது, அந்த இன்பம் நுண்பொருள் செறிந்ததாய் இருவரையும் இன்புறுத்துகின்றது.

இப்படி, மனைவியரின் தோள் நலம் நுண்பொருள் பயக்கின்ற ஒரு நிலையினைத் தெளிவுபடுத்துகின்றார் ஔவையார். செழியனிடம் கூறுகின்ற பாணியிலே அமைந்தது பாடல்.

'பகைவரைப் போர்க்களத்தே எதிர்த்து நின்று அறப்போர் இயற்றிச் சிறப்பதே ஆண்மையுடைய செயலாகும். அந்தச் செயலைச் செய்தவராக, வெற்றி மிடுக்குடன் வீடு திரும்பிவரும் வீரர்களுக்கு மனைவியரின் தோள்நலம் நுண்மைநலம் செறிந்ததாக விளங்கும்.’

வீரர்க்கு இங்ஙனம் விளங்கும் என்னவே, கோழைகட்கு இன்பம் தருவதாக இராது என்பதும் சொல்லப்பட்டது.

காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
போதுசேர் நார்மார்ப போர்ச்செழிய - நீதியாய்
மண்ணமுத மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு
நுண்ணிய வாய பொருள்.

"காதுகளிற் பொருந்தியிருக்கின்ற தொங்கலான குண்டலங் களை உடையோனே! குமரியின் கடற்றுறைக்கு உரிமையுடைய கடல் நாட்டவனே! மலர்ப்போதுகள் சேர்ந்துள்ள மாலையினை அணிந்தோனே! போர்வல்ல பாண்டியனே! மண்ணில் அமுதமாக விளங்கும் மங்கையரின் தோள்நலமானது, பகைவரை அறத்தோடு எதிரேற்று வெற்றி பெற்றுவரும் வீரர்களுக்கே நுண்மையான இன்பநலப் பொருள் செறிந்ததாக அமையும்" என்பது பொருள்.

'நுண்ணிய வாய பொருள்' என்றது, அளவிட்டுக்கூற முடியாத, அறிய அறியச் செழிக்கும் இன்பப்பொருள் என்பதற்காம்.