ஔவையார் தனிப்பாடல்கள்/கோடிக்கு ஒருவன்!
45. கோடிக்கு ஒருவன்
தென்னாடுடையோனாகிய பாண்டியன் தமிழார்வம் மிக்கவன். தமிழ்ப்புலமை உடையவரைத் தாங்கிக் காத்துத் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழாய்ந்து சிறந்தவன் அவன்.
ஒரு சமயம், அவனுடைய அவைக்கண் புலவர்கள் என்று கூறிப் பலர் வந்து நிறைந்தனர். அவர்களுட் சிலர் உண்மையாகவே கற்றறிந்த சான்றோர் என்பதனை அவனும் அறிவான். எனினும் தமிழ்ச் செய்யுள் யாத்தல், கொற்றன் ஒருவன் செங்கற்களை அடுக்கிச் சுவர் எழுப்புவது போன்ற செயல் அன்று; அது தெய்விக சக்தியுடன் உள்ளத்தில் தோய்ந்து உயிரிற் கலந்து வெளிவருவது; இந்த உண்மை மெய்ப்பிக்கப்படல் வேண்டும் என நினைத்தான் அவன். அதனால், ஒரு போட்டியினையும் ஏற்படுத்தினான்.
தன் கோயிற்கூடத்து ஒருபுறமாக ஐந்து பொன் முடிப்புக்களைக் கட்டி வைத்தான். அவற்றுள் ஒவ்வொன்றிலும் ஆயிரம் பொன் இருந்தன. அவற்றை அற்று விழுமாறு பாடுதல் வேண்டும். அப்படிப் பாடுகிறவர்கள், அந்த முடிச்சுகளைத் தாமே எடுத்துக் கொள்ளலாம்’ என்று எங்கும் பறையொலிக்கச் செய்தான். புலவர்கள் ஆர்வத்தோடு சென்றனர். பாடிப்பாடி ஓய்ந்தனர். ஆனால் பொன் முடிச்சுகள் ஏதும் அற்று விழவேயில்லை.
மதுரைக்குச் சென்ற ஔவையார் அதனைக் கண்டார். அது அற்று விழாதிருப்பது தமிழ் பாடும் தம் போன்றோர்க்குப் பழியாகும் என நினைத்தார். பொன்னின் அதிதேவதையான திருமகளைத் தியானித்தவாறு ஒரு செய்யுளைப் பாடலானார்.
ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு.