ஔவையார் தனிப்பாடல்கள்/மனத்தின் தன்மை!
44. மனத்தின் தன்மை!
உலகம் ஒரு சிறந்த தன்மையினை உடையது; இதன்கண் நாளும் பிறப்பவர் பல்லாயிரவர் ஆவர். பிறக்கும் உயிரினமோ பல கோடியாக இருக்கிறது. எனினும், பிறக்கும் இவை அனைத்திற்கும் வேண்டிய உணவுப் பொருள்களைத் தடையின்றிப் பெற்றிருப்பதாகவும் உலகம் விளங்குகின்றது.
உலகம், இவ்வாறு தேவையான அனைத்தையுமே உடையதாக இருக்கும்போது, சிலர் ஏராளமான செல்வ சம்பத்துக்களை உடையவராகவும், பலர் ஏழ்மை கொண்டவராகவும் விளங்குவது எதனால்? அது மனிதர்கள் சுயநலவாதியராக ஆகிவிட்ட கொடுமையினால் என்பார்கள். ஓரளவிற்கு அதுவே உண்மையும் ஆகும்.
இயற்கையில் அமையாது கிடைப்பது என்பது எதுவுமில்லை. பலருக்கும் பயன்படுகின்ற பொருள்களை ஒருவன் தனக்காகப் பதுக்கிக் கொள்ளும்போதுதான் பஞ்சம் ஏற்படுகின்றது. பதுக்குகிறவர்கள் அதிகமாகும்போது பஞ்சமும் அதிகமாய்ப் பரவுகின்றது. சிலர் உணவினை வீணடிக்கப் பலர் ஒருவேளை உணவுக்கும் வகையற்று வாடுகின்றனர். இந்த நிலைமை மாறுதல் வேண்டும்.
இந்த எண்ணம் வள்ளுவருக்கும் ஏற்பட்டது. 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ எனவும், 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பறந்து கெடுக' உலகியற்றியான் எனவும், அவர் நெஞ்சம் குமுறினார்.அவரைப் போலவே ஔவையாரும் மக்கள் கவியாகி, மக்களோடு கலந்து, அவர்களுடைய இன்ப துன்பங்களில் உறவு கொண்டு வாழ்ந்தவர். இதனால், அவரும் அந்தப் பசியினைக் கண்டு பதைக்கின்றார்.
'உலகம்' அனைத்தும் விளைவயலாக ஆக வேண்டும். வானவர் வாழும் தெய்வத் தன்மையுடைய உயர்ந்த இமய மலையின் முகடுகளைப்போல எங்கணும் நெல்மணிகள் குவிந்திருத்தல் வேண்டும். பொன்னும் முத்தும் மணியும் கலந்து கோடானுகோடியாகக் கொடுத்தல் வேண்டும். இவை அனைத்தையும் யான் பெற்றாலும் என் மனம் நிறை பெறுவதில்லை.
'ஒருநாள்' ஒருவன், ஒரு பொழுதைக்கேனும் உணவின்றிப் பட்டினி கிடக்கும் அந்தக் கொடிய காட்சியைக் கண்டதும் என் மனம் நிலைதடுமாறிப் போய்விடுகின்றது. நேர்மையை மறந்து விடுகின்றது. நிறையையும் இழந்து விடுகின்றது.
ஔவையாரின் மனித உள்ளம் இது! இந்த உள்ளம் ஆட்சியாளருக்கும், மக்கள் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். குறிப்பாகப் பொருள்களைப் பதுக்கி வைக்கும் பதுக்கல் காரர்களுக்கு உண்டாக வேண்டும். அப்போதுதான் நாட்டில் இன்பம் மலரும்!
வையகம் எல்லாம் வயலாய் வானோர்
தெய்வமா முகடு சேரி யாகக்
காணமும் முத்தும் மணியும் கலந்தொரு
கோடானு கோடி கொடுப்பினும், ஒருநாள்
ஒருபொழுது ஒருவன் ஊண்ஒழிதல் பார்க்கும்
நேர்நிறை நில்லா தென்னுமென் மனனே!
“வையகம் அனைத்துமே வயலாகவும், வானவர்க்கு உரித்தாகிய தெய்வத்தன்மையுடைய பெரிய மலையுச்சிகளே சேர்ந்திருக்கும் இடமாகவும், பொன்னும் முத்தும் மணியும் கலந்து கோடிக்கணக்காகவும் எனக்குக் கொடுத்தாலும், என் மனம் நிலை தடுமாறுகின்றதே!
"ஒருநாள், ஒருபொழுது, ஒருவன் உணவின்றி இருப்பதனைப் பார்க்கும் தன்மை நேர்மையுமன்று நிறைவும் அன்று. அவ்விடத்து அவை நிலைபெறா என்று என் மனம் சொல்லுகின்றதே! நேர்நிறை நில்லாதது அத்தகைய நாடு என்று என் மனம் கூறுகின்றதே!" என்பது இதன் பொருள்.